வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/09/23

உயிர்கள் சேருமிடம்


67
தன்னறிவைத் தாண்டியது ஆன்மா அதற்கப்பால்
உன்னறிய வேண்டியது பேரான்மா - மன்னுயிர்
பாடுபட்டுப் பாவுமிடம் பேரான்மா வேறில்லை
கூடுவிட்டுக் கூடு மிடம்.

   ன்னறிவுக்கு அப்பாலிருப்பது ஆன்மா; அதற்கப்பால் இருப்பது பேரான்மா. இதுவே உலகத்து உயிரெல்லாம் பாடுபட்டு அடையும் இடமாகும். உடலைப் பிரிந்த உயிர்கள் சேரும் இடம் வேறில்லை.


உன்னறிய: உணர்ந்து அறிய, அறிவுக்குப் புலப்படுகிற
பாவும்: பரவும், பற்றும்


    றந்த உயிருடன் தொடர்பு கொள்ள முடியுமா?

இறந்த உயிரை வரவழைத்துப் பேசுவதாகச் சொல்வது நூற்றாண்டுகளாக நடந்து வருவது. பித்தலாட்டக்காரர்களின் தனிப்பட்ட உரிமை என்றும் சொல்லலாம். எனில் இறந்த உயிரை "உணர" முடியுமா? இதைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறார்கள். யோசிக்கிறேன். telekinesis, super position போன்ற என் மூளைக்கெட்டாத நிறைய விவரங்கள் பித்தலாட்டத்துக்கும் அறிவியலுக்கும் இடைப்பட்ட தளத்தில் ஆராயப்படுகின்றன. கேள்விக்கு வருகிறேன்.

இறந்த உயிரை "உணர" முடியுமா? தெரியாது. விளக்கத்துக்கு அப்பாற்பட்ட சில நிகழ்ச்சிகள் என் வாழ்வில் நடந்திருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக என்னுடன் எரியும், யாருக்கும் சொல்லப் போவதில்லை. சிலவற்றைக் கதையாக எழுதியிருக்கிறேன். சுமார் ஏழு வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது இது.

நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். விமான நிலையத்தில் இறங்கி நடக்கையில் சற்றும் எதிர்பாராத வகையில், ஒரு நபர் என் கையைப் பிடித்து இழுத்தாற் போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு நடுத்தர வயதுக்காரர். என்னிடம் என்னவோ சொல்ல வந்தார். அவரால் சொல்ல முடியவில்லை. கெஞ்சுவது போல முகம். "ப்லீஸ்.. ப்லீஸ்" என்றாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. முகபாவத்தை என்னால் மறக்கவும் முடியவில்லை, விளக்கவும் முடியவில்லை. மிக ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் ஒருவர் எப்படியாவது வழி காட்ட வேண்டிக்கொள்வது போல், அத்தனை பரிதாபம். மூழ்கவிருப்பவர் கடைசி முறையாக காப்பாற்றுங்கள் என்று வாய் திறந்து பேசமுடியமல் கதறுவதை போல், அப்படி ஒரு பரிதாபம். ஒரு கணம் தான். பிறகு அந்த நபர் இயல்பாக நடந்து, என்னைக் கடந்து சென்றார்.

நண்பர் வீட்டுக்குப் போகும் வழியிலேயே இதை மறந்து விட்டேன். நண்பர் அவசரமாக எங்கேயோ வெளியே சென்றிருந்தார். நண்பரின் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். திடீரென்று அழத் தொடங்கினார். "எனக்கு இந்த ஊர் பிடிக்கலிங்க. இங்கே வாழப் பிடிக்கலிங்க.. என்னை இந்தியாவுக்கு அனுப்பும்படி உங்க நண்பரிடம் சொல்லுங்க. நான் என்ன சொல்லியும் கேட்க மாட்டேங்குறார். என்னைத் துன்புறுத்துறார். ப்லீஸ்..ப்லீஸ்" என்று அழுதார். சட்டென்று ஏர்போர்ட் மனிதரின் முகம் நினைவுக்கு வந்தது.

அத்துடன் நிற்கவில்லை நண்பரின் மனைவி. "காலையிலிருந்து என் அப்பாவைத் திட்டிக் கொண்டிருக்கிறேன்.. என்னை இப்படி மாட்டிவிட்டாரே? என் அப்பா உயிருடன் இருந்தால் இப்படி நடக்குமா? எனக்கு வேறு யாருமே இல்லையே! அண்ணா தங்கை அக்கா தம்பி என்று யாரும் இல்லை, அம்மாவும் போயாச்சு... அப்பா! அப்பா! இப்படி ஒரு இடத்தில் எனக்குக் கல்யாணம் செஞ்சு வச்சுட்டியே!" என்று விசும்பி விசும்பி அழுதார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. "இதை அவர்கிட்டே சொல்லிடாதீங்க.. எப்படியாவது உதவி செய்யுங்க ப்லீஸ்" என்று கெஞ்சினார்.

சிறிது நேரம் நண்பருக்காகக் காத்திருந்தேன். நண்பரின் மனைவி ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தாலும், 'நானா கிடைத்தேன?' என்ற எரிச்சல் தோன்றியது. உடனடியாக அங்கிருந்து விலக நினைத்தேன். அவருக்கு உதவுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நண்பர் திரும்பும் வரை சுற்றிக் கொண்டிருக்கலாமென்று சற்றுத் தொலைவிலிருந்த பெரிய வால்மார்ட் ஒன்றில் இலக்கில்லாமல் அங்கேயும் இங்கேயும் பார்த்துக் கொண்டிருந்த போது, மறுபடியும் என்னை யாரோ இழுத்தாற் போல்.. திரும்பிப் பார்த்தால் ஒரு பெரியவர். என்னவோ சொல்ல முயன்றார், முடியவில்லை. என்னைக் கையெடுத்துக் கும்பிட்டார். மறுபடியும் மறுபடியும் கும்பிட்டுக் கொண்டேயிருந்தார்.

எனக்கு மட்டுமல்ல, நானறிந்த சிலருக்கும் இதுபோல் விளக்க முடியாத, விபரீத எல்லையிலான, விளிம்பு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லை என்று ஒதுக்கிவிடக்கூடிய நிகழ்வு. "பகுத்தறிவு" என்று பார்த்தாலும் ஒதுக்கிவிடக்கூடிய நிகழ்வு.

இந்நிகழ்வுகளை ஒரு வட்டத்தின் புள்ளிகள் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால், திடீரென்று ஏதோ புரிந்தாற்போல் உணர முடியும். முடிந்தது. மனித சக்தி மகத்தானது, அளப்பரியது என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு, இந்தச் சிந்தனையை இன்னொரு பதிவில் முடிக்கிறேன். (அஞ்ச வேண்டாம், நான் சாதாரணத்திலும் சாதாரண மனிதனே!) :)

    "ஆறாவது குகைக்கு அப்பாற்பட்ட பயணத்தைப் பற்றிக் கேட்டாயல்லவா? சொல்கிறேன்" என்ற எமன் தொடர்ந்தான். "நசிகேதா! நீ புரிந்து கொண்டிருப்பது சரியே. தன்னறிவுக் குகை வரையில், உயிரானது உடலென்னும் கூட்டுக்குள்ளேயே பயணம் செய்கிறது. உடலைப் பிரிந்ததும், உயிர் திடீரென்று பரந்த வெளியில் சிக்கிய பறவை போலாகிறது. பறந்துப் பழகாதப் பறவைகளுக்கு என்ன நேரும் அறிவாயா?"

"கீழே விழும்"

"பறக்கத் தொடங்கிய பறவைக்கு அச்சமேற்பட்டால்?"

"கீழே விழும்"

"ஆம். பறந்து பழகாத பறவையும் பறக்க அஞ்சும் பறவையும் கீழே விழும். உயிர்ப்பறவைக்கு பறக்கும் பழக்கத்தைக் கொடுப்பது தன்னறிவு. தொடர்ந்து பயணிக்கவும் சேரவேண்டிய இலக்கைத் தேடிச் சேரவும் தேவையான வலிமையையும் திடத்தையும் தருவது மேம்பட்டத் தன்னறிவு. தேய்ந்த தன்னறிவினால் எந்தப் பலனும் இல்லை"

"உயிர்ப்பறவை கீழே விழும்"

"ஆம். அதைப்பற்றி மேலும் விவரமாகப் பிறகு சொல்கிறேன். பயணத்தைப் பற்றி முதலில் தெரிந்து கொள். தன்னறிவுக்கு அப்பாற்பட்டது ஆன்மா. உடலெனும் கூட்டைவிட்டுப் பிரிந்த உயிர் ஆன்மாவுடன் கலந்துத் தனி ஆன்மாவாகிறது. ஆன்மாவைக் கடந்து நிற்பது, அனைத்து உயிர்களின் ஆன்மா அல்லது பேரான்மா. உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே. பேரான்மாவுக்கு அப்பால் எதுவும் இல்லை"

"பேரான்மா என்றால்?"

"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி. தெளிந்த சிந்தையால் மட்டுமே எண்ணிப் புரிந்து கொள்ள முடிகிற சக்தி. மன்னுலக இயக்கங்களுக்கான சக்தி. அறிவுக்கண்ணுக்குப் புலப்படக்கூடிய சக்தி"

"இந்த சக்தியுடன் கலப்பது தான் சொர்க்கமா? பேரின்பமா? பிறவா நிலையா?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

20 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

"பேரான்மா என்பது அபரிமிதமான சக்தி. தெளிந்த சிந்தையால் மட்டுமே எண்ணிப் புரிந்து கொள்ள முடிகிற சக்தி. மன்னுலக இயக்கங்களுக்கான சக்தி. அறிவுக்கண்ணுக்குப் புலப்படக்கூடிய சக்தி"/

மிகப் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

இந்த மாதிரி அசாதாரணச் சம்பவங்கள் எனக்கு நிகழ்ந்துள்ளனவா என்று தேட வேண்டும். துணைக் கதையில் ஆர்வம் தூண்டி விட்டீர்கள். இறந்த உயிர் என்று இல்லாமல் உயிருடன் இருப்பவர்களே இன்னொரு இடத்தில் தோன்ற முடியும் என்று படித்திருக்கிறேன். அல்லது தோன்றியிருக்கிறார்கள் என்று படித்தேன்.டெலிபதி மாதிரி மனதை ஒருமுகப் படுத்துதலும் ஆழ்மனத்தின் சக்தி தூண்டப் பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று படித்துள்ளேன்.

vetha (kovaikkavi) சொன்னது…

வியந்து வாசித்தேன் விளங்க முற்படுகிறேன் .தொடருவேன் நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

பத்மநாபன் சொன்னது…

பேரான்மா ... இன்றைய பகுத்தறிவிற்கு எட்டுமா என்பது கேள்வி...அரசியலுக்காக சொல்லவில்லை... பகுத்தறிவு என்ற பெயரில் தன்னறிவை விட்டு விலகவே முயற்சி செய்கிறோம்..
எல்லாமே இணந்துதான் உள்ளது என்ற எளிய (மிக மிக எளிய ) தத்துவத்தில் நீங்கள் குறிப்பிட்ட நிகழ்வுகள் அனைத்தும் அர்த்தமுள்ள சம்பவங்கள் தான்.. என்ன? நமக்கு முடிச்சுப் போடும் பொறுமையும் நேரமும் இல்லாதது தான் காரணம்...
//"உயிர்ப்பறவை கீழே விழும்"// //உயிரின் இலக்கு பேரான்மாவுடன் கலப்பதே//
உரையாடல்கள் உயிர்ப்பாக இருக்கிறது...

geetha santhanam சொன்னது…

துணைக்கதை ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது உண்மை. எனக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் இல்லை என்றாலும் எப்போதும் இது போன்ற சம்பவங்களை அறிவதும் அசைபோடுவதிலும் அலசுவதிலும் ஆர்வம் அதிகம். அந்தப் பெண்ணின் அப்பாதான் உங்களிடம் கெஞ்சினாரோ?

Santhini சொன்னது…

/// ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக என்னுடன் எரியும், யாருக்கும் சொல்லப் போவதில்லை./// சொல்லப்படாத விஷயங்கள் மீதுதானே ஆர்வம் வரும். ஆர்வத்தை தூண்டிவிட்டு விட்டீர்கள். Are we going to get deep into "paranormal phenomenon" ? Will be interesting.

அப்பாதுரை சொன்னது…

வருக இராஜராஜேஸ்வரி, ஸ்ரீராம்.,kavithai, பத்மநாபன், geetha santhanam, Santhini,...

அப்பாதுரை சொன்னது…

ஸ்ரீராம், geetha santhanam,.. அசாதாரண நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும் ஏற்படுகின்றன. சிலரால் வட்டத்தை இயல்பாகவே பார்க்க முடிகிறது. சிலருக்கு புள்ளிகளைச் சேர்த்து வட்டம் போட நாளாகிறது. சிலருக்கு புள்ளிகள் மட்டும் தெரிகின்றன. சிலருக்குப் புள்ளிகள் கூடத் தெரிவதில்லை.

இதனால் ஒருவரில் ஒருவர் குறைந்தவராவதில்லை. அவரவர் வாழ்வின் நிறைவுகளின் அளவும் அலகுகளும் வேறுபடுகின்றன, அவ்வளவு தான்.

அப்பாதுரை சொன்னது…

வட்டம் போடும் பக்குவம் இயல்பாகவே எல்லோருக்கும் இருக்கிறது. மனித மூளை எந்த நிகழ்வையும் துண்டுகளாகவே அறிகிறது.. தேவைப்படும் பொழுது முழுமையான அறிவாகத் தருகிறது. நம் எல்லோருக்கும் networked thinking தான் இயற்கை. சில புறவிசைகள் உள் நோக்கிய சிந்தனைகளைத் தூண்டுவன என்பது எல்லோருக்கும் தெரிவதில்லை என்பது என் கணிப்பு.

அப்பாதுரை சொன்னது…

//அந்தப் பெண்ணின் அப்பாதான் உங்களிடம் கெஞ்சினாரோ?

தெரியாது. நிகழ்வுகளை இணைத்துப் பார்க்கும் பொழுது அவரவருக்கு என்ன தோன்றுகிறதோ அதுவே செய்தியாகிறது. 'அப்பா கெஞ்சினார்' என்றால் அது மூடநம்பிக்கையா, பயமா, பரிமாணம் கடந்த சாதாரண செய்தியா? 'கெஞ்சினார்' என்று கருதினால், 'அவருடைய அப்பா இங்கே எப்படி வர முடியும்? பார்க்க அப்பா போலவே இருந்தாரா? அவருடைய அப்பாவுக்கும் எனக்கும் என்ன தொடர்பு?' போன்ற பொருளற்றக் கேள்விகளில் சிக்க நேரிடும்.

//அசைபோடுவதிலும் அலசுவதிலும் ஆர்வம் அதிகம்

வட்டம் போடும் திறனை வளர்த்துக் கொள்ள இதுவே முதல் படி. விருப்பம் இருந்தால் சில பயிற்சிகளைக் கோடி காட்டுகிறேன். expectations இருக்கக் கூடாது. இருந்தால், அது 'உண்டுன்னா ஒரு அடி அடியும் வெங்கடாஜலபதி' கதையாகிவிடும்.

அப்பாதுரை சொன்னது…

Santhini, paranormal வாழைப்பழத்தோல் விவகாரம். உயிர்ப்பயணம், ஆன்மாவுடன் கலப்பு, பெருஞ்சக்தி போன்றவை சுலபமாகத் தடுக்கி விடக்கூடிய கற்கள் என்பது என் கருத்து. சிலருக்கு அவை நிழல் தரும் பாறைகள். சிலருக்கு அவை உயரப்பார்வைக்கான சாதனங்களாகின்றன. இன்னும் சிலருக்கு அவை ஏறிக் கூச்சலிட தற்காலிக மேடைகளாகின்றன. இறந்தபின் உயிருக்கு என்ன ஆகிறது என்பதை விவரிக்கும் கடோவின் மூன்றாம் பகுதியின் சில கருத்துக்களை என்னுடைய தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக ஏற்கமுடியவில்லை (அந்த வகையில் நானும் கண்மூடி தான்:). அதனால் normal என்ற வட்டத்தைப் பெரிதாக்கி அதற்குள்ளேயே என் கருத்துக்களோடு வளைய வர விரும்புகிறேன். இந்தப் பாடல் ஒரு தொடக்கம். இந்தப் பகுதி முடியும் பொழுது என்னுடைய சாயம் வெளுத்து விடும். நசிகேத வெண்பா ஏன் எழுதினேன் என்று தெரிந்து விடும்.

meenakshi சொன்னது…

வெண்பா நன்றாக இருக்கிறது.

துணை கதை மிகவும் சுவாரசியம். இதில் விமான நிலையத்தில் உங்களிடம் கெஞ்சிய நபரும், வால்மார்ட் கடையில் உங்களை கெஞ்சிய நபரும் வேறு வேறாக இருப்பினும் அவர்கள் மூலம் உங்களிடம் ஏதோ உதவியை எதிர்பார்க்கும் அந்த ஆன்மா, ஏன் அந்த பெண்ணின் கணவர் யாருக்கு பயப்படுவாரோ, யாரிடம் அடிபணிவாரோ அவரின் உதவியோடு தன் பெண்ணை காப்பாற்றி இருக்க கூடாது? ஒருவேளை உங்களால்தான் அந்த பெண்ணிற்கு உதவ முடியும் என்று அது உணர்ந்ததால், உங்களை கெஞ்சியது என்றால், நீங்கள் அதை பற்றி எதாவது யோசித்தீர்களா? எந்த வகையிலாது அந்த பெண்ணிற்கு உதவினீர்களா? இல்லை அந்த நிகழ்வு அத்துடன் முடிந்து விட்டதா?

இது போன்ற நிகழ்வுகளை என் வாழ்வில் நான் சந்தித்தது இல்லை. ஆனால் இது போன்ற விஷயங்களை ஆராய்வதில் மிகவும் ஆர்வம் அதிகம்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi. பயப்படுவது அடிபணிவது எல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யக்கூடியதாகத் தோன்றவில்லை.

ஆன்மா என்றா நினைக்கிறீர்களா? என்னிடம் உதவியை எதிர்பார்ப்பதாக நினைக்கிறீர்களா? ஏன்?

கதையா கேட்கிறீர்கள்? :)
சாதாரண நிகழ்வுகளில் அசாதாரணத்தை எல்லோராலும் மோப்பம் பிடிக்க முடியும் என்பதைச் சொல்ல வந்தேன். அவ்வளவு தான்.

Santhini சொன்னது…

"என்னோடு எரியும்", "சாயம் வெளுத்து விடும்" "ஏன் எழுதினேன் என்று தெரிந்து விடும்" ----------- என்ன ஆயிற்று அப்பாதுரைக்கு? ஒரே புதிர் மயமாய் ???

மோகன்ஜி சொன்னது…

பேரான்மா... விளக்கமும், வெண்பாவும் நன்றாய் அமைந்திருக்கிறது.

/"உயிர்ப்பறவை கீழே விழும்"/ காட்சியாய் விரியும் சொல்லாட்சி..
கடோவிலிருந்தே எழுதத் தோன்றுகிறது.
//கடோவின் மூன்றாம் பகுதியின் சில கருத்துக்களை என்னுடைய தனிப்பட்ட கொள்கைகள் காரணமாக ஏற்கமுடியவில்லை//

நண்பரின் கொள்கைக்கு பங்கம் வராமல் தவிர்க்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டிருந்தது போன்ற அமானுஷ்ய நிகழ்வுகள் சிலர்க்கு நேர்வதுதான். அதை வெளியே சொல்ல யத்தனிக்கும் போது கப்சா, அதீத கற்பனை,அந்த நிமிடத்து பிராபல்யம் கருதி என்று பிறர் கேலி செய்யக் கூடும் என்று வெளிப்படுத்த தயக்கம் ஏற்படும்.

இருப்பவர்களின் ஹிம்ஸையே தாளமுடியவில்லை, செத்தவன் ஹிம்சை வேறா என்று போய்க் கொண்டு தான் இருக்க வேண்டும் போல.

சிவகுமாரன் சொன்னது…

முதல் வேலையாய்,photoவை Download செய்து திருப்பிப் போட்டு பார்த்து ரசித்தேன். Genius களை தெரிகிறது.

சிவகுமாரன் சொன்னது…

"என்னுடன் எரியும்" - சுட்டது. என்னிடத்திலும் நிறைய இருக்கின்றன, சேர்ந்து எரிய,- காகிதங்களாகவும், கனவுகளாகவும்.

சிவகுமாரன் சொன்னது…

விட்டுப் போன எல்லாவற்றையும் படிக்க வேண்டும் . பிரமிப்பாய் இருக்கிறது. கொஞ்சம் கைதூக்கி விடுங்கள் அப்பாஜி.

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன்!
(ஜீனியஸ் களை - இதானே..?)
உங்களுக்குத் தராத கைகளா..?!

பெயரில்லா சொன்னது…

//'நானா கிடைத்தேன?' என்ற எரிச்சல் தோன்றியது.//

Muthal murai paditha bothu vanth sirippil, irukkum idam maranthu vittathu.