வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/05/31

அறிவிலார் தமிழுக்குத் தீங்கு செய்வார்


48
நற்குணக் குள்ளரிவர் நாநம் நலிந்தவர்
சொற்செயல் சாக்கடையுற் சந்தனம் - அற்குணச்
சித்தர் சடங்குகளின் பித்தரிவர் செய்வதோ
தத்தம் தமிழுக்குத் தீங்கு.

   றிவற்றோர் நற்குணங்களில் சிறிதும் வளர்ச்சி பெறாதவர்கள்; பகுத்தறிவு மழுங்கியவர்கள்; சந்தனம் கலந்த சாக்கடை போன்று சொல்லும் செயலும் கொண்டவர்கள்; தீய குணங்களில் தேர்ந்தவர்கள்; தன்னிலை உயரவேண்டி, கண்மூடித்தனங்களை விரும்பி ஏற்பதனால் இவர்கள் தங்களுக்குப் பிறவியிலே கிடைத்த நல்லறிவை அழித்துக் கொள்கிறார்கள் (என்றான் எமன்).


நாநம்: உள்ளறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, ஞானம்
அற்குணம்: அல்+குணம் | இருண்ட குணம் (அல்=இருள்), தீய குணம்
தமிழ்: அறிவு, உடன் பிறந்தது, நெறி
நற்குணம்: அன்பு, நன்றி, கருணை, அடக்கம், பொறுமை, நேர்மை என்பன ஆறுவகை வேர் நிறைகுணங்கள்
அற்குணம்: ஆசை, வெகுளி, மயக்கம், மூடம், பொறாமை, கபடம் (பொய்மை) என்பன ஆறுவகை வேர் குறைகுணங்கள்


['ignorance, above other sins, enslaves the soul' - william gurnall ]

    'அறியாமை என்று புரிந்தும் அறியாமையைப் பழகுவோர் ஆபத்தானவர்கள்' என்றார் மார்டின் லூதர் கிங். கறுப்பு-வெள்ளை என்று நிறத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே பேதம் பார்க்கும் அறியாமையை வன்மையாகக் கண்டித்தப் பேச்சு. அடிப்படைக் கருத்து எந்த வகை அறியாமைக்கும் பொருந்தும்.

    அறியாமையில் அவதிப்படுவோர் பலர். தன் சொல்லும் செயலும் கடும் அறியாமையால் விளைவன என்று தானாகவே உணர்வோர் சிலர். உணர்ந்த பின் அதற்கேற்ப தன் குணங்களை மாற்றிக் கொள்வோர் வெகு சிலரே. உணர்ந்த பின்னும் குணம் மாறாதோர், மாறத் தயங்குவோர், மாறுவதற்குக் காலம் காரணம் தேடுவோர், ... இவர்கள் ஆபத்தானவர்கள்.

    அறியாமையால் அவதிப்படுவோரிடம் அவர்களின் அறியாமையை எடுத்துச் சொன்னதும், சுவற்றில் முட்டியது போல் பொறிதட்டித் திருந்துவோர் சிலர். எத்தனை எடுத்துச் சொல்லியும் மாறாது, எடுத்துச் சொன்னவர்களையே சுவற்றில் முட்டிக் கொள்ள வைப்பவர்கள் சிலர். இதோ திருந்துகிறேன், அதோ திருந்தினேன் என்று தனக்குத் தானே சொல்லி, விழுந்த குழியை ஆழத்துடன் சேர்த்து அகலப்படுத்துவோர் பலர். தன்னையும் தன்னைச் சுற்றி இருப்போரையும் வேகமாகக் குழிக்குள் இழுப்பவர்கள்... இவர்கள் ஆபத்தானவர்கள்.

    மதம் என்கிற அறியாமையைச் சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தோமானால், மதங்கள் கூட அறியாமையைச் சாடுவதைக் காணலாம். ஐந்து, ஆறு, ஏழு வகைப் பாவங்கள் என்று மதத்திற்கேற்றபடி பாவத்தொகுப்புகள் வேறுபட்டாலும், உலகின் பிரபல மதங்கள் ஒவ்வொன்றும் அறியாமையைப் பாவங்களின் சக்கரவர்த்தி என்கிறது. அறியாமையினால் பிற தவறுகளைச் செய்கிறது மனிதம் என்கிறது மதம். பிறகு, பாவத்தின் சம்பளம், மீட்சி, பரிகாரம் என்று மதங்கள் அங்கிருந்து ஒரேயடியாகச் சறுக்குவதால் மனிதம் அறியாமையை உணரவில்லையோ என்னவோ! எனினும், பாவ-புண்ணிய வியாபாரம் செய்யும் மதவாதிகள் கூட அறியாமைக்கு ஈடான பாவமே இல்லை என்கிறார்கள்!

    அறிவு என்பது ஒரு மாயப்பை. கிடங்கு. சுரங்கம். உள்ளே புதைந்திருப்பது என்னவென்று தெரிந்து கொள்ள உழைக்க வேண்டும். பெரும்பாடு படநேரும்.

    அறியாமை என்பது ஒரு மாயப்பை. கிடங்கு. சுரங்கம். உள்ளே புதைந்திருப்பது என்னவென்று தெரிந்து கொள்ள உழைக்க வேண்டாம். சுலபமாகக் கிடைக்கும்.

    பெரும் நோய்களின் அறிகுறிகள் இன்னவென்று அறிந்து, நோயைப் பற்றிய அறிவைப் பரப்புகிறோம். நமக்கோ நாம் அறிந்த பிறருக்கோ, அத்தகையப் பெரும் நோய் ஏற்பட்டால் உடனே சிகிச்சை பெற விரைகிறோம். பெரும் நோயால் அவதிப்படுவோரைப் பொதுப்பார்வையிலிருந்து விலக்கித் தனியாக வைக்கிறோம். நோய் குணமாக வேண்டும் என்ற அக்கறையை விட, நோய் பரவக்கூடாது என்ற அச்சமே முதற்காரணம். அறியாமையில் அவதிப்படுவோரை வெளிப்படையாக அடையாளம் காண முடிந்தால், அறியாமை எனும் நோய் விலக வழி பிறக்குமோ?

['...பாழும் மனிதர் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே, இதயப் போர்வையில் மறைத்தானே!' - கண்ணதாசன் ]

    "இன்பங்களை விரும்புதல், தற்பெருமை என அறிவற்றோரின் சில குணங்களைப் பற்றிச் சொன்னேன். மேலும் சொல்கிறேன், கேள்" என்றான் எமன். "நற்குணங்கள் ஆறினில் எதனையும் அதிகம் வளர்த்துக் கொள்ளாதவர்கள். அறிவற்றோரிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது. அன்பு செலுத்தினாலும் அதில் சுயநலமோ வேறு எதிர்பார்ப்போ இருக்கும். இவர்கள் நன்றி அறியாதவர்கள். அதே நேரம், அவர்களே அறியாமல் நிகழ்ந்த நன்மைக்குக் கூடத் தன்னிடம் பிறர் நன்றி பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்" என்றான்.

    "அவர்களே அறியாத நன்மையென்றால்? அது எப்படி நிகழும்?" என்று கேட்டான் நசிகேதன்

    "தனக்குப் பிறந்த காரணத்தால் கிடைத்தப் பேறுகளுக்காக பெற்ற மக்களிடம் நன்றி எதிர்பார்ப்பது. வசதியான வீட்டுக்குள் வாழப் புகுந்த ஏழைப் பெண் அல்லது ஆணிடம் அவர்களுக்குக் கிடைத்த வசதிக்கு நன்றிகள் எதிர்ப்பார்ப்பது. அறிவும் முனைப்பும் கொண்ட மாணவனுக்குக் கற்பிக்க நேர்ந்தமைக்காக நன்றிகள் எதிர்பார்ப்பது. ஆற்று நீரைப் பருகக் கொடுத்து அதற்காகக் நன்றி கேட்பது. பிறப்பும் இறப்பும் இயற்கையின் விபத்துக்கள். இவற்றில் கூட நன்றி எதிர்பார்க்கும் புன்மைத்தனம் கொண்டவர்கள் அறிவற்றோர்.

    மேலும் சொல்கிறேன், கேள். அறிவற்றோரிடம் கருணை கிடையாது. சுயநலம் மிகுந்த இவர்களிடம் கருணை குறைந்திருப்பதில் வியப்பில்லை. பசி அல்லது பிணிக் கொடுமையாலோ அல்லது வேறு உபாதையாலோ வாடும் சுற்றம் மற்றும் நட்பு வட்டத்தினரிடம் கூட அறிவற்றோர் கருணை காட்டுவதில்லை. அந்த நிலையிலும், தனக்கு எதுவும் கிடைக்கவில்லையே, தன்னுடைய தேவைகள் நிறைவேறவில்லையே என்றே நினைப்பார்கள். பச்சிளம் பிள்ளையான உன்னை எனக்குத் தானம் செய்த நிலையில் கூட, தன் தவறினால் எங்கே தனக்கு சொர்க்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்றே உன் தந்தை எண்ணினான், நினைவிருக்கிறதா?

    அறிவற்றோரிடம் தன்னடக்கம் கிடையாது. தற்பெருமை கொண்டவர்களிடம் தன்னடக்கம் எதிர்பார்க்க முடியாதே?

    அறிவற்றோரிடம் பொறுமை கிடையாது. இன்பம் தேடும் தீவிரமோ அல்லது வேறு சுயநல உந்துதலோ, எதுவானாலும், இவர்களுக்குப் பொறுமையின் பாங்கு புரியாது. சிந்திக்காமல் தன் தேவைக்கேற்ப அவசரமாக முடிவெடுப்பார்கள். தன் இலக்கை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறியில், வெற்றிப் போதையில், கண்மூடித் தவறுகள் செய்வார்கள். தங்கள் தவறுகளினால் பிறர் பாதிக்கப்படுவதையும் பொருட்படுத்த மாட்டார்கள். உன் தந்தை, உன்னை எனக்குத் தானம் கொடுத்ததே உதாரணம்.

    அறிவற்றோர் நேர்மையைக் கடைபிடிக்க மாட்டார்கள். பொய்யும், புரட்டும், குறுக்கு வழியும் பின்பற்றித் தாங்கள் தேடும் இன்பங்களைப் பெற முயல்வார்கள்.

    மனிதரை மிருகத்திடமிருந்து வேறுபடுத்துவது பட்டறிவு. அனுபவம். இதனால் நன்மையுண்டாகும், தீதுண்டாகும் என்ற காரண-காரியம் தொட்டப் பகுத்தறிவு. அறிவற்றோர், பகுத்தறிவு இருந்தும் பயன்படுத்த மாட்டார்கள். செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். இவர்களுக்கு ஞானம் வளர்வதே இல்லை.

    அறிவில்லாதவர்களின் சொல்லும் செயலும் பொருந்தாது. இனிமையாகப் பேசுவார்கள், கடுமையாக நடப்பார்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்வார்கள். வாக்களித்துப் பின் கைவிடும் நம்பிக்கைத் துரோகிகள். இடுக்கண் வருகையில் தாய் தந்தை துணை மக்களென்றும் பாராது தம் நலத்தில் குறியாக இருப்பார்கள். ஆனால், இந்தப் பேதங்கள் புரியாத வண்ணம் இனிமையானவராகவும் கண்ணியமானவராகவும் தோன்றும் போலிகள் ஆவர்.

    தீய குணங்கள் ஆறினிலும் தேர்ந்தவர்கள். ஆசை, வெகுளி, மயக்கம் எனும் மும்மலங்களில் இவர்கள் அளவிலா வளர்ச்சியடைந்தவர்கள். எத்தனை செல்வங்கள் கிடைத்தாலும் எத்தனை இன்பங்கள் பெற்றாலும் இவர்கள் மனம் ஆறுவதில்லை. சுயமாகச் சிந்திக்காத மூடர்கள். அற்ப விஷயங்களுக்கும் பொறாமையினால் வாடுவார்கள். பொய்யும் புரட்டும் இவர்களுக்குக் கை வந்தக் கலை. பேச்சிலும் செயலிலும் போலித்தனமும் கள்ளத்தனமும் மிகுந்திருக்கும்.

    சுயநலத்தாலும் போலித்தனத்தாலும் உந்தப்பட்டு, இவர்கள் பிற போலிகளை விரும்பி ஏற்பார்கள். கண்மூடித்தனமான சடங்குகளில் ஈடுபட்டுத் தன்னையும் பிறரையும் இக்கட்டில் ஆழ்த்துவார்கள். அறிவு மழுங்கிவிட்ட நிலையில், இவர்களுக்குத் தங்களின் போலித்தனமும் கண்மூடித்தனமும் உறைப்பதே இல்லை.

    சாக்கடையில் சந்தனம் சேர்ப்பதால் சாக்கடையின் தன்மை மாறுவதில்லை; ஆனால், சந்தனத்தின் தன்மை மாறிவிடும். அறிவற்றோரின் சொல்லும் செயலும் குணங்களும் பாவங்களும் சாக்கடை. அவற்றில் இயற்கையாக தோன்றும் நற்குணங்களும் அழிந்து மறைந்து விடுகின்றன. சந்தனத்தை விழுங்கியும் எப்படிச் சாக்கடையாகவே ஓடுகிறதோ, அறிவற்றவரும் அறியாமை எனும் சாக்கடையுள் அனைத்து நற்குணங்களையும் கரைத்து விடுகிறார்கள்.

    நற்குணம் வெறுத்தும் தீக்குணம் பேணியும் கண்மூடித்தனத்தில் மூழ்கும் அறிவில்லாதவர்கள், தங்களுக்கு இயற்கையிலேயே கிடைத்த தன்னறிவை, நல்லறிவை, உள்ளறிவை,... உணராமலே வாழ்கிறார்கள். தம் தீச்செயல்களால் அந்த நல்லறிவையும் நாள்பட அழித்து விடுகிறார்கள்" என்றான் எமன்.

    நசிகேதனுக்கு அறியாமை மேல் முதல் முறையாக பெரும் அச்சமேற்பட்டது. நடுங்கினான். தன் தந்தை போல் எண்ணற்றோரின் கதி உய்ய வேண்டுமென்ற எண்ணம் அவன் மனதில் ஓடியது. அதே நேரம் அவர்களுக்கு என்ன நேரும் என்று அறியவும் விரும்பினான். "ஐயா, அறிவற்றவர்களின் கதி என்ன, அதைச் சொல்வீர்களா?" என்றான் மீண்டும்.

2011/05/27

அறிவிலார் தம்பெருமை பேசுவார்


47
கிணற்றுள் கடற்குளியல் காணும் அறியார்
சுணக்கராய்த் தம்பெருமை சொல்வார் - கணமும்
குருடர்பின் போகும் குருடரைப் போலே
இருளில் இருப்பார் இவர்.

   றிவற்றவர்கள், குறுகிய கிணற்றுக்குள்ளே முங்கிவிட்டு பெருங்கடலிலே மூழ்கிக் குளித்தது போலே வீண்பேச்சு பேசும் இயல்பினர்; விடாமல் குரைக்கும் நாயைப் போல இவர்கள் தம்பெருமை பேசுவர். குருடரை எந்நேரமும் பற்றித் தொடரும் குருடருக்கு இருளை விட்டு வெளிவர வாய்ப்பில்லாதது போலவே, அறிவுக்குருடர்களைத் தொடர்ந்து அறியாமை எனும் இருளிலே தடுமாறி வாழ்வர் அறிவற்றவர் (என்றான் எமன்).


சுணக்கர்: நாய் போன்றவர்

['..desire, greed, arrogance and ego.. the fire of ignorance destroys the world' - guru granth sahib ]

    ற்பெருமை பலவிதங்களில் வெளிப்படுகிறது.

    தன்னுடைய சாதனை மற்றும் பெருமைகளையே தொடர்ந்து பேசி, அடுத்தவரை எரிச்சல் படுத்தும் வகையை அறிவோம். நம்மில் பெரும்பாலானோர் இந்த வகையில் விழுந்து எழுந்தவர்கள் எனலாம். அனுபவங்களின் காரணமாக, வளரும் வயதில் முதலில் விழும் பழுது தற்பெருமை என்பார்கள். வளரும் வயதில் விழாது போனால் வாழ்நாள் முழுதும் தொடரும் பழுது என்றும் சொல்லப்படுகிறது.

   தன்னைப் பற்றிய பெருமைகளைப் பேசுவது மட்டும் தற்பெருமை அல்ல. தன் பெருமையைப் பற்றிப் பேசாமலே தற்பெருமைக்காரர் ஆகலாம். எப்படி?

   யார் எதைச் சொன்னாலும், அதற்கு எதிராக ஒன்று சொல்லித் தன்வயப்படுத்தும் பேச்சு ஒரு வகைத் தற்பெருமை ஆகும். இது சாதாரண பேச்சில் தொடங்கி மிகத் தீவிரமாகப் போகலாம். தன்னுடைய அறிவே மேன்மையானதென்று பல வகையிலும் தெரிவிக்கும் குணம்.

   பிறர் கருத்துக்களை மதிக்காத குணமுடையவர்கள் தற்பெருமைக்காரர் ஆவர். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கேட்கவும் நேரம் இல்லை இவர்களுக்கு. அடுத்தவரைப் பேசவிடாமல் தம் கருத்துக்களைத் திணிப்பவர்கள். அல்லது, அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைப் புரிந்து கொள்ளவும் முயலாமல், தம் கருத்தை அடுத்தவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே திணிப்பவர்கள். எப்பொழுதும் தன்னைப் பற்றிய கவனத்தில் இருப்பதாலும், அடுத்தவர் கவனத்தையும் தன்வசம் திருப்ப முயல்வதாலும், இவர்கள் தற்பெருமைக்காரர்கள்.

   பிறருடைய பெருமைகளைப் பாராட்டாமல், அலட்சியம் செய்வோர் அல்லது மிகையாகச் சிறுமைப்படுத்துவோர் இன்னொரு வகைத் தற்பெருமைக்காரர்கள். பரம்பரைப் பெருமை, குலகௌரவம் போன்ற போலிப் பெருமைகளைப் பேசிப் பேசி நேரத்தையும் நேசத்தையும் வீணடிப்பவர்கள். கணவன், மனைவி, பிள்ளை, நட்பு என்று யார் எதைச் சாதித்தாலும் தன் காலத்தில் நடந்தவற்றையே சொல்லி, மிகக் கேவலமான விதத்தில் பிறரின் வெற்றிகளை ஏளனம் செய்பவர்கள்.

   தான் செய்தவற்றை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் எடுத்துச்சொல்லி, அதற்குப் பலனோ நன்றியோ எதிர்பார்ப்பவர்களும் தற்பெருமைக்காரர்களே. பெற்ற பிள்ளையை வளர்த்த தந்தையும் தாயும், அதற்கான நன்றி எதிர்பார்த்ததால், இறந்தபின் அவர்களுக்குக் கிடைத்தத் தண்டனைகளைப் பற்றிய native american folk tale ஒன்று உண்டு.

   தற்பெருமை என்பது கரையான். புற்றுநோய்க் கிருமி. அரித்து அரித்து அழிவு ஏற்படுமே தவிர, குணமாவது மிக அரிது. எந்த விதத்தில், எந்த அளவில், எந்த முறையில் தற்பெருமை வெளிப்படும் என்பதைக் கணிப்பதும் அரிது. சுயநலம், பொறாமை, ஆத்திரம், கோபம், பொய், பேராசை என்று பல மனநோய்களுக்குத் தற்பெருமை - தன்னைப் பற்றிய அளவில்லாத உணர்வு, narcissism - காரணம் என்கிறார்கள். தற்பெருமை நிறைந்த மனங்களுக்குத் தாம் வியாதியில் வாடுவது புரிவதில்லை.

   குடும்பத்தில் (அல்லது வெளியிடங்களில்) நாள்தோறுமோ வாரத்தில் ஒரு முறையோ, உடன் பழகுவோருடன் 'சொல்லாலும் செயலாலும் மனம் புண்பட' நடந்ததைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது பயன்தரும் என்கிறார்கள். சுயநல பழக்கங்கள் குறையும் என்கிறார்கள். மன்னிக்கும், மறக்கும் குணமும் வளரும் என்கிறார்கள்.

['கண்ணை மறைக்கும் பெருமைகளாலே தன்னை இழக்கும் வீரரைப் போலே' - கண்ணதாசன் ]

    "இன்பங்களைப் பெருக்குவதிலே கவனமாக இருப்பார்கள் என்றேன் அல்லவா? அறிவற்றோரை மேலும் அடையாளம் காட்டுவேன்" என்று எமன் தொடர்ந்தான். "தற்பெருமை பேசித் திரிபவர்களும் அறிவற்றவர்களே" என்றான்.

   "தம் பெருமையைப் பேசுவதில் என்ன தவறு?" என்றான் நசிகேதன்.

   "நாய் குரைக்கிறது. ஒரு முறை குரைத்தால் நாயைப் பாராட்டித் தட்டிக் கொடுக்கிறோம். இரண்டாவது முறை குரைத்தால், ஏனென்று பார்க்கிறோம். தொடர்ந்து குரைத்தால் நாராசமாக ஒலிக்கிறது. நாய்க்கு வெறி பிடித்துவிட்டது என்று நினைக்கிறோம். எதற்கு நாயுடன் பழகினோம் என்று வெறுத்து நாயை அடித்து விரட்டுகிறோம், அல்லது, நாய்க்குப் பயந்து நாம் ஓடுகிறோம்.

   தற்பெருமை பேசித் திரிவோர், குரைக்கும் வெறிநாய் போல் பிறருக்குத் தோற்றமளிக்கிறார்கள். குரைக்கும் நாய் தனக்கு வெறி பிடித்திருப்பதை அறிவதில்லை. தற்பெருமைக்காரர்களும் அவ்வாறே அறியாமல் நடக்கிறார்கள்.

   தற்பெருமை கொண்டவர்கள் தன்னால் முடியாதது எதுவுமில்லை என்று நினைப்பார்கள். தன்னை விட எதுவும் எவருமே உயர்வில்லை என்று கருதுவார்கள். தனக்குத் தெரியாதது எதுவுமே இல்லை என்று நினைப்பார்கள். தான் பாராதது, புரியாதது எதுவுமே இல்லை என்று நினைப்பார்கள். தன்னைச் சுற்றியே எல்லாம் நிகழவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வீணர்கள்.

   கிணற்றுக்குள் முங்கிக் குளித்து விட்டு ஆழ்கடலில் மூழ்கி முத்துக்குளித்தது போல் வீணாகப் பேசுவார்கள். எந்தச் சொல்லையும் செயலையும் எண்ணத்தையும் தன்னையோ தன் பெருமையையோ சுற்றிவரச் செய்வார்கள்.

   இருளில் கிடந்தாலும் தன்னைச் சுற்றிய இருள் மிக இருண்டது என்று வீண் பெருமை கொள்ளும் பேதைகள்.

   கண்ணிழந்த குருடர்கள், பார்வை மிகுந்தோரை வழிகாட்டியாக ஏற்றுப் பின்பற்றினால், போகும் வழியறிவார்கள். அதைவிட்டு, இன்னொரு குருடரைப் பின்பற்றினால் அவர்களுக்குத் தாங்கள் போகவேண்டிய பாதை தெரிவதில்லை. தற்பெருமைக்காரர்களும் அப்படியே. தான், தன் மக்கள், தன் சுற்றம், தன் இனம் என்று தற்பெருமை வட்டத்துக்குள் சுழல்வதால், ஒருவரையொருவர் தொடர்ந்து, இவர்கள் அறியாமை இருளில் வீழ்ந்து விடிவேயில்லாமல் கிடக்கிறார்கள்" என்றான் எமன்.

   "அப்படியென்றால் இவர்களின் கதி?" என்றான் நசிகேதன்.

   "அறிவற்றவர்களை முழுதும் அடையாளம் காட்டிவிட்டு, அவர்களின் கதியைப் பற்றிச் சொல்கிறேன். கவனமாகக் கேள்" என்றான் எமன்.

2011/05/24

மனிதர்களில் இரண்டு வகை


46
செறிவுறச் சொல்வேன் இனங்கள் இரண்டே
அறிந்தோர் அறியாதோர் என்று - அறியாதோர்
பொன்னும் பொருளும் புகழும் மிகநாடி
இன்பம் பெருக்கும் இனம்.

   'அறிவுடையோர், அறிவில்லாதோர்' என்று (செயலுக்கேற்றபடி) பொருத்தமாக இருவகை மானிட இனங்கள் உண்டு. செல்வங்களையும் பெருமைகளையும் தீவிரமாகத் தேடிச் சேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள் அறிவில்லாதவர்கள் (என்றான் எமன்).
['There are two things to aim at in life: first, to get what you want; and then, to enjoy it. Only the wisest of mankind achieve the second' - Logan Pearsall Smith ]

    புத்தூர் கதைக்குத் திரும்புவோம்.

    சோகப் பாதை ஒன்று, சுகப்பாதை ஒன்று, என இல்லாமல் மக்களுக்குக் கிடைத்த இரண்டுமே மகிழ்ச்சிப் பாதைகள். இரண்டு பாதைகளுள், போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும், தேவைப்பட்டால் வழிகாட்டியின் உதவியும், மக்களுக்குக் கிடைத்தது. தேர்ந்தெடுத்துச் சென்றப் பாதையிலோ வழியெங்கிலும் மகிழ்ச்சி அளித்த நிகழ்வுகள் ஏராளம். எனினும், இலக்கை அடைந்த மக்களிடம் மகிழ்ச்சி இல்லை. தேடுவதிலும் சேர்ப்பதிலும் கிடைத்த மகிழ்ச்சி, தேடிச் சேர்த்ததும் காணாமல் போனதேன்? எல்லோருக்கும் ஒரே அளவில் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று பொருமிய நபர், அவ்வாறே எல்லோருக்கும் சம அளவிலான மகிழ்ச்சி கிடைத்திருந்தால் பொருமாதிருப்பாரா? மகிழ்ச்சி நிலைத்திருக்குமா?

    மற்றப் பாதையும் மகிழ்ச்சிப் பாதை என்றதே? எனில், மகிழ்ச்சி அடையப் பல வழிகள் உண்டா? வழிகாட்டி எடுத்துச் சொல்லியும் நபர் அந்தப் பாதையைப் புறக்கணித்ததேன்? அந்தப் பாதையை ஏற்றுப் பயணம் செய்யும் அறிவு எவருக்கேனும் இருந்ததா? அந்தப் பாதையில் என்ன கிடைத்தது? 'ஒரு மனிதரும் வரவில்லை' என்றாரே கடவுள்? யாரும் வரவில்லையா? அல்லது, வந்தவர் யாரும் கடவுளிடம் முறையிடவில்லையா? அல்லது, அந்தப் பாதையில் வந்தவர் மனிதரில்லையா? எதனால் வரவில்லை என்றார்? கடவுள் எந்தப் பாதையில் வந்தார்? அவர் ஏன் மற்றவரைப் போல் பொருமவில்லை? முதல் பாதையில் வந்தும் இன்பங்களைச் சேர்க்காததாலா? அல்லது.. ஒரு வேளை.. கடவுள் மற்றப் பாதையில் வந்தாரா? மாற்றுப் பாதையில் வந்ததால் கடவுளானாரா? அந்தப் பாதையில் வருவோர் எல்லாம் கடவுளாகக் கூடுமா?

    கதையா, கேள்விச் சுரங்கமா?

   ன்பம் தேடுவது நமக்கு இயல்பாக வருகிறது. சாதாரணச் சோம்பலில் இருந்து (கண் எதிரே கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் டிவி ரிமோட்டை யாராவது எடுத்துக் கொடுங்களேன்?), ஆசைகளிலிருந்து (இந்த நகையும் உடையும் மணப்பெண்ணை விட அழகுப்படுத்திக் காட்டுமா?), தீவிரத் தேடல்களிலிருந்து (ஐம்பது வயதுக்குள் நாலு வீடு, ரெண்டு கார், கோடிப் பணம் சேர்த்தாக வேண்டும்)... சுயநலம், பொறாமை, வெறுப்பு வரை எல்லாவற்றிற்கும் அடிப்படையில் இன்பங்களைத் தேடுவதன் சாயலையும் சுவடுகளையும் காணலாம்.

    தேடலின் சுகம், தேடிப்பெற்ற வெற்றியின் சுகம், கண்களையும் அறிவையும் கட்டவல்லது. தேடிய இன்பங்களை மறந்து, தேடிப் பெறும் வெற்றியை வெறி போல் வளர்த்து விடுகிறது. தனக்கான தேடல்கள், தன் இனத்துக்கான தேடல்கள் என்று தேடல் வெறி வளர்கிறது. சொல்லில் கூட, வெற்றிக்கும் வெறிக்கும் இடையே சிறிய வேறுபாடு தான். இந்த வெறி, பலூனிலேற்றும் காற்றைப் போன்றது, கட்டவிழ்ந்த வெள்ளம் போன்றது. காற்றடைத்த பலூன் பெருக்கத் தொடங்கி விடுகிறது. வழியில் இருக்கும் எதுவும் பொருட்டின்றி, வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. பலூன் வெடித்த பின் உள்ளதும் போனது புரிகிறது. வெள்ளத்தின் சேதம் நெஞ்சை அடைக்கிறது. தேடிச் சேர்த்த இன்பங்களை அனுபவிக்காமல் பகிராமல், தொடர்ந்த தேடலில் காலத்தை வீணடித்து, உடன் மற்றும் சுற்றியிருந்தோரின் தீவிர வெறுப்புக்கும் ஆளானதை எண்ணி மனம் கலங்கிப் போகிறது. சில நேரம் வெம்பி நோய்வாய்ப்படுகிறது.

    எனினும், நேரம் கடந்த ஞானத்தினால் பயனில்லை. இன்பம் தேடுவதிலேயே மரத்துப் போன மனம், மீண்டும் பழைய வழிகளில் திரும்புகிறது. இந்தச் சுழற்சியின் மாயத்தை, போதைப்பொருளின் தாக்கத்தை, உணர்ந்து, அறிந்து செயல்படும் முறையைக் கற்றால் பயனிருக்கும். யார் சொல்லித் தருகிறார்கள்?

    இன்பத்தை எங்கே எப்படித் தேடுவது என்பதைத் தானாகவே விரைவில் புரிந்து கொள்ளும் மனம், எங்கே எப்படி நிறுத்துவது என்பதை மட்டும் தானாகவும் புரிந்து கொள்வதில்லை; எத்தனை எடுத்துச் சொன்னாலும் எத்தனை நாளானாலும் புரிந்து கொள்ள மறுக்கிறது. அறியாமையில் சிக்கியிருப்போரின் நிலையும் இதுவே. இன்பங்களைப் பற்றித் தொடர்வதும் தேடுவதும் ஒரு வகை அறியாமையென்றால், துன்பங்களைப் பற்றி விலகாதிருத்தல் அதன் சகோதர அறியாமை.

['சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்' - கண்ணதாசன் ]

    "மனிதருள் இருவகையினர் - அறிவுள்ளவர்கள், அறிவற்றவர்கள். இருவகை மாந்தரையும் அடையாளம் காட்டுகிறேன்" என்று தொடங்கினான் எமன்.

    "அறியாதவர்கள் என்றால் எழுத்தறிவில்லாதவர்கள், கல்வி கற்காதவர்கள் என்று எண்ணிவிடாதே. அறிவற்றவரும் பார்வைக்கு அறிவுள்ளவர் போலவே தோன்றுவார். அறிவில்லாதவர் நன்கு படித்திருக்கலாம்; நெறிகளையும் வேதங்களையும் சாத்திரங்களையும் தந்திரங்களையும் கற்றிருக்கலாம். வித்தை தெரிந்தவராக இருக்கலாம். எனினும், அறிவற்றவர்களாக நடப்பதால் இவர்கள் அறிவில்லாதவர்களே. அதே நேரம், அரை எழுத்துக் கல்லாதவர், பாமரனிலும் பாமரன், வேதங்களோ சாத்திரங்களோ இன்னதென்றே தெரியாதவர், மிகச் சாதாரணர், அறிவோடு நடந்தால் அவர் அறிந்தவர் ஆவார்"

   "புரியவில்லையே? கல்வி பெறாதவன் எப்படி அறிவோடு நடக்க முடியும்? கல்வி கற்றவன் எவ்வாறு அறிவற்ற செயல் புரிவான்?" என்று கேட்டான் நசிகேதன்.

   "மனித மனம் இன்பத்தை நாடுவது; துன்பத்திலிருந்து விலகி ஓடும் தன்மையது. இன்பத்தைத் தேடிச் சேர்க்கும் பொழுதும் துன்பத்திலிருந்து விலகும் பொழுதும் எத்தகைய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது, தூண்டுதல்களுக்குக் கட்டுப்படும் மனிதன் என்னென்ன செயல்களைச் செய்கிறான், என்பதே அறிந்தோனையும் அறியாதவனையும் அடையாளம் காட்டும்.

   பொன் பொருள் புகழ் என்று செல்வங்களையும் இன்பங்களையும் தேடும் மனிதன் அதற்கு அடிமையாகி விடுகிறான். பெற்ற பொருளை மறந்துவிடுகிறான்; தேடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறான். தேடலின் வெற்றி, போதை போல் பரவி ஆட்கொண்டுவிடுகிறது. எத்தனை பெற்ற போதும் மேலும் மேலும் பெறத் தூண்டுகிறது. தேவையில்லாதவற்றையும் சேர்க்கத் தூண்டுகிறது. இன்பத் தேடலின் போதையும் வேகமும் அவன் கண்ணையும் அறிவையும் மறைத்து விடுகின்றன. கண்மூடத் தொடங்கியவன் அறிவை ஒதுக்கிறான். தன்னைப் பற்றியும், தன் சாதனைகளைப் பற்றியும், தன் மக்களின் பெருமைகளையும் தன் இனத்தின் வெற்றிகளையும் ஊரார் முன் உயர்த்திப் பேசி உவகையடைகிறான். எந்த வெற்றியும் தன்னால் உண்டானது போல் உணர்கிறான். தன்னை விட உயர்ந்தவரில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். தன் பெருமைகளைப் பேசவும் கேட்கவும் தயங்குவதேயில்லை. 'ஊர் சொன்னது, தாய் சொன்னது, துணை சொன்னது, தந்தை சொன்னது, குரு சொன்னது, நண்பர் சொன்னது' என்று பிறர் பேச்சைக் கேட்டு, தான் பெற்ற இன்பத்தை மட்டுமே மனதில் நிறுத்துவதால், அவை அழுக்கு மூட்டைகளாக மாறி அங்கிருந்த அறிவை ஒடுக்கி அகற்றி விடுகின்றன.

   அறிவு மழுங்கிய நிலையில், அறிவை மறந்த நிலையில், அறிவை மதிக்காத நிலையில் செய்யும் எந்தச் செயலும் அறிவற்ற செயலே. தானம் கொடுத்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று உன் தந்தை தன் செல்வங்களையெல்லாம் கண்மூடித்தனமாக வழங்கியது அறிவற்ற செயலே. உன் தந்தையைப் போல் எண்ணற்ற கண்மூடிகள் பல்வகை இன்பம் தேடுவதே குறியாக உலக வாழ்வைக் கழிக்கிறார்கள். இன்பங்களைத் தேடுகிறவர்கள் அமைதி அடைவதேயில்லை. முதலில் தனக்காகச் சேர்க்கிறார்கள். பிறகு, தன் குடும்பத்துக்காக.. பிறகு, சந்ததிக்காக... பிறகு, தன் சுற்றத்துக்காக, தன் சுற்றத்தின் குடும்பத்துக்காக, தன் இனத்துக்காக... பிறகு, எதற்குச் சேர்க்கிறோம் என்றே தெரியாமல் இவர்களின் பொருள் சுகம் இன்பத்தேடலுக்கு அளவும் முடிவும் இல்லை" என்றான் எமன்.

   "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது தவறா?" என்றான் நசிகேதன்.

   "தவறில்லை. இவர்களோ இன்பம் தேடும் வெறியில் கண்ணையும் அறிவையும் மூடியவர்கள். தன்னைச் சுற்றியவரின் உண்மையான இன்பத்திலோ, ஏன் தன்னுடைய உண்மையான இன்பத்திலோ இவர்களுக்கு அக்கறையில்லை. தான் என்ற அகந்தையும், தன்னால் எல்லாம் முடிகிறது என்ற ஆணவமும், தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற அகங்காரமும், தன்னால் முடியாது என்றவரை வெறுப்பதால் பகையும், வெறுத்து ஒறுக்க முடியாதவர் மேல் ஆற்றாமையும் அழுக்காறும் தோன்றுகிறது. இன்பம் தேடும் வேகம், துன்பம் தேடும் வேகமாக மாறுவதை அறியாமலே தொடர்கிறார்கள். பாதகங்கள் புரிகிறார்கள். பரிகாரங்கள் தேடுகிறார்கள். பலிகள் தருகிறார்கள். இந்தச் சுழற்சியில் சிக்கியவர்கள் விடுபடுவதேயில்லை.

   தாம் செய்யும் செயலுக்கேற்ற விதத்தில் பூமியில் மானிடர் அறிவுடையோர், அறிவில்லாதோர் என இரண்டே வகையினராவர். மனிதரிடையே வேறு எந்தப் பேதமும் இல்லை" என்றான் எமன்.

   நசிகேதனுக்குத் தன் தந்தையின் செயல்களின் பின்னணி புரியத்தொடங்கியது. "அறிவில்லாதவரைப் பற்றித் தொடர்ந்து சொல்லுங்கள்" என்றான்.

2011/05/20

அறிவுளோர் நல்வழியே நாடுவார்


45
நேற்றூர்ப் பயணத்தில் நித்தம் புதிர்போலே
மாற்றூர் வழியிரண்டும் முன்வரும் - ஆற்றும்
அறிவிலார் இன்பவழி நாட நடப்பார்
அறிவுளார் நன்மை அறிந்து.

   வாழ்க்கைப் பயணத்தில் இன்பம், நன்மை எனும் ஊர்களுக்கான வேறு பாதைகள் தினமும் தோன்றும். பகுத்தறிந்து செயலாற்றும் அறிவற்றவர்கள் இன்பவழியை விரும்புகையில், அறிவுள்ளவரோ நல்வழி அறிந்து நடப்பர் (என்றான் எமன்).


ஆற்றும்: செயல்படுத்தும்
நேற்றூர்: வாழ்க்கைப் பயணத்தின் முடிவு, நடந்தது


['One is after this. One is after that. One seems to seek joy. One seems to shun joy. Still both enjoy. Both are after pleasure and peace. The killer kills. The healer heals. Still both pursue the same' - Kannan Gopinathan (Poems by Kannan Gopinathan) ]

    ரு கதை.

புத்தூர் திறப்பு விழா. புத்தூரில் செல்வமும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிம்மதியும் பெருக்கெடுப்பதாகக் கேள்விப்பட்டு மக்கள் திரண்டு வந்து கொண்டிருந்தார்கள். போதாக்குறைக்குப் புத்தூரில் கடவுள் வேறு அசலில் இருப்பதாகச் சொல்வதால், புத்தூரை அடைய மக்கள் கூட்டம் வந்து கொண்டே இருந்தது.

புத்தூர் வழியின் தொடக்கத்தில், 'வழிகாட்டி' என்று ஒரு பெரிய அறிவிப்பை மாட்டி, அங்கே ஒருவர் வருவோருக்கு ஏதோ ஒரு அடையாளம் சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்குப் பின்னே, 'புத்தூர் போகும் வழி' என்று இரண்டு பாதைகள் தொடங்கின.

அடித்துப் பிடித்து முன்னேறி வந்த நபர் வழிகாட்டியிடம் கேட்டார், "யாருங்க நீங்க?"

"நான் கடவுளின் காரியதரிசி" என்றார் வழிகாட்டி.

"ஆமா, புத்தூருக்கு எந்த வழி? அங்கே கடவுள் இருக்குறதா சொல்றாங்களே? பாக்கலாமா?"

"அதோ போட்டிருக்கு பாருங்க, 'புத்தூர் போகும் வழி'னு.. அதுல போங்க. அவசியம் கடவுளைப் பாக்கறது என்ன, கடவுளோடு சேர்ந்தும் வாழலாம்"

"அட, ரெண்டு பாதை இருக்கேய்யா? ரெண்டுமே புத்தூர் போகும்னு போட்டிருக்கு? என்னா கிண்டலா? இல்லே ரெண்டு புத்தூர் இருக்குதா? என்னய்யா சமாசாரம்?"

"ரெண்டுமே புத்தூர் போற வழிதாங்க"

"அப்போ எதுலயா போறது?"

"கொஞ்சம் இருங்க" என்றார் வழிகாட்டி. கையிலிருந்த குறிப்பைப் படித்து விட்டு, "இதா இதுல போனீங்கன்னா மகிழ்ச்சிப் பாதைனு போட்டிருக்குதுங்க. அதா அந்தப் பாதைல போனீங்கன்னா.. அட, அதும் மகிழ்ச்சிப் பாதைனு போட்டிருக்குதே?" என்றார். பிறகு யோசித்து, "எதுக்கும் இந்த மகிழ்ச்சிப் பாதைல போங்க" என்றார்.

சற்று சிந்தித்த நபர், "யோவ்.. காரியதரிசி.. ரெண்டும் மகிழ்ச்சிப் பாதைனு சொல்லிட்டு என்னாத்துக்கு இதுல போனு சொல்றே?" என்றார். "நான் அந்தப் பாதைல போறேன்" என்றபடி, அடுத்தவரிடம் தன் தெரிவைச் சொல்லிவிட்டுப் புத்தூருக்கான மகிழ்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைத்தார். காரியதரிசி வருவோரிடம் எல்லாம் அதே பாணியில் வழிகாட்டிக் கொண்டிருக்க, வந்தவர்கள் எல்லோரும் கொஞ்சம் யோசித்துவிட்டுத் தங்களுக்குத் தோன்றியப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.

நபர் நூறு அடி நடந்திருப்பார். கீழே பொற்காசுகள் கொட்டியிருந்தன. அள்ளிக் கொண்டார். ஒரே மகிழ்ச்சி அவருக்கு. இன்னும் நடந்தார். சற்று தூரத்தில் ஆண்களும் பெண்களும் ஆடிப்பாடிக் களித்துக் கொண்டிருந்தனர். அங்கே போனதும் அவருக்கும் பாடத் தெரிந்து விட்டது, ஆடத் தெரிந்து விட்டது. மகிழ்ச்சியில் குளிர்ந்து போனார். இன்னும் கொஞ்ச தூரம் நடந்தார். அறிவகம் என்று ஒரு குடிசை வாசலில் எழுதியிருந்தது. நுழைந்தார். உள்ளே யாருமில்லை. வியந்தபடி, திறந்திருந்த பின்வாசலில் வெளிவந்தார். அதுவரை முறையாக எழுதப்படிக்க அறியாதவர், உடனே ராமாயணக் காவியத்தை எண்சீர் விருத்தத்தில் சரளமாகப் பாடத் தொடங்கினார். மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. இன்னும் கொஞ்ச தூரம் நடந்தார். அழகுக்குளம் என்ற அறிவிப்புடன் ஒரு சிறு குளம் மின்னியது. உடனே அதில் மூழ்கி எழுந்தார். பெற்ற உடலகழும் உடையழகும் அவரையே ஒரு கணம் சிலிர்க்க வைத்து விட்டது. 'ஆகா!, நல்ல வேளை இந்த வழியில் வந்தோமே!' என்று தனக்குள் மகிழ்ந்தபடி நடந்தார். சற்றுத் தொலைவு வந்ததும் அழகான பெண் ஒருத்தியைக் கண்டு, மையல் கொண்டார். தன் காதலைத் தெரிவித்து உடனே அவளைத் திருமணம் செய்து கொண்டார். அவர் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்னும் சற்றுத் தூரம் வந்ததும், ஒரு கடையில் ஒருவர் தங்கத்தால் ஆன சாவிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார். "என்னங்க இது?" என்றார் நபர். "புத்தூர்ல புது வீட்டுக்கான சாவிங்க" என்றார் கடைக்காரர். நாலைந்து சாவிகளை எடுத்துக் கொண்டு, நபர் மனைவியுடன் புத்தூருக்கு நடந்தார். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருந்தார். ஒரு வழியாகப் புத்தூர் வந்தார் நபர்.

நபரைப் போலவே, வழியில் பொன்னும் பொருளும் மண்ணும் துணையும் இன்னும் பெற்றபடி, அந்த வழியில் வந்தவரெல்லாம் பெரும் மகிழ்ச்சியோடு புத்தூர் அடைந்தார்கள்.

புத்தூர் வந்த நபர், கடவுளைப் பார்த்துவிட்டு வரலாமென்று மனைவியை அழைத்துக் கொண்டுக் கிளம்பினார். கடவுள் தோட்டத்தில் ஒரே கூட்டம். வரிசையில் சேர்ந்து அக்கம் பக்கத்திலிருந்தவரிடம் பேசத் தொடங்கினார். தனக்குப் பொன் கிடைத்த விவரம் சொன்னார். அருகில் இருந்தவர், இன்னும் அதிகமாகப் பொன் கொட்டிக் கிடந்ததாகவும் தான் முழுவதையும் எடுத்துக் கொண்டதாகவும் சொன்னார். நபருக்கு எரிச்சல் வந்தது. அங்கிருந்து விலகி, கூட்டத்தில் முன்னே நடந்து கலந்து கொண்டார். அருகில் இருந்தவரிடம் ஆடல் பாடல் கற்றுக் கொண்டதைப் பற்றிச் சொன்னார். அவரோ, "அடடா, நான் ஆடல் பாடலுடன் வீணை நாதம் குழல் என்று பலவும் கற்றேனே!" என்றார். இன்னும் எரிச்சலுடன் நபர் அங்கிருந்து விலகி, முன்னால் நடந்து கலந்தார். அருகிலிருந்தவரிடம் அறிவகம் பற்றிச் சொல்லி, தான் பண்டிதரான விவரம் சொன்னார். அவரோ தலையைச் சொறிந்தபடி, "கவனிக்லீங்கலே? என்ன சொல்றீங்கோ?" என்றார். நபருக்கு அவருடைய பேச்சைக் கேட்டதும் அருவருப்பானது. எழுத்தறிவில்லாதவனுடன் சேர்ந்து நிற்க விரும்பாமல் அங்கிருந்து விலகி இன்னும் முன்னே சென்று கலந்தார். அழகுக்குளம் பற்றிச் சொல்ல முன்னால் நின்றவரைத் தொட்டுத் திருப்பியதும் அசந்து போனார். அப்படி ஒரு அழகு, பொலிவு, உடல்வாகு, உடையலங்காரம்! அழகுக்குளம் பற்றி அவர் நபரிடம் விவரிக்கத் தொடங்க, நபருக்கு கடுப்பாகிவிட்டது. உடன் வந்த மனைவியோ, "என்னாங்க, உங்களை விட அவரு அழகா அந்தஸ்தா இருக்காரு பாருங்க!" என்றாள். எரிச்சலுடன் அங்கிருந்து விலகி முன்னால் நடந்து கலந்தார். கடவுளுக்கு அருகே வந்து விட்டார். அருகில் இருந்தவரிடம் வீட்டுச் சாவிகளைப் பற்றிச் சொல்ல, அவர் தனக்கு ஒரே ஒரு சாவி மட்டுமே கிடைத்ததாகச் சொன்னர். நபருக்கு பெருமை பிடிபடவில்லை. அதே நேரம், தன்னை விட அந்தஸ்து குறைந்தவருடன் நிற்கப் பிடிக்காமல் இன்னும் முன்னே சென்றார்.

அப்போது தான் கவனித்தார். சுற்றி இருந்த ஆண் பெண் அனைவரும் அவரைப் போலவே புலம்பிக் கொண்டிருந்தார்கள். 'இவனை விடப் படிப்பு, அவளை விட அழகு, இவனை விட அதிகச் செல்வம்' என்று ஒரே புலம்பல். கடவுளைப் பார்க்க வருமுன் இருந்த மகிழ்ச்சி மறைந்து, எரிச்சலும் கோபமும் மிகுந்திருந்தது. பொருமிக் கொண்டிருந்த நபர், முன்னேறிக் கடவுள் எதிரே வந்தார்.

நபரைக் கண்டதும் கடவுள் அவரை வரவேற்று வணக்கம் சொன்னார். நபரோ, "யோவ், என்னய்யா பெரிய வணக்கம்? நீ தான் கடவுளா? என்னய்யா இது, மகிழ்ச்சிப் பாதைனு போட்டு, பிறகு என்னை விட அந்தாளுக்கு அதிக அழகும் பொன்னும் குடுத்தா எப்படி? எங்கேயா மகிழ்ச்சி? எப்படியா வரும் மகிழ்ச்சி?" என்று வெடித்தார்.

"எனக்கு எப்படி தெரியும்? அவரவர்கள் என்ன தேடினார்களோ, அடைய முயன்றார்களோ.. அதை நான் கட்டுப்படுத்தவில்லையே? உங்களுக்கு அதிகம் எழுத்தறிவு கிடைத்திருக்கிறதே?" என்றார் கடவுள்.

"யோவ், வயித்தெரிச்சலைக் கெளப்பாதே. தேடிப்பாத்தா என்னைவிட இன்னும் யாருக்காவது அதிகம் எழுத்தறிவு கெடச்சிருக்கும்யா.. வர்றவங்க எல்லாருக்கும் ஒரே மாதிரி மகிழ்ச்சி தரவேணாமா? இப்ப பாரு எங்க நிலமையை.." என்று புலம்பினார்.

கடவுளோ, "என் நிலையைப் பாருங்கள். ஆயிரக்கணக்கில் என்னிடம் வந்திருக்கிறீர்கள். வழியைத் தேர்ந்தெடுத்தது நீங்கள். வழியில் தேடியதும் நீங்கள். ஏதேதோ தேடியெடுத்தாலும், இங்கே வந்து என்னிடம் புலம்பிக் கொண்டே இருக்கிறீர்கள். ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் தேடலுக்கும் பயணத்துக்கும் என்னைப் பொறுப்பேற்கச் சொல்கிறீர்கள்" என்றார். பிறகு, சற்று மூக்கை உறிஞ்சி கண்களைத் துடைத்துக் கொண்டு, "நான் புத்தூர் வந்ததிலிருந்து காபி டிபன் கூட சாப்பிடவில்லை தெரியுமா? உங்கள் புலம்பல்களை நாட்கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார்.

நபர் சற்று அமைதியாகி, "நல்ல கடவுள்யா நீ! சரி, சரி, இன்னொரு மகிழ்ச்சிப் பாதை இருந்துச்சே.. அதுல வந்தவங்க யாரு? அது எப்படி, இதை விட நல்ல பாதையா? எல்லாருக்கும் மகிழ்ச்சி கிடைக்குதா?" என்றார்.

"இதுவரை ஒரு மனிதர் கூட அந்தப் பாதை வழியாக வரவில்லையே? வந்து விவரம் சொன்னால்தான் தெரியும்" என்றார் கடவுள்.

    னிதம் 'நாளை'யை அடையும் முயற்சியில், 'நேற்றை' நோக்கிப் பயணம் செய்கிறது. 'நாளை' எனும் இலக்கை அடையவே முடியாது என்ற நிச்சயத்தை மறந்துத் திட்டங்களைத் தீட்டுகிறது. நாளையை அடையும் நேரத்தில் அது இன்றாகி விடுகிறது. இன்றைய பயணமாகி விடுகிறது. இப்போதைய 'இன்றில்' 'நாளை' என்ற இலக்கை அடையத் தீட்டிய திட்டங்கள், இன்னொரு 'இன்றில்' எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றதும் சற்று ஏமாற்றம் தோன்றுகிறது. அடுத்த 'இன்றை' சற்றே செப்பனிடலாமென்றால் அதே நேரம், 'இன்றை'யும் முழுதுமாகக் கடக்க முடிவதில்லை. அதற்குள் 'இன்று' நேற்றாகி விடுகிறது.

   'நேற்று' மட்டுமே மனிதனின் இலக்கு. போகாமலே சேரும் இலக்கு. நாளை நடக்கப்போவது தெரியாது; இன்று நடக்கப் போவதும் தெரியாது - நடந்து கொண்டிருப்பதும் புரியாது. ஆனால், நேற்று நடந்ததோ, தெரிவதும் புரிவதும் மட்டுமல்லாமல் அறிவதற்கும் ஏதுவாகிறது.

   மனிதன் உண்மையில் அடைவது நேற்றை மட்டுமே, மனிதனின் வாழ்க்கைப் பயணச் சேமிப்பு, சில ஆயிரம் 'நேற்றுகள்' ஆகும் என்பதை எண்ணும் பொழுது, சற்றுச் சூனியமாகப் படுகிறது. மிஞ்சியவை நேற்றுகள் மட்டும் என்றால், நடந்ததையே நினைத்திருக்குமா மனம்? இதை உள்ளபடியே ஏற்றாலும், 'நேற்றுகள்' எத்தகைய சேமிப்பாக இருக்கவேண்டும் என்ற அறிவு இன்றிருந்தால் உபயோகமாக இருக்குமா? அல்லது, அறிவு இன்றிருப்பதைத் தெரிந்து கொண்டும் வாளாவிருந்து, நேற்றை அடைந்ததும் புலம்புவதே பழகி விட்டதா? ஒருவேளை, நேற்றையும் நாளையையும் பற்றிப் புலம்பிக்கொண்டே இன்றைக் கோட்டை விடுவதில் தீவிரமாக இருக்கிறோமா? (இந்தக் கடைசி வகையில் ஒலிம்பிக்ஸ் அளவில் பந்தயம வைத்தால், எத்தனை கோடி பேர் தங்கப் பதக்கம் பெறுவார்கள்?)

['நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா' - கண்ணதாசன் ]

    மன் இன்பம் நன்மைகளைப் பற்றித் தொடர்ந்து சொன்னான்.

"நசிகேதா, மனித வாழ்க்கை என்பது தொடர்ந்த பயணம். முடிவில்லாத பயணம். பிறவிக்கு கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் உண்டா என்று கேட்டாய். ஒவ்வொரு பிறவிக்குள்ளும் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் உண்டு. மனிதனின் தினசரி வாழ்வே இந்த மூன்று காலங்களில் பயணிப்பதே.

மனமானது ஒரு இலக்கைத் தீர்மானம் செய்து, அதை அடைவதற்கான முயற்சியில் இறங்கி, வளைந்து கொடுத்து, இலக்கை அடையத் தீவிரமாக இயங்குகிறது. இலக்கை அடைந்த பின்னரே முயற்சியைப் புரிந்து கொள்ளத் தொடங்குகிறது. இலக்கை அடைந்தும் நிறைவு ஏற்படவில்லையெனில் வாடுகிறது. இலக்கை அடைந்து நிறைவு ஏற்பட்டாலோ எல்லாவற்றையும் மறந்து நிறைவு நிலையானதென்று நம்பி விடுகிறது. இலக்கை அடைந்த பின்னர் பெறும் அறிவு பயனற்றதாகி விடுகிறது.

மனித மனம் எதிர்காலம் பற்றிய கனவுகளிலும் திட்டங்களிலும் லயிக்கிறது. அதற்கான தேடல்களில் ஈடுபடுகிறது. எதிர்காலத் திட்டங்கள் இன்பத்தைத் தருவனவா நன்மையைத் தருவனவா என்று சிந்திக்க முற்படுகிறது. செயலாக்கும் பொழுது இன்பத்தையே தேர்ந்தெடுக்கிறது. இன்பங்கள் வாழ்க்கைப் பயணத்தை இனிமையாக்குவதால் மனம் இனிமையைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குகிறது. அதற்காக எதையும் செய்யத் தயாராகிறது.

இனிமை என்பது உடனே மறைந்து விடுமென்பதை மனம் புரிந்து கொள்வதில்லை. இனிமை நிலைக்கும் என்று நம்புகிறது. அந்தக் கணத்தின் இனிமையில் லயிக்கும் பொழுது, நாளை என்பதையே மறந்தும் விடுகிறது. இன்று என்பது விரைவில் மறைந்து நேற்றானதும், மனம் விழித்துக் கொண்டு நடந்ததை நினைத்துப் பார்க்கிறது.

முதிர்ந்த மனமானது, நேற்றின் வலிகளை முன்பே சிந்தித்து, அவை நாளையும் நிகழாமல் தவிர்க்கப் பார்க்கிறது. இன்பம், நன்மை இரண்டையும் பகுத்தறிந்து இன்பவழியைப் புறக்கணித்து நன்மைக்கான பாதையில் போகிறது. இது போல் பகுத்தறிந்து செயலாற்றும் அறிவற்றவர்களோ, எப்பொழுதும் இன்பங்களையே நாடிப் போகிறார்கள்"

"இன்பமும் நன்மையும் இரண்டுமே வேண்டுமென்றால்?" என்றான் நசிகேதன்.

"நல்வழியிலே இன்பம் அடையலாம் நசிகேதா. எண்ணங்களிலும் செயல்களிலும் எது நன்மை, எது இன்பம் என்பதை உணர வேண்டும்" என்றான் எமன்.

"இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" என்று கேட்டான் நசிகேதன்.

"இன்பத்திற்கு புலனாலும் மனதாலும் அழிவு உண்டு. அதன் காலம் கணக்கிடக்கூடியது. நன்மைக்கு அழிவு இல்லை. நன்மை புலனாலும் நினைவாலும் உடன் வரக்கூடியது. ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கையில் இதை மனதில் கொண்டு செயல்படுவோரே அறிவுள்ளவர்கள். இன்பம் நிலையற்றது என்பதையும் அறிவுளோர் அறிவார்"

"பாதைகளை எளிதில் அடையாளம் காண முடியாதா?"

"முடியும். முதிர்ந்த அறிவுள்ளவர்கள் பாதையைத் தேர்ந்தெடுக்குமுன் விளைவுகளைப் பற்றிச் சிந்தித்து முடிவெடுக்கிறார்கள். அதனால் நன்மைக்கான பாதையை அவர்களால் அடையாளம் காண முடிகிறது"

"ஐயா, உலகில் சாதாரணர்களே அதிகம். அவர்களால் நன்மைக்கான பாதையைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போனால் அது அவர்கள் தவறல்லவே? மேலும் சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு பொருள் தருவதே இன்பங்கள் தானே? இன்பங்களின் காலம் குறுகியதாக இருந்தால் என்ன? சாதாரண மனிதனின் வாழ்க்கை இன்பம் பெறும் பொழுது நிறைவாகிறதே?"

"சாதாரணர்களுக்கு மெய்யறிவு பெறும் நோக்கம் கிடையாதே நசிகேதா? அதனால் தானே என் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்? விதியென்றும் வினையென்றும் பலியென்றும் பரிகாரமென்றும் தவமென்றும் தானமென்றும் கண்மூடித் துடிக்கிறார்கள்? மெய்யறிவு என்பது எல்லோருக்கும் உகந்ததும் அல்ல. புரிந்து கொள்ள முடியாமலே போனால் அந்த அறிவினால் என்ன பயன்? கால விரயம் செய்வதை விட, சாதாரணர்கள் தங்களுக்குக் கிடைத்த இன்பங்களை அனுபவிப்பதும் முறைதான். ஆனால் அத்தகையோர் குறுகிய இன்பங்களினாலான நிறைவைப் பெறுவதிலேயே குறியாக இருப்பதால், இன்பங்களைப் பெற்றும் உணர்வதில்லை. இயற்கையில் பெற்ற அறிவுச் சுடரையும் அணைத்து விடுகிறார்கள். அறிவுள்ளவர்களோ, இன்பங்களைத் துய்க்க நேரும் பொழுதும் அதன் நிலையாமையை அறிந்து, நிலையான நிறைவுகளைப் பெரும் வழியை, பெற்று அனுபவிக்கும் முறையை, அறிந்து செயல்பட முனைகிறார்கள்."

"முதிர்ந்த அறிவுள்ளவர்கள் என்றால்.. அவர்கள் எப்படி இருப்பார்கள்? அறியாரை எப்படி அடையாளம் காண்பது?"

"அவர்களின் செயல்களால். அறிவோர் பற்றியும் அறியார் பற்றியும் விவரமாகச் சொல்கிறேன். அவர்களின் வழிமுறைகளைப் பற்றிச் சொல்கிறேன், கேள்" என்று தொடர்ந்தான் எமன்.

2011/05/17

இன்பமா நன்மையா, எது மேன்மை?


44
நன்மையும் இன்பமும் நேரெதிர் பாதையிவை
மன்பதையைத் தக்கி முடக்கிடும் - தன்மையிலே
இன்பவழி ஊர்சுற்றிச் சேரா இடஞ்சேரும்
நன்மையே நேர்வழி ஆகும்.

   ன்பத்தைத் தேடுவதும் நன்மையைத் தேடுவதும் முரணான செயல்கள்; இரண்டுமே உலகத்தாரைத் தமது பிடியில் வசப்படுத்தி வைக்கின்றன. இன்பத்தையே தேடுவோர், தவறான வழியில் சுற்றி இலக்கையும் தவறவிடுவர்; நல்வழிகளோ, பாதை தவறாமல் இலக்கை அடையச் செய்கின்றன (என்றான் எமன்).


மன்பதை: மானிடம்
தக்கி: பிணைத்து, கட்டி, வசப்படுத்தி['..there are two principles, whose guidance we follow to where they may lead; one, an organic desire of pleasure; the other, an acquired judgment of goodness' - socrates ]

    வை நிறைந்த வாழ்க்கை என்கிறோம்.

   எந்தச் செயலுக்கும் குறைந்தது இரண்டு வழிகள், அனேகமாக எதிர்வழிகள், தோன்றுகின்றன. யாரிடமாவது அறிவுரை கேட்டால், இன்னும் இரண்டு சொல்வார்கள். அவர்கள் சொன்ன இரண்டு வழிகளில் எதைப் பற்றுவது என்ற சிக்கல் ஒரு கவை; அவர்கள் சொன்ன வழிகள் நாம் நினைத்தவைக்கு எதிர்மாறாக இருந்தால், அவர் வழிப் போவதா, நம் வழியே மேலென்று தொடர்வதா என்று இன்னொரு கவை. இதைப் போக்க இன்னொருவரை வழி கேட்கத் தோன்றும். இப்படியே கிளைவிட்ட எண்ணங்கள், கடைசியில் யாரைக் கேட்டு, எதைப் பற்றி, எங்கே முடியும் என்றே சொல்ல முடியாது. நம்மில் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

   வீடு, வேலை, படிப்பு, செலவு, சேமிப்பு, காதல், திருமணம், பிள்ளை வளர்ப்பு போன்ற சற்றே முக்கியமான நிகழ்வுகள் மட்டுமல்ல, எந்த சினிமா பார்ப்பது, எந்த ஹோட்டலுக்குப் போவது, என்ன வாங்கிச் சாப்பிடுவது போன்ற மிகச் சாதாரண நிகழ்வுகளுக்குக் கூட பாதைகளின் போக்கிற்குக் கட்டுப்பட்டு நேரத்தையும் அறிவையும் விரயம் செய்கிறோம். சமீப அனுபவம்: பேருந்து நிலையப் பத்திரிகைக் கடையில் இருந்த என்னிடம் பத்திரிகை வாங்க வந்த ஒருவர், "சார், டைம்பாசுக்கு ஏதாவது வாங்கலாம்னு பாக்கறேன், குமுதமா குங்குமமா என்ன வாங்கலாம்றீங்க?" என்றார்.

   இடையில், வாழ்வின் மிக முக்கிய முடிவுகளுக்கு, 'நாம் யார், நமக்கு என்ன தேவை? நமது எதிர்காலம் என்ன?' போன்ற சற்றே தீவிர முடிவுகளுக்கு, நேரம் ஒதுக்க முடியாமலோ அல்லது கவைகளில் சிக்கியோ சீரழிந்து போகிறோம். சில நேரம் சமாளித்து எப்படியோ கரையேறினாலும், கடந்து வந்த பாதையை எண்ணி கலங்கிச் சோர்ந்து அடுத்த அடியெடுக்க முடியாமல் ஓய்ந்து போகிறோம்.

   இன்னும் சில கவைகள் உண்டு. ஆசைகளை அடைய நினைக்கும் பொழுது எந்தப் பாதையில் போவதென்ற முடிவுகள் எடுக்க நேர்கையில், நம்மில் நிறைய பேர் குறுக்கு வழிகளை நினைக்கிறோம். குறுக்குவழிகள் ஒன்றுக்கொன்று பிணைந்து கடைசியில் நேர்வழியை விட நேரமும் தூரமும் அதிகமென்று உணரும் பொழுது, சக்தியின்றி அடங்கி விடுகிறோம். உண்மையில் நம்மைச் சுற்றியடிக்கிறது என்று தெரிந்தும் குறுக்குவழியை விடாமல், 'இன்னும் கொஞ்சம் சென்று பார்ப்போம், இன்னும் ஐந்து நிமிடம், அடுத்தத் தெரு வரை..' என்ற உந்துதல்களில் சிக்கிப் பாதை தவறிப் போய்க்கொண்டே இருக்கிறோம்.

   வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இந்தப் பாதை-பயண உவமை பொருந்தும். எனில், முதலிலேயே சரியான பாதை இன்னதென்று அறிய முடியுமா?

   சாத்தியம் என்று அறிவு சொன்னாலும், சாத்தியமில்லை என்கிறது அனுபவம். ஒரு வினையைத் தொடங்குமுன் பயனைப் பற்றிச் சிந்தித்து, அது நம்மை 'எந்த விதத்தில் பாதிக்கும், எந்த வித்ததில் உயர்த்தும், நம் நிலைக்கும் சுபாவத்துக்கும் பொருந்துமா, பயன் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காவிட்டால் எப்படி விலகுவது?' என்ற அளவில் சிந்தித்து முடிவெடுத்தால், ஓரளவுக்குச் சரியானப் பாதை பற்றி முடிவெடுக்க முடியும் என்றும் அனுபவம் சொல்கிறது.

   இத்தகைய ஆய்வு எல்லாச் செய்கைகளுக்கும் பொருந்தினாலும், அவசரமும் ஆசையும் ஆய்வை அடக்கி, அறிவை ஒடுக்கி உடனடியாகச் செயலில் இறங்க வைக்கின்றன. பிறகு, 'இப்படிச் செய்திருக்கலாமே.. அப்படிப் போயிருக்கலாமே, வந்தது வந்து விட்டோம்.. அரை மணி பொறுப்போம், தவறிச் செய்துவிட்டோம்.. அடுத்த வருடம் திருத்திக் கொள்வோம், நம் தவறு யாருக்குத் தெரியப்போகிறது?' போன்ற சமாதானம், மறைப்பு மற்றும் சாக்குபோக்குகளில் நம் அறிவையும் நேரத்தையும் இழுத்தடிக்கின்றன.

   வாழ்வின் சுவையே அவசர முடிவுகள்தான் என்போரும் உண்டு. 'இன்றுள்ள வாழ்வு நாளை இருக்காது, வாழ்வே குறுகியது' என்ற நிலையில், ஆராய்ந்து முடிவெடுப்பது 'சாத்தியமற்றது மட்டுமல்ல, பைத்தியக்காரத்தனம் கூட' என்ற கட்சியும் உண்டு.

   இரண்டு வகை எண்ணங்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. என் அனுபவத்தில் பெற்ற ஒரு படிப்பினையை முன்வைக்கிறேன். முடிந்தவரை வினைப்பயன் பற்றிய தொலைநோக்கு அவசியம். அது முடியாமல் பயணத்தைத் தொடங்க நேர்ந்தால், போகும் பாதை சுற்று என்று தெரிந்தால், உடனே விலகி வேறு பாதைக்குச் செல்வது நல்லது. ஒரு செய்கை தவறு என்று தெரிந்து விட்டால், உணர்ந்த கணமே தவறுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, சரியான செய்கையைத் தொடர வேண்டும்.

   'rational thinking', 'life strategies' போன்ற கலைகளை மேல்நிலைப் பள்ளிப் பாடமாக்க வேண்டும்.

['பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய்ச் சேராது' - கண்ணதாசன் ]

    மெய்யறிவின் நோக்கத்தை விவரித்தான் எமன்.

   "மானிடத்துக்கு ஒரு சாபம் உண்டு. தனக்கு அறிவு இருப்பதையே உணராமல் செயல்பட வேண்டிய சாபம். கண்மூடி இருப்பதில் சுகம் காணும் மானிடம், கண் திறந்து செயலாற்றச் சோம்பித் திரியும் இயல்பினது. இந்தச் சாபத்திலிருந்து விடுபட வைப்பதும் அறிவே; ஆனால், அதற்குள் அறிவு அடங்கி விடுகிறது. இன்னொரு அறிவை நம்பித் தன்னறிவை தக்கி வைக்கும் பரிதாபம் மானிடத்துக்கே உரியது" என்றான்.

   'என்ன சொல்கிறான் கிழவன்?' என்று எண்ணிய நசிகேதன், எமன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

   எமன் தொடர்ந்தான். "மெய்யறிவின் குறிக்கோள், நோக்கம் என்ன? அறிவு என்பதென்ன? அறிவு, மெய்யறிவு ஆவதெப்படி? பொய்யறிவு என்று உண்டா?

   சொல்கிறேன், கேள். எந்த எண்ணத்திலும் செயலிலும் இரண்டு வகைப் பலன்களை எதிர்பார்ககலாம்.

   முதலாவது, உடனடியாகவோ தொடர்ந்தோ புலனின்பத்தைத் தரக்கூடியது. பார்க்க, பழக, அனுபவிக்கச் சிறந்த இன்பங்களைத் தரக்கூடியது. நான் உனக்கு வழங்குவதாகச் சொன்ன பொன்னும் பொருளும் பெண்ணும் சந்ததியும் சொர்க்கமும்... இவையெல்லாம் இன்பங்கள்.

   இரண்டாவது, உடனடியாகத் துன்பமோ சிக்கலோ தந்தாலும் தொடர்ந்து நன்மையைத் தரக்கூடியது. தனக்கும் தம்மைச் சூழ்ந்தவருக்கும் நன்மை தரக்கூடியது. சொர்க்கம், பிறவி போன்ற கவலைகளற்ற நிம்மதியைத் தரக்கூடியது.

   இரண்டையும் அடையாளம் கண்டு, நன்மையைத் தரும் செயல்களைச் செய்ய வேண்டும். மெய்யறிவின் நோக்கம் அதுவே" என்றான்.

   பொறுமையாகக் கேட்ட நசிகேதன், "ஐயா, இன்பம் நன்மை இரண்டையுமே அடையாளம் காட்டுவது அறிவு என்கிறீர்கள். எனில், அறிவின் தன்மையிலேயே குறையுள்ளது போல் தோன்றுகிறதே? இத்தகையக் குறையுள்ள அறிவை வைத்து மெய்யறிவை எப்படிப் பெறுவது? நொண்டிக் குதிரையால் பந்தயத்தில் வெல்ல முடியாதே?" என்றான்.

   நசிகேதனின் கேள்வியில் எமன் பெருமிதம் கொண்டான். "அறிவானது, இன்பங்களையே முதலில் அடையாளம் காண வைக்கிறது. நன்மைகளை நீயாகக் கேட்டாலொழிய அடையாளம் காட்டாது. நீ தொடர்ந்து இன்பங்களையே தேர்ந்தெடுத்தால், உன் அறிவும் அதற்கேற்றபடிப் பதப்பட்டு நன்மைகளைத் தேடும் இயல்பினை இழந்து விடுகிறது. இன்பங்களையே நாடும் அறிவு, தொடர்ந்து அந்தப் பாதையிலேயே உன்னை அழைத்துச் செல்கிறது. மெய்யறிவுக்கானப் பாதையிலிருந்து விலகி உன்னை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகிறது. இது பொய்யறிவு" என்றான்.

   "இன்பங்களைத் தேடுவதில் என்ன தவறு?" என்றான் நசிகேதன்

   "தவறில்லை. இன்பங்களைத் தேடுவதில் மனிதன் தன்னை இழந்து விடுவதால், பிறவியின் காரணத்தையே மறந்துவிட நேர்கிறது. இன்பத்தேடலால் அறிவையும், அறிவினால் இன்பத்தேடலையும், ஒருங்கே கட்டிவிடுவதால் ஒரு சுழல் உருவாகிவிடுகிறது. அந்தச் சுழலில், மீள வழியில்லாமல், மானிடம் சிக்கித் தவிக்கிறது. மனித அறிவுக்கோ, 'சுழலில் சிக்கியது நிறையா குறையா' என்று புரியாததால், தொடர்ந்து இன்பத்தேடலிலும் அதற்கான உந்துதல்களிலும் சுழற்றி அடிக்கிறது.

   இன்பத்தையே தேடி அலையும் மனிதம், அதற்கானத் தடைகள் வரும்பொழுது குறுக்கு வழிகளைச் சிந்திக்கிறது. தவறுகளைச் செய்யத் துணிகிறது. தான் என்ற எண்ணத்திற்கு அடிமையாகிறது. பேராசை, பகட்டு, பொறாமை போன்றவற்றில் தன்னை மறந்து, அகக் கண்ணாம் அறிவை நிரந்தரமாக மூடி விடுகிறது. தன்னைச் சுற்றியிருப்பவரையும் இன்பத்தேடலில் ஈடுபடுத்துகிறது. குறுக்குவழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர், பாதையின் குழப்பத்தை அறியாமலே வாழ்க்கையை முடிக்கின்றனர். அறிந்து கொள்ளும் சிலருக்கோ காலம் கெட்டுப் புரிவதால் மானம் கெட்டு மடிகின்றனர்.

   எனில், அறிவை எப்படி வளர்ப்பது? நன்மையை மனதில் கொண்டு தேடினால் அறிவை இழக்காமல், செம்மையாக வளர்க்க முடியும். சாதாரண இன்பங்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் பாங்கைப் பெற முடியும். மெய்யறிவுக்கான பாதையில் செல்ல முடியும்" என்றான் எமன்.

   தொடர்ந்து, "நசிகேதா, 'நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?' என்ற கேள்வியை ஒவ்வொரு எண்ணத்திலும் செயலிலும் கலந்துவிட்டால், உன் மனம் மெய்யறிவுப் பட்டறையின் முதல் நிலையைக் கடக்கிறது. புடமிடத் தகுதி பெறுகிறது. நன்மையைத் தருவதும் இன்பத்தைத் தருவதும் எதிரெதிர் எண்ணங்கள், செயல்கள். நன்மையை அடைவது நேர்வழி; தடங்கலும் தாமதமும் நிறைந்த வழி. இன்பத்தை அடைவது சுற்றுவழி; குறுக்குவழி; போகாத ஊருக்கு வழி" என்றான்.

   "நன்மையை அடையும் நேர்வழி என்பது என்ன?" என்றான் நசிகேதன்.

   "உன்னை அறிய வைக்கும் வழியே நல்வழி. நன்மைகளைத் தரும் நெறிகளாலான வழி. உன் ஒவ்வொரு செயலும் உன்னை - முதலில் உனக்கும், பிறகு உன் குடும்பத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது. உலகும் உன்னோரும் நீயும் காணும், உன்னைப் பற்றிய அந்த அடையாளம் எந்த வகையில் உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உனது சொந்த நெறியைப் பின்பற்ற வைப்பது நல்வழி. உன் செய்கைகளால் நீயும், உன்னோரும், உலகத்தோரும் உயர்வடையும் வழி. அதைப் பற்றி மேலும் சொல்கிறேன்" என்றான்.

2011/05/13

அகத்தின் ஒளியே அறியாமை ஓட்டும்


43
சுகந்தேடிச் செல்வார்போல் மெய்யறிவில் மூழ்க
மிகவும் மனங்கொள்வாய் மைந்தா - அகத்தின்
ஒளியே அவந்தேடி ஓட்டும் அதனால்
வெளியே சிவந்தேடல் வீண்.

    ன் மகன் போன்றவனே! சுகம் தேடுவோரின் தீவிரத்தோடு மெய்யறிவைப் பெறுவதில் கவனமாக இரு. அறிவை வெளியே தேடிப் பயனில்லை; ஏனெனில், அறியாமைத் தீங்கை அடித்து விரட்டும் அறிவொளி உனக்குள்ளே இருக்கிறது (என்றான் எமன்).

மைந்தன்: மகன், மாணவன்
அவம்: தீங்கு
சிவம்: உண்மை, மெய்யறிவு, தூயறிவு['we all try to escape pain and death, while we seek what is pleasant' - albert einstein]

    'விடியோ கேம் விளையாடு' என்றால் மகிழ்ச்சியோடு மெய்சிலிர்க்கும் மகன், 'வீட்டுப்பாடம் செய்' என்றால் மனமொடிந்து போகிறான். விடியோ விளையாட்டில் சுகத்தைக் கண்டவன், வீட்டுப் பாடத்தில் சுகம் காண்பதில்லையே, ஏன்? சிறுவர் முதல் முதியோர் வரை இதே நிலை. சுகத்தைத் தேடியடைவதில் தோன்றும் விருப்பமும் வேகமும் கண்மூடித்தனமும், ஏனோ பிற தேடல்களில் வெளிப்படுவதில்லை.

   எது சுகம்? அவரவர் பார்வையில் சுகம் பல விதங்களில் புலப்படும். இளம்பனிச் சாரலில் நடப்பது சுகம். சிறு பிள்ளையின் சிரிப்பைக் கேட்பது சுகம். காதலிப்பது சுகம். காபி குடிப்பது சுகம். பணம் சேர்ப்பது சுகம். செல்வத்தை அனுபவிப்பது சுகம். அடுத்தவரை விட நாம் உயர்ந்தவர் என்று அடுத்தவரே சொல்லிக் கேட்பது சுகம்.

   எது சுகமானாலும், சுகங்களில் எத்தனை வகையானாலும், தேடுவோரிடம் பொதுவான குணம் ஒன்று உண்டு. சுகம் தேடுவோர் நுனிப்புல் மேய்வதில்லை. மொத்த சுகத்தையும் குத்தகை எடுத்தாக வேண்டும். குளிர் நாளில் முகத்துக்கு மேலே இழுத்துப் போர்த்திக் கொண்டு உறக்கத்தை அனுபவிப்பது போல சுகத்தில் மூழ்கிவிட வேண்டும். சுகத்தை வேரோடுப் பிடுங்கி எடுத்து அனுபவித்தாக வேண்டும் அவர்களுக்கு.

   இது தவறா சரியா என்ற ஆய்வு பொருட்டல்ல. ஒன்றைத் தேடிப் போகும் பொழுது, அரைகுறை முயற்சி பலனளிக்காது என்பது உண்மையே. எனினும், சுகந்தேடலில் செலுத்தும் முழு முயற்சியை பிற தேடல்களில், செயல்களில், நமக்கும் பிறருக்கும் நன்மையளிக்கக் கூடியவற்றில், செலுத்த முடிவதில்லையே?

   விடியோ விளையாட்டில் தோல்வியடைந்தாலும் உற்சாகம் குன்றாமல், வேகம் குறையாமல், விடா முயற்சியோடு ஆடி முதல் வெற்றி பெற்றதும் மேலும் கீழும் குதிப்பதில் இருக்கும் சுகம், கணக்குப் பாடத்தில் முயற்சி செய்து சரியான விடை எழுதிக் குதூகலிப்பதில் வெளிப்படுவதில்லையே?

   சின்னத்திரைக் கதாபாத்திரம் ஊர்ப்பட்டத் துன்பங்களை வாரந்தோறும் சந்தித்து, வென்று, இறுதியில் நிம்மதியடைவதை ஒரு காட்சி விடாமல் பார்த்து மகிழ்வோர், உயிரற்ற அந்த வெற்றியில் சுகமடைவோர், அதே நேரம் தம் வாழ்வில் சந்திக்கும் அசல் துன்பங்களைப் போக்கத் துரும்பைக் கிள்ளிப் போடவும் சலிப்பதேன்?

   கூட்டத்தில் நின்று அடிதடியைப் பொருட்படுத்தாமல் முதல் நாள் முதல் காட்சி சினிமா படம் பார்த்த சுகம், ஆளில்லாத நூலகத்தில் அரைமணி படிப்பதில் வருவதில்லையே?

   தம் செயலில் முட்டாள்தனமும் கண்மூடித்தனமும் கலந்திருப்பது புரிந்தும் பலர் தயங்காமல் அந்தப் பாதையிலேயே தொடர்ந்து செல்வதேன்? நற்பயன் தரும் முயற்சியில் ஆயாசம் கூடி அரைகுறையாய் விடுவதேன்?

   அறிவில் சுகமில்லை. ஆசையில் சுகமுண்டு. சுகத்தின் மயக்கம், சுயத்தில் இல்லையோ? சுகம் பெறும் எதிர்பார்ப்பே சுகம் தருவதால், எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சுகம் தேடுகிறோமா?

['சுகம், சுகம்.. அது துன்பமான இன்பமானது' - கண்ணதாசன்]

    ரம் வழங்கி ஓய்ந்திருந்த எமன், நசிகேதனை மாணவனாக ஏற்று மெய்யறிவுப் போதனையைத் தொடங்கினான். "நீ நல்ல மாணாக்கன். என் மகன் போன்றவன். உனக்கு மெய்யறிவு வழங்குவதில் எனக்குப் பெருமகிழ்ச்சி" என்றான். "நசிகேதா! மெய்யறிவின் நுண்மைகளை நன்கு அறிந்து கொள்ள, நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உனக்கு எத்தனையோ சுகமும் செல்வமும் தருவதாகச் சொன்னேனே? அத்தனையும் ஒதுக்கி விட்டு மெய்யறிவே வேண்டுமென்றாய். இருப்பினும், சுகங்களைத் தேடுவோர் காட்டும் தீவிரத்தை, நீ அறிவைப் பெறுவதில் தொடர்ந்து காட்ட வேண்டும்" என்ற எமன், மெய்யறிவின் முதல் பாடத்தைத் தொடங்கினான்.

   "மெய்யறிவை நீ வெளியே தேட வேண்டியதில்லை. உள்ளுக்குள் ஆயிரம் அழுக்கை வைத்துக் கொண்டு வெளியே சுத்தத்தைத் தேடும் வீணர்கள் என்றுமே சுத்தம் பெறுவதில்லை. அறிவொளி உனக்குள்ளேயே இருக்கிறது. அந்த ஒளியை வைத்து உன் வாழ்க்கைப் பாதையை அடையாளம் காண்பாய். அறியாமை எனும் இருளைப் போக்குவாய். உனக்குள்ளிருக்கும் மெய்யறிவென்னும் ஒளியை வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு. தம்முள் இருக்கும் அறிவுச்சுடரை அணையாமல் காத்து அறிவுத் தீப்பந்தமாக்குவதே ஒவ்வொரு மனிதரும் அறிய வேண்டிய பிறவி ரகசியம்" என்றான்.

   "வெளியே தேடுவதா? அப்படியென்றால்? ஒரு உதாரணம் சொல்லுங்களேன்?" என்றான் நசிகேதன்.

   "நீ இங்கு வந்து சேர்ந்த விதமே ஒரு உதாரணம்" என்றான் எமன். "உன் தந்தையின் செயலைக் கவனி. சொர்க்கமும், சொர்க்கத்தில் கிடைப்பதாகச் சொல்லப்படும் குறைவற்ற மகிழ்ச்சியும், பிறப்பற்ற நிலையும் பெற விரும்பினான் உன் தந்தை. அதற்காகத் தன்னையும் தன்னை நம்பி இருந்த மக்களையும் தவிக்கவிட்டு, தேவையற்றச் செயல்களைப் புரிந்தான். நிம்மதியும் மகிழ்ச்சியும் தன்னைச் சுற்றி இருப்பதை அறியாமல், எடுத்தப் பிறவியில் நிம்மதியைத் தேடாமல் எடுக்காதப் பிறவியில் நிம்மதியைச் சேர்க்க எண்ணினான். தானம் கொடுத்தவனுக்கு நிம்மதி கிடைத்ததா? வேள்வி புரிந்தவனுக்கு பலன் கிடைத்ததா? இல்லையே? தன்னை இழந்து, கண்மூடித்தனத்தில் உன்னையும் இழந்தான். உன்னை இழக்க நேர்ந்ததால் ஊராரின் அவச்சொல்லுக்கு ஆளானான். இருந்த நிம்மதியையும் இழந்தான்" என்று எடுத்துச் சொன்னான் எமன்.

   "அறிவொளியை அடையாளம் சொன்ன நீங்கள், சுகம் தேடுவோரின் தீவிரத்தைக் கடைபிடிக்கச் சொல்வானேன்? எனக்குச் சுகங்களில் ஈடுபாடில்லை என்று தெளிவாகச் சொன்னேனே? சுகம் தேடுவோரின் தீவிரத்தைப் பற்றி நானறிய வாய்ப்பில்லையே? அதைப் பற்றிச் சொல்லுங்களேன்?" என்றான் நசிகேதன்.

   "தான் சொர்க்கம் போக வேண்டுமென்பதற்காகப் பெற்ற பிள்ளையை எமனுலகம் அனுப்பிய உன் தந்தையின் அறியாமையை, கண்மூடித்தனத்தை, எப்படியாவது சொர்க்க சுகத்தைப் பெற வேண்டும் என்ற தீவிரத்தை, நீ உணரவே இதை உதாரணமாகச் சொன்னேன்.

   உன் தந்தையைப் போல் எண்ணற்ற உலக மக்கள் இருக்கிறார்கள். குறிக்கோள் ஒன்றிலாது எதையோ செய்து, யாரையோ பின்பற்றி, சுகமென்று எதையோ நம்பி, எங்கேயோ போய், கடைசியில் விதி என்று நொந்து மடிகிறார்கள். அறியாமை எனும் மயக்கம் தீவிரமானது. கொடும் போதையிலும் கொடியது. இன்ப முலாம் பூசியத் துன்பம். மயங்கிச் சிக்கியவர்கள் தொடர்ந்து அறியாமையில் மூழ்கவே தீர்மானமாயிருப்பார்கள். அத்தகையத் தீவிரத்தை, அறிவைப் பெறுவதில் நீ செலுத்த வேண்டும்.

   அறியாமை அண்டிவளரும். தானம் மற்றும் தவங்களால் தொலைவதில்லை. சடங்குகளால் சரிவதில்லை. கண்மூடித்தனத்தால் கலைவதில்லை. அறிவால் மட்டுமே அழிகிறது. மேலும், தானம் தவங்களால் அறிவு வளர்வதுமில்லை. கண்மூடி வெளியே தேடிப் பார்த்தால் அறிவு தெரிவதில்லை. கண்திறந்து உனக்குள்ளே பார். அறிவொளி தெரியும். அறிவொளியை, அறியாமைப் புயல் அணைத்துவிடாமல் காப்பது உனது கடமை. அறிவை வளர்க்க நெறிகளே உதவுகின்றன. மெய்யறிவின் நோக்கம், இன்பம் நன்மை இரண்டையும் பகுத்தறிந்து அடையாளம் காண்பதே. நல்ல நெறிகளை நாடுவதே. மெய்யறிவைப் பற்றித் தொடர்ந்து சொல்கிறேன்" என்றான் எமன்.