வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/02/25

வேறு வரம் கேள் என்றான் எமன்


29
ஐந்தும் அறிந்தார்க்கும் ஆன்மா ஐயமன்றோ
மைந்தனே மாற்று வரங்கேள் - நைந்தறியா
உம்பருக்கும் ஏறா தெருளாம் உளந்திரும்பி
எம்பெருமை ஈனா தருள்.

    ம்புலனை அறிந்தவருக்கும் புரியாததன்றோ உயிர்? இளமை நிலை மாறாதத் தேவர்களும் இதைத் தெளிவாக அறியார். அழகனே, வேறு வரம் கேள். தயவு செய்து உன் மனதை மாற்றிக்கொண்டு என் பெருமை குறையாதிருக்கச் செய் (என்றான் எமன்).

ஐந்து: மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்கள்; வெளி ஒளி வளி மண் நீர் என ஐம்பொறிகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்
ஆன்மா: உயிர்
மைந்தன்: இளையவன், அழகன்
நைந்து: தளர்ந்து, நிலைமாறி, முதிர்ந்து
உம்பர்: தேவர்
தெருள்: தெளிவு
ஈனாது: குறையாது, தேயாது



    வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் குறைபடாது.. எது?

    கற்றுத் தரும் ஆசிரியனுக்கும் கற்க எண்ணும் மாணவருக்கும் இந்த உண்மை புரிந்திருக்க வேண்டும். முன்னர் சந்தித்த மாணவர்கள் இருவருக்குமே உயர்ந்த நோக்கம் உண்டு. எனினும், இரண்டாவது மாணவனின் நோக்கம், சுயமாக நிறைவேற வழியில்லை; கற்க வேண்டியதை நிற்க வைத்துவிட்டானே?

    நல்ல அறிவைப் பெற, கடினமான உழைப்பும், மாறா உறுதியும் வேண்டும். இன்றொன்று நாளொன்று என அன்றன்று அலைபாய்ந்தால் அறிவைப் பெற முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்தி அறிவைப் பெறும் ஒழுக்கம், நல் மாணாக்கனுக்கு வேண்டும். இரண்டு மாணவர்களுமே வாழ்க்கையில் முன்னேறிச் சிறப்பெய்தினார்கள் என்றாலும், ஒருவன் மட்டுமே - படித்த முதல் மாணவன் மட்டுமே - தாங்கள் கொண்டிருந்த உயர்ந்த நோக்கத்தை அடையத் தேவையான அறிவைப் பெற்றிருந்தான். ஒரு ஆசிரியன் அத்தகைய மாணவனையே தேடிப் பிடித்துக் கற்பிக்க வேண்டும்.

    ஒரு ஆசிரியனின் கண்ணோட்டத்தில், எந்த மாணவர் வாழ்வில் உயர்வார் என்பதை விட, எந்த மாணவர் சிறப்பாகக் கற்பார் என்பதே முக்கியமாகிறது. கற்றவர் வழிப் பரவும் கல்வி, அல்லவா? கல்வியும் அறிவும் முதல் மாணவன் வழியாகத் தொடர்ந்து பரவ வாய்ப்பிருக்கிறது. செல்வந்தனாகி விட்ட இரண்டாம் மாணவனிடம் கல்வி அழிந்து விட்டது; அறிவு அடங்கி விட்டது. சிறப்பான அறிவை ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், இரண்டாவது மாணவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் கல்விக்கும் அறிவுக்கும் அழிவேற்பட ஆசிரியரே உடந்தையாகியிருப்பார். பொறுப்பற்ற மாணவரால் ஆசிரியரின் தவமும் பெருமையும் கெடுகிறது. (என் குடும்பக் கிளையில் என்னுடன் தமிழறிவு முடிவது துயரமென்றாலும், என் தமிழாசிரியரைப் பழி சொல்ல மனமில்லை! :)

    குரு-சீடர், ஆசிரிய-மாணவர் உறவை அறியவும் விளக்கவும் பல உளவியல் மாதிரிகள் உள்ளன (mentor mania, professor syndrome, ugly duckling philosophy, joker syndrome, upward mobility crisis, cascading failure, groupthink, ...). இந்த ஆராய்ச்சி human resources management, organizational behavior modeling, knowledge transfer framework, business succession planning, generational strategic planning என்று பலவாறு வளர்ச்சி மேலாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. 'குருபிழை'யைத் தவிர்ப்பதே இவற்றின் நோக்கம். இன்னொரு 'கெனடி' இன்னொரு 'சாஸ்திரி' இன்னொரு 'மேனெக் ஷா' தோன்றாததற்குக் 'குருபிழை' ஒரு காரணம் என்கிறார்கள்.

    'குருபிழை' என்றால் என்ன? வழிகாட்டும் பொறுப்புடையவர்கள், தங்கள் செய்கையினால் மறைமுகமாகத் தவறான வளர்ச்சியை உண்டாக்குவதும் சரியான வளர்ச்சியை அழிப்பதும் குருபிழை எனப்படும். ஒரு ஆசிரியன் செய்யக்கூடிய மகத்தான பிழை யாது? புரியும்படி சொல்லிக் கொடுக்காததா? அல்லது, புரியாதபடி சொல்லிக் கொடுப்பதா? நல்ல மாணவனைத் தவற விடுவதா? மோசமான மாணவனைத் தேர்ந்தெடுப்பதா? அறியாத மாணவன் மேலா, அரைகுறையாய் அறிந்த மாணவன் மேலா? நல்ல ஆசிரியனுக்கு எதில் நாட்டம்? அறிவை வளர்க்கக் கூடிய மாணவனை எப்படி அறிந்து கொள்வது? இவற்றுக்கான விடை அறியும் தந்திரம், நல்லாசிரியர்களுக்கு தெரிந்திருந்தது. தெரியும். தெரிய வேண்டும்.

   எமன் நல்லாசிரியனா?

    ர்மத்தின் தலைவனான எமன், "என் பெருமை குறையாதிருக்க அருள் செய்" என்று மானிடச் சிறுவன் நசிகேதனிடம் கெஞ்சுவானேன்? எமனின் பெருமை எப்படிக் குறையும்? தனக்குப் பழி நேர்ந்தால் பெருமை குறையுமென்று அஞ்சி, நசிகேதனிடம் கெஞ்சினான். வாக்கு தவறினால் பெரும் பழி அல்லவா? அதுவும் அறத்தை நிலை நாட்டுவதையே தொழிலாகக் கொண்டவன், அறம் பிறழலாமா?

    வரம் கொடுப்பவனே வரம் கேட்கும் நிலைக்கு வந்து விட்டான். இது நமக்கு ஒரு பாடம். இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று ஆயிரம் சொல்லிவிட்டு, 'முடியவில்லை' என்று ஏதோ ஒரு காரணம் காட்டிப் பின்வாங்கும் கேவலமான மனிதர்களை தினமும் பார்க்கிறோம். உறவும் பாராட்டுகிறோம். நண்பராகிறோம். தலைவி அல்லது தலைவனாக்குகிறோம். 'பேச்சோடு சரி' என்று தெரிந்ததும் அவர்கள் மேல் ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. 'ஏமாற்றுக்காரர்' என்று நினைக்கத் தொடங்குகிறோம். 'அவளை நம்பமுடியாது', 'அவனை நம்பினா உருப்பட்ட மாதிரி தான்' என்று பழி போடத் தொடங்குகிறோம். நசிகேதன் அவ்வாறு தன்னை வெறுத்துவிடுவானோ என்று எமன் அஞ்சினான். ஏன் அஞ்ச வேண்டும்?

    காலன் மேலாளும் நிர்வாகம் யாது? அந்தக்கால டியூசிஎஸ் கிடங்கா? கோயிலில் லட்டு, சுண்டல் வினியோகமா? பள்ளிக்கூடமா? பால்பண்ணையா? காய்கறிக் கடையா? தொழிற்சாலையா? இல்லையே? எவருக்குமே புரியாத ரகசிய நுட்பத்துக்கு நிர்வாக உரிமையாளன் அல்லவா? மரணத்திற்குப் பின் நடப்பதாகச் சொல்லப்படும் உயிர்களின் பாவ புண்ணிய வழக்கில், தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவன் ஆயிற்றே? அங்கே வக்கீலும் அவனே; சாட்சியும் அவனே; ஜூரியும் அவனே; நீதிபதியும் அவனே. போதாதென்று, அந்த வழக்குமன்றச் சட்டங்களை எழுதியவனும் அவனே; தண்டனை வழங்குவதும் அவனே; சிறையில் தள்ளினால் சிறைக்குச் சொந்தக்காரனும் அவனே; அப்பீல் செய்தால் அங்கே உயர்நீதிபதியும் அவனே. அங்கே கிடப்பதும் நடப்பதும் எவருமறியாத மர்மமாக இருக்கும் வரை எமனுலகைப் பற்றிய அச்சமும் மரியாதையும் நிலைக்கும். அங்கே நடப்பது தெரிந்து, இனி எல்லோரும் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால்? மரணம் பற்றிய அறிவு பரவலாகக் கிடைக்காத வரை, மனிதர்கள் நெறிகளை ஓரளவுக்குப் பின்பற்றுவார்கள். அறிந்துகொண்ட பின், நெறி தவறினால்? மரணத்துக்குப்பின் உயிருக்கு என்ன ஆகிறது என்பதை விளக்கச் சொல்லி, மடியிலேயே கை வைத்து விட்டதே இந்தப் பிள்ளை?

    மரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்வது கடினமா? எமனின் பார்வையில், அது காலத்துக்கு அப்பாற்பட்ட அறிவு. நசிகேதனிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தான். "அழகா, நான் சொல்வதைக் கேள். ஐம்புலன்களை அடக்கியாள அறிந்த ஞானிகளுக்கும் இது புரிவது கடினம். மாறா இளமையைப் பெற்றிருக்கும் தேவர்கள் கூட கடலின் ஆழத்தையும் வானத்தின் பரந்த எல்லைகளையும் தீயின் வெம்மையையும் காற்றின் மூலத்தையும் அறிந்து கொண்டாலும், அவர்களால் மரண உண்மையை அறிய முடியவில்லை" என்றான். காலத்துக்கப்பாற்பட்ட அறிவைப் பெற முயற்சி செய்கிறவரும் காலத்துக்கப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே? எல்லாம் துறந்த ஞானிகள் பல்லாண்டு முயற்சியில் புலனடக்கிப் பழகலாம்; என்றைக்கும் தளராமல் இருப்பதாகச் சொல்லப்படும் தேவர்களால் ஒருவேளை இது முடியலாம்; சாதாரண மனிதக் குழந்தையான நசிகேதனால் முடியாது என்பதே எமன் சொல்ல வந்தது. 'உனக்கு புரியாது' என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் எமன். ஆனால், அது விளக்கமாகாது; மந்திரம் என்ற போர்வைக்குள் மூடியது போலாகும். மாணவரின் அறிவிற்கேற்ப உதாரணம் சொல்லி விளக்குவது தான் நல்லாசிரியருக்கு அழகு. எமன் கையாண்டதும் அதே முறை தான். 'மரணத்திற்கப்பால் நிகழ்வதைப் புரிந்து கொள்ள எண்ணிலடங்காத காலம் ஆகும்' என்ற எச்சரிக்கையை, உதாரணங்களோடு எடுத்துச் சொன்னான்.

    அப்படியென்ன மர்மம்? சொல்லிவிட்டுப் போவது தானே? காலத்துக்கப்பாற்பட்ட தேவர்களுக்கும் புரியாத நுட்பமென்றால், குழந்தைக்கு எங்கே புரியப் போகிறது? நசிகேதனும் உடனே மறந்து விடப் போகிறான். எதற்காக இன்னொரு வரம் கேட்கச் சொல்லி இதை இழுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

    காலனின் உள்நோக்கத்தை, ஒரு நல்ல ஆசிரியனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 'மரணத்தைப் பற்றி விளக்குவதில் எமனுக்கு ஒரு சிக்கலும் இல்லை. நசிகேதனுக்குப் புரியாமல் போனாலும், வரம் கொடுத்தக் கடமை முடியும்; எமனுக்கு ஒரு பழியும் வராது' என்று முதற்கண் தோன்றினாலும் எமனின் செய்கையில் பொருள் உண்டு. எமன், 'குருபிழை'யைத் தவிர்க்க முனைந்தான்.

    நசிகேதனுக்கு விளக்கம் சொல்லாவிட்டால் எமனுக்குப் பழியுண்டாகும். அதே நேரம், தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு பூமிக்குப் போனபின், நசிகேதன் எல்லாவற்றையும் குட்டையாகக் குழப்பிவிட்டால்? அதுவும் பழிதானே?

    நல்ல மாணவனுக்கு, நல்ல ஆசிரியன் கிடைப்பதரிது. நல்ல ஆசிரியனுக்கு, நல்ல மாணவன் கிடைப்பது அரிது. 'இந்த மாணவனுக்கு இதை அறியும் திறமையும் பொறுமையும் இருக்கிறதா' என்று முன்பே அறிந்து கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமை. அறிவைப் பெறும் திறமை இருப்பினும், நிலையான விருப்பம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? நிலையான விருப்பம் இருந்தாலும் குறையாத பொறுமை இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? குறையாத பொறுமை இருந்தாலும் அறிந்ததை வளர்த்துப் பகிரும் பண்பட்ட மனம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? மாணவனின் மனம் விளையாட்டிலும் லாட்டரிச் சீட்டிலும் போகாது என்று எப்படித் தெரிந்து கொள்வது? விளையாட்டையும் லாட்டரிச் சீட்டையும் முன் வைத்தால் தெரிந்து போகிறது! எமனும் "இந்த வரம் வேண்டாம், வேறு வரம் கேள்" என்றான். நசிகேதப் பிள்ளை, முதல்பரிசுச் சீட்டைக் கேட்பானா?

2011/02/22

தெளிவாகக் கேள் என்றான் எமன்


28
மழையெருமை போல்காலன் மாத்திரைப் பேந்திப்
பிழையிலாது கேள்பிள்ளாய் என்றான் - இழையுமுயிர்
ஈர்ந்தபின் எங்குபோகும் என்னவாகும் என்றுரைக்க
நேர்ந்தான் நசிகேதன் நொய்த்து.

    ழையில் நனையும் எருமைமாடு போல் ஒரு கணம் சலனமற்று விழித்த எமன், "தெளிவாகக் கேள், இளையவனே" என்றான்; பதிலுக்கு, "இழைநூல் போன்ற உயிரானது, அறுந்ததும் எங்கு போகிறது, அதற்கு என்ன ஆகிறது என்பதை உரைக்கும்படி" எமனிடம் விவரமாக வேண்டினான் நசிகேதன்.

மாத்திரை: சிறு கால அளவு
பேந்தி: விழித்து
ஈர்ந்த: அறுந்த
நேர்ந்தான்: வேண்டினான்
நொய்த்து: நுண்மையாக்கி, பொடியாக்கி, பிரித்து



    ர்மசங்கடம், அதாவது இக்கட்டான நிலை, என்றால் என்ன?

    'அடுத்த அறைக்குள் என்ன நடக்கிறது என்றறிய ரகசியமாகச் சாவித்துளையில் கண் வைத்துப் பார்க்கையில், மறுமுனையிலும் கண் தெரிந்தால் இக்கட்டு' என்று ஆஸ்கர் வைல்ட் சொன்னதாகச் சொல்வார்கள். சுவாரசியமான விளக்கம்.

    சற்றும் எதிர்பாராததைக் கண்டுப் பேதலிக்கிறோம். வீட்டிலோ வெளியிலோ இது போன்ற இக்கட்டுகளை எதிர்கொள்கிறோம். பல நேரம் வெறும் பேச்சு வார்த்தை கூட நம்மை நிலைகுலையச் செய்வதை அறிவோம். அத்தகைய சூழலில், எதிர் நடவடிக்கையில் உடனே இறங்காதிருப்பது ஒரு தந்திரம். "என்ன சொன்னீர்கள்?" என்று புரியாதது போல் ஒரு முறை கேட்டால், அந்தக் கணத்தின் கொந்தளிப்பு திசைமாறக் கூடும். பதில் வேறு விதமாக வரச் சாத்தியமுண்டு. delay and deflect என்பது அவசரம், குழப்பம், மற்றும் தர்மசங்கடமான நிலைகளில் கையாளப்படும் தந்திரம். இதற்கான உதாரணங்களைச் சட்டமன்றங்களிலும், அரசியலிலும் அடிக்கடிக் காணலாம். சர்சில், இந்திரா காந்தி, பில் கிலின்டன், கருணாநிதி போன்றவர்களின் அரசியல் சமாளிப்புத் தந்திரங்கள் முதுநிலைப் பாடமாக வேண்டிய அளவுக்கு நுண்மையானவை.

    மன் அனுபவித்ததும் எதிர்பாராத சங்கடம். வரம் தருவதாக வாக்களித்து விட்டான். ஆனால் நசிகேதன் கேட்ட வரமோ, மரண உண்மையின் விளக்கம்.

    இதில் எமனுக்கு என்ன இக்கட்டு?

    மரணத்தின் தன்மை மர்மமாக உள்ள வரை மனிதருக்கு மரண பயம் இருக்கும்; அந்தப் பயத்தை வைத்து நன்மை தீமைகளை நேராகவோ, கண்மூடித்தனமாகவோ, அறியச் செய்யலாம். fear is the best motivator - பயத்தைப் போல் சிறந்த உந்துதல் எதுவுமே கிடையாது என்பார்கள். இந்தப் பிள்ளை மரண உண்மையை வேண்டுகிறானே? அதுவும் மரண தேவனிடமே கேட்கிறானே? மரண உண்மை தெரிந்துவிட்டால் மரண தேவனை யார் மதிப்பார்கள்? 'வரம் தருவதாகச் சொன்னோம், இப்போது ஆளையே கவிழ்க்கும் வரத்தை எப்படி வழங்குவது'? இதுவே எமனின் தர்மசங்கடம்.

    நசிகேதன் கேட்ட வரம் காதில் விழுந்ததும் எமனுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. என்ன கேட்கிறான் இந்தப் பிள்ளை?! மழையில் நனையும் எருமை போல் சலனமில்லாமல் நின்றான் எமன். பிறகு நிலைக்கு வந்து, "பிள்ளாய், நீ சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. தவறாகக் கேட்டது போலிருந்தது. சற்றுத் தெளிவாகக் கேட்கிறாயா?" என்றான். ஒருவேளை வேறு ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்தான்.

    நசிகேதன் விடுவானா? முதல் வரத்தில் பாடம் கற்றவன் அல்லவா? மரணத்தின் தன்மை என்று பொதுவாகச் சொன்னால் விளங்காமல் போய்விடப் போகிறதே என்று நினைத்தவன், கிடைத்த வாய்ப்பை இழப்பானா? எமனுக்கு நிகராகப் பதில் சொன்னான். "ஐயா, உயிர் பிரிந்ததும் எங்கே போகிறது? என்ன ஆகிறது? இதைச் சொல்லுங்கள்" என்று, தான் அறிய விரும்பிய மரண உண்மையின் விவரங்களை குழப்பமே வராத அளவுக்குப் பிட்டு வைத்தான்.

    ஒருவேளை இந்த உரையாடல், எமன் என்னும் ஆசிரியன் நசிகேதன் என்னும் மாணவனுக்கு வைத்த நுழைவுத்தேர்வா?

2011/02/18

நசிகேதன் வேண்டிய மூன்றாம் வரம்


27
உள்ளார் இலாரென்றுப் பல்லார் உயிரது
புள்ளாய்ப் பறந்தபின்னும் சொல்வானேன்? தெள்ளிய
மூதறிவாய் மூன்றாம் வரந்தருவீர் உம்மொழியாற்
சாதலின் நுண்மை நவின்று.

    யிர் உடலை விட்டுப் பறவை போல் பறந்து போன பின்னும், இறந்தவரை இருப்பதாகச் சிலரும் மறைந்ததாகச் சிலரும் சொல்கிறார்களே, அது ஏன்? மரணத்தின் இயல்பைப் பற்றியத் தெளிவான முழு அறிவை உங்களிடமிருந்து பெறுவதே என் மூன்றாவது வரமாகும் (என்றான் நசிகேதன்).



    சிரியர்களுக்குத் தொலைநோக்கு உண்டா? தொலைநோக்கின் அடிப்படையில் ஒரு நல்ல ஆசிரியனுக்கு தொழில்முறை இக்கட்டு வருவது உண்டா?

ஆசிரிய-மாணவ உறவு நுட்பமானது. முற்றிலும் தன்னலமில்லாத அக்கறையெனில், ஒரு நலல ஆசிரியரின் அக்கறை மட்டுமே. தாயிடம் கூட இந்தத் தன்மையை எதிர்பார்க்க இயலாது என்று தோன்றுகிறது. ஆசிரிய-மாணவ நட்பும் உறவும் எல்லா ஆசிரிய மாணவருக்கும் கிடைப்பதில்லை. அந்த வருட அறிமுகங்களோடு முடிகின்றன; தற்காலிக நட்பாகக் கூட வளர்வதில்லை பெரும்பாலும். சில ஆசிரிய-மாணவ நட்புகளோ சாதாரண உறவு நிலைகளையும் தாண்டி நிரந்தரப் பிணைப்பாகிறது. இன்றைய முகமற்ற சமூகத்திலும் இத்தகைய ஆசிரிய-மாணவப் பிணைப்புகள் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றே நம்புகிறேன்.

ஒரு கதை. தொடர்ந்து ஒரு கேள்வி.

இரண்டு மாணவர்களும் சிறு வயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். சிறந்த மாணவர்கள். இருவருக்குமே தங்கள் வாழ்வில் பொதுநலன் கருதி வாழவேண்டும், இன்னாராய் உயர வேண்டும் என்ற நோக்கங்கள் உண்டு. சீர்மைக்கானத் தொலைநோக்கோடு கல்லூரியில் காலெடுத்து வைத்தார்கள்.

'சத்துள்ள செயற்கை உணவு' பற்றிப் படித்து ஆராய்ச்சி செய்து, பட்டப்படிப்பு முடித்து அதே துறையில் பணி செய்து, செயற்கை உணவுக்கான தூண்டு மற்றும் செரிமானப் பொருளைக் (enzymes) கண்டுபிடித்து, சத்துள்ள செயற்கையுணவைக் குறைந்த செலவில் தயாரித்து, உலகத்தின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் இருவருக்கும் உண்டு.

கல்லூரியிலேயே முதல் மாணவனாக வந்தால், 'செயற்கை உணவு தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உதவி ஆய்வாளராக, உயர்ந்த சம்பளத்தில் உலகம் முழுதும் சுற்றி வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்' என்பதை, கல்லூரிக்கு வந்த முதல் நாளில் அறிந்து கொண்டார்கள்.

வாழ்வும் வளமும் பெறும் நம்பிக்கையுடன், இருவருமே நன்றாகப் படிக்கத் தொடங்கினார்கள். ஒருவன் தொடர்ச்சியாக நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தான். இன்னொருவன் நாளடைவில் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டிலும் மற்றவற்றிலும் கவனம் செலுத்தி அவற்றில் முதன்மையாக வந்தான்.

முதல் மாணவன், தான் கொண்ட குறிக்கோளுக்கிணங்க கல்லூரியிலேயே முதன்மையாக வந்து, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, தொழிலில் மேன்மையுடன் நான்கு வருடங்களாய்த் தொடர்ந்து பதவி உயர்வும் பெற்று வந்தான். எனினும், குறிக்கோளை அடைந்த பாடில்லை; ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருந்தது.

விளையாட்டிலும் மற்றவற்றிலும் முதன்மையாக வந்த மற்றவன், சேர்த்து வைத்த பணத்தில் சிறிதை லாட்டரிச் சீட்டுகள் வாங்கச் செலவழித்தான். தொடர்ச்சியாக நான்கு வருடங்களில் அவனுக்கு லாட்டரிப்பரிசு விழவும், மிகுந்த செல்வந்தனான். அதை வைத்து விளையாட்டுக் குழுக்களையும் திடல்களையும் வாங்கி வளர்த்து மேலும் செல்வம் சேர்த்தான். பத்து வருடங்களுக்குள் உலகச் செல்வந்தர் பட்டியலில் இடம்பெற்றான்.

பத்தாம் வருடம், உலகமெங்கும் பரவியப் பொருளாதார நெருக்கடியில் அடிபட்ட பன்னாட்டு நிறுவனம், சிதைந்து போகும் நிலைக்கு வந்தது. 'வேலை இழப்பில் கவலையில்லை, காரியம் கைகூடி வரும் வேளையில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து முடிக்க இயலாதோ' என்று முதல் மாணவன் வசதியிழந்து வருந்திக் கொண்டிருக்கையில், செல்வந்தனான மற்றவன் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கினான்.

பழைய மாணவர்கள் வேறு சூழலில் மீண்டும் சந்தித்தார்கள்.

    கதையின் போக்கு சுவாரசியமாக இருந்தாலும், கேள்வி அதைப் பற்றியதல்ல. கேள்வி: நீங்கள் இவர்களின் சிறு வயது ஆசிரியராக இருந்திருந்தால், இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே சிறப்பாகக் கல்வி கற்றுத்தர முடியும் என்ற நிலையில், எந்த மாணவரைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?

    கூட்டிலிருந்து பறந்த புள் எங்கே போகும்? இன்னொரு கூட்டைத் தேடிப் போகும் அல்லது அதே கூட்டுக்குத் திரும்பும் என்பது சிற்றறிவுக்கும் எட்டுமே? உயிர்ப் பறவை இன்னொரு கூட்டைத் தேடிப் போவதைத் தான் மரணம் என்கிறோமா? இது உண்மையானால், உயிர்ப்பறவை எத்தனைக் கூடுகளைத் தேடிப் போகும்? எப்போது சளைக்கும்? ஒருவேளை உயிர்ப்பறவை பிரிந்த கூட்டுக்கே திரும்பி வரும் பொருட்டில், பறந்த நேரம் மட்டுமே மரணமா? கேள்விகள் தொடர்ச்சியாக நமக்கே தோன்றும்போது, நசிகேதன் மனதில் தோன்றியிருக்காதா? எமனைப் பார்த்து இலேசாகச் சிரித்து, "ஐயா, எமன் அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம். ஒரு மனித உயிர் அதன் உடலை விட்டுக் கூடு விட்ட பறவை போல் பறந்து போனதும், 'மனிதர் இறந்து போனார்' என்கிறார்கள் சிலர். இன்னொரு கூட்டத்தினரோ, 'இல்லை மனிதர் இறக்கவில்லை, இன்னும் இருக்கிறார்' என்கிறார்கள். இதில், யார் கூற்று உண்மை? இந்த ஐயத்தினால் ஏற்பட்டக் குழப்பம் என்னை வாட்டுகிறது. மரணத்தின் தன்மை பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லி என் குழப்பத்தை நீக்குங்கள். இந்த அறிவை நீங்களே வழங்க வேண்டும். இது என் மூன்றாவது வரம்" என்றான்.

    அறிவை அதற்கான ஆசிரியரிடம் பெறுவது போலாகுமா? இருபடிச் சமன்பாட்டுக் கணிதம் பற்றித் தமிழாசிரியரிடம் விளக்கம் கேட்டால் பலனிருக்குமா? மரணத்தின் தன்மை பற்றி விளக்க, மரணதேவனை விட ஒரு சிறந்த ஆசிரியன் கிடைப்பானா?

    எமனும், "மரணத்தின் தன்மை தானே? கேள். உயிர் போனது போனது தான்" என்றோ, "உயிர் போகவில்லை, சுற்றிக் கொண்டே இருக்கும்" என்றோ சுருக்கமாகச் சொல்லிவிட்டால், கதை முடிந்து விடும். அத்தகைய பதிலினால் யாருக்கு என்ன பலன்? உருப்படாத வரமாகி விடுமே? அதனால் நசிகேதன், "தெள்ளிய மூதறிவு வேண்டும்" என்று கேட்டான்.

    மூதறிவு என்றால் முதிர்ந்த அறிவு. அறிவு எப்படி முதிர்கிறது? மூன்று வகையில் அறிவானது முதிர்ச்சியடைகிறது. தெரிந்து கொள்ளும் வகையிலும், புரிந்து கொள்ளும் வகையிலும், அறிந்து கொள்ளும் வகையிலும் என மூவகையிலும் முதிர்வதே மூதறிவு. மேலோட்டமான புரிதல் அல்ல மூதறிவு என்பதை மட்டும் இங்கே வலியுறுத்தி, மூவகை அறிவு முதிர்ச்சி பற்றிய விளக்கத்தைப் பிறகு சேர்க்கிறேன்.

    மேம்போக்கான பதிலைச் சொல்ல இடம் தரலாகாது என்று திட்டமிட்டே தெள்ளிய மூதறிவு கேட்டான் நசிகேதன். "ஐயா, எமனாரே, மரணத்தின் நுண்மையை அறிய விரும்புகிறேன். ஏனென்றால், மரணத்துக்கப்பால் நடக்கக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி உயிருடன் இருக்கும் போதே அறிந்தால், பயனுள்ள வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். மரணத்தைப் பற்றிய அறியாமை நீங்கி, நல்வாழ்வு வாழ முடியும்" என்று சொல்லாமல் சொன்னான். "மரணம் பற்றிய மூதறிவு வேண்டும், அதுவும் உம்மொழியால் வேண்டும்" என்று சொல்லி, எமனின் பதிலுக்குக் காத்திருந்தான்.

    எமன் முகத்தில் ஈயாடவில்லை.

2011/02/15

வெந்த பருப்பு


    டோபனிஷதத்தில் நசிகேதனின் இரண்டாவது வரம் பற்றியப் பாடல்களில் சடங்குகளும் இனக்குறிப்புகளும் நிறைய வருகின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கிறேன் அல்லது குறைத்திருக்கிறேன். சில இடங்களில் விவரங்களை மாற்றியிருக்கிறேன்.

    இது குறித்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி அறிவுரை சொன்ன அன்பர்களுக்கு நன்றி. இங்கே என் கருத்துக்கள் சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன். முந்தைய பாடலின் பின் குறிப்பாகவோ பின்னூட்டமாகவோ எழுதியிருந்தால், பாடலுக்கு ஒரு திசைதிருப்பலாகப் போய்விடுமோ என்று அஞ்சி, தனிப்பதிவாக எழுதுகிறேன்.

    சடங்கு மற்றும் இன விவரப் பாடல்களைக் கடோவின் பிற்சேர்க்கை என்று நான் எண்ணினாலும், இது வடமொழி நூல் பற்றிய ஆய்வல்லாததால் அதுபற்றிய என் கருத்துக்களை எழுத விரும்பவில்லை. நசிகேத வெண்பாவில் வடமொழி நூலின் அடிப்படைக் கருத்தை, என் பார்வையில் சொல்ல முற்பட்டிருக்கிறேன். மூலத்தைச் சிதைக்கவோ, தார்மீகப் பிரசாரமாகவோ, சமூகமாற்றக் கொள்கையுடனோ, வேறெந்த புதைந்த எண்ணத்தோடோ எழுதவில்லை.

    எதற்காக எழுதுகிறேன்? இன்றைக்கும் புதுமையாகத் தோன்றும் கருத்துக்கள் உள்ளப் பழம்பெரும் நூலான கடோவின் கனமான ஆழ்ந்த சிந்தனைகளை உருவாக்கும் அறிவு, எள்ளளவும் எனக்கில்லை. உள்ளதை உரைக்கவே திண்டாடுகிறேன் என்பதும் உண்மை. கடோவைத் தழுவி எழுதப்பட்டு வரும் நூலானாலும், என்னளவில், நசிகேத வெண்பா மனிதநேயம் பற்றியத் தமிழ் நூல். ஒரு சிறப்பான வடமொழி நூல், மொழியின் தொன்மை காரணமாகத் தமிழில் படிக்க முடியாமல் போவதைத் தடுக்க, முடிந்தவரை பா வடிவில் கொடுக்க, முயற்சி செய்யலாமென்று தோன்றியதால் எழுதுகிறேன். பொழுதும் போகவும் ஒரு உருப்படியான வழி. சடங்குகளையும் இன விவரங்களையும் குறைத்ததற்கும் சில இடங்களில் நீக்கியதற்கும் காரணம், இக்காலத்துக்கு ஏற்ற வகையில் பரவலான படிப்புக்கு ஏதுவாகும் என்று நினைத்ததால். மேலும், அவ்விவரங்கள் படிப்பவரை நூலின் மையத்திலிருந்து விலக்கி நடத்துவதாக நான் தீவிரமாக நம்புகிறேன். என் நம்பிக்கைகள், என் அறிவின் நிறைகுறைகளைக் காட்டும் என்பதையும் உணர்கிறேன். மற்றபடி, அவரவர் நம்பிக்கைகளை மதிக்கிறேன்.

    'பலன் மட்டும் நிஜம், அதைக் கொடுக்கும் சடங்கு கண்மூடித்தனமோ?' என்ற கேள்விக்கு ஏற்ற பதில் இப்போது எனக்குத் தோன்றவில்லை (நல்ல கேள்வி!). 'தூக்கமும் தியானமும் கூடத் கண்மூடித்தனம் தான்' என்ற சுவையான முரணைச் சுட்டியதற்கும் நன்றி. அருமையான பார்வை. இதற்கான என் கருத்தை பின் பாடல்களில் விளக்கமாக எழுதுகிறேன். முன்பாடல்களில் அஜாதசத்ரு-பாலாகி உரையாடலை எழுதி, இதற்கு ஒரு சிந்தனைத் தளத்தை ஏற்படுத்தியிருக்கிறேன். துயில் பலவகையானது என்றான் அஜாதசத்ரு. தியானமும் துயிலே. சாதாரணமாக உறங்கும் ஒருவனை வைத்து ஆன்மீகத் தேடலை, தன்னறிவை, மரணத்துக்கப்பாற்பட்டப் பயணத்தை அறிய முயல்வதாகச் சொன்னான் அஜாதசத்ரு. அவன் சொன்ன வழி, தீவிரத் தியானமே என்பது இந்நேரம் புரிந்திருக்கும். அறிவு மழுங்கிய நிலையில் செய்யப்படும் சுளிக்கத்தக்கச் செயல்களை விவரிக்கும் ஒரு சொல்லாக வழங்கப்பட்டாலும், கண்மூடித்தனம் என்பது ஒரு விசை. விசையை இயக்கினால் இயங்குவது யாதென்பதையும் நாமே தீர்மானிக்க வேண்டும். தன்னறிவுக்கு ஓய்வு கொடுப்பதும் கண்மூடித்தனமே எனினும், ஓய்வு தன்னறிவை வளர்க்கவே என்றான் அஜா. தன்னறிவுக்கு நிரந்தர ஓய்வு உண்டா? ஓயுமானால் அதன் இருப்பிடம் (resting place) யாது? ஓய்வு துயிலென்றால், எந்த வகைத் துயில்? இந்தச் சிந்தனைத் தளத்திற்குத் திரும்பவும் வருவோம்.

    நானறியாத ஆழ்ந்த வேத விவரங்களும் கருத்துக்களும் கொடுத்து, மதநூல் எழுதும் முறை பற்றி அறிவுரை வழங்கியதற்கு மீண்டும் நன்றி. எழுத்துக்கு வழிகாட்டியாக அவற்றைக் கருதுகிறேன். அதே நேரம், இந்த நசிகேத வெண்பா மதநூல் அல்ல என்பதையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். இது கடோவின் 1:1 மொழிபெயர்ப்பும் அல்ல (அதனால் சில சுதந்திரங்களை எடுக்க முடிகிறது :). உபனிஷதுகளின் மொத்தக் குத்தகைக்காரர் போல் வந்திருக்கும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லிப் பயனில்லை என்று நினைத்தாலும், சாதாரண இரட்டைநிலைக்கு மேலான ஆழமான பதிலைச் சொல்லத் தெரியவில்லை.

    மற்றபடி, பொதுவில் கருத்திட அழைக்கிறேன். அதனால் படிக்கும் ஏனையரும் தத்தம் கருத்துக்களைப் பகிர முடியும். திரு.காஸ்யபன் சொல்லியிருப்பது போல் தத்துவ விவாத விளக்கங்களுக்காக முழுமையாக எழுதப்பட்ட நூல் கடோபனிஷது. தத்துவங்களைப் புரிந்து கொள்ள அறிவில் முதிர்ச்சி வேண்டும்; விவாதிக்கவோ, தெளிவும் முதிர்ச்சியும் (நேரமும்) இன்னும் அதிகம் வேண்டும். இங்கே வரும் பின்னூட்டங்கள் பலவும் மிக நுண்மையாக இருப்பதாக நினைக்கிறேன். நிறைய பின்னூட்டங்கள் சிந்தனையைத் தூண்டுவதாக நினைக்கிறேன். தத்துவ விவாதத்தில் கவர்ச்சி இல்லை (குறிப்பாக நசிகேத வெண்பா :), திருப்பமில்லை. தத்துவ விவாதம், வெறும் வெந்த பருப்பைச் சுவைப்பது போன்றது. வாய்க்குள் இட்டப் பருப்பில் பச்சை மிளகாய், உப்பு, ஜீரகம், மிளகு, சிறு வெங்காயம், பூண்டு, இஞ்சி, நெய், ஏலக்காய், கருவேப்பிலை என்று பலவிதச் சுவைக்கூட்டிகளை மனம் கற்பனை செய்து சேர்க்கும் பொழுது, நாவில் சுவையுண்டாகி வெறும் பருப்பும் பெரு விருப்பாகிவிடுகிறது. சுவைக்கூட்டிகளாக விளங்கும் பின்னூட்டங்கள் நசிகேத வெண்பாவையும் ரசிக்க வைக்கின்றன (மிக நன்றி!). முடிந்தவரைப் பொதுவில் பின்னூட்டமிட நட்புடன் மீண்டும் அழைக்கிறேன்.

    இரண்டாம் வர உரையாடலில் கடோபனிஷத நூலின் சாரம் அடங்கியிருக்கிறது. பிற பகுதிகள் மரணம், உயிரின் பயணம் போன்ற கனமானக் கருத்துக்களைத் தொட்டாலும், இரண்டாம் வரத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் 'நல்லொழுக்கமும் உள்ளுக்குள் உறையும் தீயுமே மேன்மைக்கு வழிகாட்டிகள்' என்ற கருத்து, மீண்டும் மீண்டும் பல விதங்களில் வலியுறுத்தப்படுகிறது. இரண்டாம் வர உரையாடல், வரும் பகுதிகளின் முன்னோட்டம் என்று எழுதி முடிக்கிறேன். (தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன் :)

    மூன்றாம் வரப்பாடல் அடுத்த பதிவில்.

2011/02/11

மூன்றாம் வரம் கேளென்றான் எமன்


26
நான்கு நெறிகளையும் நெஞ்சில் நிறுத்திநிதம்
மூன்று முறையேனும் மூச்சடக்கும் மாந்தர்
இருநிலை விட்டிருப்பார் என்றும் இனியுன்
ஒருவரம் வேண்டியே ஓய்.

    டக்கம், அருள், அன்பு, அறம் எனும் நான்கு நெறிகளை மனதில் எண்ணியபடி தினமும் மூன்று முறையாவது மூச்சையடக்கிப் பழகும் மனிதர்கள், மரணம் பிறவி எனும் இரண்டு நிலைகளையும் துறப்பார்கள்; இனி எஞ்சியிருக்கும் உன் ஒரு வரத்தை கேட்டு முடி (என்றான் எமன்).




    'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்' என்றார் வள்ளுவர். 'தெய்வம் வானில் உறையும்' என்ற பொது நம்பிக்கையினால் சொன்னாரே தவிர, தெய்வமாக வாழ வானுலகம் செல்ல வேண்டியதில்லை என்பதே வள்ளுவர் வாக்கின் மறைபொருள்.

    இனிப்பு மருந்து. மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகி விடும் என்ற நம்பிக்கை. மருந்துண்ணும் அவசியமே இல்லாது நோயின்றி வாழலாம் என்றால், 'அதெப்படி?' என்று நகைப்பதில்லையா? பல மருந்துகளை ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்த்து, முடிவில் 'சிறுவயது முதலே உடல் நலத்தைப் பேணுவோர்க்கு நோய் வராது, மருந்தே தேவையில்லை' என்று அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவது நமக்குப் பிடிக்கும். வள்ளுவரைப் போல் மனிதமனம் அறிந்தவர் உண்டோ? மரண பயம் மன நோய். சடங்குகளும் கண்மூடித்தனங்களும் பயனில்லா மருந்துகள். நல்லொழுக்கம், பயனற்ற மருந்தின் அவசியத்தை நீக்கும் முறையானப் பேணல். 'மனிதனாக வாழலாம்' என்றால் கேட்போமா? 'அடப்போய்யா, தாடிக்காரரே!' என்போம். அதனால், 'தெய்வமாக வாழலாம்' என்றார் வள்ளுவர். 'ஆகா!' என்று இன்றுவரைத் தலையாட்டுகிறோம். 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' எனும் வரிகள், இரண்டு நிமிட இசை ரசனைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தால், ஏதேனும் செய்வோம்.

    'நசிகேத வேள்வியை தினம் மூன்று முறை செய்தவர்கள் மோட்சம் பெறுவார்கள்' என்று இந்தப் பாடலுக்குப் பொருள் கொள்ளலாம்; 'தினமும் மூன்று முறையாவது நசிகேத வேள்வி எனும் நல்லொழுக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால், மரணம் பிறவி என்ற வீண் சிந்தனைகளைத் தவிர்க்கலாம்' என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்தல் எளிது. சிறுகச் சேர்த்தால் பெருகும் தானே?

    சொர்க்கம் செல்லும் வழியை உலகுக்கு அறிவிக்க எழுதப்பட்டதல்ல நசிகேதன் கதை. மரணபயம் தொட்டக் கண்மூடித்தனங்களைத் தவிர்த்து, வாழ்நாளில் மனிதன் மனிதனாக அறிவோடும் அன்போடும் வாழவேண்டும் என்பதை உணர்த்தவே எழுதப்பட்டது. ஒரு மனிதனுக்கேற்பட்ட மரணக் கலக்கத்தினால் தானே இந்தத் தொல்லை நிகழ்ந்தது? மரணம் பற்றிய அறியாமையினால் தானே இந்த நிலை வந்தது? வாழும் நாளில் ஒழுக்கம் தவறாதிருந்தால் மரண அச்சம் தேவையில்லையே? பூமியிலேயே நிம்மதி கிடைக்குமே? சொர்க்கத்தில் நிம்மதியும் நிறைவும் தேடுவதை விட, வாழ்நாளில் பூமியில் பெறுவது இன்னும் மேன்மையல்லவா?

    'அப்பா அம்மாவிடம் போக வேண்டும், பழம் பாயசம் வேண்டும், பொம்மை வேண்டும் என்று மூன்று வரங்களைக் கேட்பானென்று பார்த்தால், எங்கேயோ போகிறானே பிள்ளை? வரம் தருவதாகச் சொல்லி இக்கட்டில் சிக்கினோமா? இதென்ன, வம்பாகி விட்டதே!' என்றெல்லாம் எமன் நினைத்தானா? அதை மனதில் கொண்டவன் போல், 'மூன்றாவது வரத்தைக் கேட்டு முடியப்பா சீக்கிரம்' என்றானா? அல்லது, எமன் இதுகாறும் நசிகேதனை மெய்யறிவு பெறத் தயார் செய்தானா?

    மெய்யறிவு பற்றிய நசிகேத போதனைக்கு, மூன்றாவது வரமே விதை.

2011/02/08

வேள்விக்கு நசிகேதன் பெயரிட்டான் எமன்


25
வேள்வித்தீ மாட்சியை வாய்ப்பாடாய் மீட்டுரைத்தோன்
வாள்முனைப் பாங்கறிந்து வந்தகாலன் - கேளென்றான்
என்னாதார் இல்லார் இதுவுந்தீ என்றினிமேல்
பொன்னாரம் ஒன்றினையும் போட்டு.

    வேள்வியின் சிறப்பையும் முறையையும் வாய்ப்பாடாகத் திருப்பிச் சொன்ன நசிகேதனின் வாள்முனை போன்ற கூர்மையான அறிவைக் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு ஒரு பொன்மாலையைச் சூட்டி, "இனி இந்த வேள்வியை உன்னுடையதாக உன்பெயரிட்டு அழைக்காதவர் எவருமில்லை" என்றான்.

பாங்கறிந்து வந்தகாலன்: பாங்கு அறிந்து உவந்த காலன்
என்னாதார்: என்று வழங்காதார்
இதுவுந்தீ: இது உன் தீ (நசிகேத வேள்வித் தீ)



    சடறக் கற்பதும், கற்றதைத் தெளிவாக வெளிப்படுத்துவதும் மாணவனுக்கு அழகு. மாணவனின் திறனறிந்து மெச்சி மேலும் நல்லறிவூட்டுவது ஆசிரியனுக்கு அழகு. தெளிந்த அறிவைப் பெற வழி செய்யும் கல்வியைக் கசடறக் கொடுப்பதே நல்ல மாணவனுக்குப் பெரும் பரிசு என்றாலும், தவறில்லாமல் கற்றான் என்பது தெரிந்து ஊக்கப் பரிசு கொடுப்பது, ஆசிரியரின் கடமை தாண்டிய அன்பை மேம்படுத்திக் காட்டுவதாகும்.

    'பொன்னால் செய்திருந்தாலும், ஆரம் சங்கிலியே. பிறவிப்பிணி பொன்னாரம் போன்றது. பொன்னைக் கண்டு மயங்காமல் அந்தச் சங்கிலியை அறுக்க, தெளிவான மனமும் ஒழுக்கமும் வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே எமன் பொன்னாரம் வழங்கினான் என்பதை நசிகேதன் புரிந்து கொண்டான்' என்று வடமொழிப் பாடலுக்கு ஆதிசங்கரர் வழங்கிய விளக்கம் சுவையானது.

2011/02/04

வேள்வி விவரம் சொன்னான் எமன்


24
அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள்
முடக்கவொரு மூச்சில் வருந்தீ - புடமிட்டப்
பொன்போலே மின்னும் மனிதமும் பற்றற்றுத்
தன்னுள்ளே தீவளர்க்கும் போது.

    திர் நிலைகளைச் சாராது, மனதுள் அடக்கம், அருள், அன்பு, அறம் எனும் சிந்தனைகளைச் செய்தபடி மூச்சை அடக்கிப் பழகுவதே வேள்வி; இந்த நல்லொழுக்க வேள்வித்தீ, மனிதரைப் புடமிட்டுப் பொன் போல் மின்னச் செய்யும் (என்றான் எமன்).


வேதமும் சாத்திரமும் நன்கு கற்றறிந்த ஞானி ஒருவர் இருந்தார். தனக்குச் சுய அறிவு முற்றும் வந்ததென்று நினைத்தார். தன்னை அறியும் வித்தையைப் பற்றி அந்த ஊர் அரசனுக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய பேரறிவைப் பகிரங்கப் படுத்த எண்ணினார். அரசனிடம் சென்று, "அரசே, முழுமையான சுய அறிவைப் பெறுவது எப்படி என்று உனக்குக் கற்றுத் தருவேன்" என்றார்.

அரசனும் அறிஞனே, எனினும் முழுமையான தன்னறிவைப் பெற பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். வாராது வந்த மாமுனி தாராது தரும் பேரறிவை விடுவானா? "பேரறிஞரே, உங்களுக்குப் பொன்னும் மண்ணும் பரிசளித்து மகிழ்வேன். தன்னறிவாம் பேரறிவைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவோடு கேட்டான்.

"ஒரு வேள்வி செய்ய வேண்டும்" என்றார் ஞானி. "மனதை ஒருமைப்படுத்தி மூச்சை அடக்கிப் பல காலம் செய்ய வேண்டிய வேள்வி. உன்னால் முடியுமா?"

"மூச்சைக் கட்ட ஓரளவுக்குத் தெரியும். மனம் தறிகெட்டு ஓடுகிறதே, எப்படி ஒருமைப்படுத்துவது என்று சொல்லித் தருவீர்களா?" என்றான் அரசன்.

"மனதை ஒருமைப்படுத்துவதே தன்னறிவின் முதல் படி. இதோ எதிரில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறானே, சூரியன். அவனே பேரறிவின் சின்னம். அவனையே மனதில் எண்ணி மூச்சைக் கட்டினால் ஒருமைப்படுத்தலாம்" என்றார் ஞானி.

"சூரியனை ஏன் மனதில் வரிக்க வேண்டும்?" என்றான் அரசன்.

"சூரியன் இருளை அகற்றி உலகெங்கும் விழிப்புக்கு வழி செய்கிறான்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சூரியன் என்பது மனிதன் வடித்த உருவம். சூரியன் என்ற உருவத்துக்கு எல்லையுண்டு. சுயேச்சையான சக்தி எதுவும் இல்லை. சுயேச்சையான எல்லயற்றத் தன்மையதான ஒளி சூரியனுக்குப் பின்னணியில் இருப்பதால், நான் ஒளியை மனதில் வரித்து மனதைக் கட்டுப்படுத்துகிறேன். சூரியனை வரித்தால் மனம் சூரியனுக்குக் கட்டுப்பட்டதாகி விடுமே? பிறகு மனம் நமக்கு எப்படிக் கட்டுப்படும்? மேலும், சுயேச்சையான குணத்தை ஒரு உருவத்துள் கட்டி வைத்தால், அவரவர் கட்டிய உருவங்களினால் கலவரம் வருமே? தன்னைப் பற்றிய அறிவை எப்படி வழங்கும்? ஒருமைப்பாடு எப்படி வரும்? என் மக்களுக்குள் உருவங்களால் பிரிவினை வரும். அவர்களுக்கு ஏற்பில்லாதது எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

"அப்படியா? சந்திரனை எண்ணி மனதைக் கட்டு. நான் பலமுறை அவ்வாறு செய்து சுய அறிவு பெற்றிருக்கிறேன்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சந்திரன் என்பதும் மனிதன் வடித்த உருவம். சந்திரனின் தன்மை தண்மை. மனித மனம் அன்பினாலும் பண்பினாலும் குளிர்கிறது. சந்திரனுக்குப் பதில் அன்பையும் பண்பையும் மனதில் வரித்தால், சந்ததியும் சுற்றமும் என்றைக்கும் கொண்டாடுவார்கள். நீங்கள் சொல்லும் வழி என் மக்களுக்கு உதவாது. அவர்களுக்கு உதவாத வழி எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

ஞானி யோசித்தார். வம்பாகி விட்டதே? "வெளி" என்றார். "மன்னா, உன் சிக்கலுக்குத் தீர்வு கண்டேன். வெளி உருவமற்றது, பரந்தது, எல்லையில்லாதது, தனித்தன்மையற்றது. வெளியை வரி" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "வெளியின் தன்மை என்ன? அளக்கமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை. வெளியின் குணங்களை மனதில் வரித்தால் மனம், நிறைவு மற்றும் நிலைத் தன்மைகளை அடையுமே? வெளியை அளக்க முடியும் - இதோ பாருங்கள்" என்று இரண்டு கைகளையும் பந்து போல் அடக்கி அவரிடம் காட்டினான். "இதோ, என் கைக்குள் சிறைப்பட்ட வெளியை இங்கிருந்து அங்கே எடுத்துச் செல்ல முடியும்" என்று நகர்ந்து காட்டினான். "வெளி என்பதை விட, வெளியின் தன்மைகளான அளவிடமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை என்ற குணங்களை வரிக்கும் மனிதம், குறுகிய ஆசைகளை விடுத்துப் பரந்த நோக்கத்துடன் செயல்படும். நீங்கள் சொல்லும் வெளி என்ற காரியம் என் மக்களுக்குப் பயன் தராது. மக்களுக்குப் பயன் தராத எதுவும் மன்னனுக்கும் பயன் தராது" என்றான் பணிவுடன்.

ஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து நீர் நெருப்பு ஒலி உரு கண்ணாடி திசை என்று உருவமும் அருவமுமாகப் பலவற்றை எடுத்துச் சொன்னார் ஞானி. எல்லாவற்றையும் பணிவோடு கேட்டு, குணங்களான காரணங்கள் குண வெளிப்பாடுகளான காரியங்களை விட மேன்மையானவை என்று சொல்லி ஏற்க மறுத்தான் மன்னன். காரணங்களே மனதை ஒருமைப்படுத்தாத நிலையில், காரியங்கள் மனதைக் கட்டாது என்று பணிவாகச் சொன்னான்.

ஞானி சற்று யோசித்து, "தான்" என்றார். "மன்னா, தன்னைத் தானே மனதில் வரித்து மூச்சைக் கட்ட வேண்டும். சுயம், அதாவது தன் ஆத்மாவை விட தன்னறிவைப் பெற்றுத் தரும் அருவம் எதுவும் இல்லை" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "தான் என்று நீங்கள் குறிப்பிடும் சுயம், சுயமல்ல. எல்லையுடையது. அளவுடையது. நிறைவில்லாதது. தான் என்பது சாரமாகும். மனிதத்தின் அடையாளம். மனிதம் என்பதோ பரந்த எல்லையற்ற அளவுகடந்த நிறைவான உணர்வைக் குறிக்கும். மொத்த மனிதத்தையும் மனதில் வரித்தால் மொத்த மனிதத்தின் தன்மைகளான நேயங்கள், அதைவிட மாற்றுக்குறைந்த 'தான்' என்பதற்கு வழிகாட்டுமே? தன்னை மனதில் வரிப்பது என் மக்களுக்கு ஏற்ற வழியல்லை; மக்களுக்கு ஏற்ற வழியே மன்னனுக்கு ஏற்ற வழி" எனறான் பணிவுடன்.

ஞானி பார்த்தார். சரிகை முண்டாசைக் கழற்றி வீசினார். பட்டு மேல்துண்டை மன்னன் காலடியில் வைத்து, மன்னன் காலில் விழுந்தார். "ஐயா, நான் ஞானி இல்லை. நீரே ஞானி. இந்தப் பட்டு மேல்துண்டு என்னுடைய காணிக்கை. என்னை உமது மாணவனாக ஏற்க வேண்டும். தன்னறிவு பெறும் வழியை எனக்கு விளக்க வேண்டும்" என்று மன்னனைக் கெஞ்சினார்.

மன்னன் அதிர்ந்தான். "ஐயா! என்ன இது! என்னைப் போன்றவருக்குப் பாடம் சொல்லி வழி காட்ட வேண்டிய உமக்கு நான் பாடம் சொல்வதா?" என்று பதறினான். ஞானியின் காலில் விழுந்தான். எழுந்து, "ஐயா, நீங்கள் தான் எங்களுக்குக் குரு. இருப்பினும் குரு-மாணவன் என்ற முறையை விட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் புரியும் உதவியாக, தன்னறிவு பெறும் முறையை எனக்குத் தெரிந்த வரையில், உங்களுக்குச் சொல்கிறேன்" என்றான்.

பிறகு ஞானியைத் தன் அரண்மனைக்குள் வருமாறு அழைத்தான். இருவரும் அரண்மனைப் பணியாளர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவனருகில் சென்றார்கள். "ஐயா பேரறிஞரே... இங்கே உறங்கிக் கொண்டிருப்பவனை வைத்து உங்களுக்கு நானறிந்ததைச் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

"இவன் தூங்கிக்கொண்டிருக்கிறானே?" என்று இழுத்தார் ஞானி.

"துயிலில் இரண்டு வகை. இருவகையிலும் ஐம்புலன்களும் புறவிசைகளும் மனிதனைப் பாதிப்பதில்லை. அறிவு கூட அடங்கியே இருக்கிறது. விழித்துக் கொள்ளக்கூடிய துயிலை வைத்து மட்டுமே என்னறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். மீளாத்துயிலுக்குப் பிறகு ஏற்படுவதை நானறியாததால், மனதையும் அறிவையும் கட்டுப்படுத்தி வைக்கும் சாதாரண உறக்க நிலையை வைத்து நான் அறிந்ததை எடுத்துக்காட்டுகிறேன். என் குறையான அறிவுக்கு என்னை மன்னியுங்கள். விரும்பினால் மேலும் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

    தை முடியவில்லை; தொடர்கிறது. மேற்கண்ட உபனிஷதக் கதை பலருக்குத் தெரிந்திருக்கலாம். காசி மன்னன் அஜாதசத்ருவுக்கும் பிராமண ஞானி பாலாகிக்குமிடையே நடந்த உரையாடல். நசிகேதன்-எமன் உரையாடலுக்குப் பொருந்தியதால் பாதிக்கதையை என்னால் இயன்றவரை எளிமைப்படுத்தி இங்கே மேற்கோளாகச் சொல்லியிருக்கிறேன். (உபனிஷதக் கதை சற்று கனமானது; உட்பொருளைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் - புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தவறாக ஏதும் சொல்லியிருந்தால் திருத்தி, மன்னிக்கவும்)

    எத்தனை உருவங்களை மனதில் வைக்கிறோம்! வைத்தும் உருப்படியாக ஏதாவது செய்கிறோமா? உருவங்களின் தன்மைகளை மறந்து விடுகிறோமே? 'கருணையின் வடிவம்' என்று உருவத்தை மனதில் ஏற்றிவிட்டுத் தகாத செயல் புரிகிறோம். என் உறவினர் ஒருவர் தன் பிள்ளையிடம் சொன்னது:"முண்டம், வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு. சாமி கும்பிட்டிருக்கேன் தெரியுதில்லே? இன்னொரு தடவை தொநதரவு செஞ்சே, பல்லைத் தட்டிக் கைல குடுத்துருவேன்". என்ன கும்பிட்டு என்ன பயன்?!

    இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் வேள்வி, மூச்சையடக்கி மனதைக் கட்டும் வித்தையாகும். இன்றைக்கு 'யோகா' என்று உலகமுழுதும் பழகி வருகிறது. அன்றைய இந்தியாவில் சில சமூகங்கள் பழகிய வித்தை. பிராணாயாமம் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டிருக்கிறேன். மூச்சை நன்கு உள்ளிழுத்து அடக்கிச் சீராக வெளியிடும் முறை. எல்லோரும் செய்ய வேண்டிய பயிற்சியாகும். உடல் மற்றும் உள்ள உபாதைகள் பலவும் இந்தப் பயிற்சியினால் குணமாகும் என்கிறார்கள். மூச்சை இழுத்து அடக்கிச் சீராக வெளியிடுவதில் பலனுண்டு. மேலாக, நல்ல எண்ணங்களை மனதில் தேக்கி அவற்றினூடே மூச்சடக்கிப் பழகினால், நிச்சயம் பரவலான பலனிருக்கும் என்றே தோன்றுகிறது.

    'அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கல்களை அடுக்கி அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி' என்றான் எமன். 'பற்றற்ற' என்றும் சொன்னான் (எத்தனை ற!). இதற்குப் பொருள், எல்லாவற்றையும் துறந்த நிலை அல்ல. இன்பம்-துன்பம் போன்ற இருநிலை-எதிர்நிலைகளை அறிந்து, எந்த நிலையையும் முற்றிலும் சாராமல் இருப்பதையே 'பற்றற்ற நிலை' என்றான் எமன். 'மனிதம் இருநிலைகளையும் அனுபவிக்க வேண்டும்; அனுபவத்தால் அறிய வேண்டும்; அறிந்த பின் தெளிய வேண்டும்' என்பதே எமன் சொன்னது.

    பற்றறுத்த நிலையில் நாள்தோறும் நல்லெண்ணங்களை மனதில் தேக்கி, மூச்சடக்கிப் புரிய வேண்டிய வேள்வியைப் பற்றி எமன் விவரித்ததை நசிகேதன் பொறுமையாகக் கேட்டான். மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்காக வேள்வி செய்வதாகச் சொன்னாரே தந்தை? எமனோ, 'தன்னுள்ளே தீ வளர்த்து நல்லெண்ண நெய் வார்க்க வேண்டும்' என்கிறாரே? மரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? அவன் மனதில் மரணம் குறித்த சந்தேகங்கள் எழத் தொடங்கின.

2011/02/01

வேள்வித்தீ பற்றிச் சொன்னான் எமன்


23
புள்ளகத் தோடே பகர்வேனே பிள்ளைநீ
தெள்ளெனக் கேட்டத் தகவலதை - கள்ளமாய்
எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்ளுக்குள் தாழிட்டத் தீ.

    சிறுபிள்ளையானாலும் நீ தெளிவாகக் கேட்டதனால் வேள்வி விவரங்களைச் மகிழ்ச்சியோடு சொல்கிறேன்; எள்ளுக்குள் எண்ணை மறைவாக உறைவது போல், வேள்வித்தீ நம் மனதினுள்ளே அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது (என்றறிவாய் என்றான் எமன்)


புள்ளகம்: பெருமகிழ்ச்சி
கள்ளமாய்: மறைவாக
தாழிட்ட: பூட்டிய, அடக்கிவைத்த



    பார்வையைத் தருவன கண்கள். கண்களுக்குக் காட்சியைத் தருவதோ ஒளி. கயல்விழி, மான்விழி, வேல்விழி என்று விழியழகைக் கொண்டாடினாலும், ஒளியின்றி விழிகளால் பயனில்லை. எனினும், ஒளி விந்தையானது. ஒளியைப் பயன்படுத்தி, இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் செய்து, கண்களை ஏமாற்ற முடியும். உள்ளேயும் ஒரு ஒளி உண்டு. அறிவு. கண்களுக்குப் புலப்படுவதும் அறிவுக்குப் புலப்படுவதும் வேறுபடலாம். உள்ளொளியைப் பயன்படுத்தும் பொழுது, வெளியொளியால் கண்களுக்குத் தென்படாதக் காட்சிகளையும் காண முடியும். ஐம்புலன்களும் அவ்வாறே. புறவிசைகளோடு தொடர்பு கொள்ளவும், முடிந்தால் அடக்கியாளவும் மட்டுமே நம் ஐம்புலன்களைப் பழக்கப்படுத்துகிறோம். அவற்றை உள்ளே திருப்பினால், நம் அகத்தே தறிகெட்டோடும் விசைகளைக் கட்டுப்படுத்தி ஆளலாம். உள்பார்வை, உள்பேச்சு, உள்மூச்சு, உள்கேள்வி, உள்ளுணர்வு எனும் இவற்றைத் தம் வாழ்நாளில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதே இல்லை.

    'கண்ணை நம்பாதே' என்பது பிரபலத் திரைப்பாடல் மட்டுமல்ல, உலகின் மிகத் தொன்மையான சித்தாந்தங்களுள் ஒன்றாகும். கடோபனிஷதச் சமகாலக் கிரேக்க அறிஞர்களான சாக்ரேட்சும் ப்லேடோவும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ப்லேடோ தன் மாணவனான அரிஸ்டாடிலுக்குச் சொன்னதாகச் சொல்லப்படுவது: கண்களுக்கு வெளிப்பார்வை உள்பார்வை இரண்டும் உண்டு. வெளிப்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு மாற்றமும் அழிவும் தென்படும்; உள்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு உண்மை மட்டுமே புலப்படும். வெளிப்பார்வையினால் கிடைப்பது அபிப்பிராயங்களும் பேதங்களும்; உள்பார்வையினால் கிடைப்பது ஒருமையும் தெளிவும். வெளிப்பார்வையில் கிடைக்கும் அறிவு தினம் மாறும் தன்மையது, வளர்ச்சி பெறாதது; உள்பார்வையில் கிடைக்கும் அறிவானது முதிர்ச்சியைத் தருவதாகும், ஒரு இலக்கினை நோக்கிச் செலுத்துவதாகும். (plato, ~400 bce, republic)

    நம் உடலின் ஓய்வு அல்லது இயல்பு வெப்பநிலை 36°C-37°C வரை என்கிறார்கள். இருப்பினும், வெளியே 20°-25°C வரை மட்டுமே ஏற்க, பொறுக்க முடிகிறது. அதற்குக் குறைவாகவோ கூடுதலாகவோ போனால், பலருக்குக் குளிர் அல்லது வெப்ப உபாதைகள் தோன்றுகின்றன. இதமான வெளி வெப்பநிலையை விட அதிக வெப்பம் நமக்குள்ளே இருப்பது உடலியக்கக் காரணத்தோடு எனினும், வியக்க வைக்கிறது. உள்வெப்பத்திற்குத் தீ எங்கிருந்து வந்தது? இந்தச் சிந்தனை, அறிவியல் வழியை விட ஆன்மீக வழியில் சுவாரசியமான, ஆழ்ந்த, திடுக்கிடும் நுண்மைகளை வழங்கவல்லது. ஒரு மழைநாளுக்கான சிந்தனையாக ஒதுக்கலாம். மேற்கோளுக்குத் தத்துவப் புத்தகங்களும், நொறுக்குத் தீனியும், ஆத்திகம் கலவாது விவாதிக்க ஏற்ற நட்பும் இருந்தால் இத்தகையச் சிந்தனை நிறைவூட்டும்.

    மனுக்குச் சங்கடம். நசிகேதனின் அறியுந்திறனை ஆழம் காணவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம்; வரமளித்தால் அது பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இன்னொரு புறம். அறிந்தே விழலுக்கு நீரிரைக்க யாருக்கு மனம் வரும்? 'பிறப்பற்ற இடம் ஏகும் வேள்வியைப் பற்றிப் பிள்ளைக்குச் சொல்வதா? புரியுமா? புரிந்தாலும் செயல்படுத்துவானா?' போன்ற பல ஐயங்களுக்கிடையே நசிகேதனின் இரண்டாம் வரத்துக்கான விவரங்களைச் சொல்லத் தொடங்கினான். முதலில் வேள்விக்கான தீயை எப்படி அடையாளம் காண்பதென்று சொன்னான். 'வெளிப்பார்வைக்கு எள் தெரியுமே தவிர எண்ணை தெரியாதது போல், உள் பார்வைக்கும் இந்தத் தீ எளிதில் தெரியாது. வேள்விக்கான தீ மனதின் ஆழத்தில் புதைந்திருக்கிறது.' என்று எடுத்துச் சொன்னான்.

    'அம்பர வேள்விக்கான தீ வளர்க்க, பசுஞ்சாண வரட்டியும் சுள்ளியும் அடுக்கி நெய் வார்த்து மந்திரம் சொல்ல வேண்டியதில்லையா? உள்ளுக்குள் தாழிட்ட தீ என்கிறாரே எமன்? உள்ளுக்குள் தீ எங்கே பூட்டி வைத்தோம்? அதைக் கண்டாலும் வேள்வி எப்படிப் புரிவது?' என்று நசிகேதன் சிந்தித்தான். தன் தந்தை தீ வளர்த்துப் பகட்டாகப் புரிந்த அண்டவாகை வேள்வி நினைவுக்கு வந்தது. 'அப்படியென்றால் தந்தையின் வேள்வி அவருக்குச் சொர்க்கத்தை நிலையாகத் தராதா? மழைநீர் போல் இன்னொரு பிறவியெடுத்து சுழலப்போகிறாரா? தந்தையைப் போல் இன்னும் எத்தனை பேர் உலகில் தீ வளர்த்து வேள்வி புரிகிறார்கள்! பலனில்லை என்பதறியாமல் வேள்வி செய்கிறார்களே!' என்று உலகமக்களின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'பொன்னும் மணியும் பசுவும் பூமியும் தீயிலிட்டு எதைத் தேடுகிறார்கள் இந்தக் கண்மூடிகள்? இவர்களின் பிணிக்கு மருந்து உள்ளிருப்பது தெரிந்தும் வேறு எங்கோ தேடுகிறார்களே!' என்று மக்களின் கண்மூடித்தனத்தை எண்ணிக் கலங்கினான். எமனிடம் விவரங்களைக் கேட்டறிந்து, தன் தந்தைக்கு மட்டுமல்லாது, மற்றவருக்கும் எடுத்துச் சொல்லி அவர்கள் அறியாமையைப் போக்குவதென்று தீர்மானித்தான். தீ வளர்க்கும் விதத்தையும் வேள்வி புரியும் விவரங்களையும் அறிந்து கொள்ள ஆயத்தமானான்.