வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/07/22

தேடல் தொடரும் என்றான் எமன்


63
உயிர்ப்பயணம் ஆன்மா பிறப்பிறப்புப் பற்றிப்
பயிலப் பலவுண்டு இன்னும் - துயிலாமல்
தன்னறிவைத் தேடு தொடர்ந்தறியத் தக்கவருள்
உன்னில் உயர்ந்தோர் இலர்.

   ன்னறிவு பற்றிக் கனவு* காணாமல் தேடத் தொடங்கு. உயிரின் பயணம், ஆன்மா, பிறவிச்சுழல் பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன; இவற்றை அறியும் தகுதி கொண்டவருள் நீயே மிகச் சிறந்தவன் (என்றான் எமன்).


*துயில் என்ற சொல்லுக்கு, கனவு என்றும் பொருளுண்டு

['..the first step in the acquisition of wisdom is silence, the second listening, the third memory, the fourth practice, the fifth teaching others..' - solomon ibn gabirol ]

   ற்சாகத்துடன் தன் அறைக்குச் சென்ற மாணவன், ஒரு கை ஓசையைப் பற்றிச் சிந்தித்தான். ஒரு கையினால் வீசி வீசிப் பார்த்தான். காற்றை வெட்டும் மெல்லிய ஒலியைக் கேட்டான். 'இது தான் ஒரு கை ஓசையோ?' என்று நினைத்தான். பிறகு, 'இவ்வளவு எளிதான கேள்வியைக் கேட்டு என்னை ஏளனம் செய்ய மாட்டாரே குரு? பிறர் சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுப்பவர் ஆயிற்றே அவர்? ஏதோ ஆழமான பொருள் கொண்ட கேள்வி கேட்டிருக்கிறார்' என்று அடங்கி, தன் சிந்தனையைத் தொடர்ந்தான்.

சில நாட்கள் பொறுத்து, தொலைவில் இனிமையான குரல் கேட்டது. குரலைத் தேடிச் சென்றான். ஒரு கெயிஷாப் பெண் இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தாள். 'கை என்பது உருவகம். இவள் குரலே ஒரு கை ஓசை' என்று புரிந்து கொண்ட மாணவன், குருவிடம் ஓடிச் சென்று "ஐயா, ஒரு கை ஓசையை அறிந்தேன். அது நாபியிலிருந்து எழும் மனங்கனிந்த இசை" என்றான்.

குரு அவனைப் பார்த்து அமைதியாகப் புன்னகைத்தார். புன்னகையின் பொருளைப் புரிந்து கொண்ட மாணவன் மீண்டும் தன் அறைக்குத் திரும்பினான். தேடலைத் தொடர்ந்தான்.

மேலும் சில நாட்கள் பொறுத்து, சிறகு முளைத்துப் பறக்க முயற்சித்தப் பறவைக் குஞ்சுகளின் முதல் விடுதலையின் வசீகர ஒலியைக் கேட்டான். குருவிடம் அந்த ஒலியுடன் சென்றபோது, அவர் புன்னகைத்தார். மாணவன் மீண்டும் அறைக்குத் திரும்பினான்.

காற்றின் ஒலி, ஆற்றின் வேகம், கடலலை, இரவின் வண்டுகள், குழந்தையின் அழுகை, நெற்பயிர் வளரும் ஒலி, பஞ்சின் வெடிப்பு, முட்டையின் உடைப்பு, புழு மண்ணில் உரசும் ஒலி, மழைச்சாரல், ஏப்பம்... என்று மாணவன் வகை வகையான ஒலிகளைத் தேடி ஆய்ந்தான். ஒவ்வொரு முறையும் குருவின் புன்னகையே பதிலாகக் கிடைத்தது.

இப்படியே சில வருடங்கள் ஓடின. உலகின் அத்தனை ஒலிகளையும் கேட்டுச் சலித்தான் மாணவன். குருவின் புன்னகைக்குப் பயந்து அவரிடம் போகாமலே தன் அறையில் தங்கிவிட்டான். சோர்ந்து அமர்ந்திருந்தவனைக் கண்ட ஒரு மூத்த மாணவர், "ஏன் இப்படி சோர்ந்து காணப்படுகிறாய்?" என்று வினவினார். தன் நிலையைச் சொல்லி அழுதான் மாணவன். மூத்த மாணவர் ஆதரவாய் அவனைத் தட்டிக் கொடுத்து, "சரியான பாதையில் தானே செல்கிறாய், அதற்குள் சோர்ந்து விட்டால் எப்படி? இன்னும் கேட்காத ஓசை ஏதாவது இருக்கும். தொடர்ந்து தேடு" என்று சொல்லிப் போனார்.

திடுக்கிட்டான் மாணவன். இன்னும் கேட்காத ஓசை! குருவின் கேள்வி இப்போது தான் புரிந்தது அவனுக்கு. 'ஓசையை அறிந்து வா என்றல்லவா சொன்னார் குரு? கேட்கும் ஓசைகளையே இதுவரைத் தேடினேனே!' என்று வெட்கப்பட்டான். கேட்கும் ஓசைக்கும் அறியும் ஓசைக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டான்.

தன் அறையில் அமர்ந்து செவிகளை அடக்கப் பழகினான். அறியும் ஓசை.. அறியும் ஓசை.. என்று அவன் மனம் தேடத் தொடங்கியது.

வருடத்துக்கு ஒரு முறை ஒவ்வொரு அறையையும் மேற்பார்வையிடும் குரு, அவனுடைய அறைக்கு வந்தார். ஒரே இடத்தில் அமர்ந்திருந்த மாணவனை சில நாட்கள் தொடர்ந்துக் கவனித்தார். அவருக்கு அந்த மாணவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக... காற்றைப் போல் மலரைப் போல் அலையைப் போல் வாளைப் போல் மலையைப் போல் உணவைப் போல் மீனைப் போல் வண்டைப் போல் செடியைப் போல்... தோன்றினான்.

குரு வெளியே சென்றார். தோட்டத்தில் பூத்துக் கிடந்த அழகிய வெள்ளைச் செரிப் பூக்களைப் பார்த்தார். உதிர்ந்து கிடந்த முற்றிய பூ ஒன்றை எடுத்தார். மலர்ந்தும் மலராத பாதி மலர் ஒன்றை மரத்திலிருந்துப் பறித்தார். இரண்டையும் எடுத்து வந்து மாணவன் முன் வைத்தார். தன் மேலங்கியைக் கழற்றி அவன் மேல் போர்த்திவிட்டு அகன்றார்.

   ந்தக் கதையை உலகின் பிரபல காவிகள் அங்கிகள் தாடிகள் ஞானிகள் என்று பலரும் தத்தம் வேதாந்த தத்துவ விசாரங்களிலும் பிரசாரங்களிலும் ஏதோ ஒரு வகையில் இணைத்துப் பேசுகிறார்கள். அத்தனை பிரபலம். நானும் கொஞ்சம் என் பாணியில் சொல்லியிருக்கிறேன்.

   தடுக்கி விழுந்தால் முகத்தில் இடிக்கும் சென் கதைகளில், இந்தக் கதை மட்டும் என் மனதில் தங்கி நகம் வளர்த்து வருடக்கணக்கில் பிராண்டுகிறது. மாணவன் அறிந்ததையும் குருவின் செய்கையையும் புரிந்து கொண்டவர்கள், சாலமன் கேபிராலின் மேற்கோளை மீண்டும் படித்தால் இன்னும் பிரமித்துப் போவார்கள்.

    :தியானிகளுக்கும் தீவிரத் தியானிகளுக்கும் என்ன வேறுபாடு?
    :தியானிகள் சுலபமாகப் பர்சைத் தொலைக்கிறார்கள். தீவிரத் தியானிகளிடம்.

    தியானம் - தீவிரத் தியானம் இரண்டுக்குமிடையான ஆக்கபூர்வ வேறுபாட்டை அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. முன்சொன்ன அறிவியக்க மாநாட்டில் ஒரு ஸ்வீடன் நாட்டுப் பெண்மணி எங்களுக்குத் தியான வழிகளை விளக்கிக் கொண்டிருந்தார். அரசன் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தார். நான் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

    ...தியான நிலை என்பது கண்களை மூடி, மனதில் எண்ணங்களைக் கட்டுவது. ஒரு சில நிமிடங்களே தியான நிலையில் இருக்க முடியும். அரைமணி அல்லது ஒருமணிக்கு மேல் தியான நிலையைத் தொடர்வது இயலாத செயல் என்றே சொல்ல வேண்டும். தீவிரத் தியானத்தை நாட்கணக்கில் செய்யமுடியும். காரணம், தீவிரத் தியானம் கண்களையும் மனதையும் பற்றியதல்ல. தீவிரத் தியானம் செய்ய நினைப்பவர்களிடம் கண்களை மூடுங்கள் என்று யாரும் சொல்வதில்லை. தீவிரத் தியானத்தின் போக்கு எண்ணங்களைக் கட்டுவதல்ல. தீவிரத் தியானத்தின் போக்கு மூச்சைக் கட்டுவதாகும். மூச்சினை உணர்வதாகும். எண்ணங்களைக் மூச்சோடு கலப்பதாகும். மூச்சின் போக்கோடு சுய இயக்கத்தை இணைப்பதாகும். தீவிரத் தியானிகள் மூச்சில் கவனம் செலுத்துகிறார்கள். தீவிரத் தியானம் செய்ய விரும்புவோர், முதலில் தன்னுடைய மூச்சைக் கவனிக்கத் தொடங்க வேண்டும். மூச்சின் போக்கைக் கவனிக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் சுற்றுப்புறம் அமைதியாவதை உணர முடியும். உண்மை அதுவல்ல. மூச்சைக் கவனிக்கும் செவிகளும் அறிவும், புற ஓசைகளைப் புறக்கணிக்கப் பழகுகின்றன. சுற்றுப்புறம் அமைதியாவது போல் உணரமுடிகிறது. அமைதி, உண்மையில் உள்ளே ஏற்படத் தொடங்குகிறது. அக அமைதி புற ஓசைகளை விட வலியது. விரைவில் எந்தவித புறத்தாக்கமும் இல்லாமல், மூச்சின் ஓசை, தீவிரத் தியானிகளை உள்நோக்கி அழைத்துச் செல்கின்றது. உடலும் உணர்வும் ஒன்றான நிலை. மனமும் அறிவும் ஒன்றான நிலை. மனம், தாயைத் தொடரும் சேயைப் போல் மூச்சின் ஒலியைத் தொடரும் அந்நிலையில், பேதங்களும் இருமைகளும் அறிய முடியாத நிலையில், கருப்பையின் சிசு போல, தொடக்கத்துக்கே அழைத்துச் செல்லப்படுகிறது. தீவிரத் தியானம் செய்வோர், உடலுக்கு அப்பாற்பட்ட ஒன்றுடன் தொடர்பு கொள்ள முடியும். உடலுக்கு அப்பாற்பட்டது, எந்தவித உலக நியதிகளுக்கும் உட்பட்டு இயங்குவதில்லை. இன்னொரு பரிமாணத்துடன் கலந்த அந்நிலை, உணர்வு வேகம் காலம் எல்லாமே கடந்த நிலை எனலாம்.

    அதற்குள் சாப்பாட்டு மணி அடித்து விட்டதால் நான் எழுந்தேன். அரசனும் பிறரும் அந்தப் பெண்மணியுடன் தீவிர தியானப் பயிற்சிக்குத் தயாரானார்கள். "தீவிரத் தியானத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இன்றைக்கு வேண்டாம் என்று பார்க்கிறேன்" என்றபடி கழன்று கொண்டேன். பசியின் ஒலி என்னைத் துரத்தியது.

    வேடிக்கை முலாம் பூசினாலும், நான் சொல்ல விரும்புவது இதுதான்: தன்னறிவு பெறுவது இருக்கட்டும், அதற்கு முன், தன்னறிவு பெறுவதற்கான தகுதிகள் நமக்கு உண்டா இல்லையா என்பதை அறிவதற்காகவேனும் தீவிரத் தியானம் பழகலாம். பயணம் செய்தால்தானே பாதை எங்கே போகிறது என்று அறிய முடியும்? 'இப்போது முடியாது' என்றக் காரணமற்றக் காரணத்தினால் பாதையில் அடியெடுக்கவே தயங்குகிறோம். இலக்கைச் சேருமா என்ற ஐயத்தில் பயணமே தொடங்காதிருந்தால், பயண அனுபவம் கிடைப்பதில்லை; பாதையே மறைந்துவிடும் அபாயமும் உண்டு.

['..தனக்கொரு கொள்கை அதற்கொரு தலைவன்; தனக்கொரு பாதை அதற்கொரு பயணம்; உனக்கென வேண்டும் உணர்ந்திடு தம்பி..' - கண்ணதாசன் ]

    "நசிகேதா, தன்னறிவைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டாய். இனித் தன்னறிவைத் தேடும் முயற்சியில் இறங்கு. தன்னறிவு பற்றியக் கனவில் உழலாமல், நேடிப் பெறுவதில் முனைப்பாயிரு" என்றான் எமன்.

   நசிகேதன் பணிந்து, "ஐயா, தன்னறிவு பற்றி எனக்கு நீங்கள் விளக்கியதற்கு மிகவும் நன்றி. ஓம் எனும் ஒலியை எனக்கு அறிமுகம் செய்தமைக்கும் நன்றி. இனித் தன்னறிவை எப்படித் தேடுவது என்ற ஐயம் எனக்குச் சிறிதும் இல்லை. தன்னறிவு தேடும் முயற்சியில் இந்தக்கணமே இறங்கினேன். ஆன்மா பற்றிய மெய்யறிவை எனக்குத் தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்" என்றான்.

   எமன் கருணையுடன், "என்னிடம் நீ வரமாகக் கேட்ட அறிவில் இன்னும் வழங்க வேண்டியது நிறைய உள்ளது. தன்னறிவுக்கும் ஆன்மாவுக்கும் உள்ள தொடர்பை விவரமாகச் சொல்கிறேன். உயிர்ப்பயணம் பற்றிச் சொல்கிறேன். பிறவிச்சுழல் பற்றிச் சொல்கிறேன். இச்சுழலிலிருந்து விடுபட்டு, பிறப்பிறப்பற்ற நிலையை ஆன்மா அடையுமா என்பதையும் விளக்குகிறேன்.

   தீக்குணம் ஒழித்தப் பற்றற்றவரே தன்னறிவைப் பெறக்கூடியவர்கள். அன்னாருள் புலனடக்கி முனைப்புடன் உள்ளுக்குள் உறையும் தன்னறிவைக் காலத்தால் கண்டறிவோர் மட்டுமே, மேன்மையான மெய்யறிவை முழுதும் அறிந்துணரும் தகுதியைப் பெறுகிறார்கள். மெய்யறிவுப் பாதையில் தொடர்ந்து செல்வதற்கு நீ தகுதியானவன். இத்தகைய மேன்மையை அடைய, உன்னைப் போல் தகுதி வாய்ந்தவர் வேறு எவரும் இல்லை.

   பேரறிவின் வாயில் உனக்காகத் திறந்திருக்கிறது. தன்னறிவே அதன் முதற்படி. தொடர்ந்து பயணம் செய்ய நான் வழிகாட்டுகிறேன்" என்றான் எமன்.


இரண்டாம் பகுதி முற்றும்


10 கருத்துகள்:

Santhini சொன்னது…

படித்தாகிவிட்டது .லீவில் .இன்னும் நிறைய தமிழ் படித்துவிட்டு வந்து, எங்களை தமிழ் தேனில் நனைய வையுங்கள்.

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

அன்புடன் வணக்கம் ஐயா,

மிக்க நன்றி..
இனி தங்கள் வலைப்பதிவிற்கு வருவது
எளிமையாகிவிடும்.

இதுபோலவே தங்களுடைய

அபிராமி அந்தாதி மற்றும்
3 ஆம் சுழி

ஆகிய வலைப்பக்கங்களுக்கும்
FOLLOWERS WIDGET இணைப்பீராக..

மேலும் ஒரு வேண்டுகோள்

SUBSCRIPTION VIA EMAIL என்னும்
ஆப்சனையும் இணைத்துவிட்டால்
பெரும் உதவியாக இருக்கும்.

நன்றி..

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

FOLLOWERS WIDGET இணைக்க சொன்னேன்
என்று அங்கு குறிப்பிட்டு பெரிய உபகாரம் செய்து விட்டீர்கள்..

இந் நன்றிக்கு எப்படி பிரதியுபகாரம் செய்வனோ ?

அறியேன்

நன்றி


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

பத்மநாபன் சொன்னது…

துயிலாமால் பயிலும் கவி அருமை... நிசப்தத்தின் சப்தமாக கதை அருமை...

தீவிர தியானத்தின் பயணத்தை வலியுறுத்தியது சிறப்பு ...( நீங்களே எளிதான பயிற்சிப் பாடத்தை ஆரம்பிக்கலாம்.)

பேரறிவின் வாயில் திறக்க இன்னமும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டுமா....காத்திருக்கலாம் அது சொர்க்க வாசல் அல்லவா....

அப்பாதுரை சொன்னது…

//TM எங்கே பயிற்சி பெற்றீர்கள்?//

பயிற்சி பெறவில்லை :) பயிற்சிக்காகப் போனது சென்னையில் ரமண மகரிஷி (?) ஆசிரமம்.. சேத்துப்பட்டு நுங்கம்பாக்கம் பக்கம்..எத்தனையோ வருடங்களுக்கு முன் சென்னையில் இருந்தபோது போனது ராமசுப்ரமணியன்.. திடீரென்று பத்து வருடங்களுக்கு முன் நினைவில் வந்து அரிக்கத் தொடங்கியது.

அப்பாதுரை சொன்னது…

ராமசுப்ரமணியன், தவறுதலாக உங்கள் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன். மன்னிக்கவும்.

சிவகுமாரன் சொன்னது…

மலைப்பாய் இருக்கிறது அப்பாஜி. இந்த தொடரின் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது.
அந்தக் கதை நிறைய யோசிக்க வைக்கிறது.
மூன்றாம் பாகம் இன்னும் செறிவோடு இருக்கும் என்பதும் அதற்காகத் தான் இந்த இடைவெளி என்பதும் புரிகிறது.

Santhini சொன்னது…

"மலைப்பாய் இருக்கிறது அப்பாஜி. இந்த தொடரின் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது"

I second that. Very useful contribution to the Tamil spritual world.

Congrats Durai.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உடலுக்கு அப்பாற்பட்டது, எந்தவித உலக நியதிகளுக்கும் உட்பட்டு இயங்குவதில்லை. //

உணரமுடிந்த அற்புதவரிகளின் பகிர்வுக்கு நன்றி.

geetha santhanam சொன்னது…

இரண்டாம் பகுதியும் அருமை. செப்டம்பர் ஆறுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இடைபட்ட நேரத்தில் இரண்டாம் பகுதியை மீண்டும் படித்துப் பார்க்க இருக்கிறேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.