வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/07/20

உட்பயிர் வளர்க்கும் உரமென்றான் எமன்


62
விழைந்த விதைநிலம் நீர்தந்தேன் நீயே
உழைத்துப் பயிர்காண வேண்டும் - தழைத்திட
ஓருரம் ஓமெனும் ஓரொலி என்றறிந்துச்
சீருறு என்றான் சமன்.

   நீ விரும்பிய விதையும் நிலமும் பாசன நீரும் கொடுத்தேன்; இனி உழைத்துப் பயிர் வளர்ப்பது உன் கடமை. ஓம் எனும் ஒரு ஒலி, களையின்றிப் பயிர் செழிக்கத் தேவையான ஒரு உரமாகும்; இதையறிந்துப் பயிர் செய்துச் சிறப்படைவாய் என்றான் எமன் (நசிகேதனிடம்).


சமன்: காலன், எமன்

['..on this journey you are making, there'll be answers you will seek; and it's you who'll climb the mountain, it's you who will reach the peak..' - phil collins ]

    transcendental meditation முகாம் அனுபவத்தை இங்கே முடிக்கிறேன்.

   என்னை அடையாளம் கண்டதோடு நிற்காமல், "மூன்று மாதங்களுக்கு முன் இன்ன தேதியில் வந்தீர்களே? நினைவிருக்கிறது" என்றார். அன்றையத் தேதியும் கிழமையுமே எனக்கு நினைவில்லை; இவர் மூன்று மாதங்களுக்கு முன்னால் நான் வந்த தேதியை நினைவில் வைத்திருக்கிறாரே என்று தோன்றியது. அவர் எந்தத் தேதியைச் சொல்லியிருந்தாலும் வியந்திருப்பேன் என்று நினைத்தபோது, அவருடைய அடுத்தக் கேள்வி அதிர்ச்சியைக் கொடுத்தது. "எதற்காக தியானப் பயிற்சி செய்ய வந்தீர்கள் என்று கேட்டேனே, பதில் தெரிந்ததா? அடுத்த வாரமே வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்" என்றார். மனிதர் உண்மையிலேயே என்னை நினைவில் வைத்திருக்கிறாரே? வழிப்போக்கர்களைக் கூட எப்படி இவரால் நினைவுகூர முடிகிறது? என் கேள்விகளைப் புரிந்து கொண்டாரா தெரியவில்லை, "எல்லாரையும் நினைவில் வைக்க முடியாது; நீங்கள் முன்பு வந்த போதும் இதேபோல் பொருந்தாத கலர் டி-ஷர்டைப் பின்புறமாக மாற்றி அணிந்து வந்திருந்தீர்கள். கவனமோ கவலையோ அற்று இயல்பாக இருக்கிறாரே என்று உங்களைப் பற்றி அன்றைக்கும் எண்ணி சந்தோஷப்பட்டேன். அதான்" என்றார், இடக்கரடக்கல் பட்டதாரி.

   "என்னால் எதிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை. தியானப் பயிற்சி பலன் தரும் என்று எல்லோரும் சொன்னார்கள். அதான் வந்தேன்" என்றேன்.

   "எல்லோரும் சொன்னார்கள் என்பதற்கும் நீங்கள் நம்புகிறீர்கள் என்பதற்கும் வேறுபாடு உண்டே? உங்கள் நம்பிக்கை தான் உங்கள் செயலின் அஸ்திவாரம்" என்றார் தற்காலப் ப்லேடோ போல்.

   "நானும் நம்புகிறேன்" என்றேன் சுரத்தில்லாமல். என் சந்தேகம் அவருக்குப் புரிந்திருக்க வேண்டும். "பரவாயில்லை. நம்பிக்கை என்பது தளிர் போன்றது. அதை வளர்க்கவும் அழிக்கவும் முடியும். ஆக்கத்தின் தீவிரம், இலக்கின் தீர்க்கம், தன்முனைப்பு... இவை இருந்தால் நம்பிக்கை செழித்து வளரும். வாருங்கள்" என்றார்.

   பதினைந்து நிமிடங்களுக்கு வகுப்பெடுத்தார். புறவிசைகள் நம்மைத் தாக்கி ஆக்கிரமித்துக் கொள்வது பற்றிய வரைபடத்தைக் காட்டி, "எல்லாமே அலைகள்" என்றார். "அலையானது எப்படி இடைவிடாது பாய்ந்து ஓசை எழுப்புகிறதோ அதேபோல் புலன்களின் ஒலிவீச்சும் இடைவிடாது நம்மைப் பாதிக்கிறது. இந்த ஒலிகளை அடக்கினால் நம்மால், நாம் விரும்பியபடி, கவனம் செலுத்த முடியும்" என்றார். சிறிய கோடு - பெரிய கோடு உதாரணத்தைச் சொல்லி, "ஒரு ஒலியை அடக்க, இன்னொரு பேரொலி வேண்டும்; தியானம் என்பதும் உள்ளுக்குள் ஒரு பேரொலியைத் தொடர்வதே" என்றார். "ஒரு ஒலியைப் பற்றிக்கொண்டு, பிற ஒலிகளைக் கைவிட்டு, கவனத்தைக் கூராக்கும் வித்தையாகும் தியானம்" என்றார்.

   வகுப்பறையை விட்டு வெளியே வந்து இயற்கைச்சூழலில் அமர்ந்தோம். எனக்குப் பிடித்த ஒரு ஒலி ஏதாவது இருந்தால் அதை மனதில் நிறுத்தச் சொன்னார். "அப்படி எதுவும் ஒலியில்லையே?" என்றேன். ஏற்கனவே அடிக்கடி தலைவலி வருகிறது, இதில் பேரொலி ஒன்றை மனதில் வைக்கச் சொல்கிறாரே?

    மறுபடியும் மனதைப் படித்தார். "பேரொலி என்றால் அது பெரும் ஓசையை ஏற்படுத்த வேண்டியதில்லை. சில இடிகளுக்கு ஓசையே கிடையாது. தீயின் ஓசை தாழ்மையானது, ஆனால் அது பேரொலியாகும் தெரியுமோ?" என்றார். 'என்ன சொல்கிறார் இவர்?' என்று நான் குழம்பினேன். "ஒலியை அடக்கும் பேரொலியை நாம் எல்லோருமே நம்மையறியாமல் எழுப்பிக் கொண்டிருக்கிறோம், உணரத்தான் மறந்து போகிறோம்" என்றார். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியேற்றச் சொன்னார். பலமுறை செய்தேன். "இன்னும் மெதுவாக, இன்னும் மெதுவாக" என்று மனிதர் படாதபாடு படுத்தினார். மெள்ள என் மூச்சின் ஒலிவடிவம் புலப்படத் தொடங்கியது. 'ம்' என்ற ஒலியை என்னால் அடையாளம் காண முடிந்தது. அதைத் தொடர்கையில் திடீரென்று அறையை ஆக்கிரமிக்கும் பெரும் ஓசையாக மாறியதை உணர முடிந்தது.

   "ஓம் எனும் ஒலியே நம் மூச்சின் ஒலி. அதை மனதில் ஒரு பற்றுக்கோடாக நிறுத்தித் தொடர்வது தியானத்தின் முதல்படி" என்றார்.

   நெளிந்தேன். "எனக்கு மத நம்பிக்கை கிடையாது" என்றேன்.

   "உண்டா என்று நான் கேட்கவில்லையே?" என்றார்.

    "ஓம் என்பது மதம் தொடர்பானது தானே?"

    "ஓம் என்பது மனம் தொடர்பானது" என்றார். ஓசையின்றிச் சிரித்தார். "ஓம் என்பது உள்ளத்தைக் கட்ட ஒரு ஒலி, ஒவ்வொருவருக்கும் ஒருவித ஓம்" என்றார். விழித்த என்னை ஏளனம் செய்யாமல், "ஓம் வேண்டாமென்றால் உங்களுக்குப் பிடித்தமான ஒலிக்குறியைத் தொடருங்கள். வேறு ஒலிக்குறியை, உங்களுக்கு மட்டுமே புரியும் உங்கள் உள்தேடலின் அடையாளமான ஒலிக்குறியாகத் தருகிறேன்" என்றார். சட்டென்று ஒரு ஒலிக்குறியை எடுத்துக் கொடுத்து, "இதை மனதில் நிறுத்தி இன்றிலிருந்து தினம் பத்து நிமிடங்கள், மூச்சை மிக மெதுவாக இழுத்து வெளிவிட்டுப் பயிற்சி செய்யுங்கள். அடுத்த சில வாரங்களுக்கு இந்த மூச்சுப்பயிற்சி பழகியதும், உள்மனதை எப்படி ஆக்கிரமிப்பது என்று சொல்லித் தருகிறேன்" என்றார்.

   அன்றையப் பத்து நிமிடங்களோடு என் பயிற்சி நின்றுபோனது. 'நாளைக்கு இருபது நிமிடங்களாகச் சேர்த்துச் செய்வோம்' என்று எனக்கு நானே போலிச் சமாதானம் செய்து கொண்டதன் காரணம், சோம்பல் என்று நினைத்தேன். 'இலக்கு தெரிந்தும் அதை அடையும் தீவிரம் இல்லாததே' காரணம் என்பது புரிந்தபோது நாளாகிவிட்டது. புற ஒலிகளின் கவர்ச்சியில் அகவொலி அடங்கி ஒடுங்கி அடையாளமே இழந்துவிட்டது. பின்னாளில் தியான சக்தி, எண்ண அலைகள், telepathy, human kinetics என்று பிரமிக்க வைக்கும் சங்கதிகளைப் படித்தபோது எதையோ இழந்தது போல் உணர்ந்தேன். இத்தகைய உள்தேடல்களைத் தொடங்க நாம் காவிகளாக வேண்டியதில்லை என்று இப்போது புரிகிறது. தாடி வளர்க்க வேண்டியதில்லை, பட்டினி கிடக்க வேண்டியதில்லை, பலவகைப் பாமரக் கண்மூடித்தனங்கள் தேவையில்லை என்பது இப்போது புரிகிறது. இத்தகையத் தேடல்கள் சராசரி மனிதரைச் சுலபமாக மேம்படுத்த வல்லவை என்று இப்போது புரிகிறது. 'உள்ளிருக்கும் சக்தி' என்பதன் பொருள் இப்போது புரிகிறது.

['..நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு, அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று' - கண்ணதாசன் ]

    "நசிகேதா, நீ விரும்பியவாறு தன்னறிவு என்றால் என்னவென்று உனக்கு எடுத்துரைத்தேன். அதன் இருப்பிடம் உள்மனதின் குகையென்பதைச் சொன்னேன். நற்குணங்கள் ஆறும் வளர்த்துத் தீக்குணங்கள் ஆறும் தவிர்த்தால், தன்னறிவைத் தேடமுடியும் என்றேன். மூச்சடக்கி உள்ளிருக்கும் தீவளர்த்து அதனொளியில் உள்மனத்தின் இருளகற்றித் தன்னறிவைத் தேடிப் பெறலாம் என்றேன். மேலும், தன்னறிவின் ஒடுங்கும் தன்மையையும், காலத்தோடு தேடிப் பெறவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் சொன்னேன்.

   இவை எல்லாவற்றையும் தெரிந்து கொண்டபின், தன்னறிவைத் தேடிப்பெறுவது உன் பொறுப்பாகும். நீ மேற்கொள்ள வேண்டிய பணியாகும். எப்படித் தேடுவது, தொடர்வது எப்படி, திசைமாறாமல் இருப்பது எப்படி என்பதையெல்லாம் நீயே தீர்மானிக்க வேண்டும். தன்னறிவு உனக்குத் தேவையென்றால் நீ தான் தேடிப் பெற வேண்டும்.

   விளைநிலமும், விதையும், பாசன வசதியும் பெற்றாலும் உழுதால் தான் பயிர் வளரும். உழுவது உன் பொறுப்பு. பயிர் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். உழைப்பின் தீவிரம் உன் விருப்பம். உன் பொறுப்பு. உன் உழைப்பின் தீவிரத்தை நீ தான் தீர்மானிக்க வேண்டும். நீ விரும்பியபடி விளை நிலத்தைக் கொடுத்தேன். விதையைக் கொடுத்தேன். நாற்று நட்டு உழுது பயிர் வளர்க்கும் முறையைச் சொன்னேன். பாசன வசதியைக் கொடுத்தேன். பயிர் வளர்க்க முனைந்தவர்கள் படும் இன்னல்களைப் பற்றிச் சொன்னேன். குறிக்கோளோடு தளராமல் பயிர் வளர்த்தவர்கள் பெற்ற பேரின்பங்களை விளக்கினேன். பயிர் வளர்க்கும் கனவில், எண்ணத்திலேயே நின்று, செயலாக்கத் தவறியவர்களின் இழப்பைப் பற்றிச் சொன்னேன். உழாத நிலத்துக்கும் விதைக்காத பயிருக்கும் உண்டாகும் இயற்கையான அழிவைப் பற்றியும் சொன்னேன். உழுது பயிர் வளர்க்கும் அறிவு இப்பொழுது உன்னிடம் முழுமையாக இருக்கிறது. இனி எப்படி உழைக்கவேண்டும் என்பதை நீயே தான் தீர்மானிக்க வேண்டும். விழலறுத்து பயிர் செழிக்கப் பலவகை உரங்களை இடலாம். உன்னுடைய பயிர் செழித்து வளர என்ன உரமிட வேண்டும் என்பதைச் சொல்கிறேன். அதைக் கேட்டு, உன் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க, உன் உழைப்புக்கும் குறிக்கோளுக்கும் ஏற்ற ஒரு உரமிட்டு பயிர் வளர்த்து செழிக்கச் செய்.

    புலன்கள் நம்மைக் கட்டுகின்றன. புலன்களே இடையூறு எனும் களையாகி, தன்னறிவு எனும் பயிர் செழித்து வளராமல் தடுக்கின்றன. மாறாக, புலன்களை நாம் கட்டவேண்டுமெனில், அவற்றின் ஆக்கிரமிப்பில் இருந்து முதலில் விடுபட வேண்டும். உள்மனதின் தீ வளர்த்து புலனடக்க வேண்டும். தீவிர யோகத்தினால் மட்டுமே உள்ளுக்குள் உறையும் தீயை வளர்க்க முடியும். உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்கும். அதன் ஒளியில் தன்னறிவின் தடம் விளங்கும். இடையூறு செய்யும் புலன்களின் நாராசத்தை அடக்குவது, ஓம் எனும் ஒரு அகவொலியாகும். இதையறிந்த நீ, இனித் தன்னறிவைத் தேடிப் பெறு. தன்னறிவு எனும் உள்மனப் பயிரைக் களையறுத்து செழித்து வளரச்செய்" என்றான் எமன்.

16 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உள்மனதின் தீ வளர வளர, அதன் வெம்மையில் புலன்களின் ஆதிக்கம் அடங்கி ஒடுங்கும். அதன் ஒளியில் தன்னறிவின் தடம் விளங்கும். இடையூறு செய்யும் புலன்களின் நாராசத்தை அடக்குவது, ஓம் எனும் ஒரு அகவொலியாகும். இதையறிந்த நீ இனித் தன்னறிவைத் தேடிப் பெறு" என்றான் எமன்.►///

மிகப் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

பத்மநாபன் சொன்னது…

அனுபவங்கள் அருமை ...அது முழுமை பெற்று இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ... ஓம் எனும் ஒலிக்கு இங்கு கொடுத்த பின்னணி சிறப்பு ... ஓம் எனும் சொல்லுக்கு நிறைய பின்னணிகள் , வியாக்கினாங்கள் அச்சொல்லைக் கொண்டு பயிற்சிகள் என நிறைய இருக்கிறது ... எமனும் அச்சொல்லை கையாண்டு நசிகேதனுக்கு சொன்னவிதம் நன்றாக இருந்தது. சில நல்ல விஷயங்களுக்கு சடங்கு தான் தடையென்றால் அதை தகர்த்துவிட்டு நல்ல விஷயங்களை தொடரலாம் தவறே இல்லை ....சமிபத்திய உதாரணம் கலைஞர் அவர்கள் தேசிகாச்சாரி அவர்களிடம் பிரணாயாமம் கற்று கொள்கிறார் அந்த சமயத்தில் ஓம் நமோ நாராயணாய சொல்ல வேண்டியதும் சூரிய வழிபாடும் கட்டாயம் அவரது பயிற்சி முறைகளில் .... எப்படி பகுத்தறிவு சுமை இதற்கு இடம் கொடுக்கும் ? உடனே அவர் ஞாயிறு போற்றுதும் சொல்லிகொள்கிறேன் என முடிவெடுத்து ....பின் சில பல பயிற்சிகளை கற்று உடல் அளவில் நல்ல முன்னேற்றம் கண்டதையும் ..இளைநர்கள் இது போன்ற பயிற்சிகளை செய்ய வேண்டும் என மேடைகளில் அறிவுரை வழங்கினார் ....
காவி , பஞ்சாட்சரம் ...அஷ்டாச்சரம் இப்படி பல விஷயங்கள் பல கால ஆராய்ச்சியில் கிடைத்த ஓரு நல்ல format .இதன் பயனில் நம்பிக்கையுள்ளோர் தொடரலாம் .... இதில் உள்ள சாரம் புரிந்தது சடங்கு தேவையில்லை என்போர் சாரத்தை மட்டும் பிடித்துக் கொள்ளலாம்.... ....

ராமசுப்ரமணியன் சொன்னது…

வரிசையை மாத்திப் போட்டாலும் இந்தப் பாடலை விடாமல் சேர்த்து நல்ல காரியம் செய்திருக்கிறீர்கள். பாராட்டுகள். இந்த வரிசை பொருத்தமாகவே இருக்கு இப்போ :)

//சில இடிகளுக்கு ஓசையே கிடையாது.//
Rightly said.

ராமசுப்ரமணியன் சொன்னது…

அருமையாகச் சொல்லியிருக்கிறார் பத்மநாபன். சடங்கு என்று நினைத்தால் சடங்கு. ஓம் என்ற ஒலியில் சடங்கு கிடையாது என்பது புரியாதவர்கள் அதிகம் பேர். சடங்கில் ஓம் சேர்ப்பதனால் ஓம் என்றாலே சடங்கு போல ஆகிவிட்டது அனேக பேருக்கு. இன்றைக்கு space, galaxy, exa-solarனு அங்கே இங்கே சுத்தினாலும் தெரிந்தாலும், பிரம்மாண்டத்தில் இருளும் ஒலியும் தான் பிரதானம் என்பது பிரமிப்பாகவே இருக்கிறது இல்லையா? அண்டத்தின் ஒலி, ஓம் எனும் ஒலியைப் போலவே இருப்பது coincidence என்று விட்டுவிட முடியுமா?

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

\ தழைத்திட
ஓருரம் ஓமெனும் ஓரொலி என்றறிந்துச்
சீருறு என்றான் சமன்//
-திருமூலரின் திருமந்திரத்துக்கு இணையான வரிகள். சைவத்தின் சாராம்சம் இந்த வரிகளில். ( நீங்கள் அறிந்தோ அறியாமலோ )

ஸ்ரீராம். சொன்னது…

இந்தத் தொடரின் நல்லதொரு பகுதி. (இதுவரை இரண்டு முறை படித்துள்ளேன்)
@பத்து ஜி....
ஓம்...ஓம்...

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே! நீங்கள் இதுவரை எத்துணை புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. அப்படி எழுதியிருந்தாலும் உங்களுடைய Monumental work நசிகேத வெண்பா தான்.தமிழில் வந்துள்ளமிகச்சிறந்த படைப்பில் ஒன்றாகும். இருந்தாலும் அதன் அடிப்படையான தத்துவப் பின்னணியொடு என்னால் ஒன்றிணய முடியவில்லை. ஐம்புலனறிவும் அதன் சாரான ஆறாம் அறிவும் கொண்ட மனிதனால் புரிந்து கொள்வதை மற்ற உயிரினங்களால் புரிந்து கொள்ளமுடியுமா? மனிதனால் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது பொதுவானதாக முடியுமா? நான் கேட்டுக்கொண்டே போவேன்....அன்புடன் ---காஸ்யபன்.

Santhini சொன்னது…

காஷ்யபன் அவர்கள் கேட்ட கேள்வி, எனக்கு மிகவும் பிடித்த கேள்வி.
மேலும் ஒரு கேள்வி கூட கேட்க தோன்றுகிறது ....மனிதன் புரிந்து கொண்டது பொதுவானதா என்ற கேள்வியின் பின்னணியில், மனிதன் .....புரிந்து கொண்டது முடிவானதும் தானா ? புரிதல் உண்மையில் நிகழ்ந்துள்ளதா ? .....புரிதல் ..எதை புரிதல் ? எதற்கு புரிதல் ? புரிதலின் பிறகு ......? இருப்பது எது ?
எனில் இல்லாதது எது ? ......சும்மா ......:)

அப்பாதுரை சொன்னது…

வருக இராஜராஜேஸ்வரி, பத்மநாபன், ராமசுப்ரமணியன், சிவகுமாரன், ஸ்ரீராம், kashyapan, Nanum enn Kadavulum..., ...

அப்பாதுரை சொன்னது…

இந்தப் பாடலுக்கு நிறைய சிரமப்பட்டேன் பத்மநாபன். வெகு சுலபத்தில் சிக்கலாகக் கூடிய விஷயத்தை எப்படிச் சொல்வது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஓம் ஒரு பொதுவான தியான சாதனம் என்ற வகையில் சொல்ல சிரமபட்டேன் :)

ராம்சுப்ரமணியன்.. நீங்கள் இந்தப் பாடலை நான் எழுதியிராவிட்டால் சும்மா இருந்திருப்பீர்களா ? :)

அப்பாதுரை சொன்னது…

அறியாமல் நிகழ்ந்து போனது சிவகுமாரன் :)

அப்பாதுரை சொன்னது…

மிகவும் நன்றி kashyapan சார். இதை முழுமையாக எழுதி முடிக்கப் பார்க்கிறேன் முதலில் :)

அப்பாதுரை சொன்னது…

kashyapan அவர்களின் கேள்விகள்.. சுலபமான கேள்விகள் (கேட்பதற்கு :)

மனிதன் புரிந்து கொள்வதை எல்லாம் மற்ற உயிரினங்கள் புரிந்து கொள்ள வேண்டுமா என்ன? தேவையில்லை என்று தோன்றுகிறது.

நாம் அறிந்த உயிரினங்களில், மனிதனுக்கு மட்டுமே so called ஆறாம் அறிவு இருக்கிறது. இதனாலேயே மனிதன் பேதங்களை உணர்கிறான் - இந்த நிலை பிற உயிரினங்களுக்கு இல்லாத பொழுது தேவையில்லாத தத்துவ விசாரம் அவைகளுக்கு ஏன்? அப்படியே இருந்தாலும் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? கேள்வியை மாற்றத் தோன்றுகிறது. மற்ற உயிரினங்கள் புரிந்து கொள்ளும் படியாக மனிதன் நடக்க வேண்டுமா?

பேதங்கள் இல்லாத நிலையில் அதன் விளைவுகளையும் பிற உயிரினங்கள் சந்திப்பதில்லை. மனித இனத்தின் 'உளம்' சார்ந்த தொந்தரவுகள் எதுவுமே பிற உயிரினங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. மனித இனத்தில் கூட சென்ற மிலியன் வருடங்களில் எத்தனை தூரம் வந்திருக்கிறோம்? மனிதப் புரிதல் மனிதருக்கு மட்டும் தான். அதுவும் இன்றைய புரிதல் இன்றைய மனிதருக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன். நேற்றைய மனிதரை விட இன்றைய மனிதரின் புரிதல் மாறுபட்டு இருக்கிறது. நாளைய மனிதரின் புரிதலும் அதே போல் தான். அந்த நிலையில் பொதுவான புரிதல் என்று எதுவுமே இல்லை - மனித இனத்துக்குள்ளேயே பொதுவான புரிதல் இல்லாத போது உயிரினத்துக்குப் பொதுவான புரிதல் என்பது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. தேவையுமில்லை என்று படுகிறது. இந்த சாத்தியமற்ற நிலையை சிலர் ஒரு கற்பனைத் தேவையின் பொருட்டுச் சாத்தியப்படுத்த முனைந்ததால் தான் இன்றைக்குக் கண்மூடித்தனங்கள் நம்மைச் சுற்றி வருகின்றன என்று நினைக்கிறேன்.

Santhini சொன்னது…

Well said, Appadurai. சாத்தியமில்லாதது, அல்லது தேவையில்லாதது என்பதை அறிந்தாலே போதுமானது. நீங்கள் சொன்னது சரி. தத்துவ விசாரமும் ஒரு வகையில் கண்மூடித்தனமே. இத்தனை தத்துவங்களும் தேவையில்லை, வாழ்க்கை மிக மிக எளிமையானது, எங்கும் ஒலிக்கும் ஓங்காரமே, பலவித ஸ்வரங்களாய் பிரிந்து, ரஹ்மான், இளையராஜா, ....சிம்பொனி என்று சிக்கலாகிவிட்ட இசை வடிவங்கள் போல, வாழ்வு சிக்கலான இசையாய் தோன்றுகிறது. அதன் ஆதாரம் ஓங்காரம் மட்டுமே என்பது போல, வாழ்வின் ஆதாரம் "" இருப்பது""" மட்டுமே அல்லவா ????

meenakshi சொன்னது…

அருமையான பதிவு. பின்னூட்டங்களும் அருமை. புரிதலை பற்றிய கேள்வியும், விளக்கமும் பிரமாதம்.