வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/02/25

வேறு வரம் கேள் என்றான் எமன்


29
ஐந்தும் அறிந்தார்க்கும் ஆன்மா ஐயமன்றோ
மைந்தனே மாற்று வரங்கேள் - நைந்தறியா
உம்பருக்கும் ஏறா தெருளாம் உளந்திரும்பி
எம்பெருமை ஈனா தருள்.

    ம்புலனை அறிந்தவருக்கும் புரியாததன்றோ உயிர்? இளமை நிலை மாறாதத் தேவர்களும் இதைத் தெளிவாக அறியார். அழகனே, வேறு வரம் கேள். தயவு செய்து உன் மனதை மாற்றிக்கொண்டு என் பெருமை குறையாதிருக்கச் செய் (என்றான் எமன்).

ஐந்து: மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐம்புலன்கள்; வெளி ஒளி வளி மண் நீர் என ஐம்பொறிகளைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்
ஆன்மா: உயிர்
மைந்தன்: இளையவன், அழகன்
நைந்து: தளர்ந்து, நிலைமாறி, முதிர்ந்து
உம்பர்: தேவர்
தெருள்: தெளிவு
ஈனாது: குறையாது, தேயாது    வெள்ளத்தால் போகாது வெந்தணலால் வேகாது கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் குறைபடாது.. எது?

    கற்றுத் தரும் ஆசிரியனுக்கும் கற்க எண்ணும் மாணவருக்கும் இந்த உண்மை புரிந்திருக்க வேண்டும். முன்னர் சந்தித்த மாணவர்கள் இருவருக்குமே உயர்ந்த நோக்கம் உண்டு. எனினும், இரண்டாவது மாணவனின் நோக்கம், சுயமாக நிறைவேற வழியில்லை; கற்க வேண்டியதை நிற்க வைத்துவிட்டானே?

    நல்ல அறிவைப் பெற, கடினமான உழைப்பும், மாறா உறுதியும் வேண்டும். இன்றொன்று நாளொன்று என அன்றன்று அலைபாய்ந்தால் அறிவைப் பெற முடியாது. மனதை ஒரு நிலைப்படுத்தி அறிவைப் பெறும் ஒழுக்கம், நல் மாணாக்கனுக்கு வேண்டும். இரண்டு மாணவர்களுமே வாழ்க்கையில் முன்னேறிச் சிறப்பெய்தினார்கள் என்றாலும், ஒருவன் மட்டுமே - படித்த முதல் மாணவன் மட்டுமே - தாங்கள் கொண்டிருந்த உயர்ந்த நோக்கத்தை அடையத் தேவையான அறிவைப் பெற்றிருந்தான். ஒரு ஆசிரியன் அத்தகைய மாணவனையே தேடிப் பிடித்துக் கற்பிக்க வேண்டும்.

    ஒரு ஆசிரியனின் கண்ணோட்டத்தில், எந்த மாணவர் வாழ்வில் உயர்வார் என்பதை விட, எந்த மாணவர் சிறப்பாகக் கற்பார் என்பதே முக்கியமாகிறது. கற்றவர் வழிப் பரவும் கல்வி, அல்லவா? கல்வியும் அறிவும் முதல் மாணவன் வழியாகத் தொடர்ந்து பரவ வாய்ப்பிருக்கிறது. செல்வந்தனாகி விட்ட இரண்டாம் மாணவனிடம் கல்வி அழிந்து விட்டது; அறிவு அடங்கி விட்டது. சிறப்பான அறிவை ஒருவருக்கு மட்டுமே வழங்க வேண்டிய நிலையில், இரண்டாவது மாணவனைத் தேர்ந்தெடுத்திருந்தால் கல்விக்கும் அறிவுக்கும் அழிவேற்பட ஆசிரியரே உடந்தையாகியிருப்பார். பொறுப்பற்ற மாணவரால் ஆசிரியரின் தவமும் பெருமையும் கெடுகிறது. (என் குடும்பக் கிளையில் என்னுடன் தமிழறிவு முடிவது துயரமென்றாலும், என் தமிழாசிரியரைப் பழி சொல்ல மனமில்லை! :)

    குரு-சீடர், ஆசிரிய-மாணவர் உறவை அறியவும் விளக்கவும் பல உளவியல் மாதிரிகள் உள்ளன (mentor mania, professor syndrome, ugly duckling philosophy, joker syndrome, upward mobility crisis, cascading failure, groupthink, ...). இந்த ஆராய்ச்சி human resources management, organizational behavior modeling, knowledge transfer framework, business succession planning, generational strategic planning என்று பலவாறு வளர்ச்சி மேலாண்மைத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. 'குருபிழை'யைத் தவிர்ப்பதே இவற்றின் நோக்கம். இன்னொரு 'கெனடி' இன்னொரு 'சாஸ்திரி' இன்னொரு 'மேனெக் ஷா' தோன்றாததற்குக் 'குருபிழை' ஒரு காரணம் என்கிறார்கள்.

    'குருபிழை' என்றால் என்ன? வழிகாட்டும் பொறுப்புடையவர்கள், தங்கள் செய்கையினால் மறைமுகமாகத் தவறான வளர்ச்சியை உண்டாக்குவதும் சரியான வளர்ச்சியை அழிப்பதும் குருபிழை எனப்படும். ஒரு ஆசிரியன் செய்யக்கூடிய மகத்தான பிழை யாது? புரியும்படி சொல்லிக் கொடுக்காததா? அல்லது, புரியாதபடி சொல்லிக் கொடுப்பதா? நல்ல மாணவனைத் தவற விடுவதா? மோசமான மாணவனைத் தேர்ந்தெடுப்பதா? அறியாத மாணவன் மேலா, அரைகுறையாய் அறிந்த மாணவன் மேலா? நல்ல ஆசிரியனுக்கு எதில் நாட்டம்? அறிவை வளர்க்கக் கூடிய மாணவனை எப்படி அறிந்து கொள்வது? இவற்றுக்கான விடை அறியும் தந்திரம், நல்லாசிரியர்களுக்கு தெரிந்திருந்தது. தெரியும். தெரிய வேண்டும்.

   எமன் நல்லாசிரியனா?

    ர்மத்தின் தலைவனான எமன், "என் பெருமை குறையாதிருக்க அருள் செய்" என்று மானிடச் சிறுவன் நசிகேதனிடம் கெஞ்சுவானேன்? எமனின் பெருமை எப்படிக் குறையும்? தனக்குப் பழி நேர்ந்தால் பெருமை குறையுமென்று அஞ்சி, நசிகேதனிடம் கெஞ்சினான். வாக்கு தவறினால் பெரும் பழி அல்லவா? அதுவும் அறத்தை நிலை நாட்டுவதையே தொழிலாகக் கொண்டவன், அறம் பிறழலாமா?

    வரம் கொடுப்பவனே வரம் கேட்கும் நிலைக்கு வந்து விட்டான். இது நமக்கு ஒரு பாடம். இதைச் செய்கிறேன் அதைச் செய்கிறேன் என்று ஆயிரம் சொல்லிவிட்டு, 'முடியவில்லை' என்று ஏதோ ஒரு காரணம் காட்டிப் பின்வாங்கும் கேவலமான மனிதர்களை தினமும் பார்க்கிறோம். உறவும் பாராட்டுகிறோம். நண்பராகிறோம். தலைவி அல்லது தலைவனாக்குகிறோம். 'பேச்சோடு சரி' என்று தெரிந்ததும் அவர்கள் மேல் ஒரு வெறுப்பு வந்துவிடுகிறது. 'ஏமாற்றுக்காரர்' என்று நினைக்கத் தொடங்குகிறோம். 'அவளை நம்பமுடியாது', 'அவனை நம்பினா உருப்பட்ட மாதிரி தான்' என்று பழி போடத் தொடங்குகிறோம். நசிகேதன் அவ்வாறு தன்னை வெறுத்துவிடுவானோ என்று எமன் அஞ்சினான். ஏன் அஞ்ச வேண்டும்?

    காலன் மேலாளும் நிர்வாகம் யாது? அந்தக்கால டியூசிஎஸ் கிடங்கா? கோயிலில் லட்டு, சுண்டல் வினியோகமா? பள்ளிக்கூடமா? பால்பண்ணையா? காய்கறிக் கடையா? தொழிற்சாலையா? இல்லையே? எவருக்குமே புரியாத ரகசிய நுட்பத்துக்கு நிர்வாக உரிமையாளன் அல்லவா? மரணத்திற்குப் பின் நடப்பதாகச் சொல்லப்படும் உயிர்களின் பாவ புண்ணிய வழக்கில், தீர்ப்பு வழங்கும் பொறுப்பில் இருப்பவன் ஆயிற்றே? அங்கே வக்கீலும் அவனே; சாட்சியும் அவனே; ஜூரியும் அவனே; நீதிபதியும் அவனே. போதாதென்று, அந்த வழக்குமன்றச் சட்டங்களை எழுதியவனும் அவனே; தண்டனை வழங்குவதும் அவனே; சிறையில் தள்ளினால் சிறைக்குச் சொந்தக்காரனும் அவனே; அப்பீல் செய்தால் அங்கே உயர்நீதிபதியும் அவனே. அங்கே கிடப்பதும் நடப்பதும் எவருமறியாத மர்மமாக இருக்கும் வரை எமனுலகைப் பற்றிய அச்சமும் மரியாதையும் நிலைக்கும். அங்கே நடப்பது தெரிந்து, இனி எல்லோரும் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டால்? மரணம் பற்றிய அறிவு பரவலாகக் கிடைக்காத வரை, மனிதர்கள் நெறிகளை ஓரளவுக்குப் பின்பற்றுவார்கள். அறிந்துகொண்ட பின், நெறி தவறினால்? மரணத்துக்குப்பின் உயிருக்கு என்ன ஆகிறது என்பதை விளக்கச் சொல்லி, மடியிலேயே கை வைத்து விட்டதே இந்தப் பிள்ளை?

    மரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்வது கடினமா? எமனின் பார்வையில், அது காலத்துக்கு அப்பாற்பட்ட அறிவு. நசிகேதனிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்தான். "அழகா, நான் சொல்வதைக் கேள். ஐம்புலன்களை அடக்கியாள அறிந்த ஞானிகளுக்கும் இது புரிவது கடினம். மாறா இளமையைப் பெற்றிருக்கும் தேவர்கள் கூட கடலின் ஆழத்தையும் வானத்தின் பரந்த எல்லைகளையும் தீயின் வெம்மையையும் காற்றின் மூலத்தையும் அறிந்து கொண்டாலும், அவர்களால் மரண உண்மையை அறிய முடியவில்லை" என்றான். காலத்துக்கப்பாற்பட்ட அறிவைப் பெற முயற்சி செய்கிறவரும் காலத்துக்கப்பாற்பட்டவராக இருக்க வேண்டுமே? எல்லாம் துறந்த ஞானிகள் பல்லாண்டு முயற்சியில் புலனடக்கிப் பழகலாம்; என்றைக்கும் தளராமல் இருப்பதாகச் சொல்லப்படும் தேவர்களால் ஒருவேளை இது முடியலாம்; சாதாரண மனிதக் குழந்தையான நசிகேதனால் முடியாது என்பதே எமன் சொல்ல வந்தது. 'உனக்கு புரியாது' என்று ஒரே வரியில் சொல்லியிருக்கலாம் எமன். ஆனால், அது விளக்கமாகாது; மந்திரம் என்ற போர்வைக்குள் மூடியது போலாகும். மாணவரின் அறிவிற்கேற்ப உதாரணம் சொல்லி விளக்குவது தான் நல்லாசிரியருக்கு அழகு. எமன் கையாண்டதும் அதே முறை தான். 'மரணத்திற்கப்பால் நிகழ்வதைப் புரிந்து கொள்ள எண்ணிலடங்காத காலம் ஆகும்' என்ற எச்சரிக்கையை, உதாரணங்களோடு எடுத்துச் சொன்னான்.

    அப்படியென்ன மர்மம்? சொல்லிவிட்டுப் போவது தானே? காலத்துக்கப்பாற்பட்ட தேவர்களுக்கும் புரியாத நுட்பமென்றால், குழந்தைக்கு எங்கே புரியப் போகிறது? நசிகேதனும் உடனே மறந்து விடப் போகிறான். எதற்காக இன்னொரு வரம் கேட்கச் சொல்லி இதை இழுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

    காலனின் உள்நோக்கத்தை, ஒரு நல்ல ஆசிரியனின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். 'மரணத்தைப் பற்றி விளக்குவதில் எமனுக்கு ஒரு சிக்கலும் இல்லை. நசிகேதனுக்குப் புரியாமல் போனாலும், வரம் கொடுத்தக் கடமை முடியும்; எமனுக்கு ஒரு பழியும் வராது' என்று முதற்கண் தோன்றினாலும் எமனின் செய்கையில் பொருள் உண்டு. எமன், 'குருபிழை'யைத் தவிர்க்க முனைந்தான்.

    நசிகேதனுக்கு விளக்கம் சொல்லாவிட்டால் எமனுக்குப் பழியுண்டாகும். அதே நேரம், தப்பும் தவறுமாகப் புரிந்து கொண்டு பூமிக்குப் போனபின், நசிகேதன் எல்லாவற்றையும் குட்டையாகக் குழப்பிவிட்டால்? அதுவும் பழிதானே?

    நல்ல மாணவனுக்கு, நல்ல ஆசிரியன் கிடைப்பதரிது. நல்ல ஆசிரியனுக்கு, நல்ல மாணவன் கிடைப்பது அரிது. 'இந்த மாணவனுக்கு இதை அறியும் திறமையும் பொறுமையும் இருக்கிறதா' என்று முன்பே அறிந்து கொள்ள வேண்டியது ஆசிரியரின் கடமை. அறிவைப் பெறும் திறமை இருப்பினும், நிலையான விருப்பம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? நிலையான விருப்பம் இருந்தாலும் குறையாத பொறுமை இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? குறையாத பொறுமை இருந்தாலும் அறிந்ததை வளர்த்துப் பகிரும் பண்பட்ட மனம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்து கொள்வது? மாணவனின் மனம் விளையாட்டிலும் லாட்டரிச் சீட்டிலும் போகாது என்று எப்படித் தெரிந்து கொள்வது? விளையாட்டையும் லாட்டரிச் சீட்டையும் முன் வைத்தால் தெரிந்து போகிறது! எமனும் "இந்த வரம் வேண்டாம், வேறு வரம் கேள்" என்றான். நசிகேதப் பிள்ளை, முதல்பரிசுச் சீட்டைக் கேட்பானா?

27 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

ஐந்து ,மைந்தன் , உம்பர் , நம்பெருமை ......வெண்பா சிறப்பாக இருந்தது ... உம்பர் பாரதியார் நெஞ்சுக்கு நீதி பாட்டில் பயன் படுத்திய வார்த்தை இங்கு சரியாக பொருந்தி இருந்தது .

மரண அறிவு ..... உயிர் அறிவு இவை பருமன், தூரம், வேகம் மற்றும் காலம் கடந்த அறிவு ..எமன் மறுப்பதில் நியாயம் இருக்கிறது ...ஆனால் நசிகேதனுக்கு தேவையான பயிற்சி கொடுத்து , கேட்ட வரத்தை கொடுப்பது தர்ம தேவனின் தர்மம் .....அதற்கு முன்னேற்பாடுதான் இந்த மறுப்போ என்னவோ .....

meenakshi சொன்னது…

'கற்றவர் வழி பரவும் கல்வி' மிகச் சிறந்த விளக்கம். அருமையாக சொல்லிவிட்டீர்கள்.
'வெள்ளத்தால் போகாது.........' அறிவுதான் ஒருவனுக்கு வற்றாத செல்வம்.
குரு சிஷ்யன் பற்றிய உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது. உங்கள் கருத்துக்கு உங்கள் விளக்கம் பொருந்துகிறது.

geetha santhanam சொன்னது…

ஆசிரியருக்கான இலக்கணத்தை அழகு தமிழில் தெளிவாகக் கூறியிருக்கிறீர்கள். கருத்துக்காக ஒருமுறையும் தமிழ் நடைக்காக மீண்டும் ஒருமுறையும் வந்து படிக்கிறேன்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

இந்த வார பதிவு உங்கள் மாஸ்டர்பீஸ். உங்க மாஸ்டருக்காக எழுதின பீஸ்னும் தோணுது.

ஒவ்வொரு பதிவை படிச்சதும் கருத்து எழுதணும் என்று தோன்றினாலும் பிறகு எழுதலாம் என்று சோம்பலும் என்ன எழுதலாம் என்று சரியாக எதுவும் தோணாமலும் அப்படியே விட்டு விடுவேன். நீங்க உங்க எக்ஸ்பொசிஷனால படிக்கிறவங்களை ஒரு உயரத்துக்கு கொண்டு போக விடாம முயற்சி பண்றீங்க; எங்க சில்லி காமென்ட்னால நாங்க உங்களைக் கீழே கொண்டு வந்துடறோம்னு தோணுது (நாங்கனா படிக்கிறவங்க எல்லாரும் இல்லை - ஒண்ணு ரெண்டு பேர் என்னையும் சேத்தி:) இந்த வாரம் கமென்ட் உடனே எழுதுடிறதுனு தீர்மானித்த்தேன்.

இந்த பதிவில் நீங்க எழுதியிருக்கிற பல வரிகள் என் கண்ணில் நீர் வரவழைத்தது நிஜமாகவே. அரசன் சொல்லியிருக்கிறார் பல தடவை "தமிழே வேண்டாம்னு ஓடிட்டான்யா, இப்ப திருந்திட்டான்" என்று உங்களைப்பத்தி. ஆசிரியர் மாணவர் பத்தி நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்க அவர் இல்லையென்று ரொம்ப வருத்தப்படுகிறேன். நாலு வருஷமா உங்களைப் படிச்சு வரதால் சொல்கிறேன் - ஒரு சோனுக்குள் வந்துவிட்டால் உங்களை பிடிக்க முடியாது. நசிகேதன் கதை உங்கள் சோன் போலிருக்கிறது.

எல்லா பதிவுக்கும் சேத்து இந்த கமெண்டுனு எடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் ரசிக்கிறேன். வாரா வாரம் திருச்சியில் அம்மாவுக்குப் படிச்சு சொல்கிறேன். மிகவும் விரும்பிக் கேட்கிறார். சம்ஸ்க்ருத ஒரிஜினலைப் படித்து இதையும் படிப்பவர்களுக்குத் தெரியும், உங்கள் முயற்சியின் ஆழமும் கற்பனை வளமும். யாராவது தட்டிக்கேக்க வந்தாலும் வாயடச்சுப் போய் விடுவாங்க. சென்னைப்பித்தன் சார் சொன்னது போல் எல்லோருக்கும் புரிவது போல் எழுதியிருப்பதற்கு நன்றி. சிவகுமாரன் அவர்கள் சொன்னது போல் இதையெல்லாம் எழுதவிட்டால் என் மாதிரி ஆட்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. திரு.மோகன் சொன்ன மாதிரி காலம் உங்களை சிம்மாசனத்தில் உட்கார வைக்கட்டும். அரசன் மிகவும் சந்தோஷ்ப்பட்டிருப்பார் எழுதியிருப்பதைப் படித்து. முதல் தடவைக்கும் இந்த தடவைக்கும் எத்தனையோ மேல். என்னைப் போல செகன்ட் அடேம்ப்ட் கேசுங்களுக்கு இது தெரியும். ஆனா உங்க செகன்ட் அடெம்ப்ட் தனி லெவல். விடாம பொறுமையா மோடிவேஷன் குறையாம எழுதுங்கள்.

இமெயில் வேண்டாம்னு சொன்னதால இங்கேயே எழுதினேடேன். நீளத்துக்கு மன்னிக்கவும்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

Please excuse spelling mistakes also.

அப்பாதுரை சொன்னது…

வருக பத்மநாபன், meenakshi, geetha santhanam, ராமசுப்ரமணியன், ...

அப்பாதுரை சொன்னது…

பரிமாணம் கடந்த நிலை பற்றி அழகாகச் சொன்னீர்கள் பத்மநாபன். வெண்பா ரசித்ததற்கும் நன்றி.

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi. ஒருவனுக்கு என்பதை ஒருத்திக்கு என்றும் சேர்த்துப் பொதுவில் வைத்ததாக உங்கள் கருத்தை ஏற்கலாமா? அல்லது இன்றைய காலத்தில் ஒருத்திக்கு என்பதை விட ஒருவனுக்கு பொருத்தம் என்கிறீர்களோ? உயர்நிலைப்பள்ளி அளவில் ஆண்களை விடப் பெண்களே நன்றாகப் படிப்பதாகச் சமீபத்தில் படித்தேன் :)

அப்பாதுரை சொன்னது…

நன்றி geetha santhanam. மாணவர் தேர்வு பற்றிய என் கருத்தை இப்போது படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

பதிவைப் பற்றிய எண்ணங்களை பதிவில் எழுதலாம் என்றேன்; இமெயில் வேண்டாம் என்று சொல்வதாக எண்ணாதீர்கள்.. இந்தப் பின்னூட்டத்தை இமெயிலில்...
உண்மையில், உங்கள் பின்னூட்டம் உள்ளத்தைத் தொட்டது ராமசுப்ரமணியன். மிகவும் நன்றி.

வீட்டைச் சுற்றிப் பனியைத் தள்ளி ஓரம் கட்டிவிட்டு, ஹாட் சாக்லெட்டும் முதுகு வலியும் கையுமாய் கணினி பக்கம் வந்தால்.. உங்கள் பின்னூட்டம். நிறைவாகவும் நிவாரணமாகவும் இருக்கிறது. ரொம்ப நன்றி. தொடர்ந்து முடிக்கும் எண்ணம் இருந்தாலும் motivation பத்தி நீங்கள் சொன்னது சரியே. one step at a time.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! கெட்டிக்கார, சேட்டைக்கார, பொக்கிரி பையங்களுக்கு வகுப்பு எடுக்கும் வாத்.தியார் பாடு என்ன வென்று புரிகிறது. தயவு செய்து பின்னூட்டங்களை செர்த்து புத்தகமாக்குங்கள்.பத்மநாபன்,மோகன்,சாய்,ஆர்.வி.எஸ், எல்லரையும் உங்களோடு இணைத்துச்செல்லும் பாங்கு அருமை.பின்னூட்டங்களைப் படித்தபின் நசிகெதனை மெலும் விளக்கமாக புரிந்து கொ ள்ளமுடிகிறது என்பது என் கட்சி. "கடோ"வைப் படித்தவர்கள் உங்களைப் படிக்கிறார்கள். ஒப்புநோக்குவார்கள்.இதனை தமிழில் கொண்டு வருவது ஒரு சாதனைதான்.---காஸ்யபன்.

meenakshi சொன்னது…

ராமசுப்ரமணியன் அவர்களின் பின்னூட்டமும், அதில் அவர் உங்களை பற்றி எழுதி இருப்பதும் மனதை மிகவும் நெகிழ வைத்து விட்டது. வாழ்த்துக்கள் அப்பாதுரை! பூத்தூரிகையின் வாசகியாய் சிறிது காலம் இருந்ததால், ராமசுப்ரமணியன் கூறி இருப்பதுபோல் அரசன் அவர்களும், சாவித்திரி அவர்களும் இதை படித்திருந்தால் எவ்வளவு ஆனந்தபட்டிருப்பார்கள் என்று உணரமுடிகிறது.
இந்த நூலின் ஆழமான கருத்துக்களை நீங்கள் எளிமையாகவும், அழகாகவும் எல்லோருக்கும் புரிவது போல் எழுதி கொண்டிருப்பதால், நீங்கள் இதை எழுதி முடித்ததும், இதை தவறாமல் புத்தகமாக வெளிவர செய்யுங்கள். இந்நூலின் சிறப்பை உங்கள் மூலமாக பல பேர் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

சென்னை பித்தன் சொன்னது…

தொடர்ந்து படித்து வருகிறேன். ராமசுப்ரமணியன் கூறியது போல் ஆழமில்லாத கருத்துக்களைக் கூறி நானும் வந்தேன் என்று வருகைப் பதிவேட்டில் பதிவிட மனமில்லை. உங்கள் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துகள்!

அப்பாதுரை சொன்னது…

மிகவும் நன்றி, காஸ்யபன். பின்னூட்டங்கள் தான் இந்தப் பதிவுக்கே மெருகு; புத்தகமாக வரும் நேரத்தில் தொகுத்தே ஆக வேண்டும்

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi,...

மூன்றாம் வரம் பற்றிக் கடோவில் படித்த போதும் என் ஆசிரியர்களே என் நினைவுக்கு வந்தார்கள். ஆசிரிய-மாணவ உறவைப் பற்றி எழுதும் பொழுது இப்படி ஒரு எண்ணம் பூத்தூரிகை படித்தவர்களுக்கு உருவாகும் என்று நினைத்தேன். என்னை மட்டும் இல்லை, தன்னுடைய மாணவர்கள் அத்தனை பேரையும் தேவைக்கு அதிகமாக உயர்த்தி வைத்துப் பேசுவது அரசனின் வழக்கம். வகுப்பில் ஒரு கேள்விக்கு பதில் சொன்னாலே, என் மாணவர் கேள்விக்கு பதில் சொன்னார் என்று நூறாவது நாள் விழா போல் போஸ்டர் ஒட்டுவார். பதில் சொன்ன மாணவருக்கு பெருமையும் கூச்சமும் தலைக்கேறி என்னவோ போலாகிவிடும். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். (தமிழனாச்சே? :).

மற்றபடி சட்டியில் இருந்தால் அகப்பை உடையாமல் வரவேண்டும் என்ற பாங்குடனே தொடர்கிறேன். தொடர வேண்டும் என்று வேண்டுகிறேன். சட்டி: கடோ.

செகன்ட் அடெம்ப்ட்டில் (ராமசுப்ரமணியன்!) தேறுவேனா பார்ப்போம். தேறினால் என் ஆசிரியர்களுக்கே வெற்றி.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

// செகன்ட் அடெம்ப்ட்டில் (ராமசுப்ரமணியன்!) தேறுவேனா பார்ப்போம். தேறினால் என் ஆசிரியர்களுக்கே வெற்றி. //

உங்கள் தமிழ் போலவே உங்கள் அடக்கமே உங்களின் வெற்றிக்கு வித்து

புத்தகமாக வெளியிட்டு உங்கள் அழகான கையெழுத்தை போட்டு கொடுங்கள்.

அப்பாதுரை சொன்னது…

அடடா, சென்னை பித்தன்! ஆழமில்லாத கருத்து என்று எதுவுமேயில்லை சார்.

வடமொழி நூல் தமிழில் வரவேண்டும் என்று ஒரு சிறிய நோக்கம் உள்ளே இருந்தாலும், எனக்குப் பொழுது போகிறது என்பதற்காகவே எழுதுகிறேன். வாழ்க்கையில் பல மைல்கல்களைத் தாண்டி வந்தவன் என்ற காரணத்தாலும் இது போன்ற நூல்களின் பயனை காலங்கடந்து (?) அறிந்து கொண்டவன் என்பதாலும்... ஒரு வேளை, just ஒரு வேளை.. இது போன்ற கருத்துக்களை இளமையில் சிலர் படிக்கக்கூடும் என்ற நப்பாசையும் இருக்கிறது. வாழ்வியல் அனுபவங்களைச் சேர்த்த அத்தனை பேரும் தத்தம் படிப்பினைகளை கடோவைப் படிக்கும் பொழுது அதனுடன் இணைத்துப் பார்க்கக் கூடும்; அதைப் பின்னூட்டமாக எழுதினால் ஏட்டுச்சுரைக்காய் ஆகாதிருக்க வாய்ப்பிருக்கிறது.

தொடர்ந்து படிப்பதற்கு மிகவும் நன்றி!

அப்பாதுரை சொன்னது…

நன்றி சாய்!
தேறாவிட்டால் ஆசிரியர்களைக் குறை சொல்லக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். (செகன்ட் அடெம்ப்ட் என்று பட்டம் கொடுத்து விட்டாரே ராமசுப்ரமணியன்!)

சாய்ராம் கோபாலன் சொன்னது…

// தயவு செய்து உன் மனதை மாற்றிக்கொண்டு என் பெருமை குறையாதிருக்கச் செய் //

நம் அரசியில்வாதிகள் போல் கிழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டக்கூடாது என்று அதிகார பிச்சை போல் இருக்கே இது !

உங்கள் ஆசிரிய / மாணவன் கருத்துக்கள் என்னுடைய பத்தாம் வகுப்பில் கணிதத்ததில் கூடுதல் வகுப்பு எடுத்த திரு. குமாரசாமி என்ற கணக்கு வாத்தியாரை எனக்கு நினைவுக்கு வர வைக்கின்றது. பத்தாம் வகுப்பு வரை கணக்கில் பெயில் ஆனதால் மத்த வகுப்புகளிலும் பெயில் ஆகும் உன்னத மாணவன் நான். (எஸ்.வி. சேகர் நாடக ஜோக் போல் !)

என் "நான்கு பேரில்" ஒருவனான ஆன ஆனந்தன் அறிமுகம் படுத்திய குமாரசுவாமி அவர்கள் என்னை என் பள்ளியின் பொது தேர்வு மொத்த டோட்டலில் அதிக மார்க் மட்டும் இல்லாமல் கணக்கில் நுற்றுக்கு 98 (அதுவும் அந்த வருடத்திய எங்கள் திரு.வி. கா மேல்நிலை பள்ளியில் (சென்னை ஷெனாய் நகர் அதிக டோடல்) என்னை வாங்க வைத்தவர்.

அதுவரை பாகர்க்காயாய் கசந்த கணக்கை எனக்கு அந்த பிரிவின் மேல் ஒரு பிரியத்தை வரவைத்தவர் என் மிக பெரிய ஆசான் மறைந்த குமாரசுவாமி அவர்கள். அவரிடம் படித்த எல்லாரிடமும் ஒரே மாதிரி நடந்து கொண்டாலும் அவருக்கு தெரிந்த மிக பெரிய நெளிவுசுளிவுகளை நான் அவருக்கு பள்ளியில் நல்ல பேர் வாங்கிகொடுப்பேன் என்று எனக்கு சொல்லிகொடுத்தது உங்களின் இந்த இடுகையை படிக்கும்போது நினைவுக்கு வருகின்றது.

இவ்வளவு கேவலமாக படிக்கின்றோமே என்று இருந்த என்னுடைய வாழ்க்கையை ஒரு திசைக்கு திருப்பியவர் திரு. குமாரசுவாமி அவர்கள். நான் கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும்போது (1984-85) இறந்த அவரை நான் பத்தாம் வகுப்பு முடிந்ததும் அவ்வளவு காணமுடியாமல் போனது என் மனதை அடிக்கடி பிசையும். (பத்தாம் வகுப்பு முடிந்ததும் மயிலாப்பூர் பி.எஸ். ஹயர் செகண்டரி பள்ளிக்கு மாறியதால்)

வேலைக்கு வந்து எவ்வளவோ சாதித்த நான் அவருக்கு ஒன்றுமே செய்யவில்லையே என்று அடிக்கடி தோன்றும் ஒரே வாத்தியார் அவர் ஒருவர் தான்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சாய்ராம் கோபாலன் சொன்னது…

என்னுடைய கருத்துரையில் இரண்டாவது பத்தியில் வகுப்புக்கு பதில் "மற்ற பாடங்களில் பெயில்" என்று படிக்கவும்.

தவறுக்கு வருந்துகின்றேன்

அப்பாதுரை சொன்னது…

திரு.குமாரசுவாமி பற்றிய கருத்து நெகிழ வைக்கிறது சாய். வயிற்றுப் பிழைப்பு என்று எண்ணாமல் சில ஆசிரியர்கள் அவ்வாறு எல்லை கடந்து மனதில் நிற்கிறார்கள்.

ஆசிரியப்பணி எதிர்பார்ப்பில்லாத பணி. தொண்டு என்பதற்கு அருகே வரக்கூடியது ஆசிரியப்பணி மட்டும் தான். தாயிடம் கூட இதை எதிர்பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். இருந்தாலும், ஆசிரியர்களை மறந்து விடுகிறோம். காலம் கடந்து நினைக்கிறோம்.

நானும் உங்களைப் போல் தான். என் வாழ்க்கையை அபௌட் டர்ன் செய்த ஆசிரியர் இந்திரமோகனுக்கு ஒரு கைமாறும் செய்யவில்லை. இந்திரமோகன் அந்த பத்து நிமிடங்கள் எனக்காக ஒதுக்கவில்லையில்லையென்றால் என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்று என்னால் நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

ஆசிரியர்களுக்கு என்று ஒரு பொது அறக்கட்டளை இருக்கிறதா பார்க்க வேண்டும். அதே நேரம், பணம் கொடுத்தோ மறு உதவி செய்தோ கொச்சைப் படுத்தக் கூடாது என்றும் தோன்றுகிறது.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

நன்றி அப்பாதுரை. ரோஹிணியிடம் இடம் கேட்டு பார். என் கணக்கில் இருந்த பிணக்கு !! ஏதோ ஆனந்தன் உதவியால் திரு. குமாரசாமியை கண்டு அட்லீஸ்ட் கல்லூரி வரையாவது சென்றேன். இல்லையேல் பத்தாம் வகுப்பில் பெயில் ஆகி மாடு மேய்த்தோ / சாணி தட்டியோ வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருந்திருப்பேன்.

நீங்கள் சொன்னது போல் பணத்தை கொடுத்து அவர்களின் சேவையை கேவலபடுத்தவதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஏன் நான் பன்னிரெண்டாம் வகுப்பு கணக்கு பரிச்சைக்கு முன் அவரின் ஆசி பெற சென்றபோது என் தாயிடம் வாங்கி சென்ற ஐம்பது ரூபாயை வாங்க மறுத்தவர் அந்த மகானுபாவர். உன்னால் எனக்கு திரு.வி.கா பள்ளியில் பெருமை என்று சொல்லி என்னை வாழ்த்தியவர் அவர். அவர் வாழ்த்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்விலும் நல்ல மார்க் வாங்கினேன்.

அவருடைய ட்ரேட் மார்க் ரசிக்கலால் பாக்கை மென்னு அதை நாவில் பல்லுக்குஇடுக்கில் தேடி கணக்கு பாடம் எடுக்கும் பாங்கே.

அவ்வபோது அவரை நினைத்தாலும் முப்பது வருடங்களுக்கு பின் (நான் பத்தாம் வகுப்பு படித்தது 1980-81) அவரை நிறையவே அசை போடவைத்துவிட்டீர்.

ஒரு சிலரை நேற்று பார்த்தாலும் முகம் மறந்து விடும் ஆனால் திரு குமாரசாமியில் வெண்ணிற வேஷ்டி, கால் கை கதர் சட்டை மற்றும் அவரின் வழுக்கை, குள்ளமாக இருந்தாலும் ஆணவமாக நடக்கும் அவரின் நேர் நடையும் இன்னும் என் கண்ணில் இருக்கின்றது.

காலங்காத்தாலே அழ வைத்துவிட்டீர்கள்.

சிவகுமாரன் சொன்னது…

உம்பர் தரு தேனுமணி என்று சிறு வயதில் திருப்புகழில் படித்த சொல் . மீண்டும் படிக்கையில் துள்ளியது மனம்.
ஆசிரியர் மாணவர் உறவு பற்றிய செய்திகள் என் பழைய ஆசிரியர்களை நினைவுபடுத்தியது.
என் கனவுகள் கவிதையில் மறக்க முடியாத என் ஆசிரியர்களை நினை கூர்ந்திருப்பேன்
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/08/memories.html

திரு ராமசுப்ரமணியம் அவர்களின் பின்னூட்டம் நெகிழ்வாய் இருந்தது.

RVS சொன்னது…

"இந்த வார ஹைலைட் பின்னூட்டம்" அப்படின்னு ஒன்னு போடுங்க அப்பாதுரை சார்!
ஒவ்வொரு வாரமும் மோகன்ஜி, பத்மநாபன், மீனாக்ஷி மேடம், கீதா மேடம் போன்றவங்களுக்கு குடுக்கக்கூடாது.. ஏன்னா அவங்களே எல்லாப் பரிசையும் தட்டிகிட்டு போய்டுவாங்க... ஆசிரியர் நடத்தும் பாடத்தை உள்வாங்கி என்ன புரிந்துகொண்டோம் என்பதை மீண்டும் பெஞ்சில் இருந்து எழுந்து நின்று சொல்வது ஒரு நல்ல மாணாக்கனுக்கு அழகு. மேலிருப்பவர்கள் முதல் பெஞ் ஆட்கள் ஸார்!

நான் பள்ளி நாளில் இருந்து கடைசி பெஞ். எம்.சி.ஏ வில் முதல் பெஞ். இந்தக் கிளாசுக்கு நான் எங்க உட்காரதுன்னு தெரியலை..

ஆள் பாதி ஆடை பாதி மாதிரி பதிவு பாதி பின்னூட்டம் பாதியாக கடோ கலக்கலா இருக்கு.

யமனே ஆச்சர்யப்படும்படி எழுதறீங்க!!
போன பதிவில் எனக்கு உரைக்கும்படி யார் நல்ல மாணாக்கன் என்று விளக்கியமைக்கு ஒரு நன்றி ஸார்!

ராமசுப்ரமணியம் ஸார் அசத்திட்டாரு..

காஷ்யபன் சாரும்...
பெரியவர்கள் சபையில் என்ன பேசுவது என்று தெரியவில்லை.....

geetha santhanam சொன்னது…

முதல் பென்ச் மாணவர்களெல்லாம் நல்லவர்களல்ல RVS. ஆசிரியர் அவர்களை நல்லவர்களென்று நம்பிவிடுவதால், பாடத்தைக் கவனிக்காமல் வாசல் வழியே வெளியே பார்க்க வசதியிருக்கு. எல்லா நாணயத்திற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.

அப்பாதுரை சொன்னது…

RVS.. இந்தக் கிளாசுல நீங்க ஆசிரியர் நாற்காலியில இல்லே உக்காரணும்?