37
மண்ணிலே தேடும் தனமெல்லாம் மூடிய
கண்ணிலே ஓடும் கனவாகும் - நண்ணி
ஒளிக்குள்ளே போந்தார் இருளோம்பார் ஆம்போல்
வெளிக்குள்ளே போந்தார் வளி.
கண்ணிலே ஓடும் கனவாகும் - நண்ணி
ஒளிக்குள்ளே போந்தார் இருளோம்பார் ஆம்போல்
வெளிக்குள்ளே போந்தார் வளி.
உலகில் செல்வங்களைச் சேர்ப்பது, உறக்கத்தில் காணும் கனவு போன்றது. ஒளியான இடத்தை விரும்பியவர்கள் இருளைச் சிறப்பாகக் கருதுவதில்லை; அது போல, எல்லாம் அடங்கிய வெளிக்குள் விரும்பிப் புகுந்தவர்கள், காற்றைச் சிறப்பாகக் கருதுவதில்லை (என்றான் நசிகேதன்).
நண்ணி: விரும்பி
வெளி: அண்டம்
வளி: காற்று
வெளியும் வளியும் முறையே ஐம்புலன் கடந்த நிலையையும் மூச்சையும் குறிப்பன.
subtext என்று ஒரு உரையாடல் உத்தி. சொல்லும் பொருளும் பிரிந்திருப்பது போல் ஒரு மாயையை உண்டாக்கும், குறிப்பால் உணர்த்தும், நுட்பம். அறிவில் சிறந்தவர்களிடையே வீண் கோபங்கள் குறுக்கிட்டுப் பேச்சு வார்த்தையைத் திசை திருப்பாதிருக்கக் கடைபிடிக்கப்படும் உத்தி. நேரிடையாகச் சொல்வதனால் உண்டாகக் கூடிய தாக்கத்தைத் தணிப்பது. காதலருக்கு இயல்பாக வருவது :). அவசியம் பழக வேண்டிய நுட்பம்.
வெளிக்குள் வளி அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது சிரமமென்றாலும் முடியும். ஒளிக்குள் இருள் அடங்கியிருப்பதைப் புரிந்து கொள்வது இன்னும் கடினம். ஒளியும் இருளும் ஒரே வட்டத்தின் பகுதிகள் (வட்டவில்?). இருள்-ஒளி போன்றதே பிறப்பும் இறப்பும். இருளும் ஒளியும் எதற்குள் அடங்கியிருக்கின்றன? பிறப்பும் இறப்பும் எதற்குள் அடக்கம்? சற்றே ஆழமான நுட்பங்கள். இங்கே அறிமுகம் செய்து கொண்டு, பின்னொரு பகுதியில் பழகுவோம். எதிர் நிலைகளை அறிந்து சாராது இயங்க வேண்டும் என்பது கடோவின் பிற பகுதிகளின் சாரம்.
'அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன்' என்று ஆசை காட்டிய எமன், தொனியை மாற்றி, 'பிடிவாதம் விடு' என்றதைக் கவனித்தான் நசிகேதன். எமனின் பிடிப்பு தளர்வதைப் புரிந்து கொண்டான். எமனின் எரிச்சலைத் தணிக்க வேண்டும், அதே நேரம், தான் இன்னும் உறுதியாக இருப்பதையும் உணர்த்த வேண்டும். 'நீங்கள் என்ன சொன்னாலும் சரி, என் நிலை மாறாது' என்று சொல்வது ஒரு வழி. "நான் கேட்டது மரண அறிவு; எத்தனை முறை சொல்வது? நான் கேட்டதைக் கொடுக்க முடியுமா முடியாதா? முடியாவிட்டால் சொல், அதை விட்டு பிடிவாதம் கிளிப்பிள்ளை என்று தனித் தாக்குதல் தேவையில்லை" என்று நசிகேதன் பதில் சொல்லியிருக்கலாம். 'என் நிலை மாறாதிருக்க காரணங்கள் உண்டு' என்று சொல்வது இன்னொரு வழி. காரணங்களை எடுத்துச் சொல்லிக் காரியத்தைப் புரிய வைக்க முனைந்தது, எமன் மேல் நசிகேதன் வைத்திருந்த மதிப்பை உணர்த்தும் செயல். தான் மெய்யறிவை விரும்புவது எதனால் என்பதை எடுத்துக் காட்டினான். நசிகேதனுக்கே அறிவு தரவேண்டியவனென்றால் எமனிடம் இல்லாத அறிவா? அதனால் 'கொடுப்பாயா மாட்டாயா?' என்று சிறுபிள்ளை போல் கேட்காமல், 'ஐயா, கொடுக்காமல் போனால் அது உங்கள் விருப்பம்; ஆனால் சிறகை விரும்பும் எனக்கு நடைவண்டியில் விருப்பம் இல்லை' என்று எமனே புரிந்து கொள்ளும் விதத்தில் குறிப்பாகவும் தெளிவாகவும் மென்மையாகவும் வலியுறுத்தியும் சொன்னான். படியாத வயதல்ல, அறிவைப் பெறும் முதிர்ச்சி தன்னிடம் உள்ளது என்பதையும் குறிப்பால் விளக்கினான்.
"ஐயா, உறக்கத்திலே நல்ல கனவொன்றைக் காண்கிறோம். உறங்கும் நேரம் அது கனவென்று தோன்றுவதேயில்லை. உலக வாழ்வில் அடையும் இன்பங்களும் செல்வங்களும் அத்தகையதே. விழித்ததும் கனவுகள் கலைந்து விடுகின்றன. எத்தனை இனிய கனவானாலும் அதனால் எந்தப் பயனுமில்லை. அதே போல் சேர்த்த செல்வங்களும் அடைந்த இன்பங்களும் ஒரு நாள் பயனற்றுப் போகின்றன. மூச்சடக்கி மூட்டும் தீ என்று சொன்னீர்களே? மூச்சைக் கட்டி தன்னறிவு பெற வேண்டும் என்று நீங்கள் தானே சொன்னீர்கள்? நீங்கள் ஆசை காட்டும் பொன்னும் பொருளும் மூசசைப் பெருக்க ஏதுவாகுமே? இந்த ஆசைகள் என்னைக் கட்டிப் போடுமே? நான் ஆசைகளைக் கட்டிப் போட அல்லவா விரும்புகிறேன்?" என்றான். 'செல்வங்கள் வேண்டாம்' என்று சொல்லவில்லை நசிகேதன். 'சிறந்த செல்வம் ஒன்று உண்டு - மெய்யறிவு - அது வேண்டும்' என்றான்.
செல்வங்களைச் சேர்ப்பதால் யாரும் நெறி தவறவில்லை; செல்வங்களைப் புறக்கணிப்பதால் நெறி பேணவும் இல்லை. நிலையில்லாத செல்வங்களை தேடி, நிலையான உண்மையான செல்வமான மெய்யறிவைப் பெறவில்லையென்றால் பிற செல்வங்களினால் எந்தப் பயனும் இல்லை என்பதே நசிகேதன் சொன்ன கருத்து. கனவு இதமாக இருக்கின்றதே என்று தொடர்வதில் பயனுண்டா? மெய்யறிவு பெறுவதே உண்மையான விழிப்பு என்பது நசிகேதனுக்குப் புரிந்தது. தான் விரும்புவது உண்மையான விழிப்பு என்பதைக் குறிப்பாகச் சொன்னான்.
"ஐயா, ஒளியை விரும்பி ஏற்றவர்கள் இருளுக்குத் திரும்ப எண்ணுவதில்லை. மெய்யறிவு ஒளி போன்றது. பிற செல்வங்கள் இருளுக்கு ஒப்பானவை" என்றான். தனக்குத் தேவை ஒளி என்பதை மென்மையாக வலியுறுத்தினான். இதில் என்ன subtext? 'வேண்டாம் என்பதில் ஆணவமோ, வேண்டும் என்பதில் பிடிவாதமோ இல்லை' என்பதே அவன் சொன்ன குறிப்பு. தேவையைக் கேட்பது பிடிவாதமா?
எல்லாம் அடங்கிய நிலை இருக்கையில், ஒரு பகுதியை விரும்பி என்ன பயன்? ஐம்பொறிகளும் அடங்கிய வெளி அண்டம். ஐம்புலனும் அடங்கிய வெளி ஆன்மா. வளி என்பது இங்கே வாழ்வதற்கு இன்றியமையாத மூச்சுக்காற்றை குறிக்கிறது. "ஆன்மாவை அறிய முற்படும் எனக்கு வாழ்வின் சாதாரண இனிமைகள் பொருட்டல்ல" என்றான் நசிகேதன். தான் விரும்புவது, ஆன்மாவைப் பற்றிய அறிவே என்பதை மீண்டும் தெளிவுபடுத்தினான்.►