வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/11/25

நசிகேதன் விடைபெற்றான்


76
காலனின் கால்பணிந்தான் தான்கற்றத் தத்துவமோ
ஞாலத்து மையகற்றும் ஞாயிறென்றான் - சால
அமைதி அறிவு அருளுடன் மீண்டான்
இமையான் இதயக் கனி.

   லகத்தின் இருளகற்றும் கதிரவனைப் போன்றதாகும் தான் கற்ற உண்மை, என்று சொல்லி எமனைப் பணிந்து வணங்கினான். மிகுந்த அமைதி அறிவு மற்றும் எமனின் அருளுடன் தன்னுலகம் திரும்பினான், எமனின் இதயத்தில் இடம் பிடித்த நசிகேதன்.


தத்துவம்: உண்மை, நுட்பமான அறிவு
சால: மிகுந்த
இமையான்: எமன்


    சாபம், சாபக்கேடு இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

நாம் கண்மூடித்தனமாக நடக்க வேண்டும் என்பது சாபம். நம் கண்மூடித்தனங்கள் நம் சந்ததிக்கும் பரவ வேண்டும் என்பது சாபக்கேடு. சாபத்தை உணர்ந்துச் சாபக்கேட்டைத் தவிர்ப்பவர்கள் மகான்கள். சாபம் என்பது தெரிந்தும் சாபக்கேட்டைத் தொடர்வோர் மலத்தினும் கேவலமானவர்கள். மதத்தினும் கேவலமானவர்கள் என்று சொல்ல வந்தேன், வசதியானப் பிழையாகி விட்டது.

மகான்களின் வெளிப்பாடுகளை மட்டும் பிடித்துக்கொண்டு, அவ்வெளிப்பாடுகளின் உந்துதலைப் புரிந்து கொள்ளாமல், கிடைத்தப் புதையலை இழக்கிறோம். உதாரணத்துக்கு, காந்தியிடமிருந்து உண்ணாவிரதம் சத்தியாகிரகப் பழக்கங்களைப் பிடித்துக் கொண்டோம். தன்மானம், அமைதியான எழுச்சி, எளிமை, பொதுநலக் கொள்கைத் தீவிரம், தியாகம் போன்றவற்றை உதறிவிட்டோம்.

எத்தனை மகான்கள் தோன்றினாலும் மனிதம் மந்தையினமாகவே இருக்கிறது. இதுவே நியதி என்று நினைக்கும் பொழுது கலக்கமாக இருக்கிறது. பாருங்கள், இத்தனை சூரியன்கள் நட்சத்திரங்கள் இருந்தும், அண்டத்திலும் இருளே அதிகம்.

எனினும், மந்தைகளைப் புரிந்துகொள்ள மகான்கள் தேவை.

    "ஐயா, அறிவிலே ஏழையாக இருந்த எனக்கு மெய்யறிவு எனும் பெருஞ்செல்வத்தை வழங்கினீர்கள். நீங்கள் சொன்னது போலவே அறிவுச் செல்வத்தின் சுமையை உணரத் தொடங்கிவிட்டேன். இதனைப் பகிர்ந்து கொண்டால் மட்டுமே சுமை குறையும் என்பதையும் புரிந்து கொண்டேன்.

நீங்கள் எனக்களித்த அறிவை எம்மவரிடம் சேர்ப்பேன். தன்னறிவின் தன்மையையும் பெரும்பேற்றின் உண்மையையும் எம்மவருக்கு எடுத்துரைப்பேன். உங்கள் அருளால் நான் கற்றத் தன்னறிவுப் பாடம், எம்முலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவல்ல ஆதவனாகும்.

பெரும் கலக்கத்தோடு இங்கு வந்தேன். நிறைந்த அறிவு, தெளிவு, மற்றும் அமைதியுடன் விடைபெறுகிறேன். எல்லாம் உங்கள் அருள்" என்று எமனைப் பணிந்து நன்றி சொன்ன நசிகேதன், புறப்பட்டான். மண்ணேக விரைந்தான்.

தன் பேரறிவுச் சுமை விலகியதை உணர்ந்தாலும், விடை கொடுத்த எமன் கலங்கினான். வாராது வந்த மாமணியைப் பிரிகிறேனே? இனி என் அறிவைப் புடம் போட இவனைப் போல் யார் வருவார்? இவன் உரையைக் கேட்டு உய்வார்களா இவனுலக மக்கள்? இவனுக்குப் பின் வரும் கண்மூடிகளை நினைத்தாலே கலங்குகிறதே? ஒருவேளை இவன் பேச்சைக் கேட்கத் தொடங்கிவிட்டால்? இவன் பேச்சைக் கேட்டு இவனுலகத்தாரும் மரண பயத்தை விடுத்தால் என்னாவது? கண்மூடித்தனங்களைக் கைவிட்டால் என்னாவது?... என்று பலவாறு எண்ணினான். தன் மாணவனின் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

நசிகேகதனுக்குப் பூமியில் காத்திருந்த வரவேற்பை எண்ணியக் காலனின் முகத்தில் கனிவும் புன்னகையும் நிறைந்திருந்தது.

மூன்றாம் பகுதி முற்றும்

2011/11/22

நசிகேதன் கதை நிம்மதி தரும்


75
அசிந்தவர் இல்லம் அமைதியுடன் ஆறும்
நசிகேதா நின்நூல் நவின்றால் - ஒசிவின்றி
இப்பாலில் உய்வாரே உள்ளவர் உன்கதையைத்
தப்பா துரைக்கும் தினம்.

   சிகேதா! உன் சிறப்பைச் சொன்னால், மரணம் உண்டான வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். (மேலும்) உயிரோடிருப்பவர்கள் உன் கதையைத் தவறாமல் உரைத்தால் மரணக் கலக்கமின்றி இம்மையிலே மேன்மையடைவார்கள் (என்றான் எமன்).


அசிந்தவர்: இறந்தவர்
ஒசிவின்றி: வருத்தமின்றி (ஒசிவு என்பது அழிவு, இழப்பைப் பற்றிய வருத்தம்)
இப்பாலில்: இம்மையில், இப்பிறவியில்


    ங்கேயோ எப்போதோ படித்தது: 'death leaves an ache hard to heal; love leaves a memory hard to steal'.

அழியப்போவதை எண்ணிக் கலங்கி, அழிக்க முடியாததை மறந்து விடுகிறோம். சற்றே இறுக்கமான எண்ணம் தான், எனினும் அடுத்த நிமிடம் நாம் இறந்தால், எத்தகைய சொத்தை விட்டுப் போகிறோம் என்று சிந்திப்போமா? (ஆசானும் நண்பருமான அரசன் என்னிடம் இந்தக் கேள்வியைக் காப்பீடு விற்பனையாளர் போல அடிக்கடி கேட்டதால், அவரோடு பேசுவதையே சில நாட்கள் நிறுத்தியிருந்தேன். அவர் கேள்வியைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை. இன்னும்.)

கொண்டு வந்ததென்ன, அதில் கொண்டு போவதென்ன என்ற வேதாந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உலகாயதப் பார்வையில் அந்தக் கேள்வி பொருத்தமே. 'கொண்டு போவதென்ன?' என்பதை மாற்றி, 'விட்டுச் செல்வதென்ன?' என்றச் சித்தாந்தப் பார்வையில் புரியும் காட்சி, நம்மில் பலரைத் திடுக்கிட வைக்கும் என்றே நினைக்கிறேன்.

'விட்டுச் செல்லும்' சொத்துக்களை, விலைமதிப்புக்கு உட்பட்டவை அப்பாற்பட்டவை என, இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இன்றைய உலக நிலவரத்தில் நம் சந்ததிகளுக்கு இரண்டுமே தேவை.

சந்ததி என்ற பார்வையிலும் சூட்சுமம் இருக்கிறது. ஊனில் கலந்தது சந்ததியா, உறவில் கலந்தது சந்ததியா, உலகம் முழுதும் சந்ததியா? இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதப் பார்வையில் அணுகுவார்கள் என்றே நினைக்கிறேன். தவறில்லை. பொருளுக்கேற்ற மருளும் தெருளும் அவர்களின் சிந்தையிலும் செயலிலும் வெளிப்படுகின்றன.

உள்ளிறங்கிய உலகத்தை விட வெளியேறும் உலகம் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களைச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வதில் குறியாக இருக்க வேண்டும்.

விலை மதிப்புக்கு அப்பாற்பட்டவை என்றால் மிகப் பெரும் சாதனைகளாக இருக்க வேண்டியதில்லை. எனில் இவை யாவை?

கோவில் கும்பாபிக்ஷேகம் பூஜை விரதம் புண்ணியச்சடங்குகளில் மட்டுமே இவை உண்டு என்று எண்ணிச் செயல்படுவோர், பெரும் ஏமாற்றத்தை எதிர்நோக்கிப் புரியாமலே பயணிக்கிறார்கள். பேதைகள்.

தன்னைச் சார்ந்தவர்களின் நலனையும் உலக மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படுவோர், சரியான பாதையில் பயணிக்கிறார்கள்.

மேம்பாடு, தான தருமங்களால் மட்டுமே வரவேண்டியதில்லை. அன்பு, கருணை, நல்லெண்ணம், கல்வி, உதவி, வளம், அளவான ஆசை, அளவுக்குட்பட்ட தேவை, மறுமலர்ச்சி, ஆக்கம், அமைதி என்று எத்தனையோ வகையில் மேம்பாட்டை அணுகலாம். அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ப 'விட்டுச் செல்ல வேண்டிய' இத்தகைய சொத்துக்களைத் திட்டமிட்டு, அவற்றைச் செயலாற்றும் திறனும் வயதும் இருக்கும் பொழுதே செய்து முடிக்க வேண்டும்.

விலைமதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களை வழங்க வேண்டியதில்லை; தடுக்க நினைத்தாலொழிய அவை தானாகவே சந்ததிகளிடம் சேருகின்றன. வீடு மனை பணம் பண்டம்... தடுத்தாலும் இச்சொத்துக்கள் வழக்கு நீதிமன்றம் என்று கிளம்பி, சந்ததிகளைச் சேர்ந்துவிடும்.

விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களோ தானாகச் சந்ததிகளுக்குச் சேர்வதில்லை. அன்பு கருணை புன்னகை பொறுமை உதவி தியாகம் நன்னெறி கல்வி அறிவு அடக்கம் அமைதி கூட்டுறவு நேயம்... எந்த நீதிமன்றமும் இவற்றைச் சந்ததிகளுக்குப் பிரித்து வழங்க முடியாது. சேர்ப்பதும் கொடுப்பதும் நம் கையில், நம் முயற்சியில், நம் தீவிரத்தில் இருக்கிறது.

விலைமதிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சிறிய சொத்தை விட்டுச் செல்வது என்று நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துச் செயலாற்றினால், அடுத்த நூறு வருடங்களில் மனிதம் எத்தனை தூரம் நிறைவை நோக்கிப் பயணித்திருக்கும் என்பதைக் கற்பனையிலும் கட்ட முடியவில்லை.

கண்ணதாசன் தனக்கு எழுதிக்கொண்ட இரங்கற்பாவிலிருந்து:
பாட்டெழுதிப் பொருள்செய்தான் பரிதாபத்
   தாலதனைப் பாழுஞ் செய்தான்;
கேட்டழுத பிள்ளைக்கோர் சிறுகோடும்
   கீறாமற் கிளைமு றித்தான்;
நாட்டழுகை கேளாமல் நந்துயரும்
   காணாமல் நமனெனும்பேய்
சீட்டெழுதி அவன் ஆவி திருடியதை
   எம்மொழி யாற்செப்பு வேனே!
பொய்யரையும் இசைபாடிப் புல்லரையும்
   சீர்பாடிப் புகழ்ந்த வாயால்,
மெய்யரையும் வசைபாடி வேசையையும்
   இசைபாடி விரித்த பாவி,
கையரையும் காசின்றிக் கடைநாளில்
   கட்டையிலே கவிழ்ந்த தெல்லாம்
பொய்யுரையாய்ப் போகாதோ புத்தாவி
   கொண்டவன் தான் புறப்ப டானோ!
'ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் பிழைத்தோம், இனி இப்படியே வாழ்ந்து முடிப்போம்' என்ற எண்ணமே பெரும்பாலும் நம்மைக் கட்டிப் போடுகிறது. வெட்கக்கேடு, எனினும் இது இயல்பானது என்பதை அறிந்து, தன்னை மறுக்கும் தன்மை பெற வேண்டும். தவறினால் புத்தாவியை எண்ணிப் புலம்பத் தெரிய வேண்டும் :)

சாதனை என்பது உள்பார்வை என உணர்ந்து கொண்டக் கணத்தில், வாழ்வில் நிறைவை நோக்கி அடியெடுக்கிறோம். அவ்வாறு அடியெடுக்கச் சாக்குகளும் புகார்களும் சடங்குகளும் சொன்னோமானால், இன்னும் உணரவில்லை என்றே பொருள்.

நானும் இன்னும் உணரவில்லை.

    "நசிகேதா! இன்னொரு வரமும் தருகிறேன். நம்மிடையே நடந்த உரையாடலை விரிவாகப் படித்து விவாதித்து உன் சிறப்பை எடுத்து சொன்னால், மரணம் ஏற்பட்ட வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது இம்மை வாழ்விலே மேன்மையுறுவார்கள்" என்ற எமன், நசிகேதனுக்கு வாழ்த்துச் சொல்லி விடை கொடுத்தான்.

2011/11/18

உண்மையை உலகுக்கு உரை


74
உன்னய்யன் உம்மக்கள் உய்யவே மெய்யறிந்தாய்
பொன்னனையப் பூவே புறப்படு - இன்மொழியில்
மண்பாண்டம் மண்ணாகும் மாமரமும் வித்தாகும்
நுண்மையினை நாடறியச் சொல்.

   பூவின் மென்மையும், பொன்னின் மேன்மையும் கொண்டவனே! உன் தந்தையும் உன்னுலக மக்களும் உயர்வடைய வேண்டியே நீ மெய்யறிவு பெற்றாய். மண்ணால் உருவான பானை உடைந்து மண்ணிலே கலக்கிறது. மிகப் பெரிய மரமும் விதையிலே அடங்குகிறது. இந்த நுட்பத்தை, இனிமையான தமிழ்மொழியில் அனைவரும் அறியுமாறு எடுத்துச் சொல்லப் புறப்படு (என்றான் எமன்).




   ரு சிறந்த ஆசிரியருக்கு ஒரு சிறந்த மாணவர் நன்றிக்கடன் செலுத்துவது எப்படி? தான் பெற்ற அறிவை பிறருக்கு வழங்குவது மட்டுமே, ஒரு மாணவர் தன் ஆசிரியருக்குச் செய்யும் சிறப்பான நன்றியாகும்.

ப்லேடோவிடம் பயின்ற மாணவர்கள் கல்வி முகாம் முடிந்து விடைபெற வந்தார்கள். ஒவ்வொருவராக ப்லேடோவை வணங்கிப் பல வழிகளில் நன்றி சொன்னார்கள். பூச்செண்டு பொன்னாடை பழங்கள் என்று பரிசுகளையும் காணிக்கைகளையும் வழங்கி, கண்ணீர் மல்க விடை பெற்றார்கள்.

ப்லேடோவின் முகத்தில் சலனமே இல்லை. அமைதியாக விடை கொடுத்தார். மாணவர்கள், தங்கள் ஆசிரியர் பிரிவுத் துயரினால் பேச மறுக்கிறார் என்று நினைத்தார்கள்.

சற்று நேரம் பொறுத்து அரிஸ்டாடில் வந்தார். கையில் பரிசோ பூச்செண்டோ பொன்னோ எதுவும் கொண்டு வரவில்லை. ப்லேடோவுக்குப் பொன்னாடை போர்த்தவில்லை. ஒரு சிறு பழம் கூடத் தரவில்லை. தன் ஆசிரியரை வணங்கினார். பிறகு விரிவாக நன்றி சொல்லத் தொடங்கினார். அவர் நன்றி சொல்வதைக் கேட்டப் பிற மாணவர்கள், 'என்ன இது? அரிஸ்டாடில் என்னவோ உளறுகிறாரே!' என்று அதிர்ச்சியில் வெலவெலத்துப் போனார்கள்.

ஆனால் ப்லேடோவோ மெய்சிலிர்த்துக் கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டிருந்தார். அதுவரை அமைதியாக இருந்த ப்லேடோ, மகிழ்ச்சியில் கூத்தாடத் தொடங்கினார். ப்லேடோவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஓடியது. தன் மாணவன் என்றும் பாராமல் அரிஸ்டாடிலை வணங்கினார் ப்லேடோ. பிற மாணவர்களுக்கு எதுவும் புரியவில்லை.

அரிஸ்டாடில் விரிவாக நன்றி சொன்னது, ப்லேடோவின் ஆசிரியரான சாக்ரேட்சுக்கு.

தன் மாணவரோடு கல்வி நின்று விடாது தொடர்ந்து பரவ வேண்டும் என்றே ஒவ்வொரு சிறந்த ஆசிரியரும் எதிர்பார்க்கிறார்.

    யா, உங்களிடம் ஒன்று கேட்கலாமா? என்றான் நசிகேதன்.

"கேள்.. இன்னும் ஏதாகிலும் ஐயமுள்ளதா?" என்றான் எமன்.

"என்னை எதற்காகத் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக்கு மெய்யறிவு பெறும் தகுதியுள்ளதா? எனக்கு இத்தகைய மெய்யறிவை வழங்கிய உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய இயலும்?"

எமன் சிரித்தான். "நசிகேதா.. அறிவு என்பது அற்புதமான பொக்கிஷம். அனைவரும் பெறக்கூடியப் பொக்கிஷம் என்றாலும், ஒரு சிலரே தேடிப் பெறுகிறார்கள். அனைவரும் பெற வேண்டிய அறிவை ஒரு சிலரே பெற்றால்... அறிவைப் பெற்றவர்களுக்கு அதுவே பாரமாகி விடுகிறது. நான் சொல்வது புரிகிறதா?"

"நன்றாகப் புரிந்தது. பரவலாகப் பயன் தர வேண்டிய செல்வத்தை முடக்கிப் போட்ட உணர்வு"

"ஆம். புறம் சார்ந்த சாதாரண அறிவே அப்படி என்றால், அகம் சார்ந்த தன்னறிவு பெற்றவர்களின் நிலை என்ன?"

"தான் பெற்ற செல்வம் பிறரும் பெற வேண்டும் என்றே விரும்புவார்கள்"

"மிகச்சரி. நசிகேதா, நீ அப்படிப்பட்டவன். உன் தந்தையின் வேள்வியில் தானப் பசுக்களைப் பற்றியும், தானம் பெற வந்தவர்களைப் பற்றியும், உன் தந்தையின் சுயநலம் தொட்டப் பாசாங்குத் தானங்களையும் பற்றியும், பசும்பிள்ளையான உன் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்தேன். உன் விவேகம் என்னை வியக்க வைத்தது.

அதன் பிறகு என் இல்லத்தில் உன்னைச் சோதித்தேன். நீ கேட்ட வரத்திலும் கேட்ட விதத்திலும் உன் மன உறுதி எனக்குப் புரிந்தது. பூவைப் போன்ற மென்மையான மனமுடையவன் நீ என்று வேள்வியின் போது பிறருக்காக இரங்கியதில் அறிந்து கொண்டேன். உன் மன உறுதியும் அறிவின் மேன்மையும் பொன்னை விடச் சிறந்தது என்பதை உன் நேடலில் அறிந்தேன். நான் பெற்ற அறிவை உனக்கு வழங்குவதால் என் அறிவுக்குப் பெருமை என்று உணர்ந்தேன். உன் வழியாக இந்த மெய்யறிவு உன்னுலகத்தோர் பெறட்டும் என்று எண்ணினேன்."

"மிகவும் நன்றி" என்றான் நசிகேதன்.

எமன் தொடர்ந்தான். "மண் மட்டுமே நிஜம். பானையல்ல. பானையாகப் பார்த்தால் மண் தெரிவதில்லை. மண்ணாகப் பார்த்தால் பானையும் தெரியும் மண்ணும் தெரியும். விதையாகப் பார்த்தால் விதையும் புரியும் மரமும் புரியும் அல்லவா? பேரான்மாவிலிருந்து பிரிந்த உயிர், உடலாகவும் உயிராகவும் விளங்கினாலும் அது பேரான்மாவே.

இதைப் புரிந்தவர்கள் மனதில் கலக்கமே இருப்பதில்லை. கண்மூடித்தன எண்ணங்கள் ஓடுவதில்லை. சலனங்கள் பாதிப்பதில்லை. கிளை, இலை, மலர், கனி என்பவை நிலைகள் - நிலையற்ற நிலைகள் - என்ற உணர்வு அவர்கள் மனதில் பரவுகிறது. நிலை மாற்றங்களினால் பாதிக்கப்படாமல், அமைதியுடன் நன்னெறியைப் பற்றி வாழ்கிறார்கள். பிறப்பைப் பற்றியும் இறப்பைப் பற்றியும் எந்த விதக் கவலையும் இருப்பதில்லை. சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் போன்றவற்றைப் பொருட்படுத்துவதில்லை. இருமைகளின் உள்ளே ஒருமையும், ஒருமையின் உள்ளே பன்மையும் இருப்பதை உணர்ந்து சிறப்பாக வாழ்கிறார்கள்.

நீ அறிந்து கொண்ட இந்த உண்மையை உன் உலகத்தாரும் அறிய வேண்டும். உன் தந்தையும் உன் மக்களும் உன்னால் உயர்வடைய வேண்டும்.

இனி நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே. உயிர்ப்பயண நுட்பத்தை, இனியத் தமிழ்மொழியில் உலகத்துக்கு எடுத்து உரைப்பதே இனி நீ முடிக்க வேண்டிய செயலாகும். புறப்படு, என் அருமை மாணவனே!" என்றான் எமன்.

நசிகேதன் மீண்டும் எமனுக்கு நன்றி சொன்னான்.

நன்றியை ஏற்றுக் கொண்ட எமன், "நசிகேதா, உன் ஆர்வத்தையும் உழைப்பையும் மெச்சினேன். உன் உயர்ந்த நோக்கத்தையும் அறிவேன். உன் விருப்பம் போல உம்மக்கள் உயர்வடைய, இன்னொரு வரமும் வழங்குகிறேன்" என்றான்.

2011/11/12

ஓருடலில் அறுவருண்டு


73
ஒருவர் ஒருநூறு என்றுரைப்பேன் என்னுள்
கருமுதல் ஆறுவரைக் கண்டேன் - உருவானச்
சேற்றைக் கணக்கிடப்போம் சேர்ந்திடும் பேரான்மக்
காற்றுக்கு ஏது கணக்கு?

   டல் என்பது சேற்றினாலான பானை போன்றது. உள்சேர்ந்த பேரான்மாவோ காற்றைப் போன்றது. பானைகளைக் கணக்கிடலாம், அவை கட்டியக் காற்றைக் கணக்கிடக் கூடுமோ? (எனினும்) அனைத்துமே பேரான்மா என்பதால் உடலில் தோன்றி மறைவது ஒருவர் எனலாம், ஒருநூறு என்றும் கூறலாம். தோன்றி மறையும் ஆறுபேர் என்னில் உண்டென்பதை நிச்சயம் அறிவேன் (என்றான் நசிகேதன்).



    ந்தக் கேள்விக்கும் நேர்விடை அளிக்காமல், சரியான விடையளித்தது போன்றத் தோற்றத்தை உண்டாக்குவது ஒரு கலை. 'mba answer' என்பார்கள்.

'mba answer' என்றால் என்ன தெரியுமா? 'it depends' என்பதே!
       : நீங்கள் சொல்வதையெல்லாம் செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா?
       : it depends! பொருட்களின் தரம், விலை, மக்களின் விருப்பம், வியாபாரத்தில் போட்டி இவை எல்லாவற்றையும் பொறுத்தது
       : அது தெரியும்.. இருந்தாலும் உங்கள் பரிந்துரைகளை நீங்கள் சொன்னபடி செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா?
       : it depends! நாமறியாத வேறு காரணங்களையும் பொறுத்தது
       : அது எனக்குத் தெரியாதா? நாமறியாத காரணங்கள் யாவை?
       : it depends! அறியாதவை என்பது தொழில்நுட்பம், வளர்ச்சி, அரசாங்கக் கொள்கைகள், தடங்கல்கள் இவற்றைப் பொறுத்தது
       : அது தெரிந்து தானே உங்களை இத்தனை பணம் கொடுத்து வேலைக்கு வைத்தேன்? எல்லாமே இதைப் பொறுத்தது அதைப் பொறுத்தது என்றால் இந்தப் பரிந்துரைகளினால் என்ன பலன்?
       : it depends!


நமக்குத் தெரிந்ததைச் செய்தியாகவும் தந்திரமாகவும் நமக்கே பரிந்துரை செய்து, நம்மிடமே பணம் வசூலிப்போர் இருக்கிறார்களே, அற்புதமான கலைஞர்கள்! mba, வக்கீல், மதவாதி, அரசியல்வாதி... இவர்களை இந்தக் கலையின் விற்பன்னர்கள் எனலாம். இவர்களில் யார் மோசமானவர்கள்? it depends! அப்படியெனில், mbaக்களையும் வக்கீல்களையும் நம்பக்கூடாதா? it depends!

   இந்தியா திரும்பிய பதினைந்து வருடங்களுக்குள் பெரும் புரட்சியை உருவாக்கிய மகாத்மா காந்திக்கு, அமெரிக்க டைம் வார இதழ் '1930ம் வருடத்தியச் சாதனையாளர்' பட்டத்தை வழங்கிக் கௌரவம் தேடிக்கொண்டது. பிரிடிஷ் அரசு அவரை கௌரவிக்க விரும்பி இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தது.

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றைத் துவக்கிப் பெரும் மதிப்பைத் தேடிக்கொண்டக் கதர் வேட்டியைக் காண பிரிடிஷ் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினார்களாம். 'ஆட்டுப்பாலும் வேர்கடலையும் தின்று ராட்டை சுற்றும் பொக்கைவாயனா நம் அரசை எதிர்க்கிறார்' என்று அவர்களுக்கு ஆச்சரியம். ஏதோ பஞ்சைப் பராரி என்று எண்ணிய பொதுமக்களுடன், பிரிடிஷ் பத்திரிகையாளர்களும் சமூகப் பிரமுகர்களும் கூடியிருந்தனராம்.

ஒரு பிரமுகர் காந்தியைக் கேட்டாராம்: "மேற்கத்திய நாகரீகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?"

"நல்ல யோசனை என்று நினைக்கிறேன்" என்றாராம் காந்தி.

கூட்டத்தில் நரம்பு ஒடுங்கியது போல் அமைதி. காந்தியின் நான்கு சொற்களில் அணுகுண்டின் தாக்கம் இருந்ததைப் புரிந்து கொண்ட கூட்டம், அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்ததாம். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று கண்ணாடிப் பார்வையுடன் இதைப் பற்றி விரிவாக எழுதியதாம். 'கேள்விக்கு புது வடிவம் கொடுத்த காந்தி' என்று அவரைப் பற்றி எழுதி, 'மேற்கத்தியோர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, தாம் நாகரீகமானவர்கள் தானா என்பதே' என முடித்ததாம்.

   திரையுலகில் ஆசானாக மதிக்கப்படும் கே.பாலசந்தர் சொன்னதாக, என்றோ படித்த நினைவு. இன்றைக்குத் திரைப்புகழின் உச்சத்தில் இருப்பவர்கள், அன்றைக்கு பாலசந்தர் பள்ளியின் கற்றுக்குட்டி மாணவர்கள். காட்சியை விளக்கி நடிக்கச் சொல்வாராம். இரண்டு மாணவர்களும் திணறுவார்களாம். எத்தனையோ ஒத்திகைகளுக்குப் பிறகு, கிடைத்தது போதும் என்றுக் காட்சியைப் படம் பிடிப்பாராம்.

பாலசந்தர், இன்னொரு நடிகருக்கும் ஆசான். மறைந்தக் கலைமாமணி நாகேஷ். ஒரு காட்சியை விளக்கிச் சொன்னதும் அதை மூன்று நான்கு விதங்களில் நடித்துக் காட்டி, 'பாலு, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை வச்சுக்குவோம்' என்பாராம் நாகேஷ். 'யார், யாருக்கு ஆசான்?' என்று புரியாமல் வியந்து, எதை எடுப்பது எதை விடுவது என்று தவிப்பாராம் பாலசந்தர்.

   எந்தக் கேள்விக்கும், விளக்கெண்ணை கலந்த வெண்டைக்காய் சேப்பங்கிழங்குக் கூழில் ஊறிய வாழைப்பழத் தோலாக விடையளிப்போர் ஒரு வகையினர்; ஒரு விடைக்கு நான்கு விடைகளாக வழங்கி, கேட்டவரைத் திணற அடிப்போர் இன்னொரு வகையினர்; கேட்டவரே தன் கேள்வியை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் நுட்பமும் தெளிவும் ஒருங்கே அமைந்த விடையளிப்போர் மற்றொரு வகையினர்.

எந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், அதே நேரம் தேவைப்படும் பொழுது மிகத் தெளிவாக நடந்து, இம்மூன்று வகையிலும் தேவைக்கேற்பப் புகுந்து வெளிப்படுவோர், பொதுவாக வாழ்க்கையில் மிகுந்த வெற்றியை அடைகிறார்கள். குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் இதைக் கவனத்தில் கொள்வோர், சச்சரவு சிக்கல்களினின்று சுலபமாக விலகி, நம்பிக்கையின் சின்னமாக நடந்து கொள்கிறார்கள். தனக்கும் பிறருக்கும் அமைதியையும் நிறைவையும் தருகிறார்கள்.

    சிகேதன் சிந்தித்தான். என்ன இப்படிக் கேட்கிறாரே ஆசான்? சிறப்பான பதிலைச் சொல் என்கிறாரே? இருப்பது ஒரே ஒரு பதில் தானே? எமன் கேட்ட கேள்வியை மீண்டும் மனதுள் நிறுத்திப் பார்த்தான். உன்னில் பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர்? உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார்? எத்தனை பேர்? மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைப் பலவாறு சிந்தித்தான்.

மெல்லக் கனைத்து, "ஐயா.. உங்கள் கேள்வி அன்னையின் அன்பைப் போன்றது" என்றான்.

எமன் சிந்தித்தான். அன்னையின் அன்பைப் போலவே தன்னுடைய கேள்வியும் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை மறைமுகமாகச் சொல்கிறானா என் மாணவன்? "நசிகேதா, ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்றான்.

"ஐயா.. அன்னையின் அன்பு வற்றாதது. எந்த நிலையிலும் தாயிடம் அன்பு சுரந்து கொண்டே இருக்கிறது. அது போல உங்கள் கேள்வி என் சிந்தனைத் திறனைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது" என்றான்.

எமன் மகிழ்ந்தான். "அன்னையின் அன்பு, என் கேள்வித்திறனை விடப் பல மடங்கு உயர்ந்தது. என் கேள்விக்கு எல்லையும் பதிலும் உண்டு. அன்னையின் அன்புக்கு எல்லையோ பதிலோ இல்லை" என்றான். "இருப்பினும் நன்றி".

நசிகேதன் எமனை வணங்கினான். தொடர்ந்துச் சிந்தித்தான். நசிகேதன் சிந்திப்பதைக் கண்டு, "என் கேள்விக்கு பதில் தெரியவில்லையா?" என்றான் எமன்.

"சிறு குழப்பம்" என்றான் நசிகேதன்.

"என்ன குழப்பம்?"

"ஒரு பதிலைச் சொல்வதா? ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைச் சொல்லி உங்கள் தேர்வுத் திறனைச் சோதிப்பதா? அதில்தான் குழப்பம்"

"ஆகா!" என்றான் எமன். "சொல், நசிகேதா. என் கேள்விக்கென்ன பதில்? அத்தனையும் சொல், என் அன்புக்குரியவனே!"

"அனைத்துமே பேரான்மா என்பதை மிகத் தெளிவாக விளக்கினீர்கள். பிறவாது, மட்கி மறையாது, பண்டம் துறந்தும் தளிரும் முகுலம் என்றீர்கள். சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும் கட்டுமோ கொட்டுமோ காற்று எனக் கேட்டதும் நீங்களே. மன்னுயிர் பாடுபட்டுப் பாவுமிடம் பேரான்மா, வேறில்லை கூடுவிட்டுக் கூடுமிடம் என்று அருமையாக விளக்கியதும் தாங்களே. எனில் உயிர்கள் பிரிவதும் கூடுவதும் பேரான்மாவில் தான் என்பது தெளிவாகிறது. எல்லாமே பேரான்மா எனில் பிறப்பவர் இறப்பவர் எத்தனை என்ற கேள்விக்கு நான் விடை சொன்னால் உங்கள் பாடங்களை முரணாகப் புரிந்து கொண்டவன் ஆவேனே?

எத்தனை பேரான்மாக்களின் அம்சம் என்பதை எப்படிக் கணக்கிடுவது? கட்டுமோ கொட்டுமோ காற்று என்று நீங்கள் சொன்னது போல, காற்றைக் கட்டி வைக்க முயன்றுக் கட்டிய சேற்றை வேண்டுமானால் கணக்கிடலாம். இத்தனை பானைகள் குயந்தேன் எனலாம். பத்து பானைகள் குயந்தேன் என்று சொன்னால் அதற்குள் பத்து காற்றுகள் வைத்திருக்கிறேன் என்று பொருளாகுமா? ஒவ்வொரு பானையும் வேறு என்றாலும், ஒவ்வொரு காற்றும் வேறாகுமோ?

அனைத்துமே பேரான்மா என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. சிற்றலை பேரலையிற் சேரும், சிதறினால் ஒற்றியே நீராய் ஒடுங்கும் என்று நீங்கள் சொன்னது போல பேரான்மாவில் கலக்க முயன்று தோற்ற ஆன்மாக்கள், பிறக்கின்றன. ஏழாவது பானையின் நிலையைப் பற்றிச் சொன்னீர்கள். பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி விழுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். ஆக, பேரான்மாவிலிருந்தே பிறவியும் மரணமும் ஏற்படுகின்றன.

எனில், பேரான்மா என்பது ஒரு பெருஞ்சக்தி என்றால், என்னுள் பிறப்பவரும் இறப்பவரும் ஒருவரே.

ஆனால் பேரான்மா என்பது சிற்றலை பேரலைகளின் கூட்டெனும் பொழுது, இன்னொரு பதிலும் தோன்றியது. அனைத்தும் பேரான்மாவின் அம்சங்கள் என்பதே.

உயிர்கள் அனைத்தும் பேரான்மாவைச் சேருகின்றன. ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான சிற்றலைகள் தொடர்ந்து பேரலையாகவோ ஒடுங்கியோ அமைகின்றன. அந்நிலையில் என்னுள் பிறந்து இறப்பவர்கள் பேரான்மாவின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான அம்சமானவர்கள் எனலாம்" என்றான் நசிகேதன்.

"மிகச் சரியாகச் சொன்னாய் நசிகேதா" என்றான் எமன். நசிகேதன் மேலும் ஏதோ சொல்ல விழைகிறான் என்பதைப் புரிந்துகொண்ட எமன், ஆவலோடு அமைதி காத்தான்.

நசிகேதன் தொடர்ந்தான். "எதற்காக இப்படியொரு கேள்வி கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன். மாணவனைச் சோதிப்பது ஆசிரியரின் கடமையென்றாலும், இப்படியொரு கேள்வியை ஏன் கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன்"

"சொல்"

"நான் உங்களிடம் கேட்ட மூன்று வரங்களில், மூன்றாவது வரம் மெய்யறிவு பற்றியது. எத்தனை பேர் பிறந்து இறக்கிறார்கள் என்றக் கணக்கைப் பற்றியதல்ல. மரணத்துக்கு அஞ்சி, சொர்க்க நரகங்களை நம்பி, பெரும் கண்மூடித்தனங்களைச் செய்யத் துணியும் மனிதத்தை மனதில் வைத்துக் கேட்ட வரம். உயிர்ப்பயணம் பற்றிய கேள்வி"

"நன்றாக நினைவிருக்கிறது. உயிரது புள்ளாய்ப் பறந்த பின்னும் உள்ளார் இலாரென்றுப் பல்லார் சொல்வானேன் என்று கேட்டாய்! எத்தனை அருமையான கேள்வி! சாதலின் நுண்மையே தெள்ளிய மூதறிவென மூன்றாம் வரந்தருவீர் என்றாய். உன் வயதுக்கு மீறிய வரத்தைக் கேட்டாய். உன் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொன்னேனா? நீ நேடிய வரமும் கிடைத்தது அல்லவா?"

"கிடைத்தது ஆசானே, மிகவும் நன்றி. நான் கேட்ட மூன்றாம் வரத்தை மீண்டும் எண்ணியவுடன் உங்கள் கேள்வி மிக நன்றாகப் புரிந்தது. மரணத்தை, உயிர்ப்பயணத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பதைச் சோதிக்கவே அப்படியொரு கேள்வியைக் கேட்டீர்கள் என்பது புரிந்தது"

எமனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. "அற்புதம்! அற்புதம்! உனக்கு அறிவுண்டு என்பதில் ஐயமேயில்லை. உன் அறிவின் நுண்மையை நுகரவே அப்படி ஒரு கேள்வி கேட்டேன்" என்றான்.

"உங்கள் வாழ்த்தும் நல்லெண்ணமுமே என்னுடைய சிறப்பு" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "உயிர்ப்பயணம் என்பது கூட்டை விட்டுப் பிரிவது மட்டுமல்ல. கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் உண்டு. அதைப் பற்றி மனிதம் கவலைப்படுவதில்லை. கூட்டுக்குள் நடக்கும் உயிர்ப்பயணம், கூட்டுக்கு வெளியே நடக்கும் உயிர்ப்பயணத்தைப் புரிந்து கொள்ள ஒரு கருவி என்பதை மனிதம் அறியவில்லை. கூடு பிரியும் உயிர்ப்பயணம் என்பது இயற்கை, தன்னிச்சை என்பதை மனிதம் புரிந்து கொள்ளவே கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் நடக்கிறது.

மனிதம் என்ற வகையில் எனக்குள்ளும், ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் நடைபெறும் உயிர்ப்பயணத்தைச் சிந்தித்தேன். கரு, பிள்ளை, கிள்ளை, வாலிபன், முதியவன், மூத்தவன் என்ற ஆறு பேர் என்னுள் இருப்பதை அறிவேன். ஆறுவரும் ஓருடலில் இருந்தாலும், தனித்தனி இயல்பும் வாழ்வும் கொண்டவர்கள். அந்த வகையில் உயிரானது கருமுதல் மரணம் வரைப் பயணம் செய்கிறது. அவையும் பிறப்பிறப்புக்களே. கருவிலிருக்கையில் என்ன நடந்தது என்பதைப் பிறந்ததும் அறிய முடியாது. பிறந்த குழந்தை மெள்ள வளர்ந்துக் கிள்ளையாகிறது. எனினும் பிள்ளை வேறு, கிள்ளை வேறு. தொடர்ந்து வாலிபம், முதுமை, மூப்பு என்ற பயணம். பிள்ளையாக இருந்த மனிதன் வேறு, வாலிபனாக வாழும் மனிதன் வேறு. முற்றிலும் மாறுபட்டவர்கள். ஆக, கருவிலிருந்து மூப்பு வரை ஆறு விதப் பிறவிகளும் ஆறுவித மரணங்களும் ஒரு கூட்டுக்குள்ளேயே நடக்கின்றன. கருவிலிருந்து கிள்ளையாவதைக் கண்டு அஞ்சுவதில்லை. பிள்ளையிலிருந்து வாலிபமடைவதைக் கண்டு அஞ்சுவதில்லை. முதுமையிலிருந்து மூப்பையும் இயற்கையெனவே அமைகிறோம். இந்தப் பிறவிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், நிலை கடப்பது மரணத்துக்கு ஒப்பானதே. எனினும் நாம் வருந்துவதில்லை.

ஆனால் கூட்டை விட்டுப் பிரியும் உயிர்ப்பயணத்தை மட்டும் மனிதராகிய நாங்கள் அஞ்சி நடுங்குகிறோம். தேவையற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுகிறோம். இது எத்தகைய பேதமை என்பதைப் புரிந்து கொண்டேன்.

இந்த ஆறுவரின் ஒரே தொடர்பு, நினைவு. பேரான்மா என்பது கூட்டை விட்ட ஆன்மாக்களின் கூட்டு என்பதைப் போல, ஆன்மா என்பது கூட்டுக்குள் இருக்கும் நினைவுகளின் கூட்டு எனலாம். சிற்றலைகளை போலவே பல நினைவுகள் ஒடுங்கிவிடுகின்றன. இந்த நினைவுகள் நன்னெறி தொட்ட நினைவுகளாகும் பொழுது வருத்தமே ஏற்படுவதில்லை. அச்சமே ஏற்படுவதில்லை. இந்த ஆறு நிலைகளிலும் தொடர்ந்து வந்து உதவும் நன்னெறி நினைவுகளே தன்னறிவு. அதனால் தன்னறிவு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினீர்கள்" என்றான்.

எமன் மிகவும் மகிழ்ந்தான். "நசிகேதா! உன் விடைகள் ஒவ்வொன்றும் அருமை. என் கேள்வியை மதித்து, தெளிவான நுட்பமான பதிலளித்த உன்னைப் பாராட்டுகிறேன். உன் அறிவைச் சோதிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்!" என்று நெகிழ்ந்தான். "இனி நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே" என்றான்.

2011/11/04

தன்னறிவுத் தேர்வு


72
தன்னறிவின் உண்மைகண்ட என்னருமை மாணவனே
உன்னறிவின் நுண்மைகாணும் என்கேள்வி - உன்னில்
பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர்?
சிறப்பாகச் சிந்தித்துச் சொல்.

   ன்னறிவைத் தெளிவாக அறிந்த என்னருமை மாணவனே! நீ பெற்ற அறிவின் நுட்பத்தைக் காண விழைகிறேன். (அதனால்) நன்கு சிந்தித்து என் கேள்விக்கேற்றச் சிறந்த பதிலைச் சொல். உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார்? எத்தனை பேர்? (என்றான் எமன்).




    கேட்ட கேள்விக்கேற்றச் சரியான பதிலைச் சொல்வது, அனைவரும் இளமையிலேயே வளர்த்துக் கொள்ளவேண்டிய கலை. fundamental communication skill.

கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வது என்பது சிலருக்கு மிகவும் கடினமான செயல். நடைமுறையில் கேட்கப்படும் சாதாரணக் கேள்விகள் கூட இவர்களுக்குப் பெரும் சங்கடத்தைத் தருகின்றன. இவருள் சிலரது பதில்களோ, கேள்வி கேட்டவரைப் படுத்துகின்றன!

"இன்னிக்கு என்ன சமையல்?"
"போன வாரம் மார்கெட் போனப்போ நாலு பாகற்காய் வாங்கி வந்தேன். அதுல ரெண்டை வறுவல் செஞ்சு போட்டாச்சு.. இன்னும் ரெண்டு இருந்துதா.. அதைவச்சு சாம்பார் பண்ணலாம்னு பாத்தா ஒண்ணு கொஞ்சம் அழுகிப் போனாப்புல.."

"கால்ல அடிபட்டிருச்சா? ரத்தம் வருதே?"
"உடம்பு ஊதிடுச்சா.. கொஞ்சம் ஓடலாம்னு பாத்து வீட்டைச் சுத்தி ரெண்டு ரவுண்டு ஓட நெனச்சேன். முனையில பாருங்க குப்பைத் தொட்டி இருக்குல்லா.."


தன் மகனுக்கு உடல் சுகமில்லை என்று சொல்லியிருந்தார் நண்பர். மறுநாள் பேசியபோது நலம் விசாரித்தேன். கேட்டது இதுதான்: "உங்க மகன் நலமா?". "அது வந்து.. போன வாரம் வீட்டுல சாப்பிட வேணாம்னு ஹோட்டல் போயிருந்தமா.." என்று தொடங்கி தன் மகனுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று ஒரு சொற்பொழிவு நடத்தினாரே தவிர, கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை. ஏன் கேட்டோம் என்றாகி விட்டது.

பதில் சொல்கிறார்களோ இல்லையோ, கேள்வியை கேள்வியால் அடிப்பவர்கள் இன்னும் சிலர்.

"என்னங்க, நல்லா இருக்கீங்களா?"
"பாத்தா தெரியலையா?"

"நீ என்னை உண்மையிலே காதலிக்கிறியா?"
"உன்கூட பழகுறதுல இருந்தே தெரிய வேணாமா?"


ஒரு கேள்வி கேட்டால், என்ன பதில் கிடைக்கிறது என்பதை அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.

சுற்றி வளைத்துப் பதில் சொன்னால், ஆசிரிய நண்பர் அரசனுக்குக் கோபம் வந்துவிடும். "ஏன்யா.. இன்னிக்கு என்ன கிழமைன்னு கேட்டா நேத்து சனிக்கிழமைன்னு சொல்றியே?" என்பார். கையில் கிடைத்ததை நம் மேல் எறிவார். "கேள்விக்கு பதில் சொல்லிட்டு ஊர் கதையை சொல்லு.. கேக்கறவனுக்கு மரியாதை வேணாம்.. அட, கேள்விக்கு ஒரு மரியாதை வேணாமா?" என்று கோபிப்பார்.

அரசன் என்றில்லை. பொதுவாக ஆசிரியர்களிடம் இந்தக் 'கெட்டப் பழக்கம்' காணப்படுகிறது. பதிலுக்கு ஏற்றவாறு கேள்வியை மாற்றிக் கொள்ளத் தெரிவதில்லை இவர்களுக்கு. என்ன செய்வது?

    மனும் ஆசிரியன் தானே?

எமன் நசிகேதனிடம், 'சிறப்பான பதிலைச் சொல்' என்றானே, ஏன்?

தன் மாணவனின் அறிவைச் சரியான முறையில் சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் அடிப்படைக் காரணம்.

சிறப்பான பதில் என்றால் என்ன? ஏன் அப்படிக் கேட்டான்?

தன் மாணவன் சுற்றி வளைத்துப் பதில் சொல்லக்கூடாது என்ற எண்ணம் ஒரு புறம். தன் மாணவன் அவசரமாக ஏதாவது சொல்லிவிடக் கூடாதே என்ற எண்ணம் ஒரு புறம். தன் மாணவன் சிந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம். தான் எதிர்பார்த்த பதிலைத் தரவேண்டும் என்ற வேகம் ஒரு புறம்.

இவை எல்லாவற்றையும் விட இன்னொரு நுட்பம் இருக்கிறது. ஆசிரிய-மாணவ உறவிலே வெளிப்படும் நுட்பம்.

இயல்பிலே அறிவாளியான தன் மாணவன், கேட்ட கேள்விக்குச் சரியான விடையளிப்பான் என்பது எமனுக்குத் தெரியும். தன் மாணவனை மதிக்கும் எந்த ஆசிரியருக்கும் தெரியும்.

நல்ல மாணவரின் இலக்கணத்தை முதல் பகுதியில் பார்த்தோம். எமன் அதைத்தான் எதிர்பார்த்தான் இங்கே.

நல்ல மாணவர், தன் பதிலால் கேள்விக்கே சிறப்பைச் சேர்க்கிறார். 'ஆகா! எப்பேர்பட்ட கேள்வியைக் கேட்டோம்!' என்று ஒரு ஆசிரியர் தன்னைப் பற்றிப் பெருமை கொள்ளும் அளவுக்கு மாணவரின் பதில் அமைந்து விட்டால், அதுவே சிறப்பான பதில்.

எமனுக்குத் தன் மாணவன் மேல் அத்தனை நேசம், நம்பிக்கை! 'என் கேள்விக்கு அழகைச் சேர்க்கும் பதிலைச் சொல்லையா, சின்னய்யா!' என்று கேட்காமல் கேட்கிறான்.

'யார், யாரிடம் கற்கிறார்கள்' என்ற உணர்வு கடந்த நிலையடையும் ஆசிரிய-மாணவ உறவு இருக்கிறதே.. அதற்கு வடிவமும் இல்லை, விளக்கமும் இல்லை.

தவறாக எண்ணவில்லையெனில், பொறுமையுடன் இதுவரை எழுபது பாடல்கள் போல் தொடர்ந்து படித்து வந்த உங்களிடம் ஒன்று கேட்கலாமா?

நசிகேதன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?