வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/01/18

பிறப்பற்ற இடம்பற்றிக் கேட்டான் நசிகேதன்


19
வரந்தந்தீர் வேனன்றி வாசலில் வந்தோர்
இரந்திரம் ஈதென்றார் கேளீர் - வரம்பொன்றில்
உம்பலத்துக் கப்பால் உயிர்ப்பிணி சுற்றாதாம்
அம்பரம் என்னும் இடத்து.


கேட்ட வரத்தை வழங்கியதற்கு மிகவும் நன்றி. (நான் காத்திருந்த போது) வாயிலில் வந்து போனவர்கள் ரகசியம் என்று என்னிடம் சொன்னதை உங்களிடம் சொல்கிறேன். எல்லையற்ற உங்கள் சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு வானுலக இடத்தில், பிறவிப்பிணி என்பதே இல்லையாம் (என்றான் நசிகேதன்).

    வேனன்றி: வேன்+நன்றி, மிக நன்றி
    இரந்திரம்: ரகசியம், மறைத்து வைத்தது
    வரம்பொன்றில்: 'வரம்பு ஒன்றில்' எனப் பிரித்தால் எல்லை என்றும், 'வரம்பு ஒன்று இல்' எனப் பிரித்தால் எல்லையில்லாத என்றும் பொருளாகும் | எமனின் சக்தி எல்லையற்றது என்ற பொருளில் 'வரம்பு ஒன்று இல் உம்பலத்துக்கு' என்று முகத்துதி செய்வது போலவும், எமனுடைய சக்திக்கும் எல்லை உண்டு என்ற பொருளில் 'வரம்பு ஒன்றில், உம்பலத்துக்கு' என்று அடக்குவது போலவும், இருபொருள்பட நசிகேதன் சொன்னதாகக் கொள்ளலாம்
    உம்பலத்துக்கு: உம்+பலத்துக்கு, உமது சக்திக்கு
    அம்பரம்: விண்ணுலகம், பொன்னுலகம், சொர்க்கம்



    ரு கதை.

    நல்ல மனம் படைத்த ஒருவன் சந்தைக்கு வந்தானாம். ஒரு பெரிய பானை நிறைய இனிய பாயசத்தை எடுத்து வந்த அவன், சந்தைக்கு வந்தவர்களை இலவசமாகப் பாயசம் அருந்த அழைத்தானாம். "ஐயா, அம்மா, வாருங்கள். இலவசப் பாயசம். சிறு துளி அருந்தினாலும் சொர்க்கம் நிச்சயம். என்னை நம்புங்கள், நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். இது அமரர்கள் தினமும் அருந்தும் இனிய பாயசம். இலவசம்!" என்று பானையைச் சுமந்தபடி கூவிக்கூவி அழைத்தானாம். சிலர் அவனைப் பார்த்து முகஞ்சுளித்து ஒதுங்கினார்கள்; 'சொர்க்கத்திலந்து வந்த ஆளைப் பாருய்யா!' என்று சிலர் அவனைக் கிண்டல் செய்து போனார்கள்; நாள் முழுதும் அவன் அங்குமிங்கும் ஓடி ஓடிக் கூவி வழங்கியும், சந்தைக் கூட்டத்தில் ஒருவரும் அவன் சொல்லை மதித்து, இலவசப் பாயசத்தை அருந்த வரவில்லை. மறுவாரம் ஒரு நல்ல வெயில் நாளில், அவன் மாறுவேடம் பூண்டு அதே சந்தைக்கு வந்தான். இந்த முறை முள்சவுக்கு ஒன்றை எடுத்து வந்தான். "ஐயா வாருங்கள், அம்மா வாருங்கள். இது மந்திரச் சவுக்கு. உங்களுக்கெல்லாம் நரகம் கிடைப்பது நிச்சயம். இந்த மந்திரச் சவுக்கினால் ஒரு அடி வாங்கினால் நரகவாசம் விலகி விடும். ஒரு அடிக்கு, கால் பொன் விலை தரவேண்டும். இன்று மாலை வரை சவுக்கடி தருவேன். விருப்பமிருந்தால் என்னிடம் சவுக்கடி பெறலாம். நான் சொல்வதை நீங்கள் நம்பத் தேவையில்லை. ஆனால், நரகத்தைத் தவிர்க்க மந்திரச் சவுக்கடியைத் தவிர வேறு வழியில்லை. இனி, உங்கள் மனம் போலச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு நிழலான இடமாகத் தேடி அமர்ந்தானாம். கால் பொன் கொடுத்து முள்சவுக்கடி பெற விழைந்த கூட்டம், வெயிலையும் பொருட்படுத்தாது நீண்டு கொண்டே போனதாம்.

    உண்மை-பொய், உண்டு-இல்லை என்ற விவாதம் இருக்கட்டும்; சொர்க்கம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், ஒருவரையொருவர் மதித்து, கடமையைச் செய்து, அன்புடன், மகிழ்ச்சியுடன் இயல்பாக வாழ்கிறோமா? கிடையாது. அதே நேரம், நரகம் இருந்தால் அது கிடைத்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில், அறிவற்றக் கண்மூடித்தனச் செயல்களைச் செய்யத் தயங்குவதேயில்லை. நரகம் என்ற பயம், சொர்க்கம் என்ற நம்பிக்கையை அழிக்க அனுமதிக்கிறோம். போகும் வழிக்குப் புண்ணியம் என்று கண்மூடிப் பலசெய்யும் பித்தராகிறோம். கண்ணுக்குத் தெரியாத சொர்க்க நரகங்களை நம்பி, கையிலிருக்கும் வாழ்க்கையை நம் கண்மூடித்தனத்தினால் பிணியாக்குகிறோம். இது தான் உயிர்ப்பிணி. பிணியான வாழ்வு.

    துரங்க ஆட்டத்தில் இனி நசிகேதன் முறை. தன் முதல் வரத்தில், கேட்ட விதத்திலும் வழங்கப்பட்ட விதத்திலும், தோன்றிய ஐயத்தைத் தீர்த்தாக வேண்டும். இரண்டாவது வரத்தையும் கேட்க வேண்டும். ஐயத்தைத் தீர்ப்பதே இரண்டாவது வரமாகி விடக்கூடாது. அறிவுள்ள பிள்ளை அல்லவா? முத்தாய்ப்பாக தன் எண்ணப்படி வரம் கேட்க, பீடிகை போட்டான். எமனுடைய சக்திக்கப்பால் இருக்கும் ஒரு இடத்தைப் பற்றி, உயிர்ப்பிணி சுற்றாத சொர்க்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதாகச் சொன்னான். எமன் அறியாத சொர்க்கமா? எமனும் புன்னகையுடன் நசிகேதன் கேட்கப் போகும் வரத்துக்காகக் காத்திருந்தான்.

9 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

அருமை. தொடர்ந்து வருகின்றேன்.

பத்மநாபன் சொன்னது…

வேனன்றி, இரந்திரம் போன்ற புது ச்சொற்கள் கண்டோம்..
சுவர்க்க நம்பிக்கையை தவிர்த்து, நரக அச்சத்தை என்றும் ஏற்று கொண்டிருப்பது பற்றிய அருமையான கதை...
பிணி விளக்கம்....பிறவியே பிணி என்பதை சிந்தித்தால் நல்வழி கிட்டும்..
நசிகேதனுக்கு அவனுடைய கேள்வி மேல் நம்பிக்கையும்...அதற்கு எமனுடைய எதிர்வினையும் சதுரங்கத்தை சற்று கட்டி போட்ட அசைவுகள்....

ஸ்ரீராம். சொன்னது…

கதையின் கருத்து அபாரம்.

சிவகுமாரன் சொன்னது…

பிரமிப்பாய் இருக்கிறது. தமிழிலிலேயே எவ்வளவு வார்த்தைகள் அறியாமல் இருக்கின்றேன்.நசிகேத வெண்பா ஒரு கருவி தான்.அதன் மூலம் பல விசயங்களைத் தொட்டு செல்கிறீர்கள்.

meenakshi சொன்னது…

வெண்பா இனிமை!
கதையின் கருத்து மிகவும் அருமை!
தொடருங்கள், தொடர்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி துளசி கோபால், பத்மநாபன், ஸ்ரீராம், சிவகுமாரன், meenakshi, ...

அப்பாதுரை சொன்னது…

சரியே சிவகுமாரன்; நசிகேதன் கதை ஒரு கருவி. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கதை நாலு வரிக்கு மேல் இல்லை. தொடக்கத்திலேயே க்ளைமேக்ஸ்; பிறகு சுவாரசியமான திருப்பங்கள் எதுவுமில்லாத பத்தியக் கதை.

இந்தப் புத்தகம் ஒரு போதனை. மனிதன் வாழ வேண்டிய முறை பற்றிய தீவிர போதனை சில இடங்களில் (அலுக்க வைக்கும் அளவுக்கு என்பேன்). நூறு பாடல்கள் போல் சொன்ன கருத்தையே வேறு விதங்களில் திரும்பச் சொன்னால் கொஞ்சம் என்ன, நிறையவே அலுப்பு தட்டும். புத்தியுள்ள பிள்ளை என்றார்களே.. "மிஸ்டர் எமன், வெயிட் எ நிமிட். என்னா சொன்னதையே சொல்லிட்டிருக்கீங்க? சொல்லியாச்சு இல்லே? என்னை வீட்டுக்கு அனுப்புங்க" என்று நசிகேதன் ஏன் கேட்கவில்லை என்று பலமுறை தோன்றியது :)

நசிகேதன் கதைக்கு வெளியே வரும் காரணம் இதைப் படித்த போது எனக்குத் தோன்றியவற்றைப் பகிர்ந்து கொள்ளவே. அகலக்கால் வைத்திருந்தால் அதட்டிச் சொல்லுங்கள். கேட்டு அடங்குகிறேன்.

geetha santhanam சொன்னது…

வெண்பாவும் உன் விளக்க உரையும் வெண்பொங்கலும் காரச் சட்டினி போலும் ஒன்றைவிட ஒன்று அருமை. ஒன்றுடன் ஒன்றாக இன்னமும் அருமை. வாழ்த்துக்கள்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//உண்மை-பொய்//

என்னை பொறுத்தவரை உண்மையை மறைப்பதும் பொய்யே. நான் உண்மையை மறைக்காமல் அப்படி முகத்துக்கு நேரே சொல்வதால் தான் உறவுகளில் (அலுவலகம் முதல் இல்லம் வரை) ரொம்ப கஷ்டப்படுகின்றேனோ என்று தோன்றுகின்றது !