36
சொன்னதே சொல்லுங் கிளிப்பிள்ளை போல்பேசி
என்னநான் ஈந்தும்நீ ஏற்கவில்லை - இன்னும்
படியா வயதில் பொருந்தாது கேட்டுப்
பிடியாதே வீண்பிடிவா தம்.
என்னநான் ஈந்தும்நீ ஏற்கவில்லை - இன்னும்
படியா வயதில் பொருந்தாது கேட்டுப்
பிடியாதே வீண்பிடிவா தம்.
எத்தனை செல்வங்களும் சலுகைகளும் தந்தாலும், சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல் மரண அறிவு பற்றியே கேட்கிறாய். முதிராத உன் வயதுக்கு பொருத்தமற்ற வரங்களைக் கேட்கும் வீண் பிடிவாதத்தை விடு (என்றான் எமன்).
பேரம்* பற்றிய நுட்பங்களில் x,y நடத்தைகளைத் தொட்டோம். சிக்கலை விடுவிக்கும் முயற்சியில், கொடுக்கல் வாங்கலினாலும் பேச்சு வார்த்தையாலும் ஏற்படும் வெப்பநிலை தணிந்து, உடன்பாடு உண்டாக இரு நடத்தைகளும் தேவை. சில நேரம் கசப்பான வெற்றியைத் தந்தாலும், ஒரே நடத்தையைக் கடைபிடிப்பது உடன்பாட்டைத் தருவதில்லை. ஒரே நடத்தையை இறுதி வரை கடைபிடிப்பதால் உடனிருப்போரின் வெறுப்புக்கு ஆளாகலாம். ஒரு நடத்தையில் தொடங்கி எதிர் நடத்தைக்கு ஒரேயடியாகத் தாவினாலோ உடனிருப்போரின் நம்பிக்கையை இழக்க நேரிடும். எந்த நடத்தையிலும் பிடிப்பில்லாமல் கணத்துக்குக் கணம் மாறினாலோ அனைவரின் நம்பிக்கையை இழப்பதுடன் தானும் குழம்பி இலக்கை விட்டு விலகி வெகு தூரம் போக நேரிடும்.
தான் விரும்பியதை அடைந்தாலும், அது பிறரின் வெற்றி போன்ற உணர்வை ஏற்படுத்துவதே உடன்பாட்டின் இலக்கணம். பெரும் பேரம் செய்யும் கூட்டங்களில் ஒவ்வொருவரும் (தரப்பும்) தங்களின் 'அடலொற்கத்தருணம்' அறிந்து, லாப-நஷ்ட கொடுக்கல்-வாங்கல் எல்லைகளை முன்பே ஓரளவுக்குத் தீர்மானித்து, தங்களின் batna வலுவை தக்கவைக்க முயற்சிப்பதைக் கவனிக்கலாம்.
தினசரி வாழ்வில் இந்த அறிவு பயன்படுமா?
'சொல்வதைக் கேள், இல்லையேல் கோபம் வரும்' என்ற வீட்டு வழக்கத்தை அறிவோம். ஆட்டத்தை விட்டு ஆளைக் குறிவைக்கும் இயல்பை விளையாட்டில் பார்க்கிறோம். இடுகை பற்றிய கருத்தை விட்டு, எழுதியவர் திமிர் பிடித்தவர் என்ற பாணியில் வரும் பின்னூட்டங்களைத் தினமும் படிக்கிறோம் :). இவை எல்லாமே தினசரி வாழ்வின் x நடத்தைகள். இலக்கை மறைப்பவை.
'விட்டுக்கொடுக்கும்' பாங்கான y நடத்தையை முழுதுமாகக் கடைபிடித்தால் ஏமாற்றமே வரும். தன்னம்பிக்கையற்றவர்கள் பெரும்பாலும் y நடத்தையை வெளிப்படுத்துகிறார்கள். எந்தச் சூழலிலும் தனக்கான கருத்தை, இடத்தை, நிலையை வகுத்துக் கொள்ளாதவர்கள் வெற்றியடைவதில்லை. வாழ்விலும் முன்னேறுவதில்லை. முயலுக்கு மூன்று கால் என்ற பாணியில் ஒரே நிலையில் நிற்க வேண்டுமென்பதில்லை - ஒரு நிலை கூட இல்லாமல் 'எல்லாம் விதி', 'எழுதியிருப்பது போல் நடக்கும்', 'நீங்க என்ன சொல்றீங்களோ அதையே என்னோட கொள்கையா வச்சுக்குங்க', 'எல்லாம் உங்கள் இஷ்டம், நீங்க பாத்து செஞ்சா சரி', 'நம்பிக்கையோட செஞ்சா நிச்சயம் நடக்கும்' போன்ற நிலைகளை விரும்பி ஏற்கும் y நடத்தையாளர்கள் தங்களுக்கென்று ஒரு இடமுமில்லாமல் திரிகிறார்கள். எதையோ எதிர்பார்த்து, எதையோ செய்து, முடிவில் எதிலுமே நிறைவில்லாமல் தன்னையே குறை சொல்லி, விழுந்த குழியை ஆழப்படுத்தும் கண்மூடிகள். பரிதாபத்துக்குரியவர்கள்.
'எடுத்துக்கொள்ளும்' பாங்கான x நடத்தையை முழுதுமாகக் கடைபிடிப்போர், தொடக்கத்திலிருந்து வெறுப்புணர்ச்சியைப் பரப்புகிறார்கள். தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினாலும், ஆதாரமான அறிவையோ பொதுநல உணர்வையோ மறைத்துவிடும் அபாயம் உண்டு என்பதை x நடத்தையாளர்கள் அறிவதில்லை. 'என்னை விட்டால் உங்களுக்கு வேறு கதி இல்லை', 'எனக்குத் தெரியாததா?', 'எல்லாம் என் சொற்படித் தான் நடக்க வேணடும்', 'நான் பார்க்காததா?', 'எதிலும் நான்' போன்ற நிலைகளைப் பழகும் x காரர்கள் பல நேரம் எல்லாவற்றையும் இழந்து அவமானமடைகிறார்கள். பிறகு, 'என்னை மதிக்கவில்லையே!' என்று வெறுத்து ஒதுங்குகிறார்கள். சில x காரர்கள், ஒரேயடியாக y நடத்தைக்குத் தாவி தங்கள் மதிப்பை இழக்கிறார்கள் - இந்த மாற்றம் x காரர்களை பாதிப்பது போல் y காரர்களை பாதிப்பதில்லை (y காரர்கள் ஒரேயடியாக x நடத்தைக்கு மாறும் சாத்தியம் மிகக்குறைவு - துணிச்சலற்றவர்கள்). x,y,x என்று கணமொரு கட்சி மாறி, உடனிருப்பவர்களையும் தன்னையும் அழித்துக் கொள்ளும் அபாயம் x நடத்தையாளர்களிடம் உண்டு. இவர்களும் பரிதாபத்துக்குரியவர்கள்.
xம் தேவை, yம் தேவை. அவற்றை வெளிப்படுத்தும் முறையில் நிதானமும், அறிவு கலந்தத் தன்னம்பிக்கையும், பொது அக்கறையும் இருந்தால் இலக்கை அடைய முடியும். மகாத்மா காந்தி, அன்னை தெரசா, சாதனையாளர் அனுராதா கொய்ராலா போன்றவர்கள் y நடத்தையர் போல் தோன்றினாலும், உண்மையில் அறிவார்ந்த x நடத்தையை ஆதாரமாக வெளிப்படுத்தியவர்கள். இலக்கிலிருந்து விலகாமல் தான் நினைத்ததை சாதித்தாலும், அது பிறருடைய வெற்றி என்கிற பிரமையை உண்டாக்க இவர்களால் முடிந்தது.
அடுத்த முறை வீட்டிலோ வெளியிலோ, பெரும் சச்சரவு அடக்க அல்லது பொது உடன்பாடு ஏற்படுத்த வேண்டிய நிலையில், பிறர் வெளிப்படுத்தும் நிலை கண்டு அதற்கொப்ப நடக்கலாம். வாழ்வே பேரம்.
அள்ளி அள்ளிக் கொடுத்தும் அசையவில்லை நசிகேதன். எமன் வழங்கியவை நிலைக்காதவை என்பதை அறிவோடு நயமாக எடுத்துச்சொல்லி, எமனையும் அலட்சியப்படுத்தாமல், தன் வரத்தின் பயனே நிலையானது என்ற உறுதியோடு நின்றான்.
தான் வழங்கியதை நசிகேதன் ஏற்கவில்லையென்பது தெரிந்தும், இனி வழங்க எதுவுமில்லை என்று தெரிந்தும், எமன் எரிச்சலடைந்தான். ஆட்டத்தை விட்டு ஆளைத் தாக்கத் தொடங்கினான். நசிகேதனின் கருத்தை ஒதுக்கி, 'சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை, படியாத வயது, பிடிவாதக்காரன்' என்று நசிகேதனைத் தாக்கிப் பின்னூட்டம் வழங்கினான். yலிருந்து xக்குத் தாவினான்.
உடன்பாடு ஏற்படுமா? நசிகேதன், எமன் சொற்படி நடப்பானா? ►
* 'பேரம்: உடன்பாடு காண்பதற்கான பேச்சு, ஒப்பந்தப்பேச்சு, சலுகை பற்றிய பேச்சு' என்கிறது சென்னைப் பல்கலைக்கழக அகராதி; 'பேச்சை' வலியுறுத்தினாலும் பேரம், negotiationக்கு பொருந்தும் தமிழ்ச்சொல். உதவிக்கு மிக நன்றி, Nanum enn Kadavulum.
அடலொற்கத்தருணம்: அடல், ஒற்கம், தருணம் - பலம், பலஹீனம், சந்தர்ப்பம் | strength, weakness, opportunity - அடலொற்கத்தருணமறிதல் அரச, அமைச்ச, அவை, படைத்தலைவரின் இலக்கணம்.
batna என்பது பேர மேலாண்மைத் தந்திரம்.
9 கருத்துகள்:
X யையும் Y யையும் வைத்து பேர மேலாண்மையை அற்புதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். காந்திஜி தெரசா அவர்களை குறிப்பிட்டவுடன் X Y சமன்பாடு எளிதாக புரிதலுக்கு வந்தது.
பொறுமையின்மை ஆள் அடிக்கும் யுத்தியாக மாறுவதை அருமையாக சொன்னீர்கள் .. எமன் நசிகேதனிடம் இன்னமும் ஏதோ எதிர்பார்ப்பது போல் இருக்கிறது ( அறிவு நிலை மேம்பாடு )..
//"படியா வயதில் பொருந்தாமல் கேட்டுப்
பிடியாதே வீண்பிடிவா தம்"//
நல்லா இருக்கு. எமனுக்குக் கோபம் வந்து விட்டது போலும்! ஏய்...சின்னப் பையா சும்மா இரு என்கிறான்!
பேரம் பற்றிய முதல் பாரா இன்றைய அரசியல் காட்சிகளுடன் அப்படியே ஒத்துப் போகிறது.
அடலொற்கத்தருணம்' ....?
எம்.ஜி.யார் கலையுலக வாத்தியார் என்றால்...
வலையுலக வாத்தியார் சார் நீங்க...
ஒன்னு இங்க வெண்பா... தமிழோடு மேலாண்மை சொல்லித்தரீங்க.....
ரெண்டாவது மூன்றாம்சுழியில் அறிவியல் புனைவு எழுதி விஞ்ஞானத்தை வளர்க்கிறீர்கள்...
ரொம்ப சீரியஸ் வாழ்க்கை மற்றும் மேலாண்மை தத்துவங்கள் கருத்துக்களுக்கு இடையே இது போல ஒரு கமென்ட் இந்தத் தளத்தில் ஜெல் ஆகுமா என்று தெரியவில்லை... இருந்தாலும் மனதில் பட்டதை சொன்னேன்.
நன்றி வலை வாத்தியாரே! ;-))
X,Y பற்றிய உங்கள் விளக்கங்கள் எனக்கு ஜெயா, வைகோ , ராமதாஸ் என்று பலரின் குணாதிசயங்களை நினைவுபடுத்துகின்றன.
அருமை வலையுலக வாத்தியாரே (நன்றி RVS )
ஒரு வாத்தியார் சின்ன பையனை அதட்றது அப்படியே அழகா வந்திருக்கு இந்த வெண்பால. ரொம்ப நல்லா இருக்கு.
'அடலொற்கத்தருணமறிதல்' இதோட அர்த்தம் நல்லாதான் இருக்கு, ஆனா சொல்றதுக்குள்ள யப்பா! நாக்கு தள்ளுது. :)
'வலையுலக வாத்தியார்'
RVS. சூப்பர்! :)
ஹிஹி RVS.. பிடிங்க எதிர் ஜாமீன். உங்களுக்கு 'வாரியார்' பட்டம். (இப்படிப் போட்டு வார்றீங்களே?)
அடுத்த மாதம் சென்னையில் போஸ்டர் ஒட்டி விழா எடுத்து பட்டம் மாத்திக்குவோம்.
உங்க எண்ணத்துக்கு நன்றி - மூணு விரல்.
X, Y விளக்கம் வெகு தெளிவு.
Please read my email to you. Management article are very good but drifting from the main topic. Please limit.
point taken, raghavan. thanks.
கருத்துரையிடுக