வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/01/04

பண்பற்றோர் இழப்பை எமன் விவரித்தான்


15
நல்வினை நற்பயன் நம்பிக்கை நாற்பேறு
நல்லுரை நல்லன்பர் நாணயம் - எல்லாம்
சிதலையின் வாயுட் சிலையாய் விருந்திற்
கிதமாகார் வீட்டுள் கிடக்கும்.

    ல்வினை புரியும் வாய்ப்பு, சேர்த்த நற்பயன், நன்னடத்தையால் பிறருக்கு உண்டான நம்பிக்கை, நான்கு விண்ணுலகச் செல்வங்கள்*, நற்கல்வி, நல்ல நண்பர்கள், நேர்மையால் கிடைத்த மதிப்பு - இவையெல்லாம், விருந்தினர்களை அன்பாக நடத்தாதவர்கள் வீட்டில் கறையான் அரித்த சிலை போன்றதாகிவிடும் (என்று எமன் நசிகேதனிடம் சொன்னான்).


*மண்ணுலகச் செல்வங்கள் நான்கினுக்கும் பொருந்தும். அரச வேள்வியில் நாற்பேறு பற்றிய விவரம் காண்க
சிதலை: கறையான், தொட்டதை அரித்தழிக்கும் பூச்சிவகை
நாணயம்: நடத்தையால் சிறுகச் சேர்க்க வேண்டிய ஒழுக்கப்பலன்; பணத்துக்கான தெருப்பெயர் இதனால் வந்தது
நல்லுரை: நல்ல நூல்களைப் படித்தும் அறிஞர்களின் பேச்சைக் கேட்டும் வளர்க்க வேண்டிய அறிவு



    யிரோட்டமென்றால் அப்படி உயிரோட்டமுள்ள சிலையொன்றை, உள்ள சொத்தையெல்லாம் கொடுத்து வாங்கி, பெருமகிழ்ச்சியுடன் வீட்டில் வைத்துக் கொண்டாடுகிறோம். ஒரு நாள் காலையில் எழுந்து சிலையருகே சென்றால், எங்கிருந்து வந்ததென்று புரியாதபடி, சிலையைக் கறையான் அரித்திருப்பதைப் பார்க்கிறோம். கண்ணுக்கு விருந்தானது கறையானுக்கு விருந்தான திடீர் இழப்பின் தவிப்பை, அதிர்ச்சியை, எப்படிச் சொல்லில் வடிப்பது?

    உழைப்போ பொருளோ செலவழிக்காமல் நாம் செய்யக்கூடிய மிகச் சிலவற்றுள் ஒன்று, பிறரை மதிப்பது. நம் குடும்பமானாலும் சரி, மேலதிகாரியானாலும் சரி, சக மாணவர் தொழிலாளர் நண்பரானாலும் சரி, தெருவில் கைநீட்டி உதவி கோரும் ஏழையானாலும் சரி - முகம் சுளிக்காமலும், மரியாதை குறைத்துப் பேசாமலும், எரிச்சல் ஆத்திரம் படாமலும், ஏளனம் செய்யாமலும் இதமாக நடந்து கொள்ளும் பண்பை வளர்க்க வேண்டும். நம் நிலை உயர்வாக இருப்பதை, பிறர் நம்மை அண்டியிருப்பதை, எண்ணி இறுமாந்துப் பண்பற்று நடக்கலாகாது. சொல் எளிது; செயற்கரியது.

    சதுரங்கம். முற்றுகை மற்றும் போர்த் தந்திரங்களை வளர்ப்பதற்காகக் கிழக்கில் தோன்றிய விளையாட்டு. சதுரங்க ஆட்டமுறைகளில் மேலாண்மைத் தந்திரம் நிரம்பி வழிகிறது. 'Castling' என்று அரணெழுப்பும் ஒரு ஆட்டமுறை. அடுத்தவர் முற்றுகையிடுமுன் தன்னைத் தானே அரணிட்டுக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சுயபாதுகாப்பு முறை. கலவரக் கட்டுப்பாட்டுக்கும் சதுரங்க ஆட்டமுறைகளுக்கும் பொருத்தமுண்டு. அடுத்தவர் தன்னைத் தாக்குமுன் (அவதூறும் தாக்குதலே), தானே தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளும் தந்திரம். உண்மையில் அதுவே மிகப் பாதுகாப்பாகி விடுகிறது.

    னக்குக் கிடைத்தது தானம் என்றாலும், வீடு தேடி வந்தவரை மதிக்கும் பண்பு எமனிடம் இருந்தது. தீயோர்கள் சேருமிடம் என்று சொல்லப்படும் நரகத்துக்கு அதிபதி என்று கருதப்படும் எமனும் விருந்தோம்பலெனும் உயர்ந்த பண்பைக் கடைபிடித்தான். நாடி வந்தவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உதவி செய்யாவிட்டாலும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதே எமன் மொழிவழிச் சொல்லப்பட்டுள்ள உள்கருத்து.

    சிதலை சிதைத்தச் சிலை போல் தன் பண்பெல்லாம் போனதாக உணர்ந்தான் எமன். ஒழுக்கம் கெட்டதாக நினைத்தான். தவறுக்கு வருந்தியவன், தன்னிலைப் பற்றியும் சிந்தித்தான். ஒரு தவறு, தன் மாட்சியை முற்றும் அழிப்பதா? உடனே நசிகேதனை வெல்லும் செயலில் இறங்கினான். கொடுத்த நீரை ஏற்றதும், தேர்ந்த தந்திரக்காரனைப் போல் அடுத்த முறைகளை உற்சாகத்துடன் செயல்படுத்தினான். தன்னுடைய கவனக்குறைவால் தனக்கு ஏற்பட்ட இழப்பை தேவைக்கதிகமாக விவரித்து, விருந்தோம்பலில் விளைந்த தவறினால் தன் செல்வங்களை எல்லாம் இழந்தவன் போல் பேசினான். விருந்தாக வந்தவனிடம் இதமாக நடக்காதது, தன்னை மிகவும் தாழ்மைப்படுத்தியது போல் பேசினான். நசிகேதனின் மனதை மெள்ளத் தன்வசமிழுக்கத் தொடங்கினான்.

12 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஸ்ரீராம். சொன்னது…

//"உதவி செய்யாவிட்டாலும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதே எமன் மொழிவழிச் சொல்லப்பட்டுள்ள உள்கருத்து"//

நல்ல கருத்து.

agaramamuthan சொன்னது…

அழகிய வெண்பா. வாழ்க அய்யா

அப்பாதுரை சொன்னது…

நன்றி sakthistudycentre, ஸ்ரீராம், ...

அப்பாதுரை சொன்னது…

நன்றி அமுதன் ஐயா.

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே!" இதமாகாத விருந்தளித்தவன் வீட்டுள் சிதலைவாயுள் சென்ற சிலையாக" அற்புதமான படிமம். நசிகேத சம்வாதத்திற்காகக் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

துளசி கோபால் சொன்னது…

//சிதலை சிதைத்தச் சிலை...//

அடடா......... எப்படிங்க...இப்படியெல்லாம்!!!!!!!!

கொன்னுட்டீங்க போங்க!

அருமை.

அப்பாதுரை சொன்னது…

நன்றி kashyapan, துளசி கோபால், ...

சிவகுமாரன் சொன்னது…

சிதலையின் வாயுட் சிலை - நல்ல அற்புதமான படிமம். என் தந்தையார் மிகப் பழைமையான நூல்களை சேகரித்து வைத்திருந்தார். மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்த போதும் நிறைய நூல்களை கரையான் அரித்துவிட்டது. உண்மையில் எனக்கு மனம் கலங்கிப் போனது.
நசிகேத வெண்பாவில் நிறைய விசயங்களை தொட்டுச் செல்கிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது. .

பத்மநாபன் சொன்னது…

நட்சத்திரத்தில் நசிகேதனை விட்டாச்சு ..
எமன் இவ்வளவு நீதி நேர்மைக்கு பயந்தவனா ... சிதைந்த சிலை நல்ல உவமை ..
எமனும் ஒவ்வொரு உயிரை எடுக்கும் பொழுதும் இப்படித்தான் தன் உயிரை மாய்த்து மீள்கிறானோ?
சதுரங்கம் சின்ன வயதில் ஆடியது ..காஸ்லிங் சரியான சுய தற்காப்பு தான்...

meenakshi சொன்னது…

இந்த வெண்பா படிப்பதற்கே அழகாக இருக்கிறது.
விருந்தோம்பலின் சிறப்பை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.

தமிழ் சொன்னது…

என்ன சொல்ல‌

அற்புதம்
நன்றிகள் அய்யா