வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/01/28

அம்பரம் எளிதல்ல என்றான் எமன்


22
வாரியில் ஏரியில் பாரியில் வீழினும்
மாரியது மாறி மழையாகும் - சீரிணரும்
நீருக்கு வேரறியா நீர்போலே ஈருலகும்
பேருக்குத் தேடுவார் பேறு.

    டலிலோ ஏரி குளங்களிலோ நிலத்திலோ விழுந்தாலும், மழைநீர் உருமாறி மீண்டும் மழைநீராகவே விழுகிறது; தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து வேறு விதமாக மாறத் தெரியாத நீரானது, எப்படி மழையாக மாறி கடல் நதி நிலம் என்றுச் சுற்றி வருகிறதோ, அதுபோல், ஞானிகளும் தங்களைப் பற்றிய உண்மையை அறியாமல், பிறவாமை எனும் பேற்றினைத் தேடி என்னுலகம், பொன்னுலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கும்* வந்து போகிறார்கள் (என்று எமன் சொன்னான்).

*எமனுலகே சொர்க்கநரகங்களின் முதல்படி என்று உலகின் பிரபல மதங்களில் நம்பப்படுகிறது. ஒருவர் செய்த நல்வினை தீவினைகளின் அளவுக்கேற்ப நரகம் சொர்க்கம் இரண்டிலுமே வாழும் வாய்ப்பு கிடைப்பதாகவும் - பிரிந்த உயிரின் பயணத்தில் முதல் நிறுத்தம் எமனுலகம் என்றும் - அங்கே நல்வினை தீவினை இரண்டையும் கணக்கிட்டு, அதற்கேற்ப நரக, சொர்க்க வாசத்தின் காலம் நிர்ணயிக்கப்படுவதாகவும் - உயிரானது முதலில் தீவினைகளின் பலனை நரகத்தில் அனுபவித்து விட்டு, பிறகு நல்வினைப் பலனைச் சொர்க்கத்தில் பெறுவதாகவும் - சொர்க்கவாசக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறவியெடுப்பதாகவும் - சொல்லப்படுகிறது.
  வாரி: கடல்
  பாரி: பூமி, நிலம்
  மாரி: மழை
  சீரிணர்: கற்றோர், ஞானிகள்
  வேர்: அடிப்படை, உண்மை, காரணம்


    ரு கற்பனைக் கேள்வி: நீராக மாறி மழையாகத் திரும்பி அலுத்து விட்டதால், அறிவு வந்து தன் நிலையைப் புரிந்து கொண்ட எரிவாயு, இனி நீர்வாயுவுடன் இணைவதில்லை என்று தீர்மானித்தால் என்ன ஆகும்?

    எதிர்பார்த்த பலன் தராத எத்தனையோ செயல்களை நாம் தொடர்ந்து செய்கிறோம். மதிக்காத பிள்ளை, அன்பில்லாத உறவு, பிடிக்காத தொழில், ஏமாற்றும் அரசாங்கம், முன்னேற்றமில்லாத வேலை, வளராத செல்வம்... என்று வீட்டிலும் வெளியிலும் பிடிப்போ திருப்தியோ ஏற்படாவிடினும், நாம் செய்ததையே செய்துச் சுழன்று மாற்றத்துக்கு ஏங்குகிறோம். மாற்றம் வேண்டும் என்று உண்மையாகவே எண்ணினால், செய்ததையே திரும்பச் செய்வோமா? இருந்தாலும், சமூகம் கடமை வயது என்று ஏதோ ஒரு இயலாமையில் சிக்கிச் சுழல்கிறோம்.

    குழியிலிருந்து எழுந்து வர முதலில் என்ன செய்ய வேண்டும்? தோண்டுவதை நிறுத்த வேண்டும். நமக்குள் இருக்கும் எரிவாயு, நீர்வாயுக்களை அறிந்து கொள்ள வேண்டும். மாறுவது எளிதல்ல. ஒரு நிலையில் மாற்றம் வேண்டுமெனில் முதலில் அறியவேண்டியது அந்நிலை ஏற்படக் காரணமும் அடிப்படையும் யாதென்பதே. அப்போதைக்கு ஒரு மாத்திரையை விழுங்கித் தப்பிக்கலாமே ஒழிய, தலைவலியின் காரணத்தைப் புரிந்து கொண்டாலே வலி வராமல் தடுக்க முடியும். காலையில் எழுந்தவுடன் வருகிறதா, சாப்பிட்டதும் வருகிறதா, தூசு படிந்த இடங்களில் நடமாடுகையில் வருகிறதா, தொழில் பணம் நட்பினால் உண்டான அழுத்தத்தால் வருகிறதா, என்ன சாப்பிட்டோம், தூங்கும் பொழுது பல்லைக் கடிக்கிறோமா, மலச்சிக்கலா, அலர்ஜியா, உடலில் நீர் குறைவா,... எத்தனையோ காரிய-காரணங்களை ஆய்ந்து ஆணிவேர்க் காரணத்தைக் கண்டறியலாம். வலியைத் தடுக்கலாம்.

    ஆணிவேர்க் காரணத்தை ஆய்ந்து கண்டால் மாற்றம் ஏற்படுத்துகிறோமோ இல்லையோ, பொருந்தாதத் திருத்தங்களை நிறுத்தலாம். கண்மூடித்தனத்தை நிறுத்தலாம். தோண்டுவதை நிறுத்தலாம். வெளியே வருவது அடுத்த செயல். 'root analysis' என்று காரண-காரிய ஆய்வைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள் மேலாண்மை மற்றும் அறிவியல் நிபுணர்கள்.

    பொறுப்புள்ள ஆசிரியன், மாணவனின் திறமையைத் தொடர்ந்து சோதிக்க வேண்டும். 'அறிவுப் பாதையில் முன்னேறுவானா? தகுதியிருக்கிறதா?' என்று சோதித்து, அதற்கேற்ற வேகத்தில் தன் மாணவனை நடத்திச் செல்வது நல்ல ஆசிரியனின் இலக்கணம்.

    அறிவுள்ள மாணவன், ஆசிரியனைத் தொடர்ந்துத் தூண்ட வேண்டும். 'எத்தனை நாள் அரிச்சுவடியைச் சொல்லித் தருவாய், அடுத்தது என்ன?' என்று முன்னேற்றத்தை எடுத்துக் காட்டித் தூண்ட வேண்டும். ஆர்வமும், புரிந்து கொள்ளும் பக்குவமும் இருப்பதைக் காட்ட வேண்டியது, நல்ல மாணவனின் இலக்கணம்.

    மன் சொன்னதன் உட்பொருள்: ஒவ்வொரு காரியத்துக்கும் காரண அடிப்படைகள் இருக்கின்றன; தன்மை நீர்மைகள் உள்ளன. அதைப் புரிந்து கொண்டாலொழிய மாற்றம் ஏற்படாது. பிறப்பற்ற இடம் என்று சொர்க்கத்துக்கு வந்தாலும் அளிக்கப்பட்ட காலம் முடிந்ததும், மீண்டும் பிறவியெடுத்தாக வேண்டும். பிறவாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? சொர்க்கவாசக் காலத்தை வரையறையின்றி நீடிக்க வேண்டும். சொர்க்கவாசத்தை நீடிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    எமன் அருமையான ஆசிரியன். நசிகேதன் கேட்ட வரத்தால் வியந்தாலும், 'விவரங்களைப் புரிந்து கொள்வானா சிறுவன்?' என்று சோதிக்கவும், 'அம்பரம் போகும் வழி எளிதாக இருக்கும்' என்ற எதிர்பார்ப்பைக் கட்டவும், பொன்னுலகம் பற்றிச் சொன்னான். 'புரிந்தவருக்கும் பிந்தும் பொன்னுலகம்; அங்கே வரும் சீரிணரும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல் படுகிறார்கள். நீரின் வேரறியார்' என்று நசிகேதனின் வயதொத்த அறிவுக்கு மீறிய கருத்துக்களை எடுத்துச் சொன்னான். பிறவி என்பது தலைவலி. சொர்க்கமும் நரகமும் தலைவலி மாத்திரைகள். திருகுவலி தரக்கூடிய மாத்திரைகளே தவிர தடுக்கவல்லவை அல்ல. நீருக்குள் புதைந்திருக்கும் எதிர்நிலைகள் போல் மனிதனுக்குள் புதைந்திருக்கும் எதிர்நிலைகளைப் புரிய வைப்பது காரண-காரிய ஆய்வு. ஆய்வின் பலனாகக் கிடைப்பது மெய்யறிவு. மெய்யறிவு பெறும் வரை, 'மழைநீர் மீண்டும் மீண்டும் கடல், நிலம் என்று சுற்றுமே தவிர வேறு நிரந்தரமான இலக்கில்லை' என்ற உதாரணத்தோடு பிறவிச் சுழற்சியின் பரிதாபக் குழியைச் சுட்டினான். அந்தக் குழியிலிருந்து எழ, வேரறிவு அல்லது உண்மையறிவு தேடும் அவசியத்தைச் சுட்டினான். கற்ற ஞானிகளும் எளிதில் மெய்யறிவு பெறுவதில்லை என்று சொல்லி நசிகேதனின் எதிர்பார்ப்பைக் கட்டினான்.

    நசிகேதன் நல்ல மாணவன். முதலில் 'பிறப்பில்லா இடம்' பற்றிச் சொல்லி தன் அறிவுத்தேடலைக் காட்டினான். பிறகு, 'அம்பரம் தா' எனாமல் 'அம்பரம் ஏகும் வழியைச் சொல்' என்று கேட்ட விதத்தில், காரியத்தை விடக் காரணத்தை அறிய ஆர்வமிருப்பதையும் எடுத்துச் சொன்னான்.

    இருவருமே தங்கள் தகுதிகளை வெளிப்படுத்தி விட்டார்கள். "சொன்னதையே திரும்பச் சொல்லாமல், மேற்கொண்டுச் சொல்லுங்க வாத்தியாரே" என்று பார்வையால் கேட்டாலும், எமனின் பதிலுக்குப் பணிவுடன் காத்திருந்தான் நசிகேதன்.

2011/01/25

அம்பரம் உள்ளது என்றான் எமன்


21
அம்பரமும் அங்குபுகும் நேர்வழியும் நானறிவேன்
எம்பலமும் எட்டாத வட்டமது - வம்பன்று
பொன்னுலகம் பிக்கும் புரிந்தவர்க்கும் பேதைக்கோ
என்னுலகம் என்றும் எதிர்.

    ன் ஆட்சிக்கு அப்பாற்பட்டப் பொன்னுலகையும் அங்கு செல்லும் நேர்வழியும் அறிவேன். உண்மையில், அறிவுள்ளவராயினும் பொன்னுலகம் அடையத் தாமதமாகும்; அறிவற்றவரோ நானாளும் எமனுலகத்தை எளிதில் அடையலாம்.

வம்பன்று: பொய்யல்ல, வீண் பேச்சல்ல
பிக்கும்: பிந்தும், தவறும், தள்ளிப்போகும்
எதிர்: இலக்கு, உடனே புலப்படுவது



    திர்பார்ப்புகளைச் சமாளிப்பது ஒரு திறமை என்றால், நம்மிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்று வரையுறுத்துவதும், பிறரின் எதிர்பார்ப்புகளை எதிர்பார்ப்பதும் இன்னும் நுட்பமான கலைகள். குடும்பத்திலோ சுற்றத்திலோ, பள்ளி அலுவலகம் மற்றும் சமூகத்திலோ நம்மிடம் எதிர்ப்பார்ப்பதை - பணம், வீடு, வசதி போன்ற விலை மதிப்புக்குட்பட்டவையோ அல்லது அன்பு, காதல், கருணை, ஆற்றல் போன்ற விலை மதிப்புக்கப்பாற்பட்டவையோ எதுவானாலும் - புரிந்து கொண்டால் நம்மால் செயல்படுத்த முடியும். நம் எதிர்பார்ப்பைத் தெளிவாகச் சொன்னால், அடுத்தவர் செயலாக்கத்துக்கு உதவும். வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதும் தெளிந்து சொல்வதும் நிம்மதிக்கு மிக அவசியம். தவறினால் வீட்டிலும் வெளியிலும் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். 'சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்', 'விரலுக்குத் தகுந்த வீக்கம்' போன்ற முதுமொழிகள் சொல்லும் மேலாண்மைத் தந்திரம் இதுவே. 'expectation management' என்கிறோம் ஆங்கிலத்தில்.

    நம்மால் முடியுமா அல்லது நம்மை நம்பியிருப்பவரால் முடியுமா என்றும் பல தருணங்களில் சிந்தித்து, எதிர்பார்ப்புகளை ஒரு வரம்புக்குள் கட்டிவைக்க வேண்டியிருக்கிறது. இத்தனை செலவு செய்யலாம், இத்தனை நேரம் விளையாடலாம், டிவி பார்க்கலாம், இத்தனை நேரம் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற வீட்டு எதிர்பார்ப்புகள்; இத்தனை லாபம் சம்பாதிக்க வேண்டும், இத்தனை விற்க வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும், இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும், இத்தனை தொழிற்சாலைகளை மூட வேண்டும் போன்ற தொழில் தொடர்பான எதிர்பார்ப்புகள்; இத்தனை சட்டங்கள் தீட்ட வேண்டும், இத்தனை பொதுநலத் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும், இத்தனை போக்குவரத்து, பாசன, மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் போன்ற சமூகத் தொடர்பான எதிர்பார்ப்புகள்; இவற்றைச் சமாளிக்க, நம் ஆக்கத்திறனுக்கும் வசதிக்கும் ஏற்ற வரம்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. இதில் தவறில்லை. முதலில் சற்று மனத்தாங்கலை அளித்தாலும், பெரும் ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவுவதோடு சிறு வெற்றிகளைப் பெறவும் வழி செய்யும் தந்திரமாகும். எதிர்பார்ப்புக் கட்டல், எண்ண வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

    மன் யோசித்தான்: வரம் கேளென்றால் இப்படி ஒரு வரம் கேட்டு விட்டானே? தனித்து விடப்பட்ட சிறுவனிடம் 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டால், "அம்மா வேண்டும், அப்பா வேண்டும்" என்று அழுது கேட்பது இயற்கை. சற்றே முதிர்ச்சி தென்பட்டாலும் முதலில் கேட்ட வரம் அந்தவகை தான். ஆனால் இரண்டாவது வரம் விசித்திரமாக இருக்கிறதே? பிறவிப்பிணி சுற்றாத இடத்தைப் பற்றியும் அங்கு செல்லும் வழி பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு, விவரங்களை வரமாகக் கேட்கிறதே இந்தப் பிள்ளை? எங்கிருந்து எங்கே தாவுகிறான் இவன்! இந்த வரத்தை அளிப்பதால் இவனுக்கு ஏதாவது பலன் கிட்டுமா? விவரங்களைச் சொன்னால் புரிந்து கொள்வானா? நன்கு புரிந்தவர்கள் கூட செயல்படுத்தத் தயங்கும் விவரமாயிற்றே? இவனோ பத்து வயது நிரம்பாத பிள்ளை, இவனுக்குப் புரியுமா? இந்த வரத்தைக் கொடுத்தால் அடுத்து வேறென்ன கேட்பானோ?

    பலவாறு சிந்தித்த எமன், கேட்ட விவரங்களைச் சொல்லுமுன் நசிகேதனின் எதிர்பார்ப்புகளை ஒரு கட்டுக்குள் வைக்க முற்பட்டான். பொன்னுலகத் தன்மை பற்றி முதலில் சொன்னான்.

2011/01/21

நசிகேதன் வேண்டிய இரண்டாம் வரம்


20
முன்சொன்ன மாண்பு மகப்பலனாம் மாலையும்
இன்னொன்று தந்தால் இதுதாரும் - என்னிலையில்
பூமியிற் சென்றுநான் பேறுறச் சொல்லுவீர்
மீமிசை வேள்வி மணம்.

    நான் முன்பு சொன்ன அம்பரமெனும் மேன்மை, வேள்வியின் பலனாகக் கிடைக்கும் என்றார்கள். என்னுடைய இதே நிலையில் பூமிக்குச் சென்று, பின்னர் அந்த மேலுலக மேன்மையை அடைய, நான் செய்ய வேண்டிய வேள்வியின் விவரத்தைச் சொல்லுங்கள். இன்னொரு வரம் தருவதானால் இதையே தாருங்கள்.

மாண்பு: மேன்மை, இங்கே சொர்க்கத்தைக் குறிக்கிறது
மகப்பலன்: வேள்விப்பலன்
மாலை: வரம்
மீமிசை: மீ+மிசை, மேலுக்கும் மேல், இங்கே எமனுலகுக்கும் அப்பால் என்று பொருள்
மணம்: குணம் அல்லது சிறப்பு, இங்கே வேள்வியின் விவரத்தைக் குறிக்கிறது



    தெளியச் சொல்வதும் திருந்தச் செய்வதும் முக்கியம். சிறு வயதிலிருந்தே பழகியும் பழக்கியும் வளர்க்க வேண்டியவை. தெளிந்த சிந்தையிருப்பினும் அது தெளிவான சொல் அல்லது செயலில் வெளிப்படவில்லையெனில், பெரும் இக்கட்டில் சிக்கவைக்கும்.

எண்ண வெளிப்பாட்டின் சிறப்பு, குறிக்கோள்-தேவை-செயல்பாடு இவற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்வதே. 'effective communication builds a sense of purpose' என்பார்கள். பயன் தொட்ட, ஒரு குறிக்கோளையொட்டிய பேச்சு, எதிர்பார்த்த விளைவுகளைக் கொடுக்கும்.
"சார், தாம்பரத்துக்கு எப்படிங்க வழி?" | "இப்படியே நேராப் போங்க"
"அம்மா, என்னோட ஸ்கூல் புத்தகம் காணோம்.." | "டிவி கிட்டே பாத்தனே?"
"டாக்டர், எனக்கு ஏன் இப்படி அடிக்கடி தலை சுத்துது?" | "எல்லாம் சரியாயிடும்"
"சேல்ஸ் ரிபோர்ட் ரெடியாயிடுச்சா? | லஞ்சுக்குப் போயிருக்காங்க மேடம்"
"ஏம்மா, இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதம் தானே?" | "உங்க இஷ்டம்பா"
மேற்கண்டது 'directional communication', இருதரப்பிலும் மேம்போக்கான வெளிப்பாடு. மேற்கண்ட உரையாடலில் நட்பும் உதவியும் தொனித்ததா? இல்லையென்று சொல்ல முடியாது. தெளிவானத் தகவல் பரிமாறப்பட்டதா? இதனால் யாருக்கு என்ன பலன் கிடைத்தது? சமீபச் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிடிஷ் இளவரசுக்கு ஒரு பரிசளித்தார்: இருபத்தைந்து டிவிடி அடங்கிய அமெரிக்கத் திரைப்படத் தொகுப்பு. ஒரு சிறு சிக்கல்: அமெரிக்கச் சீர்மையில் வடிவாக்கப்பட்ட டிவிடி இங்கிலாந்தில் இயங்கவில்லை. 'நானென்ன ராகெட்டா கேட்டேன்? வெறும் டிவிடி! இதைக்கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதா?' என்று தன் செயலாளரிடம் எரிந்து விழுந்தாரம். ஒபாமாவுக்கு அவமானம்; அமெரிக்க மக்களுக்கு அவமானம்; இதில் உண்மையான இழப்பு, அந்த டிவிடி அமைத்துக் கொடுத்தவருக்கு வேலை பறிபோனதே. 'எனக்குத் தான் அறிவில்லை; உனக்கு எங்கே போச்சு அறிவு?' என்று அடிக்கடி சொல்கிறோம், கேட்கிறோம். இது முட்டாள்தனமான வாதம் என்பது சற்றுச் சிந்தித்தாலே புரியும். எனக்கு மிக நெருங்கியவர்களிடம், "இது கூடத் தெரியாதா?" என்று பல முறை கேட்டிருக்கிறேன்; பிறகு என் கேள்வியின் முட்டாள்தனத்தில் நொந்திருக்கிறேன். மேற்சொன்ன உதாரணங்கள் சாதாரண பாதிப்பை உருவாக்க வல்லவை; தீவிர பாதிப்புகளை உண்டாக்கும் வெளிப்பாடுகளில் கூட மேம்போக்கையே அதிகம் காண்கிறோம். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிகம் மேம்போக்கான வெளிப்பாட்டு முறையையே பயன்படுத்துவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரம் திடுக்கிட வைக்கிறது. தன் முயற்சியினாலான தனி வாழ்க்கை, பதினெட்டு வயதுக்குப் பிறகே தொடங்குகிறது. நம் வாழ்வின் மனக்கசப்புகளுக்கு, நம்முடையத் தெளிவற்ற, மேம்போக்கான சொல்லும் செயலுமே காரணங்களோ?

மாறாக, 'precise communication' என்பது, தெளிந்து சொல்லுதல். 'இதனை இதனால் இவ்வண்ணம் இந்நேரம் இதுவாக' முடிக்க, விவரத்தோடு ஐயமறச் சொல்லுதல். ஐயம் இருந்தால் தானே சந்தேகம், ஏமாற்றம், எரிச்சல் எல்லாம்? 'course correction' என்பது இன்னொரு கலை. முதலில் சொன்னது எதிர்பார்த்த பலனைத் தராவிட்டால் அதையறிந்துத் தவறைத் திருத்தும் கலை. திருத்துவதை உடனே செய்ய வேண்டும். அல்லது மறுவாய்ப்பு கிடைக்காமலே போய்விடலாம். தெளிந்து சொல்லவேண்டும்; அப்படியும் திருத்தம் தேவையானால் உடனே திருந்தவோ திருத்தவோ வேண்டும்.

தெளிந்து சொல்லாமல், சொன்னதோ செய்ததோ தவறாக முடிந்தால் அதையும் திருத்தாமல், சொன்னதை வீம்புக்காகப் பிடித்துக்கொண்டு 'முயலுக்கு மூன்று கால்' என்று சாதிப்போரை நாம் தினமும் வீட்டிலும் வெளியிலும் சந்திக்கிறோம். பல நேரம் நாமே அவ்வாறு நடந்து கொள்கிறோம். தெளிந்த சொற்செயல் பழகியும், நேரத்தோடு திருந்தவோ திருத்தவோ தவறியதே நம் வாழ்வின் பல தோல்விகளுக்குக் காரணம். 'சொல்வது தெளிந்து சொல்' என்று பாரதி சொன்னது நமக்காகவே. நாமெல்லாம் கிணற்றுத்தவளையாக வாழ்ந்த போதே இந்த நிலையென்றால், பரந்த உலகக் கலாசாரக்குழம்பில் வளர்ந்து ஆளாகப் போகும் தலைமுறைகள் தெளிந்த வெளிப்பாட்டைப் பழக வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வார்த்தைகள் போதாது.

    சிகேதன் யோசித்தான். தான் கேட்ட முதல் வரத்தை எமன் வழங்கியதில் தவறில்லை. தான் கேட்ட விதத்திலே பிழை என்று தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் பக்குவம் அவனிடம் இருந்தது. இரண்டாவது வரத்தில் அவ்வாறு குழப்பம் வரக்கூடாது என்று தீர்மானித்தான். முதலில் சொர்க்கம் பற்றிச் சொல்லி, அந்த சொர்க்கத்தை அடையும் வழியான வேள்வியைப் பற்றியும் சொல்லி, அதன் பிறகு, 'இனி நான் அந்த வேள்வியைச் செய்து சொர்க்கத்தை அடைய வேண்டி அதற்கான விவரங்களைச் சொல்' என்று தன் குறிக்கோள், தேவை இரண்டையும் பிட்டு வைத்தான்.

இனி முதல் வரத்தின் திருத்தம். 'திருப்பி அனுப்புவதைப் பற்றித் தெளிவாகக் கேட்க மறந்தேன். முதல் வரத்தைத் திருத்த அனுமதியுங்கள்' என்று கேட்டால் அதுவே வரமாகிவிடுமே? வந்திருப்பது எமனுலகம். இதற்கு அப்பாலிருக்கும் பிறவிப்பிணி இல்லாத அம்பரத்தை அடைய, வேள்வி செய்ய வேண்டும் என்கிறார்கள். பிறவிப்பிணி துறக்க வேள்வி செய்வதென்றால் எங்கே செய்ய வேண்டும்? பிறவிப்பிணி இருக்குமிடத்தில் தானே? பூமிக்குச் சென்றால் வேள்வி செய்யலாம். வேள்வியைப் பற்றிய வரத்தோடு முதல் வரத்தையும் திருத்திவிடத் தீர்மானித்து, "இதே நிலையில் பூமிக்குச் சென்று" என்பதையும் சேர்த்துக் கேட்டான்.

பிறவிப்பிணியற்ற நிலை வேண்டும் என்று நேராகக் கேட்டிருக்கலாமே? சாப்பாட்டைக் கேளாது, சமையல் கலையை வரமாகக் கேட்பானேன்?

தன்னறிவைப் பொதுவாக்குவது உயர்ந்த சான்றோர் குணம். நசிகேதன் வேள்வி விவரம் கேட்டது தனக்காக மட்டுமல்ல, தன் தந்தைக்காக மட்டுமல்ல; தன்னைப் போல் பூமியில் வாடும் எண்ணற்ற மனிதர்களுக்கும் இந்த அறிவு பரவட்டும் என்ற எண்ணத்தோடு விவரங்களைக் கேட்டான். தன்னைப் பார்த்து மற்றோரும் வேள்வி முறைகளைப் பழகட்டும் என்ற எண்ணத்தோடு கேட்டான். இரந்திரமாக அழியாது, இந்த அறிவு நிரந்தரமாகப் பொதுவில் நிலைக்க வேண்டும் என்று நினைத்ததால் கேட்டான்.

2011/01/18

பிறப்பற்ற இடம்பற்றிக் கேட்டான் நசிகேதன்


19
வரந்தந்தீர் வேனன்றி வாசலில் வந்தோர்
இரந்திரம் ஈதென்றார் கேளீர் - வரம்பொன்றில்
உம்பலத்துக் கப்பால் உயிர்ப்பிணி சுற்றாதாம்
அம்பரம் என்னும் இடத்து.


கேட்ட வரத்தை வழங்கியதற்கு மிகவும் நன்றி. (நான் காத்திருந்த போது) வாயிலில் வந்து போனவர்கள் ரகசியம் என்று என்னிடம் சொன்னதை உங்களிடம் சொல்கிறேன். எல்லையற்ற உங்கள் சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு வானுலக இடத்தில், பிறவிப்பிணி என்பதே இல்லையாம் (என்றான் நசிகேதன்).

    வேனன்றி: வேன்+நன்றி, மிக நன்றி
    இரந்திரம்: ரகசியம், மறைத்து வைத்தது
    வரம்பொன்றில்: 'வரம்பு ஒன்றில்' எனப் பிரித்தால் எல்லை என்றும், 'வரம்பு ஒன்று இல்' எனப் பிரித்தால் எல்லையில்லாத என்றும் பொருளாகும் | எமனின் சக்தி எல்லையற்றது என்ற பொருளில் 'வரம்பு ஒன்று இல் உம்பலத்துக்கு' என்று முகத்துதி செய்வது போலவும், எமனுடைய சக்திக்கும் எல்லை உண்டு என்ற பொருளில் 'வரம்பு ஒன்றில், உம்பலத்துக்கு' என்று அடக்குவது போலவும், இருபொருள்பட நசிகேதன் சொன்னதாகக் கொள்ளலாம்
    உம்பலத்துக்கு: உம்+பலத்துக்கு, உமது சக்திக்கு
    அம்பரம்: விண்ணுலகம், பொன்னுலகம், சொர்க்கம்



    ரு கதை.

    நல்ல மனம் படைத்த ஒருவன் சந்தைக்கு வந்தானாம். ஒரு பெரிய பானை நிறைய இனிய பாயசத்தை எடுத்து வந்த அவன், சந்தைக்கு வந்தவர்களை இலவசமாகப் பாயசம் அருந்த அழைத்தானாம். "ஐயா, அம்மா, வாருங்கள். இலவசப் பாயசம். சிறு துளி அருந்தினாலும் சொர்க்கம் நிச்சயம். என்னை நம்புங்கள், நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். இது அமரர்கள் தினமும் அருந்தும் இனிய பாயசம். இலவசம்!" என்று பானையைச் சுமந்தபடி கூவிக்கூவி அழைத்தானாம். சிலர் அவனைப் பார்த்து முகஞ்சுளித்து ஒதுங்கினார்கள்; 'சொர்க்கத்திலந்து வந்த ஆளைப் பாருய்யா!' என்று சிலர் அவனைக் கிண்டல் செய்து போனார்கள்; நாள் முழுதும் அவன் அங்குமிங்கும் ஓடி ஓடிக் கூவி வழங்கியும், சந்தைக் கூட்டத்தில் ஒருவரும் அவன் சொல்லை மதித்து, இலவசப் பாயசத்தை அருந்த வரவில்லை. மறுவாரம் ஒரு நல்ல வெயில் நாளில், அவன் மாறுவேடம் பூண்டு அதே சந்தைக்கு வந்தான். இந்த முறை முள்சவுக்கு ஒன்றை எடுத்து வந்தான். "ஐயா வாருங்கள், அம்மா வாருங்கள். இது மந்திரச் சவுக்கு. உங்களுக்கெல்லாம் நரகம் கிடைப்பது நிச்சயம். இந்த மந்திரச் சவுக்கினால் ஒரு அடி வாங்கினால் நரகவாசம் விலகி விடும். ஒரு அடிக்கு, கால் பொன் விலை தரவேண்டும். இன்று மாலை வரை சவுக்கடி தருவேன். விருப்பமிருந்தால் என்னிடம் சவுக்கடி பெறலாம். நான் சொல்வதை நீங்கள் நம்பத் தேவையில்லை. ஆனால், நரகத்தைத் தவிர்க்க மந்திரச் சவுக்கடியைத் தவிர வேறு வழியில்லை. இனி, உங்கள் மனம் போலச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு நிழலான இடமாகத் தேடி அமர்ந்தானாம். கால் பொன் கொடுத்து முள்சவுக்கடி பெற விழைந்த கூட்டம், வெயிலையும் பொருட்படுத்தாது நீண்டு கொண்டே போனதாம்.

    உண்மை-பொய், உண்டு-இல்லை என்ற விவாதம் இருக்கட்டும்; சொர்க்கம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், ஒருவரையொருவர் மதித்து, கடமையைச் செய்து, அன்புடன், மகிழ்ச்சியுடன் இயல்பாக வாழ்கிறோமா? கிடையாது. அதே நேரம், நரகம் இருந்தால் அது கிடைத்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில், அறிவற்றக் கண்மூடித்தனச் செயல்களைச் செய்யத் தயங்குவதேயில்லை. நரகம் என்ற பயம், சொர்க்கம் என்ற நம்பிக்கையை அழிக்க அனுமதிக்கிறோம். போகும் வழிக்குப் புண்ணியம் என்று கண்மூடிப் பலசெய்யும் பித்தராகிறோம். கண்ணுக்குத் தெரியாத சொர்க்க நரகங்களை நம்பி, கையிலிருக்கும் வாழ்க்கையை நம் கண்மூடித்தனத்தினால் பிணியாக்குகிறோம். இது தான் உயிர்ப்பிணி. பிணியான வாழ்வு.

    துரங்க ஆட்டத்தில் இனி நசிகேதன் முறை. தன் முதல் வரத்தில், கேட்ட விதத்திலும் வழங்கப்பட்ட விதத்திலும், தோன்றிய ஐயத்தைத் தீர்த்தாக வேண்டும். இரண்டாவது வரத்தையும் கேட்க வேண்டும். ஐயத்தைத் தீர்ப்பதே இரண்டாவது வரமாகி விடக்கூடாது. அறிவுள்ள பிள்ளை அல்லவா? முத்தாய்ப்பாக தன் எண்ணப்படி வரம் கேட்க, பீடிகை போட்டான். எமனுடைய சக்திக்கப்பால் இருக்கும் ஒரு இடத்தைப் பற்றி, உயிர்ப்பிணி சுற்றாத சொர்க்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதாகச் சொன்னான். எமன் அறியாத சொர்க்கமா? எமனும் புன்னகையுடன் நசிகேதன் கேட்கப் போகும் வரத்துக்காகக் காத்திருந்தான்.

2011/01/14

எமன் வழங்கிய முதல் வரம்


18
சினந்துறப்பான் உன்னய்யன் செம்மாப் பொழிப்பான்
மனந்திறப்பான் மாசு மறுப்பான் - தினமும்
சிறுபிள்ளை உன்னோடே சேர்ந்திருப்பான் உன்னால்
பெறுவானே பொன்னுலகப் பேறு.

    ன் தந்தை சினத்தைக் கைவிடுவான்; தன்னலம் தழுவிய இறுமாப்பை ஒழிப்பான்; கண்மூடித்தனம் விட்டுத் தெளிவுடன் இயங்குவான்; பொய்மை பகட்டு போன்ற இழிவுகளை ஒழிப்பான்; மகனென்று உன்னுடன் என்றும் அன்போடிருப்பான் ; உன்னால் விண்ணுலக வீடு பேற்றினையும் அடைவான் (என்று எமன் வரம் கொடுத்தான்)

    செம்மாப்பு: தற்பெருமை, தன்னைச்சுற்றிய சிந்தனைகள், இறுமாப்பு
    மனந்திறப்பான்: அறிவைப் பயன்படுத்துவான், கண்மூடித்தனம் விடுவான் என்ற பொருளில் வருகிறது
    மாசு மறுப்பான்: மாசும்+அறுப்பான்; குறைகளை, சிறுமைகளைக் களைவான்
    சிறுபிள்ளை: மகன் என்ற பொருளில் வருகிறது.



    றிவு வந்த நாளிலிருந்து மனிதனை ஆட்டி வைக்கிறது செம்மாப்பு. தீவிரத் தன்மையக் கண்ணோட்டம். narcissus என்ற கிரேக்க அழகன் தன்னை விடச் சிறந்தவன் இல்லை என்ற இறுமாப்பில், தன் பிம்பத்தையே போட்டியாக எண்ணித் தன்னை அழித்துக்கொண்ட கதை தெரிந்திருக்கும். தன்மையப் பார்வைக்கு, அடுத்தவர்கள் என்ன சொன்னாலும் செய்தாலும் பிரித்தறியத் தெரியாது. மற்றவர்களின் உழைப்பில், பெருமையில் கூடத் தன்னை இணைத்துக் கொள்ளும். 'எனக்குப் பிறந்ததால் என் மகன் வெற்றி பெற்றான், யாருடைய ரத்தம்?', 'என்னைத் திருமணம் செய்து கொண்ட வேளை, என் கணவனுக்கு வெற்றி மேல் வெற்றி', 'நான் வேண்டிக்கொண்டதால் கடவுள் உனக்கு இந்தப் பலன் கொடுத்தார்' என்ற கண்மூடித்தனப் பேச்சுக்களை தினம் சொல்கிறோம்; கேட்கிறோம். பொதுப்பார்வையிலும் தன்னிலை கலந்து பேசுகிறோம். 'ஏ.ஆர்.ரகுமான் எங்க ஊர்க்காரர்' என்ற பெருமைக்கும், 'எங்க ஊர்க்காரர் ஏ.ஆர்.ரகுமான்' என்ற பெருமைக்கும் நுண்ணிய வேறுபாடு இருப்பதை அறிய முடிகிறதா? ஆபத்தில்லாத வழக்கென்றாலும், இரண்டாவது பெருமை தன்மைய அல்லது தன்னிலைப் பார்வை. "நான் உன்னிலும் உயர்நதவன்" என்ற பகட்டு. "என் துன்பம் உன் துன்பத்தை விடக் கொடிது" என்ற அறியாமை. அப்பாவித்தனமாகத் தோன்றினாலும், இது சுயநலமும் கண்மூடித்தனமும் உறைந்து கிடக்கும் 'அடப்பாவி'த்தனமாகும். 'நான், எனது' என்ற வியாதிக் கறையான்கள், மெள்ள 'என் குடும்பம், என் நாடு, என் மதம், என் கடவுள்' என்று கண்மூடித்தனமாகப் பரவி அமைதி மாளிகையைத் தின்றழிக்கின்றன.

    பெரும்பாலான இத்தகைய கண்மூடித்தன வழக்குகளில் ஆபத்தில்லை. எனினும், அடிப்படையில் இவை மன வியாதியின் அறிகுறிகளே. உளவியலில் pathological narcissism என்ற வியாதி பற்றி நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. இந்த வியாதி இருப்பது தெரியாமலே நம்மில் பெரும்பாலானோர் வாழ்கிறோம். நாமோ நம் சுற்றமோ சொந்தமோ இந்த வகையில் மிகையாக நடந்தால், மனநல ஆலோசனையோ மருத்துவ உதவியோ பெறுவது நல்லது.

    வாசனின் தன்மையச் செய்கைகளினால் நசிகேதனுக்கு ஏற்பட்ட இன்னலை முன்னர் பார்த்தோம்.

    நசிகேதன் கேட்ட முதல் வரத்தில் சற்றே அசந்து போன எமன், நசிகேதனின் சாமர்த்தியத்தைக் கண்டான். நசிகேதன் தன் தந்தையின் கண்மூடித்தனங்கள் தொடராமலிருக்க விரும்புவதைக் கண்டாலும், வரத்தின் அடிப்படையில் அன்புக்காக ஏங்கும் ஒரு சிறுவனின் வேதனையைக் கண்டான்.

    பொறுப்புள்ள ஒரு மன்னன் கூட அகந்தையிலும் அறியாமையிலும் உழலும் பொழுது, சாதாரண மானிடர்களின் வாழ்வில் கண்மூடித்தனம் கலந்திருப்பதில் வியப்பில்லை என்று உணர்ந்தான். கண்மூடித்தனங்களின் கேடு பற்றி, நசிகேதன் வழியாக உலகுக்குச் செய்தி சொல்ல ஒரு வாய்ப்பைக் கண்டான். ஞான போதனைக்குச் சரியான மாணவன் நசிகேதன் என்று தோன்றியது. மாணவனின் தகுதியைச் சோதிக்க நினைத்தான். "உன் தந்தை சினம் விட்டு உன்னுடன் அன்புடன் இருப்பான், வீடும் பெறுவான்" என்று வரம் கொடுத்தானே தவிர, "உன்னைத் திருப்பி அனுப்புகிறேன்" என்று எமன் நேரடியாகச் சொல்லவில்லை. நசிகேதன் அடுத்துக் கேட்கப் போகும் வரத்துக்காகப் புன்னகையுடன் காத்திருந்தான்.

    நசிகேதன் யோசித்தான். 'திருப்பி அனுப்புவதாக எமன் சொல்லவில்லையே? எமனுலகம் வந்தோரெல்லாம் இன்னொரு பிறவியெடுத்தல்லவா பூமிக்குப் போவார்கள்? 'சினந்துறப்பான் சேர்ந்திருப்பான் வீடு பெறுவான்' என்று என் தந்தை பற்றி எமன் சொன்னதெல்லாம், நான் இந்தப் பிறவியில் இந்த நிலையில் திரும்பிப் போனால் நடக்குமா? சிறுபிள்ளை என்றாரே, அதே தந்தைக்குப் பிள்ளையாக இன்னொரு பிறவி எடுக்க வேண்டுமா? ஒரு வேளை, இன்னொரு பிள்ளை வழியாக இத்தனையும் நடைபெறுமோ? என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் எமன்?' என்று பலவாறு சிந்தித்த நசிகேதன், கேட்ட வரத்தைக் கேட்ட விதத்திலேயே எமன் வழங்கியதை உணர்ந்தான். தான் 'மீட்டனுப்பின்' என்றதைப் போல், எமன் கொடுத்த வரத்திலும் நிச்சயத்தின் தெளிவை விட, சாத்தியமே தொனித்ததைப் புரிந்து கொண்டான். எமனின் மறுமொழி விளையாட்டை மதித்தான். விட்டுக் கொடுக்காமல், அடுத்த வரத்தைக் கவனமாகக் கட்டினான்.

2011/01/11

நசிகேதன் வேண்டிய முதல் வரம்


17
எந்தையார் சீர்பெற்றச் செய்தியொடு எம்மைநீர்
முந்தைய நாளுக்கே மீட்டனுப்பின் - சிந்தை
தெருளாகிச் சீறாதத் தந்தையே தந்து
அருளுவீர் ஆதி வரம்.

    ன் தந்தை வீடுபேறு பெற்றச் செய்தியுடன் என்னை மீண்டும் பழைய நிலைக்கே அனுப்புவதாக இருந்தால், தெளிவான அறிவுடன் கூடிய சினமற்றத் தந்தையுடன் சேர்ந்திருக்க விரும்புகிறேன்; இதை முதல் வரமாகத் தந்தருள வேண்டும் (என்றான் நசிகேதன்).

    தெருளாகி: தெளிவடைந்து, அறிவுடன் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன் பெற்று



    தெருவில் போகிற முன்பின் அறியாதவரைக் கூட "என்ன சுகமா?" என்று புன்னகையுடன் விசாரிக்கத் தயங்க மாட்டோம். வீட்டிலே மனைவி, கணவன், பிள்ளைகளிடம் தினம் நலம் விசாரிக்கத் தயங்குகிறோம். 'அண்டியிருப்பவர் தானே?' என்ற அலட்சியம், மனித இயல்பாகும். பிள்ளைகள் நம் சொற்படி நடந்து, நம் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற விரும்புகிறோம். அவர்கள் விருப்பப்படி நாம் நடக்கிறோமா என்று சிந்திப்பதில்லை. பெற்றோரின் செய்கைகளில் பிடிக்காத ஒன்றைச் சொல்லுமாறு வார இறுதியில் பிள்ளைகளைக் கேட்க வேண்டும்; ஏற்றத் திருத்தங்களைத் தத்தம் நடவடிக்கைகளில் புகுத்த வேண்டும். இந்தப் பழக்கம், 'பிள்ளைகளின் மன ஆரோக்கியத்தையும் தன்னம்பிக்கையையும் கூட்டுவதோடு, பெற்றோரிடம் உண்மையான நெருக்கத்தையும் உண்டாக்கும்' என்கிறார்கள். நம்மில் எத்தனை பேர் நம் பெற்றோர்களிடம் அவர்கள் தவறைச் சொல்ல துணிந்திருப்போம்? நம் தவறுகளைப் பிள்ளைகள் எடுத்துச் சொன்னால் நம்மில் எத்தனை பேர் கோபப்படாமல் பொறுமையாகக் கேட்போம்? 'அப்பன் அவனுக்கு பாட்டன் எல்லாம் இப்படித் தான் வளர்ந்தான் வளர்த்தான் வளர்ந்தேன், என் சந்ததியும் இப்படியே வளரும்' என்ற என் எண்ணம், இன்றுடன் ஒழிந்தால் நன்றாக இருக்கும்.

    ஒரு சிறு சமூகப் பரிசோதனை. வீட்டில் ஏதோ வேலையாக இருக்கிறீர்கள். ஒலிப் பொம்மையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் பிள்ளையின் தொல்லை பொறாமல், கோபத்துடன் பிள்ளை கையிலிருந்த பொம்மையைப் பிடுங்கி ஒளித்து வைக்கிறீர்கள். சிறிது பொறுத்து, பிள்ளையிடம் பரிதாபமேற்பட்டு "உனக்கு என்ன விருப்பமோ கேள்" என்று ஆதரவாகப் பேசுவதாக எண்ணி வாக்களிக்கிறீர்கள். பிள்ளை, "பொம்மையைத் திருப்பிக் கொடு" என்றால், உங்களுக்குப் பிள்ளை மேல் அன்புண்டு என்று பொருள். "இனி நான் தொல்லை தரும்போது கோபப்படாமல், பொம்மையைப் பிடுங்காமல் இருக்க வேண்டும்" என்று பிள்ளை சொன்னால், பிள்ளைக்கு உங்கள் மீது அன்புண்டு என்று பொருள். முதல் வகை அன்பு, வெறும் கடமையினால் உண்டானது. இரண்டாம் வகை அன்பு, ஆழ்ந்த நம்பிக்கையினால் உண்டானது. ஆழ்ந்த நம்பிக்கை அன்பு பெற, உழைக்க வேண்டும்.

    கோபமற்றத் தந்தையை வரங்கேட்டப் புராணப் பிள்ளையின் பரிதாபநிலை நெஞ்சைத் தொடுகிறது. பெற்றோரின் அன்பை வரம் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் இன்றும் சில பிள்ளைகளிருப்பது வருந்தத்தக்கது.

    'மீட்டனுப்பின்' என்பதை இரு வகையில் பொருள் கொள்ளலாம். 'மீண்டும் அனுப்புவதாக இருந்தால்' என ஒரு பொருள். 'மீண்டும் அனுப்புகையில்' என மற்றொரு பொருள். 'திருப்பி அனுப்புங்கள்' என்று நசிகேதன் கேட்கவேயில்லை. 'திருப்பி அனுப்புவதானால்.. தந்தைக்குப் பேறு கிடைத்தது என்றச் செய்தியுடன் என்னை அனுப்புவதானால்.. தெளிவான மனம் கொண்ட, கோபம் துறந்தத் தந்தையிடம் திருப்புங்கள்' என்று கேட்டான். இன்னொரு கோணம். அன்பில்லாத இடத்திற்குத் திரும்புவானேன்? அறிவில்லாத தந்தை தன்னை மறுபடி எமனுலகு அனுப்பினால்? அடுத்த முறை எமனுக்குக் கருணையில்லாது போனால்?

    எல்லாமறிந்து நசிகேதன் கேட்ட வரம், எமனை வியப்பில் ஆழ்த்தியிருக்கும். அவன் கேட்டது ஒரு வரமா? பல வரங்களா? தனக்காக வேண்டியதா? தந்தைக்காக வேண்டியதா? முதல் வரத்திலேயே எமன் தலையில் மிளகாய் அரைத்தான் என்று தோன்றுகிறது. தந்திரத்தில் நசிகேதன் எமனுக்கு இணை.

2011/01/08

நசிகேதனுக்கு வரமளிப்பதாகச் சொன்னான் எமன்


16
ஆறுமுறை அந்தனே! என்னறை உன்சிறையாய்
ஊறுநிறை ஆறிலரைப் போதிருந்தாய் - கூறுன்
குறையேதுந் தீர்த்தால் தறையேன் கறைபோம்
முறையேநீ மூன்றுவரங் கேள்.

    று நற்குணங்களின் இருப்பிடமான அழகனே! துன்பம் நிறைந்த மூன்று நாட்களை என் இல்லமென்னும் சிறையில் கழித்தாய்; உன் குறைகளைச் சொல், தீர்த்து வைத்தால் விருந்தோம்பல் தவறினால் இழிவடைந்த என் களங்கம் நீங்கும்; (எனவே) மூன்று வரங்களைக் கேட்பாயாக (என்றான் எமன்).

  ஆறுமுறை: ஆறும் + உறை | ஆறு நிறைகுணங்களின் இருப்பிடமான | அன்பு, நன்றி, கருணை, அடக்கம், பொறுமை, நேர்மை என்பன ஆறு நிறைகுணங்கள் | முதல் மூன்றை நற்குணங்களாகவும், கடை மூன்றின் எதிர்குணங்களைப் பகைகளாகவும் (ஆசை, வெகுளி, மயக்கம் எனும் முப்பகை), இறை மற்றும் நெறி இலக்கியங்கள் விவரிக்கக் காணலாம்
  அந்தனே: அழகனே, அறியாதவனே | அரச இளவலை அழகனே என்று எமன் அறிந்து விளித்ததாக ஒரு பொருள் | நல்ல குணங்களைக் கொண்டிருந்தாலும் சிறுவனின் அறிவு இன்னும் விரிவடையவில்லை, வரப்போகும் அறிவூட்டத்தைக் குறிப்பாலுணர்த்தும் பொருட்டு அறியாதவனே என்று விளித்ததாக மற்றொரு பொருள்
  ஊறு: இன்னல், துன்பம்
  ஆறிலரை: மூன்று | நசிகேதன் துன்பப்பட்ட மூன்று நாட்களின் எண்ணிக்கை
  தறை: குற்றம், இழிவு | விருந்தோம்பலில் தவறிழைத்துத் தறைபட்டான் என்பதால் தன்னைத் தறையேன் என்றான் எமன்
  கறை: இருள், இழுக்கு, அழுக்கு | விருந்தோம்பலில் ஏற்பட்ட தவறு, தவறின் பலன்



    ணத்தால் மதிப்பிட்டாலும் சரி, வேறு முறைகளைப் பயன்படுத்தினாலும் சரி, மனித மனதுள் அனைத்துக்கும் விலை உண்டு; அனைத்து நஷ்டங்களுக்கும் இணையான ஈடு உண்டு. பொதுநலக் கொள்கைகளைச் செயல்படுத்தும் போதும், பொதுச்சட்டங்களை இயற்றும் போதும் இந்த "விலையை" கணித்து, அதற்கேற்ற படி திட்டங்கள் சட்டங்களாகின்றன. சம்பளப்படி நிர்ணயத்திலிருந்து இழப்புக்கான நஷ்டஈடு கணிப்பு வரை, 'நியாயமான ஈடு' முறை பயன்படுத்தப்படுகிறது. கலவரக் கட்டுப்பாட்டு வழிமுறைகளில் நஷ்டஈடு முக்கியமானது. வழங்கப்படும் ஈட்டின் அளவுக்கேற்ப, பாதிக்கப்பட்டவர்களின் மனம் நிறைவடைகிறது.

    அழையா விருந்தாளிக்கு மாளிகையும் சிறையே. விருந்தாளி என்றில்லை; நம் குடும்பத்திலோ வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அண்டியிருப்போரை மதியாதபோது அவருக்கு மனதளவில் சிறைத்தண்டனையை வழங்குகிறோம்.

    தன் எதிரியின் வலிமையை அறிந்து கொண்டவன்தான் போரிலே வெற்றி பெற முடியும். தன் மாணவனின் அறிவுத் திறனை, அறியும் திறனை, முழுமையாக அறிந்து கொண்டவனே நல்ல ஆசிரியனாக முடியும்.

    விருந்தோம்பலில் இருந்தக் கவனம், மூன்று வரங்களுக்குத் திசைமாறிவிட்டது. மூன்று நாட்களுக்கு ஈடாக மூன்று வரங்கள் என்ற கணக்கானாலும், எமன் ஒரு வரத்தோடு நின்றிருக்கலாம். 'தர்மராசன் என்று போற்றி வந்தவர்கள் எல்லோரும் இனித் தன் தவறைப் பற்றியல்லவா பேசுவார்கள்?' என்ற பொதுப்பார்வை காரணமாகவும், தன் தவறால் மூன்று நாட்கள் துன்பப்பட்ட பிள்ளையை எண்ணி வருந்தியதாலும், எமன் மூன்று வரங்கள் அளிப்பதாக வாக்களித்தான்.

    வாசன் அவசரப்பட்டு வாக்கு கொடுத்ததாலன்றோ நசிகேதனுக்கு இந்த நிலை ஏற்பட்டது? எமனும் அவசரப்பட்டு வாக்களித்தானா? நசிகேதன் என்ன கேட்பான் என்பதை எமன் அறியாவிட்டாலும், நசிகேதன் கேட்கும் வரங்களை எப்படி வழங்குவது என்பதை எமன் அறிந்திருந்தான் என்றே கொள்ள வேண்டும்.

    நசிகேதனை அறிவுள்ளவன் என்று அறிந்தவனும் அறிவுள்ளவன் தானே? கேள்வியின் தரத்தை வைத்துத்தானே மாணவனை எடை போடுகிறார் ஆசிரியர்? கேட்கும் வரங்களின் தரங்களை வைத்து கேட்பவனின் தரத்தை எடை போடும் வித்தை. இங்கே எமன் வீசியிருப்பது வலை. நசிகேதன் எப்படிப்பட்டவன்? என்ன கேட்பான்? அவனும் எமனை ஆழம் பார்க்கிறானா? எமனுக்கும் நசிகேதனுக்கும் இடையிலான சதுரங்க ஆட்டம் இனித் துவக்கம்.

2011/01/04

பண்பற்றோர் இழப்பை எமன் விவரித்தான்


15
நல்வினை நற்பயன் நம்பிக்கை நாற்பேறு
நல்லுரை நல்லன்பர் நாணயம் - எல்லாம்
சிதலையின் வாயுட் சிலையாய் விருந்திற்
கிதமாகார் வீட்டுள் கிடக்கும்.

    ல்வினை புரியும் வாய்ப்பு, சேர்த்த நற்பயன், நன்னடத்தையால் பிறருக்கு உண்டான நம்பிக்கை, நான்கு விண்ணுலகச் செல்வங்கள்*, நற்கல்வி, நல்ல நண்பர்கள், நேர்மையால் கிடைத்த மதிப்பு - இவையெல்லாம், விருந்தினர்களை அன்பாக நடத்தாதவர்கள் வீட்டில் கறையான் அரித்த சிலை போன்றதாகிவிடும் (என்று எமன் நசிகேதனிடம் சொன்னான்).


*மண்ணுலகச் செல்வங்கள் நான்கினுக்கும் பொருந்தும். அரச வேள்வியில் நாற்பேறு பற்றிய விவரம் காண்க
சிதலை: கறையான், தொட்டதை அரித்தழிக்கும் பூச்சிவகை
நாணயம்: நடத்தையால் சிறுகச் சேர்க்க வேண்டிய ஒழுக்கப்பலன்; பணத்துக்கான தெருப்பெயர் இதனால் வந்தது
நல்லுரை: நல்ல நூல்களைப் படித்தும் அறிஞர்களின் பேச்சைக் கேட்டும் வளர்க்க வேண்டிய அறிவு



    யிரோட்டமென்றால் அப்படி உயிரோட்டமுள்ள சிலையொன்றை, உள்ள சொத்தையெல்லாம் கொடுத்து வாங்கி, பெருமகிழ்ச்சியுடன் வீட்டில் வைத்துக் கொண்டாடுகிறோம். ஒரு நாள் காலையில் எழுந்து சிலையருகே சென்றால், எங்கிருந்து வந்ததென்று புரியாதபடி, சிலையைக் கறையான் அரித்திருப்பதைப் பார்க்கிறோம். கண்ணுக்கு விருந்தானது கறையானுக்கு விருந்தான திடீர் இழப்பின் தவிப்பை, அதிர்ச்சியை, எப்படிச் சொல்லில் வடிப்பது?

    உழைப்போ பொருளோ செலவழிக்காமல் நாம் செய்யக்கூடிய மிகச் சிலவற்றுள் ஒன்று, பிறரை மதிப்பது. நம் குடும்பமானாலும் சரி, மேலதிகாரியானாலும் சரி, சக மாணவர் தொழிலாளர் நண்பரானாலும் சரி, தெருவில் கைநீட்டி உதவி கோரும் ஏழையானாலும் சரி - முகம் சுளிக்காமலும், மரியாதை குறைத்துப் பேசாமலும், எரிச்சல் ஆத்திரம் படாமலும், ஏளனம் செய்யாமலும் இதமாக நடந்து கொள்ளும் பண்பை வளர்க்க வேண்டும். நம் நிலை உயர்வாக இருப்பதை, பிறர் நம்மை அண்டியிருப்பதை, எண்ணி இறுமாந்துப் பண்பற்று நடக்கலாகாது. சொல் எளிது; செயற்கரியது.

    சதுரங்கம். முற்றுகை மற்றும் போர்த் தந்திரங்களை வளர்ப்பதற்காகக் கிழக்கில் தோன்றிய விளையாட்டு. சதுரங்க ஆட்டமுறைகளில் மேலாண்மைத் தந்திரம் நிரம்பி வழிகிறது. 'Castling' என்று அரணெழுப்பும் ஒரு ஆட்டமுறை. அடுத்தவர் முற்றுகையிடுமுன் தன்னைத் தானே அரணிட்டுக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சுயபாதுகாப்பு முறை. கலவரக் கட்டுப்பாட்டுக்கும் சதுரங்க ஆட்டமுறைகளுக்கும் பொருத்தமுண்டு. அடுத்தவர் தன்னைத் தாக்குமுன் (அவதூறும் தாக்குதலே), தானே தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளும் தந்திரம். உண்மையில் அதுவே மிகப் பாதுகாப்பாகி விடுகிறது.

    னக்குக் கிடைத்தது தானம் என்றாலும், வீடு தேடி வந்தவரை மதிக்கும் பண்பு எமனிடம் இருந்தது. தீயோர்கள் சேருமிடம் என்று சொல்லப்படும் நரகத்துக்கு அதிபதி என்று கருதப்படும் எமனும் விருந்தோம்பலெனும் உயர்ந்த பண்பைக் கடைபிடித்தான். நாடி வந்தவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உதவி செய்யாவிட்டாலும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதே எமன் மொழிவழிச் சொல்லப்பட்டுள்ள உள்கருத்து.

    சிதலை சிதைத்தச் சிலை போல் தன் பண்பெல்லாம் போனதாக உணர்ந்தான் எமன். ஒழுக்கம் கெட்டதாக நினைத்தான். தவறுக்கு வருந்தியவன், தன்னிலைப் பற்றியும் சிந்தித்தான். ஒரு தவறு, தன் மாட்சியை முற்றும் அழிப்பதா? உடனே நசிகேதனை வெல்லும் செயலில் இறங்கினான். கொடுத்த நீரை ஏற்றதும், தேர்ந்த தந்திரக்காரனைப் போல் அடுத்த முறைகளை உற்சாகத்துடன் செயல்படுத்தினான். தன்னுடைய கவனக்குறைவால் தனக்கு ஏற்பட்ட இழப்பை தேவைக்கதிகமாக விவரித்து, விருந்தோம்பலில் விளைந்த தவறினால் தன் செல்வங்களை எல்லாம் இழந்தவன் போல் பேசினான். விருந்தாக வந்தவனிடம் இதமாக நடக்காதது, தன்னை மிகவும் தாழ்மைப்படுத்தியது போல் பேசினான். நசிகேதனின் மனதை மெள்ளத் தன்வசமிழுக்கத் தொடங்கினான்.

2011/01/01

எமன் நசிகேதனிடம் மன்னிப்புக் கோரினான்


14
மன்னிக்க வேண்டுகிறேன் மன்னிக்க வேண்டுகிறேன்
என்னில்லில் ஏற்பட்ட இன்னலுக்கு - என்றெமனும்
ஏகிப் பணிந்தான் நயந்தான் நசிகேதன்
தாகந் தணியவே நீர்.

    மன் நசிகேதனை அணுகி, தன் வீட்டில் எந்த வசதியுமில்லாது தங்கியிருக்க நேர்ந்த இன்னலுக்குப் பலமுறை மன்னிப்பு கோரினான். நசிகேதனின் தாகம் தணிய நீர் அளித்தான்.

நயந்தான்: அன்புடன் வழங்கினான், உபசாரம் செய்தான், நட்புடன் பழகினான்


    ரு வாய்த் தண்ணீர் தருவதில் மகத்துவமோ சூட்சுமமோ இருக்கிறதா?

    விருந்தினருக்கு முதலில் நீர் வழங்குவது, உலகக் கலாசாரமாகும். இது பற்றியக் குறிப்புகள் இலக்கியங்களிலும் இறைநூல்களிலும் மதநூல்களிலும் உள்ளன. வந்தவருக்கு நீர் கொடுக்க இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள்: 1)விருந்தாளி சுத்தம் செய்து கொள்வதால் விருந்தோம்புகிறவருக்கும் நன்மை 2)நீர் அருந்தினால், விருந்தினர் விருந்தோம்பலை ஏற்றதாகப் பொருள். கொடுத்த நீரை ஏற்க மறுத்துவிட்டால் பகையைக் காட்டுவதாகப் பொருள். ('அவன் வீட்டில் பச்சைத் தண்ணி கூட குடிக்க மாட்டேன்' என்ற ஏச்சை அறிவோம்). தண்ணீர் கொடுப்பது, சமாதானத்தையும் அமைதியையும் நாடுவதற்கு இணை.

    கலவரக் கட்டுப்பாடு (crisis control) என்பது நுண்ணிய மேலாண்மைத் தந்திரம். இது அனைவருக்கும் அவ்வப்போது தேவைப்படும், ஆனால் எளிதில் வராத கலை. கலவரக் கட்டுபாட்டின் முதல் படி, பொறுப்பேற்றல். கவன மாற்றம் (deflection or change of focus), திருத்தம் (correction), பரிகாரம் (remedy) என்று வழிமுறைகள் தொடரும். தவறுக்கு உடனே பொறுப்பேற்பது, சிறந்த வாடிக்கைச் சேவை மற்றும் மேலாண்மையின் அடையாளம். பொறுப்பேற்றவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்தப் பாதுகாப்பும் தேவையானக் கவனிப்பும் அளிக்க வேண்டியது அவசியம். தவறைப் பற்றிய அவர்களின் நினைவுகளை திசைதிருப்பவும் மறக்கடிக்கவும் என்ன செய்ய வேண்டுமோ, அவற்றை நேர்மையாகவும் உண்மையாகவும் உடனே செய்தாக வேண்டும். அரசியல் தலைவரோ, அம்பீஸ் கபே முதலாளியோ - இந்த நெறியும் எதிர்பார்ப்பும் பொதுவாகும். சுனாமித் தீவிரமாகட்டும் ஸ்பெக்டரம் சிக்கலாகட்டும், கலவரக் கட்டுபாட்டுக் கலை அவசியம்.

    வறு நிகழ்ந்து விட்டது. தான் செய்யாவிட்டாலும், தன் வீட்டில் நடந்த தவறென்பதால் எமனே பொறுப்பேற்றான். தன் வீட்டில் நடந்த கேடு, தனக்குப் பொதுவில் அவமானமாக மாறி, நீதிக்கு அரசனான தன் மதிப்பைக் கெடுக்குமோ என்று அஞ்சினான். கேளாத தானம் தானாக வந்து, பெரும் தலைவலியாகிவிடும் போலிருக்கிறதே என்று நினைத்தான். விருந்தினரைக் காக்க வைப்பது பாவம் என்பது ஒரு புறம் இருக்கட்டும், வந்தவனோ பச்சிளம் பிள்ளை - களைப்பில் அவனுக்கு ஏதாவது நிகழ்ந்திருந்தால்? இது அனைவருக்கும் தெரிந்தால் தன் செல்வாக்கு என்னாகுமோ என்று எமன் கலங்கினான்.

    பார்த்தக் கணத்திலேயே பிள்ளையின் முகத்தில் அகம் தெரிந்து கொண்டான் எமன். அவனைத் தன்வழிப்படுத்த எண்ணினான். விருந்தோம்பல் குறைகளுக்கு வருந்தி அவனிடம் மன்னிப்பு கேட்டான். தண்ணீர் கொடுத்தது, நசிகேதனின் களைப்பைப் போக்க மட்டுமல்ல. தண்ணீர் வெம்மையைத் தணிக்க வல்லது. 'சான்றோர் சினம்' எனும் வெப்பத்தைத் தவிர்ப்பதே, எமன் தண்ணீர் வழங்கியதன் உட்பொருள். நசிகேதனைத் தன்வழிப்படுத்த, எமன் என்ன செய்தான்?