வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/09/10

தறிகெட்டால் நெறி தப்பும்


65
தறிமுறியின் தேர்ப்புரவித் தேரழியுந் துப்பு
நெறிமுறியின் தன்னறிவு நந்தும் - அறிந்துப்
புலனிறுக்கி இன்றே படிவார் பிறவா
நலமுறுவார் நாளை யவர்.

   றிகெட்டக் குதிரைகள் தேரினை ஒருங்கே இழுக்க இயலாமல், தேரும் வீரரும் கொற்றனும் அழியக் காரணமாகின்றன. நெறி தவறும் புலன்களால் தன்னறிவு அழியும். இதை அறிந்து, புலன்களைக் கட்டி அமைதியைக் கடைபிடிப்பவர்கள் பிறவாமை எனும் சிறப்பினை பின்னாளில்* பெறுவார்கள்.


துப்பு: காரணம்
நந்தும்: தேயும், அழியும்
படிவார்: அடங்குவார், அமைதியாவார்
*நாளை என்ற சொல்லுக்கு 'இறந்த பின்' என்றக் காரணப் பொருளும் உண்டு.    ன்னிடம் ஒரு பலகை இருக்கிறது.

சிந்தனைப் பலகை. மந்திரப் பலகை.

பலகையில் என்ன மந்திரம்? சொல்கிறேன்.

'புலன்களைக் கட்டிப் போட முடியுமா முடியாதா?' என்றக் கேள்வியும் வாதமும் அங்கி மற்றும் காவிகளின் மொத்த உரிமையென ஒதுக்கிவிட்டு, 'புலன்களைக் கட்டிப் போடுவது தேவையா?' என்று மட்டும் சிந்தித்தேன். அப்படி சிந்திக்கத் தொடங்கியதும், இரண்டு கிளைக்கேள்விகள் தோன்றின.
  1. புலன்களைக் கட்டிப் போடுவது என்றால் என்ன?
  2. புலன்களைக் கட்டிப் போடாவிட்டால் என்ன ஆகும்?

'புலன்களைக் கட்டிப் போடுவது என்றால் என்ன?' என்ற முதல் கிளைக் கேள்வியைப் பற்றிச் சிந்தித்ததும், உடனே இரண்டு உபகிளைக் கேள்விகள் தோன்றின.
  1. எடுத்த எடுப்பிலேயே கட்டிப் போட வேண்டுமா, அல்லது குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பின் கட்ட வேண்டுமா?
  2. சற்று இறுக்கிக் கட்டிவிட்டால் புலனே அழிந்து விடும் அபாயம் உண்டா? புலனைக் கட்டிய பலன் கிட்டுமா? புலனை வெட்டிய பலன் கிட்டுமா?

கேள்விகள் குட்டி போடும் வேகத்தைக் கண்டு அஞ்சி சிந்தனைப் பலகையை அழித்துவிட்டு சுவையாக ஏதாவது சமைத்துச் சாப்பிடலாம் என்று எழுந்தால், 'புலனைக் கட்டுவது பற்றியச் சிந்தனையே இவ்வளவு சிக்கலெனில் செயலில் இறங்குவது எத்தனைச் சிக்கல்?' என ஒரு கேள்வி விடாமல் துரத்தியது.

நம்முடைய தேவைகள் இவைதான் என்ற வரையறை இருந்தால் புலனைக் கட்டும் சிக்கலை சமாளிக்க முடியும் என்று தோன்றியது. தேவைகள் என்றதும் முக்கியத் தேவைகள், அவசியத் தேவைகள், அவசியத்துக்கும் அனாவசியத்துக்கும் இடைப்பட்டத் தேவைகள் என்று கேள்விகளைப் பிரித்துக்கொண்டே போனது சிந்தனைப் பலகை.

இப்போது புரிகிறதா பலகையின் மந்திரம்?

சிந்தனைப் பலகைக்குப் பதில் செயல் பலகை இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மந்திரம் கூட வேண்டாம், சாதாரணச் செயல் பலகை கூடப் போதும் என்று தோன்றியது.

விடுமா சிந்தனைப் பலகை?

'செயல் பலகை என்றால் எத்தகைய செயல் பலகை? உடனே செய்யக்கூடிய செயல் பலகையா, ஒத்திப்போடக்கூடிய செயல் பலகையா?' என்று சிந்தனைப் பலகை சுதாரித்தது.

என் சிந்தனை மீண்டும் 'முக்கியத் தேவை'க்கு தாவியது. வாழ்வில் எது முக்கியம்? முக்கியம் என்று எதை வைத்துத் தீர்மானிக்கிறோம்? முக்கியம் என்று தீர்மானிப்பதை உடனே செய்கிறோமா? உடனே செய்ய முடிந்தால் அது உண்மையிலேயே முக்கியமா? உடனே செய்யாவிட்டால் அது எப்படி முக்கியமாகும்?

சிந்தனைப் பலகைக்குள் உற்சாக ஊற்று. பலகையைப் பூட்டி வைத்தேன்.

செயலை ஒத்திப் போடுவது, நம்மில் பெரும்பாலானோர்க்குக் கைவந்தக் கலை. சிந்தனையை ஒத்திப் போடுவது எளிதல்ல. செயலாக்க முடியாதவர்களுக்கு சிந்தனை ஒரு வரம். சிந்தனைகள், கனவுகளின் உரம். கனவுகளோ செயலாக்க மறந்தோரின், துறந்தோரின், மறுப்போரின் அகதி முகாம். கனவுகளையும் கண்டு, சிந்தனையையும் வளர்த்து, அவற்றையும் மீறிச் செயலில் இறங்குவோர் வணக்கத்துக்குரிய வீரர்கள்.

வீரர்களுக்குச் சுதந்திரம் உண்டு. என் போல் பிறருக்குச் சிந்தனைப் பலகையுண்டு.

    'நாளை' என்ற சொல்லை, நம்பிக்கை தரும் சொல்லாகவே அறிந்திருக்கிறேன். எதிர்காலம் என்ற பொருளில், நாளை என்பதைக் கனவுகளின் கிடங்காகப் பொருள் கொண்டிருக்கிறேன். நீங்களும் என்னைப் போல் என்றால் அதிர்ச்சிக்குத் தயாராகுங்கள்.

வடமொழியில் நாளை என்பதற்கு எமன் என்று ஒரு பொருள். சற்றுத் தேடிய போது தமிழிலும் அப்படியே என்பதை அறிந்தேன். காலம் என்ற வடமொழி வேர்ச்சொல்லை ஒட்டிப் பிரிந்த கிளைச் சொற்களில் எமனுக்கு இடமிருப்பதை அறிந்தேன். நாள் என்ற தமிழ்ச் சொல்லுக்கும் எமன் என்று ஒரு பொருள் இருக்கிறது. நாளான் என்றால் எமன். நாளை என்றால் எமனுடைய என்று ஒரு பொருள். 'நாளை நமதே' என்று சொல்லச் சற்று அச்சமாக இருக்கிறதே?

'நாளைக்கும் எமனென்று பேர்' என்று தெரிந்த மெட்டில் தேவையில்லாத வரிகள் சுற்றிச்சுற்றி வர, இன்று என்பதற்குப் பொருள் தேடினேன். எமன் தொட்ட எந்தப் பொருளும் தென்படவில்லை. நிம்மதி. நாளையிலிருந்து இன்றை மட்டும் மனதில் கொள்ளவிருக்கிறேன்.

    "நசிகேதா, போர்க்களத்தில் இருக்கும் தேரின் பரிகளுக்கு ஒழுக்கம் தேவை. அந்த ஒழுக்கத்தை வழங்குவது தறியென்னும் கடிவாளம். தறி வழுகினால் என்ன ஆகும்? புரவிகளுக்கு யார் தன்னைக் கட்டியாள்பவர் என்பது தெரியாமல் போகும். ஒவ்வொரு புரவியும் ஒவ்வொரு திசையில் போகக்கூடும். ஒன்று அதிவேகமாகப் போக முனையும். இன்னொன்று சோம்பிக் கிடக்கும். மற்றொன்றோ சண்டித்தனம் செய்யும். பிரிதொன்றோ முரட்டுத்தனமாகச் செயல்படும். எஞ்சியிருப்பது குறுக்கு வழியில் தறியை இன்னும் அறுத்துக் கிளம்ப முனையும். அந்நிலையில் தேரோட்டியின் நிலை என்ன?" என்று கேட்டான் எமன்.

"தான் குதிரைகளைக் கட்டும் நிலையொழிந்து, குதிரைகளுக்குத் தான் கட்டுப்பட வேண்டிய நிலையில் இருப்பான். தேரோட்டியின் கடிவாளம் பயனற்றுப் போகும்" என்றான் நசிகேதன்.

"சரியாகச் சொன்னாய் நசிகேதா!" என்ற எமன் தொடர்ந்தான். "தறிகெட்டோடும் துரகங்கள் தேரோட்டிக்கும் தேருக்கும் துரோகமிழைக்கத் தொடங்கும். முதலில் அழிவது தேரோட்டி. பிறகு தேருக்கு ஆபத்து. தேர்வீரருக்கும் ஆபத்து. புரவிகளுக்கும் அழிவேற்படும். தேரழியும். சீரழியும்" என்றான்.

"தேர்வீரரின் நிலை?"

"இன்னொரு தேர், இன்னொரு தேரோட்டி, இன்னொரு வகைப் புரவிகள் என்று தேர்வீரர் தொடர்ந்து பயணம் செய்யலாம். ஆனால் போரில் கவனம் செலுத்த முடியாது போக நேரிடும்".

நசிகேதன் சிறிது அமைதியாக இருந்தான். பிறகு, "எமனாரே! உங்கள் விளக்கத்துக்கு நன்றி. தேர்வீரனின் குறிக்கோள் போரில் வெற்றி பெறுவதாகும். தேரோட்டியின் நோக்கம் தேர்வீரனின் வெற்றிக்கு வழி செய்வதாக இருக்க வேண்டும். கடிவாளத்தின் நோக்கம் குதிரைகளைக் கட்டுவதாக இருக்க வேண்டும். குதிரைகளின் கடமை கடிவாளத்துக்கும் தேரோட்டியின் இழுப்புக்கும் கட்டுப்பட்டு செயலாற்றுவதாகும். இவை அனைத்திலும் கட்டுப்பாடு என்ற ஒழுக்கம் பரவியிருக்க வேண்டும்" என்றான்.

"மிக நன்றாகப் புரிந்து கொண்டாய் என் மாணவனே!" என்றான் எமன். "கட்டுப்பாடும் ஒழுக்கமும் தேவையென்றால் கண்மூடித்தனம் அகல வேண்டும். தேரோட்டி விழிப்புடன் இருந்தால் மட்டுமே குதிரைகளைக் கட்ட முடியும். தேரோட்டியின் சிந்தனையிலும் செயலிலும் தெளிவு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குதிரைகளை நேர்வழியிலோ தேவைக்கேற்றபடியோ செலுத்த இயலாது போகும். தேர்வீரரின் விழிப்புணர்வும் தேரோட்டியைப் போன்றதே. போரில் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வெற்றிக்கு தடையாக இருக்கும் எதையும் முறித்தோ ஒதுக்கியோ, தொடர்ந்து வெற்றியை நாட வேண்டும். தேரோட்டியால் தேர்வீரரும் தேர்வீரரால் தேரோட்டியும் பயனடைவது இவ்வாறே" என்றான்.

"மிக்க நன்றி ஐயா!" என்றான் நசிகேதன். "மானிடரும் தன்னறிவால் ஐம்புலன்களைக் கட்டியாள வேண்டும். தன்னறிவு, ஆன்மாவை பிறவிப் போரில் வெற்றி பெறச் செய்யும். இல்லையெனில் ஆன்மா இன்னொரு உடலில் கலந்து பிறவிப் போரைத் தொடரும். புலன்களின் நோக்கம், தன்னறிவு வளரவும் செழிக்கவும் நேர்வழியில் செல்ல உதவுவதும் ஆகும். அன்றிப் புலன்களினால் யாதொரு பலனும் இல்லை. புலன்கள் அழிவன. அடங்காத புலன்களினால் தன்னறிவும் ஒடுங்கும். அழியாத ஆன்மா இன்னொரு புலன்கட்டைத் தேடி ஓடும்" என்றான்.

"நன்று. அடங்கியமையும் புலன்களினால் தன்னறிவு செழித்து, ஆன்மாவை பிறவாமை எனும் வெற்றி பெறச் செய்யும்" என்றான் எமன். "தேரோட்டியின் கதியும் குதிரைகளின் கதியும் புரிந்ததா நசிகேதா?".

"புரிந்தது ஆசிரியரே! ஆனால் வேறு கேள்விகள் தோன்றுகின்றன" என்றான்.

"கேள்"

"தன்னறிவு ஆன்மாவின் தேரோட்டி என்பதை அறிந்து கொண்டேன். ஆன்மா என்பது எங்கும் பரவியிருப்பது என்றீர்கள். புலனடக்கித் தன்னறிவு வளர்த்தால் ஆன்மா பிறவிப் போரில் வென்று பிறவாமைப் பேறு பெறும் என்றீர்கள். வெற்றி பெற்ற ஆன்மாவுக்கு என்ன ஆகும்? தன்னறிவு வளராத நிலையில் ஆன்மாவுக்கு பிறவாமை எனும் வெற்றி பெற வழியே இல்லையா? அத்தகைய ஆன்மாக்களும் பரந்த ஆன்மாவின் பகுதி தானே?"

எமன் பதில் சொல்ல முனைகையில் நசிகேதன் தடுத்தான். "மன்னிக்க வேண்டும் ஆசானே.. என் கேள்விகள் முடியவில்லை. மனிதன் இறக்கும் பொழுது உடல் எனும் கூடு, அதாவது ஐம்புலன்கள் அல்லது உணர்வுகளால் இயங்கக்கூடிய எலும்பும் சதையும் சேர்ந்த கூடு, அழிகிறது. மூச்சு நின்றாலும் உயிர்ப்பயணம் ஆன்மா என்ற வடிவில் தொடர்கிறது. இறந்த மனிதனின் உயிர் அல்லது ஆன்மா, அம்மனிதனின் தன்னறிவுச் செறிவால் பிறவாமை பெறும் என்று எவ்வாறு அறியும்? அல்லது அம்மனிதனின் தன்னறிவுக் குறையால் மீண்டும் இன்னொரு உடலை அல்லது கூட்டைத் தேட வேண்டும் என்பதை எவ்வாறு அறியும்? பிறவாத ஆன்மாக்களுக்கு என்று ஒரு இடமும், பிறக்கும் ஆன்மாக்களுக்கு என்று தனி இடமும் இருக்கிறதா? தேர் உருவகம் ஓரளவுக்குத் தெளிவூட்டினாலும் இந்தக் கேள்விகள் தொடர்ந்து வாட்டுகின்றனவே?" என்றான்.

"முடிந்ததா?" என்ற எமன் வியந்தான். நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

9 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

வீரர்களுக்கு சுதந்திரம் மற்றவர்களுக்கு சிந்தனைப் பலகை .. சிரிப்போடு கூடிய சீரிய சிந்தனை...

இன்று பாரதியின் நினைவு நாளில் விடுதலை நினைவோடு அவனது வரியொன்றும் நினைவு தட்டியது..

காவித் துணி வேண்டா கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரம நிலையெய்துதற்கே…

கடைசியில் நசிகேதனின் சிலிர்க்க வைக்கும் கேள்விக்கு எமனின் பதில் ஆவலோடு…….

meenakshi சொன்னது…

மிகவும் அருமையான பதிவு அப்பாதுரை. வாழ்த்துக்கள்!

வெண்பாவின் இனிமையை விளக்கத்தை கொண்டுதான் சுவைக்க முடிந்தது.

நாளை என்ற சொல்லின் இந்த விளக்கம் பயங்கரமாக இருக்கிறது. 'இதுவும் கடந்து போகும்' என்று இருப்பதே நாளை வழி பிறக்கும் என்ற நம்பிக்கையில்தானே. 'நாளை நமதாகும்' என்ற நம்பிக்கை தரும் பொன் மொழிகள் எல்லாம் வெறும் பித்தளை தானா! 'அவளுக்கும் தமிழ் என்று பேர்' என்பது போய் 'நாளைக்கும் எமன் என்று பேர்' என்று டி.எம்.எஸ். பாடுவது போல் காதில் ஒலிக்கிறதே! அட ராமா! :(

மானிடரின் தன்னறிவு பற்றிய விழிப்புணர்வுக்கு தேர் வீரன் மற்றும் தேரோட்டியின் வழியான விளக்கங்கள் பிரமாதம்.

//மனிதன் இறக்கும் பொழுது உடல் எனும் கூடு, அதாவது ஐம்புலன்கள் அல்லது உணர்வுகளால் இயங்கக்கூடிய எலும்பும் சதையும் சேர்ந்த கூடு, அழிகிறது. மூச்சு நின்றாலும் உயிர்ப்பயணம் ஆன்மா என்ற வடிவில் தொடர்கிறது. இறந்த மனிதனின் உயிர் அல்லது ஆன்மா, அம்மனிதனின் தன்னறிவுச் செறிவால் பிறவாமை பெறும் என்று எவ்வாறு அறியும்? அல்லது அம்மனிதனின் தன்னறிவுக் குறையால் மீண்டும் இன்னொரு உடலை அல்லது கூட்டைத் தேட வேண்டும் என்பதை எவ்வாறு அறியும்?//

எப்பேற்பட்ட கேள்வி இது! மனம் மலைத்து விட்டது. உடல் சிலிர்த்து விட்டது. பதிலை அறிய மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Santhini சொன்னது…

நீங்கள் எழுதப் போகிறீர்கள் என்பது தெரியாமல் போய்விட்டது. பரவாயில்லை. மூன்று பகுதிகளையும் படித்து விட்டேன். நாளை என்பதன் பொருள் - எமன் என்பது மிகவும் பொருத்தம். இது மொழியின் செறிவை உணர்த்தும் மற்றுமொரு வியப்பான செய்தி எனக்கு.

Santhini சொன்னது…

"நானும் என் கடவுளும்" என்கிற பயமுறுத்தும் புனை பெயரிலிருந்து என்னுடைய எப்போதுமிருக்கும் பெயரான, சாந்தினி க்கு மாறிவிட்டேன். பழைய ஆள் புதிய பெயரில்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

தேரோட்டி சரியில்லை யென்றால் எதுவுமே சரியாகாது. கீதோபதேசத்தில் கண்ணனைத் தேரோட்டியாக வைத்து உபதேசம் செய்த காரணம் இப்போ புரிகிறது! சாதாரண மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டுபோகிறவன் தேரோட்டி. ரொம்ப அருமையா ஆரமிச்சிருக்கீங்க இந்த பாகம்.

ஸ்ரீராம். சொன்னது…

வாழ்க நசிகேதன்... எங்கள் சார்பில் தோன்றிய / தோன்றாத அத்தனைக் கேள்விகளையும் கேட்டு பதில் பெற்று விடுகிறான்...

geetha santhanam சொன்னது…

வெண்பாவில் கலக்குகிறீர்கள். கோனார் உரையைத் தேட வேண்டும் போலும்!!. வாழ்த்துக்கள். நாளை என்றால் எமனைக் குறிக்குமா?இனிமேலாவது நாளையைப் பார்க்க 'பயந்து' இன்றே எல்லா வேலையும் செய்ய முனைவோம்.

Thangavel Manickam சொன்னது…

என்ன ஒரு எழுத்தறிவு. கண்ணதாசனின் கீதையைப் படிக்கிறாற்போல இருக்கிறது உங்களின் பதிவு.

உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. நசிகேதனும்,எமனும் வாழ்வியல் நெறிமுறைகளுக்கான தத்துவ விளக்கம். அருமை.

அப்பாதுரை சொன்னது…

மிகவும் நன்றி, கோவை எம் தங்கவேல்.