வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/02/11

மூன்றாம் வரம் கேளென்றான் எமன்


26
நான்கு நெறிகளையும் நெஞ்சில் நிறுத்திநிதம்
மூன்று முறையேனும் மூச்சடக்கும் மாந்தர்
இருநிலை விட்டிருப்பார் என்றும் இனியுன்
ஒருவரம் வேண்டியே ஓய்.

    டக்கம், அருள், அன்பு, அறம் எனும் நான்கு நெறிகளை மனதில் எண்ணியபடி தினமும் மூன்று முறையாவது மூச்சையடக்கிப் பழகும் மனிதர்கள், மரணம் பிறவி எனும் இரண்டு நிலைகளையும் துறப்பார்கள்; இனி எஞ்சியிருக்கும் உன் ஒரு வரத்தை கேட்டு முடி (என்றான் எமன்).




    'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்' என்றார் வள்ளுவர். 'தெய்வம் வானில் உறையும்' என்ற பொது நம்பிக்கையினால் சொன்னாரே தவிர, தெய்வமாக வாழ வானுலகம் செல்ல வேண்டியதில்லை என்பதே வள்ளுவர் வாக்கின் மறைபொருள்.

    இனிப்பு மருந்து. மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகி விடும் என்ற நம்பிக்கை. மருந்துண்ணும் அவசியமே இல்லாது நோயின்றி வாழலாம் என்றால், 'அதெப்படி?' என்று நகைப்பதில்லையா? பல மருந்துகளை ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்த்து, முடிவில் 'சிறுவயது முதலே உடல் நலத்தைப் பேணுவோர்க்கு நோய் வராது, மருந்தே தேவையில்லை' என்று அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவது நமக்குப் பிடிக்கும். வள்ளுவரைப் போல் மனிதமனம் அறிந்தவர் உண்டோ? மரண பயம் மன நோய். சடங்குகளும் கண்மூடித்தனங்களும் பயனில்லா மருந்துகள். நல்லொழுக்கம், பயனற்ற மருந்தின் அவசியத்தை நீக்கும் முறையானப் பேணல். 'மனிதனாக வாழலாம்' என்றால் கேட்போமா? 'அடப்போய்யா, தாடிக்காரரே!' என்போம். அதனால், 'தெய்வமாக வாழலாம்' என்றார் வள்ளுவர். 'ஆகா!' என்று இன்றுவரைத் தலையாட்டுகிறோம். 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' எனும் வரிகள், இரண்டு நிமிட இசை ரசனைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தால், ஏதேனும் செய்வோம்.

    'நசிகேத வேள்வியை தினம் மூன்று முறை செய்தவர்கள் மோட்சம் பெறுவார்கள்' என்று இந்தப் பாடலுக்குப் பொருள் கொள்ளலாம்; 'தினமும் மூன்று முறையாவது நசிகேத வேள்வி எனும் நல்லொழுக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால், மரணம் பிறவி என்ற வீண் சிந்தனைகளைத் தவிர்க்கலாம்' என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்தல் எளிது. சிறுகச் சேர்த்தால் பெருகும் தானே?

    சொர்க்கம் செல்லும் வழியை உலகுக்கு அறிவிக்க எழுதப்பட்டதல்ல நசிகேதன் கதை. மரணபயம் தொட்டக் கண்மூடித்தனங்களைத் தவிர்த்து, வாழ்நாளில் மனிதன் மனிதனாக அறிவோடும் அன்போடும் வாழவேண்டும் என்பதை உணர்த்தவே எழுதப்பட்டது. ஒரு மனிதனுக்கேற்பட்ட மரணக் கலக்கத்தினால் தானே இந்தத் தொல்லை நிகழ்ந்தது? மரணம் பற்றிய அறியாமையினால் தானே இந்த நிலை வந்தது? வாழும் நாளில் ஒழுக்கம் தவறாதிருந்தால் மரண அச்சம் தேவையில்லையே? பூமியிலேயே நிம்மதி கிடைக்குமே? சொர்க்கத்தில் நிம்மதியும் நிறைவும் தேடுவதை விட, வாழ்நாளில் பூமியில் பெறுவது இன்னும் மேன்மையல்லவா?

    'அப்பா அம்மாவிடம் போக வேண்டும், பழம் பாயசம் வேண்டும், பொம்மை வேண்டும் என்று மூன்று வரங்களைக் கேட்பானென்று பார்த்தால், எங்கேயோ போகிறானே பிள்ளை? வரம் தருவதாகச் சொல்லி இக்கட்டில் சிக்கினோமா? இதென்ன, வம்பாகி விட்டதே!' என்றெல்லாம் எமன் நினைத்தானா? அதை மனதில் கொண்டவன் போல், 'மூன்றாவது வரத்தைக் கேட்டு முடியப்பா சீக்கிரம்' என்றானா? அல்லது, எமன் இதுகாறும் நசிகேதனை மெய்யறிவு பெறத் தயார் செய்தானா?

    மெய்யறிவு பற்றிய நசிகேத போதனைக்கு, மூன்றாவது வரமே விதை.

6 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

//"மரணபயம் மன நோய்."//

சிறு வயதில் எல்லோருக்கும் மரணம் உண்டு என்பது தெரிய வந்தபோது அதிர்ச்சியாக இருந்தது..! நாமும் செத்துப் போவோம் என்ற உணர்வு தந்த தாக்கம் மறைய சில நாள் ஆனது. இப்போ கூட என்ன நினைக்கிறோம்...சக மனிதர்கள் காலம் முடியும்போது, நமக்கு இப்போ இல்லை இன்னும் இருபது முப்பது வருடங்கள் இருக்கும் என்று தோன்றும்... ! "இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்...அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்துட்டான்..."

meenakshi சொன்னது…

படிக்க இனிமையாக இருக்கிறது வெண்பா. 'தெய்வமாக வாழ வானுலகம் செல்ல வேண்டியதில்லை' குரலின் மறைபொருள் இன்றுதான் புரிந்தது.

//'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' எனும் வரிகள், இரண்டு நிமிட இசை ரசனைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தால், ஏதேனும் செய்வோம்.//
உண்மைதான். ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுதான். கசடற கற்று பின் நிற்க அதற்கு தக. நல்ல விஷயங்கள் ஒன்றிரண்டாவது எடுத்து மனதில் நிறுத்தி, அதை இறுதி வரை கடை பிடிக்க வேண்டும். இதற்கு முதலில் முயற்சியாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
மரணம் நிம்மதி, எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு. வாழ்வதற்கு கொடுக்கும் விலையையும், வலியையும் விட நிம்மதியை கொடுக்கும் மரணம் ஒன்றும் பெரிய வலியை கொடுக்காகது என்று நம்புகிறேன்.

மூன்றாவது வரத்தை அறிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறது.

பத்மநாபன் சொன்னது…

நான்கு மூன்று, இரண்டு, ஒன்று , என படிப்படியாக இறங்கிய வெண்பா நன்றாக இருந்தது...
நசிகேத வேள்வியை உடலை பேணும் வேள்வியாக தினம் மூன்று முறை செய்ய சொன்னதும்... மரணபயத்தை வெல்ல மனம் பேணுதலின் அவசியம் என்றதும் சிறப்பு....
மரணம் என்றாலே நினைவு வரும் எமனிடமிருந்து சொர்க்கத்தை விட வாழும் நாளின் சுகத்தை பற்றிய விளக்கங்கள் அந்த பயத்தை நீக்க உதவும்...

சிவகுமாரன் சொன்னது…

இந்த இடுகையை படித்துக் கொண்டு இருக்கும் பொது எனக்கு ஏனோ " மண்ணில் தெரியுது வானம் - அது நம் வசப்படலாகாதோ " என்ற பாரதியின் வரி நினைவுக்கு வந்தது. இங்கு பொருந்துகிறதா?

அப்பாதுரை சொன்னது…

வருக ஸ்ரீராம், meenakshi, பத்மநாபன், சிவகுமாரன், ...

'மனிதனென்பவன் தெய்வமாகலாம்' பாட்டைக் கேட்கும் போதெல்லாம் 'மண்ணில் தெரியுது வானம்' வரி எனக்கு நினைவு வரும்; ஆச்சரியமாக இருக்கிறது உங்கள் கருத்து சிவகுமாரன்!

எழுதி வைத்திருந்த இடுகையை குறித்த காலத்துக்குள் திருத்த மறந்து விட்டது! மன்னிக்கவும்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோதரா, வெண்பா இதமாக இருக்கிறது வாசிப்பதற்கு. அத்தோடு தங்களின் ஆன்மீகத் தகவல்கள் மனதிற்கு உபயோகமாகும் என்பதிலும் ஐயமில்லை.