வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/09/04

கடோபனிஷது - இரண்டாம் பகுதி


    தொடர்வது, நசிகேத வெண்பா இரண்டாம் பகுதியின் மூல வடமொழி வடிவத்தின் தமிழ்ப் பெயர்ப்பு.

கடோவிலிருந்து, என்னாலியன்ற வரை, வரிக்கு வரி அப்படியே மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். சில பாடல்களுக்குக் கூடுதல் விளக்கமும் (என் கருத்தும்) சேர்த்திருக்கிறேன்.

அறிவற்றவர் அடையாளம்

1. நன்மை வேறு வழியிலும் இன்பம் வேறு வழியிலும் மனிதரை இழுக்கின்றன. இரண்டிலே, நன்மையை ஏற்பவருக்கு முக்தி கிட்டும்; இன்பத்தை ஏற்பவர்கள் அதைத் தவற விடுகிறார்கள்.

2. தன்னைச் சுற்றிய இன்பம் நன்மை இரண்டையும் வேறுபடுத்தி அறிந்தவர்கள், நன்மையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்; மூடரோ சேர்ப்பதையும் சேமித்துப் பெருக்குவதையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

3. நசிகேதா! அணிந்தாரைத் திசை மாறச்செய்யும் சங்கிலியை நீ ஏற்கவில்லை. இன்பங்களையெல்லாம் அறிந்து நிராகரித்து விட்டாய்.
    (பொற்சங்கிலி பற்றுதலுக்கான உருவகம். சங்கிலியால் கட்டுண்டது போல் பற்றுகளில் சிக்கித் துன்புறுவதைக் குறிக்கிறது எனலாம். எமன் நசிகேதனுக்குப் பொன்னாரம் தந்தது நினைவிருக்கலாம், இல்லையெனில் இங்கே படிக்கலாம்.)

4. அறிவு அறியாமை எனப்படும் இரண்டும் ஒன்றுக்கொன்று அப்பாற்பட்டவை; நசிகேதா, மெய்யறிவை நாடுகிற நீ ஆசைகளால் கவரப்படவில்லை என்பதை அறிந்தேன்.

5. அறிந்தோர் என்று தங்களை நினைத்துக் கொண்டு, அறியாமையின் நடுவில் இங்குமங்கும் குருடரைத் தொடரும் குருடர் போல உழல்கிறார்கள் அறிவற்றோர்.

6. நிலையானதென்று நினைத்துச் சிறுபிள்ளைத்தனமாகச் செல்வங்களையும் இன்பங்களையும் நாடுவோருக்கு பேரின்பப் பாதை தெரிவதில்லை. அவர்களுக்கு இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவிகளிலோ நிம்மதி கிடைக்காமல் மீண்டும் மீண்டும் என் வலையில் விழுவார்கள்.

ஆன்மாவை அறிந்தவர்

7. ஆன்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டவர்களோ அறிந்தவர்களோ மிகச்சிலரே; ஆன்மாவை அறியச் செய்யும் ஆசிரியரோ மிகச்சிலரினும் அரிதானவர்.

8. தன்னறிவைப் பலவாறு எண்ணிக்கொள்ளும் தாழ்ந்தோர் அதனைத் தெளிவாகச் சொல்ல இயலார்; ஆசிரியரல்லாதவரிடம் தன்னறிவின் விளக்கம் கிடைக்காது, ஏனெனில் தன்னறிவு அணுவினும் நுட்பமானது, விவாதித்து அறிநது கொள்ள முடியாதது.
    (இந்தப் பாடலுக்கான சமூக நோக்க விளக்கங்கள் மிக மிகச் சுவாரசியமானவை. 'தாழ்ந்தோர்' என்பது இங்கே 'அறிவில் குறைந்தோர்' அல்லது 'போலி அறிஞர்' என்ற பொருளில் வருவதாகவே நம்புகிறேன். என் கருத்தில், நிறையக் காவிகளும் அங்கிகளும் 'தாழ்ந்தோரில்' அடக்கம்)

9. உன்னுடைய மன உறுதியைத் தர்க்கங்களால் குலைக்கலாகாது; ஆழ்ந்த அறிவுள்ளவர்கள் விளக்கும் பொழுது தன்னறிவு தெளிவாகும். ஓ நசிகேதா! உன்னைப் போல் அறிவு விசாரணைப் புரிவோர்களைப் பெறுவோமாக.

10. நிலையான பிரம்மத்தை நானறிவேன்; நிலையற்றதை நாடுவோர் நிலையானதைப் பெற முடியாது. நசிகேதா! அதனால் நான் தீ வளர்த்து நிலையான பிரம்மத்தில் மனதை செலுத்தி, நிலையான அறிவைப் பெற்றவன்.
    (இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் 'தீ வளர்க்கும்' அக்னிஹோத்திரம் என்ற சடங்கு/பயிற்சியை, மனதை ஒருமைப்படுத்தும் சாதனமாகக் கொள்ளலாம்)

11. நசிகேதா! நீ அறிவுள்ளவன்! அண்டங்களின் ஆதாரமானவரும் நற்செயல்களுக்கு அளவில்லாத நற்பயன்கள் தருபவரும், பயமில்லாத அக்கரையில் இருப்பவரும், அனைவருக்கும் தஞ்சம் தருபவரும், வேதங்களால் போற்றப்படுபவருமான மகத்தானவரை அறிந்ததால் இன்பங்களையெல்லாம் மன உறுதியோடு நிராகரித்து விட்டாய்.
    ('பயமில்லாத எல்லை', இங்கே 'மரணபயமில்லாத' எமனுலகுக்கு அப்பாற்பட்ட கரையை/எல்லையைக் குறிக்கிறது; இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பவை தேவலோகம், பிரம்மலோகம் போன்ற பிறவாமைக்கு இடைப்பட்டதாகக் கருதப்படும் இடங்களாகும். வடமொழிப் பாடல்களுக்குப் பொருள் சொல்லியிருக்கும் அனேகரும் இங்கே ஆணை மையப்படுத்தியே பொருள் சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய சிற்றறிவுக்கு ஆண்/பெண் என்ற பாகுபாடு சொற்களிலிருந்து புரியவில்லை - சொற்களுக்கான வடமொழிப் பால் இலக்கணம் (லிங்கம்) சுத்தமாக நினைவில்லை. அதனால் நான் 'ர்' என்று பொதுவில் வைத்துவிட்டேன் :-)

12. மிகப் புராதனமானவரும், அண்டமெங்கும் நிறைந்தவரும், கண்களுக்குப் புலப்படாதவரும், இருண்ட குகையில் இருப்பவரும், அத்யாத்ம யோகத்தினால் மட்டுமே அறியக்கூடியவருமான தெய்வத்தை அறிந்தவர்கள், சுக துக்கங்களை நிரந்தரமாகக் கைவிடுவர்.
    (அத்யாத்ம யோகம் - தன்னை மையமாக வைத்து மனதைக் கட்டும் தீவிரத் தியானம்/யோகம்)

13. தன்னறிவான பிரம்மத்தை அறிந்து முழுமையாக ஏற்கும் மனிதர், நுட்பமான ஆன்மாவை அறிந்து அதனால் நிலையான இன்பத்தைப் பகுத்தறிந்து பேரின்பமடைவார்; அந்தப் பேரின்ப வாசல் நசிகேதனுக்காக திறக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.

நசிகேதனின் கேள்வி

14. தர்ம-அதர்ம, முறையான-முறையற்ற, காரண-காரிய, நிகழ்ந்த-நிகழாத போன்ற இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகத் தாங்கள் காண்பதை, எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்.

எமனின் பதில்

15. வேதங்களால் ஏற்கப்பட்டுப் போற்றப்படுவதும், தவங்களால் தீர்மானமாக மேற்கொள்ளப்படுவதும், பிரம்மசரியத்தைக் கடைபிடிப்பவர்கள் உரைப்பதுமான இலக்கினை உனக்குச் சுருக்கமாகச் சொல்கிறேன்: அது 'ஓம்' எனும் சொல்லாகும்.
    (பிரம்மசரியம் - மனதைக் கட்டி பிரம்ம அறிவைப் பெற முயலும் யோகம். பின்னாளில் திருமணமாகாதவரைக் குறிக்கும் சொல்லாகத் திரிந்தது விந்தை)

16. இந்தச் சொல்லே பிரம்மமாகும். இந்தச் சொல்லே மேன்மையானது. அழிவில்லாத இந்தச் சொல்லை அறிந்தவர், எதை விரும்பினாலும் அடைவார்.

17. இந்த ஆதாரமே மேன்மையானது; உயர்ந்தது; இந்த ஆதாரத்தை உணர்ந்து பெற்றவர்கள் பிரம்மலோகத்தில் போற்றப்படுவர்.
    ('ஆதாரம்' இங்கே 'ஓம்' என்ற சொல்லைக் குறிக்கிறது; ஓம் என்ற சொல்லே உயர்ந்த தஞ்சம் என்ற பொருளில் வருகிறது)

ஆன்மாவின் தன்மை

18. அறிந்தவர்களுக்கே புரியக்கூடியதான ஆன்மா பிறப்பதில்லை, இறப்பதில்லை; உருவாவதில்லை, உருவாக்குவதில்லை; பிறவாதது, நிலையானது, அனைத்துக்கும் அப்பாற்பட்டது, தொன்மையானது; உடல் அழியும் பொழுது கொல்லப்படாதது.
    ('அறிந்தவர்கள்' இங்கே தன்னறிவு பெற்றவரைக் குறிக்கும்)

19. கொல்வோர் தாம் கொல்வதாக எண்ணினாலும், கொல்லப்படுவோர் தாம் கொல்லப்படுவதாக எண்ணினாலும் - இருவருமே இதன் தன்மையை அறியாதவர்களாவர். இது கொல்லாது, கொல்லப்படாது.
    ('இது' ஆன்மாவைக் குறிக்கும்)

20. ஆன்மா நுட்பத்திலும் நுட்பமானது, மேன்மையினும் மேன்மையானது; மனித மனக்குகைக்குள் குடியிருப்பது. ஆசைகளையும் பற்றுக்களையும் துறந்துப் புலனடக்கி இதன் அமைதியை உணர்ந்தவர்கள், துயரத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
    ('துயரம்' இங்கே பிறவி அல்லது மரணத்தைக் குறிக்கிறது)

21. நகராமல் தொலைதூரம் போவதும், ஓய்வான நிலையிலும் எங்கும் நிறைவதும், மகிழ்வதும் மகிழாததுமான ஒளிமயமான தெய்வத்தை என்னையன்றி யாரறிவார்?
    ('தேவம்' என்ற வடமொழிச் சொல்லுக்கு ஒளி என்றும் பொருள். இரண்டாம் பாகப் பாடல்களில் தேவம் என்ற சொல் அடிக்கடி வருகிறது. 'என்னையன்றி யாரறிவார்?' என்பது இங்கே எமன் தன்னைத் தேர்ந்த ஆசிரியனாகத் தெரியப்படுத்திக் கொள்ளும் பொருளில் வருவதாக நினைக்கிறேன்)

22. எங்கும் நிறைந்த, மேன்மையான, உடலற்ற ஆன்மாவானது மாறி அழியும் உடல்களில் தங்கியிருப்பதை அறிவோர், துயரங்களிலிருந்து விடுபடுவார்.
    (சொற்செறிவு, பொருட்செறிவு நிறைந்த மிக அருமையான வடமொழிப் பாடல். 'மாறி அழியும் உடல்களில் தங்கியிருப்பது' சிந்திக்க வேண்டிய கருத்து)

23. ஆன்மாவைப் பிரசாரங்களினாலோ, விவாதங்களினாலோ, புத்தியினாலோ, கல்வியினாலோ அறியமுடியாது. தன்னைத் தீவிரமாகத் தேடுவோரிடம் ஆன்மா தன்னை வெளிக்காட்டும்.

24. கற்றவரானாலும் தீய வழிகளை ஒதுக்காத, புலன்களைக் கட்டாத, மனதை நிலைப்படுத்தாத எவரும் ஆன்மாவை அறிய முடியாது.
    (பெரும்பாலான காவிகளும் அங்கிகளும் கவனிக்க வேண்டியப் பாடலாகும். பாமரனுக்காக எழுதப்பட்டதாகத் தோன்றவில்லை)

25. பிராமணரையும் சத்திரியரையும் வெந்த அரிசியாகவும், மரணத்தை (என்னை) அதன் மேல் பதார்த்தமாகவும் கொள்ளும் ஆன்மாவை அறிவார் யார்?
    (ஆன்மா அனைத்தையும் கடந்தது என்ற பொருளில் வரும் பாடல். 'மரண தேவனான நானே ஆன்மாவுக்கு சாப்பாடு போல' என்கிறான் எமன். இந்தப் பாடல் எழுதப்பட்ட நாளில் பிறகுலங்கள் தோன்றவில்லை என்று நினைக்கிறேன். அல்லது பிற குலங்கள் ஒரு பொருட்டல்ல என்றும் எழுதப்பட்டிருக்கலாம் - வருந்தத்தக்கது. அரிசிச் சோறு எத்தனை தொன்மையானது என்றும் புரிகிறது.)


என் குறிப்பு:
    ரண்டாம் பகுதியைத் தமிழில் தர மிகவும் சிரமப்பட்டேன். மொழிச் சிக்கல் ஒரு புறம், கருத்துச் செறிவென்றாலும் தற்காலப் பொருத்தமின்மை இன்னொரு புறம் என்று திண்டாடினேன் என்பது உண்மை (பொருத்தமில்லை என்று தீர்மானிக்க நான் யார் என்று தோன்றினாலும், என் தனிப்பட்ட பிடிப்புகள் வேறு இடையில் தொந்தரவாக இருந்தன).

பாடல்களின் வரிசையை நிறைய மாற்றியுள்ளேன். சில பாடல்களை ஒதுக்கி விட்டேன். கவனித்திருப்பீர்கள். இருப்பினும், இரண்டாம் பகுதியின் அடிப்படைக் கருத்தைப் பிறழாமல் கொடுத்திருக்கிறேன் என்றே நம்புகிறேன். மிகையாக விலகியிருந்தால் மன்னிக்கவும்.

மூன்றாம் பகுதி சற்றே எளிமையானது. இது போன்ற சிக்கல்கள் அதிகமில்லை. (நல்ல வேளை :-)


நசிகேத வெண்பா மூன்றாம் பகுதி

5 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

ஆன்மா ..தன்னறிவு ... சுருக்க விளக்கங்கள் ... ஆத்திச்சூடி மாதிரி ஆன்மாச்சூடியாகக் கொள்ளலாம் ....

Thangavel Manickam சொன்னது…

அருமையான விளக்கம்.

R.Prabakaran சொன்னது…

அருமை.. தங்களது சேவை தொடரட்டும்

meenakshi சொன்னது…

இதுவரை நசிகேத வெண்பா மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆன்மாவை பற்றிய வெண்பாக்களும், விளக்கங்களும் மிகவும் பிரமாதமாக இருந்தது. பின்னூட்டத்திலும் உங்கள் கருத்துக்கள் மிகவும் அற்புதமாக இருந்தது. இதற்கு பின்னால் இருந்த உங்கள் உழைப்பு மிகவும் மெச்சத்தகுந்தது. வாழ்த்துக்கள்! இனியும் உங்கள் நல்ல முயற்சியில் சிறப்பாக வெளிவர இருக்கும் மூன்றாம் பாகத்தை நாளை முதல் படிக்க மிகவும் ஆவலாக காத்திருக்கிறோம். தொடருங்கள்!

ஸ்ரீராம். சொன்னது…

ஆறாம் தேதிதானே தொடர்வதாகப் போட்டிருந்தீர்கள் என்று ஆறாம் தேதி வந்தால் நாலாம் தேதியே தொடங்கி விட்டீர்களே என்று பார்த்தேன்! மூன்றாம் பகுதி படிக்க காத்திருக்கிறேன்.