வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/05/24

மனிதர்களில் இரண்டு வகை


46
செறிவுறச் சொல்வேன் இனங்கள் இரண்டே
அறிந்தோர் அறியாதோர் என்று - அறியாதோர்
பொன்னும் பொருளும் புகழும் மிகநாடி
இன்பம் பெருக்கும் இனம்.

   'அறிவுடையோர், அறிவில்லாதோர்' என்று (செயலுக்கேற்றபடி) பொருத்தமாக இருவகை மானிட இனங்கள் உண்டு. செல்வங்களையும் பெருமைகளையும் தீவிரமாகத் தேடிச் சேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள் அறிவில்லாதவர்கள் (என்றான் எமன்).
['There are two things to aim at in life: first, to get what you want; and then, to enjoy it. Only the wisest of mankind achieve the second' - Logan Pearsall Smith ]

    புத்தூர் கதைக்குத் திரும்புவோம்.

    சோகப் பாதை ஒன்று, சுகப்பாதை ஒன்று, என இல்லாமல் மக்களுக்குக் கிடைத்த இரண்டுமே மகிழ்ச்சிப் பாதைகள். இரண்டு பாதைகளுள், போக வேண்டிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும், தேவைப்பட்டால் வழிகாட்டியின் உதவியும், மக்களுக்குக் கிடைத்தது. தேர்ந்தெடுத்துச் சென்றப் பாதையிலோ வழியெங்கிலும் மகிழ்ச்சி அளித்த நிகழ்வுகள் ஏராளம். எனினும், இலக்கை அடைந்த மக்களிடம் மகிழ்ச்சி இல்லை. தேடுவதிலும் சேர்ப்பதிலும் கிடைத்த மகிழ்ச்சி, தேடிச் சேர்த்ததும் காணாமல் போனதேன்? எல்லோருக்கும் ஒரே அளவில் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும் என்று பொருமிய நபர், அவ்வாறே எல்லோருக்கும் சம அளவிலான மகிழ்ச்சி கிடைத்திருந்தால் பொருமாதிருப்பாரா? மகிழ்ச்சி நிலைத்திருக்குமா?

    மற்றப் பாதையும் மகிழ்ச்சிப் பாதை என்றதே? எனில், மகிழ்ச்சி அடையப் பல வழிகள் உண்டா? வழிகாட்டி எடுத்துச் சொல்லியும் நபர் அந்தப் பாதையைப் புறக்கணித்ததேன்? அந்தப் பாதையை ஏற்றுப் பயணம் செய்யும் அறிவு எவருக்கேனும் இருந்ததா? அந்தப் பாதையில் என்ன கிடைத்தது? 'ஒரு மனிதரும் வரவில்லை' என்றாரே கடவுள்? யாரும் வரவில்லையா? அல்லது, வந்தவர் யாரும் கடவுளிடம் முறையிடவில்லையா? அல்லது, அந்தப் பாதையில் வந்தவர் மனிதரில்லையா? எதனால் வரவில்லை என்றார்? கடவுள் எந்தப் பாதையில் வந்தார்? அவர் ஏன் மற்றவரைப் போல் பொருமவில்லை? முதல் பாதையில் வந்தும் இன்பங்களைச் சேர்க்காததாலா? அல்லது.. ஒரு வேளை.. கடவுள் மற்றப் பாதையில் வந்தாரா? மாற்றுப் பாதையில் வந்ததால் கடவுளானாரா? அந்தப் பாதையில் வருவோர் எல்லாம் கடவுளாகக் கூடுமா?

    கதையா, கேள்விச் சுரங்கமா?

   ன்பம் தேடுவது நமக்கு இயல்பாக வருகிறது. சாதாரணச் சோம்பலில் இருந்து (கண் எதிரே கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் டிவி ரிமோட்டை யாராவது எடுத்துக் கொடுங்களேன்?), ஆசைகளிலிருந்து (இந்த நகையும் உடையும் மணப்பெண்ணை விட அழகுப்படுத்திக் காட்டுமா?), தீவிரத் தேடல்களிலிருந்து (ஐம்பது வயதுக்குள் நாலு வீடு, ரெண்டு கார், கோடிப் பணம் சேர்த்தாக வேண்டும்)... சுயநலம், பொறாமை, வெறுப்பு வரை எல்லாவற்றிற்கும் அடிப்படையில் இன்பங்களைத் தேடுவதன் சாயலையும் சுவடுகளையும் காணலாம்.

    தேடலின் சுகம், தேடிப்பெற்ற வெற்றியின் சுகம், கண்களையும் அறிவையும் கட்டவல்லது. தேடிய இன்பங்களை மறந்து, தேடிப் பெறும் வெற்றியை வெறி போல் வளர்த்து விடுகிறது. தனக்கான தேடல்கள், தன் இனத்துக்கான தேடல்கள் என்று தேடல் வெறி வளர்கிறது. சொல்லில் கூட, வெற்றிக்கும் வெறிக்கும் இடையே சிறிய வேறுபாடு தான். இந்த வெறி, பலூனிலேற்றும் காற்றைப் போன்றது, கட்டவிழ்ந்த வெள்ளம் போன்றது. காற்றடைத்த பலூன் பெருக்கத் தொடங்கி விடுகிறது. வழியில் இருக்கும் எதுவும் பொருட்டின்றி, வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது. பலூன் வெடித்த பின் உள்ளதும் போனது புரிகிறது. வெள்ளத்தின் சேதம் நெஞ்சை அடைக்கிறது. தேடிச் சேர்த்த இன்பங்களை அனுபவிக்காமல் பகிராமல், தொடர்ந்த தேடலில் காலத்தை வீணடித்து, உடன் மற்றும் சுற்றியிருந்தோரின் தீவிர வெறுப்புக்கும் ஆளானதை எண்ணி மனம் கலங்கிப் போகிறது. சில நேரம் வெம்பி நோய்வாய்ப்படுகிறது.

    எனினும், நேரம் கடந்த ஞானத்தினால் பயனில்லை. இன்பம் தேடுவதிலேயே மரத்துப் போன மனம், மீண்டும் பழைய வழிகளில் திரும்புகிறது. இந்தச் சுழற்சியின் மாயத்தை, போதைப்பொருளின் தாக்கத்தை, உணர்ந்து, அறிந்து செயல்படும் முறையைக் கற்றால் பயனிருக்கும். யார் சொல்லித் தருகிறார்கள்?

    இன்பத்தை எங்கே எப்படித் தேடுவது என்பதைத் தானாகவே விரைவில் புரிந்து கொள்ளும் மனம், எங்கே எப்படி நிறுத்துவது என்பதை மட்டும் தானாகவும் புரிந்து கொள்வதில்லை; எத்தனை எடுத்துச் சொன்னாலும் எத்தனை நாளானாலும் புரிந்து கொள்ள மறுக்கிறது. அறியாமையில் சிக்கியிருப்போரின் நிலையும் இதுவே. இன்பங்களைப் பற்றித் தொடர்வதும் தேடுவதும் ஒரு வகை அறியாமையென்றால், துன்பங்களைப் பற்றி விலகாதிருத்தல் அதன் சகோதர அறியாமை.

['சொல்லுக்குச் செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்' - கண்ணதாசன் ]

    "மனிதருள் இருவகையினர் - அறிவுள்ளவர்கள், அறிவற்றவர்கள். இருவகை மாந்தரையும் அடையாளம் காட்டுகிறேன்" என்று தொடங்கினான் எமன்.

    "அறியாதவர்கள் என்றால் எழுத்தறிவில்லாதவர்கள், கல்வி கற்காதவர்கள் என்று எண்ணிவிடாதே. அறிவற்றவரும் பார்வைக்கு அறிவுள்ளவர் போலவே தோன்றுவார். அறிவில்லாதவர் நன்கு படித்திருக்கலாம்; நெறிகளையும் வேதங்களையும் சாத்திரங்களையும் தந்திரங்களையும் கற்றிருக்கலாம். வித்தை தெரிந்தவராக இருக்கலாம். எனினும், அறிவற்றவர்களாக நடப்பதால் இவர்கள் அறிவில்லாதவர்களே. அதே நேரம், அரை எழுத்துக் கல்லாதவர், பாமரனிலும் பாமரன், வேதங்களோ சாத்திரங்களோ இன்னதென்றே தெரியாதவர், மிகச் சாதாரணர், அறிவோடு நடந்தால் அவர் அறிந்தவர் ஆவார்"

   "புரியவில்லையே? கல்வி பெறாதவன் எப்படி அறிவோடு நடக்க முடியும்? கல்வி கற்றவன் எவ்வாறு அறிவற்ற செயல் புரிவான்?" என்று கேட்டான் நசிகேதன்.

   "மனித மனம் இன்பத்தை நாடுவது; துன்பத்திலிருந்து விலகி ஓடும் தன்மையது. இன்பத்தைத் தேடிச் சேர்க்கும் பொழுதும் துன்பத்திலிருந்து விலகும் பொழுதும் எத்தகைய செயல்களைச் செய்யத் தூண்டுகிறது, தூண்டுதல்களுக்குக் கட்டுப்படும் மனிதன் என்னென்ன செயல்களைச் செய்கிறான், என்பதே அறிந்தோனையும் அறியாதவனையும் அடையாளம் காட்டும்.

   பொன் பொருள் புகழ் என்று செல்வங்களையும் இன்பங்களையும் தேடும் மனிதன் அதற்கு அடிமையாகி விடுகிறான். பெற்ற பொருளை மறந்துவிடுகிறான்; தேடும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறான். தேடலின் வெற்றி, போதை போல் பரவி ஆட்கொண்டுவிடுகிறது. எத்தனை பெற்ற போதும் மேலும் மேலும் பெறத் தூண்டுகிறது. தேவையில்லாதவற்றையும் சேர்க்கத் தூண்டுகிறது. இன்பத் தேடலின் போதையும் வேகமும் அவன் கண்ணையும் அறிவையும் மறைத்து விடுகின்றன. கண்மூடத் தொடங்கியவன் அறிவை ஒதுக்கிறான். தன்னைப் பற்றியும், தன் சாதனைகளைப் பற்றியும், தன் மக்களின் பெருமைகளையும் தன் இனத்தின் வெற்றிகளையும் ஊரார் முன் உயர்த்திப் பேசி உவகையடைகிறான். எந்த வெற்றியும் தன்னால் உண்டானது போல் உணர்கிறான். தன்னை விட உயர்ந்தவரில்லை என்று எண்ணத் தொடங்குகிறான். தன் பெருமைகளைப் பேசவும் கேட்கவும் தயங்குவதேயில்லை. 'ஊர் சொன்னது, தாய் சொன்னது, துணை சொன்னது, தந்தை சொன்னது, குரு சொன்னது, நண்பர் சொன்னது' என்று பிறர் பேச்சைக் கேட்டு, தான் பெற்ற இன்பத்தை மட்டுமே மனதில் நிறுத்துவதால், அவை அழுக்கு மூட்டைகளாக மாறி அங்கிருந்த அறிவை ஒடுக்கி அகற்றி விடுகின்றன.

   அறிவு மழுங்கிய நிலையில், அறிவை மறந்த நிலையில், அறிவை மதிக்காத நிலையில் செய்யும் எந்தச் செயலும் அறிவற்ற செயலே. தானம் கொடுத்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று உன் தந்தை தன் செல்வங்களையெல்லாம் கண்மூடித்தனமாக வழங்கியது அறிவற்ற செயலே. உன் தந்தையைப் போல் எண்ணற்ற கண்மூடிகள் பல்வகை இன்பம் தேடுவதே குறியாக உலக வாழ்வைக் கழிக்கிறார்கள். இன்பங்களைத் தேடுகிறவர்கள் அமைதி அடைவதேயில்லை. முதலில் தனக்காகச் சேர்க்கிறார்கள். பிறகு, தன் குடும்பத்துக்காக.. பிறகு, சந்ததிக்காக... பிறகு, தன் சுற்றத்துக்காக, தன் சுற்றத்தின் குடும்பத்துக்காக, தன் இனத்துக்காக... பிறகு, எதற்குச் சேர்க்கிறோம் என்றே தெரியாமல் இவர்களின் பொருள் சுகம் இன்பத்தேடலுக்கு அளவும் முடிவும் இல்லை" என்றான் எமன்.

   "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது தவறா?" என்றான் நசிகேதன்.

   "தவறில்லை. இவர்களோ இன்பம் தேடும் வெறியில் கண்ணையும் அறிவையும் மூடியவர்கள். தன்னைச் சுற்றியவரின் உண்மையான இன்பத்திலோ, ஏன் தன்னுடைய உண்மையான இன்பத்திலோ இவர்களுக்கு அக்கறையில்லை. தான் என்ற அகந்தையும், தன்னால் எல்லாம் முடிகிறது என்ற ஆணவமும், தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற அகங்காரமும், தன்னால் முடியாது என்றவரை வெறுப்பதால் பகையும், வெறுத்து ஒறுக்க முடியாதவர் மேல் ஆற்றாமையும் அழுக்காறும் தோன்றுகிறது. இன்பம் தேடும் வேகம், துன்பம் தேடும் வேகமாக மாறுவதை அறியாமலே தொடர்கிறார்கள். பாதகங்கள் புரிகிறார்கள். பரிகாரங்கள் தேடுகிறார்கள். பலிகள் தருகிறார்கள். இந்தச் சுழற்சியில் சிக்கியவர்கள் விடுபடுவதேயில்லை.

   தாம் செய்யும் செயலுக்கேற்ற விதத்தில் பூமியில் மானிடர் அறிவுடையோர், அறிவில்லாதோர் என இரண்டே வகையினராவர். மனிதரிடையே வேறு எந்தப் பேதமும் இல்லை" என்றான் எமன்.

   நசிகேதனுக்குத் தன் தந்தையின் செயல்களின் பின்னணி புரியத்தொடங்கியது. "அறிவில்லாதவரைப் பற்றித் தொடர்ந்து சொல்லுங்கள்" என்றான்.

14 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

புத்தூர் கதையைவிட அதைப் பின் தொடர்ந்த கேள்விகள் சுவாரஸ்யம். ஒர் வேளை இன்பத்தை நாடாதவர்கள் அந்தப் பாதையில் சென்றிருக்கலாம். அவர்கள் உள்ளிருக்கும் சக்தியை (கடவுளை) உணர்ந்திருக்கலாம் அதனால் வெளியே கடவுளை நாடாமல் இருந்திருக்கலாம்.
//ஒரு வேளை.. கடவுள் மற்றப் பாதையில் வந்தாரா? அந்தப் பாதையில் வந்ததால் கடவுளானாரா? அந்தப் பாதையில் வருவோர் எல்லாம் கடவுளாகக் கூடுமா? //
சிந்தனையைத் தூண்டும் கேள்வி.
//எனினும், இலக்கை அடைந்த மக்களிடம் மகிழ்ச்சி இல்லை. தேடுவதிலும் சேர்ப்பதிலும் கிடைத்த மகிழ்ச்சி, தேடிச் சேர்த்ததும் காணாமல் போனதேன்? //
பள்ளிப் பருவத்தில் படித்த greetian urn என்ற poem நினைவு வருகிறது.

எண்ணங்கள் 13189034291840215795 சொன்னது…

மிக அருமையாக இருந்தது வாசிக்க..

தொடர்வேன்.

அப்பாதுரை சொன்னது…

வருக geetha santhanam, எண்ணங்கள், ...

meenakshi சொன்னது…

மிகவும் அருமை. தொடர்ந்து இரண்டு முறை படித்தேன். தெளிவான சிறந்த விளக்கம். எளிமையாகவும், அருமையாகவும், படிக்க படிக்க இனிமையாகவும் இருக்கிறது வெண்பா. தமிழ் உங்கள் கையில் அழகாய் தவழ்கிறது. வாழ்த்துக்கள்.

// சோகப் பாதை ஒன்று, சுகப்பாதை ஒன்று, என இல்லாமல் மக்களுக்குக் கிடைத்த இரண்டுமே மகிழ்ச்சிப் பாதைகள்.//
மிகவும் சரி. வாழ்கையின் எல்லா பாதைகளுமே இன்பம்தான். இதில் நம் பயணத்தை சுகமாக்கி கொள்ளும் திறமையும், புத்திசாலித்தனமும் நமக்குதான் வேண்டும். தீதும், நன்றும் பிறர் தர வாரா.

அறிவுடையார் ஆவ தறிவார் என்ற அருமையான குறளுக்கேற்ப, அறிவை பற்றிய உங்கள் விளக்கங்களும் அருமையாக இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

சுகமான எழுத்து... பதிவின் கனம் மெல்ல இரங்கிக் கொண்டிருக்கிறது என்னுள்...பில்டர் காப்பி டிகாக்ஷன் போல..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//'அறிவுடையோர், அறிவில்லாதோர்' என்ற.... செல்வங்களையும் பெருமைகளையும் தீவிரமாகத் தேடிச் சேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள் அறிவில்லாதவர்கள்//

என் கதை போலிருக்கே !

Santhini சொன்னது…

அறிவுள்ளவன் அடைவதும், அறிவில்லாதவன் அடைவதும் எது ?
அறிவுள்ளவன், அறிவினால் இன்பம் அடைகிறான். அறிவில்லாதவன் எனப்படுவான் பொருள்களால் (பொருள்களில் உயிர்களும் அடக்கம் ) இன்பம் அடைகிறான். அறிவுள்ளவனின் அறிவு, பொருள்களினால் அடையப்படும் இன்பம், தற்காலிகமானது என்பதை அறிவதால், பொருள் தேடுவதை இலக்காக்கிக் கொள்ளாமல் இயங்குவது. இருத்தலின் பொருட்டு இயங்குவது. தேடப்படும் இன்பங்களின், பின் செயல்படும் வினைகளின் விளைவுகளை அறிந்து இயங்குவது. விளைவுகளுக்கு தன்னை பொறுப்பாக்கிக் கொள்வது. அறிந்தோனின் சில இயல்புகள் இவை.

Santhini சொன்னது…

அறிவுள்ளவனின் அறிவு எதையும் சாராது இயங்குவதால், சார்பினால் உருவாகும் துன்ப நிலைகள் உருவாவதில்லை. துன்பம் என்ற நிலை இல்லாதிருப்பதாலும், தேடல் என்ற சோர்வு நிலை இல்லாதிருப்பதாலும், சுயமாய் இன்பம் உருவாகி விடுகிறது. அதுவே அறிதலில் இன்பம் என்றாகிவிடுகிறது.
--

அப்பாதுரை சொன்னது…

வருக meenakshi, மோகன்ஜி, சாய், Nanum, ...

தீதும் நன்றும் பிறர் தர வாரா என்று அழகாக எடுத்துச் சொன்னீர்கள் meenakshi. நன்றி.

அறிந்தோனின் இயல்புகள் பற்றி சுருக்கமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறீர்கள் Nanum. 'இருத்தலின் பொருட்டு இயங்குவது' - பிரமாதம்.

Santhini சொன்னது…

சித்தமுத லொரு பொருளு மிலாமையாலே
சிந்திக்க தகு பொருளு மென்று மில்லை
சத்தியமாய்த் தேகமுத லிலாமையாலே
சரைமரண முதலியவை என்றுமில்லை
யத்தமுத லவயவமே இலாமையாலே
யாதான முதலியவோர் செயலுமில்லை
நித்தவறி வுருவான வான்மா வொன்றே
நிச்சலமாய் நிலைத்ததென நிச்சயிப்பாய்

------ரிபுகீதை யில் படித்தது.

அப்பாதுரை சொன்னது…

பிரமாதம், Nanum.

'சத்தியமாய்த் தேகமுதலிலாமை..' எத்தனை confident/அழுத்தமான கருத்து! சிந்திக்கத் தகு பொருளுமென்றுமில்லை - ரொம்ப சிந்திக்க வைக்கிறது! profound!

ரிபுகீதை கேள்விப்பட்டது கூட இல்லை. விவரம் சொல்லுங்களேன்? நன்றி!

சிவகுமாரன் சொன்னது…

அழகான வெண்பா -- இட்டார் பெரியோர் ,இடாதார் இழிகுலத்தோர் மாதிரி.

சிவகுமாரன் சொன்னது…

கீதையையே நான் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை. கடோபநிஷதம்- அப்பாஜி புண்ணியத்தில்.. இதில் ரிபு கீதை வேறா?- அறிவார்ந்தோர் சபையில் அடக்கி வாசிடா என்று புத்தி சொல்வதால் வெண்பாவை பாராட்டுவதோடு நின்று விடுகிறேன். அதற்கு மேல் விமர்சிக்கவோ, பகிர்ந்து கொள்ளவோ என்னிடம் சரக்கு இல்லை.

பத்மநாபன் சொன்னது…

அறிவுக்கான விளக்கம் சிறப்பாக வந்திருக்கிறது ... பொருத்தமான வெண்பா .. மனம் மரத்துபோதல் - போதை என்பதைவிட உறைக்கும் சொல்லாடல். வெறி ...வெற்றி ....ஓரு மெய்யெழுத்து சொல்லின் அக /புற பொருளை மாற்றும் வித்தையை அழகாக எடுத்து வைத்துள்ளீர்கள் ....