வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/03/22

செல்வங்கள் அழிவன என்றான் நசிகேதன்


35
இசையும் இளமையும் வாரிசும் வாழ்வும்
நசையாகும் நாளிவை நில்லா - வசையாம்
பனிமொழியர் பாடலும் என்வரமே என்றும்
தனிநிற்கும் தன்மைய தாம்.

    புகழ், இளமை, சந்ததி, சிறப்பான வாழ்க்கை இவையெல்லாமே ஆசையின் வடிவங்கள்; நிலைக்காதவை. குளிர்மொழிப் பெண்களின் இனிய பாடல்களும் ஒரு நாள் வசைமொழி போல் தோன்றும். நான் கேட்ட வரம் மட்டுமே தனிப்பட்டு நின்று பயன் தரும் தன்மையது (என்றான் நசிகேதன்).

நசை: அளவற்ற ஆசை


    சொர்க்கம் செல்லும் வழியையும், பொன்னையும் மண்ணையும் பெண்ணையும் இளமையையும் பெற்றுக்கொண்டுத் திரும்பியிருந்தால் நசிகேதனைப் பற்றி இன்னும் பேசிக் கொண்டிருப்போமா?

    ஞானிகள் அறிவை வளர்ப்பது அனைவரும் பயனுறவே.

    எமன் எப்படியெல்லாம் ஆசை காட்டினான்! 'எல்லாம் தருகிறேன், இன்னொரு நுட்பமான அறிவையும் வரமாகத் தருகிறேன், மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே' என்றான்.

    ஒன்றைச் செய்யாதே என்றால் நம் மனம் அடங்குகிறதா? அதைத்தானே செய்யத் தோன்றுகிறது? 'என்னய்யா இவன்? மரணத்தைப் பற்றிக் கேட்டால் மனம் போனபடி அள்ளி விடுகிறானே? அப்படி என்ன தான் இருக்கிறது இதில் மர்மம்?' என்று சாதாரணருக்கும் தோன்றுமே? சிறுபிள்ளைக்கே உரித்தான பிடிவாதக் குணம் இருந்தாலும், நசிகேதன் அறிவுள்ள பிள்ளை வேறு. அவனுக்கும் அதே எண்ணமே ஓடியிருக்கும்.

    முதல் இரண்டு வரங்களில் பூமிக்குத் திரும்பிப் போகும் வாய்ப்பையும், சொர்க்கம் செல்லும் அறிவையும் பெற்றான். எமனுலகிலிருந்து திரும்பி வந்தான் என்ற செய்தியே போதுமே? போதாவிடில், சொர்க்கம் செல்லும் வழி தெரிந்தவன் என்றால் உலகத்தவர் அவனை உயர்த்திவிட மாட்டார்களா? அதற்கு மேல் அவனுக்கு என்ன புகழ் தேவைப்படப் போகிறது? மேலும் அவன் அரசன் மகன். அவனுக்குக் கிடைக்காத பொன், மண், கால்நடை சொத்து, அழகிய மகளிர் பணிவிடை, மற்றும் அரசுப் பதவியா?

    நசிகேதன் விரும்பியா நமனுலகம் வந்தான்? இன்னொருவர் கொண்ட ஆசையினாலும் செய்த தவறினாலும் அல்லவா அங்கே சென்றான்? திரும்பிய பின், தானும் இது போல் நடந்து கொண்டால்? தானும் மற்றவர்களும் அவ்வாறு நடவாதிருந்தால் உலகில் மனித வாழ்க்கை பயனுள்ளதாக மாறுமே? தன் தந்தைக்கும் தனக்கும் சேர்த்த பேறுகள் போதாமல், மனித வாழ்க்கைக்கு மகத்துவம் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும் போலிருக்கிறதே? அறியாமையைப் போக்க இதை விட சிறப்பான வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்பதை அறிந்தான். அதனால் தன்னுடைய வரம் 'தனித்து நிற்கும் தன்மையது' என்றான். காலத்தால் அழியாததல்லவா கல்வி?

    எமன் வழங்கிய செல்வங்களையும் வளங்களையும் மறுத்து, வேறு வரம் வேண்டாமென்ற தன் நிலையில் உறுதியாக நின்றான் நசிகேதன்.

9 கருத்துகள்:

அப்பாதுரை சொன்னது…

கடைக்குட்டி எழுதியிருந்த 'எல்லாச் சுவையும் ஒருநாள் தொண்டைக்குக் கீழே இறங்கா நிற்கும்' என்ற கருத்தை மிகவும் ரசித்தேன். இந்தப் பாடலுக்குப் பொருத்தமான கருத்து. இந்தப் பாடலை ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் சேர்க்க முடியவில்லை (இலக்கணப் பிழை வந்தால் திருத்த ஒரு வாரமாகும் :)

meenakshi சொன்னது…

எளிமையான அழகான வெண்பா.
இச்சிறுவனின் உறுதி மலைக்க வைக்கிறது.

பத்மநாபன் சொன்னது…

நேரத்தில் பின்னூட்டம் இடமுடியாவிட்டாலும் பதிவுகளை அனுபவித்து படித்து வருகிறேன்..

எது நிலையான இன்பத்திற்கு இட்டு செல்கிறதோ அதை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் நசிகேதனின் நேர்மறையான பிடிவாதம் சிறப்பு...

Santhini சொன்னது…

//கடைக்குட்டி எழுதியிருந்த 'எல்லாச் சுவையும் ஒருநாள் தொண்டைக்குக் கீழே இறங்கா நிற்கும்' என்ற கருத்தை மிகவும் ரசித்தேன்./////
நானும் அவ்வாறே :)

சிவகுமாரன் சொன்னது…

எமன் எனக்கு தேர்தல் நேர இலவச வாக்குறுதிகள் தரும் அரசியல்வாதியாய் தெரிகிறான். வாக்காளர்கள் எல்லாம் நசிகேதன் போல் இருந்துவிட்டால்.... சொர்க்கம் தான் பூவுலகிலேயே .

அப்பாதுரை சொன்னது…

வருக சமுத்ரா, meenakshi, பத்மநாபன், Nanum enn Kadavulum, சிவகுமாரன், ...

அப்பாதுரை சொன்னது…

படிப்பதே பெரிது பத்மநாபன், நன்றி.

அப்பாதுரை சொன்னது…

சரியே சிவகுமாரன். பலவீனக் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு கேட்கிறான் எமன்.

மோகன்ஜி சொன்னது…

/'எல்லாச் சுவையும் ஒருநாள் தொண்டைக்குக் கீழே இறங்கா நிற்கும்'/
அற்புதம்...