29
ஐந்தும் அறிந்தார்க்கும் ஆன்மா ஐயமன்றோ
மைந்தனே மாற்று வரங்கேள் - நைந்தறியா
உம்பருக்கும் ஏறா தெருளாம் உளந்திரும்பி
எம்பெருமை ஈனா தருள்.
மைந்தனே மாற்று வரங்கேள் - நைந்தறியா
உம்பருக்கும் ஏறா தெருளாம் உளந்திரும்பி
எம்பெருமை ஈனா தருள்.
ஐம்புலனை அறிந்தவருக்கும் புரியாததன்றோ உயிர்? இளமை நிலை மாறாதத் தேவர்களும் இதைத் தெளிவாக அறியார். அழகனே, வேறு வரம் கேள். தயவு செய்து உன் மனதை மாற்றிக்கொண்டு என் பெருமை குறையாதிருக்கச் செய் (என்றான் எமன்).
ஐந்து: மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்கள்; வெளி ஒளி வளி மண் நீர் என ஐம்பொறிகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்
ஆன்மா: உயிர்
மைந்தன்: இளையவன், அழகன்
நைந்து: தளர்ந்து, நிலைமாறி, முதிர்ந்து
உம்பர்: தேவர்
தெருள்: தெளிவு
ஈனாது: குறையாது, தேயாது
வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் குறைபடாது.. எது?
கற்றுத் தரும் ஆசிரியனுக்கும் கற்க எண்ணும் மாணவருக்கும் இந்த உண்மை புரிந்திருக்க வேண்டும். முன்னர் சந்தித்த மாணவர்கள் இருவருக்குமே உயர்ந்த நோக்கம் உண்டு. எனினும், இரண்டாவது மாணவனின் நோக்கம், சுயமாக நிறைவேற வழியில்லை; கற்க வேண்டியதை நிற்க வைத்துவிட்டானே?
நல்ல அறிவைப் பெற, கடினமான உழைப்பும், மாறா உறுதியும் வேண்டும். இன்றொன்று நாளொன்று என அன்றன்று அலைபாய்ந்தால் அறிவைப் பெற முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்தி அறிவைப் பெறும் ஒழுக்கம், நல் மாணாக்கனுக்கு வேண்டும். இரண்டு மாணவர்களுமே வாழ்க்கையில் முன்னேறிச் சிறப்பெய்தினார்கள் என்றாலும், ஒருவன் மட்டுமே - படித்த முதல் மாணவன் மட்டுமே - தாங்கள் கொண்டிருந்த உயர்ந்த நோக்கத்தை அடையத் தேவையான அறிவைப் பெற்றிருந்தான். ஒரு ஆசிரியன் அத்தகைய மாணவனையே தேடிப் பிடித்துக் கற்பிக்க வேண்டும்.
ஒரு ஆசிரியனின் கண்ணோட்டத்தில், எந்த மாணவர் வாழ்வில் உயர்வார் என்பதை விட, எந்த மாணவர் சிறப்பாகக் கற்பார் என்பதே முக்கியமாகிறது. கற்றவர் வழிப் பரவும் கல்வி, அல்லவா? கல்வியும் அறிவும் முதல் மாணவன் வழியாகத் தொடர்ந்து பரவ வாய்ப்பிருக்கிறது. செல்வந்தனாகி விட்ட இரண்டாம் மாணவனிடம் கல்வி அழிந்து விட்டது; அறிவு அடங்கி விட்டது. சிறப்பான அறிவை ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், இரண்டாவது மாணவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் கல்விக்கும் அறிவுக்கும் அழிவேற்பட ஆசிரியரே உடந்தையாகியிருப்பார். பொறுப்பற்ற மாணவரால் ஆசிரியரின் தவமும் பெருமையும் கெடுகிறது. (என் குடும்பக் கிளையில் என்னுடன் தமிழறிவு முடிவது துயரமென்றாலும், என் தமிழாசிரியரைப் பழி சொல்ல மனமில்லை! :)
குரு-சீடர், ஆசிரிய-மாணவர் உறவை அறியவும் விளக்கவும் பல உளவியல் மாதிரிகள் உள்ளன (mentor mania, professor syndrome, ugly duckling philosophy, joker syndrome, upward mobility crisis, cascading failure, groupthink, ...). இந்த ஆராய்ச்சி human resources management, organizational behavior modeling, knowledge transfer framework, business succession planning, generational strategic planning என்று பலவாறு வளர்ச்சி மேலாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. 'குருபிழை'யைத் தவிர்ப்பதே இவற்றின் நோக்கம். இன்னொரு 'கெனடி' இன்னொரு 'சாஸ்திரி' இன்னொரு 'மேனெக் ஷா' தோன்றாததற்குக் 'குருபிழை' ஒரு காரணம் என்கிறார்கள்.
'குருபிழை' என்றால் என்ன? வழிகாட்டும் பொறுப்புடையவர்கள், தங்கள் செய்கையினால் மறைமுகமாகத் தவறான வளர்ச்சியை உண்டாக்குவதும் சரியான வளர்ச்சியை அழிப்பதும் குருபிழை எனப்படும். ஒரு ஆசிரியன் செய்யக்கூடிய மகத்தான பிழை யாது? புரியும்படி சொல்லிக் கொடுக்காததா? அல்லது, புரியாதபடி சொல்லிக் கொடுப்பதா? நல்ல மாணவனைத் தவற விடுவதா? மோசமான மாணவனைத் தேர்ந்தெடுப்பதா? அறியாத மாணவன் மேலா, அரைகுறையாய் அறிந்த மாணவன் மேலா? நல்ல ஆசிரியனுக்கு எதில் நாட்டம்? அறிவை வளர்க்கக் கூடிய மாணவனை எப்படி அறிந்து கொள்வது? இவற்றுக்கான விடை அறியும் தந்திரம், நல்லாசிரியர்களுக்கு தெரிந்திருந்தது. தெரியும். தெரிய வேண்டும்.
எமன் நல்லாசிரியனா?
தர்மத்தின் தலைவனான எமன், "என் பெருமை குறையாதிருக்க அருள் செய்" என்று மானிடச் சிறுவன் நசிகேதனிடம் கெஞ்சுவானேன்? எமனின் பெருமை எப்படிக் குறையும்? தனக்குப் பழி நேர்ந்தால் பெருமை குறையுமென்று அஞ்சி, நசிகேதனிடம் கெஞ்சினான். வாக்கு தவறினால் பெரும் பழி அல்லவா? அதுவும் அறத்தை நிலை நாட்டுவதையே தொழிலாகக் கொண்டவன், அறம் பிறழலாமா?
வரம் கொடுப்பவனே வரம் கேட்கும் நிலைக்கு வந்து விட்டான். இது நமக்கு ஒரு பாடம். இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று ஆயிரம் சொல்லிவிட்டு, 'முடியவில்லை' என்று ஏதோ ஒரு காரணம் காட்டிப் பின்வாங்கும் கேவலமான மனிதர்களை தினமும் பார்க்கிறோம். உறவும் பாராட்டுகிறோம். நண்பராகிறோம். தலைவி அல்லது தலைவனாக்குகிறோம். 'பேச்சோடு சரி' என்று தெரிந்ததும் அவர்கள் மேல் ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. 'ஏமாற்றுக்காரர்' என்று நினைக்கத் தொடங்குகிறோம். 'அவளை நம்பமுடியாது', 'அவனை நம்பினா உருப்பட்ட மாதிரி தான்' என்று பழி போடத் தொடங்குகிறோம். நசிகேதன் அவ்வாறு தன்னை வெறுத்துவிடுவானோ என்று எமன் அஞ்சினான். ஏன் அஞ்ச வேண்டும்?
காலன் மேலாளும் நிர்வாகம் யாது? அந்தக்கால டியூசிஎஸ் கிடங்கா? கோயிலில் லட்டு, சுண்டல் வினியோகமா? பள்ளிக்கூடமா? பால்பண்ணையா? காய்கறிக் கடையா? தொழிற்சாலையா? இல்லையே? எவருக்குமே புரியாத ரகசிய நுட்பத்துக்கு நிர்வாக உரிமையாளன் அல்லவா? மரணத்திற்குப் பின் நடப்பதாகச் சொல்லப்படும் உயிர்களின் பாவ புண்ணிய வழக்கில், தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவன் ஆயிற்றே? அங்கே வக்கீலும் அவனே; சாட்சியும் அவனே; ஜூரியும் அவனே; நீதிபதியும் அவனே. போதாதென்று, அந்த வழக்குமன்றச் சட்டங்களை எழுதியவனும் அவனே; தண்டனை வழங்குவதும் அவனே; சிறையில் தள்ளினால் சிறைக்குச் சொந்தக்காரனும் அவனே; அப்பீல் செய்தால் அங்கே உயர்நீதிபதியும் அவனே. அங்கே கிடப்பதும் நடப்பதும் எவருமறியாத மர்மமாக இருக்கும் வரை எமனுலகைப் பற்றிய அச்சமும் மரியாதையும் நிலைக்கும். அங்கே நடப்பது தெரிந்து, இனி எல்லோரும் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால்? மரணம் பற்றிய அறிவு பரவலாகக் கிடைக்காத வரை, மனிதர்கள் நெறிகளை ஓரளவுக்குப் பின்பற்றுவார்கள். அறிந்துகொண்ட பின், நெறி தவறினால்? மரணத்துக்குப்பின் உயிருக்கு என்ன ஆகிறது என்பதை விளக்கச் சொல்லி, மடியிலேயே கை வைத்து விட்டதே இந்தப் பிள்ளை?
மரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்வது கடினமா? எமனின் பார்வையில், அது காலத்துக்கு அப்பாற்பட்ட அறிவு. நசிகேதனிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தான். "அழகா, நான் சொல்வதைக் கேள். ஐம்புலன்களை அடக்கியாள அறிந்த ஞானிகளுக்கும் இது புரிவது கடினம். மாறா இளமையைப் பெற்றிருக்கும் தேவர்கள் கூட கடலின் ஆழத்தையும் வானத்தின் பரந்த எல்லைகளையும் தீயின் வெம்மையையும் காற்றின் மூலத்தையும் அறிந்து கொண்டாலும், அவர்களால் மரண உண்மையை அறிய முடியவில்லை" என்றான். காலத்துக்கப்பாற்பட்ட அறிவைப் பெற முயற்சி செய்கிறவரும் காலத்துக்கப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே? எல்லாம் துறந்த ஞானிகள் பல்லாண்டு முயற்சியில் புலனடக்கிப் பழகலாம்; என்றைக்கும் தளராமல் இருப்பதாகச் சொல்லப்படும் தேவர்களால் ஒருவேளை இது முடியலாம்; சாதாரண மனிதக் குழந்தையான நசிகேதனால் முடியாது என்பதே எமன் சொல்ல வந்தது. 'உனக்கு புரியாது' என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் எமன். ஆனால், அது விளக்கமாகாது; மந்திரம் என்ற போர்வைக்குள் மூடியது போலாகும். மாணவரின் அறிவிற்கேற்ப உதாரணம் சொல்லி விளக்குவது தான் நல்லாசிரியருக்கு அழகு. எமன் கையாண்டதும் அதே முறை தான். 'மரணத்திற்கப்பால் நிகழ்வதைப் புரிந்து கொள்ள எண்ணிலடங்காத காலம் ஆகும்' என்ற எச்சரிக்கையை, உதாரணங்களோடு எடுத்துச் சொன்னான்.
அப்படியென்ன மர்மம்? சொல்லிவிட்டுப் போவது தானே? காலத்துக்கப்பாற்பட்ட தேவர்களுக்கும் புரியாத நுட்பமென்றால், குழந்தைக்கு எங்கே புரியப் போகிறது? நசிகேதனும் உடனே மறந்து விடப் போகிறான். எதற்காக இன்னொரு வரம் கேட்கச் சொல்லி இதை இழுத்துக் கொண்டிருக்க வேண்டும்?
காலனின் உள்நோக்கத்தை, ஒரு நல்ல ஆசிரியனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 'மரணத்தைப் பற்றி விளக்குவதில் எமனுக்கு ஒரு சிக்கலும் இல்லை. நசிகேதனுக்குப் புரியாமல் போனாலும், வரம் கொடுத்தக் கடமை முடியும்; எமனுக்கு ஒரு பழியும் வராது' என்று முதற்கண் தோன்றினாலும் எமனின் செய்கையில் பொருள் உண்டு. எமன், 'குருபிழை'யைத் தவிர்க்க முனைந்தான்.
நசிகேதனுக்கு விளக்கம் சொல்லாவிட்டால் எமனுக்குப் பழியுண்டாகும். அதே நேரம், தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு பூமிக்குப் போனபின், நசிகேதன் எல்லாவற்றையும் குட்டையாகக் குழப்பிவிட்டால்? அதுவும் பழிதானே?
நல்ல மாணவனுக்கு, நல்ல ஆசிரியன் கிடைப்பதரிது. நல்ல ஆசிரியனுக்கு, நல்ல மாணவன் கிடைப்பது அரிது. 'இந்த மாணவனுக்கு இதை அறியும் திறமையும் பொறுமையும் இருக்கிறதா' என்று முன்பே அறிந்து கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமை. அறிவைப் பெறும் திறமை இருப்பினும், நிலையான விருப்பம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? நிலையான விருப்பம் இருந்தாலும் குறையாத பொறுமை இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? குறையாத பொறுமை இருந்தாலும் அறிந்ததை வளர்த்துப் பகிரும் பண்பட்ட மனம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? மாணவனின் மனம் விளையாட்டிலும் லாட்டரிச் சீட்டிலும் போகாது என்று எப்படித் தெரிந்து கொள்வது? விளையாட்டையும் லாட்டரிச் சீட்டையும் முன் வைத்தால் தெரிந்து போகிறது! எமனும் "இந்த வரம் வேண்டாம், வேறு வரம் கேள்" என்றான். நசிகேதப் பிள்ளை, முதல்பரிசுச் சீட்டைக் கேட்பானா? ►