55
கொல்வாரும் கொல்லப் படுவாரும் இல்லையே
கொல்லாது ஆன்மா கொலையுறாது - வல்லார்செய்
சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும்
கட்டுமோ கொட்டுமோ காற்று?
உயிரைப் பறிப்பவரில்லை; துறப்பவருமில்லை. ஆன்மாவை அழிக்க முடியாது; தானே அழிவதுமில்லை. திறமையுள்ளோர் குயந்தச் சட்டிப்பானைகள் என்றாலும் அவற்றுள் காற்று அடங்கி இருக்குமா? அவை உடைந்தால் உள்ளிருந்து காற்று வெளியே விழுமா? (என்றான் எமன்).
பட்டாலும்: உடைந்தாலும், அழிந்தாலும்
['...by substance, we can understand nothing else than a thing which so exists that it needs no other thing in order to exist' - rene descartes]
சில வருடங்களுக்கு முன் நானும் என் ஆசிரிய நண்பர் அரசனும் வேன்கூவரில் ஒரு 'அறிவியக்க' மாநாட்டிற்குச் சென்றிருந்தோம். அரசனுக்கு இதுபோல் கெட்டப் பழக்கங்கள் உண்டு. 'பல வருடப் பிரிவுக்குப் பிறகு சந்திக்கிறோம், போக மறுத்து அவரைப் புண்படுத்த வேண்டாம்' என்று உடன் சென்றேன். 'கண்மூடிகளைச் சாடும் கூட்டம்' என்று எண்ணிப் போனவனுக்கு அதிர்ச்சி. ஆன்மா, தன்னறிவு, சுயதேடல் பற்றிய சொற்பொழிவு, பட்டறை, அனுபவமுகாம்கள் என மூன்று நாட்கள் படாத பாடு படுத்திவிட்டார்கள்.
முகாமில் முதல் நாள் இரவு. சுமாரான சாப்பாட்டைத் தொடர்ந்து, அரை மணி நேரத் தியானத்துக்குப் பின், உறங்கலாம் வாருங்கள் என்று ஆற்றங்கரைப் பக்கம் அழைத்துப் போனார்கள். இயற்கை முகாமில் இரவுப் படுக்கை என்று நினைத்துப் போனேன். ஆற்றிலே அசைந்து கொண்டிருந்த, பத்தடிக்குப் பத்தடி அளவில், தெப்பம் எனலாம், ஒரு தெப்பத்துக்கு ஐந்து பேர் கணக்கில், ஆளுக்கு ஒரு பாயும் போர்வையும் தந்து இரவைக் கழிக்கச் சொன்னார்கள். தெப்பத்தின் நான்கு முனைகளிலும் முக்காலடிக்குக் கழி நட்டு, சுற்றிலும் கயிற்றினால் பாதுகாப்பு வேலி கட்டியிருந்தார்கள், இருந்தாலும், கயிற்றின் இடைவெளிகளில் சுலபமாக உருண்டு விழக்கூடும் போல் தோன்றியது. போதாக்குறைக்கு தெப்பத்தின் நட்டநடுவில் கனன்று கொண்டிருந்தது ஒரு அகண்ட தணல் சட்டி. "நடுவில் கூடாமல், தெப்பத்தின் ஓரங்களிலோ அல்லது ஒருவருக்கொருவர் நிறைய இடம் விட்டோ படுத்துக் கொள்ளுங்கள்" என்றார், அமைதியே வடிவான ஒரு காவி வேட்டி.
தெப்பமோ மெள்ள ஊர்ந்து கொண்டிருந்தது. அதில் தாவி ஏறுவதற்கே பெரும்பாடாகி விட்டது. பல்லவன் பஸ் ஏறத் தாவியச் சென்னை நினைவுகளுடன், "என்னய்யா காவி வேட்டி, கிண்டலா?" என்றேன்.
"என்ன?" என்றார், அமைதியின் வடிவம்.
"நடுவில் கூடாமல், தெப்பத்தின் விளிம்புகளில் அதுவும் இடம் விட்டுப் படுக்கச் சொல்கிறீரே? இத்தனை பெரிய, ஆழமான ஆற்றில், இரவில், தன்னிச்சையாய் மிதந்து போகும் தெப்பத்தில், படுத்துறங்கச் சொல்கிறீரே? எங்களுக்குத் தூக்கமோ வரப்போவதில்லை, வந்தாலும், நாளை எந்த ஊரில் எந்தக் கரையில் விழிப்போம் என்ற பீதியில் வந்தத் தூக்கமும் போய்விடும். தெப்பத்தை யாரும் இயக்குவதாகத் தெரியவில்லை. எங்களுக்கு இதை நிறுத்தவும் தெரியாது. எங்களுக்கு ஏதாவது ஆகுமா என்று தெரியாது. எங்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், நாளை எந்த இடத்தில் விழிப்போம், எங்கே போகிறோம், எப்படித் திரும்புவோம் என்று எதுவும் தெரியாது..." என்றேன் கிலியுடன்.
என்னை நிதானமாகப் பார்த்தக் காவி வேட்டி, "ஆன்மாவைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்கிறீர்களே? நீங்கள் அல்லவா இந்த அனுபவமுகாமை நடத்த வேண்டியவர்?" என்றார். அவர் கிண்டல் புரிந்தது போல் இருந்தாலும், 'வசமாகச் சிக்கினோம்' என்ற எண்ணத்தில், அரசனை வாய்க்கு வந்தபடித் திட்டிவிட்டுப் பாயில் சுருண்டேன்.
படுத்தவர்கள் சற்று நேரம் பேசினோம். இருளில், நதியோட்டத்தில், மிதவை எதில் இடித்து மூழ்குமோ, அல்லது தணல்சட்டி எப்போது காற்றில் தீப்பிடித்துத் தெப்பத்தோடு எரியுமோ என்ற கவலை கலந்த பயம் எனக்கு. அரசனோ திடீரென்று அமைதியானார். பல முறை அழைத்த பின், "நதி எங்கே போகிறது, அப்பாதுரை?" என்றார் கண்ணதாசன் குரலில். பிறகு, விசை இயக்கினாற் போல் தூங்கிவிட்டார். இரவின் மடியில், நதியில், இலக்கிலாது மிதக்கும் பெரிய தெப்பத்தில் படுத்திருந்த நான் கண்ணெதிரே விரிந்த வானம், நட்சத்திரம், நிலா, இருள், மரங்கள், காற்று, கதம்ப மணம், புள்ளொலி, அவ்வப்போது பொறித்துக் காற்றில் கலக்கும் தணல் சட்டியின் கனல் நடத்திரம்.. என மலைத்துப் போய் உறங்காமல் உறங்குகையில், 'நதி எங்கே போகிறது?' என்ற கேள்வி, போதை போல் என்னைச் சுற்றி வந்தது.
'மனித இயக்கத்தின் அடிப்படை, அம்சம், ஆதாரம் - எல்லாமே ஆன்மா தான்' என்கிறார் தத்துவ மேதை ரெனே தேகார்ட். 'இயக்குவதும் ஆன்மா, இயங்குவதும் ஆன்மா; ஒரு இயக்கத்தின் விளைவுகள், தொடரும் இயக்கங்களுக்கு வித்தாகவும் வழியாகவும் அமைகின்றன' என்கிறார். ஆன்மாவின் குறுகிய இயக்கம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு எனினும், அதே இயக்கம் மனிதருக்கு மனிதர் என்ற பரந்த அமைப்பிலும் செயல்படும் என்கிறார். கண்ணுக்குத் தெரியாத, முன்பின் சந்தித்திராத நபருடன் நட்போ பகையோ பாராட்டும் செயலிலிருந்து, புலனுக்கும் அறிவுக்கும் எடுபடும் செயல்கள் வரை, எல்லாமே ஆன்மாவின் இயக்கம் என்கிறார்.
சிகாகோ பல்கலைக்கழக வெளியீடான 'the correspondence between rene descartes and princess elisabeth of bohemia' எனும் அற்புதமான புத்தகத்தைப் படித்தபோது சற்று மெய் சிலிர்த்தது. எல்லாவற்றையும் பகுத்தறிவுக்குள் அடக்க நினைப்பவர்களை, கேள்வி மேகங்களிடையே நாற்காலியில் அமரவைத்து அமர்ந்தபின் நாற்காலிகளை உருட்டி விட்டுத் தொக்கி நிற்பதை, வேடிக்கை பார்க்கும் தீவிரச் சிந்தனைகள். முன் தந்த மேற்கோள் வரிகளைப் போல் நிறைய சிந்தித்திருக்கிறார். இரண்டு வரிகள் புரிய அரை மணியாகிறது. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் படித்து அனுபவிக்க வேண்டியப் புத்தகம்.
ஆதி சங்கரரின் தத்துவச் சிந்தனைகளில் தொலைந்து போனதுண்டா? இறை சேர்த்தாலும் தவிர்த்தாலும், வேறுபாடின்றி அனைவரும் அனுபவிக்கக் கூடிய அறிவார்ந்தச் சிந்தனைகள். ஆதி சங்கரர் சிந்தனைகளை எனக்கு அறிமுகம் செய்த வேன்கூவர் சுப்ரமணியத்துக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். பலரும் பலவாறு அறிந்திருக்கக்கூடிய ஒரு ஆழமான, சுவையானக் குட்டிக்கதையைச் சுட்டிக்காட்டி அமைகிறேன்.
ஆதி சங்கரர் தன் சீடர்களுடன் நடந்து வருகையில், வழியில் ஒரு குறவனைக் கண்டாராம். குறவன் கிழிந்த உடைகளுடன், அழுகிய பழங்களும் பண்டங்களும் நிறைந்த கூடைகளுடன், அழுக்கேறிய கூடாரம் ஒன்றைக் கட்டி, நடுத்தெருவில் கிடந்தானாம். அவனைச் சுற்றிலும் நாய்களும் பூனைகளும் குரங்குகளும் ஓட்டை ஒடிசலும் இன்னபிறவும் இருந்தனவாம்.
'குளித்து முடித்துத் தூய்மையுடன் இறைவனை வழிபட வந்துகொண்டிருக்கும் குருவின் வழியில் இப்படி ஒரு குறவனா?' என்றுப் பதைத்தச் சீடர்கள், விரைந்து சென்றுக் குறவனை வழியிலிருந்து விலகச் சொன்னார்களாம். குறவனோ சட்டை செய்யாமல் படுத்துக் கிடந்தானாம். சீடர்கள் தொடர்ந்து குறவனை அப்புறப்படுத்த முனைகையில், ஆதி சங்கரரும் வந்து விட்டாராம். குறவனிடம், "ஏய், எழுந்திரு" என்றாராம் உரக்க. நாலைந்து முறை கேட்டும் குறவன் சட்டை செய்யாதிருக்கவே, ஆதி சங்கரர் தன்னிடமிருந்தக் கழியால் அவனை மெதுவாகக் குத்தி எழுப்பி, "ஏய்! உன்னுடையதை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்தப் பக்கமாக ஒதுங்கி, கொஞ்சம் எங்களுக்கு வழி விடப்பா" என்றாராம்.
குறவன் முதுகைச் சொறிந்தபடி எழுந்து அமர்ந்தானாம். காலை நீட்டி, மூக்கைச் சிந்தி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "எது என்னுதுன்றீங்க சாமி?" என்றானாம்.
['..மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்..' - கண்ணதாசன் ]
'நசிகேதா, ஆன்மாவைப் பற்றி மேலும் சொல்கிறேன் கேள்" என்றான் எமன். "ஆன்மாவுக்கு அழிவே இல்லை. ஆன்மாவை எவராலும் அழிக்க முடியாது. தானாகவும் அழிவதில்லை. ஆன்மாவுடன் மனிதர் பிறக்கிறாரே தவிர, மனிதர் பிறக்கும் பொழுது ஆன்மா பிறப்பதில்லை. மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் வரும்
மூன்றில் ஒன்றாகும் ஆன்மா. மனிதர் இறக்கும் பொழுது, மனிதரைப் பிரிகிறதே தவிர ஆன்மா இறப்பதில்லை, அழிவதில்லை."
"மனிதர் இறந்தார் என்று சொல்கிறோமே?" என்றான் நசிகேதன்.
"மனித உடல் செயலற்றுப் போனது, அவ்வளவே. உயிரைத் துறந்தவரில்லை; பறித்தவரும் இல்லை. கொலை செய்தேன் என்று சொல்வோரும் பேதைகள்; கொலையுண்டேன் என்று வருந்துவோரும் பேதைகள். உயிரை எடுத்தேன் என்பது அறிவற்ற ஆணவம்; அது போல் உயிர் போனதே என்று வருந்துவது அறிவற்றக் கோழைத்தனம். மரணம் நிகழ்வது உடலுக்கு. ஆனால் உடல் என்ற கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் உயிர், ஆன்மா, உன் உண்மை உருவான தன்னறிவு.. அழிவதே இல்லை" என்றான் எமன்.
"சற்றுக் குழப்பமாக இருக்கிறது" என்றான் நசிகேதன்.
அருகிலிருந்த ஒரு பானையை எடுத்தான் எமன். "நசிகேதா, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்வாயா?" என்றான்.
எமனையும் அவன் கையிலிருந்த பானையையும் பார்த்தபடி, "கேளுங்கள்" என்றான் நசிகேதன்.
எமன் தொடர்ந்தான். "இதோ, இந்தப் பானையைப் பார். இதற்குள் என்ன இருக்கிறது?" என்றான்.
நசிகேதன் பானையுள் தடவிப் பார்த்துவிட்டு, "வெறும் பானை. உள்ளே ஒன்றும் இல்லை" என்றான்.
எமன் புன்னகையுடன், "உள்ளே காற்று இருக்கிறது என்பதை மறுப்பாயா?" என்று கேட்டான்.
நசிகேதன், "சரியே. பானைக்குள் வெளி அல்லது காற்று இருக்கிறது எனலாம்" என்றான்.
"அப்படியா? வெளி அல்லது காற்று இந்தப் பானைக்குள் எப்படிப் போனது? இதைச் செய்தக் குயவன் அடைத்தானா?" என்று கேட்டான். நசிகேதன் விழித்து யோசித்துக் கொண்டிருக்கையில் எமன் பானையைத் தரையில் வீசி உடைத்தான். "பானைக்குள் போன காற்று இப்போது எங்கே விழுந்தது? எங்கே கொட்டியது? என்ன ஆனது?" என்றான்.
எமனின் சிந்தனை நசிகேதனுக்குப் புரியத் தொடங்கியது. "பானைக்குள் காற்று அடங்கவும் இல்லை, உடைந்தபின் கொட்டவும் இல்லை. காற்றோ வெளியோ அங்கேயே தான் இருந்தது" என்றான்.
எமன் மகிழ்ந்து, "சபாஷ், நசிகேதா!" என்றான். "ஆன்மாவும் அப்படியே. பானையைச் செய்தக் குயவன் காற்றை அடைக்கவில்லை. காற்றைச் சுற்றிப் பானையைச் செய்தான் எனலாம். மனித உடலும் அவ்வாறே. ஆன்மாவை உள்ளடக்கிப் பிறக்கிறது. என்றும் குறையாத வெளியானது பானைக்குள்ளும் அடக்கம், வெளியிலும் அடக்கம். பானை என்பது பரந்த வெளியில் ஒரு சிறு தடுப்பு, அவ்வளவே. மனித உடலும் பரந்த ஆன்மாவின் வீச்சில் ஒரு சிறு தடுப்பு. பானை உடைந்ததும் வெளிகள் கலப்பதைப் போலவே, உடல் அழிந்ததும் பரந்த ஆன்மாவும் ஒன்றாகிக் கலந்து விடுகிறது. அடுத்தப் பானைக்குக் காத்திருக்கும் வெளி போல, அடுத்த உடலுக்கு ஆன்மாவும் காத்திருக்கிறது. எப்படிக் காற்றானது பானைக்குச் சொந்தமில்லையோ, ஆன்மாவானது உடலுக்கும் சொந்தமில்லை. பானையெனும் தற்காலிக அடைப்பிலிருந்து விலகும் வெளியைப் போலவே ஆன்மாவும் உடலினின்று விலகுகிறது.
உயிரைக் கொன்றேன் என்ற வீரப்பேச்சும் ஆணவமும் முட்டாள்தனம். உயிர் போகிறதே என்று அச்சப்படுவதும் கலவரப்படுவதும் முட்டாள்தனம். உயிரின் போக்கைத் தீர்மானிக்கும் உரிமை மனிதருக்கில்லை. இந்த உண்மையை உணரும் மனிதர், தன்னுடைய மரணத்துக்கு அஞ்சுவதில்லை. பிறருடைய மரணத்துக்கு வருந்துவதில்லை" என்றான் எமன்.
"உயிரும் ஆன்மாவும் ஒன்றா?" என்றான் நசிகேதன்.
"பரந்த ஆன்மாவின் குறுகிய வெளிப்பாடே உயிர். மூச்சு அந்த வெளிப்பாட்டைத் தொடக்கி வைக்கிறது. ஆன்மாவின் தேடலுக்கும் அந்த மூச்சே ஏதுவாகிறது" என்றான் எமன்.
"நீங்கள் முன்பு சொன்ன
உள்ளிருக்கும் தீ புரியத் தொடங்கியது" என்றான் நசிகேதன்.
►