வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/01/25

அம்பரம் உள்ளது என்றான் எமன்


21
அம்பரமும் அங்குபுகும் நேர்வழியும் நானறிவேன்
எம்பலமும் எட்டாத வட்டமது - வம்பன்று
பொன்னுலகம் பிக்கும் புரிந்தவர்க்கும் பேதைக்கோ
என்னுலகம் என்றும் எதிர்.

    ன் ஆட்சிக்கு அப்பாற்பட்டப் பொன்னுலகையும் அங்கு செல்லும் நேர்வழியும் அறிவேன். உண்மையில், அறிவுள்ளவராயினும் பொன்னுலகம் அடையத் தாமதமாகும்; அறிவற்றவரோ நானாளும் எமனுலகத்தை எளிதில் அடையலாம்.

வம்பன்று: பொய்யல்ல, வீண் பேச்சல்ல
பிக்கும்: பிந்தும், தவறும், தள்ளிப்போகும்
எதிர்: இலக்கு, உடனே புலப்படுவது



    திர்பார்ப்புகளைச் சமாளிப்பது ஒரு திறமை என்றால், நம்மிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்று வரையுறுத்துவதும், பிறரின் எதிர்பார்ப்புகளை எதிர்பார்ப்பதும் இன்னும் நுட்பமான கலைகள். குடும்பத்திலோ சுற்றத்திலோ, பள்ளி அலுவலகம் மற்றும் சமூகத்திலோ நம்மிடம் எதிர்ப்பார்ப்பதை - பணம், வீடு, வசதி போன்ற விலை மதிப்புக்குட்பட்டவையோ அல்லது அன்பு, காதல், கருணை, ஆற்றல் போன்ற விலை மதிப்புக்கப்பாற்பட்டவையோ எதுவானாலும் - புரிந்து கொண்டால் நம்மால் செயல்படுத்த முடியும். நம் எதிர்பார்ப்பைத் தெளிவாகச் சொன்னால், அடுத்தவர் செயலாக்கத்துக்கு உதவும். வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதும் தெளிந்து சொல்வதும் நிம்மதிக்கு மிக அவசியம். தவறினால் வீட்டிலும் வெளியிலும் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். 'சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்', 'விரலுக்குத் தகுந்த வீக்கம்' போன்ற முதுமொழிகள் சொல்லும் மேலாண்மைத் தந்திரம் இதுவே. 'expectation management' என்கிறோம் ஆங்கிலத்தில்.

    நம்மால் முடியுமா அல்லது நம்மை நம்பியிருப்பவரால் முடியுமா என்றும் பல தருணங்களில் சிந்தித்து, எதிர்பார்ப்புகளை ஒரு வரம்புக்குள் கட்டிவைக்க வேண்டியிருக்கிறது. இத்தனை செலவு செய்யலாம், இத்தனை நேரம் விளையாடலாம், டிவி பார்க்கலாம், இத்தனை நேரம் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற வீட்டு எதிர்பார்ப்புகள்; இத்தனை லாபம் சம்பாதிக்க வேண்டும், இத்தனை விற்க வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும், இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும், இத்தனை தொழிற்சாலைகளை மூட வேண்டும் போன்ற தொழில் தொடர்பான எதிர்பார்ப்புகள்; இத்தனை சட்டங்கள் தீட்ட வேண்டும், இத்தனை பொதுநலத் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும், இத்தனை போக்குவரத்து, பாசன, மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் போன்ற சமூகத் தொடர்பான எதிர்பார்ப்புகள்; இவற்றைச் சமாளிக்க, நம் ஆக்கத்திறனுக்கும் வசதிக்கும் ஏற்ற வரம்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. இதில் தவறில்லை. முதலில் சற்று மனத்தாங்கலை அளித்தாலும், பெரும் ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவுவதோடு சிறு வெற்றிகளைப் பெறவும் வழி செய்யும் தந்திரமாகும். எதிர்பார்ப்புக் கட்டல், எண்ண வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

    மன் யோசித்தான்: வரம் கேளென்றால் இப்படி ஒரு வரம் கேட்டு விட்டானே? தனித்து விடப்பட்ட சிறுவனிடம் 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டால், "அம்மா வேண்டும், அப்பா வேண்டும்" என்று அழுது கேட்பது இயற்கை. சற்றே முதிர்ச்சி தென்பட்டாலும் முதலில் கேட்ட வரம் அந்தவகை தான். ஆனால் இரண்டாவது வரம் விசித்திரமாக இருக்கிறதே? பிறவிப்பிணி சுற்றாத இடத்தைப் பற்றியும் அங்கு செல்லும் வழி பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு, விவரங்களை வரமாகக் கேட்கிறதே இந்தப் பிள்ளை? எங்கிருந்து எங்கே தாவுகிறான் இவன்! இந்த வரத்தை அளிப்பதால் இவனுக்கு ஏதாவது பலன் கிட்டுமா? விவரங்களைச் சொன்னால் புரிந்து கொள்வானா? நன்கு புரிந்தவர்கள் கூட செயல்படுத்தத் தயங்கும் விவரமாயிற்றே? இவனோ பத்து வயது நிரம்பாத பிள்ளை, இவனுக்குப் புரியுமா? இந்த வரத்தைக் கொடுத்தால் அடுத்து வேறென்ன கேட்பானோ?

    பலவாறு சிந்தித்த எமன், கேட்ட விவரங்களைச் சொல்லுமுன் நசிகேதனின் எதிர்பார்ப்புகளை ஒரு கட்டுக்குள் வைக்க முற்பட்டான். பொன்னுலகத் தன்மை பற்றி முதலில் சொன்னான்.

10 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

ரொம்பவே விவரமான பிள்ளை. சின்ன உருவைக் கண்டு எமனே ஏமாந்துட்டான் போல!

தொடர்கின்றேன்.

சிவகுமாரன் சொன்னது…

'Expectation management'
புதிய செய்தி.MBA விலும் சொல்லாத விசயங்கள்.
பிரமிப்பாய் இருக்கிறது அப்பாத்துரை.
எதிர்பார்ப்புக் கட்டல் - நல்ல சொற்பிரயோகம்.

meenakshi சொன்னது…

அருமையான விளக்கம்.
//எதிர்பார்ப்புகளை ஒரு வரம்புக்குள் கட்டிவைக்க வேண்டியிருக்கிறது.//
உண்மைதான்.
//எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதும் தெளிந்து சொல்வதும் நிம்மதிக்கு மிக அவசியம்// //எதிர்பார்ப்புக் கட்டல், எண்ண வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாகும்.//
அருமை. இதை உணராது ஒருவரிடம் இல்லாததை எதிர்பார்த்து ஏமாறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்தான்.

பத்மநாபன் சொன்னது…

எதிர்பார்ப்பு மேலாண்மை, புதிய மேலாண்மையாக இருக்கிறது....இந்த மேலாண்மை கைகொண்டால் எமாற்றம் எனும் எதிர்மறை ஆற்றல் தொலைந்து நம் செயல் திறன் கூடும்...
எமன் பயன்படுத்தும் இந்த மேலாண்மை , நசிகேதனின் எதிர்பார்ப்புகளை எப்படி கட்டுக்குள் கொண்டுவரப் போகிறது என்பதும், பொன்னுலகச்செய்திகளும் நம்முடைய ``எதிர்பார்ப்புகளை`` அதிகப்படுத்துகிறது....

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கு நன்றி துளசி கோபால், சிவகுமாரன், meenakshi, பத்மநாபன், ...

அப்பாதுரை சொன்னது…

'எதிர்பார்ப்புக் கட்டுதல்' புதிதல்ல. மகாபாரதத்தில் கண்ணன் செய்த அத்தனை புரட்டையும் நாம் ரசித்து மெய்மறப்பதற்குக் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள் சிவகுமாரன், பத்மநாபன்? :)

'மேலாண்மை ஆலோசகர்கள்' என்று ஒரு இனம் இருக்கிறது - இதில் விற்பன்னர்கள். "நான் ஒன்றுமே செய்ய மாட்டேன்; நான் சொல்வதை அப்படியே செயல்படுத்தினாலும் முடிவுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது - ஆனால் பணம் மட்டும் பை நிறைய கொடுக்கணும்" என்று மனதைக் கட்டிப் போடும் வித்தை தெரிந்தவர்கள்.

எதிர்பார்ப்பு ஆளுமை சுவையானது. வாழ்க்கைக்கு மிகத் தேவையானது.

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi.

தப்பா நினைக்காதீங்க.. ஒரு வேளை நீங்க வேறே ஏதாவது சொல்ல வந்திருக்கலாம்.

இல்லாததை எதுக்கு எதிர்பார்க்கணும்? இல்லாததை எதிர்பார்த்தா நம்ம மேலே தானே தப்பு? நம் எதிர்பார்ப்புகளைக் கட்டினாத்தான் அடுத்தவங்க கிட்டே 'இருக்கா இல்லையா' என்ற realization பாதிக்கும்? 'ஏமாறச் சொன்னது நானோ?' கேட்டிருப்பீங்க.

"நம்மால் என்ன செய்ய முடியும்" என்ற சுய எதிர்பார்ப்புக் கட்டலை/கூட்டலை சரிவரச் செய்தால் தான் அடுத்தவர்களிடம் எதிர்பார்ப்பதை கட்டவோ கூட்டவோ முடியும் என்று நினைக்கிறேன். ஒருதலை ஆதாய எதிர்பார்ப்பு பெரும்பாலும் ஏமாற்றத்தையே தரும்.

ஸ்ரீராம். சொன்னது…

எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கு எதிர்பார்ப்பை கட்டுக்குள் வைப்பது பெட்டர். பின்னூட்டங்கள் சுவையாக இருக்கின்றன.

சுந்தரவடிவேலன் சொன்னது…

இதற்கு முன்னர் ஒரு பின்னூட்டம் இட்டேன் அது வந்து சேர்ந்ததா என்று அறிந்து கொள்ள முடியாமையால் மீண்டும் இடுகிறேன்.


ஒரு தேர்ந்து ஆசிரியரிடம் பாடம் கேட்பது ஒரு மிகச் சிறந்த அனுபவம். அதகையே அனுபவமே ஏற்படுகிறது உங்களுடைய பதிவுகளை வாசிக்கும்போது.ஒரு மாணவனாக குறிப்புகளும் எடுக்கத் துவங்கிவிட்டேன்.

ஆசிரியருக்கு மாணவனின் நன்றிகள், ஏனெனில் உங்கள் வழி நாங்கள் கற்றுக் கொண்டிருப்பது உலகத்தின் தலை சிறந்த வாழ்வியல், தத்துவ நூல்களில் ஒன்றை. மேலாண்மை கல்வியும் கிடைக்கிறதே. :)

உபநிஷத் என்ற இலக்கிய வகைக்கு குரு சிஷ்ய பாவனையில் கூறப்பட்டது என்ற பொருளும் உண்டல்லவா?(அல்லது உபநிஷத்கள் பொதுவாக குரு சிஷ்ய விவதபாவனையில் எழுதப் படுகின்றபனவா?)

தங்களைத் தொடர்பு கொள்ள மெயில் ஈத் ஒன்றும் இல்லையே? பகிர்ந்து கொள்ளாமைக்கு ஏதேனும் காரணம் உண்டோ? கடிதவழி தொடர்பு கொள்ள விரும்புகின்றேன்.

நன்றிகளுடன்,
சுந்தரவடிவேலன்.

http://suzhiyam0.blogspot.com

அப்பாதுரை சொன்னது…

வருக சுழியம் (சுந்தரவடிவேலன்). உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.

நானும் இங்கே மாணவன். (பொழுது போகாமல் எழுதத் தொடங்கினேன் என்பது பாதி உண்மை - கடோ தமிழில் வர வேண்டும் என நினைத்து மீதி உண்மை). சேர்ந்தே படிப்போமே?

என் தொடர்பு விவரங்கள், blogger profileல் இருக்கிறது ('யாரிவன்?'). இயங்காவிட்டால் இதோ: msuzhi@ymail.com. அவசியம் கடிதவழி தொடர்பு கொள்வோம். thanks for reaching out! தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி.