வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/03/01

வரம் மாற்ற மறுத்தான் நசிகேதன்


30
நொய்வதல்லா உண்மை உயிர்ப்பயணம் நாளறியார்
எய்தவல்லா ஏற்றமென்றீர் மெய்விரதா - மெய்யறிவில்
முன்வரம் நீர்தானே? மூவாசான் நீர்தானே?
என்வரம் மாற்றுவ தேன்?

    வாய்மையை விரதமாகக் கொண்டவரே! எளிதில் விளங்கா நுட்பமென்றும், காலத்தை வென்றவர்களும் பெற முடியாத அறிவென்றும் உயிரின் பயணம் பற்றிச் சொன்னீர்கள். உண்மையான அறிவு இல்லையென்றால் நான் முன்பு பெற்ற வரங்கள், நீர் போல் மறையக் கூடியவை அல்லவா? நீங்கள் தானே மெய்யறிவை மூவகையிலும் பெறச்செய்யும் ஆசான்? நான் கேட்ட வரத்தை மாற்றலாகுமா? (என்றான் நசிகேதன்).

நொய்வது: எளிதாவது
நாளறியார்: காலம் ஒரு பொருட்டல்லாதவர், தேவர்
மெய்விரதன்: எமன்
மெய்யறிவில்: மெய்+அறிவு+இல் எனப்பிரித்தால் 'உண்மையான அறிவற்ற' என்றும், மெய்+அறிவில் எனப்பிரித்தால் 'உண்மையான அறிவுடைய' என்றும் பொருள்
முன்வரம்: முன்பு பெற்ற வரம்
மூவாசான்: அறிவு பெறக்கூடிய மூன்று வகையினையும் காட்டும் ஆசிரியன்
நீர்தானே: 'தண்ணீர் தானே' என்றும், 'நீங்கள் தானே' என்றும் பொருள் கொள்ளலாம்



    றிவை மூவகையில் பெறலாம். தெரிந்து, புரிந்து, அறிந்து கொள்வது அறிவு. தெரியாத ஒன்றைச் சொல்லிக் கொடுப்பது, தெரிய வைப்பதாகும். தெரிந்ததைப் பிழை திருத்திச் சீர்படுத்துவது, புரிய வைப்பதாகும். புரிந்ததைக் கொண்டுச் சுயமேம்பாட்டைத் தேட வைப்பதும், பலநேரம் தெரியாமலே புரிய வைப்பதும், அறிய வைப்பதாகும். பார்த்தால் தெரியும்; பழகினால் புரியும்; உணர்ந்தால் அறியும். எல்லா மாணவர்களும் மூவகையிலும் அறிவைப் பெற இயலாமல் போகலாம். மூவகையிலும் அறிவைப் பெறத்தக்க மாணவனை நல்லாசிரியன் அடையாளம் கண்டு மெருகேற்ற வேண்டும்; தவறினால் நல்லாசிரியக் கடமையிலிருந்து தவறியதாகும். தவறிய நல்லாசிரியர்களுக்கு மன நிறைவு கிடைப்பதில்லை.

    ஏழும் மூன்றும் பத்து என்பது தெரிதல். மூன்று ரூபாய்ப் பொருள் வாங்க கடைக்காரரிடம் கொடுத்த பத்து ரூபாயில், மிச்ச சில்லறையென்று அவர் ஐந்து ரூபாயைக் கொடுக்கும் போது, "ஏழு ரூபாய் அல்லவா பாக்கி தர வேண்டும்?" என்று சொல்ல வைப்பது புரிதல். 'சம்பளம் பத்து ரூபாய், சேமித்தது மூன்று போக ஏழு ரூபாய் மட்டுமே செலவழிக்க வேண்டும்' என்று கட்டுப்பாட்டுக்கான வழி காட்டுவது அறிதல். அறிவு மட்டுமே மனநிம்மதியைக் கொடுக்கும். அறிவால் மட்டுமே எதையும் கட்ட முடியும். பத்து ரூபாய் செலவுக்கே இப்படியென்றால், வாழ்க்கையின் கணக்கைச் சரிகட்டி நிம்மதியைச் சேர்க்க அறிவு வேண்டாமா? (இந்த அறிவு எனக்கில்லை என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்).

    வாழ்வில் நிம்மதியைக் கொடுக்க வல்ல எந்த நெறிக்கும் மேற்சொன்ன மூவகை அறிதலைப் பொருத்திப் பார்க்கலாம். செயல்களின் விளைவுகளைத் தெரியாமலே, புரியாமலே, அறிந்து கொள்ளும் பாங்கு மனிதருக்கு மட்டுமே உண்டு. அதை எப்படிப் பயன்படுத்துகிறோம்?

    ஒரு கதை.

    இரண்டு ஆசிரியர்கள். நான்காம் வகுப்பில் கணிதம் சொல்லித் தருகிறார்கள். சதவிகிதம் பற்றிய பாடம். 'சதவிகிதம் என்றால் என்ன?' என்று முதலில் சொல்லிக் கொடுக்கிறார்கள். 'நூறு என்ற மொத்தத்தின் அடிப்படையில், நூறு வரையிலான எண்களை வைத்து, மொத்தத்தின் பகுதிகளை அளக்க சதவிகிதம் ஒரு முறை' என்று தெரியச் சொல்லிக் கொடுக்கிறார்கள். "அப்படியென்றால்?" என்கிறாள் ஒரு மாணவி. "அப்படியென்றால், அப்படித்தான்" என்று ஒரு ஆசிரியர் சொல்கிறார். இன்னொரு ஆசிரியர், "நூறு என்பது முழுமையான பகுதி. இதோ உன் கையில் நான் கொடுக்கும் தித்திப்பான லட்டைப் போல். இந்த முழுப் பகுதியில் நூறு சிறு பகுதிகள் இருக்கின்றன, இந்த லட்டில் இருக்கும் நூறு பூந்திப் பந்துகள் போல். இந்த லட்டைப் பத்தாகப் பிரித்தால் பத்து பூந்திகள் கொண்ட சிறு பந்துகளாகப் பிரிக்கலாம். அல்லது, இந்த லட்டை இரண்டாக உடைத்து ஒரு பாதியை உன்னிடம் கொடுத்தால், என்னிடம் எத்தனை பூந்திகள் உள்ளன என்று நீ கண்டுபிடிக்கலாம். அல்லது லட்டின் பூந்திகளை வகுப்பில் இருப்பவருக்கெல்லாம் பிரித்துக் கொடுத்தால் முழு லட்டின் பகுதி ஒவ்வொருவரிடமும் இருப்பதை அளந்து பார்க்கலாம். முழு அளவு நூறை விட அதிகமாகாது என்றும் தெரிந்து கொள்ளலாம்" என்று, உதாரணங்களுடன் பிழை திருத்திப் புரியச் சொல்லிக் கொடுக்கிறார். "இதைப் புரிந்து கொள்வதால் என்ன பயன்?" என்கிறாள் அந்த மாணவி. "நீ ஐந்தாம் வகுப்பு போவதற்கு இதை அறிய வேண்டும்" என்று முதல் ஆசிரியர் பதில் சொல்கிறார். இரண்டாவது ஆசிரியர் புன்னகைக்கிறார்.

    முப்பது வருடங்கள் ஓடுகின்றன.

    ஆசிரியர் தின விழாவில் இந்திரா நூயி பேசுகிறார்: "இன்றைக்கு நான் உலகத்தின் மிகப்பெரிய நிறுவனத்தின் தலைவியாக இருப்பதற்கு ஒரு காரணம், நான்காம் வகுப்பில் எனக்கு அறிவு வழங்கிய ஆசிரியனல்லவா? அந்த ஆசிரியன் அறிய வைத்ததால் தானே இன்றைக்கு என் நிறுவனத்தின் வளத்தையும், செயல்திறனையும், வளர்ச்சியையும், தேவையையும் ஒரு முழு அளவின் அடிப்படையில் திட்டமிட்டு அளந்து செயலாற்ற முடிகிறது?"

    இரண்டு ஆசிரியர்களுமே தங்கள் தொழிலைச் செய்தார்கள். ஒருவர் மட்டுமே கடமையைச் செய்தார். வளர்ந்து மேம்பட்ட அந்த மாணவி, தன் மேன்மைக்கு ஒரு காரணமாக ஆசிரியனை நன்றியுடன் நினைக்குமளவுக்கு, ஒரு ஆசிரியர் மட்டுமே அறியும் அறிவை அவளுக்கு வழங்கினார். அதுவே நல்லாசிரியரின் இலக்கணம். அந்த மாணவியும் நல்லாசிரியரை நாடியது இங்கே முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அதுவே நல்ல மாணவரின் இலக்கணம்.

    சாதாரணக் கணிதத்துக்கே இப்படி என்றால், மரணத்தின் தன்மையறிய, நுட்பமறிய, மூவாசான் தானே தேவை? மரணமடைந்தவர்கள் போகுமிடமாகச் சொல்லப்படும் எமனுலகின் அதிபதியிடம் பெறாமல், இந்த அறிவை எவரிடம் பெறுவது? அதனால், "மூவாசான் நீங்கள் தானே?" என்றான். நசிகேதனின் மன உறுதியை எடுத்துக் காட்டும் ஒரு பாடல் இது. அறியாமையைப் போக்குவதைக் குறிக்கோளாகக் கொண்ட மாணவன் அல்லவா? 'வேறு வரம் கேள்' என்ற எமனின் கோரிக்கையை ஏற்க மறுத்தான்.

    அறிவுள்ள பிள்ளையல்லவா, முன் கேட்ட வரங்களை ஒரு முறை நினைத்துப் பார்த்தான்: 'முதல் வரத்தால் தந்தை மனம் சீர்பட்டு என் மேல் அன்பு காட்டும்படி செய்தேன். அது நிலையானதா? தந்தை உயிருள்ள வரை நிலைக்கும். பிறகு, அந்த வரத்தால் பயனில்லை. இரண்டாவது வரத்தால் சொர்க்கத்துக்குச் செல்லும் வழியைத் தெரிந்து கொண்டேன். அது நிலையானதா? மனதை ஒரு நிலைப்படுத்தி உள்ளிருக்கும் தீயை வளர்த்து நல்லொழுக்கத்துடன் வாழ்ந்தாலும், இறந்த பிறகு என்ன ஆகுமென்று யாருக்குத் தெரியும்? உயிர்ப்பயணம் பற்றித் தெரியாதே? உடனே சொர்க்கம் செல்வோமா? சொர்க்கமே சென்றாலும், அது நிலையானதா? நற்பயனுக்கான நேரம் முடிந்ததும், மறுபடியும் விதை பயிராகி விதையான கதை தானே? பயனுள்ள வரமென்று நினைத்து இரண்டாவது வரத்தைக் கேட்டேன், அதுவும் நிலையில்லை என்பது புரிந்து விட்டது'.

    நசிகேதன், தான் கேட்ட வரங்களிலிருந்தே தன் அறிவை வளர்த்தான். எமனிடம், "ஐயா, நீங்கள் முன்பளித்த வரங்களின் பலன்கள் நீரைப் போன்றது. இன்று பெருகி ஓடும், நாளை வற்றி விடும். நிலையில்லாதவை" என்றான். "மேலும் மரணத்தைப் பற்றிய உண்மை மிக நுட்பமானது, புரிந்து கொள்ள நாளாகும், என்றைக்கும் இளமையைப் பெற்றிருக்கும் தேவர்களுக்குக் கூடப் புரியாதது என்றெல்லாம் சொல்லிவிட்டு, வேறு வரம் கேள் என்று சொல்கிறீர்களே?" என்றான். "என்னய்யா கிண்டலா? இப்படி ஆசை காட்டி மோசம் செய்யலாமா?" என்று கேட்கவில்லை; பண்புடையவன். "நிலையற்ற பலனுடைய வரங்களை விட, என் காலத்துக்குப் பின்னும் என்றைக்கும் நிலைக்கும் அறிவையே பெற விரும்புகிறேன். அறிவை வழங்க உங்களை விடச் சிறந்தவரை அறியேன். வேறு வரம் வேண்டாம்" என்று தன் மன உறுதியை வெளிப்படுத்தினான் நசிகேதன். வெள்ளத்தால் போகாத, வெந்தணலால் வேகாத, கொடுத்தாலும் குறையாத அறிவை, கல்வியை, பெற விரும்பிய நசிகேதன் வேறு வரம் தேவையில்லை என்பதைப் பணிவாகச் சொன்னான்.

    புகழ்ச்சிக்கு யார் மயங்குவதில்லை? எமன் விதிவிலக்கா? 'மூவாசான் நீர்தானே' என்றது எமனைப் புகழ்வதற்கு எனினும், 'மெய்விரதா' என்றழைத்தான் நசிகேதன். அறத்தை விரதமாக, நெறியாகக் கொண்டதாகக் கருதப்படும் எமன், அரிச்சந்திரன், தருமன், பீஷ்மன் நால்வரையும் 'மெய்விரதன்' என்று அழைப்பார்கள். இவர்களில் அரிச்சந்திரனும் தருமனும் பீஷ்மனும் கணமாவது அறத்தை, நல்லொழுக்கத்தை, கைவிட்டவர்கள் (விவரங்களை ராமாயண மகாபாரதப் புராணங்களில் காணலாம்). எமன் மட்டுமே அறத்தைக் கணங்கூடக் கைவிடாதவன். அந்த விரதம், வாழ்க்கை நெறி நிலைக்கவேண்டி 'எம்பெருமை ஈனாதருள்' என்று பழிக்கஞ்சி வேண்டினான்.

    'அறத்தை விரதமாகக் கொண்டவரே, என்ன புரட்டப் பார்க்கிறீர்?' என்று மறைமுகமாகச் சொன்னான் நசிகேதன். எமன் தன்னிடம் வகையாகச் சிக்கினான் என்பது நசிகேதனுக்குப் புரிந்திருந்தது.

37 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

வரம் மாற்ற மறுத்ததில் மகிழ்ச்சி.. எப்படியும் எமனை வழிக்கு கொண்டுவரும் முயற்சியில் வெற்றி பெற்றால் வாழ்க்கை பயணத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும்.
லட்டை வைத்து சதவீதக் கணக்கு அருமை... தெரிதல், புரிதல், அறிதல் அறிவு சார் விளக்கம் அருமை ...இவை அனைத்தும் தாண்டினால் தெளிதல் தானாக வரும். மாணவியின் நன்றி பாராட்டுதல் சிறப்பு....அறிவும் உள் புகும் காலகட்டத்தில் நுழைந்தால் அதன் திறனே தனியான மதிப்பு தான் பெறுகிறது
எமன் கணநேரமும் அறம் தவறாவதவன் என்பது மிகச்சரியானது... பூமியின் சுழல் போல், சூரியனின் இயக்கம் போல், பிரபஞ்சத்தின் ஆட்சி போல்.. கணத்தின்கணம் தவறினாலும் என்ன நடக்கும் என்பது பயங்கரமானது... தவறவே தவறாது என்பதுதான் மனிதர்கள் இம்மாதிரி கதைகளில் கற்று தெரிந்து முழுமையாக உணர்ந்துகொள்ள வேண்டும்

மோகன்ஜி சொன்னது…

நசிகேதன் தான்கேட்ட அறிவைப் பெறாமல் விடுவதில்லை எனும் தன்னிலையில் காண்பிக்கும் உறுதி, அவனை ஒரு மேம்பட்ட மாணவனாய்க் காட்டுகிறது. ஆத்மவித்யையைப் பெற அவனிலும் பொருத்தமானோர் யார்?
உங்கள் லட்டுகதை நன்கு பொருந்திவருகிறது.

இங்கு ஒரு இராமகிருஷ்ணரின் கதை சொல்லத் தோன்றுகிறது.

ஒரு தேடல் நிறைந்த அறிவான மாணவன், சராசரியான ஆசிரியரிடம் சேர்வது,கொழுத்த தவளையை தண்ணீர்ப் பாம்பு கவ்வியது போலாகும். அந்தப் பாம்பால் தவளையை விழுங்கவும் இயலாதலால் பாம்புக்கும் வேதனை,தவளைக்கும் வேதனை.

இந்தத் தவளையையே ஒரு ராஜநாகம் கவ்வியிருந்தால் ஒரே விழுங்கலில் தவளை அதன் வயிற்றுள் போயிருக்கும். இரண்டுக்கும் வேதனை இருந்திருக்காது!

இந்தக் கதையில் ஆசிரியரின் விழுங்கல் தம்முள் மாணவனைச் சேர்த்து,தானாய் ஆக்குதல் என்று கொள்ளல் வேண்டும்.

என் கல்லூரி நாட்களில்,இராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவியார் அம்ருதானந்தர்,கடோவின் இந்தக் கட்டத்தில், எத்தனை விதமாய் அலசி தெளிவித்தார் என்பதைக் நினைவுகூர்கிறேன். அவர் எனக்களித்த கடோபநிஷதம் பற்றிய புத்தகம் என் பொக்கிஷங்களில் ஒன்று. நான் கடோவை வேதாந்த விசாரங்களிநூடே அனுபவித்தேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் புதுஅர்த்தம் தோன்றும்.

நீங்கள் லட்டாக தருகிறீர்கள். அருமை!

RVS சொன்னது…

மெய்யறிவில்
முன்வரம் நீர்தானே?
இதுதான் இரட்டுறமொழிதலா? (ஏதோ தெரிந்த தமிழில் கேட்கிறேன்)
நசிகேதன் கேள்வி கேட்கும் பாங்கு எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.

பூந்தி லட்டு விகிதாசார கணக்கு அருமை. தமிழ் வகுப்பில் கணிதம்!

geetha santhanam சொன்னது…

லட்டு கதை அருமை. இதுபோல் நிறைய லட்டு திங்க ஆசை. மோகன்ஜியின் பின்னூட்டமும் அருமை. அவருக்கு முன்பே கிடைத்த கடோ இப்பொழுதாவது உங்கள் மூலம் எங்களுக்குக் கிடைத்ததே நன்றி.

அப்பாதுரை சொன்னது…

நன்றி பத்மநாபன், மோகன்ஜி, RVS, geetha santhanam, ...

அப்பாதுரை சொன்னது…

மைக் மோகனா, பாம்பு-தவளை மிக subliminal பிரயோகம். கல்லூரி நாளில் இதைப் புரிந்து கொள்ள முடிந்ததா? ஆச்சரியமாக இருக்கிறது! என் கல்லூரி வட்டத்தில் விளக்கத்துக்கு விளக்கம் சொல்லி ஒரு வகுப்பு கழிந்திருக்கும். எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி மோகன்ஜி.

அப்பாதுரை சொன்னது…

RVS, நான் இல்லிங்க... நான் இல்லிங்க..
இரட்டுறமொழிதல் எல்லாம் எடுத்து விட்டு இந்தப் பின்னு பின்றீங்களே?
நீங்க சொல்றது சரினு தோணுது. இரட்டுறவும் சிலேடையும் ஒன்று என்று அறிக (என்று துணிச்சலோடு சொல்ல முடியவில்லை:). சிலேடைனா சாப்பிடுற வஸ்து என்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு சிலேடை பிடிக்கும்; சீடையும்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! ஆர்.வீ.எஸ் க்கு துணிந்தே சொல்லிடலாம் இரட்டுறமொழிதலும், சிலேடையும் ஒன்றே. சிலேடை எனும் பதம் சம்ஸ்க்ருத 'ஸ்லேஷை' என்பதிலிருந்து வந்தது. அங்கே காளிதாசன்.. இங்கே காளமேகம் .. இருவரும் அசத்தினார்கள் சிலேடையில்.
ஒரு சொல் அல்லது வாக்கியம் இரண்டு அல்லது அதற்குமேல் அர்த்தம் தொனிக்க உரைப்பதே இது..
எல்லோரும் சிலேடை என்றாலே காளமேகம் பாடியதையே சொல்வர்.. ஒரு மாற்றாய், அழகிய சொக்கநாதப் பிள்ளை என்பார் சிலேடையை
நல்மாணாக்கர் ஆர்.வீ.எஸ் க்கும், நல்லாசிரியர் அப்பாதுரைக்கும் இங்கே டெடிகேட் செய்கிறேன். இந்தப்பாடல் கரும்புக்கும் மயிலுக்கும் சிலேடையுரைத்தது

மேனியெல்லாம் கண்ணுறலால்
வேள்விரும்பும் தன்மையினால்
ஆனபசுந் தொகையினா
லாடலினால் -மீனவனேர்
மானபரா! நெல்லைநகர்
வாழுமுத்து சாமிமன்னா!
கானமயிலொப்பாம் கரும்பு.


கரும்புக்கு உடலில் கணு,வேளாகிய மன்மதன் விரும்பிக் கைக்கொண்டது,கரும்புக்கு அழகு அதன் பசுந்தோகை ஆடல்.

மயிலுக்கு தோகை எங்கும் கண். கந்தவேள் விரும்பிய வாகனம்,
கலாப மயில் தோகை விரித்தாடுதல் அழகு..

அப்பாஜி.. பத்மநாபனுக்கு உங்கள் பதில் ஆழமானது. அழகானது. விவாதங்கள் தொடரட்டும்.

அப்பாதுரை சொன்னது…

ஆழமான கருத்து பத்மநாபன்.
பிரபஞ்சத்தின் இயக்கம்.. புதைந்திருக்கும் harmony. 'தவறவே தவறாது' என்ற நம்பிக்கை, அதன் வழுவை, வழுவின் புள்ளி கோடி பூஜ்ஜிய சாத்தியத்தைக் கூட மறக்க வைத்து விடுகிறது. 'தவறாது' என்று ஏற்றுக் கண்மூடத் தயங்காத மனிதம், 'தவறும்' என்று அஞ்சி கண்திறக்கத் தயங்குவது பெரும் முரணாகப் படுகிறது. இது அறிவின் சாபமோ என்று எண்ணியிருக்கிறேன். நாலு வயதில் இல்லாத முரண், நாற்பது வயதுக்குள் வளர்ந்து கோட்டையாகி விடுகிறதே உள்ளுக்குள்?!

'என்ன நடக்கும் என்பது பயங்கரமானது'.. யோசிக்க வைக்கிறது. முடிவில் பயங்கரமில்லை; முடிவின் முடிவில் தொடக்கம் இருப்பதை அறிந்தால். தினம் முடிந்து தொடங்கிறது பிரபஞ்ச இயக்கம். தொடக்கமும் முடிவும் நமக்குத் தெரிவதில்லை, அவ்வளவே. ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடிந்தால் நாம் உணரவும் அறியவும் பதப்படுத்தப் பட்டிருக்கிறோம். (வயதானவுடன் இளைய தலைமுறையைக் குற்றம் சொல்வது இந்தத் தன்மையின் ஒரு மிகச் சிறிய உதாரணம்). நம் இயக்கங்களில் பிரபஞ்ச இயக்கத்தின் டிஎன்ஏ இல்லையோ? இருப்பதைப் புரிந்து கொள்ளவில்லையா? அதனால் தான் நிலையில்லாமல் புலம்புகிறோமோ? எது முக்கியம் என்று புரியாமல் குழம்புகிறோமோ? அப்படியும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எழாமல் இருக்கச் சாத்தியம் உண்டு என்று தெரிந்தும், 'விடிந்ததும் எழுவது தவறாது' என்று இயற்கை நியதிக்குட்பட்ட இயக்கத்தில் புதைந்த சட்டத்தை தானாகவே ஏற்று, தூங்குமுன் மறுநாள் பற்றித் திட்டம் போடுகிறது மனம். எழவில்லையென்றால் பயங்கரம் என்று அறிவு நினைப்பதேயில்லை. அதே அறிவு, நாம் ஏற்படுத்திய நியதிகளைச் சுற்றி இயங்குகையில் எங்கிருந்தோ பயங்கரத்தைக் கொண்டு வந்து விடுகிறது.

சாத்தியம் கடந்த முடிவில் இல்லாத இழப்பு, இழப்பின் பயங்கரம், சாத்தியங்கள் நிரம்பிய முடிவுக்கான பாதையில் இருப்பதாகப் படுகிறது. idea masquerading as action. ஒரு சிலர் மட்டுமே இவற்றுக்கான வேறுபாட்டைப் புரிந்து கொண்டு வாழ்வில் நிம்மதியை உண்மையாகவே பெறுகிறார்கள். இந்தப் பயிற்சி எங்காவது கிடைக்குமா தெரியவில்லை - நானும் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருக்கிறேன். prisoner of ideaவாக வாழ்க்கையைக் கழிக்காமலிருக்க நினைக்கிறேன்...பெருமூச்சு!

பெயரில்லா சொன்னது…

"நாளறியார்" nalla vaarthai.

பெயரில்லா சொன்னது…

thiru mohanji sonnathu vaasthavamm. guruvoda theekshai sishaynoda gnaana vekaththukku poruththama valanju kodukkalainaa guruvukkum keduthal sishyaalukkum keduthal. guru azhinja kathayum puraanathula irukku; sishyaal odungina kathayum puraanathula irukku.

meenakshi சொன்னது…

'மெய்விரதன்' அழகான பெயர்! இதன் விளக்கமும் அருமை!
'லட்டு' அருமையான கதை!
வெண்பாவும், விளக்கமும், பின்னூட்டங்களும் மிகவும் அருமையாகவும், சுவாரசியமாகவும் இருக்கிறது. படித்து, ரசித்து மாளவில்லை..........
தொடருங்கள்!

சிவகுமாரன் சொன்னது…

தெரிந்தது தெரியாதது புரிந்தது புரியாதது அறிந்தது அறியாதது .... திருவிளையாடல் வசனம் கேட்ட சுகம் கிடைத்தது.
லட்டுற மொழிதல் - விளக்கமும் , இந்திரா நூயியின் நன்றி நவில்தலும் இதம்.

சிலேடைக்கு மோகன்ஜியின் விளக்கமும் பாடலும் அருமை. போட்டு வாங்கிய RVS க்கு நன்றி

Santhini சொன்னது…

எழுத்துப்பிழையின் ஊடாக, உங்கள் நசிகேத வெண்பா அறிமுகம். நானும் நினைத்ததுண்டு, எத்தனை விதமான அறிவு இந்த சம்ஸ்க்ருத
நூல்களில் புதைந்து கிடக்கிறது, அவை நல்ல விளக்கங்களுடன் தமிழில் வருவது நல்லதென்று. உங்கள் முயற்சி, உங்களுக்கு பொழுதுபோக்கே ஆயினும் மிக நல்ல முயற்சி. கடோபநிஷத்தை முன்பே தமிழில் படித்திருந்தாலும், நினைவில் இருந்து விலகிவிட்ட
விவரங்கள், மீண்டும் உங்கள் எழுத்துக்களின் ஊடாக, மேலாண்மை எனும் கோணத்தில். சுவாரஷ்யமாகதான் இருக்கிறது.

நீங்கள் கேட்டிருந்த ஒரு விஷயம் குறித்து பேசலாமேனவே, இன்று எழுத துணிந்தேன். ////
.
/////ஒரு சிலர் மட்டுமே இவற்றுக்கான வேறுபாட்டைப் புரிந்து கொண்டு வாழ்வில் நிம்மதியை உண்மையாகவே பெறுகிறார்கள். இந்தப் பயிற்சி எங்காவது கிடைக்குமா தெரியவில்லை - நானும் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருக்கிறேன். prisoner of ideaவாக வாழ்க்கையைக் கழிக்காமலிருக்க நினைக்கிறேன்...பெருமூச்சு///////////////////

உங்கள் ப்ளாக் ல் பின்னூட்ட்டம் இடும் சிலரது அறிவு முதிர்ச்சி, நீங்கள் தேடும் "நிம்மதியை" கண்டவர்களின் அறிவு முதிர்ச்சி எனில்,

அம்மாதிரியான பயிற்சியை நீங்களே துவங்கலாம். பெரும்பாலான சமயங்களில் எழுத்தில் தென்படும் முதிர்ச்சி செயலில் இருப்பதில்லை.

செயலில் இருக்கும் முதிர்ச்சி மனதில் இருப்பதில்லை. மனதில் முதிர்ச்சி/நிம்மதி உள்ளவர்களை அறிவது கடினம், உங்களுக்கு அவர்களுடன் நல்ல நட்பு இருக்குமெனில் இதை அறிந்து கொள்வது எளிது. உங்களுடைய தேடல், என் மனதை அரித்ததால், மட்டுமே இதை எழுதுகிறேன்.

என்னிடம் தெளிவும், நிம்மதியும் இருப்பதாக உணர்கிறேன். என் மகனுக்கு என் அறிவை கடத்தும் பொருட்டு காத்திருக்கிறேன். அதுவரையும் .. சரியான மாணவன் இல்லாத குருவைப்போல் ......என் உணர்தல் கடத்த முடியாது நிற்கிறது. அல்லது .....நான் உணர்ந்தே இருந்தாலும் சரியாக கடத்தும் ஆற்றல் அற்று இருப்பதாயும் கொள்ளலாம்.

நான் அறிந்ததை கற்றுக்கொடுக்க விழைகிறேன். .....நீங்கள் சரியான பாத்திரம் தானா என்பது .....இன்னும் ஆராய்ந்து அறிய வேண்டியது.

நான் அறிந்ததுதான் நீங்கள் தேடுவதா என்பதும், உங்களின் ஆராய்ச்சிக்குரியது. விருப்பம் இருப்பின் மேலும் தொடருவேன். ..

அப்பாதுரை சொன்னது…

மோகன்ஜி, நன்றி. நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே நினைத்தேன். அழகிய சொக்கநாதப் பிள்ளை (பெயரென்றால் இதல்லவோ பெயர்!) பாடலும் அருமை.

அப்பாதுரை சொன்னது…

வருக meenakshi, சிவகுமாரன், Nanum enn Kadavulum,...

அப்பாதுரை சொன்னது…

Nanum enn Kadavulum, வருகைக்கும் வித்தியாசமான கருத்துக்கும் (உங்கள் வலைப்பெயர் போலவே) உளமார்ந்த நன்றி. அடிக்கடி எழுத வேண்டுகிறேன். 'தன்னிடம் தெளிவும் நிம்மதியும் இருப்பதாக உணருவதை' துணிவோடு வெளிப்படுத்திய முதல் அறிமுகம் நீங்கள் தான். வணங்கத் தோன்றுகிறது.

'செயலில் இல்லாத முதிர்ச்சி எழுத்தில் வர'க்காரணம் சிந்திக்க வேண்டிய அவசியமாக இருக்கலாம். இருப்பதிலேயே சுலபம் சிந்திக்காமல் செயலில் இறங்குவது தானே?. அருமையாகச் சொன்னீர்கள்.

எல்லாருக்குமே மனதில் (அறிவில்) முதிர்ச்சி வளர்வதாகவே நினைக்கிறேன். அதை வெளிப்படுத்தும் வகையிலும், உங்களைப் போல் உணர்ந்து செயல்படுத்தும் முறையிலும் அந்த வளர்ச்சியை அறுவடை செய்யாமல் விடுகிறோம்(றேன்) என்று தோன்றுகிறது.

ஏதோ பேசிக்கொண்டிருக்கையில், எனக்கு மிகவும் நெருங்கிய உறவில் ஒருவர் சொன்னார்: "யாரும் தேவையில்லைனு தனியா போயிறணும். எனக்காக நான் மட்டும் தனியா இருக்குறப்ப எந்தத் தொந்தரவும் இல்லாம நிம்மதியா இருப்பேன்". இன்னொருவர் உடனே, "தனியா அம்போனு இருக்குறதுல நிம்மதி என்ன பெரிய நிம்மதி?" என்றார். அதற்கு மேல் அவர் சொல்லாவிட்டாலும், கேட்டுக் கொண்டிருந்த எனக்கு சுரீரென்றது. நீங்கள் எழுதியிருப்பதைப் படித்ததும் நினைவுக்கு வந்தது.

நிம்மதி ஊற்று தனக்குள் இருந்தாலும் அதை அடையாளம் காண நிம்மதியைக் கண்டவர்களிடம் தானே பழக வேண்டும்? அறிவு வேகமாக முதிர, அவ்வாறு முதிர்ந்தோருடன் தானே பழக வேண்டும்? இந்த பிலாகில் பின்னூட்டம் இடும் பலரும் அறிவு முதிர்ச்சியும் நிம்மதி உணர்வும் கண்டவர்கள் என்றே நினைக்கிறேன். அப்படி இல்லாவிட்டாலும், என் போல் இணைந்த தேடலில் பயன் காண விருப்பமுடையவர்கள் என்றும் தோன்றுகிறது. அதனால், நீங்கள் அறிந்ததைக் கற்றுக் கொடுங்கள். தகுதியும் திறமையும் பரஸ்பர ஆராய்ச்சியில் தானாகவே வெளிப்படும் என்று நம்புகிறேன்.

'உணர்தல் கடத்த முடியாது நிற்கிறது' என்ற உங்கள் வரி (வலி?) பொட்டில் இடிக்கிறது. நீங்கள் தொடர்ந்து வருகை தர வேண்டும், எண்ணங்களைப் பகிர வேண்டும் என்று விரும்புகிறேன். நன்றி.

Santhini சொன்னது…

////துணிவோடு வெளிப்படுத்திய முதல் அறிமுகம்//// நிர்வாண ஊரில் கோவணம் கட்டிய பைத்தியக்காரனைப் போல் ஆகும் அபாயம் காரணமாகவே யாரும் தனக்கு இருக்கும் தெளிவு மற்றும் நிம்மதி குறித்து வெளிப்படுத்துவதில்லை என நினைக்கிறேன்.என் துணிவுக்கு காரணம் இது சரியான ஊர் என்ற நினைப்பாயும் இருக்கலாம்.
//// 'உணர்தல் கடத்த முடியாது நிற்கிறது' என்ற உங்கள் வரி (வலி?) பொட்டில் இடிக்கிறது. /// உணர்தல் என்பது உணர்தலே. கடத்த முடியாத தன்மைக்கு காரணம், அதை பெறுகிற ஊடகம் இல்லை என்பதுதான். எப்படி கடத்துவது என்பதை யோசிக்கும்போதுதான் வலிக்கிறது. மொழி போதவில்லை. பின்னூட்டங்களில் எங்கு துவங்கி எங்கு முடிப்பது? எனினும் முயல்கிறேன். எமன், மரணம் , வாழ்வு , அறம், தவறாத அறம் ......எவை குறியீடுகள்? எவை நிஜங்கள்? சரியாக புரிந்து கொள்ளப்பட்ட குறியீடுகள் தாமா அவை? மொழியின் ஜாலம் எதுவும் இன்றி, இது என் புரிதல் என்று மிக வெளிப்படையாய், பயமின்றி பேசும் மனங்கள் உண்டா? உள்ளது உள்ளபடி பேசினால், உள்ளது உள்ளபடி சொல்ல மொழி உதவும். நீங்கள் குறிப்பிட்டபடி person of ideas and concepts எனும் வலைக்குள் இருக்கும்வரை உள்ளபடி நினைக்கவோ பேசவோ இயலாது. உங்களின் மனதை, மூளையை அந்த ideas எல்லாம் ஆக்ரமித்துக் கொண்டு, உங்களை வேறொரு மனிதனாய் உணர வைத்து, தனக்கு குறிப்பிட்ட அடையாளத்தை ஏற்படுத்திவிடும். அந்த அடையாளங்களில் இருந்து வெளிவர முடியாத பயமே எல்லோரையும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. உங்களின் அடையாளங்கள் எவைஎல்லாமோ .........அவற்றை உங்களால் தூக்கி எறிய இயலுமா அப்பாதுரை?

சாய்ராம் கோபாலன் சொன்னது…

இடுகை மற்றும் கருத்துரைகளை படிக்க அதற்குமேல் புரிய கொஞ்ச நாள் ஆகும் போல் இருக்கு எனக்கு. அதுவும் இந்த இடுகைக்கு புதியதாக வந்திருக்கும் "நானும் என் கடவுளும்" அவர்களின் கருத்துரை, பத்மநாபன், மோகன்ஜி என்று மூச்சு எனக்கு இப்பவே இறைக்கின்றது.

ஒருமுறை படித்தாகிவிட்டது இருந்தும் இன்னொருமுறை படித்து வரேன்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//உங்களின் அடையாளங்கள் எவைஎல்லாமோ .........அவற்றை உங்களால் தூக்கி எறிய இயலுமா அப்பாதுரை?//

ஐயோ எனக்கு கதை கருக்கிடைத்து விட்டது போலிருக்கே ?

வால்பையன் சொன்னது…

நானும் கலந்துக்கலாமா உங்கள் உரையாடலில்!

வால்பையன் சொன்னது…

தகுதியில்லாதவனாக இருப்பின் தள்ளி நின்று வேடிக்கை பார்க்க அனுமதியளிக்கவும்!

வால்பையன் சொன்னது…

//இரண்டு ஆசிரியர்களுமே தங்கள் தொழிலைச் செய்தார்கள். ஒருவர் மட்டுமே கடமையைச் செய்தார்.//

எனக்கும் ஒரு குரு இருக்காங்க, மாணவன் தப்பு பண்ணா திருத்தாம உன்கூட பேச மாட்டேன்னு சொல்றாங்க. அந்த குருவுக்கு இந்த கமெண்டை டெடிகேட் பண்றேன்!

வால்பையன் சொன்னது…

//பிரபஞ்சத்தின் இயக்கம்.. புதைந்திருக்கும் harmony. 'தவறவே தவறாது' என்ற நம்பிக்கை, அதன் வழுவை, வழுவின் புள்ளி கோடி பூஜ்ஜிய சாத்தியத்தைக் கூட மறக்க வைத்து விடுகிறது. 'தவறாது' என்று ஏற்றுக் கண்மூடத் தயங்காத மனிதம், 'தவறும்' என்று அஞ்சி கண்திறக்கத் தயங்குவது பெரும் முரணாகப் படுகிறது. இது அறிவின் சாபமோ என்று எண்ணியிருக்கிறேன். நாலு வயதில் இல்லாத முரண், நாற்பது வயதுக்குள் வளர்ந்து கோட்டையாகி விடுகிறதே உள்ளுக்குள்?!

'என்ன நடக்கும் என்பது பயங்கரமானது'.. யோசிக்க வைக்கிறது. முடிவில் பயங்கரமில்லை; முடிவின் முடிவில் தொடக்கம் இருப்பதை அறிந்தால். தினம் முடிந்து தொடங்கிறது பிரபஞ்ச இயக்கம். தொடக்கமும் முடிவும் நமக்குத் தெரிவதில்லை, அவ்வளவே. ஒரே இடத்தில் தொடங்கி ஒரே இடத்தில் முடிந்தால் நாம் உணரவும் அறியவும் பதப்படுத்தப் பட்டிருக்கிறோம். (வயதானவுடன் இளைய தலைமுறையைக் குற்றம் சொல்வது இந்தத் தன்மையின் ஒரு மிகச் சிறிய உதாரணம்). நம் இயக்கங்களில் பிரபஞ்ச இயக்கத்தின் டிஎன்ஏ இல்லையோ? இருப்பதைப் புரிந்து கொள்ளவில்லையா? அதனால் தான் நிலையில்லாமல் புலம்புகிறோமோ? எது முக்கியம் என்று புரியாமல் குழம்புகிறோமோ? அப்படியும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எழாமல் இருக்கச் சாத்தியம் உண்டு என்று தெரிந்தும், 'விடிந்ததும் எழுவது தவறாது' என்று இயற்கை நியதிக்குட்பட்ட இயக்கத்தில் புதைந்த சட்டத்தை தானாகவே ஏற்று, தூங்குமுன் மறுநாள் பற்றித் திட்டம் போடுகிறது மனம். எழவில்லையென்றால் பயங்கரம் என்று அறிவு நினைப்பதேயில்லை. அதே அறிவு, நாம் ஏற்படுத்திய நியதிகளைச் சுற்றி இயங்குகையில் எங்கிருந்தோ பயங்கரத்தைக் கொண்டு வந்து விடுகிறது.

சாத்தியம் கடந்த முடிவில் இல்லாத இழப்பு, இழப்பின் பயங்கரம், சாத்தியங்கள் நிரம்பிய முடிவுக்கான பாதையில் இருப்பதாகப் படுகிறது. idea masquerading as action. ஒரு சிலர் மட்டுமே இவற்றுக்கான வேறுபாட்டைப் புரிந்து கொண்டு வாழ்வில் நிம்மதியை உண்மையாகவே பெறுகிறார்கள். இந்தப் பயிற்சி எங்காவது கிடைக்குமா தெரியவில்லை - நானும் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருக்கிறேன். prisoner of ideaவாக வாழ்க்கையைக் கழிக்காமலிருக்க நினைக்கிறேன்...பெருமூச்சு!//



பதிவை விட எனக்கு இந்த பின்னூட்டம் ரொம்ப பிடிச்சிருக்கு,

பதிவில் இருந்தது உங்கள் அறிவி, அது கற்று வந்தது.
இந்த பின்னூட்டத்தில் இருப்பது உங்கள் தெளிவு!
அது கனன்று வந்தது.

வால்பையன் சொன்னது…

//என்னிடம் தெளிவும், நிம்மதியும் இருப்பதாக உணர்கிறேன். என் மகனுக்கு என் அறிவை கடத்தும் பொருட்டு காத்திருக்கிறேன்.//

கடத்துவது வெரும் தகவலாக இருந்தால் வாங்கும் பாத்திரத்தை பற்றிய கவலை தேவையில்லை, அதே அறிவாக இருந்தால்..........

ஆர்வம் இருப்பவர்களிடம் புரியும் தன்மையும் அதிகம் இருக்குமே!

வால்பையன் சொன்னது…

//நான் அறிந்ததுதான் நீங்கள் தேடுவதா என்பதும், உங்களின் ஆராய்ச்சிக்குரியது. விருப்பம் இருப்பின் மேலும் தொடருவேன். .//


தேடிசெல்வது எதுவாகினும் அடையும் இடம் இது தானே!

//என்னிடம் தெளிவும், நிம்மதியும் இருப்பதாக உணர்கிறேன்.//

அப்பாதுரை சொன்னது…

வருக சாய், வால்பையன், ...

அப்பாதுரை சொன்னது…

நன்றி, வால்பையன் (உங்கள் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அவ்வபோது பல ஆண்டுகளாகப் படித்தாலும், வலைப்பெயரை வியக்காமலிருக்க முடியவில்லை). தயவுசெய்து கலந்து கொள்ளுங்கள் :).

அப்பாதுரை சொன்னது…

வலுவான தூண்டில், Nanum enn Kadavulum. [எமன், மரணம் , வாழ்வு , அறம், தவறாத அறம் ......எவை குறியீடுகள்? எவை நிஜங்கள்?] நிஜங்களைக் குறியீடுகளாக, vice versa, நினைக்கும் மனநிலை பற்றி அடுத்த பாடலில் எழுதியிருக்கிறேன். strange coincidence நீங்கள் இங்கே அந்த சந்தேகத்தை எழுப்பியது. நல்ல அஸ்திவாரம் கொடுத்தீர்கள், நன்றி.

கடத்துவது பற்றிய உங்கள் கவலை பற்றி வால்பையன் சொல்லியிருப்பது பிடித்திருக்கிறது. ஏற்கும் பாத்திரத்தைப் பற்றிய கவலையாகி விடாமல் கடத்துவது தான் நுட்பம். பாத்திரம் அறியாவிட்டாலும் உங்கள் நிம்மதி உணர்வுகளுக்கான பாதைகளின் அடையாளங்களை உங்கள் சந்ததிக்குச் சொல்வீர்கள் என்று நம்புகிறேன். (நாங்களும் ஒண்டிக்கொள்கிறோம் :)

idea வலையிலிருந்து முழுதுமாக வெளிவருவது ஆபத்து என்று தோன்றுகிறது. idea வலையே action என்று எண்ணி ஏமாறுவதைத் தவிர்ப்பதில் இருக்கும் சிக்கலைத் தான் வெறுக்கிறேன், idea வலையை அல்ல. நீங்கள் சொல்வது போல் அடையாளங்களை தூக்கி எறிய முடியும் என்றே வைப்போம் (என்னால் முடியாது, ஒப்புக்கொள்கிறேன் :), இலக்கும் ஒழிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன். இது தவறா? ஒரு இலக்கைத் தேடுவதால் தான் அடையாளங்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அடையாளங்களே கூடாதா? அல்லது அடையாளங்களுக்கும் அசலுக்கும் வேற்றுமை புரிய வேண்டுமா? சொல்லுங்களேன்..

Santhini சொன்னது…

ஒரு படம் பார்க்கிறீர்கள். ஒரு பாத்திரம் உங்களை மிகவும் பாதிக்கிறது அல்லது பிடிக்கிறது. அதே பாத்திரமாய் உணர்கிறீர்கள், அது அழும்போது அழுகிறீர்கள், சிரிக்கும் போது சிரிக்கிறீர்கள். படம் முடிந்ததும் ......இன்னும் அதே பாத்திரமாகவா, உங்கள் நாளை கழிப்பீர்கள்?
idea க்களும் அப்படியே. அவை ஒரு segment. Segment of a long chain. நம் வாழ்க்கை முழுதும் பல்வேறு கருத்துக்களாலும், இலக்குகளாலும் பின்னப்பட்டிருக்கிறது. அவை கருத்துக்கள் மற்றும் இலக்குகள் மட்டுமே. அவையல்ல நாம். கருத்துக்களே நான் என்ற அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள பழகிவிட்டோம். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு அடையாளம், ஒவ்வொரு பாத்திரம், நான் ஆத்திகன், நாத்திகன். இரண்டுமல்ல ஆன்மீகவாதி, இல்லை அறிவியலாளன்.....படத்திலிருந்து வெளியே வர முடியாததுபோலவே ......இந்த அடையாளங்களில் இருந்தும் நம்மால் வெளிவர முடியவில்லை. ஏதேனும் ஒன்றாக இருந்துகொண்டே இருக்க வேண்டியதாய் இருக்கிறது.
" இருக்க வேண்டியதாய்" ..............ஏன் இந்த வற்புறுத்தல் மனதுக்கு? ஏன் ஏதோவாக இருக்க யாசிக்கிறது? இந்த அடையாளங்கள் உங்களுக்கு என்ன தரப் போகிறது? அடையாளங்களின் தேவை என்ன? இதற்கு பதிலை யோசியுங்கள் ......பிறகு அவற்றை துறப்பதும் அதன் விளைவுகள் குறித்தும் பேசலாம்.

சிவகுமாரன் சொன்னது…

யாரப்பா அவரும் அவர் கடவுளும்.
இப்படி போட்டுத் தாக்குறாரு.
என் சிற்றறிவுக்கு எட்டாத பல விசயங்கள் எனக்கு, பயத்தை தருகிறது. புரிந்து கொண்டு பின்தொடர எனக்கு வேகம் போதவில்லை.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//'தவறாது' என்று ஏற்றுக் கண்மூடத் தயங்காத மனிதம், 'தவறும்' என்று அஞ்சி கண்திறக்கத் தயங்குவது பெரும் முரணாகப் படுகிறது.//


Super

பத்மநாபன் சொன்னது…

மரணம் நிறைய பல சிக்கலுக்கு தீர்வாகிறது..சில சிக்கலுக்கு பிரச்சனையாகிறது..பிரச்சனை குறைந்து தீர்வுகள் அதிகமிருப்பின் அம்மரணமே வருத்தத்தோடு ஒரு ரகசிய நிம்மதியையும் தந்து விடுகிறது. எனது சித்தப்பா என்னுடைய இந்திய வருகையை சரிபார்த்து அவரது மரணத்தை வைத்துக்கொண்டார்..நசிகேதம் படிப்பதாலோ என்னவோ அவரது மரணம் முலம் அவர் செல்லுமிடம் பற்றிய கவலை குறைந்து, பிரபஞ்சத்தோடு கரையும் விதம் புரிந்தது...இந்த 2, 3 நாட்களில்..
அப்பாதுரையும் ,நண்பர்களும் இப்பகுதியை கருத்துக்களால் வலுவூட்டியுள்ளார்கள்..படித்து வருகிறேன்...

அப்பாதுரை சொன்னது…

நன்றி Nanum enn Kadavulum. உவமை பிடித்திருக்கிறது.
அடையாளங்கள் வந்து போவதைத் தவிர்க்க முடியாது என்று தோன்றினாலும், நீங்கள் சொல்வது போல் அடையாளங்களே நாமாகாமல் இருந்தால் சிக்கலில்லை என்பதில் உண்மை இருக்கலாம். யோசிக்க வைக்கிறது. சிக்கல் துறப்பதில் அல்ல. துறப்பது மிகச் சுலபம் என்று நினைக்கிறேன். துறந்தபின் அடையாளங்கள் தொலைந்தன என்று நினைப்பது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் அறியாமை என்றும் நினைக்கிறேன். அடையாளங்களால் பாதிக்கப்படாமல் அதே நேரம் அடையாளங்களைச் சுமந்தும் இலக்கில் கவனம் செலுத்துவதில் இருக்கும் சுவாரசியம் துறப்பதில் வருமா தெரியவில்லையே. (அதனால் தான் துறக்க மறுக்கிறதோ மனம்?)

அப்பாதுரை சொன்னது…

வருக பத்மநாபன்,...
இழப்புக்கு வருந்துகிறேன்.
மரணம், தீர்வும் இல்லை பிரச்சினையும் இல்லை என்று சொல்ல அனுமதியுங்கள்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

ஒரு லெவலுக்கு மேலே எடுத்துப் போனா தலையைப் பிடித்து உட்காரணும்! இருந்தாலும் கூட்டத்துக்கு நானும் வருகிறேன் Nanum சார்.

வித்தியாசமான forum அப்பாதுரை. சூடு பிடிக்கிற போது அடுத்த பாட்டுக்கு போய்விடுகிறெர்கள்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

பின்னூட்டங்கள் ஒண்ணொண்னும் பைன்ட் செஞ்சு படிக்கலாம் போலிருக்கு. நடத்துங்க.

முழுவதும் துறப்பது என்கிற கான்செப்டே முரணாகத் தோன்றுகிரது நானும் சார்? அத்வைதத்தில் ஆர்வம் உண்டா? ஒரு பொருள் இருப்பதாகப் பார்ப்பதும் இல்லாததாகப் பார்க்கிறதன் எதிர். அத்வைத அடிப்படையில் துறப்பதும் சேர்ப்பதும் ஒன்றேன்.