நசிகேத வெண்பாவைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கும், பின்னூட்டத்திலும் மின்னஞ்சலிலும் கருத்தும் ஆலோசனைகளும் தெரிவிப்பவர்களுக்கும் நன்றி.
சில ஆலோசனைகள் செயல்படுத்தச் சுலபமாக(?) இருந்தன - அன்பர் சிவ.சி.மா. ஜானகிராமனின் followers widget போல. வேறு சில, சற்றே சிக்கலானவை. அவற்றுள் ஒன்று: வடமொழி வடிவத்தையும் உடன் வெளியிட்டால் படிப்பவர்களுக்கு உதவியாக இருக்குமே?
கடோபனிஷத வடமொழி நூலின் வரிக்கு வரி தமிழ்ப் பெயர்ப்பாக நசிகேத வெண்பாவை எழுத விரும்பவில்லை. இதை என் ஆணவமாகக் கருதவேண்டாமென்றுப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சில காரணங்களை முன்னுரையில் சொல்லியிருந்தாலும், இங்கே இன்னும் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்: இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கத் தூண்டும் என்ற அச்சம்; இன்றைய சூழலுக்குச் சில வடமொழிப் பாடல்கள் ஒத்துவராதோ என்ற என் ஐயம்; சில பாடல்களையாவது தமிழில் வடமொழியை விட நன்றாக எழுதலாமே என்ற எண்ணம் - நப்பாசை; வடமொழிப் பாடல்கள் போல் சூட்சுமமாக எனக்கு எழுத வரவில்லை; சடுதியில் தத்துவ விவாதங்களாக மாறி விடும் வடமொழிப் பாடல்கள், கோர்வையானக் கதை சொல்லப் பொருந்தி வரவில்லை என்று நான் எண்ணியது; கடைசியாக, தழுவினாலும் தமிழில் தனியாக எழுதிப் பார்ப்போமே என்ற எண்ணமும் ஒரு காரணம்.
எனினும், தொடர்ந்து வந்த கோரிக்கைகளைப் புறக்கணிக்க விரும்பவில்லை. 'வடமொழி வடிவத்தையும் படிக்க வாசகருக்கு ஒரு வாய்ப்பு என்றே கருதி எழுதுங்கள்; அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை வாசகர்களே தீர்மானிக்கட்டுமே?' என்ற கருத்து... நிறையவே உறைத்தது :)
வடமொழி வடிவின் தமிழ் பெயர்ப்பை அந்தந்தப் பகுதியின் இறுதியில் தனிப்பதிவாக எழுதுகிறேன். மூன்றாம் பகுதியைத் தொடங்குமுன் முதல் இரண்டு பகுதிகளின் தமிழ்ப் பெயர்ப்பைப் பதிவிடுகிறேன்.
தொடர்வது நசிகேத வெண்பா முதல் பகுதியின் மூல வடிவம். கடோவிலிருந்து, என்னாலியன்ற வரை, வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். ஒன்றிரண்டு பாடல்களுக்கு விளக்கமும் சேர்த்திருக்கிறேன்.
1. சொர்க்கப் பதவி வேண்டி, தன்னுடைய உடைமைகளான செல்வம், அறிவு, வேத ஞானம் அனைத்தையும் விஸ்வஜித் யாகத்தில் தானம் கொடுத்தான், உத்தாலகன் எனும் வாஜஸ்ரவசு. அவனுடைய மகனின் பெயர் நசிகேதன்.
2. தானப் பசுக்களைப் பார்த்தவன் மனதில், சிறு பிள்ளையானாலும், அக்கறையும் சிந்தனையும் உண்டானது.
3. நீரைப் பருகிமுடித்த, புல்லைத் தின்றுமுடித்த, பாலைச் சுரந்துமுடித்த, கன்றுகளை ஈன்றுமுடித்த இத்தகைய பசுக்களைத் தானம் வழங்குவோர் செல்லும் இடங்களில், மகிழ்ச்சி இராது.
4. அவன் "என்னை யாருக்கு தானம் வழங்குவீர்?" என்று தந்தையிடம் கேட்டான். இரண்டாவது மூன்றாவது முறையாகக் கேட்டான். தந்தை அவனிடம் சொன்னான்: "உன்னை மரணத்துக்குத் தந்தேன்".
5. பலருக்கு முன்னாலும் பலருக்கு இடைப்பட்டும் இருக்கும் என்னால் எமனுக்கு இன்று என்ன பயன்?
6. முன்னோர்களையும் அவர்கள் வழி வந்தோரையும் கவனிக்கும் பொழுது, மனிதம் சோளப்பயிர் போல் வளர்ந்து அழிந்து வளரும் என்று தெளிவாகிறது
7. வீட்டுக்குள் விருந்தாக நுழையும் பிராமணர் எரியும் நெருப்பைப் போன்றவர்; வைவஸ்வதா, தண்ணீர் எடுத்து வா
(வைவஸ்வதன் எமன் வீட்டின் காவலனாக இருக்கலாம்)
8. பிராமணனை வீட்டில் பட்டினி கிடக்க வைக்கும் அறிவில்லாத அற்பனின் பிள்ளைகள், பசுக்கள், மதப்பற்று, கொடைப்பலன், உடைமைகள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அத்தனையும் அழிந்துவிடும்
9. பிராமணரே, உமக்கென் வணக்கங்கள். என் வீட்டில் மூன்று நாள் இரவு பகல் உண்ணாமல் கிடக்க நேர்ந்ததற்கு பிராயசித்தமாக ஒரு இரவுக்கு ஒன்றென மூன்று வரங்களைப் பெற்றுக்கொண்டு எனக்கு நிம்மதியைத் தாருங்கள்.
10. காலரே! என்னை நீங்கள் திருப்பி அனுப்பும் பொழுது என் தந்தை கௌதமர் மனதில் தெளிவும் மகிழ்ச்சியும் கொண்டு என் மேல் கோபமில்லாமல் வரவேற்கட்டும்; இதுவே நான் கேட்கும் முதல் வரம்.
11. அருண குலத்தில் வந்த உத்தாலகன், உன்னை முன்போல் அடையாளம் கண்டு அன்புடன் ஏற்றுக்கொள்வார்; என் அருளால் மரணத்தின் வாயிலிருந்து மீண்டு வந்திருக்கும் உன்னிடம் கோபம் கொள்ளாதிருப்பார்; வரும் இரவுகளில் நிம்மதியாக உறங்குவார்.
12. சொர்க்கத்தில் பயம் என்பது இம்மியும் இல்லை; நீங்கள் இல்லாத அவ்விடத்தில் அழிவின் பயம் இல்லை; பசி, தாகம், துயரம் எல்லாம் கடந்த மகிழ்ச்சியான இடமாகும் சொர்க்கம்.
13. காலரே! சொர்க்கவாசிகளுக்கு மரணமில்லை. சொர்க்க வேள்வியை நீங்கள் அறிவீர்கள். எதையும் அக்கறைடன் கற்கும் எனக்கு அந்த வேள்விமுறையைக் கற்றுக் கொடுங்கள். இதுவே நான் கேட்கும் இரண்டாவது வரம்.
14. நசிகேதா! அண்டங்களுக்கு அப்பாற்பட்டதும் உலகங்களின் ஆதார நிலையுமான வேள்வித் தீயானது, ஒரு குகைக்குள் முடங்கியது போல் மறைந்திருக்கிறது; என்னிடம் மட்டுமே பெறக்கூடிய அந்த வேள்வி அறிவை நான் உனக்கு வழங்குவேன்.
15. அண்டங்களின் ஆதார அம்சம், அதை உணரச் செய்யும் வேள்வி, வேள்விக்கானப் பீடத்தை எத்தனை செங்கற்களைக் கொண்டு எந்த முறையில் அமைக்க வேண்டும், எப்படித் தீயை வளர்ப்பது, எனும் விவரங்களை, தான் உரைத்தவாறே நசிகேதன் திரும்பச் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த எமன், மேலும் சொன்னான்.
16. "இன்னொரு வரமும் தருகிறேன்; இனி இந்த வேள்வி உன் பெயரால் நசிகேதம் என்று வழங்கப் பெறும்" என்று மகிழ்ச்சியுடன் சொன்ன உயர்ந்த மனதுடைய எமன், "பல வண்ணமும் வடிவமும் கொண்ட இந்தச் சங்கிலியை ஆபரணமாகப் பெற்றுக் கொள்" என்றான்.
17. மூன்று பேணி, மூன்று பற்றி, மூன்று உணர்ந்து, பிரம்மத்திலிருந்து உருவான இந்தத் தீயை அறிந்து மூன்று புரிவோர், பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்ட அமைதியான நிலையை அடைவர்
(மூன்று உறவுகளைப் பேணி: மாதா, பிதா, குரு | மூன்று கடமைகளைப் பற்றி: தியாகம், தர்மம் அல்லது கொடை, தவம் அல்லது தீவிர எளிமை | மூன்று உண்மைகளை உணர்ந்து: கடவுள்-ஆன்மா-உடல் | மூன்று முறை நசிகேத வேள்வியைப் புரிந்து)
18. மூன்றை அறிந்து நசிகேத வேள்வியை மூன்று முறை புரிந்தவர், உடலழிவதற்கு முன்பே மரணச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, துயரங்களற்ற பேருலக வாழ்வைப் பெறுவார்.
(செங்கல், எண்ணிக்கை, அடுக்கிப் பீடம் அமைக்கும் முறை என மூன்றை அறிந்து)
19. நசிகேதா! பேருலகத்துக்கான வேள்வித் தீயும் வேள்வி முறையும் அறிந்து கொண்டாய். மக்கள் இனி இந்த வேள்வி உன் பெயரிலேயே அழைப்பார்கள். உன்னுடைய மூன்றாவது வரத்தை கேள்.
20. ஒரு சந்தேகம். மரணத்துக்குப் பின்னும் மனிதன் "இருக்கிறான்" என்கிறார்கள்; சிலரோ "இல்லை" என்கிறார்கள். இந்த சந்தேகத் தீர்வுக்கான அறிவை உங்களிடம் கற்றுப் பெற விரும்புகிறேன். இதுவே என் மூன்றாவது வரம்.
21. நசிகேதா! அது தேவர்களும் தெளிவில்லாமல் சந்தேகப்படுவதாகும்; நுண்மையானது. என்னை வற்புறுத்தாதே. வேறு வரம் கேள், இதை விட்டுக்கொடு.
22. தேவர்களும் சந்தேகப்படுவது, புரியாதது என்று நீங்களே சொல்கிறீர்கள். (எனில்) இதை விளக்க உங்களை விடச் சிறந்தவர் வேறொருவர் இல்லை; இந்த வரத்தை விட விரும்பத்தக்கது வேறொன்று இல்லை.
23. நூறாண்டுகள் வாழும் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் கேள்; தேவையான பசுக்களும், குதிரைகளும், யானைகளும் கேள்; எத்தனை பொன் வேண்டுமோ கேள்; மிகப்பரந்த அரசாங்கத்துக்கு அதிபதியாக எத்தனை வேனிற்காலம் வேண்டுமானாலும் வாழ வரங்கேள்.
24. இதற்கு இணையான வேறு வரம் தோன்றினால் அதையும் கேள். செல்வமும் நீண்ட ஆயுளும் பேரரசப் பதவியும் கேள். நசிகேதா! உலகமே உன்னை விரும்பச் (புகழ) செய்கிறேன்.
25. பூவுலகில் பெறற்கரியவை அத்தனையும் விரும்பிக் கேள். மனிதரால் பெறவே முடியாத ஒளி வீசும் தேர்களும், இசைபாடி நடனமாடிச் சேவை செய்யும் அழகான இந்தப் பெண்களும் உனதாகட்டும். மரணத்தைப் பற்றிக் கேட்காதே.
26. தேரும் பாவையரும் செல்வமும் உங்களிடமே இருக்கட்டும். இவை நிலையற்றவை. மனித சக்தியை வற்றச் செய்பவை. அனைத்தையும் முடிப்பவரே! எத்தனை காலம் வாழ்ந்தாலும் வாழ்நாள் குறுகியதே.
(வடமொழியின் மிக அருமையான பாடல். ஜீவிதம் அல்பம் - வாழ்க்கை எளிதில் முடியக்கூடியது, குறுகியது என்ற பொருளை மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. நசிகேதன் எமனை 'முடிப்பவரே' என்று அழைப்பதற்கு இரண்டு காரணங்கள்: 1) மரண தேவன் முடிவுக்கு அதிபதி, 2) நசிகேதன் கேட்டதை செய்து முடிக்கக் கூடியவர் என்பதால் முகத்துதி. 'அந்தக' என்ற வடமொழிச் சொல் போல் (ஆங்கில terminator) 'முடிப்பவன்' என்பதற்கு தமிழில் தனிச்சொல் உண்டா தெரியவில்லை. ஒரு வேளை 'முடிப்பவன்' தானோ?)
27. செல்வங்களினால் மனிதன் நிறைவடைவதில்லை. உங்களை சந்தித்ததே செல்வமாகும். நீங்கள் ஆளும் வரையில் நாங்கள் உயிர்வாழ முடியும். அதனால், நான் கேட்ட வரமே உகந்தது.
(இறந்தவனுக்கு - இறக்கும் தன்மையுடைய மனிதனுக்கு - எத்தனை செல்வமிருந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை. எமன் பார்வை பட்ட கணத்தில் வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்று பொருள்)
28. அழிவற்ற நிலை பற்றித் தெரிந்த பின், அழியக்கூடியதான மனித அழகு, செல்வம், கலை, இன்பம், ஆயுள் போன்றவற்றை யார் நாடுவார்? நீண்ட ஆயுளும் அழியக்கூடியதே எனில் எத்தனை இன்பம் பெற முடியும்?
29. மரணத்திற்கு அப்பாற்பட்ட நிலை பற்றிய சந்தேகத்தை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும். காலரே! நுட்பமான இந்த அறிவைத் தவிர நசிகேதன் வேறு வரம் எதையும் விரும்பவில்லை.
கடோபனிஷது - இரண்டாம் பகுதி ►
நசிகேத வெண்பா மூன்றாம் பகுதி ►