68
சிற்றலை பேரலையிற் சேரும் சிதறினால்
ஒற்றியே நீராய் ஒடுங்கும் - அற்றறியும்
ஆன்மா அருஞ்சக்தி ஆகுமே மற்றவையால்
மேன்மையும் மங்கும் முசிந்து.
சிறு அலைகள் சேரச்சேர பேரலை எழுகிறது. சேர இயலாத சிற்றலைகள், ஒடுங்கி மீண்டும் நீரோடு கலக்கின்றன. பற்றொழித்து நல்வழியை அறிந்த ஆன்மா, பேரான்மாவோடு இணைந்து அரிய, நுட்பமானச் சக்தியாகிறது. (அவ்வாறு அறிய இயலாத) மற்ற ஆன்மாக்களால், மேன்மையான பேரான்மா வலுவிழந்து குன்றும்.
ஒற்றி: அடங்கி, விழுந்து
அற்றறியும்: அற்று+அறியும், துறந்தறியும்
அருஞ்சக்தி: அரிய, மேலான சக்தி. உருவமற்ற சக்தி என்றும் பொருள் கொள்ளலாம் (அரு=உருவமற்ற)
முசிந்து: இளைத்து
ஏழு வயதில் கேட்டக் கதையொன்று. தங்களுக்குள் ஒற்றுமையில்லாத ஐந்து சகோதரர்களை அழைத்தத் தந்தை, அவர்களிடம் ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்து உடைக்கச் சொன்னாராம். எளிதில் உடைத்துக் கொடுத்தனராம் சகோதரர்கள். பிறகு, இணைத்துக் கட்டிய ஐந்து குச்சிகளைக் கொடுத்து உடைக்கச் சொன்னாராம் தந்தை. எத்தனை முயன்றும் சகோதரர்களால் குச்சிக்கட்டை உடைக்க முடியாமல் போனதாம். படிப்பினையறிந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்தனராம்.
சகோதர ஒற்றுமையா, இணைந்த குச்சிகளின் வலிமையா? கதையில் எது படிப்பினை? அதுவரை இல்லாத வலிமை, குச்சிகள் சேர்ந்ததும் தோன்றியதே? தனிக் குச்சிகளுக்கு அஞ்சாத சகோதரர்கள், இணைந்த குச்சியின் சக்திக்குப் பணிந்தார்களே? ஒன்றான சகோதரர்கள் ஐவரும் ஒற்றுமையாகச் சேர்ந்து முயன்றாலும் குச்சிக்கட்டை உடைத்திருக்க முடியுமா? ஏழு வயதில் புரிந்த கதை. எழுபது வயதிலும் புரியாதப் படிப்பினை.
    கூட்டுப் பிரார்த்தனை - ஒரே குறிக்கோள் தொட்ட பல இணைந்த மனங்களின் பிரார்த்தனை - நூற்றாண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. பலனளித்திருக்கிறது. மாய மந்திர தந்திரங்களை ஒதுக்கி, மனித மனங்களின் நல்லெண்ணக்கூட்டு என்றக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சற்றே பிரமிக்க வைக்கிறது. கூட்டுப் பிரார்த்தனைகள் அனைத்துமே எதிர்பார்த்தப் பலனைத் தருவதில்லை. எனினும், சில நம்பமுடியாதச் சிக்கல்களைக் கூட்டுப் பிரார்த்தனைகள் தீர்த்து வைத்ததாகச் சொல்லப்படுகிறது. ஹிட்லர் மரணத்திலிருந்து... கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக நிறைய உதாரணங்கள் சொல்லப்படுகின்றன. என் குடும்பத்தில் ஒருவர், தன் உடல் ஆரோக்கியத்துக்குக் கூட்டுப் பிரார்த்தனையே காரணம் என்கிறார். பதினேழு வயது வரை கால்களை அசைக்கவும் முடியாத ஊனமாயிருந்த இவர், இன்றைக்குத் தினம் மூன்று மைல் நடக்கிறாராம். இவருக்கு வயது எழுபத்து மூன்று. பிழைக்க மாட்டார் என்று கைவிடப்பட்ட அமிதாப் பச்சனுக்கு இந்தியா முழுதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கழுத்து நரம்புகளில் குண்டு பாய்ந்துக் குற்றுயிராகக் கிடந்த எம்ஜிஆர் பிழைக்க வேண்டி, அவருடைய மருத்துவரே (என் தந்தைக்கு உறவு) தினம் ஐம்பது பேரை அழைத்து வந்து ஒரு வாரம் கூட்டுப் பிரார்த்தனை செய்ததாகச் சொல்வார்கள் (கடவுள் வழிபாடு எதுவும் இல்லாத பிரார்த்தனை - கறுப்புச் சட்டைக்காரர்). என் காரைக்கால் நாட்களில் ஒவ்வொரு வியாழன் மாலையும் அரபிந்தோ ஆசிரமக்காரர்கள் 'பொதுப் பிரார்த்தனை' செய்ததைப் பார்த்திருக்கிறேன். கிண்டல் செய்திருக்கிறேன். வரலாற்றில் நிறைய அசல் ரிஷ்யச்ருங்கர்கள் இருந்தார்கள். இருக்கிறார்கள். காந்தியின் கூட்டுப் பிரார்த்தனைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நான் மகான் அல்ல.
இங்கே பிரார்த்தனை என்பது அர்ச்சனை, பக்தி என்ற எதையும் குறிக்கவில்லை. பலரும் ஒரே மனதோடு ஒரு நற்செயலை எண்ணி விரும்பும் மனிதநேயமே கூட்டுப் பிரார்த்தனை. ஒரு மனம் இன்னொரு மனதோடு இணையும் சக்தியே கூட்டுப் பிரார்த்தனை. இதைச் செய்யக் கும்பாபிஷேகங்கள் தேவையில்லை. காவிகளைத் தொடர வேண்டியதில்லை. மூட்டை முடிச்சுகளைச் சுமக்க வேண்டியதில்லை. முப்பது நாள் விரதமிருக்க வேண்டியதில்லை. தினம் ஐந்து வேளை தொழ வேண்டியதில்லை.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உலக மக்கள் அனைவரும் ஐந்து நிமிடங்கள், வேண்டாம்... ஐந்து நொடிகள், ஒரு நற்செயலை மனமுருக எண்ணினால் ஏதாவது பெருஞ்சிக்கல் தீர வாய்ப்புண்டா? உலக மக்கள் வேண்டாம்... ஒரு தெரு... ஒரு குடும்பத்தின் அத்தனை உறுப்பினர்களும் சேர்ந்தால் ஒரு சிறு சிக்கலின் ஒரு சிறு பகுதி தீர வாய்ப்புண்டா? பரிசோதனைக்கெல்லாம் ஏது நேரம்? பத்து காசு கோவில் உண்டியலில் போட்டு அரோகரா என்றால், சொந்த நிம்மதிக்கு வழியானது.
மனித மனமே சக்தி. மனித மனங்களின் கூட்டே பெருஞ்சக்தி. அதற்கு நான்கு கைகள் இல்லை. சக்கரங்கள், ஆயுதங்கள் இல்லை. இரத்தம் சொட்டும் நாக்கில்லை. ஆகாயத்தைக் கீறி இறங்கவில்லை. புனிதகர்ப்பம் எதுவுமில்லை.
மனிதசக்தியே அருஞ்சக்தி. கண்ணுக்குப் புலப்படாத சக்தி என்பதற்குக் காரணம் இருக்கிறது. கண்ணுக்குப் புலப்படும் சக்தியைக் கோவிலில் காணலாம். கண்ணுக்குப் புலப்படாத சக்தியை உணர வேண்டும். மனதைக்கட்டி அகத்தில் காண வேண்டும். அதைவிட்டுக் கண்ணுக்குப் புலப்படும் போலிச் சக்திகளை மனதில் நிறுத்தி, அருவம் என்று அலத்துகிறோம். தயங்குவதேயில்லை. நாளைப் பொழுது நமக்கென வாழ்வதில் தயக்கம் உண்டு. அதை நடத்த ஒருவனைக் கோவிலில் தேடத் தயக்கமே இல்லை.
கடவுள் என்றதும் மனதில் தோன்றுவது உருவமா அருவமா? மனிதம் என்றதும் மனதில் தோன்றுவது? இரண்டில் எது அருவம்? எது நுட்பம்? எது பெருஞ்சக்தி? இரண்டில் எது குச்சிக்கட்டு?
    என் நண்பர் ஒருவர், தனக்கு அலுவலகத்தில் ஏதும் நடக்கவேண்டுமென்றாலோ, வியாபாரம் பெருக வேண்டுமென்றாலோ கோவிலுக்குச் சென்று பத்து சுற்று சுற்றிவருவார். பத்து டாலரோ நூறு டாலரோ தயங்காமல் உண்டியலில் போடுவார். (கடவுளுக்கு வருமான வரி உண்டா தெரியவில்லை). இன்னொரு நண்பரின் பதினாறு வயது மகனிடம் "தேர்வில் முதல் மதிப்பெண் பெற என்ன செய்கிறாய்?" என்று கேட்ட பொழுது "பிள்ளையார் சுழி போடுகிறேன். அதனால் எனக்கு எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை தெரிகிறது" என்றார். இன்னொரு குடும்ப நண்பர் ஒருவர், மற்ற மாமிகளுடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று சௌந்தர்யலஹரி படிக்கிறார். "ஒரு பாடலின் ஒரு வரிக்காவது பொருள் தெரியுமா?" என்று ஒருமுறை கேட்டேன். "மனமுருகிச் சொன்னால் பொருளறியத் தேவையில்லை" என்றார். ஆ! வியக்க வைக்கும் நம்பிக்கைகள்.
என் ஆசிரிய நண்பர் அரசன் தினமும் காலையில் பிரார்த்தனை செய்வார். "என்ன பிரார்த்தனை செய்யுறீங்க? உங்களுக்குத்தான் கடவுள் நம்பிக்கை கிடையாதே?" என்றேன் ஒருமுறை. "நீ நல்லா இருக்கணும்னு பிரார்த்த்னை செஞ்சேன்" என்றார். என் குழப்பத்தைப் புரிந்துகொண்டு, "நீ என்றால் நீ இல்லை ஐயா. அடுத்தவன் நல்லா வாழணும் நெனச்சா அதைவிட வேறே என்னா பிரார்த்தனை வேண்டிக் கிடக்குது?" என்றார்.
எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவதன் தயக்கம், நாம் வாழ யார் பாடுவாரில் தொடக்கம். நம் சுய அல்லது குடும்ப நலனுக்காகக் காவியிடமும் கோவிலிலும் வேண்டுவதை நிறுத்த முடியுமா? ஒன்று ஆசை. மற்றது பற்று. இரண்டையும் விட்டுப் பொதுமனித சக்தியின் ஆணிவேரை உணர முடியுமா?
மனிதசக்தியை நம்புவது எளிதல்ல.
"நசிகேதா, கடலலையைப் பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டான் எமன்.
"பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தப் பொழுது போக்கு" என்றான் நசிகேதன்.
"அப்படியா?"
"ஆம். எங்கிருந்தோ ஆர்ப்பரித்து வரும் பேரலைகள் அருகில் வந்து அடங்கி, இதமாக வருடுவது பிடிக்கும். ஆர்ப்பாட்டத்தோடு இரைந்து பாறைகளை உடைத்தெறிவதும் பிடிக்கும். கடலலையின் சக்தியை எண்ணி வியந்திருக்கிறேன்"
"பேரலை எங்கிருந்து வருகிறது?"
"திடீரென்று உருவாகிறது. சிறு அலைகள் சேர்ந்து பேரலையாக மாறுகின்றன"
"எல்லா சிற்றலைகளும் பேரலைகளாகுமா?"
"இல்லை. எத்தனையோ அலைகள் பேரலையுடன் சேராமல் அடங்கி விடுவதைப் பார்த்திருக்கிறேன்"
"நன்று நசிகேதா. பேரலை என்று தனியாக ஏதுமில்லை. பேரலை என்பதே சிற்றலைகளின் கூட்டாகும். வலுவான சிற்றலைகளை சேரச்சேர, பேரலை உருவாகிறது. வலுவான சிற்றலைகளின் சக்தி பேரலையை உருவாக்குகிறது. வலுவடைந்த பேரலை, மற்ற சிற்றலைகளை ஈர்த்து இன்னும் பெரிதாகிறது. பேரலையை வலியச் சேரும் வலுவான சிற்றலைகளினால், பேரலை இன்னும் பெரிதாகிப் பாறைகளையும் உடைத்தெறியும் சக்தியைப் பெருகிறது. பேரலையைச் சேராதச் சிற்றலைகள், நீராகவே ஒடுங்கி விடுகின்றன. வலுவற்றச் சிற்றலைகளும் பேரலையைச் சேருகின்றன. வலுவற்றச் சிற்றலைகள், பேரலையின் வலுவைக் குறைக்கின்றன. பேரலையும் அடங்கிவிடுகிறது" என்றான் எமன்.
நசிகேதன் அமைதியாக இருந்ந்ததைக் கவனித்த எமன், "என்ன சிந்திக்கிறாய்?" என்றான்.
"நீங்கள் சொல்ல வருவது புரிகிறது. நான் முன்னர் கேட்ட கேள்விகள் சிலவற்றுக்கு விடை கிடைத்ததாக எண்ணுகிறேன்" என்றான் நசிகேதன்.
"என்ன கேள்விகள்?"
"உயிர்ப்பயணத்தை விவரிக்கையில், 'உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை' என்றீர்கள் அல்லவா?"
"ஆம்"
"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி என்றீர்கள். 'இச்சக்தியுடன் கலப்பதே சொர்க்கமா? பேரின்பமா? பிறவா நிலையா?' என நான் கேட்டேன்"
"ஆம். எந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது?"
"விடை கிடைத்தது என்று எண்ணும் பொழுதே ஐயமும் எழுகிறது"
எமன் சிரித்தான். "நசிகேதா. உன்னுடன் வாதம் செய்வது எனக்குப் பிடித்திருக்கிறது" என்றான்.
"சிற்றலையின் நோக்கம் பேரலையுடன் சேர்வதே என்பது புரிகிறது. சிற்றலையின் சக்தி, பேரலையுடன் இணையச் செய்வதோடு, பேரலையின் வலிமையைக் கூட்டும் என்பதும் புரிகிறது. வளர்ந்த பேரலை பிற சிற்றலைகளை ஆதரித்துத் தன்னுடன் சேர்த்துக் கொள்ளும் என்பது புரிகிறது. சிற்றலையின் சக்தி பேரலையினால் புலனாகிறது, சிற்றலையின்றிப் பேரலையை அறியவே முடியாது என்பதும் தெளிவானது."
"அற்புதம்! மேலும் சொல்"
"அது போல, ஆன்மாவின் நோக்கமும் பேரான்மாவுடன் இணைவதாகும் என அறிந்தேன். ஆன்மா எப்படி பேரான்மாவை வலுவாக்குகிறது?"
"உண்மை. ஆன்மாவின் இலக்கு, பேரான்மாவுடன் இணைவதே. பற்றறுத்து, நல்லொழுக்கத்துடன் தன்னையறிந்த ஆன்மா, சக்தி வாய்ந்தது. சக்தி வாய்ந்த ஆன்மா பேரான்மாவை எளிதாகச் சேர்கிறது. வலுவான சிற்றலை பேரலையுடன் இணைவது போலவே. அவ்வாறு சக்தி வாய்ந்த ஆன்மாக்களின் கூட்டணியில் உருவாகும் பேரான்மா, பெருஞ்சக்தி பெறுகிறது. தன்னையறியாத ஆன்மாக்கள் பேரான்மாவுடன் இணைய முயன்று தோற்கின்றன. இணைந்தாலும் பேரான்மாவின் வலிமையைக் குறைத்து விடுகின்றன"
"ஒடுங்கிய சிற்றலைகள் தான் மீண்டும் பிறக்கின்றனவா?"
"ஆம்"
"பேரான்மாவுடன் இணைந்த உயிருக்குப் பிறப்பில்லையா?"
சுற்றுமுற்றும் பார்த்த எமன், "உனக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன்" என்றான்.
"சொல்லுங்கள்" என்றான் நசிகேகன் ஆவலுடன்.
"பிறப்பும் இறப்பும் விபத்துக்கள்"
"புரியவில்லையே?"
"இன்னொரு கற்பனைப் பயணம் செய்வோமா?" என்றான் எமன்.
"நான் தயார்" என்றான் நசிகேதன்.
"உன்னைக் குயவனாக எண்ணிக்கொள். நீ ஆறு பானைகள் செய்ய வேண்டும்"
"சரி"
"பொறு. முதல் பானையை, இதோ தரையில் அமர்ந்து இங்கே செய்" என்றான்.
நசிகேதன் தரையில் அமர்ந்து கற்பனைப் பானை ஒன்றைச் செய்து முடித்தான்.
எமன், "அடுத்த பானையை அதோ பத்தடி தள்ளி சற்று உயரத்தில் நின்றபடி செய்" என்றான்.
நசிகேதன் பத்தடி நடந்து, இரண்டு படிகள் ஏறி சற்று உயரத்தில் இரண்டாவது பானையைச் செய்தான்.
தொடர்ந்து எமன் நசிகேதனை அலைக்கழித்து உயரத்தில் ஏற்றி மற்ற நான்கு பானைகளைச் செய்யச் சொன்னான். எமன் சொற்படி நசிகேதன் ஆறாவது பானையை நூறடி உயரத்தில் செய்து முடித்தான். "ஐயா, ஆறு பானைகளும் தயார்" என்றான்.
"ஏழாவது பானை ஒன்றைச் செய்ய வேண்டும்" என்றான் எமன்.
"சரி, எங்கே சொல்லுங்கள்" என்றான் நசிகேதன்.
எமன் அவனை தொலைவில் அழைத்துச் சென்றான். அங்கே காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. "இங்கே செய்" என்றான்.
நசிகேதன் எத்தனை முயன்றும் பானை சேரவில்லை. "ஐயா, இங்கே காற்று வலுவாக இருக்கிறது. பானை செய்ய முடியவில்லை" என்றான்.
"நன்று நசிகேதா. இனி சில கேள்விகள் கேட்கப் போகிறேன்" என்ற எமன், நசிகேதனை முதல் பானையருகே அழைத்து வந்தான். இதோ.. கீழே தரையில் இருக்கும் இந்தப் பானையில் என்ன இருக்கிறது?"
"காற்று"
"அதோ நூறடி உயரத்தில் இருக்கும் அந்தப் பானைக்குள்?"
"அதுவும் காற்றுதான் எமனாரே"
"அது எப்படி நசிகேதா? கீழே ஒரு காற்று மேலே ஒரு காற்று என்றாகுமா? இரண்டும் ஒரே காற்று தான் எனில் ஒன்று மேலும் ஒன்று கீழும் இருப்பானேன்? நீ கட்டிய பானைக்குள் புகுவானேன்? நீ கட்டியப் பானைக்குள் புகுந்தது எந்தக் காற்று? நீ கட்டிய பானைக்குள் இருப்பது காற்று எனும் பொழுது, காற்று அதிகமாக இருக்கிறது, பானை செய்ய முடியவில்லை என்கிறாயே?"
நசிகேதன் விழித்தான்.
எமன் தொடர்ந்து, "இதோ உன் அனுமதியுடன் இந்தப்பானையை உடைக்கப் போகிறேன்" என்றபடி நசிகேதன் குயைந்த இரண்டு பானைகளை வெவ்வேறு உயரங்களிலிருந்து உடைத்தான். "நசிகேதா, இந்தப் பானைகளுக்குள் இருந்த காற்று எங்கே சென்றது? மேலேயே கீழேயா?"
நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, புரிந்தது. காற்று என்பது பொதுவானப் பரவல். அவ்வப்போது பானைகளுக்குள் சிக்கிய காற்று போலவே, ஆன்மாக்களும் பிறவியில் சிக்குகின்றன"
"ஏழாவது பானையில் என்ன கோளாறு?"
"காற்று பலமாக வீசியதால் பானை நிலைக்கவில்லை"
"கற்பனைப் பானைக்கே இந்தக் கதியா?"
நசிகேதன் மீண்டும் எமனை வணங்கினான். "ஐயா, புரிந்தது. அடங்காத காற்றும் சில இடங்களில் அடங்கி நிற்கிறது. அந்த நேரம் அவ்விடத்தில் பானைக்குள் அடைபடுகிறது"
"நசிகேதா. அடங்குவதும் அடங்காததும் காற்றின் தன்மை. இப்பொழுது என்ன சொல்கிறாய்?"
"ஐயா. அதே போல், பேரான்மாவில் இணைந்த ஆன்மாக்களும் பிறக்க நேரிடும் என்று சொல்கிறீர்கள்"
"நன்று நசிகேதா. இதோ என் காலடி பட்டு உடையும் இந்தப் பானை போன்றது இறப்பு. அதோ உன் கைகளால் அற்புதமாகச் செய்யப்பட்டப் பானை போன்றது பிறப்பு. இரண்டிலும் தங்கிய காற்றின் தன்மையில் வேறுபாடில்லை. பலமான காற்றில் சிக்கியிருக்குவரை பானைக்குள் அடைபடுவதில்லை"
"அப்படியென்றால் பிறவா நிலை என்று ஏதுமில்லையா?"
"என்னருமை மாணவனே நசிகேதா, இறவா நிலை என்று ஏதும் உண்டா?"
நசிகேதன் எமனை வணங்கினான். "ஐயா, எதுவுமே நிலையில்லை என்று அறிந்துகொண்டேன், நன்றி" என்றான்.
"அது மட்டுமல்ல நசிகேதா. இறப்பும் பிறப்பும் விபத்துக்கள். பானை உடைந்ததும் காற்று தன் இயல்பான நிலையில் கலந்தது போலவே, உடலை விட்டுப் பிரிந்த உயிரானது தன் இயல்பான நிலையில் கலக்கிறது. பானை உடைந்து போனதே என்று வருந்துவதில் பயனே இல்லை. உள்ளிருந்த காற்று தன் இயல்பு நிலைக்குச் சென்றதை எண்ணி அமைதியடைவதே முறை. இயல்பான நிலையிலிருந்த காற்றைப் பானைக்குள் புகச் செய்தோமே என்று பிறப்பை எண்ணி வருந்துகிறோமா?"
"உண்மையே. பிறவியைக் கொண்டாடுகிறோம். பானைக்குள் புகுந்த காற்று வெளிப்படக் காத்திருப்பது போலவே உயிரும் தன் இயல்பு நிலையில் சேரக் காத்திருக்கிறது என்பதை அறியாமல், பிறப்பைக் கொண்டாடுகிறோம். இறப்பை எண்ணி வருந்துகிறோம்"
"கூட்டுக்குள் சிக்கிய உயிர், பேரான்மா எனும் பெரும் சக்தியின் அம்சம். அதை உணர்ந்தால் கூட்டின் மேன்மையை உணர முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியும். பிறப்பின் சிறப்பைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை நெறிகளை அறிய முடியும். வாழ்க்கை நெறிகளை அறிந்து கொண்டால் பற்றறுத்து, பேராசையொழித்து, தீக்குணம் தவிர்த்து நல்வழியில் வாழ முடியும். கூடு கலைந்த பின் சக்தியும் தொலையும் என்பதை உணர்ந்தால், கூட்டையும் உடன் வந்த சக்தியையும் தனக்கும் பிறருக்கும் பலனளிக்கும் விதத்தில் பாதுகாக்க முடியும்..
..நல்வழியில் நடந்த ஆன்மா பேரான்மாவுடன் கலக்கையில், இரண்டுமே வலுவாகிறது. பலமான காற்றில் கலந்திருக்கும் வரையில் அங்கே பானைக்கு இடமே இல்லை. மனித ஆன்மாவின் மகத்துவம் தன்னறிவில் அடங்கியிருக்கிறது. பேரான்மாவின் சக்தியே பிறவியைக் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ முடியும். மகத்துவம் குன்றிய ஆன்மாக்களால் பிறவிகள் நேரும். இது விபத்து என்றாலும், இந்த விபத்தில் பேரான்மாவும் அவ்வப்போது சிக்கும். அடங்கிய பேரலை போலவே"
"பேரான்மாவுக்கும் பிறவி உண்டா?" என்றான் நசிகேதன், சற்று வருத்தத்துடன்.
"மகான்களின் பிறவி ரகசியம் என்று வை. அவர்கள் பிறக்காவிட்டால் சாதாரண மனிதம் என்னாவது? பேரலையின் சக்தி, சிற்றலைகளை ஈர்ப்பது போலவே அவர்களும் சாதாரண மனிதர்களின் அறிவுக்கண்களைத் திறக்கிறார்கள்"
"புரிகிறது"
"அதனால்தான், பிறப்பைக் கொண்டாடுவது போலவே இறப்பையும் கொண்டாட வேண்டும் என்றேன். அன்றேல், இரண்டையும் பொதுவாக எண்ணி கலக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபுறங்கள். இரண்டுமே பானைக்காற்றின் இயல்பு நிலை. காற்றுக்காகக் காத்திருக்கும் பானைகளும், பானைகளுக்காகக் காத்திருக்கும் காற்றும் மட்டுமே நிரந்தரம். குயைந்தப் பானையோ கட்டிய காற்றோ அல்ல"
"ஐயா... நீங்கள் சொல்வது புரிகிறது. வாழ்நாளில் மேம்பட்டு வாழ்ந்தால் பலமானக் காற்றாகலாம். பேரான்மாவாக உலாவலாம். அற்பமாக வாழ்ந்தால் என்ன முயன்றும் பலனில்லை. சிதறிய அலை போலவே சுலபமாகப் பிறவியெடுக்க நேரிடுகிறது"
"ஆம்"
"அப்படியெனில்.. அப்படியெனில்... சொர்க்கம் என்று எதுவும் இல்லையா? என் தந்தையார் புரிந்த வேள்விகளும் சடங்குகளும் வீணா? எத்தனை தானங்கள் செய்தார்! எத்தனை யாகங்கள் செய்தார்! எத்தனை கோவில்கள் கட்டினார்! என் தந்தையாருக்குச் சொர்க்கம் தருவதாகச் சொன்னீர்களே? சொர்க்கம் செல்லும் வேள்விக்கான வழி முறைகளை முன்பு சொன்னீர்களே? வேள்விக்கு என் பெயரை வேறு வழங்கினீர்களே? எம்முலக மக்களெல்லாம் சொர்க்கத்துக்கான வழியென்று நம்பிப் புரியும் சடங்குகள் வீண் என்றால், அதை அவர்களுக்கு எப்படி அறிவிப்பது? அவர்களைத் தூண்டிவிட்டுக் கண்மூடித்தனங்களை ஆதரிப்போரை எப்படித் தடுப்பது? ஏழாவது பானையாகும் வழியை எம்மக்கள் அறிவதெப்படி?"
எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.
►