வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி
முதல் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதல் பகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2011/04/15

மெய்யறிவைத் தருவதாகச் சொன்னான் எமன்


42
போதனை கேட்டவுனைச் சோதனை செய்துபெருஞ்
சாதனை செய்சிறுவன் என்றறிந்தேன் - சேதன
மெய்யுரைப்பேன் மாணவனாய் ஏற்றுன்னை மைவிலகி
உய்யட்டும் உன்னால் உலகு.

    அறிவை வழங்குமாறு கேட்ட உன்னை, அறிவு பெறத் தகுதி பெற்றவனா என்று பலவகையில் சோதனை செய்து, சாதனை செய்யும் சிறுவன் நீ என்பதை அறிந்து கொண்டேன். உன்னை என் மாணவனாய் ஏற்று, ஆன்மாவைப் பற்றிய அறிவை வழங்குவேன்; அறியாமை இருள் விலகி உலகத்தோரும் உன் தயவால் மேன்மை அடையட்டும் (என்றான் எமன்).

செய்சிறுவன்: வினைத்தொகை
சேதன: ஆன்மாவைப் பற்றிய
மை: இருள்



    நல்ல ஆசிரியர் உயர்ந்த ஆசிரியராவது எப்படி? நல்ல மாணவர் உயர்ந்த மாணவராவது எப்படி?

    ஒரு மாணவன் நல்ல ஆசிரியரிடம் பயில விரும்புகிறான். நல்ல ஆசிரியை, நல்ல மாணவனைச் சிறந்த மாணவனாக்குகிறார். சிறந்த மாணவன் உயர்ந்து, நல்ல ஆசிரியரை உயர்ந்த ஆசிரியராக்குகிறான். நல்ல ஆசிரியர் உயர்வது, உயர்ந்த மாணவர்களை உருவாக்குவதனாலே. சிறந்த மாணவருக்கும் உயர்ந்த மாணவருக்கும் வேற்றுமை உண்டு. நல்ல மாணவி, கல்வி பெறும் குறிக்கோளை அடைகிறாள். சிறந்த மாணவன், கல்வியோடு அறிவையும் பெற்று கல்விக்குச் சிறப்பைச் சேர்க்கிறான். உயர்ந்த மாணவரோ, தானும் சிறந்து தம்மோரையும் சிறக்க வைக்கிறார். பெருமை சேர்க்கிறார். சிறப்பதற்கு தன்னுடைய தளராத உழைப்பு வேண்டும். உயர்வதற்குப் பிறருடைய கைகளும் தோள்களும் வேண்டும். சிறந்தவரெல்லாம் உயர்ந்தவர் ஆகாதக் காரணம், இந்தச் சிறு உண்மையை மறந்ததனால் எனலாம்.

    நல்ல ஆசிரியர், விழலுக்கு நீர் வார்க்க விரும்பார். தன் மாணவர் நன்கு கற்றுத் தானும் சிறந்து பிறரையும் சிறக்க வைக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். ஒரு ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சியை, நிறைவை, தரக்கூடியவர்கள் நல்ல மாணவர்களே. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களையே அடைய விரும்புவார்கள். (அதனால்தான் 'மாணவச்செல்வம்' என்கிறோம்).

    எமன் விரும்பியிருந்தால் மரண அறிவை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கியிருக்கலாம். அவனும் மாணவச்செல்வத்தைத் தேடினான். விழலுக்கு நீர் வார்க்க விரும்பவில்லை. உயிர்ப்பயண உண்மையைக் கேட்ட நசிகேதன், அதை அறியவும் பேணவும் தகுதி வாய்ந்தவன் தானா என்பதை அறிய விரும்பினான் எமன். பலவகையிலும் நசிகேதனின் உறுதியை ஆழம் பார்த்தான். எதற்கும் வசியமாகாது, தன் அறிவுக் கோரிக்கையை, இலக்கை, நசிகேதன் தொடர்ந்து தெளிவுபடுத்தியது கண்டு மகிழ்ந்தான். நல்ல மாணவனைக் கண்ட ஆசிரியனின் மகிழ்ச்சி எமன் மனதில் நிறைந்தது.

    நசிகேதனைச் சோதனை செய்ததாகச் சொன்னதில் எமனின் நேர்மை புலனாகிறது. "சோதனை செய்தேன்" என்று ஒப்புக்கொண்டான். "சாதாரணச் சிறுவனல்ல ஐயா, நீ சாதனை செய்சிறுவன்" என்றான். ஏன்? அப்படி என்ன சாதனை? எமனுலகம் வருவதற்கு முன்பே சாதனை செய்து விட்டான் நசிகேதன்! தன் தந்தையின் வேள்வியை நிறைவாக்கிச் சாதனை செய்தான்; தானே தானமாகிச் சாதனை செய்தான். எமனுலகம் வந்தபின்னும் சாதனை செய்தான். மூச்சடக்கி உள்ளே வளர்க்கும் தீ பற்றிப் புரிந்து கொண்டு அதை முறையாக வெளிப்படுத்திச் சாதனை செய்தான் - சான்றாக எமன் அந்த வேள்விக்கு நசிகேத வேள்வி என்று பெயரிட்டான். தொடர்ந்து சாதனை செய்து கொண்டிருக்கிறான். எமனைக் கண்டு அஞ்சாமல், தன் இலக்கை விட்டு விலகாமல், தன்னை வசப்படுத்த முனைந்த எமனையே தன்வசப்படுத்திச் சாதனை புரிந்து கொண்டிருக்கிறான். மரண அறிவைத் தருவதாக, மாணவனாக ஏற்பதாக, எமனைச் சொல்லவைத்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறான். இனி எமனிடம் மரண அறிவைப் பெற்று, உலகத்தை உய்வித்துச் சாதனை செய்யப் போகிறான். அதனால் சாதனை 'செய்சிறுவன்' என்றான்.

    எமன் நசிகேதனிடம் அன்புடன், "உன்னை மாணவனாக ஏற்று, ஆன்மாவைப் பற்றிய அறிவை வழங்குவேன். அறிவைப் பெற்று நீ உன்னுலகம் திரும்பியதும், உன்னால் உலகத்தோர் உய்யட்டும். உலக மக்களின் அறியாமை இருள் விலகட்டும்" என்றான்.►

முதல் பகுதி முற்றும்

2011/04/12

நாடகம் போதும் என்றான் நசிகேதன்


41
கூடுவிட்ட ஆவியது கூடுகின்ற நுண்மையினை
நேடுகிறேன் வாதமேன் நாடகமேன்? வீடும்
இருவரமும் வேண்டேன் மறலியார் மெய்யாம்
திருவரம் தாராத போது.

    உடலைப் பிரிந்த உயிரானது எங்கே சேர்கிறது என்று அறிவதே என் விருப்பம், தேடலின் இலக்கு. வீண் வாதமும் போலி நாடகமும் எதற்கு? சிறந்த வரமாகிய மெய்யறிவை எமனார் எனக்குத் தரவில்லையெனில், பெரும்பேறும் முன்பு பெற்ற இரு வரங்களும் தேவையில்லை (என்றான் நசிகேதன்).

 நேடுகிறேன்: இலக்காகக் கொண்டுத் தேடுகிறேன் | நேடுதல்: நோக்கத்தோடு தேடுதல்
 மறலி: எமன்



    உடன்பாட்டுக்கானச் சாதக நிலை உண்டானதும், அதை அறிந்து, தன் நிலையையும் விருப்பத்தையும் தீர்மானமாகச் சொல்லி நினைவுபடுத்துவது பேரத் தந்திரம். இறுதிச்சுற்று என்பதை அவையறியச் செய்யும் தந்திரம்.

    நசிகேதனுக்கு எமனிடம் வீணாக வாதம் செய்யப் பிடிக்கவில்லை. "ஐயா, வரம் தருகிறேன் என்றீர். வேண்டியதைக் கேள் என்றீர். கேட்டபின், இது வேண்டாம், அதைத் தருகிறேன் என்று எதையெதையோ நீங்கள் சொல்வது போலியாக, நாடகமாகத் தோன்றுகிறது" என்றான். 'வரம் தருவதாக வாக்களிப்பானேன், பிறகு வாக்கை நிறைவேற்றாமல் சாக்கும் போக்கும் சொல்லித் தயங்குவானேன்?' என்று குறிப்பாகத் தெரிவித்தான்.

    வாக்களித்துப் பின்வாங்குவது நம்பிக்கைத் துரோகமல்லவா? எமனின் பேச்சும் போக்கும் நசிகேதனுக்கு நாடகமாகப் பட்டது. அதனால், விவாதங்களுக்கு முடிவு கட்டத் தீர்மானித்து, "ஐயா, மெய்யறிவே சிறந்த வரம். நீர் மெய்யறிவாம் மரண அறிவைத் தராவிடில், மற்ற வரங்களால் எனக்கு யாதொரு பலனுமில்லை. எனக்கு அவை வேண்டாம்" என்றான்.

    "உம்மைக் கண்டு அஞ்ச மாட்டேன், அறிவுக்கான என் வேட்கை குறையாது" என்று வெளிப்படையாகச் சொன்னதும், எமன் குழம்பியதைக் கவனித்தான். சினம் தணிந்ததைக் கவனித்தான். தன் விருப்பம் நிறைவேறும் நேரமென உணர்ந்தான். தன் தேவை மேலும் தாமதமில்லாமல் நிறைவேறும் பொருட்டு, "சிறப்பான ஞானத்தை வரமாகத் தருவதானால் தாரும், இல்லையெனில் மற்ற வரங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.

    கொடுத்த வரங்களை எமன் திரும்பப் பெறப்போவதில்லை என்று நசிகேதன் அறிந்திருந்தாலும், கொடுத்த வரங்களைக் காட்டிலும் கொடுக்கப் போகும் வரமே அதிகப் பயனுடையதென்ற தன்னுடைய நம்பிக்கையை எமனுக்குத் தீர்மானமாக அறிவிக்க விரும்பினான். "ஐயா, பேசியது போதும். இதுவே இறுதிச் சுற்று, இதற்கு மேல் பேரம் கிடையாது" என்று எமனுக்கு அறிவித்தான்.

    நசிகேதன் கேட்ட வரத்தைத் தரவேண்டிய அவசியத்தை உணர்ந்தான் எமன். தான் தேடிக்கொண்டிருந்த மாணவன் கிடைத்த நிறைவு ஏற்பட்டது எமனுக்கு. நசிகேதனை அன்புடன் தட்டிக் கொடுத்தான். ►

2011/04/08

அறிவே தேவை என்றான் நசிகேதன்


40
கயிறுமக்கும் ஆணித் தொழுவைக் கடந்த
உயிரினுக்கும் உள்ளதோ தாமம்? துயிலரசே
அச்சமில்லை உம்மேல் அனைவரும் உய்யவென்
நச்சம் நராந்தக நூற்கு.

    உறக்கத்துக்கு அரசனே! உம்மீது எனக்கு அச்சமில்லை. மனித குலத்துக்கு மேன்மை தரக்கூடிய மரணத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதே, என்னுடைய தணியாத விருப்பமாகும். எலும்பும் நரம்பும் வைத்துக் கட்டிய உடல் எனும் சிறையை விட்டு விலகிய உயிருக்கு, வேறு புகலிடம் உண்டா சொல்வீர்? (என்றான் நசிகேதன்).

கயிறு: நரம்பு
அக்கு: எலும்பு
ஆணி: உடல்
தொழு: சிறை
தாமம்: இருப்பிடம், புகலிடம்
துயில்: உறக்கம், மரணம்
நச்சம்: தணியாத விருப்பம், ஏக்கம்
நராந்தகம்: இறப்பு
நூல்: அறிவு, ஞானம்



    கோபமும் ஆத்திரமும் தவிர்க்க வேண்டும் என்றாலும், தவிர்க்காத நபர்களிடம் எப்படி நடந்து கொள்வது?

    தெளிவோடு பேசத் தொடங்குகிறோம். பதிலுக்கு கோபமும் ஆத்திரமும் வந்தால் நாமும் கலங்கிப் போகிறோம். என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறோம். 'எதற்கு வீண் தகராறு? விரோதம்? நான் என்ன சொன்னாலும் இவர் புரிந்து கொள்ளப் போவதில்லை, சச்சரவை வளர்க்காமல் ஒதுங்குவோம்' என்று பலவாறு குழம்பி ஒதுங்கி விடுகிறோம். இது சரியா, தவறா?

    நம் எதிர்ப்பு அறிவார்ந்தது என்றால், ஒரு இலக்கை நோக்கியது என்றால், அந்த இலக்கு வாழ்வின் மிக அவசியமான ஒன்று என்றால்... ஒதுங்கி விடுவதால் எல்லாவற்றையும் இழக்கிறோம். கோபமும் ஆத்திரமும், கொள்பவரின் குணத்தை அழிக்கும் என்றால் இன்னொரு புறம் கூடியிருப்பவரின் இலக்கை மறைக்கும். பிறர் கோபத்திற்கு அஞ்சி நம் இலக்கை மறப்பது முட்டாள்தனம்.

    எதிர் கோபமடையலாம். அதனால் பயனில்லை. "உங்கள் கோபத்துக்கு பயப்பட மாட்டேன்" என்று உறுதியுடன் சொல்லலாம். கோபமாக இருப்பவர்களிடம், "சிறிது ஓய்வெடுங்கள், பிறகு பேசுவோம்" எனலாம். "உங்கள் கோபம் என்னைப் பாதிக்கிறது, எனக்கு ஓய்வு தேவை" என்று விலகலாம். வேறு முறையில் கவனத்தைத் திருப்பலாம். என் வீட்டில் நான் கோபப்படும் போதெல்லாம் உடனே எனக்கு ஒரு கப் குளிர்ந்த தண்ணீர் கொடுத்து விடுவார்கள். என் மேலாள நண்பர் ஒருவர் உடனிருப்போர் கோபத்திலும் ஆத்திரத்திலும் பேசினால், உடனே தன் செருப்பைக் கழற்றி மேசை மீதோ நாற்காலியிலோ வைத்துவிட்டு, எந்த இடமென்றும் பாராது, தரையில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு விடுவார். (பலநேரம் அவருடைய செருப்புக்கு பயந்தே) நாங்கள் அடங்கி விடுவோம். கூட்டம் கூட்டிய காரணத்தை மனதில் கொண்டு அமைதியாவோம்.

    கோபத்தைக் கண்டு அஞ்சவே கூடாது. கோபத்தின் பின்னே குணமுண்டு என்பது உண்மையோ பொய்யோ, கோபத்தின் பின்னே கோழைத்தனம் உண்டு; 'தன் அதிகாரம் தட்டிக் கேட்கப்படுகிறதே, தன் பிடி விலகிப்போகிறதே, தன் அறியாமை வெளியாகிறதே, தன் இயலாமை புலப்படுகிறதே..' என்ற அச்சம் நிச்சயம் உண்டு. 'i don't argue to win; i simply make my opponent angry' என்றாராம் தாமஸ் ஜெபர்சன். கோபப்படுகிறவர்கள் கோழைகள் என்பதை உணர்ந்தால் கோபத்தை எதிர்கொள்வது எளிது.

    பிறருடையக் கோபத்திற்கு அஞ்சி நம் இயல்பையும் இலக்கையும் மாற்றிக் கொண்டால் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இழந்தவராவோம். நம்முடைய அல்லது பிறருடைய கோபமும் ஆத்திரமும் இலக்கிலிருந்து நம்மை விலக்க என்றைக்குமே அனுமதிக்கக் கூடாது. சொல்வதெளிது :).

    கேட்க, சொல்ல, அறிய வேண்டியதைத் தெளிவாக்குவது நல்ல மாணவனின் இலக்கணம். எமனுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த சொற்போர்களுக்கு ஒரு முடிவு கட்டினான் நசிகேதன். "ஐயா, எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒன்று தான். உயிருக்கு எது உறைவிடம்? உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் தெளிவாகவே கேட்கிறேன். இதோ எலும்பினாலும் நரம்பினாலும் பிணைக்கப்பட்ட இந்த உடலுக்குள் சிறைபட்டுக் கிடக்கும் உயிர், இந்த உடலை விட்டு விலகியதும் எங்கே போகிறது? அதற்கு புகலிடம் உண்டா? இருப்பிடம் உண்டா? இதை நீங்களறிவீர்கள். அதை எனக்கு விளக்கி என் அறியாமை இருளைப் போக்கி அறிவொளி தாருங்கள்" என்றான். மரணம் மீளா உறக்கம் தானே? மரணத்துக்கு அதிபதி என்பதால் துயிலரசன் என்றான்.

    சான்றோர்க்கழகு சேர்ந்தணைத்தல். நசிகேதன் சிறியவன் என்றாலும் சான்றோனல்லவா? தனக்காக மட்டும் கேட்கவில்லை. தனக்குப் பின் வரும் அனைவரும் உய்ய, மரணத்தைப் பற்றிய அறிவு ஒரு உபாயம் என்பதை அறிந்து கேட்டான். தன்னுடைய அறியாமையை அழிக்கக் கிடைத்த வாய்ப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினான். தானும் மனித குலமும் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய அறிவென்பதால், மன உறுதியுடன் நின்று "இறப்பைப் பற்றிய அறிவையே விரும்புகிறேன்" என்றான்.

    தான் உபயோகித்த அனைத்து வசிய முறைகளும் பயன்படாமற் போனதை உணர்ந்தான் எமன். நசிகேதன் தன் பிடிப்பை விட்டுக் கொடுக்க மாட்டான், தளர மாட்டான் என்பது எமனுக்குப் புரியத்தொடங்கியது. ►

2011/04/05

அஞ்சேன் என்றான் நசிகேதன்


39
வந்தது மும்புரட்டல் மூவர மீந்துபின்
வெந்தது மும்புரட்டல் வேதியே - சிந்தியும்
இன்மொழிக்கே அஞ்சுவது இன்மொழிக்கும் அஞ்சலேல்
வன்மொழிக்கோ வற்பை விடும்?

    பேரறிஞரே! நான் இங்கு வர நேர்ந்தது உமது புரட்டல்; மூன்று வரங்களை வழங்கியது உமது புரட்டல்; பிறகு வெகுண்டதும் உம் புரட்டலே! சற்று சிந்திக்க வேண்டுகிறேன். அன்பு மொழிக்கு அஞ்சி அடங்கும் மனம், உங்கள் கனிமொழிக்கே கட்டுப்படவில்லை, கடுமொழிக்கா பிடிப்பை இழக்கும்? (என்றான் நசிகேதன்).

  வேதி: அறிஞர், ஞானி [ஆன்மாவைப் பற்றிய நுண்மையறிந்தவன் என்பதால் எமனை வேதி என்றான். வேதி என்ற சொல்லுக்குத் துன்புறுத்துபவர், ரசவாதம் செய்பவர் என்ற பொருளும் உண்டு. தன்னைத் துன்புறுத்த வல்லவன் என்பதால் வேதி என்றான். தாழ்ந்த பொருளை உயர்ந்த பொருளாக்கும் ரசவாதியைப் போல், அறிவற்ற தன்னை அறிஞனாக உயர்த்த வல்லவன் என்பதாலும் நசிகேதன் எமனை வேதியென்றான்]
  வற்பு: உறுதி.



    அன்புக்குக் கட்டுப்படுவோர் ஆத்திரத்துக்குக் கட்டுப்படுவதில்லை (சிலர் விதி விலக்கு :). அச்சமூட்டுவதால் அந்தக் கணத்து எண்ணம் நிறைவேறக் கூடும். அச்சம் தொலைந்ததும் மதிப்பும் கூடவே தொலைந்து விடுவதால், அச்சமும் ஆத்திரமும் நிலையான வசிய முறைகள் ஆகமாட்டா. மதிப்பைத் தொலைத்ததும் மற்ற நேயங்களும் மறையும்.

    ஆத்திரமும் கோபமும் இரு புறமும் மதிப்பைக் கெடுக்கும். ஆத்திரப்பட்டவர் மதிப்பிழப்பது ஒரு புறம். ஆத்திரத்தால் பாதிக்கப்பட்டவரும் மதிப்பிழக்கிறார்கள். ஆத்திரத்துக்குக் கட்டுப்பட்டதால் 'எளியோன்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மதிப்பிழக்கிறார்கள்; மேலும், ஆத்திரத்தை எதிர்க்க முடியாத இயலாமையால் வெட்கப்பட்டு சுயமதிப்பையும் இழக்கிறார்கள். கோபத்துக்கு பயப்படுபவர்கள் கோழைகள். தன்மான இழப்புக்கும் ஒரு படி கீழே கோழைத்தனம்.

    'அன்புக்கே வசியமாகவில்லை, நான் ஆத்திரத்துக்கா அடங்குவேன்?' என்று நினைத்தான் நசிகேதன். 'என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த எமர்? என் உறுதியைக் குறைவாக எடை போடுகிறாரா?' என்று எண்ணிச் சற்றே தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். எமன் மீதிருந்த மதிப்பு குறையவில்லை எனினும், எமனின் நிலையை எண்ணி சற்றே வருந்தினான். 'சிக்கினாரய்யா நம் கையில்!' என்று தனக்குள் சிரித்தபடி, எமனை நோக்கினான்.

    "ஐயா" என்றான். "புரட்டல் என்கிறீர்களே, புரட்டல் கணக்கு சொல்கிறேன் கேட்கிறீர்களா?" என்றான். "வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை விவரம் தெரிந்தவன் போல் எண்ண வைத்ததும் புரட்டல். விவரம் தெரிந்து தந்தையிடம் வேள்விப்பலன் பற்றிக் கேட்க வைத்ததும் புரட்டல். வேள்விப்பலன் கேட்டது பொறுக்காமல் என் தந்தை சீறியதும் புரட்டல். சீறிச் சிவந்து என்னையே உமக்குத் தானமாகத் தந்ததும் புரட்டல். தானமாக வந்தவன், உம் வீட்டில் தவிக்க நேர்ந்ததும் புரட்டல். தவித்தவனுக்கு மூன்று வரம் தருவதாகச் சொன்னதும் புரட்டல்" என்றான். 'இந்தப் புரட்டல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?' என்பது போல் எமனைப் பார்த்து, "வரம் தருகிறேன் என்றதும் நுட்பமான வரங்களைக் கேட்க வைத்ததும் புரட்டல். கேட்டதும் கோபத்தில் மிரட்டியதும் புரட்டல். நீங்கள் பேரறிஞர். உங்களுக்குத் தெரியாத புரட்டலா?" என்றான்.

    எமன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். நசிகேதன் விடுவதாயில்லை. "இனியும் புரட்ட வேண்டுமா? தாராளமாகப் புரட்டுங்களேன்" என்று எமனிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. என்ன சொன்னான்?

    "ஐயா, இந்த மனமிருக்கிறதே மனம்.. அது அன்புக்கு அடிமையாகும், அடங்கும், வசியப்படும். வேறு எந்த முறையிலும் மனதை அடைய முடியாது. அன்பு ஒன்றினால் மட்டுமே ஒருவரை வசியப்படுத்த முடியும்" என்று எமனைப் பார்த்தான். "இதில் வேடிக்கை பாருங்கள்.. வேதியரே. நீங்கள் அன்போடு அத்தனை பேசியும் தந்தும் இந்த மனம் உங்கள் வசமாகவில்லை; நீங்கள் சொன்னதைக் கேட்கவில்லை; நிலையாக நின்றது. பயமுறுத்தினால் பயப்படவா போகிறது? இன்சொல்லுக்கு உருகாதது, உமது சுடுசொல்லுக்கு அஞ்சித் தன் நிலையை, உறுதியை, உடைக்கவா போகிறது?" என்றான். இல்லாத மீசையை முறுக்கி, "பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தீரோ?" என்றான்.

    நசிகேதன் பேச்சுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அன்பானது மயக்கும் தன்மையது. ஒருவருடைய அன்புக்குக் கட்டுப்பட்டு வசியமான மனம், பிறகு அவருடைய கோபம் எரிச்சல் கடுமொழியை எதிர்கொள்ளும் பொழுது அனைத்தையும் ஒதுக்கி அன்பை மட்டுமே மனதிலிறுத்திக் காண்பதால், கோபத்தால் பாதிக்கப்படுவதில்லை. எங்கிருந்தோ வந்த நசிகேதனை எடுத்து அரவணைத்து ஆதரவு தந்து அன்பு காட்டி வசியப்படுத்தி விட்டதால், எமனின் கோபத்தீயை அன்பு வெள்ளம் அடக்கி விட்டது எனலாம். ஆழ்ந்த அன்பின் அறிகுறி. (ஒரு விதத்தில் கண்மூடித்தனம். இக்காலத்தில் மனிதர்களுக்கிடையில் இந்த நிலையேற்படுவது அனேகமாக impractical :)

    நசிகேதனின் துணிவும் முதிர்ச்சியும் எமனை வியக்க வைத்தது. 'அவ்வளவு தானா, இன்னும் ஏதாவது வசியமுறை வைத்திருக்கிறீரா? இல்லையெனில் சொற்படி வரம் தாருமய்யா? உயிர்ப்பயண விவரங்களைச் சொல்லுமய்யா?!' என்று நசிகேதன் விரட்டுவது போல் உணர்ந்தான். விழித்தான். 'இந்தப் பிள்ளை என் வயதுக்குக் கூட மதிப்பு கொடுக்கவில்லையே?' என்று எண்ணினான். ►


தேடிச் சோறு நிதந்தின்று பல
   சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
   வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்
   கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் பல 
வேடிக்கை மனிதரைப் போலே நான் 
   வீழ்வேன் என்று நினைத்தாயோ?
எந்தச் சோர்விலிருந்தும் நம்மை நாமே அடித்து எழுப்பிக்கொள்ள பாரதி தந்தத் தமிழ்ச்சவுக்கு.


2011/04/01

கோபம் கொண்டான் எமன்


38
குரங்காட்டி போலினிக் கோலெடுப்பேன் உன்மேல்
உரங்காட்டி ஓய்ந்தேன் உதவா வரங்கேட்டு
விரட்டினால் வாட்டுவேன் உப்பாலில் உன்னைப்
புரட்டிப் புரட்டி எடுத்து.

    உன்னிடம் கருணை காட்டி ஓய்ந்தேன். பலனற்ற வரத்தையே நீ குரங்கு போல் பிடிவாதமாகக் கேட்டுக்கொண்டிருந்தால், நான் குரங்காட்டி போல் கோலெடுத்துத் தண்டிப்பேன். பிறவிக்கு மேல் பிறவியாக உன்னைப் புரட்டி எடுத்து வாட்டுவேன் (என்றான் எமன்).

உரங்காட்டி: அன்பு செலுத்தி, நயம் காட்டி
உப்பால்: மறுமை



    அன்பாகவே பேசி நடந்தாலும் திடீரென்று கோபமும் ஆத்திரமும் வந்து கத்தும் பொழுது குழந்தைகள் நடுங்கிப் போவதைப் பார்த்திருக்கலாம். திடீரென்று குணம் மாறிய தந்தை தாய் அல்லது ஆசிரியரின் கோபம், பிள்ளைகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அந்த அதிர்ச்சியில் அவர்களுக்கு பேச்சே வராது ஒடுங்கி விடக்கூடும். சில குழந்தைகளுக்குச் சிந்திக்கும் திறன் கூட இல்லாது போகும். கண்களில் கோர்த்த நீரில் தங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கழுவ முடியாமல், திடுக்கிட்ட நிலையில் செய்வதறியாது திகைக்கக்கூடும். இயல்பு நிலைக்கு வர நேரமாகும். சொல் கேளாத பிள்ளையிடம் நடந்து கொள்ளும் முறையில் கோபமும் ஆத்திரமும் தவிர்க்காவிட்டால், பெற்றோரின் கோபம் நினைவில் நிற்குமே தவிர, கோபத்தின் காரணம் மறந்து விடும். அதுவரை சேர்த்த மதிப்பும் அன்பும் மறைந்து விடும். இதையறிந்த பெற்றோர்கள் மிகச் சிலரே.

    பிள்ளை வளர்ப்பு என்றில்லை, கணவன், மனைவி, பெற்றோர், காதலன், காதலி, மாணவர், நண்பர், உடன் வேலை செய்பவர் என்று பிறருடன் நடந்து கொள்ளும் முறையில் ஒவ்வொரு முறை கோபம் கொள்ளும் பொழுதும் உறவுச் சங்கிலி, நட்புச் சங்கிலி, மதிப்புச் சங்கிலி உடைவதை நினைவில் வைக்க வேண்டும்.

    நயம், கொடை, அச்சம், ஒறுப்பு எனும் நால்வகை அடக்கு/வசிய முறைகளையும் எமன் கையாண்டான். அன்புடன் வேறு வரம் கேட்கச் சொன்னான்; கேளாத நசிகேதனை வசியப்படுத்தச் செல்வமும் புகழும் ஆயுளும் அள்ளி வழங்கினான்; தளராத நசிகேதனை வசைமொழி பேசிப் பயமுறுத்தினான்; கலங்காது நின்ற நசிகேதனை, வேறு உபாயம் தோன்றாமல், கடுமையாகத் தண்டிப்பேன் என்றான்.

    எமனின் முகம் துடித்தது. கண்கள் சிவந்திருந்தன. மூச்சிலும் பேச்சிலும் கோபத்தீ சுட்டது. நசிகேதனை எரிப்பது போல் பார்த்தான். "குரங்கு போல வீண் பிடிவாதமா பிடிக்கிறாய்? குரங்காட்டி போல் கோலெடுத்தேன் பார். உன்னை அடக்கி ஒடுக்குவேன் பார்!" என்றான். சீறினான். எமனின் கோபத்தை நசிகேதன் எதிர்பார்க்கவில்லை. மலை போல் ஓங்கி உயர்ந்து வலிமையோடு உறுமிய எமனைக் கண்டு, சிறுபிள்ளை நசிகேதன் நடுங்கினான். எமன் விடவில்லை. "ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்பதற்காக உண்மையிலேயே வருந்தி வரம் தருகிறேன் என்றேன். விடலையாக ஏதோ கேட்டாலும் கொடுத்தேன். திரும்பிப் போகவும் அனுமதி கொடுத்தேன். சொர்க்கம் தருகிறேன் என்றேன். செல்வம் தந்தேன். சந்ததி தந்தேன். மானிடனாய், வயதுக்குப் பொருத்தமான வரங்கேள் என்றால், மரியாதை இல்லாமல் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கிறாயே? நீ முட்டாளா? அல்லது என்னை முட்டாள் என்று நினைத்தாயா? நான் யார் தெரியுமா?" என்றான். சிவந்த கண்களால் குழந்தை நசிகேதனை முறைத்துப் பார்த்தான். "சொற்படி கேளாவிட்டால் தொலைத்து விடுவேன். பொருந்தாமல் வரங்கேட்டுக் கொண்டிருந்தால் பொறுக்க மாட்டேன். எதற்காக இங்கு வந்தாயோ அதை மறந்து விடு. பிறவித் தொடர்ந்துப் பிறவி கொடுத்து உன்னை இங்கேயும் பூமியிலும் புரட்டிப் புரட்டி எடுப்பேன். வாட்டி எடுப்பேன்" என்று உறுமினான். ஆத்திரத்துடன் தரையில் ஓங்கி உதைத்தான்.

    நசிகேதன் அதிர்ச்சியில் தடுமாறினான். கண்களில் நீர் கோர்த்து, முகம் வாடியது. பேச்சு வரவில்லை. எமனின் சுடுசொற்களைக் கேட்டதும், ஒரு கணம் 'எமனுக்கே தந்தேன் தானம்!' என்ற தன் தந்தையின் உருவமும் பேச்சும் நினைவுக்கு வந்தது. 'தந்தையின் கோபத்தினால் இங்கு வந்து சேர்ந்தோமே, இனி எமனின் ஆத்திரத்தால் மீண்டும் கோபக்காரத் தந்தையிடம் போய்விடுவோமோ? இப்படி ஒவ்வொருவரும் நம்மைப் புரட்டி எடுக்கிறார்களே?' என்று எண்ணினான்.

    'முதலிரு வரங்களில் தந்தை வாசனுக்கு நற்கதியையும், சொர்க்கம் செல்லும் வழியையும், மூச்சடக்கி தீ வளர்க்கும் முறையையும் அறிந்ததெல்லாம் வீணாகி விடுமா? புரட்டி எடுப்பேன் என்கிறாரே எமன்? ஒரு வேளை எல்லை மீறி பிடிவாதம் பிடித்தோமோ?' என்று சிந்திக்கத் தொடங்கினான்.

    'என்னிடம் அன்பும், கருணையும், பொறையும், வள்ளண்மையும் காட்டிய எமன் ஏன் குணம் மாறினார்? மரண அறிவைக் கேட்டதற்காகவா? இனி இவரோடு எப்படிப் பழகுவது? ஏதாவது சொன்னால் ஏற்பாரா, எரிந்து விழுவாரா?' என்று பலவாறு சிந்தித்த நசிகேதன், எமனுடன் பேசுவதற்குத் தயங்கினான். ஒதுங்கி விடலாமா என்றும் நினைத்தான்.

    பிறகு, தன்னுடைய இலக்கை ஒரு முறை நினைவில் கொண்டான். எமனை ஏறிட்டான். ►



நயம், கொடை, அச்சம், ஒறுப்பு :: சாமம், தானம், பேதம், தண்டம்

2011/03/29

நிலையாக நின்றான் நசிகேதன்


37
மண்ணிலே தேடும் தனமெல்லாம் மூடிய
கண்ணிலே ஓடும் கனவாகும் - நண்ணி
ஒளிக்குள்ளே போந்தார் இருளோம்பார் ஆம்போல்
வெளிக்குள்ளே போந்தார் வளி.

    உலகில் செல்வங்களைச் சேர்ப்பது, உறக்கத்தில் காணும் கனவு போன்றது. ஒளியான இடத்தை விரும்பியவர்கள் இருளைச் சிறப்பாகக் கருதுவதில்லை; அது போல, எல்லாம் அடங்கிய வெளிக்குள் விரும்பிப் புகுந்தவர்கள், காற்றைச் சிறப்பாகக் கருதுவதில்லை (என்றான் நசிகேதன்).

நண்ணி: விரும்பி
வெளி: அண்டம்
வளி: காற்று
வெளியும் வளியும் முறையே ஐம்புலன் கடந்த நிலையையும் மூச்சையும் குறிப்பன.



    subtext என்று ஒரு உரையாடல் உத்தி. சொல்லும் பொருளும் பிரிந்திருப்பது போல் ஒரு மாயையை உண்டாக்கும், குறிப்பால் உணர்த்தும், நுட்பம். அறிவில் சிறந்தவர்களிடையே வீண் கோபங்கள் குறுக்கிட்டுப் பேச்சு வார்த்தையைத் திசை திருப்பாதிருக்கக் கடைபிடிக்கப்படும் உத்தி. நேரிடையாகச் சொல்வதனால் உண்டாகக் கூடிய தாக்கத்தைத் தணிப்பது. காதலருக்கு இயல்பாக வருவது :). அவசியம் பழக வேண்டிய நுட்பம்.

    வெளிக்குள் வளி அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது சிரமமென்றாலும் முடியும். ஒளிக்குள் இருள் அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது இன்னும் கடினம். ஒளியும் இருளும் ஒரே வட்டத்தின் பகுதிகள் (வட்டவில்?). இருள்-ஒளி போன்றதே பிறப்பும் இறப்பும். இருளும் ஒளியும் எதற்குள் அடங்கியிருக்கின்றன? பிறப்பும் இறப்பும் எதற்குள் அடக்கம்? சற்றே ஆழமான நுட்பங்கள். இங்கே அறிமுகம் செய்து கொண்டு, பின்னொரு பகுதியில் பழகுவோம். எதிர் நிலைகளை அறிந்து சாராது இயங்க வேண்டும் என்பது கடோவின் பிற பகுதிகளின் சாரம்.

    'அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன்' என்று ஆசை காட்டிய எமன், தொனியை மாற்றி, 'பிடிவாதம் விடு' என்றதைக் கவனித்தான் நசிகேதன். எமனின் பிடிப்பு தளர்வதைப் புரிந்து கொண்டான். எமனின் எரிச்சலைத் தணிக்க வேண்டும், அதே நேரம், தான் இன்னும் உறுதியாக இருப்பதையும் உணர்த்த வேண்டும். 'நீங்கள் என்ன சொன்னாலும் சரி, என் நிலை மாறாது' என்று சொல்வது ஒரு வழி. "நான் கேட்டது மரண அறிவு; எத்தனை முறை சொல்வது? நான் கேட்டதைக் கொடுக்க முடியுமா முடியாதா? முடியாவிட்டால் சொல், அதை விட்டு பிடிவாதம் கிளிப்பிள்ளை என்று தனித் தாக்குதல் தேவையில்லை" என்று நசிகேதன் பதில் சொல்லியிருக்கலாம். 'என் நிலை மாறாதிருக்க காரணங்கள் உண்டு' என்று சொல்வது இன்னொரு வழி. காரணங்களை எடுத்துச் சொல்லிக் காரியத்தைப் புரிய வைக்க முனைந்தது, எமன் மேல் நசிகேதன் வைத்திருந்த மதிப்பை உணர்த்தும் செயல். தான் மெய்யறிவை விரும்புவது எதனால் என்பதை எடுத்துக் காட்டினான். நசிகேதனுக்கே அறிவு தரவேண்டியவனென்றால் எமனிடம் இல்லாத அறிவா? அதனால் 'கொடுப்பாயா மாட்டாயா?' என்று சிறுபிள்ளை போல் கேட்காமல், 'ஐயா, கொடுக்காமல் போனால் அது உங்கள் விருப்பம்; ஆனால் சிறகை விரும்பும் எனக்கு நடைவண்டியில் விருப்பம் இல்லை' என்று எமனே புரிந்து கொள்ளும் விதத்தில் குறிப்பாகவும் தெளிவாகவும் மென்மையாகவும் வலியுறுத்தியும் சொன்னான். படியாத வயதல்ல, அறிவைப் பெறும் முதிர்ச்சி தன்னிடம் உள்ளது என்பதையும் குறிப்பால் விளக்கினான்.

    "ஐயா, உறக்கத்திலே நல்ல கனவொன்றைக் காண்கிறோம். உறங்கும் நேரம் அது கனவென்று தோன்றுவதேயில்லை. உலக வாழ்வில் அடையும் இன்பங்களும் செல்வங்களும் அத்தகையதே. விழித்ததும் கனவுகள் கலைந்து விடுகின்றன. எத்தனை இனிய கனவானாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. அதே போல் சேர்த்த செல்வங்களும் அடைந்த இன்பங்களும் ஒரு நாள் பயனற்றுப் போகின்றன. மூச்சடக்கி மூட்டும் தீ என்று சொன்னீர்களே? மூச்சைக் கட்டி தன்னறிவு பெற வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்? நீங்கள் ஆசை காட்டும் பொன்னும் பொருளும் மூசசைப் பெருக்க ஏதுவாகுமே? இந்த ஆசைகள் என்னைக் கட்டிப் போடுமே? நான் ஆசைகளைக் கட்டிப் போட அல்லவா விரும்புகிறேன்?" என்றான். 'செல்வங்கள் வேண்டாம்' என்று சொல்லவில்லை நசிகேதன். 'சிறந்த செல்வம் ஒன்று உண்டு - மெய்யறிவு - அது வேண்டும்' என்றான்.

    செல்வங்களைச் சேர்ப்பதால் யாரும் நெறி தவறவில்லை; செல்வங்களைப் புறக்கணிப்பதால் நெறி பேணவும் இல்லை. நிலையில்லாத செல்வங்களை தேடி, நிலையான உண்மையான செல்வமான மெய்யறிவைப் பெறவில்லையென்றால் பிற செல்வங்களினால் எந்தப் பயனும் இல்லை என்பதே நசிகேதன் சொன்ன கருத்து. கனவு இதமாக இருக்கின்றதே என்று தொடர்வதில் பயனுண்டா? மெய்யறிவு பெறுவதே உண்மையான விழிப்பு என்பது நசிகேதனுக்குப் புரிந்தது. தான் விரும்புவது உண்மையான விழிப்பு என்பதைக் குறிப்பாகச் சொன்னான்.

    "ஐயா, ஒளியை விரும்பி ஏற்றவர்கள் இருளுக்குத் திரும்ப எண்ணுவதில்லை. மெய்யறிவு ஒளி போன்றது. பிற செல்வங்கள் இருளுக்கு ஒப்பானவை" என்றான். தனக்குத் தேவை ஒளி என்பதை மென்மையாக வலியுறுத்தினான். இதில் என்ன subtext? 'வேண்டாம் என்பதில் ஆணவமோ, வேண்டும் என்பதில் பிடிவாதமோ இல்லை' என்பதே அவன் சொன்ன குறிப்பு. தேவையைக் கேட்பது பிடிவாதமா?

    எல்லாம் அடங்கிய நிலை இருக்கையில், ஒரு பகுதியை விரும்பி என்ன பயன்? ஐம்பொறிகளும் அடங்கிய வெளி அண்டம். ஐம்புலனும் அடங்கிய வெளி ஆன்மா. வளி என்பது இங்கே வாழ்வதற்கு இன்றியமையாத மூச்சுக்காற்றை குறிக்கிறது. "ஆன்மாவை அறிய முற்படும் எனக்கு வாழ்வின் சாதாரண இனிமைகள் பொருட்டல்ல" என்றான் நசிகேதன். தான் விரும்புவது, ஆன்மாவைப் பற்றிய அறிவே என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினான்.►

2011/03/25

பிடிவாதம் விடு என்றான் எமன்


36
சொன்னதே சொல்லுங் கிளிப்பிள்ளை போல்பேசி
என்னநான் ஈந்தும்நீ ஏற்கவில்லை - இன்னும்
படியா வயதில் பொருந்தாது கேட்டுப்
பிடியாதே வீண்பிடிவா தம்.

    எத்தனை செல்வங்களும் சலுகைகளும் தந்தாலும், சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல் மரண அறிவு பற்றியே கேட்கிறாய். முதிராத உன் வயதுக்கு பொருத்தமற்ற வரங்களைக் கேட்கும் வீண் பிடிவாதத்தை விடு (என்றான் எமன்).




    பேரம்* பற்றிய நுட்பங்களில் x,y நடத்தைகளைத் தொட்டோம். சிக்கலை விடுவிக்கும் முயற்சியில், கொடுக்கல் வாங்கலினாலும் பேச்சு வார்த்தையாலும் ஏற்படும் வெப்பநிலை தணிந்து, உடன்பாடு உண்டாக இரு நடத்தைகளும் தேவை. சில நேரம் கசப்பான வெற்றியைத் தந்தாலும், ஒரே நடத்தையைக் கடைபிடிப்பது உடன்பாட்டைத் தருவதில்லை. ஒரே நடத்தையை இறுதி வரை கடைபிடிப்பதால் உடனிருப்போரின் வெறுப்புக்கு ஆளாகலாம். ஒரு நடத்தையில் தொடங்கி எதிர் நடத்தைக்கு ஒரேயடியாகத் தாவினாலோ உடனிருப்போரின் நம்பிக்கையை இழக்க நேரிடும். எந்த நடத்தையிலும் பிடிப்பில்லாமல் கணத்துக்குக் கணம் மாறினாலோ அனைவரின் நம்பிக்கையை இழப்பதுடன் தானும் குழம்பி இலக்கை விட்டு விலகி வெகு தூரம் போக நேரிடும்.

    தான் விரும்பியதை அடைந்தாலும், அது பிறரின் வெற்றி போன்ற உணர்வை ஏற்படுத்துவதே உடன்பாட்டின் இலக்கணம். பெரும் பேரம் செய்யும் கூட்டங்களில் ஒவ்வொருவரும் (தரப்பும்) தங்களின் 'அடலொற்கத்தருணம்' அறிந்து, லாப-நஷ்ட கொடுக்கல்-வாங்கல் எல்லைகளை முன்பே ஓரளவுக்குத் தீர்மானித்து, தங்களின் batna வலுவை தக்கவைக்க முயற்சிப்பதைக் கவனிக்கலாம்.

    தினசரி வாழ்வில் இந்த அறிவு பயன்படுமா?

    'சொல்வதைக் கேள், இல்லையேல் கோபம் வரும்' என்ற வீட்டு வழக்கத்தை அறிவோம். ஆட்டத்தை விட்டு ஆளைக் குறிவைக்கும் இயல்பை விளையாட்டில் பார்க்கிறோம். இடுகை பற்றிய கருத்தை விட்டு, எழுதியவர் திமிர் பிடித்தவர் என்ற பாணியில் வரும் பின்னூட்டங்களைத் தினமும் படிக்கிறோம் :). இவை எல்லாமே தினசரி வாழ்வின் x நடத்தைகள். இலக்கை மறைப்பவை.

    'விட்டுக்கொடுக்கும்' பாங்கான y நடத்தையை முழுதுமாகக் கடைபிடித்தால் ஏமாற்றமே வரும். தன்னம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் y நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள். எந்தச் சூழலிலும் தனக்கான கருத்தை, இடத்தை, நிலையை வகுத்துக் கொள்ளாதவர்கள் வெற்றியடைவதில்லை. வாழ்விலும் முன்னேறுவதில்லை. முயலுக்கு மூன்று கால் என்ற பாணியில் ஒரே நிலையில் நிற்க வேண்டுமென்பதில்லை - ஒரு நிலை கூட இல்லாமல் 'எல்லாம் விதி', 'எழுதியிருப்பது போல் நடக்கும்', 'நீங்க என்ன சொல்றீங்களோ அதையே என்னோட கொள்கையா வச்சுக்குங்க', 'எல்லாம் உங்கள் இஷ்டம், நீங்க பாத்து செஞ்சா சரி', 'நம்பிக்கையோட செஞ்சா நிச்சயம் நடக்கும்' போன்ற நிலைகளை விரும்பி ஏற்கும் y நடத்தையாளர்கள் தங்களுக்கென்று ஒரு இடமுமில்லாமல் திரிகிறார்கள். எதையோ எதிர்பார்த்து, எதையோ செய்து, முடிவில் எதிலுமே நிறைவில்லாமல் தன்னையே குறை சொல்லி, விழுந்த குழியை ஆழப்படுத்தும் கண்மூடிகள். பரிதாபத்துக்குரியவர்கள்.

    'எடுத்துக்கொள்ளும்' பாங்கான x நடத்தையை முழுதுமாகக் கடைபிடிப்போர், தொடக்கத்திலிருந்து வெறுப்புணர்ச்சியைப் பரப்புகிறார்கள். தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், ஆதாரமான அறிவையோ பொதுநல உணர்வையோ மறைத்துவிடும் அபாயம் உண்டு என்பதை x நடத்தையாளர்கள் அறிவதில்லை. 'என்னை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை', 'எனக்குத் தெரியாததா?', 'எல்லாம் என் சொற்படித் தான் நடக்க வேணடும்', 'நான் பார்க்காததா?', 'எதிலும் நான்' போன்ற நிலைகளைப் பழகும் x காரர்கள் பல நேரம் எல்லாவற்றையும் இழந்து அவமானமடைகிறார்கள். பிறகு, 'என்னை மதிக்கவில்லையே!' என்று வெறுத்து ஒதுங்குகிறார்கள். சில x காரர்கள், ஒரேயடியாக y நடத்தைக்குத் தாவி தங்கள் மதிப்பை இழக்கிறார்கள் - இந்த மாற்றம் x காரர்களை பாதிப்பது போல் y காரர்களை பாதிப்பதில்லை (y காரர்கள் ஒரேயடியாக x நடத்தைக்கு மாறும் சாத்தியம் மிகக்குறைவு - துணிச்சலற்றவர்கள்). x,y,x என்று கணமொரு கட்சி மாறி, உடனிருப்பவர்களையும் தன்னையும் அழித்துக் கொள்ளும் அபாயம் x நடத்தையாளர்களிடம் உண்டு. இவர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.

    xம் தேவை, yம் தேவை. அவற்றை வெளிப்படுத்தும் முறையில் நிதானமும், அறிவு கலந்தத் தன்னம்பிக்கையும், பொது அக்கறையும் இருந்தால் இலக்கை அடைய முடியும். மகாத்மா காந்தி, அன்னை தெரசா, சாதனையாளர் அனுராதா கொய்ராலா போன்றவர்கள் y நடத்தையர் போல் தோன்றினாலும், உண்மையில் அறிவார்ந்த x நடத்தையை ஆதாரமாக வெளிப்படுத்தியவர்கள். இலக்கிலிருந்து விலகாமல் தான் நினைத்ததை சாதித்தாலும், அது பிறருடைய வெற்றி என்கிற பிரமையை உண்டாக்க இவர்களால் முடிந்தது.

    அடுத்த முறை வீட்டிலோ வெளியிலோ, பெரும் சச்சரவு அடக்க அல்லது பொது உடன்பாடு ஏற்படுத்த வேண்டிய நிலையில், பிறர் வெளிப்படுத்தும் நிலை கண்டு அதற்கொப்ப நடக்கலாம். வாழ்வே பேரம்.

    அள்ளி அள்ளிக் கொடுத்தும் அசையவில்லை நசிகேதன். எமன் வழங்கியவை நிலைக்காதவை என்பதை அறிவோடு நயமாக எடுத்துச்சொல்லி, எமனையும் அலட்சியப்படுத்தாமல், தன் வரத்தின் பயனே நிலையானது என்ற உறுதியோடு நின்றான்.

    தான் வழங்கியதை நசிகேதன் ஏற்கவில்லையென்பது தெரிந்தும், இனி வழங்க எதுவுமில்லை என்று தெரிந்தும், எமன் எரிச்சலடைந்தான். ஆட்டத்தை விட்டு ஆளைத் தாக்கத் தொடங்கினான். நசிகேதனின் கருத்தை ஒதுக்கி, 'சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை, படியாத வயது, பிடிவாதக்காரன்' என்று நசிகேதனைத் தாக்கிப் பின்னூட்டம் வழங்கினான். yலிருந்து xக்குத் தாவினான்.

    உடன்பாடு ஏற்படுமா? நசிகேதன், எமன் சொற்படி நடப்பானா? ►



* 'பேரம்: உடன்பாடு காண்பதற்கான பேச்சு, ஒப்பந்தப்பேச்சு, சலுகை பற்றிய பேச்சு' என்கிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி; 'பேச்சை' வலியுறுத்தினாலும் பேரம், negotiationக்கு பொருந்தும் தமிழ்ச்சொல். உதவிக்கு மிக நன்றி, Nanum enn Kadavulum.
  அடலொற்கத்தருணம்: அடல், ஒற்கம், தருணம் - பலம், பலஹீனம், சந்தர்ப்பம் | strength, weakness, opportunity - அடலொற்கத்தருணமறிதல் அரச, அமைச்ச, அவை, படைத்தலைவரின் இலக்கணம்.
  batna என்பது பேர மேலாண்மைத் தந்திரம்.

2011/03/22

செல்வங்கள் அழிவன என்றான் நசிகேதன்


35
இசையும் இளமையும் வாரிசும் வாழ்வும்
நசையாகும் நாளிவை நில்லா - வசையாம்
பனிமொழியர் பாடலும் என்வரமே என்றும்
தனிநிற்கும் தன்மைய தாம்.

    புகழ், இளமை, சந்ததி, சிறப்பான வாழ்க்கை இவையெல்லாமே ஆசையின் வடிவங்கள்; நிலைக்காதவை. குளிர்மொழிப் பெண்களின் இனிய பாடல்களும் ஒரு நாள் வசைமொழி போல் தோன்றும். நான் கேட்ட வரம் மட்டுமே தனிப்பட்டு நின்று பயன் தரும் தன்மையது (என்றான் நசிகேதன்).

நசை: அளவற்ற ஆசை


    சொர்க்கம் செல்லும் வழியையும், பொன்னையும் மண்ணையும் பெண்ணையும் இளமையையும் பெற்றுக்கொண்டுத் திரும்பியிருந்தால் நசிகேதனைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருப்போமா?

    ஞானிகள் அறிவை வளர்ப்பது அனைவரும் பயனுறவே.

    எமன் எப்படியெல்லாம் ஆசை காட்டினான்! 'எல்லாம் தருகிறேன், இன்னொரு நுட்பமான அறிவையும் வரமாகத் தருகிறேன், மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே' என்றான்.

    ஒன்றைச் செய்யாதே என்றால் நம் மனம் அடங்குகிறதா? அதைத்தானே செய்யத் தோன்றுகிறது? 'என்னய்யா இவன்? மரணத்தைப் பற்றிக் கேட்டால் மனம் போனபடி அள்ளி விடுகிறானே? அப்படி என்ன தான் இருக்கிறது இதில் மர்மம்?' என்று சாதாரணருக்கும் தோன்றுமே? சிறுபிள்ளைக்கே உரித்தான பிடிவாதக் குணம் இருந்தாலும், நசிகேதன் அறிவுள்ள பிள்ளை வேறு. அவனுக்கும் அதே எண்ணமே ஓடியிருக்கும்.

    முதல் இரண்டு வரங்களில் பூமிக்குத் திரும்பிப் போகும் வாய்ப்பையும், சொர்க்கம் செல்லும் அறிவையும் பெற்றான். எமனுலகிலிருந்து திரும்பி வந்தான் என்ற செய்தியே போதுமே? போதாவிடில், சொர்க்கம் செல்லும் வழி தெரிந்தவன் என்றால் உலகத்தவர் அவனை உயர்த்திவிட மாட்டார்களா? அதற்கு மேல் அவனுக்கு என்ன புகழ் தேவைப்படப் போகிறது? மேலும் அவன் அரசன் மகன். அவனுக்குக் கிடைக்காத பொன், மண், கால்நடை சொத்து, அழகிய மகளிர் பணிவிடை, மற்றும் அரசுப் பதவியா?

    நசிகேதன் விரும்பியா நமனுலகம் வந்தான்? இன்னொருவர் கொண்ட ஆசையினாலும் செய்த தவறினாலும் அல்லவா அங்கே சென்றான்? திரும்பிய பின், தானும் இது போல் நடந்து கொண்டால்? தானும் மற்றவர்களும் அவ்வாறு நடவாதிருந்தால் உலகில் மனித வாழ்க்கை பயனுள்ளதாக மாறுமே? தன் தந்தைக்கும் தனக்கும் சேர்த்த பேறுகள் போதாமல், மனித வாழ்க்கைக்கு மகத்துவம் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும் போலிருக்கிறதே? அறியாமையைப் போக்க இதை விட சிறப்பான வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்தான். அதனால் தன்னுடைய வரம் 'தனித்து நிற்கும் தன்மையது' என்றான். காலத்தால் அழியாததல்லவா கல்வி?

    எமன் வழங்கிய செல்வங்களையும் வளங்களையும் மறுத்து, வேறு வரம் வேண்டாமென்ற தன் நிலையில் உறுதியாக நின்றான் நசிகேதன். ►

2011/03/18

குமிழி வாழ்வு என்றான் நசிகேதன்


34
தாள்பட்டும் காழ்பட்டும் தேயுமுயிர் காசினியில்
நாள்பட்ட வாழ்வும் குறுவாழ்வே - கேளீர்
எதற்கினிமேல் ஏந்திழையும் பூணியும் பொன்னும்?
முதற்கனியை முந்துமோ மூன்று?

    உலகில் பல்லாண்டு வாழ முடிந்தாலும், அது உமது வருகையாலோ அல்லது எமது உள்ளத்தில் தோன்றும் பகை வெறுப்பு உணர்ச்சிகளாலோ குறுகிவிடுகிறது. இந்நிலையில், அழகிய பெண்களும் பூணியும் பொன்னும் சேர்த்து என்ன பயன்? முதற்கனியை விட மூன்றாங்கனி இனிப்பதில்லை (என்றான் நசிகேதன்).

தாள்பட்டு: காலடிபட்டு (எமனுடைய வருகையால்)
காழ்பட்டு: காழ்ப்பினால், பகையினால், வெறுப்பினால்
காசினியில்: உலகில்
ஏந்திழை: ஒளிவீசும் ஆடை அணிகலன் அணிந்த அழகிய பெண், தேவமகளிர் என்ற பொருளில் வருகிறது
life is short என்பதற்குத் தமிழுரு தந்துதவிய மோகன்ஜி, Nanum enn Kadavalum, சிவகுமாரனுக்கு நன்றி



    டெமாக்ரிடஸ் என்பவர் சிறந்த கிரேக்க அறிஞர்களில் ஒருவர். மக்களாட்சி, கணிதம், அணுத்துவம் பற்றிய, இன்றைக்கும் பிரமிப்பூட்டும், கருத்துக்களுக்கு இவர் புகழ் பெற்றிருந்தாலும், மனித நேயம் பற்றிய சிந்தனைகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 'மகிழ்ச்சியைத் தேடிப்பெறுவதே பிறவியின் நோக்கம்' என்றவர். ஏறக்குறைய கடோபனிஷதக் காலத்தவரான இவருடைய பிரபலமான வேதாந்தக் கேள்வி: "உணர்வுகளால் நிறைவதை பொன் பொருள் நிறைக்குமா?".

    தமிழில் இன்னும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்: 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'. தேடுவதை எங்கே தொடங்குவது என்பது நம் எல்லாருக்கும் சுலபமாகத் தெரிகிறது, புரிகிறது. தேடுவதை எங்கே எப்போது நிறுத்துவது என்பதில் தான் சிக்கல். நிறைவடைந்தாலும் தேடுகிறோம்; நிறைவடையாவிட்டாலும் தேடுகிறோம். வாழ்வில் தேடல் அடக்கமா அல்லது தேடலில் வாழ்வு அடங்குமா?

    டெமாக்ரிடஸ் சொன்ன 'மகிழ்ச்சியும் நிம்மதியும் ஒன்று' என்ற பார்வையில், 'மகிழ்ச்சியுடன் இருக்கிறோமா?' என்ற கேள்வியை நாம் தினமும் கேட்க வேண்டும். 'இன்றைய பொழுதை எனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியானதாக்க என்னால் என்ன செய்ய முடியும்?' என்று சிந்திக்கவாவது வேண்டும். நான்கு நாட்கள் சிந்தித்தால் ஐந்தாவது நாள் ஏதாவது செய்யத் தோன்றும் என்று நம்புகிறேன். சிலர் 'மகிழ்ச்சி வேண்டும், நிம்மதி வேண்டும்' என்று சிந்திப்பதோடு சரி, செயலில் இறங்க வாய்ப்பு கிடைத்தாலும் இறங்குவதில்லை. பாதை தெரிந்த பின்னும் பயந்து ஒடுங்கும் கூட்டம். நொபெல் பரிசு பெற்ற பெர்னார்ட் ஷா சொன்ன கருத்து:"பத்து பேரில் ஒருவர் சிந்தித்துச் செயல்படுகிறார். ஒருவர் சிந்தித்துச் செயல்படுவதாக நினைக்கிறார். மற்ற எட்டு பேரும் சிந்தனை என்றால் என்னவென்று தெரியாமலே வாழ்ந்து மடிகிறார்கள்". அந்த எண்மரில் நான் சேர்ந்து விடக்கூடாதே என்று சில வருடங்களாகவே(!) அஞ்சி வருகிறேன். கடோவைப் படித்த போதும், இந்தப் பாடலை எழுதும் பொழுதும் என் வாழ்வின் தேடல்கள் பற்றித் தானாகவே சிந்தனை கிளைவிட, அதிர்ச்சியில் கிடந்தேன்.

    எளிமை பழக வேண்டும். எப்படி என்று தெரியவில்லை.

    இளைய தலைமுறையிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது. சமீபத்தில் என் மகள் விரும்பிய ஒன்றை வாங்கிக் கொள்ள அனுமதியும் பணமும் கொடுத்தேன். நன்றியுடன் இரண்டையும் திருப்பிவிட்டாள். 'but, i thought you liked it?' என்றேன். 'i do, but having it will clutter my life' என்றாள். அவளுடைய நிறைவுச் சிந்தனை நிலைக்க வேண்டுமென்று விரும்பிய எனக்குப் பொட்டில் அறைந்தாற் போலிருந்தது. when did my clutter commence? என் வாழ்வின் எந்த மைல்கல்லில் excess மற்றும் relevant என்பதற்கு பொருள் மறந்து போனேன் என்று நினைக்கத் தொடங்கினேன். நிறைவுக்கும் நிம்மதிக்கும் வேறுபாடு தெரியாமல் போன அந்தக் கணத்தை அடையாளம் காண முயன்று தோற்றேன். சமூகத்தின் மீது பழி சுமத்தினாலும், தெளியத் தொடங்கியிருக்கிறேன் (என்று நினைக்கிறேன்:).

    ஒரு அழகிய வெள்ளித்தட்டிலே கண்ணைக் கவரும் பலாச்சுளைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நறுமணத்தோடு இயற்கையிலேயே தேனூறி மின்னும் விதை நீக்கியப் பலாச்சுளைகள், உண்ணத் தயாரான நிலையில் உள்ளன. தொட்டு எடுக்கத் தூண்டினாலும், அந்தச் சிரமம் நீங்க, பலாச்சுளையை எடுத்து நம் வாய் பிளந்து ஊட்டிவிட அருகிலேயே காத்திருக்கும் சேவகர். பலாச்சுளை ஒன்றை எடுத்து மெல்லிய விரலால் நம் முகம் தொட்டு வாய் பிளந்து ஊட்டி விடுகிறார். கண்ணைக் கவரும் அந்தச் சுளையின் மணம் நம் உணர்வை ஆக்கிரமிக்க, உதடுகளில் பட்டும் படாமலும் தொட்ட சுளையின் மென்மை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. தேனைவிட இனிக்கும் சுளை நாவில் பட்டதும் மெள்ள அசைந்து பற்களிலும் நாவினிடையிலும் விளையாட்டாகச் சிக்கிக் கலந்து உள்ளிறங்க, அந்த முதல் பலாச்சுளையின் சுவை உடல் எங்கும் பரவி நம்மைச் சொக்க வைக்கிறது. இதுவல்லவோ சொர்க்கம் என்று கிறங்கி இன்னொரு சுளைக்காக வாய் திறக்கிறோம். அடுத்து ஒன்று. அதற்குப் பின் ஒன்று. இந்த இனிமை நிலையானதென்று எண்ணும் பொழுது எங்கிருந்தோ இடிக்கிறது. இனியொரு சுளையைக் காணவும் முடியாமல் எதிர்க்கிறது. மனம் பலாச்சுளை பக்கம் போகவே மறுக்கிறது. சேவகரையும் ஒதுக்கி ஒதுங்குகிறோம். எத்தனை சுவைக்க முடியும்? எப்பொழுது திகட்டும்? எப்பொழுது எதிர்த்து வரும்? இந்த விவரங்கள் தொடக்கத்தில் தெரியாது; ஆனால் திகட்டும், எதிர்த்து வரும் என்பது மட்டும் அனுபவத்தால் திண்ணமாகத் தெரியும். எத்தகைய இனிமையும் காலத்தால் குன்றியோ அல்லது அற்றோ போகும் தன்மையது.

    நசிகேதன் எமனிடம் சொன்னதும் அது தான். "ஐயா, பொன் பொருள் பெண் இவையெல்லாவற்றையும் நான் எத்தனை நாள் அனுபவிக்க முடியும்? முதல் கனியில் பெற்ற சுவை மூன்றாவதில் குன்றுமே? அமுதும் நஞ்சாக மாறுமே? மாறாதிருந்தாலும், உங்கள் காலடி பட்டக் கணத்திலேயே இந்த இனிமையான அனுபவம் முடிந்து விடுமே? நஞ்சாக மாறாவிட்டாலும், நீங்கள் வருகை தராவிட்டாலும், பிறருடைய கோப தாபங்களை என்னால் கட்டுப் படுத்த முடியாது போனால் நீங்கள் வழங்கியிருக்கும் இனிமையை அனுபவிக்க இயலாதே? குமிழி எப்போது வெடிக்கும் என்று தெரியாது. வாழ்வும் குமிழி போன்றதே. உலகத்தில் அளவற்ற நாள் வாழ வழியிருந்தாலும், அது நிலைக்காத குறுகிய காலமே" என்றான்.

    பொம்மைகளோடும் நட்போடும் சுமுகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தவன், தன் தந்தையின் அவசரக் கோபத்தினால் எமனுலகம் வர நேர்ந்ததே? 'சிந்தையில் நாடிய சித்திரை வாழ' எமன் வரம் தந்தாலும், பூவுலகம் திரும்பியபின் தன் தந்தை அல்லது இன்னொருவரின் செய்கையாலோ, தன்னுடைய அறியாமையாலோ, தானே மீண்டும் எமனுக்குத் தானமாகக் கூடுமே? எமன் காலடி வைக்காவிட்டால் கூட உலகத்தாரின் காழ்ப்புணர்ச்சி காலமுடிவைக் கொண்டு வரும் என்பதைத் தனக்கு நேர்ந்த அனுபவத்தால் உணர்ந்தவன் நசிகேதன். நிலையற்ற வாழ்வைத் தேடல்களினாலும் சேர்க்கைகளினாலும் நிலைக்கச் செய்யும் முயற்சியில் முடங்கியிருக்கும் முட்டாள்தனத்தை, போலித்தனத்தை, நன்றாக உணர்ந்தவன் என்பதை எமனுக்குத் தெளிவு படுத்தினான்.►

2011/03/15

தொடர்ந்து ஆசை காட்டினான் எமன்


33
பொன்னும் இசையும் புலமும் இளமையும்
மின்னும் மகளிரு முன்வசமாம் - இன்னும்நீ
ஏனவரும் ஆளாத தாளலாம் ஆன்மாவுக்
கானதைக் கேளா திரு.

    அழகு, புகழ், அறிவு, இளமை, இவற்றுடன் மின்னல் போல் ஒளிவிடும் தேவமகளிரையும் உன் வசமாக்குவேன்; மேலும், சாதாரணர்களுக்குக் கிடைக்கப் பெறாத மாட்சிகளும் உன் சொந்தமாகும்; உயிருக்கு என்ன ஆகிறது என்பதை மட்டும் கேட்காதே (என்றான் எமன்).

பொன்: அழகு
இசை: புகழ்
புலம்: அறிவு



    முழுதும் கலை என்று சொல்லும் அளவுக்கு ஒரு மேலாண்மைப் பரிமாணம் உண்டென்றால், அது 'உடன்பாட்டுத் தந்திரம்' என்பேன். நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுவது சுலபம்; அடுத்தவருக்குத் தேவையானதைக் கொடுப்பதும் சுலபம். கூட்டு முறையில், குடும்பம் தொழில் சமூகம் என்ற கூட்டு நிலவரத்தில், ஒருவருக்குத் தேவையானதை இன்னொருவர் பேரம் பேசி, கொடுத்து வாங்கி, அனைவருக்கும் நிறைவான விதத்தில் உடன்படிக்கை ஏற்படுத்துவது மிக மிகக் கடினம். இன்னும் மூன்று மிக போடலாம். (பொருள் தெரிந்து, சொல் தேடும் சங்கடம் மறுபடி. 'negotiation' என்பதற்குத் தமிழ்ச்சொல் தெரியவில்லை. யாரங்கே? தமிழ் எளிமையான வளமான மொழி என்றவரைப் பிடித்து வாருங்கள்).

    ஒரு கேள்வி: மக்களிடம் செல்வாக்கு மிகுந்த புராண சிவன், ராமன், க்ருஷ்ணன், முருகன் இவர்களில் யார் சிறந்த negotiator? process of eliminationல் இருவரை நீக்கி விடலாம்: உடன்பாடு வடக்கு என்றால் முருகன் தெற்கு - அசல் தமிழன்; அத்தனை சக்தியும் செல்வாக்கும் வைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் போன வெண்ணைச்சாமி, நெய் எடுக்கத் தெரியாமல் குருட்சேத்திரத்துக்கு நேர்வழி அமைத்தார் - அவரையும் நீக்கலாம். மற்ற இருவரில் ஒருவர் skilled negotiator என்று சொல்லும் அளவுக்கு அருகே வருகிறார். என் கருத்து இருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நால்வரில் யார் சிறந்த negotiator?

    மேலாண்மைப் பார்வையில், உடன்பாடு ஏற்படுத்தும் தந்திரங்கள் பல உள்ளன. 'x,y நடத்தையறிதல்' என்று ஒரு அடிப்படைத் தந்திரம். தக்க வைப்பது அல்லது எடுத்துக் கொள்வதை x நடத்தையும், விட்டுக் கொடுப்பதை y நடத்தையும் குறிப்பன. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் y நடத்தையை வெளிப்படுத்துவது சமரசக் கொள்கையை முன்வைத்தாலும், 'ஏமாந்த சோணகிரி'யாகும் அபாயத்தை உண்டாக்கும்; லாபமில்லாமல் விட்டுக் கொடுத்தால், தேவையான நேரத்தில் எதுவுமே இல்லாமல் போய்விடலாம். அதே நேரம், தொடக்கத்தில் x நடத்தையை வெளிப்படுத்துவது உடனடி முறிவை ஏற்படுத்தலாம். (இதையே கொஞ்சம் புரட்டிப் போட்டால், வீட்டிலும் அமைதியேற்படுத்தும் வழிகளை அறியலாம்).

    மூன்றாம் வரம் முழுதும் 'உடன்படிக்கைத் தந்திர'ப் படிப்பினை எனலாம். எமன் இங்கே வெளிப்படுத்துவது x நடத்தையா, y நடத்தையா?

    எமன் தொடர்ந்து ஆசை காட்டக் காரணமென்ன? நசிகேதன் அடிப்படையில் மனிதப் பிறவியைச் சேர்ந்தவன். மனிதப் பிறவியின் குணச்சித்திரத்துக்கேற்றபடி அவனை நடக்குமாறு தூண்டினான் எமன். இதுவரை அளித்தவற்றுக்கு மேலாக, அழகும் புகழும் அறிவும் தருவேன் என்றான். அனுபவிக்க இளமையைத் தருவேன் என்றான். அழகும் அறிவும் புகழும் இளமையும் பெற்ற ஆடவருக்கு வேறேதும் தேவை உண்டா? ஒளிரும் பெண்களை, தேவமகளிரை உடன் அனுப்புவேன் என்றான். சாதாரண மனிதர்களால் பெறமுடியாதது இன்னும் எதுவுமிருந்தால் அதையும் ஆளலாம் என்றான்.

    எமனுடைய ஆசை மொழியின் உட்பொருள்: "மனிதருக்கு மரணம் ஒரு இயற்கையான, அவசியமான நிகழ்ச்சி. அதை அறிவதால் வாழ்வை அனுபவிக்க இயலாமல் போய்விடலாம். மனிதனான நீ, மனிதனைப் போலவே வாழ்வதற்கான வரங்களைக் கேள். மரணத்தைப் பற்றிக் கேட்காதே".

    எமன் வழங்கிய கொடைகளையும் சலுகைகளையும் நசிகேதன் ஏற்பானா?►

2011/03/11

மேலும் தருவதாகச் சொன்னான் எமன்


32
நுண்ணிய வேறோர் வரங்கேட்டால் நெஞ்சில்நீ
எண்ணிய தெல்லாம் தருவேனே - பண்ணிய
பாவங்கள் போய்ப்பேர் தருவேன் தயைசெய்துச்
சாவதன் தன்மை தவிர்.

    தயவுசெய்து மரணத்தின் உண்மையை அறிய முயலாதே. அதை விடுத்து வேறொரு உண்மையறிய வரம் கேட்டால் உன் மனதில் எண்ணியதையெல்லாம் நிறைவேற்றுவேன்; பாவங்களைப் போக்கிச் சொர்க்கத்தைத் தருவேன் (என்றான் எமன்).

பேர்: சொர்க்கம்


    மறுப்புகளைக் கையாளும் முறைகளை மேலாண்மைக் கல்வியில் பாடமாக வைத்திருக்கிறார்கள். மறுப்பவர்கள் உண்மையில் மறுக்கிறார்களா அல்லது எதிர்பார்ப்பை மறைமுகமாகக் கூட்டுகிறார்களா என்பதை அறிவது ஒரு கலை. தீர்மானமான மறுப்பை எப்படி அறிவது? தொனி, சைகைகள், உடல் இறுக்கம், பார்வையின் தீர்க்கம் என்று பலவகைக் குறிகளைக் கவனிக்கச் சொல்கிறார்கள்.

    காதலி, தாய் இவர்களின் மறுப்புகளை விளையாட்டாக இப்படிச் சொல்வதுண்டு: 'முடியாது' எனில் 'பார்க்கலாம்' என்று பொருள்; 'பார்க்கலாம்' எனில் 'சம்மதம்' என்று பொருள்.

    விற்பனைத்துறையில் இந்த விடாப்பிடிப் போக்கு சாதாரணம் ('no' means 'maybe'; 'maybe' means 'yes'). நம்மூர் கடைகளில் கூட கவனிக்கலாம். மணிக்கணக்கில் ஒன்றன் சிறப்பை எடுத்துச் சொன்னக் கடைக்காரர், நாம் "அது வேணாம்பா" என்றால், "அப்ப இதை வாங்கிக்க சார். அதை விட இது சூபரு" என்பார். "ஆளை விடய்யா!" என்று நாம் எரிச்சலோடு ஒதுங்கும் வரை நச்சரிப்பு தொடரும்.

    எமன் ஒரு தேர்ந்த வியாபாரி. மறுப்புகளை அவ்வளவு சுலபமாக ஏற்பானா? 'காணிபூணி தருகிறேன், நீண்ட ஆயுள் கேள்' என்று ஆசை காட்டியும் நசிகேதன் சலனப்படாததைக் கவனித்து, 'அதை விட இது சூபர்' பாணியில் தொடர்ந்தான்.

    'இந்தப் பிள்ளை பொன்னுக்கும் மண்ணுக்கும் மயங்கவில்லை. சொர்க்கம் செல்லும் வழியை வரமாகக் கேட்டானே? சொர்க்கத்துக்குப் போவதே வாழ்வின் இலக்கு என்று எண்ணுகிறானோ? அதைச் சுலபமாக்கி விட்டால்?' என்று எண்ணிய எமன், உடனே உத்தரவாதம் கொடுத்தான். "நசிகேதா! பொன்னும் மண்ணும் அரசும் ஆயுளும் தந்தேன் அல்லவா? அவற்றைக் கொண்டு உலக வாழ்வை அனுபவி. அவற்றைவிடச் சிறப்பான சொர்க்க வாழ்வையும் தருகிறேன்" என்றான்.

    'செய்த பாவங்கள் எல்லாம் தீரும்' என்று வரமளித்தானே, ஏன்? நசிகேதன் சிறுபிள்ளை, என்ன பாவம் செய்திருக்கக் கூடும்? அல்லது செய்யக்கூடும்? பொன், மண், செல்வம், நீண்ட ஆயுள், இவற்றுக்கு மேலாக மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதாகச் சொன்னான். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மனிதன் தீய வழியில் செல்லக்கூடும். நசிகேதன் மனிதப் பிறவிக்குத் திரும்பியதும், பெற்ற சலுகைகளைக் கொண்டு வாழ்வைச் சுவைக்கும் சபலம் வந்தால், 'பாவ புண்ணிய சொர்க்க நரகம்' பற்றிக் குழம்பாமல் இருக்க எமன், "பாவங்களைப் போக்கிப் பேர் தருவேன்" என்றான். அத்தனை சலுகைகளையும் முன்வைத்தான்.

    'ஒருவேளை, இந்தப் பிள்ளை அறிவாளியென்பதால் அறிவைப் பிடித்துக் கொண்டு அலைகிறதோ?' என்று இன்னும் சந்தேகப்பட்ட எமன், 'சொர்க்கத்துக்கு மேல் இன்னொன்றையும் சொல்லி வைப்போம்' என்று எண்ணி, "ஐயா, உனக்கு நுண்மையான அறிவுதானே வேண்டும்? மரணத்தைப் போலவே நுட்பமான தத்துவம் இன்னொன்றைக் கேள், சொல்கிறேன்" என்றான்.

    தானங்களை அள்ளி வழங்கிய எமன், "தயவுசெய்து மரண உண்மையை மட்டும் கேட்காதே" என்றபடி நசிகேதனைப் பார்த்தான்.►

2011/03/04

நீண்ட ஆயுள் கேள் என்றான் எமன்


31
பிரிதோர் வரங்கேட்டால் பூணிகாணிப் பேரும்
அரிதோர் அரசுந் தருவேன் - உரிமையுடன்
சிந்தையில் நாடிய சித்திரையும் நூறாண்டுச்
சந்ததியும் சீருறக் கேள்.

    மாற்று வரம் கேட்டால் உனக்கு நிலம், கால்நடை, பொருட்செல்வம் மற்றும் கிடைப்பதற்கு அரிதான அரச பதவியும் தருவேன்; உன் மனம் நிறையும் வண்ணம் நீண்ட ஆயுளையும், உன் சந்ததிகள் நூறாண்டுகள் சீரும் சிறப்புமாக வாழவும், உரிமையோடு வரம் கேள் (என்றான் எமன்).

பூணி: கால்நடை
காணி: நிலம்
பேர்: செல்வம்
சித்திரை: தமிழ் வருட முதல் மாதம். 'சிந்தையில் நாடிய சித்திரை' என்பதற்கு எத்தனை புத்தாண்டுகள் வாழ விருப்பமோ என்று பொருள்



    இரண்டாவது மாணவனுக்கு லாட்டரிச்சீட்டிலும் விளையாட்டிலும் கவனம் திரும்பக் காரணம் என்ன? முதல் மாணவனுக்கும் சலன வாய்ப்புகள் இருந்தனவே? அவன் ஏன் கல்வியறிவுக்கான இலக்கிலிருந்து விலகவில்லை? தவறு-சரி என்ற தீர்வுப் பார்வையை ஒதுக்கிப் பார்த்தால், மனித இயல்பு எனும் நோக்கில், இரண்டு மாணவர்களின் தேர்வுகளுக்கும் விளக்கமே தேவையில்லை. தேடுவது மனித இயல்பு என்றாலும், தேடியது கிடைதத நிறைவும் நிம்மதியும் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. 'என்ன தேடுகிறோம்?' என்பதே பலருக்குச் சாகும் வரை தெரிவதில்லை. பெரும்பாலானோருக்குப் பாதையே பயணமென்ற எண்ணம்; பயணமே சேருமிடம் என்ற மயக்கம். வழிகளும் செயல்களும் புரியாமலே, இலக்கு என்ற எண்ணத்தை மட்டும் விரும்புவதால் வரும் வினை எனலாம். விசுவாமித்திரன் மேனகை காலத்திலிருந்து, அதற்கும் முன்னால் (?) சிவன்-பார்வதி-மன்மதன்-சிவராத்திரி காலத்திலிருந்து, இந்த இலக்கு-விலக்கு போக்கிற்கான உதாரணங்களைப் பார்க்கலாம்.

    wandering mind, wavering mind, restless mind எனும் மூன்று நிலைகளுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. 'அலைபாயும்' என்று, தமிழில் எல்லாவற்றையும் பொதுவான குடையில் கொண்டு வர விரும்பவில்லை, அதனால் ஆங்கில வழக்கையே பயன்படுத்தியிருக்கிறேன்; என் தமிழறிவில் குறை, மன்னிக்கவும். wandering mind கொண்டவர்கள் நிம்மதியும் சந்தோஷமும் பெறுவதில்லை என்று உளவியல் மற்றும் உடல்நல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. wavering mind கொண்டவர்கள் தத்துவக் கடல்களில் முத்துக் குளிக்கிறார்கள், அல்லது சோர்ந்து போகிறார்கள். restless mind தனிக்கதை. restless mindக்கு edge உண்டு. restless mind கொண்டவர்களுக்கு ஒரு தீவிரம் உண்டு. அந்தத் தீவிரத்தை, இலக்கை நோக்கிச் செலுத்த முனையும் பொழுது ஏற்படும் இடையூறுகள், சலனங்கள் பல நேரம் அவர்களைத் தடம் மாறச் செய்கின்றன. சிலர் மட்டுமே அந்தத் தீவிரத்தைத் தக்க வைத்துக் கொண்டு தடம் புரளாமல், சாதனை மைல்கல்களைத் தாண்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஐன்ஸ்டைன், காந்தி, தெரசா, கேட்ஸ், சமீப CNN புகழ் நாராயணன் க்ருஷ்ணன்.. என்று பலர் இப்படி மனப்பாலம் கட்டிச் சாதனைக் கடல்களைத் தாண்டியிருக்கிறார்கள். பல venture capital, private equity நிறுவனங்கள், தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களில் தலைமைக்குழுவின் 'restlessness quotient' அறிவதை விரும்புவார்கள் (குறிப்பாக founder, CEO போன்றவர்களின் RQ). மிலிடெரி அமைப்புகளின் தலைமையிலும் RQவை அளவிடுவதாகப் படித்திருக்கிறேன்.
    • wandering mind உள்ளவர்கள் இலக்கையே அறியாதவர்கள்; எடுப்பார் கைப்பிள்ளையின் மோசமான உதாரணம். இன்னது இலக்கு என்று கணத்துக்குக் கணம் நிலைமாறி அலைபாய்ந்து சோகத்திலேயே சோர்விலேயே வாழ்க்கையைக் கழிக்கும் அபாயத்தில் இருப்பவர்கள்
    • wavering mind உள்ளவர்கள் எளிமையானவர்கள். சராசரி மனிதம். இலக்கு தெரிந்தாலும் சுலபமாக மறந்தோ விலகியோ போகக் கூடியவர்கள். நம்மில் பெரும்பாலோர் இந்த வகையினர் என்கிறார்கள்
    • restless mind உள்ளவர்கள் இலக்கை மனதில் நிறுத்திச் சாதிக்கத் துடிப்பவர்கள். restless stateஐப் புடமிடலாம்; restless mind உள்ளவர்கள் தங்கச் சுரங்கம்.

    எத்தகைய மனநிலை பெற வேண்டும்? மூவகை மனநிலைகளும் ஒன்றுக்கொன்று சுலபமாக பின்னக்கூடியவை என்றாலும், எனக்கென்னவோ wavering கொஞ்சம் restless கொஞ்சம் கலந்தால் சுவையான வாழ்க்கை அமையும் என்று படுகிறது.

    நசிகேதன் கொண்டது எத்தகைய மனநிலை என்று எமன் சோதித்தானோ?

    உண்மையில், தன் பெருமை அழியும் நிலைக்குத் தானே காரணமாகிவிட்டதை உணர்ந்தான் எமன். தீவிரமாகச் சிந்தித்து, நசிகேதனிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். நயம், கொடை, அச்சம், ஒறுப்பு எனும் நான்கு முறைகளையும் கையாண்டு நசிகேதனின் மனதை மாற்றத் தீர்மானித்து, முதலில் நயத்தோடு தொடங்கினான்; பலனில்லாமல் போகவே, கொடைக்கு மாறினான்.

    பூமியிலிருந்து வந்த பிள்ளை மனித இனத்தைச் சார்ந்தவன் தானே? மனிதருக்கு இருக்கும் ஒரு பெரிய குறை, ஆசை அல்லவா? ஆசையின் காரணமாக விளையும் சபலம் தான் மனிதனின் மிகக்கொடிய பலவீனம். மன உறுதிச் சங்கிலியை உடைத்தெறியும் உளியல்லவா சபலம்? உளியைத் தாக்கும் சம்மட்டியல்லவா ஆசை? எமன் உளியையும் சம்மட்டியையும் எடுத்து, நசிகேதனின் மன உறுதியை உடைத்தெறிய முயற்சி செய்தான்.

    தேர்தல் நேர வேட்பாளர் போல் எமன் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினான். பொன்னைத் தருவேன் என்றான். மண்ணைத் தருவேன் என்றான். மாநிலத்து அரசனாக்குவேன் என்றான். கால்நடைச் சொத்துக்களைப் பெருக்குவேன் என்றான். இவற்றையெல்லாம் அனுபவிக்க பெரிய குடுமபம் வேண்டாமா? அதனால் சந்ததிகளை நூறாண்டு வாழ வைப்பேன் என்றான். நூறாண்டுகள் வாழ்ந்தால் போதுமா, வசதிகளை அனுபவிக்க வேண்டாமா? அதனால் அவர்கள் சிறப்பாக வாழ வழி செய்வேன் என்றான். இவற்றால் நசிகேதனுக்கு என்ன பயன்? அவனும் அனுபவிக்க வேண்டாமா? நசிகேதனை நூறாண்டு வாழ வைப்பதாகச் சொல்லவில்லை; ஒரு படி மேலே சென்றான். சித்திரை, தமிழாண்டின் முதல் திங்கள். நசிகேதனிடம், "ஐயா, நீ எத்தனை சித்திரைகள் வாழ நினைக்கிறாயோ, அத்தனை புத்தாண்டுகள் வாழ்வாயாக" என்றான். "காலத்தை நில் என்று சொல்லும் மாயத்தைக் கற்றுத் தருகிறேன்" என்றான்.

    எல்லாம் எதற்காக? ஒரே ஒரு ஓட்டுக்காக. பலவீனக் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டினான். வாரி வழங்கிய வள்ளல் போட்டது, ஒரே ஒரு நிபந்தனை தான்: 'மன உறுதிச் சங்கிலியை மட்டும் உடைத்துக் கொடுத்து விடு' என்பதே! "பிரிதொரு வரம் கேள், பொன்னும் பொருளும் பல்லாண்டு வாழ்வும் தருகிறேன்" என்றான். நசிகேதன் கேட்டுக் கொண்டிருந்தான். ►

2011/03/01

வரம் மாற்ற மறுத்தான் நசிகேதன்


30
நொய்வதல்லா உண்மை உயிர்ப்பயணம் நாளறியார்
எய்தவல்லா ஏற்றமென்றீர் மெய்விரதா - மெய்யறிவில்
முன்வரம் நீர்தானே? மூவாசான் நீர்தானே?
என்வரம் மாற்றுவ தேன்?

    வாய்மையை விரதமாகக் கொண்டவரே! எளிதில் விளங்கா நுட்பமென்றும், காலத்தை வென்றவர்களும் பெற முடியாத அறிவென்றும் உயிரின் பயணம் பற்றிச் சொன்னீர்கள். உண்மையான அறிவு இல்லையென்றால் நான் முன்பு பெற்ற வரங்கள், நீர் போல் மறையக் கூடியவை அல்லவா? நீங்கள் தானே மெய்யறிவை மூவகையிலும் பெறச்செய்யும் ஆசான்? நான் கேட்ட வரத்தை மாற்றலாகுமா? (என்றான் நசிகேதன்).

நொய்வது: எளிதாவது
நாளறியார்: காலம் ஒரு பொருட்டல்லாதவர், தேவர்
மெய்விரதன்: எமன்
மெய்யறிவில்: மெய்+அறிவு+இல் எனப்பிரித்தால் 'உண்மையான அறிவற்ற' என்றும், மெய்+அறிவில் எனப்பிரித்தால் 'உண்மையான அறிவுடைய' என்றும் பொருள்
முன்வரம்: முன்பு பெற்ற வரம்
மூவாசான்: அறிவு பெறக்கூடிய மூன்று வகையினையும் காட்டும் ஆசிரியன்
நீர்தானே: 'தண்ணீர் தானே' என்றும், 'நீங்கள் தானே' என்றும் பொருள் கொள்ளலாம்



    அறிவை மூவகையில் பெறலாம். தெரிந்து, புரிந்து, அறிந்து கொள்வது அறிவு. தெரியாத ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது, தெரிய வைப்பதாகும். தெரிந்ததைப் பிழை திருத்திச் சீர்படுத்துவது, புரிய வைப்பதாகும். புரிந்ததைக் கொண்டுச் சுயமேம்பாட்டைத் தேட வைப்பதும், பலநேரம் தெரியாமலே புரிய வைப்பதும், அறிய வைப்பதாகும். பார்த்தால் தெரியும்; பழகினால் புரியும்; உணர்ந்தால் அறியும். எல்லா மாணவர்களும் மூவகையிலும் அறிவைப் பெற இயலாமல் போகலாம். மூவகையிலும் அறிவைப் பெறத்தக்க மாணவனை நல்லாசிரியன் அடையாளம் கண்டு மெருகேற்ற வேண்டும்; தவறினால் நல்லாசிரியக் கடமையிலிருந்து தவறியதாகும். தவறிய நல்லாசிரியர்களுக்கு மன நிறைவு கிடைப்பதில்லை.

    ஏழும் மூன்றும் பத்து என்பது தெரிதல். மூன்று ரூபாய்ப் பொருள் வாங்க கடைக்காரரிடம் கொடுத்த பத்து ரூபாயில், மிச்ச சில்லறையென்று அவர் ஐந்து ரூபாயைக் கொடுக்கும் போது, "ஏழு ரூபாய் அல்லவா பாக்கி தர வேண்டும்?" என்று சொல்ல வைப்பது புரிதல். 'சம்பளம் பத்து ரூபாய், சேமித்தது மூன்று போக ஏழு ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டும்' என்று கட்டுப்பாட்டுக்கான வழி காட்டுவது அறிதல். அறிவு மட்டுமே மனநிம்மதியைக் கொடுக்கும். அறிவால் மட்டுமே எதையும் கட்ட முடியும். பத்து ரூபாய் செலவுக்கே இப்படியென்றால், வாழ்க்கையின் கணக்கைச் சரிகட்டி நிம்மதியைச் சேர்க்க அறிவு வேண்டாமா? (இந்த அறிவு எனக்கில்லை என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்).

    வாழ்வில் நிம்மதியைக் கொடுக்க வல்ல எந்த நெறிக்கும் மேற்சொன்ன மூவகை அறிதலைப் பொருத்திப் பார்க்கலாம். செயல்களின் விளைவுகளைத் தெரியாமலே, புரியாமலே, அறிந்து கொள்ளும் பாங்கு மனிதருக்கு மட்டுமே உண்டு. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

    ஒரு கதை.

    இரண்டு ஆசிரியர்கள். நான்காம் வகுப்பில் கணிதம் சொல்லித் தருகிறார்கள். சதவிகிதம் பற்றிய பாடம். 'சதவிகிதம் என்றால் என்ன?' என்று முதலில் சொல்லிக் கொடுக்கிறார்கள். 'நூறு என்ற மொத்தத்தின் அடிப்படையில், நூறு வரையிலான எண்களை வைத்து, மொத்தத்தின் பகுதிகளை அளக்க சதவிகிதம் ஒரு முறை' என்று தெரியச் சொல்லிக் கொடுக்கிறார்கள். "அப்படியென்றால்?" என்கிறாள் ஒரு மாணவி. "அப்படியென்றால், அப்படித்தான்" என்று ஒரு ஆசிரியர் சொல்கிறார். இன்னொரு ஆசிரியர், "நூறு என்பது முழுமையான பகுதி. இதோ உன் கையில் நான் கொடுக்கும் தித்திப்பான லட்டைப் போல். இந்த முழுப் பகுதியில் நூறு சிறு பகுதிகள் இருக்கின்றன, இந்த லட்டில் இருக்கும் நூறு பூந்திப் பந்துகள் போல். இந்த லட்டைப் பத்தாகப் பிரித்தால் பத்து பூந்திகள் கொண்ட சிறு பந்துகளாகப் பிரிக்கலாம். அல்லது, இந்த லட்டை இரண்டாக உடைத்து ஒரு பாதியை உன்னிடம் கொடுத்தால், என்னிடம் எத்தனை பூந்திகள் உள்ளன என்று நீ கண்டுபிடிக்கலாம். அல்லது லட்டின் பூந்திகளை வகுப்பில் இருப்பவருக்கெல்லாம் பிரித்துக் கொடுத்தால் முழு லட்டின் பகுதி ஒவ்வொருவரிடமும் இருப்பதை அளந்து பார்க்கலாம். முழு அளவு நூறை விட அதிகமாகாது என்றும் தெரிந்து கொள்ளலாம்" என்று, உதாரணங்களுடன் பிழை திருத்திப் புரியச் சொல்லிக் கொடுக்கிறார். "இதைப் புரிந்து கொள்வதால் என்ன பயன்?" என்கிறாள் அந்த மாணவி. "நீ ஐந்தாம் வகுப்பு போவதற்கு இதை அறிய வேண்டும்" என்று முதல் ஆசிரியர் பதில் சொல்கிறார். இரண்டாவது ஆசிரியர் புன்னகைக்கிறார்.

    முப்பது வருடங்கள் ஓடுகின்றன.

    ஆசிரியர் தின விழாவில் இந்திரா நூயி பேசுகிறார்: "இன்றைக்கு நான் உலகத்தின் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவியாக இருப்பதற்கு ஒரு காரணம், நான்காம் வகுப்பில் எனக்கு அறிவு வழங்கிய ஆசிரியனல்லவா? அந்த ஆசிரியன் அறிய வைத்ததால் தானே இன்றைக்கு என் நிறுவனத்தின் வளத்தையும், செயல்திறனையும், வளர்ச்சியையும், தேவையையும் ஒரு முழு அளவின் அடிப்படையில் திட்டமிட்டு அளந்து செயலாற்ற முடிகிறது?"

    இரண்டு ஆசிரியர்களுமே தங்கள் தொழிலைச் செய்தார்கள். ஒருவர் மட்டுமே கடமையைச் செய்தார். வளர்ந்து மேம்பட்ட அந்த மாணவி, தன் மேன்மைக்கு ஒரு காரணமாக ஆசிரியனை நன்றியுடன் நினைக்குமளவுக்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே அறியும் அறிவை அவளுக்கு வழங்கினார். அதுவே நல்லாசிரியரின் இலக்கணம். அந்த மாணவியும் நல்லாசிரியரை நாடியது இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அதுவே நல்ல மாணவரின் இலக்கணம்.

    சாதாரணக் கணிதத்துக்கே இப்படி என்றால், மரணத்தின் தன்மையறிய, நுட்பமறிய, மூவாசான் தானே தேவை? மரணமடைந்தவர்கள் போகுமிடமாகச் சொல்லப்படும் எமனுலகின் அதிபதியிடம் பெறாமல், இந்த அறிவை எவரிடம் பெறுவது? அதனால், "மூவாசான் நீங்கள் தானே?" என்றான். நசிகேதனின் மன உறுதியை எடுத்துக் காட்டும் ஒரு பாடல் இது. அறியாமையைப் போக்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட மாணவன் அல்லவா? 'வேறு வரம் கேள்' என்ற எமனின் கோரிக்கையை ஏற்க மறுத்தான்.

    அறிவுள்ள பிள்ளையல்லவா, முன் கேட்ட வரங்களை ஒரு முறை நினைத்துப் பார்த்தான்: 'முதல் வரத்தால் தந்தை மனம் சீர்பட்டு என் மேல் அன்பு காட்டும்படி செய்தேன். அது நிலையானதா? தந்தை உயிருள்ள வரை நிலைக்கும். பிறகு, அந்த வரத்தால் பயனில்லை. இரண்டாவது வரத்தால் சொர்க்கத்துக்குச் செல்லும் வழியைத் தெரிந்து கொண்டேன். அது நிலையானதா? மனதை ஒரு நிலைப்படுத்தி உள்ளிருக்கும் தீயை வளர்த்து நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தாலும், இறந்த பிறகு என்ன ஆகுமென்று யாருக்குத் தெரியும்? உயிர்ப்பயணம் பற்றித் தெரியாதே? உடனே சொர்க்கம் செல்வோமா? சொர்க்கமே சென்றாலும், அது நிலையானதா? நற்பயனுக்கான நேரம் முடிந்ததும், மறுபடியும் விதை பயிராகி விதையான கதை தானே? பயனுள்ள வரமென்று நினைத்து இரண்டாவது வரத்தைக் கேட்டேன், அதுவும் நிலையில்லை என்பது புரிந்து விட்டது'.

    நசிகேதன், தான் கேட்ட வரங்களிலிருந்தே தன் அறிவை வளர்த்தான். எமனிடம், "ஐயா, நீங்கள் முன்பளித்த வரங்களின் பலன்கள் நீரைப் போன்றது. இன்று பெருகி ஓடும், நாளை வற்றி விடும். நிலையில்லாதவை" என்றான். "மேலும் மரணத்தைப் பற்றிய உண்மை மிக நுட்பமானது, புரிந்து கொள்ள நாளாகும், என்றைக்கும் இளமையைப் பெற்றிருக்கும் தேவர்களுக்குக் கூடப் புரியாதது என்றெல்லாம் சொல்லிவிட்டு, வேறு வரம் கேள் என்று சொல்கிறீர்களே?" என்றான். "என்னய்யா கிண்டலா? இப்படி ஆசை காட்டி மோசம் செய்யலாமா?" என்று கேட்கவில்லை; பண்புடையவன். "நிலையற்ற பலனுடைய வரங்களை விட, என் காலத்துக்குப் பின்னும் என்றைக்கும் நிலைக்கும் அறிவையே பெற விரும்புகிறேன். அறிவை வழங்க உங்களை விடச் சிறந்தவரை அறியேன். வேறு வரம் வேண்டாம்" என்று தன் மன உறுதியை வெளிப்படுத்தினான் நசிகேதன். வெள்ளத்தால் போகாத, வெந்தணலால் வேகாத, கொடுத்தாலும் குறையாத அறிவை, கல்வியை, பெற விரும்பிய நசிகேதன் வேறு வரம் தேவையில்லை என்பதைப் பணிவாகச் சொன்னான்.

    புகழ்ச்சிக்கு யார் மயங்குவதில்லை? எமன் விதிவிலக்கா? 'மூவாசான் நீர்தானே' என்றது எமனைப் புகழ்வதற்கு எனினும், 'மெய்விரதா' என்றழைத்தான் நசிகேதன். அறத்தை விரதமாக, நெறியாகக் கொண்டதாகக் கருதப்படும் எமன், அரிச்சந்திரன், தருமன், பீஷ்மன் நால்வரையும் 'மெய்விரதன்' என்று அழைப்பார்கள். இவர்களில் அரிச்சந்திரனும் தருமனும் பீஷ்மனும் கணமாவது அறத்தை, நல்லொழுக்கத்தை, கைவிட்டவர்கள் (விவரங்களை ராமாயண மகாபாரதப் புராணங்களில் காணலாம்). எமன் மட்டுமே அறத்தைக் கணங்கூடக் கைவிடாதவன். அந்த விரதம், வாழ்க்கை நெறி நிலைக்கவேண்டி 'எம்பெருமை ஈனாதருள்' என்று பழிக்கஞ்சி வேண்டினான்.

    'அறத்தை விரதமாகக் கொண்டவரே, என்ன புரட்டப் பார்க்கிறீர்?' என்று மறைமுகமாகச் சொன்னான் நசிகேதன். எமன் தன்னிடம் வகையாகச் சிக்கினான் என்பது நசிகேதனுக்குப் புரிந்திருந்தது. ►

2011/02/25

வேறு வரம் கேள் என்றான் எமன்


29
ஐந்தும் அறிந்தார்க்கும் ஆன்மா ஐயமன்றோ
மைந்தனே மாற்று வரங்கேள் - நைந்தறியா
உம்பருக்கும் ஏறா தெருளாம் உளந்திரும்பி
எம்பெருமை ஈனா தருள்.

    ஐம்புலனை அறிந்தவருக்கும் புரியாததன்றோ உயிர்? இளமை நிலை மாறாதத் தேவர்களும் இதைத் தெளிவாக அறியார். அழகனே, வேறு வரம் கேள். தயவு செய்து உன் மனதை மாற்றிக்கொண்டு என் பெருமை குறையாதிருக்கச் செய் (என்றான் எமன்).

ஐந்து: மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்கள்; வெளி ஒளி வளி மண் நீர் என ஐம்பொறிகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்
ஆன்மா: உயிர்
மைந்தன்: இளையவன், அழகன்
நைந்து: தளர்ந்து, நிலைமாறி, முதிர்ந்து
உம்பர்: தேவர்
தெருள்: தெளிவு
ஈனாது: குறையாது, தேயாது



    வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் குறைபடாது.. எது?

    கற்றுத் தரும் ஆசிரியனுக்கும் கற்க எண்ணும் மாணவருக்கும் இந்த உண்மை புரிந்திருக்க வேண்டும். முன்னர் சந்தித்த மாணவர்கள் இருவருக்குமே உயர்ந்த நோக்கம் உண்டு. எனினும், இரண்டாவது மாணவனின் நோக்கம், சுயமாக நிறைவேற வழியில்லை; கற்க வேண்டியதை நிற்க வைத்துவிட்டானே?

    நல்ல அறிவைப் பெற, கடினமான உழைப்பும், மாறா உறுதியும் வேண்டும். இன்றொன்று நாளொன்று என அன்றன்று அலைபாய்ந்தால் அறிவைப் பெற முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்தி அறிவைப் பெறும் ஒழுக்கம், நல் மாணாக்கனுக்கு வேண்டும். இரண்டு மாணவர்களுமே வாழ்க்கையில் முன்னேறிச் சிறப்பெய்தினார்கள் என்றாலும், ஒருவன் மட்டுமே - படித்த முதல் மாணவன் மட்டுமே - தாங்கள் கொண்டிருந்த உயர்ந்த நோக்கத்தை அடையத் தேவையான அறிவைப் பெற்றிருந்தான். ஒரு ஆசிரியன் அத்தகைய மாணவனையே தேடிப் பிடித்துக் கற்பிக்க வேண்டும்.

    ஒரு ஆசிரியனின் கண்ணோட்டத்தில், எந்த மாணவர் வாழ்வில் உயர்வார் என்பதை விட, எந்த மாணவர் சிறப்பாகக் கற்பார் என்பதே முக்கியமாகிறது. கற்றவர் வழிப் பரவும் கல்வி, அல்லவா? கல்வியும் அறிவும் முதல் மாணவன் வழியாகத் தொடர்ந்து பரவ வாய்ப்பிருக்கிறது. செல்வந்தனாகி விட்ட இரண்டாம் மாணவனிடம் கல்வி அழிந்து விட்டது; அறிவு அடங்கி விட்டது. சிறப்பான அறிவை ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், இரண்டாவது மாணவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் கல்விக்கும் அறிவுக்கும் அழிவேற்பட ஆசிரியரே உடந்தையாகியிருப்பார். பொறுப்பற்ற மாணவரால் ஆசிரியரின் தவமும் பெருமையும் கெடுகிறது. (என் குடும்பக் கிளையில் என்னுடன் தமிழறிவு முடிவது துயரமென்றாலும், என் தமிழாசிரியரைப் பழி சொல்ல மனமில்லை! :)

    குரு-சீடர், ஆசிரிய-மாணவர் உறவை அறியவும் விளக்கவும் பல உளவியல் மாதிரிகள் உள்ளன (mentor mania, professor syndrome, ugly duckling philosophy, joker syndrome, upward mobility crisis, cascading failure, groupthink, ...). இந்த ஆராய்ச்சி human resources management, organizational behavior modeling, knowledge transfer framework, business succession planning, generational strategic planning என்று பலவாறு வளர்ச்சி மேலாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. 'குருபிழை'யைத் தவிர்ப்பதே இவற்றின் நோக்கம். இன்னொரு 'கெனடி' இன்னொரு 'சாஸ்திரி' இன்னொரு 'மேனெக் ஷா' தோன்றாததற்குக் 'குருபிழை' ஒரு காரணம் என்கிறார்கள்.

    'குருபிழை' என்றால் என்ன? வழிகாட்டும் பொறுப்புடையவர்கள், தங்கள் செய்கையினால் மறைமுகமாகத் தவறான வளர்ச்சியை உண்டாக்குவதும் சரியான வளர்ச்சியை அழிப்பதும் குருபிழை எனப்படும். ஒரு ஆசிரியன் செய்யக்கூடிய மகத்தான பிழை யாது? புரியும்படி சொல்லிக் கொடுக்காததா? அல்லது, புரியாதபடி சொல்லிக் கொடுப்பதா? நல்ல மாணவனைத் தவற விடுவதா? மோசமான மாணவனைத் தேர்ந்தெடுப்பதா? அறியாத மாணவன் மேலா, அரைகுறையாய் அறிந்த மாணவன் மேலா? நல்ல ஆசிரியனுக்கு எதில் நாட்டம்? அறிவை வளர்க்கக் கூடிய மாணவனை எப்படி அறிந்து கொள்வது? இவற்றுக்கான விடை அறியும் தந்திரம், நல்லாசிரியர்களுக்கு தெரிந்திருந்தது. தெரியும். தெரிய வேண்டும்.

   எமன் நல்லாசிரியனா?

    தர்மத்தின் தலைவனான எமன், "என் பெருமை குறையாதிருக்க அருள் செய்" என்று மானிடச் சிறுவன் நசிகேதனிடம் கெஞ்சுவானேன்? எமனின் பெருமை எப்படிக் குறையும்? தனக்குப் பழி நேர்ந்தால் பெருமை குறையுமென்று அஞ்சி, நசிகேதனிடம் கெஞ்சினான். வாக்கு தவறினால் பெரும் பழி அல்லவா? அதுவும் அறத்தை நிலை நாட்டுவதையே தொழிலாகக் கொண்டவன், அறம் பிறழலாமா?

    வரம் கொடுப்பவனே வரம் கேட்கும் நிலைக்கு வந்து விட்டான். இது நமக்கு ஒரு பாடம். இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று ஆயிரம் சொல்லிவிட்டு, 'முடியவில்லை' என்று ஏதோ ஒரு காரணம் காட்டிப் பின்வாங்கும் கேவலமான மனிதர்களை தினமும் பார்க்கிறோம். உறவும் பாராட்டுகிறோம். நண்பராகிறோம். தலைவி அல்லது தலைவனாக்குகிறோம். 'பேச்சோடு சரி' என்று தெரிந்ததும் அவர்கள் மேல் ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. 'ஏமாற்றுக்காரர்' என்று நினைக்கத் தொடங்குகிறோம். 'அவளை நம்பமுடியாது', 'அவனை நம்பினா உருப்பட்ட மாதிரி தான்' என்று பழி போடத் தொடங்குகிறோம். நசிகேதன் அவ்வாறு தன்னை வெறுத்துவிடுவானோ என்று எமன் அஞ்சினான். ஏன் அஞ்ச வேண்டும்?

    காலன் மேலாளும் நிர்வாகம் யாது? அந்தக்கால டியூசிஎஸ் கிடங்கா? கோயிலில் லட்டு, சுண்டல் வினியோகமா? பள்ளிக்கூடமா? பால்பண்ணையா? காய்கறிக் கடையா? தொழிற்சாலையா? இல்லையே? எவருக்குமே புரியாத ரகசிய நுட்பத்துக்கு நிர்வாக உரிமையாளன் அல்லவா? மரணத்திற்குப் பின் நடப்பதாகச் சொல்லப்படும் உயிர்களின் பாவ புண்ணிய வழக்கில், தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவன் ஆயிற்றே? அங்கே வக்கீலும் அவனே; சாட்சியும் அவனே; ஜூரியும் அவனே; நீதிபதியும் அவனே. போதாதென்று, அந்த வழக்குமன்றச் சட்டங்களை எழுதியவனும் அவனே; தண்டனை வழங்குவதும் அவனே; சிறையில் தள்ளினால் சிறைக்குச் சொந்தக்காரனும் அவனே; அப்பீல் செய்தால் அங்கே உயர்நீதிபதியும் அவனே. அங்கே கிடப்பதும் நடப்பதும் எவருமறியாத மர்மமாக இருக்கும் வரை எமனுலகைப் பற்றிய அச்சமும் மரியாதையும் நிலைக்கும். அங்கே நடப்பது தெரிந்து, இனி எல்லோரும் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால்? மரணம் பற்றிய அறிவு பரவலாகக் கிடைக்காத வரை, மனிதர்கள் நெறிகளை ஓரளவுக்குப் பின்பற்றுவார்கள். அறிந்துகொண்ட பின், நெறி தவறினால்? மரணத்துக்குப்பின் உயிருக்கு என்ன ஆகிறது என்பதை விளக்கச் சொல்லி, மடியிலேயே கை வைத்து விட்டதே இந்தப் பிள்ளை?

    மரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்வது கடினமா? எமனின் பார்வையில், அது காலத்துக்கு அப்பாற்பட்ட அறிவு. நசிகேதனிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தான். "அழகா, நான் சொல்வதைக் கேள். ஐம்புலன்களை அடக்கியாள அறிந்த ஞானிகளுக்கும் இது புரிவது கடினம். மாறா இளமையைப் பெற்றிருக்கும் தேவர்கள் கூட கடலின் ஆழத்தையும் வானத்தின் பரந்த எல்லைகளையும் தீயின் வெம்மையையும் காற்றின் மூலத்தையும் அறிந்து கொண்டாலும், அவர்களால் மரண உண்மையை அறிய முடியவில்லை" என்றான். காலத்துக்கப்பாற்பட்ட அறிவைப் பெற முயற்சி செய்கிறவரும் காலத்துக்கப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே? எல்லாம் துறந்த ஞானிகள் பல்லாண்டு முயற்சியில் புலனடக்கிப் பழகலாம்; என்றைக்கும் தளராமல் இருப்பதாகச் சொல்லப்படும் தேவர்களால் ஒருவேளை இது முடியலாம்; சாதாரண மனிதக் குழந்தையான நசிகேதனால் முடியாது என்பதே எமன் சொல்ல வந்தது. 'உனக்கு புரியாது' என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் எமன். ஆனால், அது விளக்கமாகாது; மந்திரம் என்ற போர்வைக்குள் மூடியது போலாகும். மாணவரின் அறிவிற்கேற்ப உதாரணம் சொல்லி விளக்குவது தான் நல்லாசிரியருக்கு அழகு. எமன் கையாண்டதும் அதே முறை தான். 'மரணத்திற்கப்பால் நிகழ்வதைப் புரிந்து கொள்ள எண்ணிலடங்காத காலம் ஆகும்' என்ற எச்சரிக்கையை, உதாரணங்களோடு எடுத்துச் சொன்னான்.

    அப்படியென்ன மர்மம்? சொல்லிவிட்டுப் போவது தானே? காலத்துக்கப்பாற்பட்ட தேவர்களுக்கும் புரியாத நுட்பமென்றால், குழந்தைக்கு எங்கே புரியப் போகிறது? நசிகேதனும் உடனே மறந்து விடப் போகிறான். எதற்காக இன்னொரு வரம் கேட்கச் சொல்லி இதை இழுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

    காலனின் உள்நோக்கத்தை, ஒரு நல்ல ஆசிரியனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 'மரணத்தைப் பற்றி விளக்குவதில் எமனுக்கு ஒரு சிக்கலும் இல்லை. நசிகேதனுக்குப் புரியாமல் போனாலும், வரம் கொடுத்தக் கடமை முடியும்; எமனுக்கு ஒரு பழியும் வராது' என்று முதற்கண் தோன்றினாலும் எமனின் செய்கையில் பொருள் உண்டு. எமன், 'குருபிழை'யைத் தவிர்க்க முனைந்தான்.

    நசிகேதனுக்கு விளக்கம் சொல்லாவிட்டால் எமனுக்குப் பழியுண்டாகும். அதே நேரம், தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு பூமிக்குப் போனபின், நசிகேதன் எல்லாவற்றையும் குட்டையாகக் குழப்பிவிட்டால்? அதுவும் பழிதானே?

    நல்ல மாணவனுக்கு, நல்ல ஆசிரியன் கிடைப்பதரிது. நல்ல ஆசிரியனுக்கு, நல்ல மாணவன் கிடைப்பது அரிது. 'இந்த மாணவனுக்கு இதை அறியும் திறமையும் பொறுமையும் இருக்கிறதா' என்று முன்பே அறிந்து கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமை. அறிவைப் பெறும் திறமை இருப்பினும், நிலையான விருப்பம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? நிலையான விருப்பம் இருந்தாலும் குறையாத பொறுமை இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? குறையாத பொறுமை இருந்தாலும் அறிந்ததை வளர்த்துப் பகிரும் பண்பட்ட மனம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? மாணவனின் மனம் விளையாட்டிலும் லாட்டரிச் சீட்டிலும் போகாது என்று எப்படித் தெரிந்து கொள்வது? விளையாட்டையும் லாட்டரிச் சீட்டையும் முன் வைத்தால் தெரிந்து போகிறது! எமனும் "இந்த வரம் வேண்டாம், வேறு வரம் கேள்" என்றான். நசிகேதப் பிள்ளை, முதல்பரிசுச் சீட்டைக் கேட்பானா? ►

2011/02/22

தெளிவாகக் கேள் என்றான் எமன்


28
மழையெருமை போல்காலன் மாத்திரைப் பேந்திப்
பிழையிலாது கேள்பிள்ளாய் என்றான் - இழையுமுயிர்
ஈர்ந்தபின் எங்குபோகும் என்னவாகும் என்றுரைக்க
நேர்ந்தான் நசிகேதன் நொய்த்து.

    மழையில் நனையும் எருமைமாடு போல் ஒரு கணம் சலனமற்று விழித்த எமன், "தெளிவாகக் கேள், இளையவனே" என்றான்; பதிலுக்கு, "இழைநூல் போன்ற உயிரானது, அறுந்ததும் எங்கு போகிறது, அதற்கு என்ன ஆகிறது என்பதை உரைக்கும்படி" எமனிடம் விவரமாக வேண்டினான் நசிகேதன்.

மாத்திரை: சிறு கால அளவு
பேந்தி: விழித்து
ஈர்ந்த: அறுந்த
நேர்ந்தான்: வேண்டினான்
நொய்த்து: நுண்மையாக்கி, பொடியாக்கி, பிரித்து



    தர்மசங்கடம், அதாவது இக்கட்டான நிலை, என்றால் என்ன?

    'அடுத்த அறைக்குள் என்ன நடக்கிறது என்றறிய ரகசியமாகச் சாவித்துளையில் கண் வைத்துப் பார்க்கையில், மறுமுனையிலும் கண் தெரிந்தால் இக்கட்டு' என்று ஆஸ்கர் வைல்ட் சொன்னதாகச் சொல்வார்கள். சுவாரசியமான விளக்கம்.

    சற்றும் எதிர்பாராததைக் கண்டுப் பேதலிக்கிறோம். வீட்டிலோ வெளியிலோ இது போன்ற இக்கட்டுகளை எதிர்கொள்கிறோம். பல நேரம் வெறும் பேச்சு வார்த்தை கூட நம்மை நிலைகுலையச் செய்வதை அறிவோம். அத்தகைய சூழலில், எதிர் நடவடிக்கையில் உடனே இறங்காதிருப்பது ஒரு தந்திரம். "என்ன சொன்னீர்கள்?" என்று புரியாதது போல் ஒரு முறை கேட்டால், அந்தக் கணத்தின் கொந்தளிப்பு திசைமாறக் கூடும். பதில் வேறு விதமாக வரச் சாத்தியமுண்டு. delay and deflect என்பது அவசரம், குழப்பம், மற்றும் தர்மசங்கடமான நிலைகளில் கையாளப்படும் தந்திரம். இதற்கான உதாரணங்களைச் சட்டமன்றங்களிலும், அரசியலிலும் அடிக்கடிக் காணலாம். சர்சில், இந்திரா காந்தி, பில் கிலின்டன், கருணாநிதி போன்றவர்களின் அரசியல் சமாளிப்புத் தந்திரங்கள் முதுநிலைப் பாடமாக வேண்டிய அளவுக்கு நுண்மையானவை.

    எமன் அனுபவித்ததும் எதிர்பாராத சங்கடம். வரம் தருவதாக வாக்களித்து விட்டான். ஆனால் நசிகேதன் கேட்ட வரமோ, மரண உண்மையின் விளக்கம்.

    இதில் எமனுக்கு என்ன இக்கட்டு?

    மரணத்தின் தன்மை மர்மமாக உள்ள வரை மனிதருக்கு மரண பயம் இருக்கும்; அந்தப் பயத்தை வைத்து நன்மை தீமைகளை நேராகவோ, கண்மூடித்தனமாகவோ, அறியச் செய்யலாம். fear is the best motivator - பயத்தைப் போல் சிறந்த உந்துதல் எதுவுமே கிடையாது என்பார்கள். இந்தப் பிள்ளை மரண உண்மையை வேண்டுகிறானே? அதுவும் மரண தேவனிடமே கேட்கிறானே? மரண உண்மை தெரிந்துவிட்டால் மரண தேவனை யார் மதிப்பார்கள்? 'வரம் தருவதாகச் சொன்னோம், இப்போது ஆளையே கவிழ்க்கும் வரத்தை எப்படி வழங்குவது'? இதுவே எமனின் தர்மசங்கடம்.

    நசிகேதன் கேட்ட வரம் காதில் விழுந்ததும் எமனுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. என்ன கேட்கிறான் இந்தப் பிள்ளை?! மழையில் நனையும் எருமை போல் சலனமில்லாமல் நின்றான் எமன். பிறகு நிலைக்கு வந்து, "பிள்ளாய், நீ சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. தவறாகக் கேட்டது போலிருந்தது. சற்றுத் தெளிவாகக் கேட்கிறாயா?" என்றான். ஒருவேளை வேறு ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்தான்.

    நசிகேதன் விடுவானா? முதல் வரத்தில் பாடம் கற்றவன் அல்லவா? மரணத்தின் தன்மை என்று பொதுவாகச் சொன்னால் விளங்காமல் போய்விடப் போகிறதே என்று நினைத்தவன், கிடைத்த வாய்ப்பை இழப்பானா? எமனுக்கு நிகராகப் பதில் சொன்னான். "ஐயா, உயிர் பிரிந்ததும் எங்கே போகிறது? என்ன ஆகிறது? இதைச் சொல்லுங்கள்" என்று, தான் அறிய விரும்பிய மரண உண்மையின் விவரங்களை குழப்பமே வராத அளவுக்குப் பிட்டு வைத்தான்.

    ஒருவேளை இந்த உரையாடல், எமன் என்னும் ஆசிரியன் நசிகேதன் என்னும் மாணவனுக்கு வைத்த நுழைவுத்தேர்வா?►

2011/02/18

நசிகேதன் வேண்டிய மூன்றாம் வரம்


27
உள்ளார் இலாரென்றுப் பல்லார் உயிரது
புள்ளாய்ப் பறந்தபின்னும் சொல்வானேன்? தெள்ளிய
மூதறிவாய் மூன்றாம் வரந்தருவீர் உம்மொழியாற்
சாதலின் நுண்மை நவின்று.

    உயிர் உடலை விட்டுப் பறவை போல் பறந்து போன பின்னும், இறந்தவரை இருப்பதாகச் சிலரும் மறைந்ததாகச் சிலரும் சொல்கிறார்களே, அது ஏன்? மரணத்தின் இயல்பைப் பற்றியத் தெளிவான முழு அறிவை உங்களிடமிருந்து பெறுவதே என் மூன்றாவது வரமாகும் (என்றான் நசிகேதன்).



    ஆசிரியர்களுக்குத் தொலைநோக்கு உண்டா? தொலைநோக்கின் அடிப்படையில் ஒரு நல்ல ஆசிரியனுக்கு தொழில்முறை இக்கட்டு வருவது உண்டா?

ஆசிரிய-மாணவ உறவு நுட்பமானது. முற்றிலும் தன்னலமில்லாத அக்கறையெனில், ஒரு நலல ஆசிரியரின் அக்கறை மட்டுமே. தாயிடம் கூட இந்தத் தன்மையை எதிர்பார்க்க இயலாது என்று தோன்றுகிறது. ஆசிரிய-மாணவ நட்பும் உறவும் எல்லா ஆசிரிய மாணவருக்கும் கிடைப்பதில்லை. அந்த வருட அறிமுகங்களோடு முடிகின்றன; தற்காலிக நட்பாகக் கூட வளர்வதில்லை பெரும்பாலும். சில ஆசிரிய-மாணவ நட்புகளோ சாதாரண உறவு நிலைகளையும் தாண்டி நிரந்தரப் பிணைப்பாகிறது. இன்றைய முகமற்ற சமூகத்திலும் இத்தகைய ஆசிரிய-மாணவப் பிணைப்புகள் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றே நம்புகிறேன்.

ஒரு கதை. தொடர்ந்து ஒரு கேள்வி.

இரண்டு மாணவர்களும் சிறு வயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். சிறந்த மாணவர்கள். இருவருக்குமே தங்கள் வாழ்வில் பொதுநலன் கருதி வாழவேண்டும், இன்னாராய் உயர வேண்டும் என்ற நோக்கங்கள் உண்டு. சீர்மைக்கானத் தொலைநோக்கோடு கல்லூரியில் காலெடுத்து வைத்தார்கள்.

'சத்துள்ள செயற்கை உணவு' பற்றிப் படித்து ஆராய்ச்சி செய்து, பட்டப்படிப்பு முடித்து அதே துறையில் பணி செய்து, செயற்கை உணவுக்கான தூண்டு மற்றும் செரிமானப் பொருளைக் (enzymes) கண்டுபிடித்து, சத்துள்ள செயற்கையுணவைக் குறைந்த செலவில் தயாரித்து, உலகத்தின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் இருவருக்கும் உண்டு.

கல்லூரியிலேயே முதல் மாணவனாக வந்தால், 'செயற்கை உணவு தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உதவி ஆய்வாளராக, உயர்ந்த சம்பளத்தில் உலகம் முழுதும் சுற்றி வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்' என்பதை, கல்லூரிக்கு வந்த முதல் நாளில் அறிந்து கொண்டார்கள்.

வாழ்வும் வளமும் பெறும் நம்பிக்கையுடன், இருவருமே நன்றாகப் படிக்கத் தொடங்கினார்கள். ஒருவன் தொடர்ச்சியாக நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தான். இன்னொருவன் நாளடைவில் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டிலும் மற்றவற்றிலும் கவனம் செலுத்தி அவற்றில் முதன்மையாக வந்தான்.

முதல் மாணவன், தான் கொண்ட குறிக்கோளுக்கிணங்க கல்லூரியிலேயே முதன்மையாக வந்து, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, தொழிலில் மேன்மையுடன் நான்கு வருடங்களாய்த் தொடர்ந்து பதவி உயர்வும் பெற்று வந்தான். எனினும், குறிக்கோளை அடைந்த பாடில்லை; ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருந்தது.

விளையாட்டிலும் மற்றவற்றிலும் முதன்மையாக வந்த மற்றவன், சேர்த்து வைத்த பணத்தில் சிறிதை லாட்டரிச் சீட்டுகள் வாங்கச் செலவழித்தான். தொடர்ச்சியாக நான்கு வருடங்களில் அவனுக்கு லாட்டரிப்பரிசு விழவும், மிகுந்த செல்வந்தனான். அதை வைத்து விளையாட்டுக் குழுக்களையும் திடல்களையும் வாங்கி வளர்த்து மேலும் செல்வம் சேர்த்தான். பத்து வருடங்களுக்குள் உலகச் செல்வந்தர் பட்டியலில் இடம்பெற்றான்.

பத்தாம் வருடம், உலகமெங்கும் பரவியப் பொருளாதார நெருக்கடியில் அடிபட்ட பன்னாட்டு நிறுவனம், சிதைந்து போகும் நிலைக்கு வந்தது. 'வேலை இழப்பில் கவலையில்லை, காரியம் கைகூடி வரும் வேளையில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து முடிக்க இயலாதோ' என்று முதல் மாணவன் வசதியிழந்து வருந்திக் கொண்டிருக்கையில், செல்வந்தனான மற்றவன் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கினான்.

பழைய மாணவர்கள் வேறு சூழலில் மீண்டும் சந்தித்தார்கள்.

    கதையின் போக்கு சுவாரசியமாக இருந்தாலும், கேள்வி அதைப் பற்றியதல்ல. கேள்வி: நீங்கள் இவர்களின் சிறு வயது ஆசிரியராக இருந்திருந்தால், இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே சிறப்பாகக் கல்வி கற்றுத்தர முடியும் என்ற நிலையில், எந்த மாணவரைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?

    கூட்டிலிருந்து பறந்த புள் எங்கே போகும்? இன்னொரு கூட்டைத் தேடிப் போகும் அல்லது அதே கூட்டுக்குத் திரும்பும் என்பது சிற்றறிவுக்கும் எட்டுமே? உயிர்ப் பறவை இன்னொரு கூட்டைத் தேடிப் போவதைத் தான் மரணம் என்கிறோமா? இது உண்மையானால், உயிர்ப்பறவை எத்தனைக் கூடுகளைத் தேடிப் போகும்? எப்போது சளைக்கும்? ஒருவேளை உயிர்ப்பறவை பிரிந்த கூட்டுக்கே திரும்பி வரும் பொருட்டில், பறந்த நேரம் மட்டுமே மரணமா? கேள்விகள் தொடர்ச்சியாக நமக்கே தோன்றும்போது, நசிகேதன் மனதில் தோன்றியிருக்காதா? எமனைப் பார்த்து இலேசாகச் சிரித்து, "ஐயா, எமன் அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம். ஒரு மனித உயிர் அதன் உடலை விட்டுக் கூடு விட்ட பறவை போல் பறந்து போனதும், 'மனிதர் இறந்து போனார்' என்கிறார்கள் சிலர். இன்னொரு கூட்டத்தினரோ, 'இல்லை மனிதர் இறக்கவில்லை, இன்னும் இருக்கிறார்' என்கிறார்கள். இதில், யார் கூற்று உண்மை? இந்த ஐயத்தினால் ஏற்பட்டக் குழப்பம் என்னை வாட்டுகிறது. மரணத்தின் தன்மை பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லி என் குழப்பத்தை நீக்குங்கள். இந்த அறிவை நீங்களே வழங்க வேண்டும். இது என் மூன்றாவது வரம்" என்றான்.

    அறிவை அதற்கான ஆசிரியரிடம் பெறுவது போலாகுமா? இருபடிச் சமன்பாட்டுக் கணிதம் பற்றித் தமிழாசிரியரிடம் விளக்கம் கேட்டால் பலனிருக்குமா? மரணத்தின் தன்மை பற்றி விளக்க, மரணதேவனை விட ஒரு சிறந்த ஆசிரியன் கிடைப்பானா?

    எமனும், "மரணத்தின் தன்மை தானே? கேள். உயிர் போனது போனது தான்" என்றோ, "உயிர் போகவில்லை, சுற்றிக் கொண்டே இருக்கும்" என்றோ சுருக்கமாகச் சொல்லிவிட்டால், கதை முடிந்து விடும். அத்தகைய பதிலினால் யாருக்கு என்ன பலன்? உருப்படாத வரமாகி விடுமே? அதனால் நசிகேதன், "தெள்ளிய மூதறிவு வேண்டும்" என்று கேட்டான்.

    மூதறிவு என்றால் முதிர்ந்த அறிவு. அறிவு எப்படி முதிர்கிறது? மூன்று வகையில் அறிவானது முதிர்ச்சியடைகிறது. தெரிந்து கொள்ளும் வகையிலும், புரிந்து கொள்ளும் வகையிலும், அறிந்து கொள்ளும் வகையிலும் என மூவகையிலும் முதிர்வதே மூதறிவு. மேலோட்டமான புரிதல் அல்ல மூதறிவு என்பதை மட்டும் இங்கே வலியுறுத்தி, மூவகை அறிவு முதிர்ச்சி பற்றிய விளக்கத்தைப் பிறகு சேர்க்கிறேன்.

    மேம்போக்கான பதிலைச் சொல்ல இடம் தரலாகாது என்று திட்டமிட்டே தெள்ளிய மூதறிவு கேட்டான் நசிகேதன். "ஐயா, எமனாரே, மரணத்தின் நுண்மையை அறிய விரும்புகிறேன். ஏனென்றால், மரணத்துக்கப்பால் நடக்கக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி உயிருடன் இருக்கும் போதே அறிந்தால், பயனுள்ள வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். மரணத்தைப் பற்றிய அறியாமை நீங்கி, நல்வாழ்வு வாழ முடியும்" என்று சொல்லாமல் சொன்னான். "மரணம் பற்றிய மூதறிவு வேண்டும், அதுவும் உம்மொழியால் வேண்டும்" என்று சொல்லி, எமனின் பதிலுக்குக் காத்திருந்தான்.

    எமன் முகத்தில் ஈயாடவில்லை.►

2011/02/11

மூன்றாம் வரம் கேளென்றான் எமன்


26
நான்கு நெறிகளையும் நெஞ்சில் நிறுத்திநிதம்
மூன்று முறையேனும் மூச்சடக்கும் மாந்தர்
இருநிலை விட்டிருப்பார் என்றும் இனியுன்
ஒருவரம் வேண்டியே ஓய்.

    அடக்கம், அருள், அன்பு, அறம் எனும் நான்கு நெறிகளை மனதில் எண்ணியபடி தினமும் மூன்று முறையாவது மூச்சையடக்கிப் பழகும் மனிதர்கள், மரணம் பிறவி எனும் இரண்டு நிலைகளையும் துறப்பார்கள்; இனி எஞ்சியிருக்கும் உன் ஒரு வரத்தை கேட்டு முடி (என்றான் எமன்).




    'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்' என்றார் வள்ளுவர். 'தெய்வம் வானில் உறையும்' என்ற பொது நம்பிக்கையினால் சொன்னாரே தவிர, தெய்வமாக வாழ வானுலகம் செல்ல வேண்டியதில்லை என்பதே வள்ளுவர் வாக்கின் மறைபொருள்.

    இனிப்பு மருந்து. மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகி விடும் என்ற நம்பிக்கை. மருந்துண்ணும் அவசியமே இல்லாது நோயின்றி வாழலாம் என்றால், 'அதெப்படி?' என்று நகைப்பதில்லையா? பல மருந்துகளை ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்த்து, முடிவில் 'சிறுவயது முதலே உடல் நலத்தைப் பேணுவோர்க்கு நோய் வராது, மருந்தே தேவையில்லை' என்று அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவது நமக்குப் பிடிக்கும். வள்ளுவரைப் போல் மனிதமனம் அறிந்தவர் உண்டோ? மரண பயம் மன நோய். சடங்குகளும் கண்மூடித்தனங்களும் பயனில்லா மருந்துகள். நல்லொழுக்கம், பயனற்ற மருந்தின் அவசியத்தை நீக்கும் முறையானப் பேணல். 'மனிதனாக வாழலாம்' என்றால் கேட்போமா? 'அடப்போய்யா, தாடிக்காரரே!' என்போம். அதனால், 'தெய்வமாக வாழலாம்' என்றார் வள்ளுவர். 'ஆகா!' என்று இன்றுவரைத் தலையாட்டுகிறோம். 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' எனும் வரிகள், இரண்டு நிமிட இசை ரசனைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தால், ஏதேனும் செய்வோம்.

    'நசிகேத வேள்வியை தினம் மூன்று முறை செய்தவர்கள் மோட்சம் பெறுவார்கள்' என்று இந்தப் பாடலுக்குப் பொருள் கொள்ளலாம்; 'தினமும் மூன்று முறையாவது நசிகேத வேள்வி எனும் நல்லொழுக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால், மரணம் பிறவி என்ற வீண் சிந்தனைகளைத் தவிர்க்கலாம்' என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்தல் எளிது. சிறுகச் சேர்த்தால் பெருகும் தானே?

    சொர்க்கம் செல்லும் வழியை உலகுக்கு அறிவிக்க எழுதப்பட்டதல்ல நசிகேதன் கதை. மரணபயம் தொட்டக் கண்மூடித்தனங்களைத் தவிர்த்து, வாழ்நாளில் மனிதன் மனிதனாக அறிவோடும் அன்போடும் வாழவேண்டும் என்பதை உணர்த்தவே எழுதப்பட்டது. ஒரு மனிதனுக்கேற்பட்ட மரணக் கலக்கத்தினால் தானே இந்தத் தொல்லை நிகழ்ந்தது? மரணம் பற்றிய அறியாமையினால் தானே இந்த நிலை வந்தது? வாழும் நாளில் ஒழுக்கம் தவறாதிருந்தால் மரண அச்சம் தேவையில்லையே? பூமியிலேயே நிம்மதி கிடைக்குமே? சொர்க்கத்தில் நிம்மதியும் நிறைவும் தேடுவதை விட, வாழ்நாளில் பூமியில் பெறுவது இன்னும் மேன்மையல்லவா?

    'அப்பா அம்மாவிடம் போக வேண்டும், பழம் பாயசம் வேண்டும், பொம்மை வேண்டும் என்று மூன்று வரங்களைக் கேட்பானென்று பார்த்தால், எங்கேயோ போகிறானே பிள்ளை? வரம் தருவதாகச் சொல்லி இக்கட்டில் சிக்கினோமா? இதென்ன, வம்பாகி விட்டதே!' என்றெல்லாம் எமன் நினைத்தானா? அதை மனதில் கொண்டவன் போல், 'மூன்றாவது வரத்தைக் கேட்டு முடியப்பா சீக்கிரம்' என்றானா? அல்லது, எமன் இதுகாறும் நசிகேதனை மெய்யறிவு பெறத் தயார் செய்தானா?

    மெய்யறிவு பற்றிய நசிகேத போதனைக்கு, மூன்றாவது வரமே விதை. ►

2011/02/08

வேள்விக்கு நசிகேதன் பெயரிட்டான் எமன்


25
வேள்வித்தீ மாட்சியை வாய்ப்பாடாய் மீட்டுரைத்தோன்
வாள்முனைப் பாங்கறிந்து வந்தகாலன் - கேளென்றான்
என்னாதார் இல்லார் இதுவுந்தீ என்றினிமேல்
பொன்னாரம் ஒன்றினையும் போட்டு.

    வேள்வியின் சிறப்பையும் முறையையும் வாய்ப்பாடாகத் திருப்பிச் சொன்ன நசிகேதனின் வாள்முனை போன்ற கூர்மையான அறிவைக் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு ஒரு பொன்மாலையைச் சூட்டி, "இனி இந்த வேள்வியை உன்னுடையதாக உன்பெயரிட்டு அழைக்காதவர் எவருமில்லை" என்றான்.

பாங்கறிந்து வந்தகாலன்: பாங்கு அறிந்து உவந்த காலன்
என்னாதார்: என்று வழங்காதார்
இதுவுந்தீ: இது உன் தீ (நசிகேத வேள்வித் தீ)



    கசடறக் கற்பதும், கற்றதைத் தெளிவாக வெளிப்படுத்துவதும் மாணவனுக்கு அழகு. மாணவனின் திறனறிந்து மெச்சி மேலும் நல்லறிவூட்டுவது ஆசிரியனுக்கு அழகு. தெளிந்த அறிவைப் பெற வழி செய்யும் கல்வியைக் கசடறக் கொடுப்பதே நல்ல மாணவனுக்குப் பெரும் பரிசு என்றாலும், தவறில்லாமல் கற்றான் என்பது தெரிந்து ஊக்கப் பரிசு கொடுப்பது, ஆசிரியரின் கடமை தாண்டிய அன்பை மேம்படுத்திக் காட்டுவதாகும்.

    'பொன்னால் செய்திருந்தாலும், ஆரம் சங்கிலியே. பிறவிப்பிணி பொன்னாரம் போன்றது. பொன்னைக் கண்டு மயங்காமல் அந்தச் சங்கிலியை அறுக்க, தெளிவான மனமும் ஒழுக்கமும் வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே எமன் பொன்னாரம் வழங்கினான் என்பதை நசிகேதன் புரிந்து கொண்டான்' என்று வடமொழிப் பாடலுக்கு ஆதிசங்கரர் வழங்கிய விளக்கம் சுவையானது. ►

2011/02/04

வேள்வி விவரம் சொன்னான் எமன்


24
அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள்
முடக்கவொரு மூச்சில் வருந்தீ - புடமிட்டப்
பொன்போலே மின்னும் மனிதமும் பற்றற்றுத்
தன்னுள்ளே தீவளர்க்கும் போது.

    எதிர் நிலைகளைச் சாராது, மனதுள் அடக்கம், அருள், அன்பு, அறம் எனும் சிந்தனைகளைச் செய்தபடி மூச்சை அடக்கிப் பழகுவதே வேள்வி; இந்த நல்லொழுக்க வேள்வித்தீ, மனிதரைப் புடமிட்டுப் பொன் போல் மின்னச் செய்யும் (என்றான் எமன்).


வேதமும் சாத்திரமும் நன்கு கற்றறிந்த ஞானி ஒருவர் இருந்தார். தனக்குச் சுய அறிவு முற்றும் வந்ததென்று நினைத்தார். தன்னை அறியும் வித்தையைப் பற்றி அந்த ஊர் அரசனுக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய பேரறிவைப் பகிரங்கப் படுத்த எண்ணினார். அரசனிடம் சென்று, "அரசே, முழுமையான சுய அறிவைப் பெறுவது எப்படி என்று உனக்குக் கற்றுத் தருவேன்" என்றார்.

அரசனும் அறிஞனே, எனினும் முழுமையான தன்னறிவைப் பெற பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். வாராது வந்த மாமுனி தாராது தரும் பேரறிவை விடுவானா? "பேரறிஞரே, உங்களுக்குப் பொன்னும் மண்ணும் பரிசளித்து மகிழ்வேன். தன்னறிவாம் பேரறிவைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவோடு கேட்டான்.

"ஒரு வேள்வி செய்ய வேண்டும்" என்றார் ஞானி. "மனதை ஒருமைப்படுத்தி மூச்சை அடக்கிப் பல காலம் செய்ய வேண்டிய வேள்வி. உன்னால் முடியுமா?"

"மூச்சைக் கட்ட ஓரளவுக்குத் தெரியும். மனம் தறிகெட்டு ஓடுகிறதே, எப்படி ஒருமைப்படுத்துவது என்று சொல்லித் தருவீர்களா?" என்றான் அரசன்.

"மனதை ஒருமைப்படுத்துவதே தன்னறிவின் முதல் படி. இதோ எதிரில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறானே, சூரியன். அவனே பேரறிவின் சின்னம். அவனையே மனதில் எண்ணி மூச்சைக் கட்டினால் ஒருமைப்படுத்தலாம்" என்றார் ஞானி.

"சூரியனை ஏன் மனதில் வரிக்க வேண்டும்?" என்றான் அரசன்.

"சூரியன் இருளை அகற்றி உலகெங்கும் விழிப்புக்கு வழி செய்கிறான்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சூரியன் என்பது மனிதன் வடித்த உருவம். சூரியன் என்ற உருவத்துக்கு எல்லையுண்டு. சுயேச்சையான சக்தி எதுவும் இல்லை. சுயேச்சையான எல்லயற்றத் தன்மையதான ஒளி சூரியனுக்குப் பின்னணியில் இருப்பதால், நான் ஒளியை மனதில் வரித்து மனதைக் கட்டுப்படுத்துகிறேன். சூரியனை வரித்தால் மனம் சூரியனுக்குக் கட்டுப்பட்டதாகி விடுமே? பிறகு மனம் நமக்கு எப்படிக் கட்டுப்படும்? மேலும், சுயேச்சையான குணத்தை ஒரு உருவத்துள் கட்டி வைத்தால், அவரவர் கட்டிய உருவங்களினால் கலவரம் வருமே? தன்னைப் பற்றிய அறிவை எப்படி வழங்கும்? ஒருமைப்பாடு எப்படி வரும்? என் மக்களுக்குள் உருவங்களால் பிரிவினை வரும். அவர்களுக்கு ஏற்பில்லாதது எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

"அப்படியா? சந்திரனை எண்ணி மனதைக் கட்டு. நான் பலமுறை அவ்வாறு செய்து சுய அறிவு பெற்றிருக்கிறேன்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சந்திரன் என்பதும் மனிதன் வடித்த உருவம். சந்திரனின் தன்மை தண்மை. மனித மனம் அன்பினாலும் பண்பினாலும் குளிர்கிறது. சந்திரனுக்குப் பதில் அன்பையும் பண்பையும் மனதில் வரித்தால், சந்ததியும் சுற்றமும் என்றைக்கும் கொண்டாடுவார்கள். நீங்கள் சொல்லும் வழி என் மக்களுக்கு உதவாது. அவர்களுக்கு உதவாத வழி எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

ஞானி யோசித்தார். வம்பாகி விட்டதே? "வெளி" என்றார். "மன்னா, உன் சிக்கலுக்குத் தீர்வு கண்டேன். வெளி உருவமற்றது, பரந்தது, எல்லையில்லாதது, தனித்தன்மையற்றது. வெளியை வரி" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "வெளியின் தன்மை என்ன? அளக்கமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை. வெளியின் குணங்களை மனதில் வரித்தால் மனம், நிறைவு மற்றும் நிலைத் தன்மைகளை அடையுமே? வெளியை அளக்க முடியும் - இதோ பாருங்கள்" என்று இரண்டு கைகளையும் பந்து போல் அடக்கி அவரிடம் காட்டினான். "இதோ, என் கைக்குள் சிறைப்பட்ட வெளியை இங்கிருந்து அங்கே எடுத்துச் செல்ல முடியும்" என்று நகர்ந்து காட்டினான். "வெளி என்பதை விட, வெளியின் தன்மைகளான அளவிடமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை என்ற குணங்களை வரிக்கும் மனிதம், குறுகிய ஆசைகளை விடுத்துப் பரந்த நோக்கத்துடன் செயல்படும். நீங்கள் சொல்லும் வெளி என்ற காரியம் என் மக்களுக்குப் பயன் தராது. மக்களுக்குப் பயன் தராத எதுவும் மன்னனுக்கும் பயன் தராது" என்றான் பணிவுடன்.

ஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து நீர் நெருப்பு ஒலி உரு கண்ணாடி திசை என்று உருவமும் அருவமுமாகப் பலவற்றை எடுத்துச் சொன்னார் ஞானி. எல்லாவற்றையும் பணிவோடு கேட்டு, குணங்களான காரணங்கள் குண வெளிப்பாடுகளான காரியங்களை விட மேன்மையானவை என்று சொல்லி ஏற்க மறுத்தான் மன்னன். காரணங்களே மனதை ஒருமைப்படுத்தாத நிலையில், காரியங்கள் மனதைக் கட்டாது என்று பணிவாகச் சொன்னான்.

ஞானி சற்று யோசித்து, "தான்" என்றார். "மன்னா, தன்னைத் தானே மனதில் வரித்து மூச்சைக் கட்ட வேண்டும். சுயம், அதாவது தன் ஆத்மாவை விட தன்னறிவைப் பெற்றுத் தரும் அருவம் எதுவும் இல்லை" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "தான் என்று நீங்கள் குறிப்பிடும் சுயம், சுயமல்ல. எல்லையுடையது. அளவுடையது. நிறைவில்லாதது. தான் என்பது சாரமாகும். மனிதத்தின் அடையாளம். மனிதம் என்பதோ பரந்த எல்லையற்ற அளவுகடந்த நிறைவான உணர்வைக் குறிக்கும். மொத்த மனிதத்தையும் மனதில் வரித்தால் மொத்த மனிதத்தின் தன்மைகளான நேயங்கள், அதைவிட மாற்றுக்குறைந்த 'தான்' என்பதற்கு வழிகாட்டுமே? தன்னை மனதில் வரிப்பது என் மக்களுக்கு ஏற்ற வழியல்லை; மக்களுக்கு ஏற்ற வழியே மன்னனுக்கு ஏற்ற வழி" எனறான் பணிவுடன்.

ஞானி பார்த்தார். சரிகை முண்டாசைக் கழற்றி வீசினார். பட்டு மேல்துண்டை மன்னன் காலடியில் வைத்து, மன்னன் காலில் விழுந்தார். "ஐயா, நான் ஞானி இல்லை. நீரே ஞானி. இந்தப் பட்டு மேல்துண்டு என்னுடைய காணிக்கை. என்னை உமது மாணவனாக ஏற்க வேண்டும். தன்னறிவு பெறும் வழியை எனக்கு விளக்க வேண்டும்" என்று மன்னனைக் கெஞ்சினார்.

மன்னன் அதிர்ந்தான். "ஐயா! என்ன இது! என்னைப் போன்றவருக்குப் பாடம் சொல்லி வழி காட்ட வேண்டிய உமக்கு நான் பாடம் சொல்வதா?" என்று பதறினான். ஞானியின் காலில் விழுந்தான். எழுந்து, "ஐயா, நீங்கள் தான் எங்களுக்குக் குரு. இருப்பினும் குரு-மாணவன் என்ற முறையை விட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் புரியும் உதவியாக, தன்னறிவு பெறும் முறையை எனக்குத் தெரிந்த வரையில், உங்களுக்குச் சொல்கிறேன்" என்றான்.

பிறகு ஞானியைத் தன் அரண்மனைக்குள் வருமாறு அழைத்தான். இருவரும் அரண்மனைப் பணியாளர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவனருகில் சென்றார்கள். "ஐயா பேரறிஞரே... இங்கே உறங்கிக் கொண்டிருப்பவனை வைத்து உங்களுக்கு நானறிந்ததைச் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

"இவன் தூங்கிக்கொண்டிருக்கிறானே?" என்று இழுத்தார் ஞானி.

"துயிலில் இரண்டு வகை. இருவகையிலும் ஐம்புலன்களும் புறவிசைகளும் மனிதனைப் பாதிப்பதில்லை. அறிவு கூட அடங்கியே இருக்கிறது. விழித்துக் கொள்ளக்கூடிய துயிலை வைத்து மட்டுமே என்னறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். மீளாத்துயிலுக்குப் பிறகு ஏற்படுவதை நானறியாததால், மனதையும் அறிவையும் கட்டுப்படுத்தி வைக்கும் சாதாரண உறக்க நிலையை வைத்து நான் அறிந்ததை எடுத்துக்காட்டுகிறேன். என் குறையான அறிவுக்கு என்னை மன்னியுங்கள். விரும்பினால் மேலும் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

    கதை முடியவில்லை; தொடர்கிறது. மேற்கண்ட உபனிஷதக் கதை பலருக்குத் தெரிந்திருக்கலாம். காசி மன்னன் அஜாதசத்ருவுக்கும் பிராமண ஞானி பாலாகிக்குமிடையே நடந்த உரையாடல். நசிகேதன்-எமன் உரையாடலுக்குப் பொருந்தியதால் பாதிக்கதையை என்னால் இயன்றவரை எளிமைப்படுத்தி இங்கே மேற்கோளாகச் சொல்லியிருக்கிறேன். (உபனிஷதக் கதை சற்று கனமானது; உட்பொருளைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் - புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தவறாக ஏதும் சொல்லியிருந்தால் திருத்தி, மன்னிக்கவும்)

    எத்தனை உருவங்களை மனதில் வைக்கிறோம்! வைத்தும் உருப்படியாக ஏதாவது செய்கிறோமா? உருவங்களின் தன்மைகளை மறந்து விடுகிறோமே? 'கருணையின் வடிவம்' என்று உருவத்தை மனதில் ஏற்றிவிட்டுத் தகாத செயல் புரிகிறோம். என் உறவினர் ஒருவர் தன் பிள்ளையிடம் சொன்னது:"முண்டம், வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு. சாமி கும்பிட்டிருக்கேன் தெரியுதில்லே? இன்னொரு தடவை தொநதரவு செஞ்சே, பல்லைத் தட்டிக் கைல குடுத்துருவேன்". என்ன கும்பிட்டு என்ன பயன்?!

    இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் வேள்வி, மூச்சையடக்கி மனதைக் கட்டும் வித்தையாகும். இன்றைக்கு 'யோகா' என்று உலகமுழுதும் பழகி வருகிறது. அன்றைய இந்தியாவில் சில சமூகங்கள் பழகிய வித்தை. பிராணாயாமம் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டிருக்கிறேன். மூச்சை நன்கு உள்ளிழுத்து அடக்கிச் சீராக வெளியிடும் முறை. எல்லோரும் செய்ய வேண்டிய பயிற்சியாகும். உடல் மற்றும் உள்ள உபாதைகள் பலவும் இந்தப் பயிற்சியினால் குணமாகும் என்கிறார்கள். மூச்சை இழுத்து அடக்கிச் சீராக வெளியிடுவதில் பலனுண்டு. மேலாக, நல்ல எண்ணங்களை மனதில் தேக்கி அவற்றினூடே மூச்சடக்கிப் பழகினால், நிச்சயம் பரவலான பலனிருக்கும் என்றே தோன்றுகிறது.

    'அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கல்களை அடுக்கி அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி' என்றான் எமன். 'பற்றற்ற' என்றும் சொன்னான் (எத்தனை ற!). இதற்குப் பொருள், எல்லாவற்றையும் துறந்த நிலை அல்ல. இன்பம்-துன்பம் போன்ற இருநிலை-எதிர்நிலைகளை அறிந்து, எந்த நிலையையும் முற்றிலும் சாராமல் இருப்பதையே 'பற்றற்ற நிலை' என்றான் எமன். 'மனிதம் இருநிலைகளையும் அனுபவிக்க வேண்டும்; அனுபவத்தால் அறிய வேண்டும்; அறிந்த பின் தெளிய வேண்டும்' என்பதே எமன் சொன்னது.

    பற்றறுத்த நிலையில் நாள்தோறும் நல்லெண்ணங்களை மனதில் தேக்கி, மூச்சடக்கிப் புரிய வேண்டிய வேள்வியைப் பற்றி எமன் விவரித்ததை நசிகேதன் பொறுமையாகக் கேட்டான். மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்காக வேள்வி செய்வதாகச் சொன்னாரே தந்தை? எமனோ, 'தன்னுள்ளே தீ வளர்த்து நல்லெண்ண நெய் வார்க்க வேண்டும்' என்கிறாரே? மரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? அவன் மனதில் மரணம் குறித்த சந்தேகங்கள் எழத் தொடங்கின. ►

2011/02/01

வேள்வித்தீ பற்றிச் சொன்னான் எமன்


23
புள்ளகத் தோடே பகர்வேனே பிள்ளைநீ
தெள்ளெனக் கேட்டத் தகவலதை - கள்ளமாய்
எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்ளுக்குள் தாழிட்டத் தீ.

    சிறுபிள்ளையானாலும் நீ தெளிவாகக் கேட்டதனால் வேள்வி விவரங்களைச் மகிழ்ச்சியோடு சொல்கிறேன்; எள்ளுக்குள் எண்ணை மறைவாக உறைவது போல், வேள்வித்தீ நம் மனதினுள்ளே அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது (என்றறிவாய் என்றான் எமன்)


புள்ளகம்: பெருமகிழ்ச்சி
கள்ளமாய்: மறைவாக
தாழிட்ட: பூட்டிய, அடக்கிவைத்த



    பார்வையைத் தருவன கண்கள். கண்களுக்குக் காட்சியைத் தருவதோ ஒளி. கயல்விழி, மான்விழி, வேல்விழி என்று விழியழகைக் கொண்டாடினாலும், ஒளியின்றி விழிகளால் பயனில்லை. எனினும், ஒளி விந்தையானது. ஒளியைப் பயன்படுத்தி, இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் செய்து, கண்களை ஏமாற்ற முடியும். உள்ளேயும் ஒரு ஒளி உண்டு. அறிவு. கண்களுக்குப் புலப்படுவதும் அறிவுக்குப் புலப்படுவதும் வேறுபடலாம். உள்ளொளியைப் பயன்படுத்தும் பொழுது, வெளியொளியால் கண்களுக்குத் தென்படாதக் காட்சிகளையும் காண முடியும். ஐம்புலன்களும் அவ்வாறே. புறவிசைகளோடு தொடர்பு கொள்ளவும், முடிந்தால் அடக்கியாளவும் மட்டுமே நம் ஐம்புலன்களைப் பழக்கப்படுத்துகிறோம். அவற்றை உள்ளே திருப்பினால், நம் அகத்தே தறிகெட்டோடும் விசைகளைக் கட்டுப்படுத்தி ஆளலாம். உள்பார்வை, உள்பேச்சு, உள்மூச்சு, உள்கேள்வி, உள்ளுணர்வு எனும் இவற்றைத் தம் வாழ்நாளில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதே இல்லை.

    'கண்ணை நம்பாதே' என்பது பிரபலத் திரைப்பாடல் மட்டுமல்ல, உலகின் மிகத் தொன்மையான சித்தாந்தங்களுள் ஒன்றாகும். கடோபனிஷதச் சமகாலக் கிரேக்க அறிஞர்களான சாக்ரேட்சும் ப்லேடோவும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ப்லேடோ தன் மாணவனான அரிஸ்டாடிலுக்குச் சொன்னதாகச் சொல்லப்படுவது: கண்களுக்கு வெளிப்பார்வை உள்பார்வை இரண்டும் உண்டு. வெளிப்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு மாற்றமும் அழிவும் தென்படும்; உள்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு உண்மை மட்டுமே புலப்படும். வெளிப்பார்வையினால் கிடைப்பது அபிப்பிராயங்களும் பேதங்களும்; உள்பார்வையினால் கிடைப்பது ஒருமையும் தெளிவும். வெளிப்பார்வையில் கிடைக்கும் அறிவு தினம் மாறும் தன்மையது, வளர்ச்சி பெறாதது; உள்பார்வையில் கிடைக்கும் அறிவானது முதிர்ச்சியைத் தருவதாகும், ஒரு இலக்கினை நோக்கிச் செலுத்துவதாகும். (plato, ~400 bce, republic)

    நம் உடலின் ஓய்வு அல்லது இயல்பு வெப்பநிலை 36°C-37°C வரை என்கிறார்கள். இருப்பினும், வெளியே 20°-25°C வரை மட்டுமே ஏற்க, பொறுக்க முடிகிறது. அதற்குக் குறைவாகவோ கூடுதலாகவோ போனால், பலருக்குக் குளிர் அல்லது வெப்ப உபாதைகள் தோன்றுகின்றன. இதமான வெளி வெப்பநிலையை விட அதிக வெப்பம் நமக்குள்ளே இருப்பது உடலியக்கக் காரணத்தோடு எனினும், வியக்க வைக்கிறது. உள்வெப்பத்திற்குத் தீ எங்கிருந்து வந்தது? இந்தச் சிந்தனை, அறிவியல் வழியை விட ஆன்மீக வழியில் சுவாரசியமான, ஆழ்ந்த, திடுக்கிடும் நுண்மைகளை வழங்கவல்லது. ஒரு மழைநாளுக்கான சிந்தனையாக ஒதுக்கலாம். மேற்கோளுக்குத் தத்துவப் புத்தகங்களும், நொறுக்குத் தீனியும், ஆத்திகம் கலவாது விவாதிக்க ஏற்ற நட்பும் இருந்தால் இத்தகையச் சிந்தனை நிறைவூட்டும்.

    எமனுக்குச் சங்கடம். நசிகேதனின் அறியுந்திறனை ஆழம் காணவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம்; வரமளித்தால் அது பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இன்னொரு புறம். அறிந்தே விழலுக்கு நீரிரைக்க யாருக்கு மனம் வரும்? 'பிறப்பற்ற இடம் ஏகும் வேள்வியைப் பற்றிப் பிள்ளைக்குச் சொல்வதா? புரியுமா? புரிந்தாலும் செயல்படுத்துவானா?' போன்ற பல ஐயங்களுக்கிடையே நசிகேதனின் இரண்டாம் வரத்துக்கான விவரங்களைச் சொல்லத் தொடங்கினான். முதலில் வேள்விக்கான தீயை எப்படி அடையாளம் காண்பதென்று சொன்னான். 'வெளிப்பார்வைக்கு எள் தெரியுமே தவிர எண்ணை தெரியாதது போல், உள் பார்வைக்கும் இந்தத் தீ எளிதில் தெரியாது. வேள்விக்கான தீ மனதின் ஆழத்தில் புதைந்திருக்கிறது.' என்று எடுத்துச் சொன்னான்.

    'அம்பர வேள்விக்கான தீ வளர்க்க, பசுஞ்சாண வரட்டியும் சுள்ளியும் அடுக்கி நெய் வார்த்து மந்திரம் சொல்ல வேண்டியதில்லையா? உள்ளுக்குள் தாழிட்ட தீ என்கிறாரே எமன்? உள்ளுக்குள் தீ எங்கே பூட்டி வைத்தோம்? அதைக் கண்டாலும் வேள்வி எப்படிப் புரிவது?' என்று நசிகேதன் சிந்தித்தான். தன் தந்தை தீ வளர்த்துப் பகட்டாகப் புரிந்த அண்டவாகை வேள்வி நினைவுக்கு வந்தது. 'அப்படியென்றால் தந்தையின் வேள்வி அவருக்குச் சொர்க்கத்தை நிலையாகத் தராதா? மழைநீர் போல் இன்னொரு பிறவியெடுத்து சுழலப்போகிறாரா? தந்தையைப் போல் இன்னும் எத்தனை பேர் உலகில் தீ வளர்த்து வேள்வி புரிகிறார்கள்! பலனில்லை என்பதறியாமல் வேள்வி செய்கிறார்களே!' என்று உலகமக்களின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'பொன்னும் மணியும் பசுவும் பூமியும் தீயிலிட்டு எதைத் தேடுகிறார்கள் இந்தக் கண்மூடிகள்? இவர்களின் பிணிக்கு மருந்து உள்ளிருப்பது தெரிந்தும் வேறு எங்கோ தேடுகிறார்களே!' என்று மக்களின் கண்மூடித்தனத்தை எண்ணிக் கலங்கினான். எமனிடம் விவரங்களைக் கேட்டறிந்து, தன் தந்தைக்கு மட்டுமல்லாது, மற்றவருக்கும் எடுத்துச் சொல்லி அவர்கள் அறியாமையைப் போக்குவதென்று தீர்மானித்தான். தீ வளர்க்கும் விதத்தையும் வேள்வி புரியும் விவரங்களையும் அறிந்து கொள்ள ஆயத்தமானான். ►