வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/09/23

உயிர்கள் சேருமிடம்


67
தன்னறிவைத் தாண்டியது ஆன்மா அதற்கப்பால்
உன்னறிய வேண்டியது பேரான்மா - மன்னுயிர்
பாடுபட்டுப் பாவுமிடம் பேரான்மா வேறில்லை
கூடுவிட்டுக் கூடு மிடம்.

   ன்னறிவுக்கு அப்பாலிருப்பது ஆன்மா; அதற்கப்பால் இருப்பது பேரான்மா. இதுவே உலகத்து உயிரெல்லாம் பாடுபட்டு அடையும் இடமாகும். உடலைப் பிரிந்த உயிர்கள் சேரும் இடம் வேறில்லை.


உன்னறிய: உணர்ந்து அறிய, அறிவுக்குப் புலப்படுகிற
பாவும்: பரவும், பற்றும்


    றந்த உயிருடன் தொடர்பு கொள்ள முடியுமா?

இறந்த உயிரை வரவழைத்துப் பேசுவதாகச் சொல்வது நூற்றாண்டுகளாக நடந்து வருவது. பித்தலாட்டக்காரர்களின் தனிப்பட்ட உரிமை என்றும் சொல்லலாம். எனில் இறந்த உயிரை "உணர" முடியுமா? இதைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள். யோசிக்கிறேன். telekinesis, super position போன்ற என் மூளைக்கெட்டாத நிறைய விவரங்கள் பித்தலாட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடைப்பட்ட தளத்தில் ஆராயப்படுகின்றன. கேள்விக்கு வருகிறேன்.

இறந்த உயிரை "உணர" முடியுமா? தெரியாது. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட சில நிகழ்ச்சிகள் என் வாழ்வில் நடந்திருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக என்னுடன் எரியும், யாருக்கும் சொல்லப் போவதில்லை. சிலவற்றைக் கதையாக எழுதியிருக்கிறேன். சுமார் ஏழு வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது இது.

நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இறங்கி நடக்கையில் சற்றும் எதிர்பாராத வகையில், ஒரு நபர் என் கையைப் பிடித்து இழுத்தாற் போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு நடுத்தர வயதுக்காரர். என்னிடம் என்னவோ சொல்ல வந்தார். அவரால் சொல்ல முடியவில்லை. கெஞ்சுவது போல முகம். "ப்லீஸ்.. ப்லீஸ்" என்றாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. முகபாவத்தை என்னால் மறக்கவும் முடியவில்லை, விளக்கவும் முடியவில்லை. மிக ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் ஒருவர் எப்படியாவது வழி காட்ட வேண்டிக்கொள்வது போல், அத்தனை பரிதாபம். மூழ்கவிருப்பவர் கடைசி முறையாக காப்பாற்றுங்கள் என்று வாய் திறந்து பேசமுடியமல் கதறுவதை போல், அப்படி ஒரு பரிதாபம். ஒரு கணம் தான். பிறகு அந்த நபர் இயல்பாக நடந்து, என்னைக் கடந்து சென்றார்.

நண்பர் வீட்டுக்குப் போகும் வழியிலேயே இதை மறந்து விட்டேன். நண்பர் அவசரமாக எங்கேயோ வெளியே சென்றிருந்தார். நண்பரின் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று அழத் தொடங்கினார். "எனக்கு இந்த ஊர் பிடிக்கலிங்க. இங்கே வாழப் பிடிக்கலிங்க.. என்னை இந்தியாவுக்கு அனுப்பும்படி உங்க நண்பரிடம் சொல்லுங்க. நான் என்ன சொல்லியும் கேட்க மாட்டேங்குறார். என்னைத் துன்புறுத்துறார். ப்லீஸ்..ப்லீஸ்" என்று அழுதார். சட்டென்று ஏர்போர்ட் மனிதரின் முகம் நினைவுக்கு வந்தது.

அத்துடன் நிற்கவில்லை நண்பரின் மனைவி. "காலையிலிருந்து என் அப்பாவைத் திட்டிக் கொண்டிருக்கிறேன்.. என்னை இப்படி மாட்டிவிட்டாரே? என் அப்பா உயிருடன் இருந்தால் இப்படி நடக்குமா? எனக்கு வேறு யாருமே இல்லையே! அண்ணா தங்கை அக்கா தம்பி என்று யாரும் இல்லை, அம்மாவும் போயாச்சு... அப்பா! அப்பா! இப்படி ஒரு இடத்தில் எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டியே!" என்று விசும்பி விசும்பி அழுதார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "இதை அவர்கிட்டே சொல்லிடாதீங்க.. எப்படியாவது உதவி செய்யுங்க ப்லீஸ்" என்று கெஞ்சினார்.

சிறிது நேரம் நண்பருக்காகக் காத்திருந்தேன். நண்பரின் மனைவி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், 'நானா கிடைத்தேன?' என்ற எரிச்சல் தோன்றியது. உடனடியாக அங்கிருந்து விலக நினைத்தேன். அவருக்கு உதவுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நண்பர் திரும்பும் வரை சுற்றிக் கொண்டிருக்கலாமென்று சற்றுத் தொலைவிலிருந்த பெரிய வால்மார்ட் ஒன்றில் இலக்கில்லாமல் அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டிருந்த போது, மறுபடியும் என்னை யாரோ இழுத்தாற் போல்.. திரும்பிப் பார்த்தால் ஒரு பெரியவர். என்னவோ சொல்ல முயன்றார், முடியவில்லை. என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார். மறுபடியும் மறுபடியும் கும்பிட்டுக் கொண்டேயிருந்தார்.

எனக்கு மட்டுமல்ல, நானறிந்த சிலருக்கும் இதுபோல் விளக்க முடியாத, விபரீத எல்லையிலான, விளிம்பு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லை என்று ஒதுக்கிவிடக்கூடிய நிகழ்வு. "பகுத்தறிவு" என்று பார்த்தாலும் ஒதுக்கிவிடக்கூடிய நிகழ்வு.

இந்நிகழ்வுகளை ஒரு வட்டத்தின் புள்ளிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், திடீரென்று ஏதோ புரிந்தாற்போல் உணர முடியும். முடிந்தது. மனித சக்தி மகத்தானது, அளப்பரியது என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு, இந்தச் சிந்தனையை இன்னொரு பதிவில் முடிக்கிறேன். (அஞ்ச வேண்டாம், நான் சாதாரணத்திலும் சாதாரண மனிதனே!) :)

    "ஆறாவது குகைக்கு அப்பாற்பட்ட பயணத்தைப் பற்றிக் கேட்டாயல்லவா? சொல்கிறேன்" என்ற எமன் தொடர்ந்தான். "நசிகேதா! நீ புரிந்து கொண்டிருப்பது சரியே. தன்னறிவுக் குகை வரையில், உயிரானது உடலென்னும் கூட்டுக்குள்ளேயே பயணம் செய்கிறது. உடலைப் பிரிந்ததும், உயிர் திடீரென்று பரந்த வெளியில் சிக்கிய பறவை போலாகிறது. பறந்துப் பழகாதப் பறவைகளுக்கு என்ன நேரும் அறிவாயா?"

"கீழே விழும்"

"பறக்கத் தொடங்கிய பறவைக்கு அச்சமேற்பட்டால்?"

"கீழே விழும்"

"ஆம். பறந்து பழகாத பறவையும் பறக்க அஞ்சும் பறவையும் கீழே விழும். உயிர்ப்பறவைக்கு பறக்கும் பழக்கத்தைக் கொடுப்பது தன்னறிவு. தொடர்ந்து பயணிக்கவும் சேரவேண்டிய இலக்கைத் தேடிச் சேரவும் தேவையான வலிமையையும் திடத்தையும் தருவது மேம்பட்டத் தன்னறிவு. தேய்ந்த தன்னறிவினால் எந்தப் பலனும் இல்லை"

"உயிர்ப்பறவை கீழே விழும்"

"ஆம். அதைப்பற்றி மேலும் விவரமாகப் பிறகு சொல்கிறேன். பயணத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள். தன்னறிவுக்கு அப்பாற்பட்டது ஆன்மா. உடலெனும் கூட்டைவிட்டுப் பிரிந்த உயிர் ஆன்மாவுடன் கலந்துத் தனி ஆன்மாவாகிறது. ஆன்மாவைக் கடந்து நிற்பது, அனைத்து உயிர்களின் ஆன்மா அல்லது பேரான்மா. உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை"

"பேரான்மா என்றால்?"

"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி. தெளிந்த சிந்தையால் மட்டுமே எண்ணிப் புரிந்து கொள்ள முடிகிற சக்தி. மன்னுலக இயக்கங்களுக்கான சக்தி. அறிவுக்கண்ணுக்குப் புலப்படக்கூடிய சக்தி"

"இந்த சக்தியுடன் கலப்பது தான் சொர்க்கமா? பேரின்பமா? பிறவா நிலையா?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/16

புலன்களுக்கு அப்பாற்பட்டது தன்னறிவு


66
உணர்ச்சியைத் தாவும் உணர்வதைத் தாவும்
குணமதைத் தாவும் மனமாம் - அணந்தால்
மனமதைத் தாவும் அறிவையும் தாவும்
தனமதுத் தன்னறி வாம்.

   ணர்ச்சிகளைக் கடந்தது உணர்வு; அதைக் கடந்தது நெறி; அதைக் கடந்தது மனமாகும். மேலும் நோக்கினால், மனதைக் கடந்தது அறிவு; அதையும் கடந்தத் தன்மையுடையது தன்னறிவாகும்.


தாவும்: தாண்டும், கடக்கும், அப்பாற்படும்
அணந்தால்: மேல் நோக்கினால்
தனம்: தன்மை


    ல்லோரும் வாழலாம். எப்படியும் வாழலாம்.

'எல்லோரும் வாழலாம்' என்பதில் தொனிக்கும் முற்போக்கும் நம்பிக்கையும் 'எப்படியும் வாழலாம்' என்பதில் தொனிக்கிறதா? என்ன நினைக்கிறீர்கள்?

'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' என்ற வரிகளை நிறையச் சிந்தித்திருக்கிறேன். என்ன சொல்கிறார் புலவர்? எல்லோரும் வாழலாம் என்ற பொருளில் பாடினாரா? எப்படியும் வாழலாம் என்ற பொருளில் பாடினாரா?

இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?

துவ்வாமை என்பது தவமுனிகளுக்கும் தமிழ்முனிக்கும் சுலபமாகத் தோன்றலாம். என்னைப் போன்ற சராசரிகளுக்கும் பெரும்பாலான காவி/அங்கிகளுக்கும் துவ்வாமை தொலைவானது. துவ்வல் இன்றியமையாதது. புலன்கள் நம் வாழ்வின் அடிப்படைத் தேவை எனத் தீர்மானமாக நம்புகிறேன். புலன்களை வைத்து தினம் வாழ்வை அனுபவிக்க நேரம் போதவில்லை. இன்னும் ஒரு ஜோடிப் புலன்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அடிக்கடி எண்ணியிருக்கிறேன். அனைத்தையும் இருமடங்காக அனுபவிக்கலாமே என்று எண்ணியிருக்கிறேன். இப்படி வாழலாம்.

தொட்டால் சுடும் என்பதை உணர்ந்து, தொடாமலே வாழ்வது சற்றே முதிர்ந்த வாழ்க்கை என்று நம்புகிறேன். என்னைப் போன்ற சராசரிகள் சிலர், சற்று சுட்டும் சற்று விட்டும் வாழப் பழக முயல்கிறார்கள். உணர்ச்சியைக் கடந்த உணர்வு நிலையில் வாழ்ந்தால் அது இனிமை என்பது தெளிவாகப் புரிகிறது. பந்தம் பாசம், பொறாமை கோபம், காதல் மோதல் என்று உணர்வுகளை முன்வைத்து புலனைப் பின்னணிக்குத் தள்ளி முதிர்ச்சியோடு வாழ்வது கலை. நான் அறிந்த பலர், உணர்ச்சியையும் உணர்வையும் குழப்பிக் கொண்டு இங்கொரு கால் அங்கொரு கால் என்று தத்துகிறார்கள். இப்படியும் வாழலாம்.

உணர்வுக்கும் ஒரு படி மேலே நின்று நெறியைப் பற்றி வாழ்வது இன்னும் முதிர்ந்த வாழ்க்கை. நெறி வாழ்க்கை சற்று சுவாரசியமானது. நெறி வாழ்க்கை என்பது ஒரு முகமூடி போன்றது. தன்னை மறக்க முகமூடி அணியலாம். தன்னை மறைக்கவும் முகமூடி அணியலாம். அணிந்தவரைப் பொறுத்து மாண்புருவது என்றாலும், நெறி வாழ்க்கை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நிலை. இந்தக் கூட்டத்தில் விவேகானந்தரும் உண்டு, நித்தியானந்தரும் உண்டு. காலடியும் உண்டு, காஞ்சியும் உண்டு. சீரடியும் உண்டு, சிருங்கேரியும் உண்டு. திருநீர்மலையும் உண்டு, திருப்பதியும் உண்டு. முகமூடிக்குப் பின்னே இருப்பது யார்? அதுதான் சுவாரசியம். நெறி தழுவிய முகமூடிகள் என் போன்றவர்களுக்கு ஒளிவிளக்குகள். நெறி தவறிய முகமூடிகள், புலனை நம்பியே வாழும் என் போன்றவர்களை விடக் கேவலமானவர்கள். பெரும்பாலானக் காவிகளும் அங்கிகளும் இதில் அடக்கம். அத்திபழங்கள். இப்படியும் வாழலாம்.

நெறிக்கும் ஒரு படி மேலேறி, மனதைப் பற்றி வாழ்வது இன்னும் முதிர்ச்சி. மனதைப் பற்றி வாழ்வதா? அப்படியென்றால்? பொய் சொல்லாதே என்கிறது நெறி. 'எங்கேடி உன் பிள்ளை?' என்று ஆத்திரத்துடன் வரும் அறிவற்றத் தகப்பனைத் திசை திருப்ப, 'பிள்ளை இங்கே இல்லை' என்று மறைத்துப் பொய் சொல்லும் தாய் நெறி தவறியவரா, மனம் தழுவியவரா? 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்று படிப்பது நெறி மீசை. 'ஜெகத்தினை அழித்திடுவோம்' என்று துடிப்பது மன மீசை. மனதைப் பற்றியவர்கள் மட்டுமே கணவனை இழந்த நிலையிலும் 'தேரா மன்னா!' என்று சிலம்பாட முடியும் என்று நினைக்கிறேன். இப்படியும் வாழலாம்.

ஒன்றைக் கவனித்தீர்களா? உணர்ச்சி, உணர்வு, நெறி இவை மூன்றுமே வெளிநோக்கிய வாழ்க்கை. உள்நோக்கிய வாழ்க்கை என்பதே மனதில்தான் தொடங்குகிறது.

மனதுக்கும் சில படிகள் மேலே அறிவு. அறிவற்றத் தகப்பனிடமிருந்து காப்பாற்ற நினைத்தப் பிள்ளையின் கையில் திருட்டுப் பொருள் இருப்பதைக் கண்டதும், செய்ய வேண்டியதைச் செய்யும் நிலை. 'கல்லானாலும் கணவன்' என்று நம்பியவன், கொடுமைக்காரன் என்று தெரிந்ததும் கணவனைக் கல்லால் அடிக்கும் நிலை. அறிவு மனதைச் சீராக்குகிறது. மனதையும் பற்றி அறிவோடும் வாழ்வோர், மிகச்சிலர். நான் அறிந்த ஆயிரக்கணக்கானவருள் இருபது நபர்களை இந்த வகையில் சேர்ப்பேன். இப்படியும் வாழலாம்.

அறிவுக்கு மேலே பல படிகள் சென்று வாழ்வது தன்னறிவைப் பற்றி வாழும் நிலை. தகப்பனுக்கும் பிள்ளைக்கும் ஒருங்கே மந்திரம் சொல்லும் தாயின் நிலை. நான் அறிந்த ஆயிரக்கணக்கானவருள் ஐந்து பேரை இந்த வகையில் சேர்ப்பேன். இப்படியும் வாழலாம்.

எல்லோரும் வாழலாம் என்ற கொள்கை, நெறி பற்றியது என்று தீர்மானமாகச் சொல்லலாம். ஓரளவுக்கு மனம் பற்றியது என்றும் சொல்லலாம். எப்படியும் வாழலாம் என்ற கொள்கை? உணர்ச்சி, உணர்வு, நெறி, மனம், அறிவு, தன்னறிவு எனும் ஆறு நிலைகளில் ஒன்று என்பதை மட்டும் தீர்மானமாகச் சொல்லலாம் :). ஆனால் எந்த நிலை? ஒரு துப்பு தருகிறேன்: சுவாரசியமானது.

    சிகேதனின் கேள்விகளால் தாக்குண்ட எமன் சிந்தித்தான். இந்தப் பிள்ளை கேள்வி எந்திரமாக இருப்பான் போலிருக்கிறதே? தன் மாணவனின் அறிவுப் பசியைப் போக்கச் சரியான உணவைப் போதுமான அளவு படைக்க வேண்டுமே என்று கலங்கினான். உயிர்ப்பயண உண்மைகளை அறியும் பக்குவம் தன் மாணவனுக்கு இருப்பதை அறிந்து நுட்பங்களைச் சொல்வதென்றுத் தீர்மானித்தான். தான் சொல்லாவிட்டால் எப்படியும் தெரிந்து கொண்டு தனக்கே சொல்லித்தருவான் இந்தப் பிள்ளை என்றும் நினைத்தான். "நசிகேதா! ஆன்மா பற்றிய உண்மைகளை உடனடியாகச் சொல்லத் தொடங்குவேன். நம்முடைய புலன்களுக்குப் பல நிலைகளுக்கு அப்பால் இருப்பது ஆன்மா. அதற்கும் அப்பால் பல நிலைகள் கடப்பதே உயிர்ப் பயணத்தின் இலக்கு. நிறுத்தம்" என்றான்.

"நிலைகள் என்றால்?" என்றான் நசிகேதன்.

எமன் சிந்தித்தான். "நசிகேதா, என்னுடன் ஒரு பயணம் வரத்தயாரா?" என்றான்.

"எதற்கும் தயார். எத்தகையப் பயணம்?"

"கற்பனைப் பயணம். ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு குகைகளை எண்ணிக்கொள்"

"செய்தேன்"

"கீழ்க்குகையிலிருந்து மேல் குகைக்குப் பயணம் செய்யப் போகிறோம்"

"சரி"

"ஒரு நுட்பம். முதல் ஐந்து குகைகளின் நிலையில்லாமையால் பயணம் அவ்வபோது தடுமாறலாம். தடுமாறினால் தொடங்கிய இடத்துக்கே வர நேரிடும். ஆறாவது குகையில் எந்த விதத் தடுமாற்றமும் கிடையாது"

"பயணத்தின் இலக்கு, ஆறாவது குகையை அடைவதா?"

"பயணத்தில் குறிக்கோள், ஆறாவது குகையிலிருந்து வெளியேறுவதாகும்"

"நன்றி ஐயா.. நான் தயார்"

"புலன்களை அறிவாய் அல்லவா?" என்றான் எமன்.

"அறிவேன். ஐம்புலன்களினால் வாழ்வை நுகரும் எண்ணற்றோருள் நானும் ஒருவனாக இருந்தேன்" என்றான் நசிகேதன்.

"புலன்களை அறிய வைப்பது உணர்ச்சிகள். உணர்ச்சிகளே முதல் குகை. உணர்ச்சிகளை விட நுண்மையானவை உணர்வுகள். உணர்வுகளே அடுத்தக் குகை. உணர்வுகளை விட நுண்மையானது குணம். அதுவே மூன்றாவது குகை. குணத்தினும் நுண்மையானது, அப்பாற்பட்டது, மனம். அடுத்தக் குகை. மனதைக் கட்டும் அறிவோ, அதனினும் நுண்மையானது. அறிவே அடுத்தக் குகை" என்ற எமன், "நசிகேதா, நான் சொல்வது புரிகிறதா? என்றான்.

நசிகேதன் கவனமாகக் கேட்டு, "புரிகிறது" என்றான்.

எமன், "அப்படியென்றால் உனக்குப் புரிந்ததைச் சொல். மாணவனின் திறமையைச் சோதிக்க வேண்டியது ஆசிரியனின் கடமையல்லவா?" என்றான்.

"உயிர்ப்பயணம் பற்றிய என் கேள்விகளைத் தொடர்ந்துக் குகைப்பயணம் பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள். என்னுடைய சிற்றறிவுக்கெட்டிய வரை நீங்கள் குறிப்பிட்டக் கற்பனைக் குகைப் பயணம் உயிர்ப் பயணத்தை ஒத்தது" என்றான்.

எமன் பிரமிப்பை அடக்க முயன்றான். "எந்த வகையில்?"

நசிகேதன் பணிவுடன், "பிறப்பிலிருந்து இறப்பு வரை மனித உயிரானது உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது. அந்தப் பயணத்தில் உயிரானது உலகாயதச் சிந்தனை மற்றும் செயல்களில் ஈடுபட்டுச் சுழல்கிறது" என்றான்.

"மிகச்சரி"

"அப்படியெனில் தன்னறிவு?"

"அறிவுக்கும் அப்பாற்பட்டது தன்னறிவு. ஆறாவது குகை" என்றான் எமன்.

"உணர்ச்சி, உணர்வு, குணம், மனம், அறிவு எல்லாம் புரிந்தது ஆசானே. அறிவுக்கும் அப்பாற்பட்டது தன்னறிவென்றீர்களே? மனதை ஒழுங்கு செய்யும் அறிவுக்கும் தன்னறிவுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டுகிறேன்"

"அறிவு தன்னுடைய மனதை ஒழுங்கு செய்யும். தன்னறிவோ பிறருடைய மனதையும் ஒழுங்கு செய்யும் தன்மை கொண்டது. தன்னறிவு கண்டவர்கள் தலைவர்கள். தன்னறிவு கண்டவர்கள் வெகு சிலரே. அவர்களால் உணர்ச்சியில் உழல்வோரை உய்யச் செய்ய முடியும். தன்னறிவைக் கண்ட உயிர், பிற குகைகளுக்குத் திரும்புவதில்லை, புரிந்ததா?"

"புரிந்தது. மனிதன் இறக்குமுன் ஆறாவது குகைக்கு உயிரைச் செலுத்த வேண்டும். ஆறாவது குகைக்குள் செல்லாத உயிருக்கு அதைவிட்டு வெளியேற வாய்ப்பில்லாது போகிறது"

"அல்ல. அனைத்து உயிர்களுமே தொடர்ந்து பயணிக்கின்றன. ஆறாவது குகையைக் கடந்த உயிருக்கு மட்டுமே அடுத்த பயணத்தின் தெளிவு உண்டாகிறது"

"தன்னறிவால் ஆன்மாவை அறிய முடியும் என்று முன்பு சொன்னீர்கள். இப்பொழுது இன்னும் தெளிவானது. ஆறாவது குகைக்கு அப்பாலிருப்பது ஆன்மாவா? தன்னறிவுப் பயணம் செய்யாத உயிர்கள் ஆன்மாவை அறியாது போகுமா? ஆறாவது குகை வரையிலான பயணம் முழுதும் மனிதன் உயிருடன் இருக்கையில் செய்வதல்லவா? இறந்த பின்னர், பயணம் ஆறாவது குகைக்கு அப்பால் தொடங்குகிறதா?

எமன் வியந்தான். நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/10

தறிகெட்டால் நெறி தப்பும்


65
தறிமுறியின் தேர்ப்புரவித் தேரழியுந் துப்பு
நெறிமுறியின் தன்னறிவு நந்தும் - அறிந்துப்
புலனிறுக்கி இன்றே படிவார் பிறவா
நலமுறுவார் நாளை யவர்.

   றிகெட்டக் குதிரைகள் தேரினை ஒருங்கே இழுக்க இயலாமல், தேரும் வீரரும் கொற்றனும் அழியக் காரணமாகின்றன. நெறி தவறும் புலன்களால் தன்னறிவு அழியும். இதை அறிந்து, புலன்களைக் கட்டி அமைதியைக் கடைபிடிப்பவர்கள் பிறவாமை எனும் சிறப்பினை பின்னாளில்* பெறுவார்கள்.


துப்பு: காரணம்
நந்தும்: தேயும், அழியும்
படிவார்: அடங்குவார், அமைதியாவார்
*நாளை என்ற சொல்லுக்கு 'இறந்த பின்' என்றக் காரணப் பொருளும் உண்டு.



    ன்னிடம் ஒரு பலகை இருக்கிறது.

சிந்தனைப் பலகை. மந்திரப் பலகை.

பலகையில் என்ன மந்திரம்? சொல்கிறேன்.

'புலன்களைக் கட்டிப் போட முடியுமா முடியாதா?' என்றக் கேள்வியும் வாதமும் அங்கி மற்றும் காவிகளின் மொத்த உரிமையென ஒதுக்கிவிட்டு, 'புலன்களைக் கட்டிப் போடுவது தேவையா?' என்று மட்டும் சிந்தித்தேன். அப்படி சிந்திக்கத் தொடங்கியதும், இரண்டு கிளைக்கேள்விகள் தோன்றின.
  1. புலன்களைக் கட்டிப் போடுவது என்றால் என்ன?
  2. புலன்களைக் கட்டிப் போடாவிட்டால் என்ன ஆகும்?

'புலன்களைக் கட்டிப் போடுவது என்றால் என்ன?' என்ற முதல் கிளைக் கேள்வியைப் பற்றிச் சிந்தித்ததும், உடனே இரண்டு உபகிளைக் கேள்விகள் தோன்றின.
  1. எடுத்த எடுப்பிலேயே கட்டிப் போட வேண்டுமா, அல்லது குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பின் கட்ட வேண்டுமா?
  2. சற்று இறுக்கிக் கட்டிவிட்டால் புலனே அழிந்து விடும் அபாயம் உண்டா? புலனைக் கட்டிய பலன் கிட்டுமா? புலனை வெட்டிய பலன் கிட்டுமா?

கேள்விகள் குட்டி போடும் வேகத்தைக் கண்டு அஞ்சி சிந்தனைப் பலகையை அழித்துவிட்டு சுவையாக ஏதாவது சமைத்துச் சாப்பிடலாம் என்று எழுந்தால், 'புலனைக் கட்டுவது பற்றியச் சிந்தனையே இவ்வளவு சிக்கலெனில் செயலில் இறங்குவது எத்தனைச் சிக்கல்?' என ஒரு கேள்வி விடாமல் துரத்தியது.

நம்முடைய தேவைகள் இவைதான் என்ற வரையறை இருந்தால் புலனைக் கட்டும் சிக்கலை சமாளிக்க முடியும் என்று தோன்றியது. தேவைகள் என்றதும் முக்கியத் தேவைகள், அவசியத் தேவைகள், அவசியத்துக்கும் அனாவசியத்துக்கும் இடைப்பட்டத் தேவைகள் என்று கேள்விகளைப் பிரித்துக்கொண்டே போனது சிந்தனைப் பலகை.

இப்போது புரிகிறதா பலகையின் மந்திரம்?

சிந்தனைப் பலகைக்குப் பதில் செயல் பலகை இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மந்திரம் கூட வேண்டாம், சாதாரணச் செயல் பலகை கூடப் போதும் என்று தோன்றியது.

விடுமா சிந்தனைப் பலகை?

'செயல் பலகை என்றால் எத்தகைய செயல் பலகை? உடனே செய்யக்கூடிய செயல் பலகையா, ஒத்திப்போடக்கூடிய செயல் பலகையா?' என்று சிந்தனைப் பலகை சுதாரித்தது.

என் சிந்தனை மீண்டும் 'முக்கியத் தேவை'க்கு தாவியது. வாழ்வில் எது முக்கியம்? முக்கியம் என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறோம்? முக்கியம் என்று தீர்மானிப்பதை உடனே செய்கிறோமா? உடனே செய்ய முடிந்தால் அது உண்மையிலேயே முக்கியமா? உடனே செய்யாவிட்டால் அது எப்படி முக்கியமாகும்?

சிந்தனைப் பலகைக்குள் உற்சாக ஊற்று. பலகையைப் பூட்டி வைத்தேன்.

செயலை ஒத்திப் போடுவது, நம்மில் பெரும்பாலானோர்க்குக் கைவந்தக் கலை. சிந்தனையை ஒத்திப் போடுவது எளிதல்ல. செயலாக்க முடியாதவர்களுக்கு சிந்தனை ஒரு வரம். சிந்தனைகள், கனவுகளின் உரம். கனவுகளோ செயலாக்க மறந்தோரின், துறந்தோரின், மறுப்போரின் அகதி முகாம். கனவுகளையும் கண்டு, சிந்தனையையும் வளர்த்து, அவற்றையும் மீறிச் செயலில் இறங்குவோர் வணக்கத்துக்குரிய வீரர்கள்.

வீரர்களுக்குச் சுதந்திரம் உண்டு. என் போல் பிறருக்குச் சிந்தனைப் பலகையுண்டு.

    'நாளை' என்ற சொல்லை, நம்பிக்கை தரும் சொல்லாகவே அறிந்திருக்கிறேன். எதிர்காலம் என்ற பொருளில், நாளை என்பதைக் கனவுகளின் கிடங்காகப் பொருள் கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னைப் போல் என்றால் அதிர்ச்சிக்குத் தயாராகுங்கள்.

வடமொழியில் நாளை என்பதற்கு எமன் என்று ஒரு பொருள். சற்றுத் தேடிய போது தமிழிலும் அப்படியே என்பதை அறிந்தேன். காலம் என்ற வடமொழி வேர்ச்சொல்லை ஒட்டிப் பிரிந்த கிளைச் சொற்களில் எமனுக்கு இடமிருப்பதை அறிந்தேன். நாள் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் எமன் என்று ஒரு பொருள் இருக்கிறது. நாளான் என்றால் எமன். நாளை என்றால் எமனுடைய என்று ஒரு பொருள். 'நாளை நமதே' என்று சொல்லச் சற்று அச்சமாக இருக்கிறதே?

'நாளைக்கும் எமனென்று பேர்' என்று தெரிந்த மெட்டில் தேவையில்லாத வரிகள் சுற்றிச்சுற்றி வர, இன்று என்பதற்குப் பொருள் தேடினேன். எமன் தொட்ட எந்தப் பொருளும் தென்படவில்லை. நிம்மதி. நாளையிலிருந்து இன்றை மட்டும் மனதில் கொள்ளவிருக்கிறேன்.

    "நசிகேதா, போர்க்களத்தில் இருக்கும் தேரின் பரிகளுக்கு ஒழுக்கம் தேவை. அந்த ஒழுக்கத்தை வழங்குவது தறியென்னும் கடிவாளம். தறி வழுகினால் என்ன ஆகும்? புரவிகளுக்கு யார் தன்னைக் கட்டியாள்பவர் என்பது தெரியாமல் போகும். ஒவ்வொரு புரவியும் ஒவ்வொரு திசையில் போகக்கூடும். ஒன்று அதிவேகமாகப் போக முனையும். இன்னொன்று சோம்பிக் கிடக்கும். மற்றொன்றோ சண்டித்தனம் செய்யும். பிரிதொன்றோ முரட்டுத்தனமாகச் செயல்படும். எஞ்சியிருப்பது குறுக்கு வழியில் தறியை இன்னும் அறுத்துக் கிளம்ப முனையும். அந்நிலையில் தேரோட்டியின் நிலை என்ன?" என்று கேட்டான் எமன்.

"தான் குதிரைகளைக் கட்டும் நிலையொழிந்து, குதிரைகளுக்குத் தான் கட்டுப்பட வேண்டிய நிலையில் இருப்பான். தேரோட்டியின் கடிவாளம் பயனற்றுப் போகும்" என்றான் நசிகேதன்.

"சரியாகச் சொன்னாய் நசிகேதா!" என்ற எமன் தொடர்ந்தான். "தறிகெட்டோடும் துரகங்கள் தேரோட்டிக்கும் தேருக்கும் துரோகமிழைக்கத் தொடங்கும். முதலில் அழிவது தேரோட்டி. பிறகு தேருக்கு ஆபத்து. தேர்வீரருக்கும் ஆபத்து. புரவிகளுக்கும் அழிவேற்படும். தேரழியும். சீரழியும்" என்றான்.

"தேர்வீரரின் நிலை?"

"இன்னொரு தேர், இன்னொரு தேரோட்டி, இன்னொரு வகைப் புரவிகள் என்று தேர்வீரர் தொடர்ந்து பயணம் செய்யலாம். ஆனால் போரில் கவனம் செலுத்த முடியாது போக நேரிடும்".

நசிகேதன் சிறிது அமைதியாக இருந்தான். பிறகு, "எமனாரே! உங்கள் விளக்கத்துக்கு நன்றி. தேர்வீரனின் குறிக்கோள் போரில் வெற்றி பெறுவதாகும். தேரோட்டியின் நோக்கம் தேர்வீரனின் வெற்றிக்கு வழி செய்வதாக இருக்க வேண்டும். கடிவாளத்தின் நோக்கம் குதிரைகளைக் கட்டுவதாக இருக்க வேண்டும். குதிரைகளின் கடமை கடிவாளத்துக்கும் தேரோட்டியின் இழுப்புக்கும் கட்டுப்பட்டு செயலாற்றுவதாகும். இவை அனைத்திலும் கட்டுப்பாடு என்ற ஒழுக்கம் பரவியிருக்க வேண்டும்" என்றான்.

"மிக நன்றாகப் புரிந்து கொண்டாய் என் மாணவனே!" என்றான் எமன். "கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையென்றால் கண்மூடித்தனம் அகல வேண்டும். தேரோட்டி விழிப்புடன் இருந்தால் மட்டுமே குதிரைகளைக் கட்ட முடியும். தேரோட்டியின் சிந்தனையிலும் செயலிலும் தெளிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குதிரைகளை நேர்வழியிலோ தேவைக்கேற்றபடியோ செலுத்த இயலாது போகும். தேர்வீரரின் விழிப்புணர்வும் தேரோட்டியைப் போன்றதே. போரில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வெற்றிக்கு தடையாக இருக்கும் எதையும் முறித்தோ ஒதுக்கியோ, தொடர்ந்து வெற்றியை நாட வேண்டும். தேரோட்டியால் தேர்வீரரும் தேர்வீரரால் தேரோட்டியும் பயனடைவது இவ்வாறே" என்றான்.

"மிக்க நன்றி ஐயா!" என்றான் நசிகேதன். "மானிடரும் தன்னறிவால் ஐம்புலன்களைக் கட்டியாள வேண்டும். தன்னறிவு, ஆன்மாவை பிறவிப் போரில் வெற்றி பெறச் செய்யும். இல்லையெனில் ஆன்மா இன்னொரு உடலில் கலந்து பிறவிப் போரைத் தொடரும். புலன்களின் நோக்கம், தன்னறிவு வளரவும் செழிக்கவும் நேர்வழியில் செல்ல உதவுவதும் ஆகும். அன்றிப் புலன்களினால் யாதொரு பலனும் இல்லை. புலன்கள் அழிவன. அடங்காத புலன்களினால் தன்னறிவும் ஒடுங்கும். அழியாத ஆன்மா இன்னொரு புலன்கட்டைத் தேடி ஓடும்" என்றான்.

"நன்று. அடங்கியமையும் புலன்களினால் தன்னறிவு செழித்து, ஆன்மாவை பிறவாமை எனும் வெற்றி பெறச் செய்யும்" என்றான் எமன். "தேரோட்டியின் கதியும் குதிரைகளின் கதியும் புரிந்ததா நசிகேதா?".

"புரிந்தது ஆசிரியரே! ஆனால் வேறு கேள்விகள் தோன்றுகின்றன" என்றான்.

"கேள்"

"தன்னறிவு ஆன்மாவின் தேரோட்டி என்பதை அறிந்து கொண்டேன். ஆன்மா என்பது எங்கும் பரவியிருப்பது என்றீர்கள். புலனடக்கித் தன்னறிவு வளர்த்தால் ஆன்மா பிறவிப் போரில் வென்று பிறவாமைப் பேறு பெறும் என்றீர்கள். வெற்றி பெற்ற ஆன்மாவுக்கு என்ன ஆகும்? தன்னறிவு வளராத நிலையில் ஆன்மாவுக்கு பிறவாமை எனும் வெற்றி பெற வழியே இல்லையா? அத்தகைய ஆன்மாக்களும் பரந்த ஆன்மாவின் பகுதி தானே?"

எமன் பதில் சொல்ல முனைகையில் நசிகேதன் தடுத்தான். "மன்னிக்க வேண்டும் ஆசானே.. என் கேள்விகள் முடியவில்லை. மனிதன் இறக்கும் பொழுது உடல் எனும் கூடு, அதாவது ஐம்புலன்கள் அல்லது உணர்வுகளால் இயங்கக்கூடிய எலும்பும் சதையும் சேர்ந்த கூடு, அழிகிறது. மூச்சு நின்றாலும் உயிர்ப்பயணம் ஆன்மா என்ற வடிவில் தொடர்கிறது. இறந்த மனிதனின் உயிர் அல்லது ஆன்மா, அம்மனிதனின் தன்னறிவுச் செறிவால் பிறவாமை பெறும் என்று எவ்வாறு அறியும்? அல்லது அம்மனிதனின் தன்னறிவுக் குறையால் மீண்டும் இன்னொரு உடலை அல்லது கூட்டைத் தேட வேண்டும் என்பதை எவ்வாறு அறியும்? பிறவாத ஆன்மாக்களுக்கு என்று ஒரு இடமும், பிறக்கும் ஆன்மாக்களுக்கு என்று தனி இடமும் இருக்கிறதா? தேர் உருவகம் ஓரளவுக்குத் தெளிவூட்டினாலும் இந்தக் கேள்விகள் தொடர்ந்து வாட்டுகின்றனவே?" என்றான்.

"முடிந்ததா?" என்ற எமன் வியந்தான். நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/06

உடலே தேர், தன்னறிவே தேரோட்டி


64
ஆன்றமையா ஐம்புலனும் தேர்ப்புரவி தேராகும்
ஊன்கட்டு உள்ளம் கடிவாளம் - ஆன்மாவே
உன்னிக்கும் தேர்வீரர் உய்யுயிர் தேருருளை
தன்னறிவே தேர்க்கொற்ற னாம்.

   சையினால் கட்டப்பட்ட உடலே தேராகும். உயிரானது தேரின் சக்கரங்கள். அடங்காத ஐம்புலன்களும் தேரில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகள். ஆன்மாவோ அனைத்தையும் கவனித்தபடி தேரில் பயணம் செய்யும் வீரர். தன்னறிவானது, தேரையும் குதிரைகளையும் இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியாகும்.


ஆன்றமையா: அடங்காத, அமைதியடையாத
தேர்ப்புரவி: தேரில் பூட்ட்ப்பட்டிருக்கும் குதிரைகள்
ஊன்கட்டு: தசைக் கட்டு, உடல்
தேர்வீரர்: தேர்ப் பயணி
உய்யுயிர்: வாழும் உயிர், ஒருபொருட்பன்மொழி
தேருருளை: தேர் சக்கரம்
தேர்க்கொற்றன்: தேரோட்டி



    டோவின் மூன்றாவது பகுதி சற்றே எளிதானது. எந்த வகையிலெனில், பிற பகுதிகளைப் போல நீண்ட வாதங்களோ, சிந்தனைக்குகந்த சித்தாந்தங்களோ அதிகம் இல்லை. மனிதப் பிறவியின் முக்கிய நோக்கம் விழிப்புணர்ச்சி மட்டுமே என்ற எளியக் கருத்தை மையமாகக் கொண்டப் பகுதி.

விழிப்புணர்ச்சி என்றால் என்ன? கண்ணைத் திறந்து பார்ப்பது விழிப்புணர்ச்சி என்ற சாதாரணப் பொருளும் இதில் அடக்கம். 'கண்மூடித்தனமாக என் வாழ்வைக் கழிக்க மாட்டேன்' என்ற கொள்கைப் பிடிப்பும் இதில் அடக்கம். 'மரணம் என்பது புதிதல்ல', 'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே' போன்ற, சற்றே திடுக்கிட வைக்கும் விழிப்புணர்ச்சியும் இதில் அடக்கம்.

விழிப்புணர்ச்சி இங்கே பரந்த வீச்சில் பேசப்படுகிறது. விவேகானந்தரின் பிரபல "விழிமின்! எழுமின்!" கொள்கைக்குரல், கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

'மரணம் என்பதே வாழ்வோரை விழிக்க வைக்கும் நிகழ்வாகும்' என்ற பொருளில் பார்த்தால், கடோவின் மூன்றாம் பகுதி இறந்தவர் வீட்டில் படிக்கப்படும் சடங்கைப் புரிந்து கொள்ளலாம். 'மரணத்தைத் தொட்ட விழிப்புணர்ச்சியைச் சொல்கிறது' என்ற அசாதாரணக் காரணத்தினாலேயே கடோ அதிகமாகப் பொதுவில் படிக்கப்படுவதில்லை என்று தோன்றுகிறது.

பாடலைப் படித்ததும் கீதையும் கண்ணனும் விஜயனும் நினைவுக்கு வந்தால் வியப்பில்லை. கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து கீதையில் நிறையவே எடுத்தாளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தப் பாடலில் உடல், உள்ளம், ஆன்மா, புலன் இவற்றுக்கெல்லாம் போருக்குத் தயாராக இருக்கும் தேர் உருவகமாகிறது. சற்று சுவாரசியமான உருவகம். ஏன் அப்படி? போரில் எது நிச்சயம்? வெற்றியா, தோல்வியா?

இரண்டும் அல்ல. போரில் மரணம் நிச்சயம். மரணம் மட்டுமே நிச்சயம், வெற்றியும் தோல்வியும் சாத்தியம்.

மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அத்தனை வீரருக்கும் அந்த நிலையில் எழுச்சியூட்டும் பேச்சு புரியுமா, தத்துவ சித்தாந்த வேதாந்தப் பேச்சு புரியுமா - சிந்திக்கவேண்டிய விஷயம். மரணபயம், எழுச்சிக்குரலை அழுத்திவிடும் தன்மையது. உயிரின் பயணம் பற்றிய வேதாந்தப் பேச்சு, மரண பயத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. தவிர்க்க முடியாததை ஏற்கப் பழகு என்கிற எளிமையான சித்தாந்தம்.

இந்தக் காரணத்தினால் தான் கீதை குருட்சேத்திரப் போரின் பின்னணியில் உரைக்கப்பட்டது. அத்தனை பேரையும் கொல்வேன் என்று சூளுரைத்த நேரத்தில் அர்ஜுனனுக்கு எந்த அவதியும் ஏற்படவில்லை. கொல்வதாகச் சொன்னவர்களைப் போர்க்களத்தில் பார்த்தக் கணமே தளர்ந்து போகிறான். காரணம், மரணபயம். பிற உயிர் பிரிவதும் மரணபயமே. கீதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி - தேர், தேர்வீரன், தேரோட்டி, குதிரைகள் இவை எல்லாமே உருவகங்கள் என்று கருதும் அறிஞர்கள் உண்டு. கீதோபதேச வரைபடங்களில் கூட ஐந்து குதிரைகள் பூட்டிய தேர் இருப்பதைக் கவனிக்கலாம்.

உயிர்ப்பயணத்தை விவரிக்க கடோ ஆசிரியர்கள் மட்டுமல்ல, வியாசர் மட்டுமல்ல - மேற்கத்திய ஞானிகளும் தேர் உருவகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடோவின் ஏறக்குறைய சமகால இலக்கியமாகக் கருதப்படும் phaedrusல் இந்த உருவகம் காணப்படுகிறது. (எழுதியவர் plato).

phaedrusல் சொல்லப்பட்டிருக்கும் சுவையான கதை (அல்லது புதிர்) பின்வருமாறு:

ஆன்மா என்பது, சிறகுகள் கொண்ட இரண்டு குதிரைகள் பூட்டிய தேராகும். ஒன்று வெள்ளைக் குதிரை, மற்றது கறுப்புக் குதிரை. ஆன்மாவின் இலக்கு அல்லது சவால்? குதிரைகளை இழக்காமல் சொர்க்கத்தில் வந்திறங்க வேண்டும். இதில் என்ன சிக்கல்? சொர்க்கத்தை அடையுமுன் குதிரையின் சிறகுகள் அறுந்துவிட்டால் தரையிலிறங்கிவிடும். குதிரையின் சிறகுகள் அறுந்து போவானேன்? இரண்டு குதிரைகளும் இணைந்து செயல்படாவிட்டால் ஒரு குதிரையின் சிறகுகள் அறுந்து போகும். குதிரைகள் இணைந்து செயல்படாதிருக்கக் காரணம்? ஆ.. அங்கே தான் சூட்சுமம்.

இந்த வெள்ளைக் குதிரை இருக்கிறதே, அதற்கு நன்மை, விழிப்புணர்ச்சி, விவேகம், இலக்கு எல்லாம் பிடிக்கும். கறுப்புக் குதிரைக்கோ இன்பம், கண்மூடித்தனம், சோம்பல், வெகுளி என்றால் கொள்ளை ஆசை. இரண்டு குதிரைகளையும் இணைந்து செயல்பட வைக்க வேண்டியது ஆன்மாவின் பொறுப்பு. உயரே போனபின் சிறகறுந்து கீழே விழுந்தால் மீண்டும் சிறகு முளைக்க பத்தாயிரம் வருடங்களாகும். அது வரை ஆன்மா தரையிலே உழல வேண்டும்.

ஆன்மாவின் சொர்க்கப் பயணம் வெற்றிகரமாக முடியுமா? வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ள phaedrus தேடிப் படிக்கலாம். அல்லது கடோபனிஷது படிக்கலாம்.

    சிகேதன் எமனை வணங்கி, "ஐயா, ஆன்மத் தேடல் தொடரும் என்றீர்களே? உடலைப் பிரிந்த உயிர்ப் பயணத்தை விவரிப்பதாகச் சொன்னீர்களே? தயவு செய்து எனக்கு அந்த நுட்பத்தைத் தெரிவியுங்கள்" என்றான்.

எமன், "நசிகேதா, உயிர் உடலைப் பிரிந்தது என்று எப்படி அறிவது?" எனக் கேட்டான்.

"ஐயா, உடலில் எந்த இயக்கமும் இல்லாது போனால், மூச்சு விடவோ, தொடவோ, பேசவோ, உணரவோ, அறியவோ... எந்த வித இயக்கமும் இல்லாது போனால் உயிர் பிரிந்தது என்று அறியலாம்" என்றான்.

எமன், "நசிகேதா! நீ அரசகுமாரன். அடிக்கடி போர் புரிந்து வீரத்தை வளர்க்கவும் காட்டவும் துடிக்கும் அரச பரம்பரையில் வந்தவன். உனக்குத் தெரிந்த விதத்திலேயே சொல்கிறேன். உன் தந்தையின் தேர்ப்படையில் தேர் பார்த்திருக்கிறாய் அல்லவா?" என்றான்.

"பார்த்திருக்கிறேன்"

"தேரிலே போரிட்டு வெற்றி பெற எது தேவை, சொல் பார்க்கலாம்?"

"அப்படியென்றால்?"

"போரில் தேர் வெற்றிகரமாக இயங்க எது காரணமாகிறது?"

"தேர் இழுக்கும் குதிரைகள்.."

எமன் அமைதியாக இருந்தான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "குதிரைகளைக் கட்டும் கடிவாளம்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

இன்னும் சிந்தித்த நசிகேதன், "விழிப்போடு இருந்து தன்னையும் தன்னைச் சுற்றியும் பாதுகாக்கும் தேர்வீரன்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

மேலும் சிந்தித்த நசிகேதன், "தேரையும், தேர்வீரரையும், குதிரைகளையும் ஒரு இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியே காரணம்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "ஐயா, நான் சொல்வது தவறா?" என்று கேட்டான்.

"இல்லை நசிகேதா, நீ சொன்ன எதுவும் தவறில்லை" என்ற எமன், நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். "இன்னொரு முக்கிய பாகம், அது தான் தேர் இயங்கக் காரணமாகிறது. தேரின் சக்கரங்கள். சக்கரங்கள் உடைந்து போனால், தேர் நகராது. எவ்வளவு முயன்றாலும் தேர் நகராது" என்றான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "இன்னொரு தேரில் ஏறிப் போர்ப் பயணத்தைத் தொடர முடியுமே?" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

மேலும் சிந்தித்த நசிகேதன், "ஐயா, புரியத் தொடங்கியது. சக்கரங்கள் உடைந்தால் தேர் நகராது. உயிர் நின்றதும் உடல் இயங்காது. அது வரை உடலை இயக்கியப் புலன்களினால் பயனில்லை. உள்ளிருக்கும் ஆன்மா இன்னொரு உடலைப் பற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறது"

எமன் மகிழ்ந்து, "என்னருமை மாணவனே, நசிகேதா! உன் பிடிப்பை மெச்சினேன்" என்றான்.

நசிகேதன் தயங்கி, " ஐயா, அப்படியென்றால் தேரோட்டியின் கதி? குதிரைகளின் கதி?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

2011/09/04

கடோபனிஷது - இரண்டாம் பகுதி


    தொடர்வது, நசிகேத வெண்பா இரண்டாம் பகுதியின் மூல வடமொழி வடிவத்தின் தமிழ்ப் பெயர்ப்பு.

கடோவிலிருந்து, என்னாலியன்ற வரை, வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். சில பாடல்களுக்குக் கூடுதல் விளக்கமும் (என் கருத்தும்) சேர்த்திருக்கிறேன்.

அறிவற்றவர் அடையாளம்

1. நன்மை வேறு வழியிலும் இன்பம் வேறு வழியிலும் மனிதரை இழுக்கின்றன. இரண்டிலே, நன்மையை ஏற்பவருக்கு முக்தி கிட்டும்; இன்பத்தை ஏற்பவர்கள் அதைத் தவற விடுகிறார்கள்.

2. தன்னைச் சுற்றிய இன்பம் நன்மை இரண்டையும் வேறுபடுத்தி அறிந்தவர்கள், நன்மையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; மூடரோ சேர்ப்பதையும் சேமித்துப் பெருக்குவதையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

3. நசிகேதா! அணிந்தாரைத் திசை மாறச்செய்யும் சங்கிலியை நீ ஏற்கவில்லை. இன்பங்களையெல்லாம் அறிந்து நிராகரித்து விட்டாய்.
    (பொற்சங்கிலி பற்றுதலுக்கான உருவகம். சங்கிலியால் கட்டுண்டது போல் பற்றுகளில் சிக்கித் துன்புறுவதைக் குறிக்கிறது எனலாம். எமன் நசிகேதனுக்குப் பொன்னாரம் தந்தது நினைவிருக்கலாம், இல்லையெனில் இங்கே படிக்கலாம்.)

4. அறிவு அறியாமை எனப்படும் இரண்டும் ஒன்றுக்கொன்று அப்பாற்பட்டவை; நசிகேதா, மெய்யறிவை நாடுகிற நீ ஆசைகளால் கவரப்படவில்லை என்பதை அறிந்தேன்.

5. அறிந்தோர் என்று தங்களை நினைத்துக் கொண்டு, அறியாமையின் நடுவில் இங்குமங்கும் குருடரைத் தொடரும் குருடர் போல உழல்கிறார்கள் அறிவற்றோர்.

6. நிலையானதென்று நினைத்துச் சிறுபிள்ளைத்தனமாகச் செல்வங்களையும் இன்பங்களையும் நாடுவோருக்கு பேரின்பப் பாதை தெரிவதில்லை. அவர்களுக்கு இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவிகளிலோ நிம்மதி கிடைக்காமல் மீண்டும் மீண்டும் என் வலையில் விழுவார்கள்.

ஆன்மாவை அறிந்தவர்

7. ஆன்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களோ அறிந்தவர்களோ மிகச்சிலரே; ஆன்மாவை அறியச் செய்யும் ஆசிரியரோ மிகச்சிலரினும் அரிதானவர்.

8. தன்னறிவைப் பலவாறு எண்ணிக்கொள்ளும் தாழ்ந்தோர் அதனைத் தெளிவாகச் சொல்ல இயலார்; ஆசிரியரல்லாதவரிடம் தன்னறிவின் விளக்கம் கிடைக்காது, ஏனெனில் தன்னறிவு அணுவினும் நுட்பமானது, விவாதித்து அறிநது கொள்ள முடியாதது.
    (இந்தப் பாடலுக்கான சமூக நோக்க விளக்கங்கள் மிக மிகச் சுவாரசியமானவை. 'தாழ்ந்தோர்' என்பது இங்கே 'அறிவில் குறைந்தோர்' அல்லது 'போலி அறிஞர்' என்ற பொருளில் வருவதாகவே நம்புகிறேன். என் கருத்தில், நிறையக் காவிகளும் அங்கிகளும் 'தாழ்ந்தோரில்' அடக்கம்)

9. உன்னுடைய மன உறுதியைத் தர்க்கங்களால் குலைக்கலாகாது; ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் விளக்கும் பொழுது தன்னறிவு தெளிவாகும். ஓ நசிகேதா! உன்னைப் போல் அறிவு விசாரணைப் புரிவோர்களைப் பெறுவோமாக.

10. நிலையான பிரம்மத்தை நானறிவேன்; நிலையற்றதை நாடுவோர் நிலையானதைப் பெற முடியாது. நசிகேதா! அதனால் நான் தீ வளர்த்து நிலையான பிரம்மத்தில் மனதை செலுத்தி, நிலையான அறிவைப் பெற்றவன்.
    (இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் 'தீ வளர்க்கும்' அக்னிஹோத்திரம் என்ற சடங்கு/பயிற்சியை, மனதை ஒருமைப்படுத்தும் சாதனமாகக் கொள்ளலாம்)

11. நசிகேதா! நீ அறிவுள்ளவன்! அண்டங்களின் ஆதாரமானவரும் நற்செயல்களுக்கு அளவில்லாத நற்பயன்கள் தருபவரும், பயமில்லாத அக்கரையில் இருப்பவரும், அனைவருக்கும் தஞ்சம் தருபவரும், வேதங்களால் போற்றப்படுபவருமான மகத்தானவரை அறிந்ததால் இன்பங்களையெல்லாம் மன உறுதியோடு நிராகரித்து விட்டாய்.
    ('பயமில்லாத எல்லை', இங்கே 'மரணபயமில்லாத' எமனுலகுக்கு அப்பாற்பட்ட கரையை/எல்லையைக் குறிக்கிறது; இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பவை தேவலோகம், பிரம்மலோகம் போன்ற பிறவாமைக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் இடங்களாகும். வடமொழிப் பாடல்களுக்குப் பொருள் சொல்லியிருக்கும் அனேகரும் இங்கே ஆணை மையப்படுத்தியே பொருள் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய சிற்றறிவுக்கு ஆண்/பெண் என்ற பாகுபாடு சொற்களிலிருந்து புரியவில்லை - சொற்களுக்கான வடமொழிப் பால் இலக்கணம் (லிங்கம்) சுத்தமாக நினைவில்லை. அதனால் நான் 'ர்' என்று பொதுவில் வைத்துவிட்டேன் :-)

12. மிகப் புராதனமானவரும், அண்டமெங்கும் நிறைந்தவரும், கண்களுக்குப் புலப்படாதவரும், இருண்ட குகையில் இருப்பவரும், அத்யாத்ம யோகத்தினால் மட்டுமே அறியக்கூடியவருமான தெய்வத்தை அறிந்தவர்கள், சுக துக்கங்களை நிரந்தரமாகக் கைவிடுவர்.
    (அத்யாத்ம யோகம் - தன்னை மையமாக வைத்து மனதைக் கட்டும் தீவிரத் தியானம்/யோகம்)

13. தன்னறிவான பிரம்மத்தை அறிந்து முழுமையாக ஏற்கும் மனிதர், நுட்பமான ஆன்மாவை அறிந்து அதனால் நிலையான இன்பத்தைப் பகுத்தறிந்து பேரின்பமடைவார்; அந்தப் பேரின்ப வாசல் நசிகேதனுக்காக திறக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

நசிகேதனின் கேள்வி

14. தர்ம-அதர்ம, முறையான-முறையற்ற, காரண-காரிய, நிகழ்ந்த-நிகழாத போன்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகத் தாங்கள் காண்பதை, எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்.

எமனின் பதில்

15. வேதங்களால் ஏற்கப்பட்டுப் போற்றப்படுவதும், தவங்களால் தீர்மானமாக மேற்கொள்ளப்படுவதும், பிரம்மசரியத்தைக் கடைபிடிப்பவர்கள் உரைப்பதுமான இலக்கினை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்: அது 'ஓம்' எனும் சொல்லாகும்.
    (பிரம்மசரியம் - மனதைக் கட்டி பிரம்ம அறிவைப் பெற முயலும் யோகம். பின்னாளில் திருமணமாகாதவரைக் குறிக்கும் சொல்லாகத் திரிந்தது விந்தை)

16. இந்தச் சொல்லே பிரம்மமாகும். இந்தச் சொல்லே மேன்மையானது. அழிவில்லாத இந்தச் சொல்லை அறிந்தவர், எதை விரும்பினாலும் அடைவார்.

17. இந்த ஆதாரமே மேன்மையானது; உயர்ந்தது; இந்த ஆதாரத்தை உணர்ந்து பெற்றவர்கள் பிரம்மலோகத்தில் போற்றப்படுவர்.
    ('ஆதாரம்' இங்கே 'ஓம்' என்ற சொல்லைக் குறிக்கிறது; ஓம் என்ற சொல்லே உயர்ந்த தஞ்சம் என்ற பொருளில் வருகிறது)

ஆன்மாவின் தன்மை

18. அறிந்தவர்களுக்கே புரியக்கூடியதான ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதில்லை; உருவாவதில்லை, உருவாக்குவதில்லை; பிறவாதது, நிலையானது, அனைத்துக்கும் அப்பாற்பட்டது, தொன்மையானது; உடல் அழியும் பொழுது கொல்லப்படாதது.
    ('அறிந்தவர்கள்' இங்கே தன்னறிவு பெற்றவரைக் குறிக்கும்)

19. கொல்வோர் தாம் கொல்வதாக எண்ணினாலும், கொல்லப்படுவோர் தாம் கொல்லப்படுவதாக எண்ணினாலும் - இருவருமே இதன் தன்மையை அறியாதவர்களாவர். இது கொல்லாது, கொல்லப்படாது.
    ('இது' ஆன்மாவைக் குறிக்கும்)

20. ஆன்மா நுட்பத்திலும் நுட்பமானது, மேன்மையினும் மேன்மையானது; மனித மனக்குகைக்குள் குடியிருப்பது. ஆசைகளையும் பற்றுக்களையும் துறந்துப் புலனடக்கி இதன் அமைதியை உணர்ந்தவர்கள், துயரத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
    ('துயரம்' இங்கே பிறவி அல்லது மரணத்தைக் குறிக்கிறது)

21. நகராமல் தொலைதூரம் போவதும், ஓய்வான நிலையிலும் எங்கும் நிறைவதும், மகிழ்வதும் மகிழாததுமான ஒளிமயமான தெய்வத்தை என்னையன்றி யாரறிவார்?
    ('தேவம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு ஒளி என்றும் பொருள். இரண்டாம் பாகப் பாடல்களில் தேவம் என்ற சொல் அடிக்கடி வருகிறது. 'என்னையன்றி யாரறிவார்?' என்பது இங்கே எமன் தன்னைத் தேர்ந்த ஆசிரியனாகத் தெரியப்படுத்திக் கொள்ளும் பொருளில் வருவதாக நினைக்கிறேன்)

22. எங்கும் நிறைந்த, மேன்மையான, உடலற்ற ஆன்மாவானது மாறி அழியும் உடல்களில் தங்கியிருப்பதை அறிவோர், துயரங்களிலிருந்து விடுபடுவார்.
    (சொற்செறிவு, பொருட்செறிவு நிறைந்த மிக அருமையான வடமொழிப் பாடல். 'மாறி அழியும் உடல்களில் தங்கியிருப்பது' சிந்திக்க வேண்டிய கருத்து)

23. ஆன்மாவைப் பிரசாரங்களினாலோ, விவாதங்களினாலோ, புத்தியினாலோ, கல்வியினாலோ அறியமுடியாது. தன்னைத் தீவிரமாகத் தேடுவோரிடம் ஆன்மா தன்னை வெளிக்காட்டும்.

24. கற்றவரானாலும் தீய வழிகளை ஒதுக்காத, புலன்களைக் கட்டாத, மனதை நிலைப்படுத்தாத எவரும் ஆன்மாவை அறிய முடியாது.
    (பெரும்பாலான காவிகளும் அங்கிகளும் கவனிக்க வேண்டியப் பாடலாகும். பாமரனுக்காக எழுதப்பட்டதாகத் தோன்றவில்லை)

25. பிராமணரையும் சத்திரியரையும் வெந்த அரிசியாகவும், மரணத்தை (என்னை) அதன் மேல் பதார்த்தமாகவும் கொள்ளும் ஆன்மாவை அறிவார் யார்?
    (ஆன்மா அனைத்தையும் கடந்தது என்ற பொருளில் வரும் பாடல். 'மரண தேவனான நானே ஆன்மாவுக்கு சாப்பாடு போல' என்கிறான் எமன். இந்தப் பாடல் எழுதப்பட்ட நாளில் பிறகுலங்கள் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். அல்லது பிற குலங்கள் ஒரு பொருட்டல்ல என்றும் எழுதப்பட்டிருக்கலாம் - வருந்தத்தக்கது. அரிசிச் சோறு எத்தனை தொன்மையானது என்றும் புரிகிறது.)


என் குறிப்பு:
    ரண்டாம் பகுதியைத் தமிழில் தர மிகவும் சிரமப்பட்டேன். மொழிச் சிக்கல் ஒரு புறம், கருத்துச் செறிவென்றாலும் தற்காலப் பொருத்தமின்மை இன்னொரு புறம் என்று திண்டாடினேன் என்பது உண்மை (பொருத்தமில்லை என்று தீர்மானிக்க நான் யார் என்று தோன்றினாலும், என் தனிப்பட்ட பிடிப்புகள் வேறு இடையில் தொந்தரவாக இருந்தன).

பாடல்களின் வரிசையை நிறைய மாற்றியுள்ளேன். சில பாடல்களை ஒதுக்கி விட்டேன். கவனித்திருப்பீர்கள். இருப்பினும், இரண்டாம் பகுதியின் அடிப்படைக் கருத்தைப் பிறழாமல் கொடுத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். மிகையாக விலகியிருந்தால் மன்னிக்கவும்.

மூன்றாம் பகுதி சற்றே எளிமையானது. இது போன்ற சிக்கல்கள் அதிகமில்லை. (நல்ல வேளை :-)


நசிகேத வெண்பா மூன்றாம் பகுதி