வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/04/15

மெய்யறிவைத் தருவதாகச் சொன்னான் எமன்


42
போதனை கேட்டவுனைச் சோதனை செய்துபெருஞ்
சாதனை செய்சிறுவன் என்றறிந்தேன் - சேதன
மெய்யுரைப்பேன் மாணவனாய் ஏற்றுன்னை மைவிலகி
உய்யட்டும் உன்னால் உலகு.

    றிவை வழங்குமாறு கேட்ட உன்னை, அறிவு பெறத் தகுதி பெற்றவனா என்று பலவகையில் சோதனை செய்து, சாதனை செய்யும் சிறுவன் நீ என்பதை அறிந்து கொண்டேன். உன்னை என் மாணவனாய் ஏற்று, ஆன்மாவைப் பற்றிய அறிவை வழங்குவேன்; அறியாமை இருள் விலகி உலகத்தோரும் உன் தயவால் மேன்மை அடையட்டும் (என்றான் எமன்).

செய்சிறுவன்: வினைத்தொகை
சேதன: ஆன்மாவைப் பற்றிய
மை: இருள்



    ல்ல ஆசிரியர் உயர்ந்த ஆசிரியராவது எப்படி? நல்ல மாணவர் உயர்ந்த மாணவராவது எப்படி?

    ஒரு மாணவன் நல்ல ஆசிரியரிடம் பயில விரும்புகிறான். நல்ல ஆசிரியை, நல்ல மாணவனைச் சிறந்த மாணவனாக்குகிறார். சிறந்த மாணவன் உயர்ந்து, நல்ல ஆசிரியரை உயர்ந்த ஆசிரியராக்குகிறான். நல்ல ஆசிரியர் உயர்வது, உயர்ந்த மாணவர்களை உருவாக்குவதனாலே. சிறந்த மாணவருக்கும் உயர்ந்த மாணவருக்கும் வேற்றுமை உண்டு. நல்ல மாணவி, கல்வி பெறும் குறிக்கோளை அடைகிறாள். சிறந்த மாணவன், கல்வியோடு அறிவையும் பெற்று கல்விக்குச் சிறப்பைச் சேர்க்கிறான். உயர்ந்த மாணவரோ, தானும் சிறந்து தம்மோரையும் சிறக்க வைக்கிறார். பெருமை சேர்க்கிறார். சிறப்பதற்கு தன்னுடைய தளராத உழைப்பு வேண்டும். உயர்வதற்குப் பிறருடைய கைகளும் தோள்களும் வேண்டும். சிறந்தவரெல்லாம் உயர்ந்தவர் ஆகாதக் காரணம், இந்தச் சிறு உண்மையை மறந்ததனால் எனலாம்.

    நல்ல ஆசிரியர், விழலுக்கு நீர் வார்க்க விரும்பார். தன் மாணவர் நன்கு கற்றுத் தானும் சிறந்து பிறரையும் சிறக்க வைக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். ஒரு ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சியை, நிறைவை, தரக்கூடியவர்கள் நல்ல மாணவர்களே. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களையே அடைய விரும்புவார்கள். (அதனால்தான் 'மாணவச்செல்வம்' என்கிறோம்).

    மன் விரும்பியிருந்தால் மரண அறிவை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கியிருக்கலாம். அவனும் மாணவச்செல்வத்தைத் தேடினான். விழலுக்கு நீர் வார்க்க விரும்பவில்லை. உயிர்ப்பயண உண்மையைக் கேட்ட நசிகேதன், அதை அறியவும் பேணவும் தகுதி வாய்ந்தவன் தானா என்பதை அறிய விரும்பினான் எமன். பலவகையிலும் நசிகேதனின் உறுதியை ஆழம் பார்த்தான். எதற்கும் வசியமாகாது, தன் அறிவுக் கோரிக்கையை, இலக்கை, நசிகேதன் தொடர்ந்து தெளிவுபடுத்தியது கண்டு மகிழ்ந்தான். நல்ல மாணவனைக் கண்ட ஆசிரியனின் மகிழ்ச்சி எமன் மனதில் நிறைந்தது.

    நசிகேதனைச் சோதனை செய்ததாகச் சொன்னதில் எமனின் நேர்மை புலனாகிறது. "சோதனை செய்தேன்" என்று ஒப்புக்கொண்டான். "சாதாரணச் சிறுவனல்ல ஐயா, நீ சாதனை செய்சிறுவன்" என்றான். ஏன்? அப்படி என்ன சாதனை? எமனுலகம் வருவதற்கு முன்பே சாதனை செய்து விட்டான் நசிகேதன்! தன் தந்தையின் வேள்வியை நிறைவாக்கிச் சாதனை செய்தான்; தானே தானமாகிச் சாதனை செய்தான். எமனுலகம் வந்தபின்னும் சாதனை செய்தான். மூச்சடக்கி உள்ளே வளர்க்கும் தீ பற்றிப் புரிந்து கொண்டு அதை முறையாக வெளிப்படுத்திச் சாதனை செய்தான் - சான்றாக எமன் அந்த வேள்விக்கு நசிகேத வேள்வி என்று பெயரிட்டான். தொடர்ந்து சாதனை செய்து கொண்டிருக்கிறான். எமனைக் கண்டு அஞ்சாமல், தன் இலக்கை விட்டு விலகாமல், தன்னை வசப்படுத்த முனைந்த எமனையே தன்வசப்படுத்திச் சாதனை புரிந்து கொண்டிருக்கிறான். மரண அறிவைத் தருவதாக, மாணவனாக ஏற்பதாக, எமனைச் சொல்லவைத்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறான். இனி எமனிடம் மரண அறிவைப் பெற்று, உலகத்தை உய்வித்துச் சாதனை செய்யப் போகிறான். அதனால் சாதனை 'செய்சிறுவன்' என்றான்.

    எமன் நசிகேதனிடம் அன்புடன், "உன்னை மாணவனாக ஏற்று, ஆன்மாவைப் பற்றிய அறிவை வழங்குவேன். அறிவைப் பெற்று நீ உன்னுலகம் திரும்பியதும், உன்னால் உலகத்தோர் உய்யட்டும். உலக மக்களின் அறியாமை இருள் விலகட்டும்" என்றான்.

முதல் பகுதி முற்றும்

2011/04/12

நாடகம் போதும் என்றான் நசிகேதன்


41
கூடுவிட்ட ஆவியது கூடுகின்ற நுண்மையினை
நேடுகிறேன் வாதமேன் நாடகமேன்? வீடும்
இருவரமும் வேண்டேன் மறலியார் மெய்யாம்
திருவரம் தாராத போது.

    டலைப் பிரிந்த உயிரானது எங்கே சேர்கிறது என்று அறிவதே என் விருப்பம், தேடலின் இலக்கு. வீண் வாதமும் போலி நாடகமும் எதற்கு? சிறந்த வரமாகிய மெய்யறிவை எமனார் எனக்குத் தரவில்லையெனில், பெரும்பேறும் முன்பு பெற்ற இரு வரங்களும் தேவையில்லை (என்றான் நசிகேதன்).

 நேடுகிறேன்: இலக்காகக் கொண்டுத் தேடுகிறேன் | நேடுதல்: நோக்கத்தோடு தேடுதல்
 மறலி: எமன்



    டன்பாட்டுக்கானச் சாதக நிலை உண்டானதும், அதை அறிந்து, தன் நிலையையும் விருப்பத்தையும் தீர்மானமாகச் சொல்லி நினைவுபடுத்துவது பேரத் தந்திரம். இறுதிச்சுற்று என்பதை அவையறியச் செய்யும் தந்திரம்.

    சிகேதனுக்கு எமனிடம் வீணாக வாதம் செய்யப் பிடிக்கவில்லை. "ஐயா, வரம் தருகிறேன் என்றீர். வேண்டியதைக் கேள் என்றீர். கேட்டபின், இது வேண்டாம், அதைத் தருகிறேன் என்று எதையெதையோ நீங்கள் சொல்வது போலியாக, நாடகமாகத் தோன்றுகிறது" என்றான். 'வரம் தருவதாக வாக்களிப்பானேன், பிறகு வாக்கை நிறைவேற்றாமல் சாக்கும் போக்கும் சொல்லித் தயங்குவானேன்?' என்று குறிப்பாகத் தெரிவித்தான்.

    வாக்களித்துப் பின்வாங்குவது நம்பிக்கைத் துரோகமல்லவா? எமனின் பேச்சும் போக்கும் நசிகேதனுக்கு நாடகமாகப் பட்டது. அதனால், விவாதங்களுக்கு முடிவு கட்டத் தீர்மானித்து, "ஐயா, மெய்யறிவே சிறந்த வரம். நீர் மெய்யறிவாம் மரண அறிவைத் தராவிடில், மற்ற வரங்களால் எனக்கு யாதொரு பலனுமில்லை. எனக்கு அவை வேண்டாம்" என்றான்.

    "உம்மைக் கண்டு அஞ்ச மாட்டேன், அறிவுக்கான என் வேட்கை குறையாது" என்று வெளிப்படையாகச் சொன்னதும், எமன் குழம்பியதைக் கவனித்தான். சினம் தணிந்ததைக் கவனித்தான். தன் விருப்பம் நிறைவேறும் நேரமென உணர்ந்தான். தன் தேவை மேலும் தாமதமில்லாமல் நிறைவேறும் பொருட்டு, "சிறப்பான ஞானத்தை வரமாகத் தருவதானால் தாரும், இல்லையெனில் மற்ற வரங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.

    கொடுத்த வரங்களை எமன் திரும்பப் பெறப்போவதில்லை என்று நசிகேதன் அறிந்திருந்தாலும், கொடுத்த வரங்களைக் காட்டிலும் கொடுக்கப் போகும் வரமே அதிகப் பயனுடையதென்ற தன்னுடைய நம்பிக்கையை எமனுக்குத் தீர்மானமாக அறிவிக்க விரும்பினான். "ஐயா, பேசியது போதும். இதுவே இறுதிச் சுற்று, இதற்கு மேல் பேரம் கிடையாது" என்று எமனுக்கு அறிவித்தான்.

    நசிகேதன் கேட்ட வரத்தைத் தரவேண்டிய அவசியத்தை உணர்ந்தான் எமன். தான் தேடிக்கொண்டிருந்த மாணவன் கிடைத்த நிறைவு ஏற்பட்டது எமனுக்கு. நசிகேதனை அன்புடன் தட்டிக் கொடுத்தான்.

2011/04/08

அறிவே தேவை என்றான் நசிகேதன்


40
கயிறுமக்கும் ஆணித் தொழுவைக் கடந்த
உயிரினுக்கும் உள்ளதோ தாமம்? துயிலரசே
அச்சமில்லை உம்மேல் அனைவரும் உய்யவென்
நச்சம் நராந்தக நூற்கு.

    றக்கத்துக்கு அரசனே! உம்மீது எனக்கு அச்சமில்லை. மனித குலத்துக்கு மேன்மை தரக்கூடிய மரணத்தைப் பற்றிய அறிவைப் பெறுவதே, என்னுடைய தணியாத விருப்பமாகும். எலும்பும் நரம்பும் வைத்துக் கட்டிய உடல் எனும் சிறையை விட்டு விலகிய உயிருக்கு, வேறு புகலிடம் உண்டா சொல்வீர்? (என்றான் நசிகேதன்).

கயிறு: நரம்பு
அக்கு: எலும்பு
ஆணி: உடல்
தொழு: சிறை
தாமம்: இருப்பிடம், புகலிடம்
துயில்: உறக்கம், மரணம்
நச்சம்: தணியாத விருப்பம், ஏக்கம்
நராந்தகம்: இறப்பு
நூல்: அறிவு, ஞானம்



    கோபமும் ஆத்திரமும் தவிர்க்க வேண்டும் என்றாலும், தவிர்க்காத நபர்களிடம் எப்படி நடந்து கொள்வது?

    தெளிவோடு பேசத் தொடங்குகிறோம். பதிலுக்கு கோபமும் ஆத்திரமும் வந்தால் நாமும் கலங்கிப் போகிறோம். என்ன சொல்வது என்று தெரியாமல் விழிக்கிறோம். 'எதற்கு வீண் தகராறு? விரோதம்? நான் என்ன சொன்னாலும் இவர் புரிந்து கொள்ளப் போவதில்லை, சச்சரவை வளர்க்காமல் ஒதுங்குவோம்' என்று பலவாறு குழம்பி ஒதுங்கி விடுகிறோம். இது சரியா, தவறா?

    நம் எதிர்ப்பு அறிவார்ந்தது என்றால், ஒரு இலக்கை நோக்கியது என்றால், அந்த இலக்கு வாழ்வின் மிக அவசியமான ஒன்று என்றால்... ஒதுங்கி விடுவதால் எல்லாவற்றையும் இழக்கிறோம். கோபமும் ஆத்திரமும், கொள்பவரின் குணத்தை அழிக்கும் என்றால் இன்னொரு புறம் கூடியிருப்பவரின் இலக்கை மறைக்கும். பிறர் கோபத்திற்கு அஞ்சி நம் இலக்கை மறப்பது முட்டாள்தனம்.

    எதிர் கோபமடையலாம். அதனால் பயனில்லை. "உங்கள் கோபத்துக்கு பயப்பட மாட்டேன்" என்று உறுதியுடன் சொல்லலாம். கோபமாக இருப்பவர்களிடம், "சிறிது ஓய்வெடுங்கள், பிறகு பேசுவோம்" எனலாம். "உங்கள் கோபம் என்னைப் பாதிக்கிறது, எனக்கு ஓய்வு தேவை" என்று விலகலாம். வேறு முறையில் கவனத்தைத் திருப்பலாம். என் வீட்டில் நான் கோபப்படும் போதெல்லாம் உடனே எனக்கு ஒரு கப் குளிர்ந்த தண்ணீர் கொடுத்து விடுவார்கள். என் மேலாள நண்பர் ஒருவர் உடனிருப்போர் கோபத்திலும் ஆத்திரத்திலும் பேசினால், உடனே தன் செருப்பைக் கழற்றி மேசை மீதோ நாற்காலியிலோ வைத்துவிட்டு, எந்த இடமென்றும் பாராது, தரையில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு விடுவார். (பலநேரம் அவருடைய செருப்புக்கு பயந்தே) நாங்கள் அடங்கி விடுவோம். கூட்டம் கூட்டிய காரணத்தை மனதில் கொண்டு அமைதியாவோம்.

    கோபத்தைக் கண்டு அஞ்சவே கூடாது. கோபத்தின் பின்னே குணமுண்டு என்பது உண்மையோ பொய்யோ, கோபத்தின் பின்னே கோழைத்தனம் உண்டு; 'தன் அதிகாரம் தட்டிக் கேட்கப்படுகிறதே, தன் பிடி விலகிப்போகிறதே, தன் அறியாமை வெளியாகிறதே, தன் இயலாமை புலப்படுகிறதே..' என்ற அச்சம் நிச்சயம் உண்டு. 'i don't argue to win; i simply make my opponent angry' என்றாராம் தாமஸ் ஜெபர்சன். கோபப்படுகிறவர்கள் கோழைகள் என்பதை உணர்ந்தால் கோபத்தை எதிர்கொள்வது எளிது.

    பிறருடையக் கோபத்திற்கு அஞ்சி நம் இயல்பையும் இலக்கையும் மாற்றிக் கொண்டால் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இழந்தவராவோம். நம்முடைய அல்லது பிறருடைய கோபமும் ஆத்திரமும் இலக்கிலிருந்து நம்மை விலக்க என்றைக்குமே அனுமதிக்கக் கூடாது. சொல்வதெளிது :).

    கேட்க, சொல்ல, அறிய வேண்டியதைத் தெளிவாக்குவது நல்ல மாணவனின் இலக்கணம். எமனுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த சொற்போர்களுக்கு ஒரு முடிவு கட்டினான் நசிகேதன். "ஐயா, எனக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒன்று தான். உயிருக்கு எது உறைவிடம்? உங்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் தெளிவாகவே கேட்கிறேன். இதோ எலும்பினாலும் நரம்பினாலும் பிணைக்கப்பட்ட இந்த உடலுக்குள் சிறைபட்டுக் கிடக்கும் உயிர், இந்த உடலை விட்டு விலகியதும் எங்கே போகிறது? அதற்கு புகலிடம் உண்டா? இருப்பிடம் உண்டா? இதை நீங்களறிவீர்கள். அதை எனக்கு விளக்கி என் அறியாமை இருளைப் போக்கி அறிவொளி தாருங்கள்" என்றான். மரணம் மீளா உறக்கம் தானே? மரணத்துக்கு அதிபதி என்பதால் துயிலரசன் என்றான்.

    சான்றோர்க்கழகு சேர்ந்தணைத்தல். நசிகேதன் சிறியவன் என்றாலும் சான்றோனல்லவா? தனக்காக மட்டும் கேட்கவில்லை. தனக்குப் பின் வரும் அனைவரும் உய்ய, மரணத்தைப் பற்றிய அறிவு ஒரு உபாயம் என்பதை அறிந்து கேட்டான். தன்னுடைய அறியாமையை அழிக்கக் கிடைத்த வாய்ப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினான். தானும் மனித குலமும் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய அறிவென்பதால், மன உறுதியுடன் நின்று "இறப்பைப் பற்றிய அறிவையே விரும்புகிறேன்" என்றான்.

    தான் உபயோகித்த அனைத்து வசிய முறைகளும் பயன்படாமற் போனதை உணர்ந்தான் எமன். நசிகேதன் தன் பிடிப்பை விட்டுக் கொடுக்க மாட்டான், தளர மாட்டான் என்பது எமனுக்குப் புரியத்தொடங்கியது.

2011/04/05

அஞ்சேன் என்றான் நசிகேதன்


39
வந்தது மும்புரட்டல் மூவர மீந்துபின்
வெந்தது மும்புரட்டல் வேதியே - சிந்தியும்
இன்மொழிக்கே அஞ்சுவது இன்மொழிக்கும் அஞ்சலேல்
வன்மொழிக்கோ வற்பை விடும்?

    பேரறிஞரே! நான் இங்கு வர நேர்ந்தது உமது புரட்டல்; மூன்று வரங்களை வழங்கியது உமது புரட்டல்; பிறகு வெகுண்டதும் உம் புரட்டலே! சற்று சிந்திக்க வேண்டுகிறேன். அன்பு மொழிக்கு அஞ்சி அடங்கும் மனம், உங்கள் கனிமொழிக்கே கட்டுப்படவில்லை, கடுமொழிக்கா பிடிப்பை இழக்கும்? (என்றான் நசிகேதன்).

  வேதி: அறிஞர், ஞானி [ஆன்மாவைப் பற்றிய நுண்மையறிந்தவன் என்பதால் எமனை வேதி என்றான். வேதி என்ற சொல்லுக்குத் துன்புறுத்துபவர், ரசவாதம் செய்பவர் என்ற பொருளும் உண்டு. தன்னைத் துன்புறுத்த வல்லவன் என்பதால் வேதி என்றான். தாழ்ந்த பொருளை உயர்ந்த பொருளாக்கும் ரசவாதியைப் போல், அறிவற்ற தன்னை அறிஞனாக உயர்த்த வல்லவன் என்பதாலும் நசிகேதன் எமனை வேதியென்றான்]
  வற்பு: உறுதி.



    ன்புக்குக் கட்டுப்படுவோர் ஆத்திரத்துக்குக் கட்டுப்படுவதில்லை (சிலர் விதி விலக்கு :). அச்சமூட்டுவதால் அந்தக் கணத்து எண்ணம் நிறைவேறக் கூடும். அச்சம் தொலைந்ததும் மதிப்பும் கூடவே தொலைந்து விடுவதால், அச்சமும் ஆத்திரமும் நிலையான வசிய முறைகள் ஆகமாட்டா. மதிப்பைத் தொலைத்ததும் மற்ற நேயங்களும் மறையும்.

    ஆத்திரமும் கோபமும் இரு புறமும் மதிப்பைக் கெடுக்கும். ஆத்திரப்பட்டவர் மதிப்பிழப்பது ஒரு புறம். ஆத்திரத்தால் பாதிக்கப்பட்டவரும் மதிப்பிழக்கிறார்கள். ஆத்திரத்துக்குக் கட்டுப்பட்டதால் 'எளியோன்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தி மதிப்பிழக்கிறார்கள்; மேலும், ஆத்திரத்தை எதிர்க்க முடியாத இயலாமையால் வெட்கப்பட்டு சுயமதிப்பையும் இழக்கிறார்கள். கோபத்துக்கு பயப்படுபவர்கள் கோழைகள். தன்மான இழப்புக்கும் ஒரு படி கீழே கோழைத்தனம்.

    'அன்புக்கே வசியமாகவில்லை, நான் ஆத்திரத்துக்கா அடங்குவேன்?' என்று நினைத்தான் நசிகேதன். 'என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் இந்த எமர்? என் உறுதியைக் குறைவாக எடை போடுகிறாரா?' என்று எண்ணிச் சற்றே தனக்குள் புன்னகைத்துக் கொண்டான். எமன் மீதிருந்த மதிப்பு குறையவில்லை எனினும், எமனின் நிலையை எண்ணி சற்றே வருந்தினான். 'சிக்கினாரய்யா நம் கையில்!' என்று தனக்குள் சிரித்தபடி, எமனை நோக்கினான்.

    "ஐயா" என்றான். "புரட்டல் என்கிறீர்களே, புரட்டல் கணக்கு சொல்கிறேன் கேட்கிறீர்களா?" என்றான். "வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை விவரம் தெரிந்தவன் போல் எண்ண வைத்ததும் புரட்டல். விவரம் தெரிந்து தந்தையிடம் வேள்விப்பலன் பற்றிக் கேட்க வைத்ததும் புரட்டல். வேள்விப்பலன் கேட்டது பொறுக்காமல் என் தந்தை சீறியதும் புரட்டல். சீறிச் சிவந்து என்னையே உமக்குத் தானமாகத் தந்ததும் புரட்டல். தானமாக வந்தவன், உம் வீட்டில் தவிக்க நேர்ந்ததும் புரட்டல். தவித்தவனுக்கு மூன்று வரம் தருவதாகச் சொன்னதும் புரட்டல்" என்றான். 'இந்தப் புரட்டல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?' என்பது போல் எமனைப் பார்த்து, "வரம் தருகிறேன் என்றதும் நுட்பமான வரங்களைக் கேட்க வைத்ததும் புரட்டல். கேட்டதும் கோபத்தில் மிரட்டியதும் புரட்டல். நீங்கள் பேரறிஞர். உங்களுக்குத் தெரியாத புரட்டலா?" என்றான்.

    எமன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். நசிகேதன் விடுவதாயில்லை. "இனியும் புரட்ட வேண்டுமா? தாராளமாகப் புரட்டுங்களேன்" என்று எமனிடம் வெளிப்படையாகச் சொல்லவில்லை. என்ன சொன்னான்?

    "ஐயா, இந்த மனமிருக்கிறதே மனம்.. அது அன்புக்கு அடிமையாகும், அடங்கும், வசியப்படும். வேறு எந்த முறையிலும் மனதை அடைய முடியாது. அன்பு ஒன்றினால் மட்டுமே ஒருவரை வசியப்படுத்த முடியும்" என்று எமனைப் பார்த்தான். "இதில் வேடிக்கை பாருங்கள்.. வேதியரே. நீங்கள் அன்போடு அத்தனை பேசியும் தந்தும் இந்த மனம் உங்கள் வசமாகவில்லை; நீங்கள் சொன்னதைக் கேட்கவில்லை; நிலையாக நின்றது. பயமுறுத்தினால் பயப்படவா போகிறது? இன்சொல்லுக்கு உருகாதது, உமது சுடுசொல்லுக்கு அஞ்சித் தன் நிலையை, உறுதியை, உடைக்கவா போகிறது?" என்றான். இல்லாத மீசையை முறுக்கி, "பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தீரோ?" என்றான்.

    நசிகேதன் பேச்சுக்கு இன்னொரு பொருளும் உண்டு. அன்பானது மயக்கும் தன்மையது. ஒருவருடைய அன்புக்குக் கட்டுப்பட்டு வசியமான மனம், பிறகு அவருடைய கோபம் எரிச்சல் கடுமொழியை எதிர்கொள்ளும் பொழுது அனைத்தையும் ஒதுக்கி அன்பை மட்டுமே மனதிலிறுத்திக் காண்பதால், கோபத்தால் பாதிக்கப்படுவதில்லை. எங்கிருந்தோ வந்த நசிகேதனை எடுத்து அரவணைத்து ஆதரவு தந்து அன்பு காட்டி வசியப்படுத்தி விட்டதால், எமனின் கோபத்தீயை அன்பு வெள்ளம் அடக்கி விட்டது எனலாம். ஆழ்ந்த அன்பின் அறிகுறி. (ஒரு விதத்தில் கண்மூடித்தனம். இக்காலத்தில் மனிதர்களுக்கிடையில் இந்த நிலையேற்படுவது அனேகமாக impractical :)

    நசிகேதனின் துணிவும் முதிர்ச்சியும் எமனை வியக்க வைத்தது. 'அவ்வளவு தானா, இன்னும் ஏதாவது வசியமுறை வைத்திருக்கிறீரா? இல்லையெனில் சொற்படி வரம் தாருமய்யா? உயிர்ப்பயண விவரங்களைச் சொல்லுமய்யா?!' என்று நசிகேதன் விரட்டுவது போல் உணர்ந்தான். விழித்தான். 'இந்தப் பிள்ளை என் வயதுக்குக் கூட மதிப்பு கொடுக்கவில்லையே?' என்று எண்ணினான்.


தேடிச் சோறு நிதந்தின்று பல
   சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர்
   வாடப் பலசெயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக் கொடுங்
   கூற்றுக்கு இரையெனப்பின் மாயும் பல 
வேடிக்கை மனிதரைப் போலே நான் 
   வீழ்வேன் என்று நினைத்தாயோ?
எந்தச் சோர்விலிருந்தும் நம்மை நாமே அடித்து எழுப்பிக்கொள்ள பாரதி தந்தத் தமிழ்ச்சவுக்கு.


2011/04/01

கோபம் கொண்டான் எமன்


38
குரங்காட்டி போலினிக் கோலெடுப்பேன் உன்மேல்
உரங்காட்டி ஓய்ந்தேன் உதவா வரங்கேட்டு
விரட்டினால் வாட்டுவேன் உப்பாலில் உன்னைப்
புரட்டிப் புரட்டி எடுத்து.

    ன்னிடம் கருணை காட்டி ஓய்ந்தேன். பலனற்ற வரத்தையே நீ குரங்கு போல் பிடிவாதமாகக் கேட்டுக்கொண்டிருந்தால், நான் குரங்காட்டி போல் கோலெடுத்துத் தண்டிப்பேன். பிறவிக்கு மேல் பிறவியாக உன்னைப் புரட்டி எடுத்து வாட்டுவேன் (என்றான் எமன்).

உரங்காட்டி: அன்பு செலுத்தி, நயம் காட்டி
உப்பால்: மறுமை



    ன்பாகவே பேசி நடந்தாலும் திடீரென்று கோபமும் ஆத்திரமும் வந்து கத்தும் பொழுது குழந்தைகள் நடுங்கிப் போவதைப் பார்த்திருக்கலாம். திடீரென்று குணம் மாறிய தந்தை தாய் அல்லது ஆசிரியரின் கோபம், பிள்ளைகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அந்த அதிர்ச்சியில் அவர்களுக்கு பேச்சே வராது ஒடுங்கி விடக்கூடும். சில குழந்தைகளுக்குச் சிந்திக்கும் திறன் கூட இல்லாது போகும். கண்களில் கோர்த்த நீரில் தங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கழுவ முடியாமல், திடுக்கிட்ட நிலையில் செய்வதறியாது திகைக்கக்கூடும். இயல்பு நிலைக்கு வர நேரமாகும். சொல் கேளாத பிள்ளையிடம் நடந்து கொள்ளும் முறையில் கோபமும் ஆத்திரமும் தவிர்க்காவிட்டால், பெற்றோரின் கோபம் நினைவில் நிற்குமே தவிர, கோபத்தின் காரணம் மறந்து விடும். அதுவரை சேர்த்த மதிப்பும் அன்பும் மறைந்து விடும். இதையறிந்த பெற்றோர்கள் மிகச் சிலரே.

    பிள்ளை வளர்ப்பு என்றில்லை, கணவன், மனைவி, பெற்றோர், காதலன், காதலி, மாணவர், நண்பர், உடன் வேலை செய்பவர் என்று பிறருடன் நடந்து கொள்ளும் முறையில் ஒவ்வொரு முறை கோபம் கொள்ளும் பொழுதும் உறவுச் சங்கிலி, நட்புச் சங்கிலி, மதிப்புச் சங்கிலி உடைவதை நினைவில் வைக்க வேண்டும்.

    யம், கொடை, அச்சம், ஒறுப்பு எனும் நால்வகை அடக்கு/வசிய முறைகளையும் எமன் கையாண்டான். அன்புடன் வேறு வரம் கேட்கச் சொன்னான்; கேளாத நசிகேதனை வசியப்படுத்தச் செல்வமும் புகழும் ஆயுளும் அள்ளி வழங்கினான்; தளராத நசிகேதனை வசைமொழி பேசிப் பயமுறுத்தினான்; கலங்காது நின்ற நசிகேதனை, வேறு உபாயம் தோன்றாமல், கடுமையாகத் தண்டிப்பேன் என்றான்.

    எமனின் முகம் துடித்தது. கண்கள் சிவந்திருந்தன. மூச்சிலும் பேச்சிலும் கோபத்தீ சுட்டது. நசிகேதனை எரிப்பது போல் பார்த்தான். "குரங்கு போல வீண் பிடிவாதமா பிடிக்கிறாய்? குரங்காட்டி போல் கோலெடுத்தேன் பார். உன்னை அடக்கி ஒடுக்குவேன் பார்!" என்றான். சீறினான். எமனின் கோபத்தை நசிகேதன் எதிர்பார்க்கவில்லை. மலை போல் ஓங்கி உயர்ந்து வலிமையோடு உறுமிய எமனைக் கண்டு, சிறுபிள்ளை நசிகேதன் நடுங்கினான். எமன் விடவில்லை. "ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்பதற்காக உண்மையிலேயே வருந்தி வரம் தருகிறேன் என்றேன். விடலையாக ஏதோ கேட்டாலும் கொடுத்தேன். திரும்பிப் போகவும் அனுமதி கொடுத்தேன். சொர்க்கம் தருகிறேன் என்றேன். செல்வம் தந்தேன். சந்ததி தந்தேன். மானிடனாய், வயதுக்குப் பொருத்தமான வரங்கேள் என்றால், மரியாதை இல்லாமல் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கிறாயே? நீ முட்டாளா? அல்லது என்னை முட்டாள் என்று நினைத்தாயா? நான் யார் தெரியுமா?" என்றான். சிவந்த கண்களால் குழந்தை நசிகேதனை முறைத்துப் பார்த்தான். "சொற்படி கேளாவிட்டால் தொலைத்து விடுவேன். பொருந்தாமல் வரங்கேட்டுக் கொண்டிருந்தால் பொறுக்க மாட்டேன். எதற்காக இங்கு வந்தாயோ அதை மறந்து விடு. பிறவித் தொடர்ந்துப் பிறவி கொடுத்து உன்னை இங்கேயும் பூமியிலும் புரட்டிப் புரட்டி எடுப்பேன். வாட்டி எடுப்பேன்" என்று உறுமினான். ஆத்திரத்துடன் தரையில் ஓங்கி உதைத்தான்.

    நசிகேதன் அதிர்ச்சியில் தடுமாறினான். கண்களில் நீர் கோர்த்து, முகம் வாடியது. பேச்சு வரவில்லை. எமனின் சுடுசொற்களைக் கேட்டதும், ஒரு கணம் 'எமனுக்கே தந்தேன் தானம்!' என்ற தன் தந்தையின் உருவமும் பேச்சும் நினைவுக்கு வந்தது. 'தந்தையின் கோபத்தினால் இங்கு வந்து சேர்ந்தோமே, இனி எமனின் ஆத்திரத்தால் மீண்டும் கோபக்காரத் தந்தையிடம் போய்விடுவோமோ? இப்படி ஒவ்வொருவரும் நம்மைப் புரட்டி எடுக்கிறார்களே?' என்று எண்ணினான்.

    'முதலிரு வரங்களில் தந்தை வாசனுக்கு நற்கதியையும், சொர்க்கம் செல்லும் வழியையும், மூச்சடக்கி தீ வளர்க்கும் முறையையும் அறிந்ததெல்லாம் வீணாகி விடுமா? புரட்டி எடுப்பேன் என்கிறாரே எமன்? ஒரு வேளை எல்லை மீறி பிடிவாதம் பிடித்தோமோ?' என்று சிந்திக்கத் தொடங்கினான்.

    'என்னிடம் அன்பும், கருணையும், பொறையும், வள்ளண்மையும் காட்டிய எமன் ஏன் குணம் மாறினார்? மரண அறிவைக் கேட்டதற்காகவா? இனி இவரோடு எப்படிப் பழகுவது? ஏதாவது சொன்னால் ஏற்பாரா, எரிந்து விழுவாரா?' என்று பலவாறு சிந்தித்த நசிகேதன், எமனுடன் பேசுவதற்குத் தயங்கினான். ஒதுங்கி விடலாமா என்றும் நினைத்தான்.

    பிறகு, தன்னுடைய இலக்கை ஒரு முறை நினைவில் கொண்டான். எமனை ஏறிட்டான்.



நயம், கொடை, அச்சம், ஒறுப்பு :: சாமம், தானம், பேதம், தண்டம்