34
தாள்பட்டும் காழ்பட்டும் தேயுமுயிர் காசினியில்
நாள்பட்ட வாழ்வும் குறுவாழ்வே - கேளீர்
எதற்கினிமேல் ஏந்திழையும் பூணியும் பொன்னும்?
முதற்கனியை முந்துமோ மூன்று?
நாள்பட்ட வாழ்வும் குறுவாழ்வே - கேளீர்
எதற்கினிமேல் ஏந்திழையும் பூணியும் பொன்னும்?
முதற்கனியை முந்துமோ மூன்று?
உலகில் பல்லாண்டு வாழ முடிந்தாலும், அது உமது வருகையாலோ அல்லது எமது உள்ளத்தில் தோன்றும் பகை வெறுப்பு உணர்ச்சிகளாலோ குறுகிவிடுகிறது. இந்நிலையில், அழகிய பெண்களும் பூணியும் பொன்னும் சேர்த்து என்ன பயன்? முதற்கனியை விட மூன்றாங்கனி இனிப்பதில்லை (என்றான் நசிகேதன்).
தாள்பட்டு: காலடிபட்டு (எமனுடைய வருகையால்)
காழ்பட்டு: காழ்ப்பினால், பகையினால், வெறுப்பினால்
காசினியில்: உலகில்
ஏந்திழை: ஒளிவீசும் ஆடை அணிகலன் அணிந்த அழகிய பெண், தேவமகளிர் என்ற பொருளில் வருகிறது
life is short என்பதற்குத் தமிழுரு தந்துதவிய மோகன்ஜி, Nanum enn Kadavalum, சிவகுமாரனுக்கு நன்றி
டெமாக்ரிடஸ் என்பவர் சிறந்த கிரேக்க அறிஞர்களில் ஒருவர். மக்களாட்சி, கணிதம், அணுத்துவம் பற்றிய, இன்றைக்கும் பிரமிப்பூட்டும், கருத்துக்களுக்கு இவர் புகழ் பெற்றிருந்தாலும், மனித நேயம் பற்றிய சிந்தனைகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். 'மகிழ்ச்சியைத் தேடிப்பெறுவதே பிறவியின் நோக்கம்' என்றவர். ஏறக்குறைய கடோபனிஷதக் காலத்தவரான இவருடைய பிரபலமான வேதாந்தக் கேள்வி: "உணர்வுகளால் நிறைவதை பொன் பொருள் நிறைக்குமா?".
தமிழில் இன்னும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்: 'போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து'. தேடுவதை எங்கே தொடங்குவது என்பது நம் எல்லாருக்கும் சுலபமாகத் தெரிகிறது, புரிகிறது. தேடுவதை எங்கே எப்போது நிறுத்துவது என்பதில் தான் சிக்கல். நிறைவடைந்தாலும் தேடுகிறோம்; நிறைவடையாவிட்டாலும் தேடுகிறோம். வாழ்வில் தேடல் அடக்கமா அல்லது தேடலில் வாழ்வு அடங்குமா?
டெமாக்ரிடஸ் சொன்ன 'மகிழ்ச்சியும் நிம்மதியும் ஒன்று' என்ற பார்வையில், 'மகிழ்ச்சியுடன் இருக்கிறோமா?' என்ற கேள்வியை நாம் தினமும் கேட்க வேண்டும். 'இன்றைய பொழுதை எனக்கும் பிறருக்கும் மகிழ்ச்சியானதாக்க என்னால் என்ன செய்ய முடியும்?' என்று சிந்திக்கவாவது வேண்டும். நான்கு நாட்கள் சிந்தித்தால் ஐந்தாவது நாள் ஏதாவது செய்யத் தோன்றும் என்று நம்புகிறேன். சிலர் 'மகிழ்ச்சி வேண்டும், நிம்மதி வேண்டும்' என்று சிந்திப்பதோடு சரி, செயலில் இறங்க வாய்ப்பு கிடைத்தாலும் இறங்குவதில்லை. பாதை தெரிந்த பின்னும் பயந்து ஒடுங்கும் கூட்டம். நொபெல் பரிசு பெற்ற பெர்னார்ட் ஷா சொன்ன கருத்து:"பத்து பேரில் ஒருவர் சிந்தித்துச் செயல்படுகிறார். ஒருவர் சிந்தித்துச் செயல்படுவதாக நினைக்கிறார். மற்ற எட்டு பேரும் சிந்தனை என்றால் என்னவென்று தெரியாமலே வாழ்ந்து மடிகிறார்கள்". அந்த எண்மரில் நான் சேர்ந்து விடக்கூடாதே என்று சில வருடங்களாகவே(!) அஞ்சி வருகிறேன். கடோவைப் படித்த போதும், இந்தப் பாடலை எழுதும் பொழுதும் என் வாழ்வின் தேடல்கள் பற்றித் தானாகவே சிந்தனை கிளைவிட, அதிர்ச்சியில் கிடந்தேன்.
எளிமை பழக வேண்டும். எப்படி என்று தெரியவில்லை.
இளைய தலைமுறையிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது. சமீபத்தில் என் மகள் விரும்பிய ஒன்றை வாங்கிக் கொள்ள அனுமதியும் பணமும் கொடுத்தேன். நன்றியுடன் இரண்டையும் திருப்பிவிட்டாள். 'but, i thought you liked it?' என்றேன். 'i do, but having it will clutter my life' என்றாள். அவளுடைய நிறைவுச் சிந்தனை நிலைக்க வேண்டுமென்று விரும்பிய எனக்குப் பொட்டில் அறைந்தாற் போலிருந்தது. when did my clutter commence? என் வாழ்வின் எந்த மைல்கல்லில் excess மற்றும் relevant என்பதற்கு பொருள் மறந்து போனேன் என்று நினைக்கத் தொடங்கினேன். நிறைவுக்கும் நிம்மதிக்கும் வேறுபாடு தெரியாமல் போன அந்தக் கணத்தை அடையாளம் காண முயன்று தோற்றேன். சமூகத்தின் மீது பழி சுமத்தினாலும், தெளியத் தொடங்கியிருக்கிறேன் (என்று நினைக்கிறேன்:).
ஒரு அழகிய வெள்ளித்தட்டிலே கண்ணைக் கவரும் பலாச்சுளைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. நறுமணத்தோடு இயற்கையிலேயே தேனூறி மின்னும் விதை நீக்கியப் பலாச்சுளைகள், உண்ணத் தயாரான நிலையில் உள்ளன. தொட்டு எடுக்கத் தூண்டினாலும், அந்தச் சிரமம் நீங்க, பலாச்சுளையை எடுத்து நம் வாய் பிளந்து ஊட்டிவிட அருகிலேயே காத்திருக்கும் சேவகர். பலாச்சுளை ஒன்றை எடுத்து மெல்லிய விரலால் நம் முகம் தொட்டு வாய் பிளந்து ஊட்டி விடுகிறார். கண்ணைக் கவரும் அந்தச் சுளையின் மணம் நம் உணர்வை ஆக்கிரமிக்க, உதடுகளில் பட்டும் படாமலும் தொட்ட சுளையின் மென்மை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. தேனைவிட இனிக்கும் சுளை நாவில் பட்டதும் மெள்ள அசைந்து பற்களிலும் நாவினிடையிலும் விளையாட்டாகச் சிக்கிக் கலந்து உள்ளிறங்க, அந்த முதல் பலாச்சுளையின் சுவை உடல் எங்கும் பரவி நம்மைச் சொக்க வைக்கிறது. இதுவல்லவோ சொர்க்கம் என்று கிறங்கி இன்னொரு சுளைக்காக வாய் திறக்கிறோம். அடுத்து ஒன்று. அதற்குப் பின் ஒன்று. இந்த இனிமை நிலையானதென்று எண்ணும் பொழுது எங்கிருந்தோ இடிக்கிறது. இனியொரு சுளையைக் காணவும் முடியாமல் எதிர்க்கிறது. மனம் பலாச்சுளை பக்கம் போகவே மறுக்கிறது. சேவகரையும் ஒதுக்கி ஒதுங்குகிறோம். எத்தனை சுவைக்க முடியும்? எப்பொழுது திகட்டும்? எப்பொழுது எதிர்த்து வரும்? இந்த விவரங்கள் தொடக்கத்தில் தெரியாது; ஆனால் திகட்டும், எதிர்த்து வரும் என்பது மட்டும் அனுபவத்தால் திண்ணமாகத் தெரியும். எத்தகைய இனிமையும் காலத்தால் குன்றியோ அல்லது அற்றோ போகும் தன்மையது.
நசிகேதன் எமனிடம் சொன்னதும் அது தான். "ஐயா, பொன் பொருள் பெண் இவையெல்லாவற்றையும் நான் எத்தனை நாள் அனுபவிக்க முடியும்? முதல் கனியில் பெற்ற சுவை மூன்றாவதில் குன்றுமே? அமுதும் நஞ்சாக மாறுமே? மாறாதிருந்தாலும், உங்கள் காலடி பட்டக் கணத்திலேயே இந்த இனிமையான அனுபவம் முடிந்து விடுமே? நஞ்சாக மாறாவிட்டாலும், நீங்கள் வருகை தராவிட்டாலும், பிறருடைய கோப தாபங்களை என்னால் கட்டுப் படுத்த முடியாது போனால் நீங்கள் வழங்கியிருக்கும் இனிமையை அனுபவிக்க இயலாதே? குமிழி எப்போது வெடிக்கும் என்று தெரியாது. வாழ்வும் குமிழி போன்றதே. உலகத்தில் அளவற்ற நாள் வாழ வழியிருந்தாலும், அது நிலைக்காத குறுகிய காலமே" என்றான்.
பொம்மைகளோடும் நட்போடும் சுமுகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தவன், தன் தந்தையின் அவசரக் கோபத்தினால் எமனுலகம் வர நேர்ந்ததே? 'சிந்தையில் நாடிய சித்திரை வாழ' எமன் வரம் தந்தாலும், பூவுலகம் திரும்பியபின் தன் தந்தை அல்லது இன்னொருவரின் செய்கையாலோ, தன்னுடைய அறியாமையாலோ, தானே மீண்டும் எமனுக்குத் தானமாகக் கூடுமே? எமன் காலடி வைக்காவிட்டால் கூட உலகத்தாரின் காழ்ப்புணர்ச்சி காலமுடிவைக் கொண்டு வரும் என்பதைத் தனக்கு நேர்ந்த அனுபவத்தால் உணர்ந்தவன் நசிகேதன். நிலையற்ற வாழ்வைத் தேடல்களினாலும் சேர்க்கைகளினாலும் நிலைக்கச் செய்யும் முயற்சியில் முடங்கியிருக்கும் முட்டாள்தனத்தை, போலித்தனத்தை, நன்றாக உணர்ந்தவன் என்பதை எமனுக்குத் தெளிவு படுத்தினான்.►
5 கருத்துகள்:
\\but having it will clutter my life'///
எவ்வளவு பெரிய தத்துவம் ..சுலபமாக சொல்லிவிட்டார்கள்.
தேடலும் தேவையும் இருக்கும் வரையில் தான் வாழ்க்கை சுவைக்கிறது ( வாழ்க்கை சுவைக்கிறது - சரியான பிரயோகமா ? வாழ்க்கையை நாம் சுவைககிறோமா இல்லை வாழ்க்கை நம்மை சுவைக்கிறதா ? )
இரண்டும் நிறைவேறிவிட்டால் ....வெறுமையாகிப் போகாதோ வாழ்க்கை ?
//எளிமை பழக வேண்டும். எப்படி என்று தெரியவில்லை. //
எப்போது இங்கே அமெரிக்காவில் என் பிள்ளைகளுக்கு கல்லூரி தொகை ஒன்றரை கோடி வேண்டும் என்று எனக்கு புரிந்ததோ அப்போது தான் "எது தேவை, எது இப்போதைக்கு தேவை இல்லை, எது எப்போதைக்கும் தேவை இல்லை" என்று புரிய ஆரம்பித்தது எனக்கு !
உன் மகளின் அறிவு முதிர்ச்சி வியக்கவைக்கின்றது. அப்பாவின் கடமை என்று காசை என் பிள்ளைகளின் நலனுக்காக கருத்தாய் சேர்ப்பதை புரியாமல் என் பெரியவன் அவ்வப்போது எதாவது பேசிவிடுவான். பார்க்கும் எல்லாம் வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற ஆசையுடன் தான் நானும் என் இளமையை கடந்து வந்தேன் என்று அவனுக்கு புரியவைக்க முடியவில்லை.
வறுமை கொடியது பசி அதைவிட கொடியது - இது இரண்டையும் விட கொடியது ஒருவனின் அறிவு பசிக்கு வகை இல்லாதபோது.
@அப்பாதுரை
தனது தேவையும், திருப்தியும் என்னவென்று நாம் அறிந்து கொள்ளும்போது எளிமை சாத்தியமாகிறது.
@ சாய்
அறிவு என்றால் என்ன ? பல்கலை/பள்ளி செல்லாதவர்களின் அறிவு தன் பசியை தீர்த்துக் கொள்வதில்லையா ?
அறிவு தன்னைத் தானே தேடி அடைந்து கொள்ளும்.
பள்ளிக்கு செல்பவரின் அறிவுக்கு கல்வி நிலையங்கள் பாதை அமைக்கும்.
பள்ளி செல்லாதோரின் அறிவுக்கு சமூகம் பாதை அமைக்கும்.
அறிவுப் பசி என்பது ....பசிய மரத்தின் வேர் போல். கிடைத்த இடமெல்லாம், அறிவுறுஞ்சி வளரும் வேர்.
பாலையில் நிற்கும் கள்ளிகூட, பசிய நிறத்துடன், உடலெல்லாம் நீராய் நிறைந்து நிற்பதெப்படி?
நம்மை சுற்றி இருக்கும் எல்லாமும் அறிவே. அறிவின் உருவே.
--
//சில வருடங்களாகவே(!) அஞ்சி வருகிறேன்.//
adengappa நிறைய per vanthu poirukkanga போல irukku.
//வெறுமையாகிப் போகாதோ வாழ்க்கை ?//
athanaal தான் vayothigargal kadavulai naadugindranaro!! எனக்கு theriyavillai :(
//எது தேவை, எது இப்போதைக்கு தேவை இல்லை, எது எப்போதைக்கும் தேவை இல்லை" என்று புரிய ஆரம்பித்தது எனக்கு ! //
:)))))
//பார்க்கும் எல்லாம் வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற ஆசையுடன் தான் நானும் என் இளமையை கடந்து வந்தேன் என்று அவனுக்கு புரியவைக்க முடியவில்லை.// satre yatharthangal தெரிகின்றது. indraalum எல்லாம் வாங்கிக்கொள்ளவேண்டும் என்ற ஆசை athigam thaan, ellorukkum irukkum enbathu konjam athigam thaan. "Manathirkku piditha" endra varthaigal innum satru yathartham kootirukkum.
//வறுமை கொடியது பசி அதைவிட கொடியது - இது இரண்டையும் விட கொடியது ஒருவனின் அறிவு பசிக்கு வகை இல்லாதபோது.
//அப்பாதுரை, ivallvu nigalvirkku piragum thangalin valaiyil sikkiya palarukku kaaranam thangalin "Pattum naane, Bhavamum naane" endra padal thaan. :)) Ice Athigamio? Kathakathappukku Vicks irukkilla.
கருத்துரையிடுக