வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/07/15

தன்னையறியும் வழி கேட்டான் நசிகேதன்


61
வித்தும் விளைவும் விடுத்தவத் தத்துவத்தை
மெத்த விளக்கினீர் வந்தனம் - அத்தரினித்
தன்னறிவு தேடும் வழியும் தரவேண்டும்
என்றான் எமனிடம் ஏறு.

   "காரண காரிய விளைவுச் சுழலைக் கடந்த நுட்பமான ஆன்மாவைப் பற்றி மிக நேர்த்தியாக விளக்கியதற்கு நன்றி. இனித் தன்னறிவைத் தேடும் வழிமுறைகளை விளக்கவேண்டும் குருவே" என்று எமனிடம் கேட்டான் எருது போன்ற நசிகேதன்.


வித்து: விதை (வித்தும் விளைவும் காரண-காரியத்துக்கு ஆகி வந்தவை)
அத்தர்: ஆசிரியர், குரு
ஏறு: எருது (இங்கே நசிகேதனைக் குறிக்கிறது)


['.. human being has so many skins inside, covering the depths of the heart.. thirty or forty skins, thick and hard as an ox's or bear's, cover the soul..' - meister eckhart ]

    ழையத் திரைப்படக் காட்சியொன்று, நினைவிலிருந்து:

மந்திரவாதி வில்லன், நாட்டின் இளவரசியை ஒரு கிளியாக மாற்றி எங்கேயோ மறைத்து விடுகிறான். அரசன் மிகவும் துடித்துப் போய், இளவரசியை மீட்டு வருவோருக்கு அரசாங்கத்தில் பங்கும் இளவரசியோடு திருமணமும் செய்து வைப்பதாக அறிவிக்கிறான். ஆளாளுக்கு இளவரசியைத் தேட, இளவரசியைத் திருட்டுத்தனமாகக் காதலிக்கும் கதாநாயகனான சேனாதிபதி மகனும், துணைக்கு அவருடைய நண்பனும், தேடலில் இறங்குகிறார்கள். கதாநாயகன் ஒரு நல்ல மந்திரவாதியிடம் சென்று பணிவோடு உதவி கேட்கிறான்.

மந்திரவாதி ஒரு கை நிறைய சாம்பிராணியை தீயிலிட்டு அந்தப் புகையை உற்று நோக்கி, "வில்லன் மந்திரவாதி இளவரசியைக் கிளியாக மாற்றி ஒரு மரத்தின் மேலே கூட்டில் அடைத்து வைத்திருக்கிறான்" என்கிறார்.

நண்பன் உடனே கதாநாயகனைப் பிடித்து இழுத்து, "வா போவலாம். இருக்குற எல்லா மரத்துலயும் ஏறிப்பாத்துருவோம்"

"பொறுங்கள். அந்த மரம் இந்த ஊரில் இல்லை" என்கிறார் மந்திரவாதி.

"பக்கத்து ஊர்லயா? சரி, அங்கயும் பாத்துருவோம்" என்று புறப்படத் துடிக்கிறான் நண்பன்.

"பக்கத்து ஊரிலும் இல்லை, அருகில் எந்தக் காட்டிலும் இல்லை"

"அப்ப எங்க தான் இருக்குது இந்த மரம், சொல்லுங்க... சாம்பிராணி பத்தலியா பாருங்க, இந்தாங்க, இன்னும் நல்லா ஊதிக் கண்டுபிடிங்க" என்கிறான் நண்பன். "ஆமாம் ஐயா, சொல்லுங்க" என்று கெஞ்சுகிறான் கதாநாயகன்.

"எங்கேயோ தொலைவில் ஒரு உயரமான மலையின் உயரமான மரத்தின் உயரமான கிளையில், ஒரு கூட்டில் ஒளித்து வைத்திருக்கிறான்"

"ஏணி எடுத்துட்டு போவலாங்றீங்களா? எங்கேயோ தொலைவில்..னா எங்கே? எப்படிப் போறது அங்கே?" என்ற நண்பனை அடக்கி நெளிகிறான் கதாநாயகன்.

"இங்கிருந்து ஏழு ஊர்களை எப்படியாவது கடந்தால், ஏழு காடுகள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், ஏழு நாடுகள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால் ஏழு கடல்கள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், ஏழு பாலைவனங்கள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், ஏழு மலைகள் வரும். எப்படியாவது அவற்றைக் கடந்தால், இரண்டு தலை யட்சிணிகள் ஏழு பேர் தோன்றுவார்கள். எப்படியாவது அவர்களை வீழ்த்தினால், உயரமான மலைக்கு வழி சொல்வார்கள். எப்படியாவது மலையை அடைந்தால், அங்கே கண்ணுக்குத் தெரியாத ஏழு கொடிய விஷப்பாம்புகள் உயரமான மரத்தைக் காத்து நிற்கும். எப்படியாவது பாம்புகளைக் கண்டு கொன்றால், மரத்தில் ஏறலாம். அங்கே ஒரே வடிவில் ஏழு கூண்டுகள் இருக்கும். வெற்றுக் கூண்டைத் திறந்தால் அத்தனை கூண்டுகளும் வெடித்து விடும். எப்படியாவது இளவரசி இருக்கும் கூண்டைத் தெரிந்து கொண்டு..." என்கிறார் மந்திரவாதி.

கதாநாயகனுக்கு இருப்பு கொள்ளவில்லை. வீராவேசத்துடன், "வா, போகலாம்" என்கிறான். நண்பன் தடுத்து, மந்திரவாதியை மேலும் கீழும் பார்க்கிறான். பிறகு அமைதியாக, "யோவ்! நீயெல்லாம் என்னய்யா மந்திரவாதி? இளவரசியை மீட்டு வர வழி கேட்டா, வழியா சொல்றே? இதை எப்படியாவது கடந்தால் அது வரும், அதை எப்படியாவது கடந்தால் இன்னொண்ணு வரும், அந்த இன்னொண்ணை எப்படியாவது கடந்தால்... என்னய்யா இது, விளையாட்டா போச்சா? ஆமா... எப்படியாவது கடந்தால், எப்படியாவது கடந்தால்னு சொல்றியே தவிர, எப்படிக் கடக்குறதுனு சொல்ல மாட்றியே?" என்கிறான். பிறகு கதாநாயகனிடம், "இவனை நம்பி வந்தா இருக்குற சிக்குல பேனை சேத்துருவான் போலிருக்கே?" என்றபடித் தலையைச் சொறிகிறான்.

   காட்சியின் நகைச்சுவையைப் பலமுறை ரசிக்க முடிந்தாலும், வழிகாட்டிய மந்திரவாதியின் செயலில் புதைந்திருக்கும் ஒரு strategic insight புரிகிறதோ? மாயாஜாலத் திரைப்படக் காட்சியில் insight எங்கிருந்து வந்தது என்கிறீர்களா? பசியில் வாடுகிறவனுக்கு மீன் இருக்கும் ஏரியைக் காட்டுவதா, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதா, மீனைப் பிடித்துக் கொடுப்பதா, பிடித்த மீனைக் கொடுப்பதா, மீனைச் சமைத்துக் கொடுப்பதா அல்லது சமைத்த மீனைக் கொடுப்பதா? இந்தக் கேள்விக்கான பதிலே காட்சியின் insight.

   செயலின் போக்கை எடுத்துக்காட்டுவது, செயல்முறையை விளக்குவதை விட மேல். இப்படிச் செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்ட முறையைச் சொன்னால் அது நிறைவேறாமல் போகும் அபாயம் உண்டு; செயல்படுத்துவோரின் திறமை வளராமல் போகும் அபாயம் உண்டு; செயல்படுத்துவோரின் தவறுகளினால் முறையே தவறு என்ற எண்ணம் நிலையாகும் அபாயம் உண்டு. தேர்ந்த ஆசிரியர், மாணவருக்கு வழிகாட்டியாக இருப்பாரே தவிர வழித்துணையாக மாறுவதில்லை. பெற வேண்டியச் சிறப்பை உணர்ந்து, தானே சிறக்க முனையும் வேறு மாணவரைத் தேடிப் போய்விடுவார்.

   நம்மில் சிலருக்கு வழிகாட்டி போதாது; வழித்துணை போதாது; வழியாகவே மாறினாலும் போதாது; தோளில் சுமந்து இலக்கில் சேர்த்தால் மட்டுமே பயணிப்பார்கள். "கண்ணுக்கு எதிரே நிற்கிறது, கண் திறந்து பார்" என்றால், "கொஞ்சம் கண்ணைத் திறந்து விடேன்" என்பார்கள். இவர்களை அடையாளம் கண்டு விலகுவது ஆரோக்கியமானது.

['..இருளில் விழிக்கின்றார், எதிரே இருப்பது புரிகின்றதா? இசையை ரசிக்கின்றார், இசையின் உருவம் வருகின்றதா?' - கண்ணதாசன் ]

    சிகேதன் எமனிடம், "ஐயா! காரணம்-காரியம், செயல்-விளைவு போன்ற நிலைத்தொடர்புகளுக்கு அப்பாற்பட்ட, அழிவற்ற, எளிதில் அறியமுடியாத ஆனால் முயன்றால் அறியக்கூடிய, ஆன்மாவைப் பற்றியும் அதை அறிய வகை செய்யும் தன்னறிவு பற்றியும் விளக்கமாகச் சொன்னீர்கள். மிகவும் நன்றி. இனி நான் பெற விரும்புவது ஒன்று உண்டு" என்றான்.

    எமன் கேள்விக்குறியுடன் நசிகேதனைப் பார்த்தான்.

    "குருவே! தன்னறிவு என்றால் என்ன என்பதையும், தன்னறிவின் குணம் தன்மை சிறப்புக்களையும், இருப்பிடத்தையும் அறிந்து கொண்டேன். இனி, இருப்பிடம் தேடித் தன்னறிவை அடைவது எப்படி என்பதையும் விவரமாகச் சொல்லுங்களேன்?" என்றான் நசிகேதன்.

13 கருத்துகள்:

ராமசுப்ரமணியன் சொன்னது…

என்ன படம் இது? பதிவுக்கே எடுத்தாப்புல இருக்கே?

அப்பாதுரை சொன்னது…

//பதிவுக்கே எடுத்தாப்புல இருக்கே?

நானும் அதைத்தான் நினைத்தேன். படம் நினைவில்லை ராமசுப்ரமணியன்..

பத்மநாபன் சொன்னது…

ஆன்ம தேடல் அந்த படத்தின் இளவரசியைவிட எளிதுதான் ... இளவரசிக்கு கொடுக்கும் அழுத்தத்தில் ஆயிரத்தில் ஓரு பங்கு கூட ஆன்ம தேடலுக்கு கொடுப்பதில்லை அது தான் உண்மை ( இளவரசி - இங்கு சரியான உருவகம் ).
தன்னறிவின் இருப்பிடம் புதிர் விடுவிப்புக்கு ஆவலுடன்....

Santhini சொன்னது…

Present !

Santhini சொன்னது…

மொழி ஆளப்படுகிறது
வார்த்தைகள் ஜாலம் செய்கிறது
உருவக, உவமை, ஒப்பீடுகள் ஆராதனை செய்யப்படுகிறது.
சிந்தனையின் கோட்டில் இலக்கியம் உருவாக்கப்படுகிறது
அறியப்பட்டது முன் வைக்கப்படுகிறது
அறியப் படாததும் ஆங்காங்கே வைக்கப்படுகிறது
என் கண்கள் அறியாத தூரத்தில்
கண்ணீர் உகுத்து, உயிரை உருக்கும்,
தேடலின் தீவிரம்,
நிகழும் என்ற ....நம்பிக்கையில் நான்.

kowsy சொன்னது…

அற்புதமான பதிவு. அறிவுப்பசியைத் தீர்க்கும் நசிகேத வெண்பாவை உங்கள் மூலம் அறியும் வாய்ப்புக் கிடைத்தமையையிட்டு மிக்கமகிழ்ச்சி கொள்ளுகின்றேன்.
நம்மில் சிலருக்கு வழிகாட்டி போதாது; வழித்துணை போதாது; வழியாகவே மாறினாலும் போதாது; தோளில் சுமந்து இலக்கில் சேர்த்தால் மட்டுமே பயணிப்பார்கள். "கண்ணுக்கு எதிரே நிற்கிறது, கண் திறந்து பார்" என்றால், "கொஞ்சம் கண்ணைத் திறந்து விடேன்" என்பார்கள். இவர்களை அடையாளம் கண்டு விலகுவது ஆரோக்கியமானது.

இவ்வரிகளும் பிடித்திருக்கின்றது.

கவி அழகன் சொன்னது…

காத்திரமான பதிவு வாழ்த்துக்கள்

meenakshi சொன்னது…

வெண்பா நல்லா இருக்கு. 'அத்தரி' என்றால் ஆசிரியர் 'அத்தரினித்' என்றால்? இது அடுத்த வார்த்தை தன்னறிவு என்பதுடன் இணைப்பதர்காகவா?
வழிகாட்டியாக இருந்தாலும், வழித்துணையாக இருந்தாலும், வழியாகவே ஆனாலும் அதில் பயணம் செய்யும் துணிவும், உறுதியும் அந்த பயணிக்குத்தானே வேண்டும். பயணம் செய்ய போவது அவர்தானே!
'எனக்காக நீ அழத்தான் இயற்கையில் நடக்கும், நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்.......' கண்ணதாசன்.
துணிவும், உறுதியும் வந்துவிட்டால் எப்படிப்பட்ட இடத்திலும், நேரத்திலும் பாதையை வகுத்துக்கொண்டு பயணம் செய்ய இறங்கி விடலாம்.
கண்ணை திறந்து விட்டு, காட்சியை காட்டினாலும் பார்ப்பவர் மனதை பொறுத்துதானே காட்சியும் அமையும்.
தன்னறிவு பெறுவது ஒன்றுதான் உய்வதற்கு வழி. அதனால் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

படக் காட்சியும், கண்ணதாசனின் பாடல் வரிகளும் வெகுப் பொருத்தமாய் பதிவோடு இயைந்து வருகிறது.
அத்தன், அத்தம் -- அறிந்திருக்கிறேன். அத்தர் வாசனப் பொருளாக அறிந்திருக்கிறேன். குரு என்பது எனக்கு புதியது. மிக்க நன்றி அப்பாஜி

அப்பாதுரை சொன்னது…

வருக பத்மநாபன், Nanum, சந்திரகௌரி, கவி அழகன், meenakshi, சிவகுமாரன்,...

அப்பாதுரை சொன்னது…

சிவகுமாரன்... அத்தன் ஐயன் சொற்களின் சற்றே சுதந்திரமான எனது பிரயோகம் தான் அத்தர். (ஐயர் என்றால் சாதி வந்து விடும், அங்கிருந்துத் தீண்டாமை அடுத்த ஸ்டாப்.. :)..

எழுதும் பொழுது, 'அத்தனினி' என்பததை விட 'அத்தரினி' பொருந்தி வருவதாகப் பட்டது.

வாசனைப் பொருளைக் குறிக்கும் 'அத்தர்', தமிழ்ச்சொல் அல்ல என்று நம்புகிறேன். டீ, காபி, ராஜா, பாதுஷா போல் தமிழில் கலந்து தமிழாகி விட்ட அன்னியச்சொல் என்று தோன்றுகிறது (உருது, பாரசீகம்?)

தஞ்சை பாபநாசம் அருகே திருக்கருகாவூர் பாடல் பெற்ற தலம். அப்பர் பாடிய தேவாரப் பாடல் இது:
முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே
மத்தயானை மறுக அவ்வுரி வாங்கியக்
கத்தைபோர்த்தக் கடவுள் கருகாவூர் எம்
அத்தர் வண்ணம் மழலும் மழல்வண்ணமே.

(திருக்கருகாவூர் என் அம்மாவின் சொந்த ஊர்; அவர் தந்தை வழிப் பாரம்பரியம் வேர் விட்ட ஊர் :)

அத்தர் ஐயர் போன்ற சொற்களை சைவப்பாடல்களில் நிறையப் பார்த்திருக்கிறேன். ஐயர் இங்கே சாதியைக் குறிப்பிடவில்லை என்று நம்புகிறேன் :)

அப்பாதுரை சொன்னது…

meenakshi, அத்தர்+இனி என்று பிரிக்கவேண்டும்.
'அத்திரி' என்று சொல்ல வந்தீர்களா? அத்திரி என்ற சொல்லுக்கு முனிவர் ஆசான் என்ற பொருள் உண்டு (அத்திரி பச்சா கதை தெரியுமோ?). அத்தரி என்றாலும் ஆசிரியர் என்ற பொருளா? நல்லது. நான் எழுதியது அத்தர்+இனி.

//எனக்காக நீ அழலாம்..// அடுத்தப் பதிவின் கண்ணதாசன் வரிகளை எடுத்துப் போட்டுவிட்டீர்களே.. ஹ்ம்ம். வேறு வரிகளைத் தேட வேண்டும்.

//துணிவும், உறுதியும் வந்துவிட்டால்..// உண்மை. வந்து விட்டால். எப்படி, எங்கிருந்து வரும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன் :)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தேர்ந்த ஆசிரியர், மாணவருக்கு வழிகாட்டியாக இருப்பாரே தவிர வழித்துணையாக மாறுவதில்லை. பெற வேண்டியச் சிறப்பை உணர்ந்து, தானே சிறக்க முனையும் வேறு மாணவரைத் தேடிப் போய்விடுவார்.//

முயற்சிஉடைய மாணவராக அறிய முய்ற்சிப்போம்.