84
ஆங்காலந் தூங்குவார் சாங்கால மேங்குவார்
தீங்கொழியா தீங்குழல்வார் காங்கியர் - ஊங்கென்ப
தீங்குள தாங்குள தாங்குள தீங்குளப்
பாங்குளந் தாங்குயர்ந் தோங்கு.
வாழும் நாளில் பேராசையும் பிற தீங்கும் ஒழிப்பதில் முனைப்பாக இராமல் சாகும் நாளில் (சொர்க்க நரகங்களுக்கு) அஞ்சியிருப்போர் இங்கேயே உழல்வார்கள். (அவ்வாறில்லாது) அங்குள்ள மேன்மையான சொர்க்கமே இங்குமுள்ளது என்ற உண்மையை உள்ளத்தில் தக்கவைப்பீர்! (வைத்து) உயர்ந்து மேன்மையடைவீர்! (என்றான் நசிகேதன்).
ஆங்காலம்: வாழ்நாள் (ஆகும் காலம்)
சாங்காலம்: இறுதிநாள் (சாகும் காலம்)
காங்கியர்: பேராசை பிடித்தவர்கள், தீவிர புலனுகர்ச்சியாளர், சுயநலக்காரர்
ஊங்கு: பெரும் மேன்மை (சொர்க்கம்)
பாங்கு: நிலை, உண்மை, தன்மை
தாங்கு: ஏற்றுக்கொள்
ஓங்கு: உயர்வு பெறு
சொர்க்கம் நரகம் பாவம் புண்ணியம் யாகம் யோகம் பற்றித் தான் சொன்ன கருத்துக்கள் அவையோரின் மனதிலே பதியத் தொடங்கியதை உணர்ந்த நசிகேதன், இன்னும் சொல்ல வேண்டியச் சில கருத்துக்களைச் சொல்ல இதுவே தருணமென உணர்ந்தான். கண்மூடித்தனம் பற்றிய உண்மைகளை உடைத்தெறியும் கருவிகளை அவையோருக்கு வழங்கியதைத் தொடர்ந்து, விழித்திருக்கும் அவசியத்தையும் வழிகளையும் சொல்ல முனைந்தான்.
"அன்புடையீர்.. என் உரையைத் தொடர்ந்து பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி" என்றான். அவையினரைப் பார்த்தான். "மாறுதலுக்காகச் சில கதைகள் சொல்ல விரும்புகிறேன். என் ஆசான் எனக்கு நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார். உங்களுக்குக் கதை கேட்கப் பிடிக்குமா?" என்றான்.
அவையினர் பலமாகத் தலையசைத்து, "சொல்லுங்கள், இளவலே" என்றனர்.
"அப்படியே ஆகட்டும்" என்ற நசிகேதன், கதை சொல்லத் தொடங்கினான்.
ஒரு நாட்டில் ஒரு அரசன் இருந்தான். தலைமுறை தலைமுறையாகச் செல்வத்திலே கொழித்தது அவனுடைய அரசாங்கம். அவனது அரண்மனை அண்டை நாட்டை விடப் பெரியது. அப்படிப்பட்ட அரசன், ஒரு நாள் அவையிலே அமைச்சர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான். இரண்டு காவலர்கள் முதியவர் போலிருந்த ஒருவரைப் பிடித்து வந்தார்கள். "மன்னா.. இவர் உங்களைக் காண வேண்டும் என்றார்" என்றனர்.
"என்ன?" என்றான் மன்னன்.
"ஐயா.. நான் வெளியூர். உலகம் சுற்றும் வாலிபன். எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருக்கும் பெரிய சத்திரத்திலே தங்குவது வழக்கம். இந்தச் சத்திரத்திலே இடம் கிடைக்குமா என்றேன். என்னைப் பிடித்து உங்கள் முன் கொண்டு வந்தார்கள். நீங்கள் தான் இந்தச் சத்திரத்தின் சொந்தக்காரரா?" என்றார் நபர்.
இதைக் கேட்ட அமைச்சர்களுக்கு பெருங்கோபம் வந்தது. "யாரடா நீ? எம் மன்னரின் இந்த அரண்மனையைச் சத்திரம் என்கிறாய்? உன்னை இப்போதே சிறையிலடைக்கிறேன்" என்றார்கள்.
நபர் விடாமல், "ஐயா.. சத்திரத்துக்குச் சொந்தக்காரரே சும்மா இருக்கிறார். நீங்கள் யார் என்னை சிறையிலடைக்க? நான் ஒரு தவறும் செய்யவில்லையே? சத்திரத்தில் இடம் கேட்டால் சிறையில் அடைப்பீர்களாமே? நல்ல கதை! இடமிருந்தால் காட்டுமய்யா.. பிடித்திருந்தால் தங்குவேன்.. சத்திர வாடகை எவ்வளவு சொல்லுமய்யா.. கேட்ட வாடகைக்கு மேல் இரண்டு பொன் தருகிறேன்" என்றார்.
இதைக் கேட்ட அமைச்சர்களுக்கு இன்னும் கோபம் வந்துவிட்டது. வாளுடன் நபர் மேல் பாய்ந்தனர். நபரை முற்றுகையிட்டு, "இவனை இங்கேயே வெட்டிக் கொல்ல அனுமதி கொடுங்கள் மன்னா!" என்றனர்.
மன்னன் நபரை வணங்கினான். நிதானமாக, "ஐயா.. சத்திரத்தில் நிறைய இடமிருக்கிறது. உங்களுக்கு இலவசம். எந்த அறை பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றான். இளைய அமைச்சரிடம், "அமைச்சரே.. இவருக்கு இந்தச் சத்திரத்தின் அறைகளைச் சுற்றிக் காட்டுங்கள். எந்த அறை பிடித்திருக்கிறதோ அதைக் கொடுங்கள்" என்றான். இளைய அமைச்சர் புரியாமல் நபரை அரண்மனையுள் அழைத்துப் போனார்.
மூத்த அமைச்சரும் பிறரும் வாளை உறையிலிட்டு மன்னனிடம் வந்தனர். "மன்னரே! என்ன இது! அந்த வழிப்போக்கன் ஏதோ சொன்னான் என்பதற்காக நீங்களும் அதை ஏற்று நடக்கிறீர்களே..?" என்றனர்.
மன்னன் சிரித்தான். "அமைச்சரே.. இந்த அரண்மனையில் இப்போது யார் இருக்கிறார்கள்? யாருக்குச் சொந்தம்?"
"உங்களுக்கு"
"இதற்கு முன் யார் இருந்தார்கள்? யாருக்குச் சொந்தம்?"
"உங்கள் தந்தை. மறைந்த மாமன்னருக்கு"
"அவருக்கு முன்?"
"ஐயா.. உங்கள் பாட்டனார். பேரரசர் அல்லவா? அவருக்குச் சொந்தம்"
"அவருக்கு முன்?"
அமைச்சர்களுக்கு மன்னனின் கேள்வி புரிந்தது. தலைகுனிந்து மன்னரை வணங்கினர்.
மன்னன் அமைதியாக, "இது சத்திரம் என்று அவர் சொன்னதில் என்ன தவறு? நான் உயிருடன் இருக்கும் வரையில் இங்கே தங்கியிருக்க எனக்கு வாய்ப்பும் உரிமையும் கிடைத்ததே தவிர இது எனக்குச் சொந்தமல்ல" என்றான்.
"மன்னா! அறியாமல் செய்த பிழையை மன்னியுங்கள். இப்பொழுதே அந்த வழிப்போக்கரிடம் மன்னிப்புக் கேட்கிறோம்" என்றனர்.
நசிகேதன் அவையோரைப் பார்த்தான். அவையிலே அமைதி. அனைவரும் கதையின் உட்பொருளை உணர்ந்து அமைதியாக இருந்தனர்.
"கதையிலே அரசன் சொன்னது போல அவனுக்கு அந்த அரண்மனையெனும் சத்திரத்தில் வசிக்க உரிமை உண்டு. சத்திரத்தை மேம்படுத்தக் கடமை உண்டு. சொந்தம் கொண்டாட உரிமை இல்லை. அன்புடையீர்! இந்த உலகம் ஒரு சத்திரம். நாம் இங்கே வழிப்போக்கர்கள். நாமும் நமக்குப் பின் வருவோரும் மேன்மையடையும் வகையில் இந்த சத்திரத்தைப் பேண வேண்டும். நம் நெறிகள் சத்திரத்தையும் அதில் தங்க வரும் வழிப்போக்கர்களையும் மேன்மையடையச் செய்ய வேண்டும். இந்த உடல் ஒரு சத்திரம். அதில் தங்கியிருக்கும் ஆன்மா ஒரு வழிப்போக்கன். விருந்தினன். ஆன்மாவுக்குக் கேடு வராத வகையில் உடலெனும் சத்திரத்தைப் பேண வேண்டும். புலனடக்க வேண்டும். சத்திரத்தைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
என்னுடையது என்ற எண்ணம் தீங்கை விளைவிக்கும். ஏமாற்றத்தைக் கொடுக்கும். அதன் விளைவால் மேலும் தீங்கைச் சேர்க்கும். நீங்களே உழைத்துச் சேர்த்தாலும் அந்தச் சொத்தோ பொருளோ நபரோ உடைமையோ உங்களுடன் இருக்கப் போவது சில காலமே. தாயோ சேயோ பொன்னோ பொருளோ.. 'எதுவும் எனதில்லை. என் சொந்தமில்லை' என்ற அறிவே புலனடக்கப் பயிற்சியின் முதல் படி. இதை அறியாதவர்கள், எத்தனை முயன்றும் புலனுகர்ச்சியின் பிடியிலிருந்து விடுபட இயலாது. எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்ற உணர்வுடன் செயல்பட்டால் புலனுகர்ச்சியின் தீவிரத்தைப் படிப்படியாகக் குறைத்து அடக்க முடியும். மேலும், கிடைத்ததை அனுபவித்து நிறைவோடு வாழவும் முடியும்" என்றான் நசிகேதன். "இன்னொரு கதை சொல்ல அனுமதியுங்கள்" என்றுத் தொடர்ந்தான்.
ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் திடீரென்று ஒரு குடில் தோன்றியது. 'யார் கட்டியது' 'யார் வசிக்கிறார்கள்' என்று தெரியாமல் ஊர் மக்கள் குழம்பினர். மெள்ள ஊரெல்லாம் பேசத் தொடங்கினார்கள். "மாயக்குடில் ஐயா!" என்றார் ஒருவர். "என்ன நான் சொல்வது?" என்றார் அருகிலிருந்தவரிடம். "உள்ளே ஒரு மிகப்பெரிய ஞானி இருக்கிறார். அவரைச் சந்தித்தால் எல்லா வித பாவங்களும் ஒழிந்து, புண்ணியங்களை மூட்டை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வரலாம்" என்றார் இன்னொருவர். "யாராவது உள்ளே சென்று பார்த்தார்களா, இல்லை நீங்களாகவே ஏதாவது சொல்கிறீர்களா?" என்று கேட்டார் மற்றவர்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த இரு இளைஞர்கள், "நாங்கள் இப்போதே சென்று பார்த்து வருகிறோம். விரும்பினால் உடன் வாருங்கள்" என்றனர். ஊரே அவர்களைத் தொடர்ந்து சென்றது.
குடிலுக்குள் சென்ற முதல் இளைஞர் வெகு நேரமாகியும் வரவில்லை. "பொறுங்கள். நான் உள்ளே போய் பார்க்கிறேன்" என்ற இரண்டாவது இளைஞர் சென்ற சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.
"என்னய்யா? முதலில் போனவரைப் பார்த்தீரா?"
"எங்கேயும் காணோம்" என்றார் திரும்பி வந்த இளைஞர்.
"பின் வாயிற்கதவு திறந்திருந்ததா? அடைத்திருந்ததா? கவனித்தீரா?"
"பின் வாயிலில் கதவு எதுவும் இல்லை. சுவற்றிலே சிறிதாக ஒரு பிளவு. அவ்வளவுதான்"
ஊரார் வியக்கத் தொடங்கினர். "அதுவழியாக வெளியேறியிருப்பார்"
"ஒருவேளை பேய் பிசாசு அடித்திருக்குமோ?"
"மாயக்குடில் என்றேனே, கேட்டீர்களா?"
"உள்ளே ஞானி இருக்கிறார் என்றல்லவா சொன்னீர்கள்..? இப்போது ஆளை அடித்துப் போடும் மாயம் அல்லவா இருப்பதாகத் தெரிகிறது?"
இப்படி ஊரார் பலவாறு பேசத்தொடங்க, ஒருவர் இளைஞரை அணுகிக் கேட்டார். "ஐயா.. அப்படி என்ன இருந்தது உள்ளே? என்ன பார்த்தீர்? விவரமாகச் சொல்லும்"
இளைஞர் தலையைச் சொறிந்தார். "ஒன்றுமில்லை உள்ளே. சுவரெங்கும் கண்ணாடி. அவ்வளவு தான். எங்கே பார்த்தாலும் கண்ணாடி" என்றார்.
"இது என்னய்யா கதை?" என்றார் ஞானி. "இதை ஒரு பாடமாக வேறு சொல்ல வந்துவிட்டாயே?"
"இங்கே என்ன நடந்தது? குடிலில் என்ன மாயம்? ஒருவருக்கு அகக்கண் திறந்தது; மற்றவருக்குப் புறக்கண் மூடவேயில்லை. அதுவே மாயம்" என்ற நசிகேதன் தொடர்ந்தான். "தன்னை அடையாளம் காணக்கூடிய எந்த வாய்ப்பையும் அறிவுள்ள மனிதன் தவற விடுவதில்லை. தன்னை அடையாளம் காண்பது, தான் அணிந்திருக்கும் உடையிலோ, நகையிலோ, பிற சொத்துக்களினாலோ அல்ல. எப்படி வாழ்கிறோம் என்பதே தன்னை அறியும், தன்னை வெளிப்படுத்தும், அடையாளம். தன்னை அறிவிக்கும் அடையாளம். வெளித்தோற்றத்தை வைத்து நம்மைப் பிறர் அறியலாம். உள்தோற்றத்தை வைத்து நம்மை அறிய, நம்மால் மட்டுமே முடியும். நாம் நம் உள்தோற்றத்தை அறிந்து நடந்தால், பிறரும் நம் உள்தோற்றத்தைக் காண முடியும். தன்னையறிந்தவர்கள் பிறருக்கும் உய்வைக் கொடுக்கிறார்கள்" என்றான் நசிகேதன். "ஆனால், இது எளிதல்ல. தன்னையறியும் வாய்ப்பு நம் முகத்தில் இடித்தாலும் நம்மில் பலருக்கு அது புலனாகாமல் போகும். வெளிப்பார்வையை மறைக்கும் தடைகளைப் போலவே, உள்பார்வையை மறைக்கும் தடைகளும் உண்டு. தான் என்ற உணர்வு, ஆறு வகை தீக்குணங்கள், தம்மை விட உயர்ந்தவரில்லை என்ற ஆணவம், தம்மினும் மெலியாரிடம் கருணையின்மை.. இவையெல்லாமே அகப்பார்வையை மறைக்கும் தடைகள். தடைகளை உடைத்து அகப்பார்வையை வளர்க்க வேண்டும்" என்ற நசிகேதன் தொடர்ந்து, "இன்னொரு கதை சொல்லவா?" என்றான். "சொல்லுங்கள்!" என்று அவையோர் உவகையோடு வேண்டினர்.
ஏழை இளஞன் ஒருவன் ஆற்றங்கரையில் நடந்து கொண்டிருந்தான். அங்கே ஒரு முதியவர், பொன் பொருள் துணி பயிர் உணவு என்று ஒரு ஓடத்தில் ஏற்ற முடியாத அளவுக்கு ஏற்றிக் கொண்டிருந்தார். இளைஞனைப் பார்த்தவர், "மகனே!.. இங்கே வா. எனக்கு ஒரு கை தா. இந்த உடைமைகளை ஓடத்தில் ஏற்ற வேண்டும்" என்றார்.
இளைஞன் அவனருகே சென்றான். "ஐயா! இந்த உடையை நான் எடுத்துக் கொள்ளவா? குளிருக்கு அடக்கமாக இருக்கும்" என்றான்.
முதியவர் மறுத்தார். "அடடா.. அது மறுகரைக்குப் போனதும் உதவும். அதற்காகச் சேர்க்கிறேன்" என்றார்.
இளைஞன், "ஐயா! ஓடம் தாங்காத அளவுக்கு இத்தனை உணவுகளை எடுத்துப் போக வேண்டுமா?" என்றான்.
முதியவர் சிரித்தார். "மகனே.. இதை மறுகரையில்.. அதற்காகச் சேர்க்கிறேன்.. அங்கே வாழ்வதற்காக எடுத்துச் செல்கிறேன்" என்றார்.
இளைஞன், "இத்தனை பொற்காசுகள் எதற்கு? இத்தனை நகைகள் மணிகள் எதற்கு?" என்றான்.
முதியவர் முறைத்தார். "மகனே.. இவையாவும் மறுகரையில் இன்பமாக இருக்கத் தேவையானவை.. அதற்காகச் சேர்க்கிறேன் என்பது இன்னுமா உனக்குப் புரியவில்லை?" என்றார்.
இளைஞன் சிரித்தான். "ஐயா! நீர் மறுகரையில் நின்றுகொண்டிருக்கிறீர் என்பது இன்னுமா உமக்குப் புரியவில்லை?" என்றபடி அங்கிருந்து அகன்றான்.
"மூத்தவரை ஏளனம் செய்யும் இந்தக் கதையைச் சொல்லும் உனக்கு எத்தனைத் திமிர்?" என்றார் ஒரு மூத்த ஞானி.
"அறிவுக்கு வயது வேறுபாடு இல்லை. எனினும் வயது வளர வளர ஆசைகளும் காரணமற்றப் பிடிப்புகளும் அதிகமாகின்றன. அதனால் இயல்பாகப் பெறக்கூடியத் தன்னறிவு ஒடுங்கி விடுகிறது. இளையோருக்கு வாழ்க்கை நெறி அறிவுரைகள் வழங்க முன் வரும் மூத்தோர், தாம் அந்தப் பாதையில் செல்ல மறுப்பதை நம் வீட்டிலும்.. சுற்றத்திலும்.. இதோ இந்த அரசவையிலும் பார்க்கிறோம். எனவே, அன்பர்களே! வயதை வளர்ப்பதோடு நில்லாமல் அறிவையும் வளர்ப்போம். அறிவு வளர்ந்தால் மட்டுமே வயதுக்கும் மதிப்பு என்பதை நினைவில் வைப்போம்.
அறியாத இடத்தைச் சொர்க்கம் என்று போற்றி, அறிந்த இடத்தை நரகமாக்குவது அறிவற்றவர் இயல்பு. நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பைச் செவ்வனே பயன்படுத்தி, நம் வாழ்க்கை நெறிகளில் தீமைகளைக் களைந்து நன்னெறிகளை வளர்த்தால், நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் பிறருக்கும் இந்த வாழ்வை.. இந்த உலகை.. சொர்க்கமாக்கலாம். இதை அறியாதவர்கள் வாழும் நாளிலே தீக்குணங்களை அறுக்க மறக்கிறார்கள். இந்த உலகை.. வாழ்வை.. தமக்கும் பிறருக்கும் பெரும் நரகமாக்குகிறார்கள். சாகும் நாளுக்கானச் சுமையைச் சேர்க்கிறார்கள். அல்லது சாகும் நாளிலே தீக்குணங்களின் விளைவுகளைப் போக்க, போலிச் சடங்குகளிலே இறங்குகிறார்கள். இவர்கள் அறிவற்றவர்கள்.
தீக்குணங்களே இல்லாதவரும் பல நேரம் அறிவற்றவராவர். எப்படி? நற்குணங்களை தாமும் பிறரும் உய்யும் வகையில் பயன்படுத்தாமல், சாகும் காலத்தில் பயன்படும் என்றப் பொய்யான நம்பிக்கையில் மூழ்கி, வளர்த்த நற்குணங்களின் விளைவுகளை இழக்கிறார்கள்..."
"அதிருக்கட்டும் மகனே!" என்று குறுக்கிட்டார் ஒரு பாமரக் கிழவி.
நசிகேதனின் அருகே வந்தார். நசிகேதனின் முகத்தைக் கைகளால் தொட்டுச் சுற்றிக் காற்றிலே முறித்தார். "கண்ணேறு!" என்றார். நசிகேதன் சிரித்து, "உங்கள் அன்புக்கு நன்றியம்மா!" என்றான். கிழவி தொடர்ந்தார். "ஐயா.. சொர்க்கம் அங்கே இல்லை என்று சொல்கிறாய். நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? இன்ன நேரத்தில் இன்ன சொல்லி இன்ன செய்தால் பாவங்கள் விலகும், புண்ணியங்கள் சேரும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறார்களே? தீ வளர்த்து மந்திரங்கள் சொல்லி உடல் வருத்தித் தரையில் புரண்டால் சொர்க்கம் கிடைக்கும் என்றார்களே? நேற்றுப் பிறந்த நீ.. இப்படி முரணாகப் பேசலாமா ஐயா? தவறில்லையா? எல்லாம் காரணத்தோடு தானே பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்?"
அவையிலிருந்த காவிகளும் தாடிகளும் சிரித்தார்கள். "சரியாகச் சொன்னாய் கிழவி! இதற்கென்ன சொல்கிறாய் நசிகேதா? நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?"
கிழவியும் கண்கள் மின்னப் புன்னகைத்தார். அவையில் கலந்தார். கிழவியை இதற்கு முன் எங்கோ கண்டதாகத் தோன்றியது நசிகேதனுக்கு. "எனக்குத் தெரியாது" என்றான் நசிகேதன். "எனக்குத் தெரிந்ததெல்லாம் இன்னொரு கதை. விரும்பினால் சொல்கிறேன்"
"சொல்லுங்கள்!" என்றது அவையின் ஒரு கூட்டம். நசிகேதன் தொடர்ந்தான்.
"ஒரு ஊரில் ஒரு மடம் இருந்தது. மடத்திலே ஒரு துறவி இருந்தார். மிகப் பெரும் ஞானி என்று புகழ்பெற்றவர். தினம் தவத்திலும் யோகத்திலும் திளைத்துப் புலன்களைக் கட்டியவர் என்று பெயரெடுத்ததால் அவரைக் காண அரசரும் மக்களும் படித்தவரும் பாமரரும் வந்த வண்ணம் இருந்தனர். அவரிடம் சீடராகச் சேர்ந்து மேன்மையடைய எண்ணி வந்தவர் ஏராளம். எண்ணற்றோர் சீடராக விரும்பியதால், ஞானி பத்து சீடர்களை ஒரு மாத காலமே ஏற்பார். அடுத்த மாதம் புதிதாகப் பத்து சீடர்கள்.
தினமும் காலையில் துறவி யோகத்தில் ஆழ்வது வழக்கம். அவர் என்ன செய்தாரோ அதையே சீடர்களும் பின்பற்றி யோகப் பயிற்சி செய்தார்கள். பகல் வரை இந்த யோகம். அதற்குப் பிறகு தன்னைக் காண வந்தவருடன் உரையாடுவார். சீடர்கள் சமைத்து வைத்த உணவை அருந்துவார். சிறிது உறங்குவார். மீண்டும் மாலையில் யோகம், தவம். இப்படிக் கழிந்து வந்தது அவருடைய வாழ்க்கை. சீடர்களுக்கு எந்தவித ஞானமும் வழங்கவில்லை. எனினும், என்றைக்காவது அவருடைய ஞான ஒளி தங்கள் மேல் பட்டு வீசும் என்ற நம்பிக்கையில் அவருக்குப் பணிவிடை செய்து வந்தனர் சீடர்கள்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் அவரைக் காண வந்தப் பாமரர்களில் ஒருவர் துறவிக்கு ஒரு கோழியை வழங்கி, "ஐயா, பரம ஞானி! உங்கள் அருளால் என்னுடைய வியாபாரம் செழிக்கிறது. இந்தக் கோழியை நீங்கள் இந்தப் பாமரனின் நன்றியாக ஏற்கவேண்டும்" என்று சொல்லி கோழியை அங்கேயே விட்டுப் போனார். ஞானியும் சீடர்களும் கோழியை மறந்தார்கள்.
காலையில் பூஜை வகைகளை முடித்த ஞானி, யோகத்தில் மூழ்கினார். சீடர்களும் சற்று ஒதுங்கி நின்று குருவைப் பின்பற்றி யோகத்தில் மூழ்கினர். கோழிக்குப் பசி. பசிக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடியது. ஒரு புழுவும் கண்ணில் படவில்லை. அங்குமிங்கும் சுற்றிய கோழி, ஞானி தவமிருக்கும் இடத்திற்கு வந்தது. அங்கே ஞானியெதிரே தரையில் அரிசியும் நெல்லும் சோறும் கிடந்ததைப் பார்த்தது. "ஆகா! பசி தீர்ந்தது" என்று எண்ணிய கோழி, வேகமாகக் கத்தியபடி உள்ளே வந்து தானியங்களைக் கொத்தித் தின்னத் தொடங்கியது. அதற்கு ஒரே மகிழ்ச்சி. பக் பக் பக் என்று ஓசை எழுப்பி, ஒரு தானியம் விடாமல் கொத்தத் தொடங்கியது. கோழியின் ஓசைகளால் யோகம் தடைபட, ஞானி கண் விழித்தார். சீடர்களிடம் கோழியை விரட்டியடிக்கச் சொன்னார். சீடர்களும் அவ்வாறே செய்தனர்.
சில கணங்களில் கோழி திரும்பியது. பக் பக் பக் என்றது. ஞானிக்குப் பொறுக்கவில்லை. ஏசினார். "இந்தச் சனியனை ஓரமாகக் கட்டிப் போடுங்கள்" என்றார். சீடர்களும் அவ்வாறே செய்தனர். அதற்குப் பிறகு, தினமும் ஞானி தவம் தொடங்குமுன் சீடர்கள் கோழியைப் பிடித்துக் கட்டிப் போட்டனர். வெளியிலிருந்து சில நேரம் ஞானியைக் காணவந்தோரும் இதைக் கவனித்தனர். பழைய சீடர்கள், புதிதாகச் சேர்ந்த சீடர்களுக்கு கோழியைப் பிடித்துக் கட்டும் ஒழுங்கினை மறவாமல் போதித்தனர்.
சில மாதங்களில் துறவி நோய்வாய்ப் பட்டார். இருந்த சீடர்களிலே மூத்தவர் ஒருவரைத் தன் மடத்துக்கு வாரிசாக நியமித்துவிட்டு இறந்து போனார். புதிய ஞானியும் பூஜைகளையும் தவங்களையும் செய்து வந்தார். கோழியை மறக்காமல் கட்டி வந்த சீடர்கள், ஒரு நாள் கோழியைத் தேடிக் கொண்டு போனார்கள். பார்த்தால்.. கோழி இறந்து கிடந்தது. குரு பூஜையைத் தொடங்குமுன் கோழியைக் கட்ட வேண்டுமே? என்ன செய்வது? ஊரிலிருந்து இன்னொரு கோழியைப் பிடித்து வந்த சீடன், "இதைக் கட்டுவோம்" என்றான்.
"எங்கே பிடித்தாய் புதுக் கோழியை?" என்றார் ஞானி.
"மகாப்பிரபு! ஞானமூர்த்தி!! எல்லாம் உங்கள் அருள்! ஊரிலே பிடித்தேன் ஐயா! கோழி இறந்துவிட்டதைச் சொல்லி தவம் செய்யக் கோழி வேண்டும் என்றேன். நீங்கள் தவம் செய்யும் பொழுது கோழி கட்டுவதை ஏற்கனவே பார்த்திருக்கும் ஊர் மக்கள், தாங்களாகவே ஆளுக்கு ஒரு கோழி கொடுக்க முன் வந்தார்கள். நான் அவசரமாக முதலில் கிடைத்தக் கோழியைப் பிடித்து வந்தேன்" என்றான்.
"எல்லாம் என் குருவின் மகிமை!" என்ற ஞானி, பழைய குருவை மனதில் எண்ணி, அமைதியானப் புன்னகையுடன் கோழியைக் கட்டுமாறு பணித்தார். குருவின் கருணையே வடிவானப் புன்னகையில் மெய் சிலிர்த்தச் சீடர்கள், கோழியைக் கட்டினார்கள். தவம் தொடர்ந்தது.
கோழியைக் கட்டித் தியானம் செய்யும் வழக்கம் அந்த ஊரிலும் மெள்ளப் பரவியது.
கதை சொல்லி முடித்த நசிகேதன் அவையோரைப் புன்னகையுடன் பார்த்தான்.
"இது கதையா புதிரா?" என்றார் ஒருவர்.
"எதையோ கேட்டால் கதை சொல்கிறது பிள்ளை. இதையும் கேட்க வந்தோம் பார்!" என்றார் அரசவை ஞானி.
"ஐயா.. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது" என்றான் ஒரு இளைஞன்.
"ஒரு கோழியின் தொந்தரவைப் பொறுக்க முடியாதவர் துறவியே அல்ல. அவர் புலனடக்கவில்லை" என்றார் அவையில் ஒரு பெண்மணி.
"சீடர்களுக்கும் அறிவில்லை, குருவுக்கும் அறிவில்லை. கோழியை ஏன் கட்ட வேண்டும் என்று ஒருவர் கூட சிந்திக்கவில்லை. கண்மூடிகள்!" என்றான் இளைஞன்.
"கண்மூடித்தனம் தொடர்வதால், அதற்கு இல்லாத காரணம் ஒன்றும் உண்டாகி விடுகிறது. இல்லாத காரணத்தை ஏற்றுக் கண்மூடித்தனமும் தொடர்கிறது. மிகக் கொடிய சுழற்சி!" என்றார் பெண்மணி.
நசிகேதன் சிரித்து, "நீங்கள் சொல்வது அனைத்தும் சரியே. புலனடக்கம் என்பது அகப்பார்வையில் வருவது. இவர்கள் புறப்பார்வையிலேயே உழன்றதால் இவர்களால் புலனடக்க முடியவில்லை. முடியாது. மாறாக, கோழிகட்டுதல் போன்ற ஒரு அடையாளம் தேடிக் கண்மூடித்தனமாக நடந்தார்கள். பிறருக்கு வழிகாட்ட வேண்டியவரான ஞானியே கண்மூடியாக இருந்ததால், அவரைக் குருவாக ஏற்ற சீடர்களும் ஊர் மக்களும் கோழிகட்டிக் கண்மூடினார்கள்" என்றான்.
அவையோர் ஆமோதித்தனர்.
"நம் முன்னோர்கள் முட்டாள்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க எனக்குத் தகுதியோ வயதோ இல்லை. நம் முன்னோர்கள் முட்டாள்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய அவசியம் இல்லை. தீர்மானித்துப் பயனும் இல்லை. நாம் முட்டாள்களா இல்லையா என்று தீர்மானிப்போம். நம் சந்ததி நம்மை முட்டாள்கள் என்று தீர்மானிக்கும் விதத்தில் நம் சொல்லும் செயலும் அமையுமா என்பதே கேள்வி.
சடங்குகளின் வேர்களை ஆராய வேண்டியதில்லை. சடங்குகளால் மேன்மை வருவதில்லை என்பதைப் புரிந்து கொண்டாலே நாம் மேன்மைப் பாதையிலே அடியெடுத்து வைத்தவர்களாகிறோம். அறிவாலும் நெறியாலும் கிடைக்காத மேன்மை சடங்கினாலே கிடைக்காது.
அங்குள்ளதாக நீங்கள் எண்ணும் சொர்க்கம், இங்கு உள்ளது. இங்குள்ளதே அங்கும் உள்ளது. இதை உணர்வீர். வேறு சொர்க்கம் நரகம் இல்லை. சொர்க்கத்தையும் நரகத்தையும் நாமே உருவாக்குகிறோம். இங்கே உருவாக்குகிறோம். அல்லது அங்கே உருவாக்குகிறோம். இதை அறிந்து நடப்பவர்களுக்கு சொர்க்கம் நரகம் பற்றிய அச்சமே வருவதில்லை. வாழும் நாளிலே மேன்மையைப் பற்றிய இவர்கள், சாகும் நாளில் அஞ்சுவதில்லை, ஏங்குவதில்லை. இதை அறியாது நடப்பவர்கள் சாவைக் கண்டு அஞ்சி ஒடுங்குகிறார்கள். ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குப் பயணம் செய்கிறார்கள்.
ஆதலின் அன்புடையீர்! சொர்க்க நரகங்கள் பற்றிய இந்த உண்மையை உளத்தில் ஏற்றித் தக்க வைப்போம்! உண்மையறிவைப் பெற முயல்வோம்! உண்மையறிவைப் பெற்று மேன்மையடைவோம்!" என்றான் நசிகேதன்.
அவையினர் நசிகேதனை வாழ்த்தினர். நசிகேதனின் பார்வை கிழவியைத் தேடியது.
நசிகேதன் சொன்னக் கதைகளையும் பாடங்களையும் கேட்டு அவையோர் மகிழ்ந்ததைக் கண்ட மன்னன் வாசன் மனதிலும் ஒரு எண்ணம் வேர்விட்டது. தனக்கும் தன் நாட்டு மக்களுக்கும் நசிகேதனை விடச் சிறந்த ஆசான், குரு, தலைவன் வேறு எவரும் இல்லை என்ற எண்ணம்.
►