வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/07/12

தன்னறிவு பெற்றவருக்கு அழிவில்லை


60
நாடி அடங்குமுன் நுட்பத்தை உள்ளகப்
பாடியிற் கண்டுப் பெறவேண்டும் - நேடியவர்
தீயிற் கலந்ததும் தீயாம்போல் தன்னறிவால்
வீயிற் புலம்பெறு வார்.

   யிர்மூச்சு இருக்கையிலே, மகத்தான ஆன்மாவை உள்மனதுள் தேடி அறிய வேண்டும். குறிக்கோளோடுத் தன்னறிவைத் தேடியறிந்தவர்கள், தீயிலிட்டவைத் தீயாகிக் கலப்பது போல், ஆன்மாவுடன் கலந்துத் தாமும் பிறப்பிறப்பற்ற மேன்மை அடைகிறார்கள் (என்றான் எமன்).


 நாடி: உயிர்துடிப்பு, (முதுமை அல்லது சோர்வின் காரணமாக விருப்பம் அடங்குமுன் என்றும் பொருள் கொள்ளலாம்)
 பாடி: இடம் (உள்ளகப் பாடி: ஆழ்மனமென்னும் இடம்)
 நேடியவர்: நோக்கத்தோடு தேடியவர்
 வீயில்: பிறப்பு இறப்பு அற்ற | (வீ+இல்) | வீ என்ற சொல்லுக்கு, தொடக்கம், முடிவு, பிறப்பு, இறப்பு என்று பொருளுண்டு. வீ என்ற ஓரெழுத்து ஒருமைச் சொல்லில் இருமைகள் அடங்கியிருப்பது உன்னச்சுவை
 புலம்: மேன்மை


['..it is a puzzling thing.. the truth knocks on the door and you say, "go away, I'm looking for the truth," and so it goes away.. puzzling..' - robert pirsig (zen and the art of moma)]

    'நேரத்தோடு செய்வதற்கும்' 'முறையாகச் செய்வதற்கும்' வேறுபாடு உண்டா?

   எடுத்த காரியத்தைக் குறித்த நேரத்தில் முடிப்பது 'நேரத்தோடு' செய்வதாகும். செய்ய வேண்டிய விதத்தில் செவ்வனே செய்வது, 'முறையாக'ச் செய்வதாகும். இரண்டும் சொல்-பொருள் என்ற பார்வையில் வேறானாலும், செயல்-பொருள் என்ற அளவில் ஒன்றே.

   காலம் கடந்த வேகமும் ஞானமும் வீண். காலத்தில் நடந்த கண்மூடித்தனமோ, தீராப் பெரும் துயரம் தருகிறது. ஒன்று நன்றெனில் அன்றே முடிக்க வேண்டும். நேரத்தோடு செய்யவேண்டியதை முறையாகச் செய்ய வேண்டும் என்பதும், முறையானதை நேரத்தோடு செய்யவேண்டும் என்பதுமே இங்கே செய்தி.

   முறையாகச் செய்ய வேண்டும் என்பதற்காக நேரத்தை வீணாக்குவதோ, நேரத்தோடு செய்ய வேண்டும் என்பதற்காக முறையற்று நடப்பதோ, குறுக்கு வழிகளில் செல்வதோ, அறிவின்மையாகும். அதைவிட மூடத்தனம் ஒன்றுண்டு: 'காலமோ நேரமோ கனிந்து வரவில்லை, இருக்கும் நேரத்தில் இயலாது' என்று சாக்கு சொல்லிச் செயலில் இறங்காமல் சோம்பி ஓய்வது. உளவியல் இதை நோய் என்கிறது. இத்தகைய நிலையைக் கண்டறிந்து அதற்கேற்றத் தீர்வுகளை வழங்கும் முறைகளை, சமீப உளவியல் மற்றும் மேலாண்மை ஆய்வுகள் சொல்கின்றன. இன்றைய 'அதிவேக' வாழ்க்கை முறையில் இத்தகைய 'ஒத்திப்போடும்' நோய் இருப்பதே முரணாகத் தோன்றினாலும், நம்மில் பெரும்பான்மை இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக உளவியல் சொல்கிறது. தனிமனிதரின் நோயினால் ஒரு தலைமுறையே dysfunctionalஆக இயங்கும் சாத்தியம் அபாயகரமானது. தனிமனிதரோ, குழுவோ, நிர்வாகமோ யாராயினும் - 'காலம் கனியட்டும் என்று செயலிழக்கும்' நோயில் வாடுவோர் - உளவியல் மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் பெறுவது நல்லது.

   'வாழ்வில் எது முக்கியம்?' என்பதை அறிந்து கொள்வது, இளமையில் பெற வேண்டிய பக்குவங்களில் ஒன்றாகும். அந்தப் பக்குவம் இருந்தால், நேரத்தோடு செய்ய வேண்டியதை முறையாகவும், முறையாகச் செய்யவேண்டியதை நேரத்தோடும், செய்யமுடியும் என்று தோன்றுகிறது.

['..கொக்கைப் பார்த்துக் கற்றுக்கொள்ளு வாழ்க்கை என்ன என்பதை..' - கண்ணதாசன்]

    மன் தொடர்ந்தான். "நசிகேதா, ஆன்மாவையும் தன்னறிவையும் பற்றிச் சொல்லியிருக்கிறேன். தன்னறிவைத் தேடிப் பெறுவதென்பது அவரவர் சேர வேண்டிய இலக்கு. தானே வகுத்துப் போக வேண்டிய பாதை. மனிதருக்கு உயிர்த்துடிப்பு இயங்கும்வரை தன்னறிவைத் தேடிப்பெற வாய்ப்பும் நேரமும் உண்டு. உயிர்த்துடிப்பு அடங்குமுன்னே தன்னறிவைத் தேடிப் பெறவேண்டும்.

    மனிதரின் வாழ்வில் எத்தனையோ உலகாயதப் பாதைகள் உள்ளன; சேரும் இடமற்றப் பாதைகள் இவை. மனதைத் துருவாக்கும் சாதனைகள் மற்றும் சோதனைகளுக்கான தூண்டில்கள் இவை. இயல்பாகவே குறிக்கோளோடும் தன்னுணர்வோடும் இயங்கும் மனிதரும், இவை இடையூறென அறியாமல் தங்கள் இலக்கிலிருந்து விலகிச் சுழன்றுப் பின்னர் வாடுகிறார்கள். குறிக்கோள் அறியாத மானிடரோ, வீண் கனவுகளிலும் கண்மூடி மாயையிலும் சிக்கித் துன்புறுகிறார்கள். விதி, தலையெழுத்து, கொடுப்பினை, பாவம் எனப் பலவகைக் கேலிக்குரியக் காரணங்களால் தங்கள் துன்பங்களை நியமப்படுத்துகிறார்கள். வாழ்வில் 'குறிக்கோள்' என்றால் என்னவென்றே அறியாத இவர்களால், தன்னறிவைத் தேடுவது இயலாத செயல். எத்தனை காலம் வாழ்ந்தாலும், நாடியது அடங்கினாலும் இவர்கள் நாடியது அடையார்.

    'பிறப்பிறப்பற்ற நிலை உண்டா?' என்றும் 'ஆன்மாவைத் தேடிப் பெறத்தான் வேண்டுமா?' என்றும் முன்பு கேட்டாய். உன் கேள்விகளுக்குப் பதிலாக, ஆன்மாவைத் தேடியறிந்தவரின் நிலையைப் பற்றிச் சொல்கிறேன், கேள்.

    உன் தந்தை புரிந்த வேள்வியைப் பார்த்தாய் அல்லவா? வேள்வித்தீயில் அவரிட்டவை அனைத்தும் தீயில் கலந்து தாமும் பற்றி எரிந்தன அல்லவா? தீயானது பற்றியதை ஏற்கும் தன்மையது. ஆன்மாவும் தீயைப் போன்றது. தீயின் ஒளியைப் போன்றது. தன்னறிவைத் தேடிப் பெற்றவர்கள், ஆன்மா எனும் தீயுடன் கலக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆன்மாவைப் போல் நிலையாக ஒளி வீசுகிறார்கள். பிறப்பிறப்பற்ற நிலையைக் கடக்கிறார்கள்" என்றான்.

    தன்னறிவு பற்றியும் ஆன்மா பற்றியும் விளக்கியதற்கு எமனுக்கு நன்றி சொன்ன நசிகேதன், தன் மனதில் தோன்றியக் கேள்வியை முன்வைத்தான்.

9 கருத்துகள்:

meenakshi சொன்னது…

விளக்கம் நன்று. //நாடியது அடங்கினாலும் இவர்கள் நாடியது அடையார்.// அருமையான வரி.

'வீ'' என்ற எழுத்துக்கு அர்த்தம் உண்டென்பதையே இப்பொழுதான் தெரிந்து கொண்டேன். அதன் சிறப்பு ஆச்சரியமாக இருக்கிறது.

பத்மநாபன் சொன்னது…

தன்னறிவும் ஆன்மா வும் தேடா /அறியா வாழ்க்கை, காரணமின்றி உண்டு உறங்கி கண்டு களித்து கழியும் வாழ்க்கை வீண் என எமன் உணர்த்துகிறான்..

உலகாயதத்தில் கற்றுக் கொள்ளும் இந்த மேலாண்மை பாடங்கள் எல்லாம் அவைதாண்டிய ’மேல்’படிப்புக்காகத்தானோ...

வேள்வித் தீ எப்படி இட்டதனைத்தும் ஏற்று எல்லாவற்றையும் தானாக மாற்றி பின் வெளியில் கரைக்கிறதோ அது போல் ஆன்மா எனும் உள் கங்கினை அறிய அறிய கரைதல் தொடங்கி கரை சேர்தல் ஆகிறது ...

நசிகேதனின் அடுத்த கேள்வி என்னவாக இருக்கும்?

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, பத்மநாபன்,...

meenakshi.. தமிழ் அரிச்சுவடியில் பெரும்பாலான ஈகாரங்கள் தனிச்சொல்லாகப் பொருள் தருபவை.

பத்மநாபன், நசிகேதன் இதுவரை கேட்ட கேள்விகளிலேயே அடுத்த கேள்வி தான்... மிகச் சாதாரணமானது :)

Santhini சொன்னது…

வெகு நாட்களாகிவிட்டன, இங்கு வந்து. விட்டதிலிருந்து துவங்கி வெண்பாக்கள் அனைத்தும் சுவை. தமிழ் விளையாடுகிறது உங்கள் விரல்களில்.
எழுத்தும், அர்த்தமும் அது நிற்கும் இடமும் ....சுவையோ சுவை.
தத்துவம் ....பிறகு பேசுவோம்

சிவகுமாரன் சொன்னது…

"அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு"
- என்று அவ்வையும் ,

"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து."
-என்று வள்ளுவனும் சொல்லியிருக்கிறார்கள் கனியும் வரை காத்திருக்க சொல்லி..
சரியா அப்பாஜி ?

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன்.
காத்திருப்பதைக் காட்டிலும் பார்த்திருப்பதே இங்கே முக்கியம் என்று நினைக்கிறேன் - அவ்வையும் வள்ளுவனும் சொல்வதும் அதைத்தான் என்று நினைக்கிறேன். 'காலம் கனியும்' என்பது மாயை என்று நான் புரிந்து கொண்டேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காலம் கடந்த வேகமும் ஞானமும் வீண்.

தனி காட்டு ராஜா சொன்னது…

//மனிதரின் வாழ்வில் எத்தனையோ உலகாயதப் பாதைகள் உள்ளன; சேரும் இடமற்றப் பாதைகள் இவை. மனதைத் துருவாக்கும் சாதனைகள் மற்றும் சோதனைகளுக்கான தூண்டில்கள் இவை. இயல்பாகவே குறிக்கோளோடும் தன்னுணர்வோடும் இயங்கும் மனிதரும், இவை இடையூறென அறியாமல் தங்கள் இலக்கிலிருந்து விலகிச் சுழன்றுப் பின்னர் வாடுகிறார்கள். குறிக்கோள் அறியாத மானிடரோ, வீண் கனவுகளிலும் கண்மூடி மாயையிலும் சிக்கித் துன்புறுகிறார்கள். விதி, தலையெழுத்து, கொடுப்பினை, பாவம் எனப் பலவகைக் கேலிக்குரியக் காரணங்களால் தங்கள் துன்பங்களை நியமப்படுத்துகிறார்கள். வாழ்வில் 'குறிக்கோள்' என்றால் என்னவென்றே அறியாத இவர்களால், தன்னறிவைத் தேடுவது இயலாத செயல். எத்தனை காலம் வாழ்ந்தாலும், நாடியது அடங்கினாலும் இவர்கள் நாடியது அடையார்.//

இந்த பூமி அழியும் வரை பொருந்த கூடிய உண்மையான வாசகம் இது :)

அப்பாதுரை சொன்னது…

வருக கிருஷ்ணா.