வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/03/11

மேலும் தருவதாகச் சொன்னான் எமன்


32
நுண்ணிய வேறோர் வரங்கேட்டால் நெஞ்சில்நீ
எண்ணிய தெல்லாம் தருவேனே - பண்ணிய
பாவங்கள் போய்ப்பேர் தருவேன் தயைசெய்துச்
சாவதன் தன்மை தவிர்.

    யவுசெய்து மரணத்தின் உண்மையை அறிய முயலாதே. அதை விடுத்து வேறொரு உண்மையறிய வரம் கேட்டால் உன் மனதில் எண்ணியதையெல்லாம் நிறைவேற்றுவேன்; பாவங்களைப் போக்கிச் சொர்க்கத்தைத் தருவேன் (என்றான் எமன்).

பேர்: சொர்க்கம்


    றுப்புகளைக் கையாளும் முறைகளை மேலாண்மைக் கல்வியில் பாடமாக வைத்திருக்கிறார்கள். மறுப்பவர்கள் உண்மையில் மறுக்கிறார்களா அல்லது எதிர்பார்ப்பை மறைமுகமாகக் கூட்டுகிறார்களா என்பதை அறிவது ஒரு கலை. தீர்மானமான மறுப்பை எப்படி அறிவது? தொனி, சைகைகள், உடல் இறுக்கம், பார்வையின் தீர்க்கம் என்று பலவகைக் குறிகளைக் கவனிக்கச் சொல்கிறார்கள்.

    காதலி, தாய் இவர்களின் மறுப்புகளை விளையாட்டாக இப்படிச் சொல்வதுண்டு: 'முடியாது' எனில் 'பார்க்கலாம்' என்று பொருள்; 'பார்க்கலாம்' எனில் 'சம்மதம்' என்று பொருள்.

    விற்பனைத்துறையில் இந்த விடாப்பிடிப் போக்கு சாதாரணம் ('no' means 'maybe'; 'maybe' means 'yes'). நம்மூர் கடைகளில் கூட கவனிக்கலாம். மணிக்கணக்கில் ஒன்றன் சிறப்பை எடுத்துச் சொன்னக் கடைக்காரர், நாம் "அது வேணாம்பா" என்றால், "அப்ப இதை வாங்கிக்க சார். அதை விட இது சூபரு" என்பார். "ஆளை விடய்யா!" என்று நாம் எரிச்சலோடு ஒதுங்கும் வரை நச்சரிப்பு தொடரும்.

    மன் ஒரு தேர்ந்த வியாபாரி. மறுப்புகளை அவ்வளவு சுலபமாக ஏற்பானா? 'காணிபூணி தருகிறேன், நீண்ட ஆயுள் கேள்' என்று ஆசை காட்டியும் நசிகேதன் சலனப்படாததைக் கவனித்து, 'அதை விட இது சூபர்' பாணியில் தொடர்ந்தான்.

    'இந்தப் பிள்ளை பொன்னுக்கும் மண்ணுக்கும் மயங்கவில்லை. சொர்க்கம் செல்லும் வழியை வரமாகக் கேட்டானே? சொர்க்கத்துக்குப் போவதே வாழ்வின் இலக்கு என்று எண்ணுகிறானோ? அதைச் சுலபமாக்கி விட்டால்?' என்று எண்ணிய எமன், உடனே உத்தரவாதம் கொடுத்தான். "நசிகேதா! பொன்னும் மண்ணும் அரசும் ஆயுளும் தந்தேன் அல்லவா? அவற்றைக் கொண்டு உலக வாழ்வை அனுபவி. அவற்றைவிடச் சிறப்பான சொர்க்க வாழ்வையும் தருகிறேன்" என்றான்.

    'செய்த பாவங்கள் எல்லாம் தீரும்' என்று வரமளித்தானே, ஏன்? நசிகேதன் சிறுபிள்ளை, என்ன பாவம் செய்திருக்கக் கூடும்? அல்லது செய்யக்கூடும்? பொன், மண், செல்வம், நீண்ட ஆயுள், இவற்றுக்கு மேலாக மனதில் எண்ணியதை நிறைவேற்றுவதாகச் சொன்னான். நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மனிதன் தீய வழியில் செல்லக்கூடும். நசிகேதன் மனிதப் பிறவிக்குத் திரும்பியதும், பெற்ற சலுகைகளைக் கொண்டு வாழ்வைச் சுவைக்கும் சபலம் வந்தால், 'பாவ புண்ணிய சொர்க்க நரகம்' பற்றிக் குழம்பாமல் இருக்க எமன், "பாவங்களைப் போக்கிப் பேர் தருவேன்" என்றான். அத்தனை சலுகைகளையும் முன்வைத்தான்.

    'ஒருவேளை, இந்தப் பிள்ளை அறிவாளியென்பதால் அறிவைப் பிடித்துக் கொண்டு அலைகிறதோ?' என்று இன்னும் சந்தேகப்பட்ட எமன், 'சொர்க்கத்துக்கு மேல் இன்னொன்றையும் சொல்லி வைப்போம்' என்று எண்ணி, "ஐயா, உனக்கு நுண்மையான அறிவுதானே வேண்டும்? மரணத்தைப் போலவே நுட்பமான தத்துவம் இன்னொன்றைக் கேள், சொல்கிறேன்" என்றான்.

    தானங்களை அள்ளி வழங்கிய எமன், "தயவுசெய்து மரண உண்மையை மட்டும் கேட்காதே" என்றபடி நசிகேதனைப் பார்த்தான்.

9 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

வெண்பா அருமை.
ஈற்றடி எனக்கு ஏனோ
பாரதியின் "சாவதற்கு அஞ்சேல் "என்னும் புதிய ஆத்தி சூடியை நினைவுபடுத்தியது.

meenakshi சொன்னது…

பரிதாபமாக இருக்கிறது எமனின் நிலை. சுலபமாக கிடைக்கும் எதிலும் சுவாரசியம் குறைவுதான்.

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன் (நான் நலமே, நன்றி), meenakshi,...

அப்பாதுரை சொன்னது…

பயணம் காரணமாகவும், எதிர்பாராத சுவையான jury dutyல் சிக்கியிருப்பதாலும் நேரத்தோடு எழுத இயலவில்லை. எழுதி வைத்ததைத் திருத்த இயலவில்லை. வரும் வெள்ளியோடு ஜூரிப் பணி முடிகிறது. வந்து தொடர்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

என்ன மாதிரியான ஜுரி வேலை? பகிரலாமா மூன்றாம் சுழியில் ?

Santhini சொன்னது…

தொடர்ந்து எழுதிவிட்டால் போகிறது.
திருப்தி என்பதையும், தேடல் என்பதையும், உங்களது பார்வையில் என்ன என்று உங்களால் விளக்கம் அளிக்க இயலுமா?
ஏனென்றால் வார்த்தைகள் அவரவர் அனுபவத்திற்கு ஏற்ப அர்த்தம் ஏறிக் கொள்வதால், நான் உங்களை தவறாக புரிந்து கொள்வதை தவிர்க்க நினைக்கிறேன். திருப்தி என்றால் என்ன என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை பொருத்தது, தேடலின் தேவையும், தேவை இல்லாமையும்.
உங்களிடம் ஏற்கெனவே திருப்தி இருப்பதால், உங்கள் தேடல் திருப்தியை நோக்கியதாக இருக்க வாய்ப்பில்லை. எனில் ......தேடல் .....தன் இருப்பின் அவசியம் என்ன என்ற கேள்விக்கு பதிலா? தன் இருப்பிற்கு அர்த்தம் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலா? தான் என்ற உணர்வின் அவசியம் என்ன என்ற கேள்விக்கு பதிலா? வாழ்வு என்பது எதனால் ஆக்கப் பட்டது என்ற ஆராய்ச்சியா அன்றி .....கடவுள் என்ற மாய பிம்பம் குறித்த விசாரணையா? .......இவற்றில் ஒன்றாகவும் , இவை எல்லாமுமாகவும்...அன்றி வேறேதுமாகவும் .....தேடல் இருக்கக் கூடும்.
எதுவாயினும் .....உங்கள் விளக்கம் கண்டு ......தொடருவோம்.
இதுவரை ......இருந்த Phoenix க்கு bye bye சொல்லிவிட்டு, இன்னும் இரண்டு வாரங்களில் இந்தியப் பயணம். ஆகையால் தொலை பேச .......சிறிது காலம் சென்று தொலைபேசி எண் தருகிறேன். அதுவரை ....கருத்துப் பரிமாற்றம் விரும்பினால் .....santhinidevi@gmail.com

அப்பாதுரை சொன்னது…

"உங்களிடம் ஏற்கெனவே திருப்தி இருப்பதால், உங்கள் தேடல் திருப்தியை நோக்கியதாக இருக்க வாய்ப்பில்லை" - அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். (இப்படிப் 'பின்னு'கிறீர்களே?!)
திருப்தியை நோக்கிய தேடல் என்பதே இது வரை எனக்குத் தோன்றவில்லை - ஒரு வேளை அங்கே தான் தொடங்கவேண்டுமோ என்னவோ!
கொஞ்சம் விவரமாக சிந்திக்கவும் பதிலெழுதவும் அவசியமாகிறது.

இந்தியப் பயணமா? (நீங்களுமா?) அவசியம் தொடர்பில் இருப்போம். எனக்குத்தான் பெருமை. உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். பயண வாழ்த்துக்கள்.

அப்பாதுரை சொன்னது…

'எது திருப்தி?' என்பதுதான் என் தேடலோ? இப்போதைக்கு இதான் தோன்றுகிறது.

Santhini சொன்னது…

திருப்தி குறித்து மேலும் சிந்தித்த பிறகு உங்கள் பதில் கண்டபிறகு பேசுவோம்.
--