வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/06/24

ஆன்மா அழிவற்றது


55
கொல்வாரும் கொல்லப் படுவாரும் இல்லையே
கொல்லாது ஆன்மா கொலையுறாது - வல்லார்செய்
சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும்
கட்டுமோ கொட்டுமோ காற்று?

    யிரைப் பறிப்பவரில்லை; துறப்பவருமில்லை. ஆன்மாவை அழிக்க முடியாது; தானே அழிவதுமில்லை. திறமையுள்ளோர் குயந்தச் சட்டிப்பானைகள் என்றாலும் அவற்றுள் காற்று அடங்கி இருக்குமா? அவை உடைந்தால் உள்ளிருந்து காற்று வெளியே விழுமா? (என்றான் எமன்).


பட்டாலும்: உடைந்தாலும், அழிந்தாலும்

['...by substance, we can understand nothing else than a thing which so exists that it needs no other thing in order to exist' - rene descartes]

    சில வருடங்களுக்கு முன் நானும் என் ஆசிரிய நண்பர் அரசனும் வேன்கூவரில் ஒரு 'அறிவியக்க' மாநாட்டிற்குச் சென்றிருந்தோம். அரசனுக்கு இதுபோல் கெட்டப் பழக்கங்கள் உண்டு. 'பல வருடப் பிரிவுக்குப் பிறகு சந்திக்கிறோம், போக மறுத்து அவரைப் புண்படுத்த வேண்டாம்' என்று உடன் சென்றேன். 'கண்மூடிகளைச் சாடும் கூட்டம்' என்று எண்ணிப் போனவனுக்கு அதிர்ச்சி. ஆன்மா, தன்னறிவு, சுயதேடல் பற்றிய சொற்பொழிவு, பட்டறை, அனுபவமுகாம்கள் என மூன்று நாட்கள் படாத பாடு படுத்திவிட்டார்கள்.

    முகாமில் முதல் நாள் இரவு. சுமாரான சாப்பாட்டைத் தொடர்ந்து, அரை மணி நேரத் தியானத்துக்குப் பின், உறங்கலாம் வாருங்கள் என்று ஆற்றங்கரைப் பக்கம் அழைத்துப் போனார்கள். இயற்கை முகாமில் இரவுப் படுக்கை என்று நினைத்துப் போனேன். ஆற்றிலே அசைந்து கொண்டிருந்த, பத்தடிக்குப் பத்தடி அளவில், தெப்பம் எனலாம், ஒரு தெப்பத்துக்கு ஐந்து பேர் கணக்கில், ஆளுக்கு ஒரு பாயும் போர்வையும் தந்து இரவைக் கழிக்கச் சொன்னார்கள். தெப்பத்தின் நான்கு முனைகளிலும் முக்காலடிக்குக் கழி நட்டு, சுற்றிலும் கயிற்றினால் பாதுகாப்பு வேலி கட்டியிருந்தார்கள், இருந்தாலும், கயிற்றின் இடைவெளிகளில் சுலபமாக உருண்டு விழக்கூடும் போல் தோன்றியது. போதாக்குறைக்கு தெப்பத்தின் நட்டநடுவில் கனன்று கொண்டிருந்தது ஒரு அகண்ட தணல் சட்டி. "நடுவில் கூடாமல், தெப்பத்தின் ஓரங்களிலோ அல்லது ஒருவருக்கொருவர் நிறைய இடம் விட்டோ படுத்துக் கொள்ளுங்கள்" என்றார், அமைதியே வடிவான ஒரு காவி வேட்டி.

    தெப்பமோ மெள்ள ஊர்ந்து கொண்டிருந்தது. அதில் தாவி ஏறுவதற்கே பெரும்பாடாகி விட்டது. பல்லவன் பஸ் ஏறத் தாவியச் சென்னை நினைவுகளுடன், "என்னய்யா காவி வேட்டி, கிண்டலா?" என்றேன்.

    "என்ன?" என்றார், அமைதியின் வடிவம்.

    "நடுவில் கூடாமல், தெப்பத்தின் விளிம்புகளில் அதுவும் இடம் விட்டுப் படுக்கச் சொல்கிறீரே? இத்தனை பெரிய, ஆழமான ஆற்றில், இரவில், தன்னிச்சையாய் மிதந்து போகும் தெப்பத்தில், படுத்துறங்கச் சொல்கிறீரே? எங்களுக்குத் தூக்கமோ வரப்போவதில்லை, வந்தாலும், நாளை எந்த ஊரில் எந்தக் கரையில் விழிப்போம் என்ற பீதியில் வந்தத் தூக்கமும் போய்விடும். தெப்பத்தை யாரும் இயக்குவதாகத் தெரியவில்லை. எங்களுக்கு இதை நிறுத்தவும் தெரியாது. எங்களுக்கு ஏதாவது ஆகுமா என்று தெரியாது. எங்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், நாளை எந்த இடத்தில் விழிப்போம், எங்கே போகிறோம், எப்படித் திரும்புவோம் என்று எதுவும் தெரியாது..." என்றேன் கிலியுடன்.

    என்னை நிதானமாகப் பார்த்தக் காவி வேட்டி, "ஆன்மாவைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்கிறீர்களே? நீங்கள் அல்லவா இந்த அனுபவமுகாமை நடத்த வேண்டியவர்?" என்றார். அவர் கிண்டல் புரிந்தது போல் இருந்தாலும், 'வசமாகச் சிக்கினோம்' என்ற எண்ணத்தில், அரசனை வாய்க்கு வந்தபடித் திட்டிவிட்டுப் பாயில் சுருண்டேன்.

    படுத்தவர்கள் சற்று நேரம் பேசினோம். இருளில், நதியோட்டத்தில், மிதவை எதில் இடித்து மூழ்குமோ, அல்லது தணல்சட்டி எப்போது காற்றில் தீப்பிடித்துத் தெப்பத்தோடு எரியுமோ என்ற கவலை கலந்த பயம் எனக்கு. அரசனோ திடீரென்று அமைதியானார். பல முறை அழைத்த பின், "நதி எங்கே போகிறது, அப்பாதுரை?" என்றார் கண்ணதாசன் குரலில். பிறகு, விசை இயக்கினாற் போல் தூங்கிவிட்டார். இரவின் மடியில், நதியில், இலக்கிலாது மிதக்கும் பெரிய தெப்பத்தில் படுத்திருந்த நான் கண்ணெதிரே விரிந்த வானம், நட்சத்திரம், நிலா, இருள், மரங்கள், காற்று, கதம்ப மணம், புள்ளொலி, அவ்வப்போது பொறித்துக் காற்றில் கலக்கும் தணல் சட்டியின் கனல் நடத்திரம்.. என மலைத்துப் போய் உறங்காமல் உறங்குகையில், 'நதி எங்கே போகிறது?' என்ற கேள்வி, போதை போல் என்னைச் சுற்றி வந்தது.

    'மனித இயக்கத்தின் அடிப்படை, அம்சம், ஆதாரம் - எல்லாமே ஆன்மா தான்' என்கிறார் தத்துவ மேதை ரெனே தேகார்ட். 'இயக்குவதும் ஆன்மா, இயங்குவதும் ஆன்மா; ஒரு இயக்கத்தின் விளைவுகள், தொடரும் இயக்கங்களுக்கு வித்தாகவும் வழியாகவும் அமைகின்றன' என்கிறார். ஆன்மாவின் குறுகிய இயக்கம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு எனினும், அதே இயக்கம் மனிதருக்கு மனிதர் என்ற பரந்த அமைப்பிலும் செயல்படும் என்கிறார். கண்ணுக்குத் தெரியாத, முன்பின் சந்தித்திராத நபருடன் நட்போ பகையோ பாராட்டும் செயலிலிருந்து, புலனுக்கும் அறிவுக்கும் எடுபடும் செயல்கள் வரை, எல்லாமே ஆன்மாவின் இயக்கம் என்கிறார்.

    சிகாகோ பல்கலைக்கழக வெளியீடான 'the correspondence between rene descartes and princess elisabeth of bohemia' எனும் அற்புதமான புத்தகத்தைப் படித்தபோது சற்று மெய் சிலிர்த்தது. எல்லாவற்றையும் பகுத்தறிவுக்குள் அடக்க நினைப்பவர்களை, கேள்வி மேகங்களிடையே நாற்காலியில் அமரவைத்து அமர்ந்தபின் நாற்காலிகளை உருட்டி விட்டுத் தொக்கி நிற்பதை, வேடிக்கை பார்க்கும் தீவிரச் சிந்தனைகள். முன் தந்த மேற்கோள் வரிகளைப் போல் நிறைய சிந்தித்திருக்கிறார். இரண்டு வரிகள் புரிய அரை மணியாகிறது. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் படித்து அனுபவிக்க வேண்டியப் புத்தகம்.

    தி சங்கரரின் தத்துவச் சிந்தனைகளில் தொலைந்து போனதுண்டா? இறை சேர்த்தாலும் தவிர்த்தாலும், வேறுபாடின்றி அனைவரும் அனுபவிக்கக் கூடிய அறிவார்ந்தச் சிந்தனைகள். ஆதி சங்கரர் சிந்தனைகளை எனக்கு அறிமுகம் செய்த வேன்கூவர் சுப்ரமணியத்துக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். பலரும் பலவாறு அறிந்திருக்கக்கூடிய ஒரு ஆழமான, சுவையானக் குட்டிக்கதையைச் சுட்டிக்காட்டி அமைகிறேன்.

    ஆதி சங்கரர் தன் சீடர்களுடன் நடந்து வருகையில், வழியில் ஒரு குறவனைக் கண்டாராம். குறவன் கிழிந்த உடைகளுடன், அழுகிய பழங்களும் பண்டங்களும் நிறைந்த கூடைகளுடன், அழுக்கேறிய கூடாரம் ஒன்றைக் கட்டி, நடுத்தெருவில் கிடந்தானாம். அவனைச் சுற்றிலும் நாய்களும் பூனைகளும் குரங்குகளும் ஓட்டை ஒடிசலும் இன்னபிறவும் இருந்தனவாம்.

    'குளித்து முடித்துத் தூய்மையுடன் இறைவனை வழிபட வந்துகொண்டிருக்கும் குருவின் வழியில் இப்படி ஒரு குறவனா?' என்றுப் பதைத்தச் சீடர்கள், விரைந்து சென்றுக் குறவனை வழியிலிருந்து விலகச் சொன்னார்களாம். குறவனோ சட்டை செய்யாமல் படுத்துக் கிடந்தானாம். சீடர்கள் தொடர்ந்து குறவனை அப்புறப்படுத்த முனைகையில், ஆதி சங்கரரும் வந்து விட்டாராம். குறவனிடம், "ஏய், எழுந்திரு" என்றாராம் உரக்க. நாலைந்து முறை கேட்டும் குறவன் சட்டை செய்யாதிருக்கவே, ஆதி சங்கரர் தன்னிடமிருந்தக் கழியால் அவனை மெதுவாகக் குத்தி எழுப்பி, "ஏய்! உன்னுடையதை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்தப் பக்கமாக ஒதுங்கி, கொஞ்சம் எங்களுக்கு வழி விடப்பா" என்றாராம்.

    குறவன் முதுகைச் சொறிந்தபடி எழுந்து அமர்ந்தானாம். காலை நீட்டி, மூக்கைச் சிந்தி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, "எது என்னுதுன்றீங்க சாமி?" என்றானாம்.

['..மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்..' - கண்ணதாசன் ]

    'நசிகேதா, ஆன்மாவைப் பற்றி மேலும் சொல்கிறேன் கேள்" என்றான் எமன். "ஆன்மாவுக்கு அழிவே இல்லை. ஆன்மாவை எவராலும் அழிக்க முடியாது. தானாகவும் அழிவதில்லை. ஆன்மாவுடன் மனிதர் பிறக்கிறாரே தவிர, மனிதர் பிறக்கும் பொழுது ஆன்மா பிறப்பதில்லை. மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் வரும் மூன்றில் ஒன்றாகும் ஆன்மா. மனிதர் இறக்கும் பொழுது, மனிதரைப் பிரிகிறதே தவிர ஆன்மா இறப்பதில்லை, அழிவதில்லை."

    "மனிதர் இறந்தார் என்று சொல்கிறோமே?" என்றான் நசிகேதன்.

    "மனித உடல் செயலற்றுப் போனது, அவ்வளவே. உயிரைத் துறந்தவரில்லை; பறித்தவரும் இல்லை. கொலை செய்தேன் என்று சொல்வோரும் பேதைகள்; கொலையுண்டேன் என்று வருந்துவோரும் பேதைகள். உயிரை எடுத்தேன் என்பது அறிவற்ற ஆணவம்; அது போல் உயிர் போனதே என்று வருந்துவது அறிவற்றக் கோழைத்தனம். மரணம் நிகழ்வது உடலுக்கு. ஆனால் உடல் என்ற கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் உயிர், ஆன்மா, உன் உண்மை உருவான தன்னறிவு.. அழிவதே இல்லை" என்றான் எமன்.

    "சற்றுக் குழப்பமாக இருக்கிறது" என்றான் நசிகேதன்.

    அருகிலிருந்த ஒரு பானையை எடுத்தான் எமன். "நசிகேதா, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்வாயா?" என்றான்.

    எமனையும் அவன் கையிலிருந்த பானையையும் பார்த்தபடி, "கேளுங்கள்" என்றான் நசிகேதன்.

    எமன் தொடர்ந்தான். "இதோ, இந்தப் பானையைப் பார். இதற்குள் என்ன இருக்கிறது?" என்றான்.

    நசிகேதன் பானையுள் தடவிப் பார்த்துவிட்டு, "வெறும் பானை. உள்ளே ஒன்றும் இல்லை" என்றான்.

    எமன் புன்னகையுடன், "உள்ளே காற்று இருக்கிறது என்பதை மறுப்பாயா?" என்று கேட்டான்.

    நசிகேதன், "சரியே. பானைக்குள் வெளி அல்லது காற்று இருக்கிறது எனலாம்" என்றான்.

    "அப்படியா? வெளி அல்லது காற்று இந்தப் பானைக்குள் எப்படிப் போனது? இதைச் செய்தக் குயவன் அடைத்தானா?" என்று கேட்டான். நசிகேதன் விழித்து யோசித்துக் கொண்டிருக்கையில் எமன் பானையைத் தரையில் வீசி உடைத்தான். "பானைக்குள் போன காற்று இப்போது எங்கே விழுந்தது? எங்கே கொட்டியது? என்ன ஆனது?" என்றான்.

    எமனின் சிந்தனை நசிகேதனுக்குப் புரியத் தொடங்கியது. "பானைக்குள் காற்று அடங்கவும் இல்லை, உடைந்தபின் கொட்டவும் இல்லை. காற்றோ வெளியோ அங்கேயே தான் இருந்தது" என்றான்.

    எமன் மகிழ்ந்து, "சபாஷ், நசிகேதா!" என்றான். "ஆன்மாவும் அப்படியே. பானையைச் செய்தக் குயவன் காற்றை அடைக்கவில்லை. காற்றைச் சுற்றிப் பானையைச் செய்தான் எனலாம். மனித உடலும் அவ்வாறே. ஆன்மாவை உள்ளடக்கிப் பிறக்கிறது. என்றும் குறையாத வெளியானது பானைக்குள்ளும் அடக்கம், வெளியிலும் அடக்கம். பானை என்பது பரந்த வெளியில் ஒரு சிறு தடுப்பு, அவ்வளவே. மனித உடலும் பரந்த ஆன்மாவின் வீச்சில் ஒரு சிறு தடுப்பு. பானை உடைந்ததும் வெளிகள் கலப்பதைப் போலவே, உடல் அழிந்ததும் பரந்த ஆன்மாவும் ஒன்றாகிக் கலந்து விடுகிறது. அடுத்தப் பானைக்குக் காத்திருக்கும் வெளி போல, அடுத்த உடலுக்கு ஆன்மாவும் காத்திருக்கிறது. எப்படிக் காற்றானது பானைக்குச் சொந்தமில்லையோ, ஆன்மாவானது உடலுக்கும் சொந்தமில்லை. பானையெனும் தற்காலிக அடைப்பிலிருந்து விலகும் வெளியைப் போலவே ஆன்மாவும் உடலினின்று விலகுகிறது.

    உயிரைக் கொன்றேன் என்ற வீரப்பேச்சும் ஆணவமும் முட்டாள்தனம். உயிர் போகிறதே என்று அச்சப்படுவதும் கலவரப்படுவதும் முட்டாள்தனம். உயிரின் போக்கைத் தீர்மானிக்கும் உரிமை மனிதருக்கில்லை. இந்த உண்மையை உணரும் மனிதர், தன்னுடைய மரணத்துக்கு அஞ்சுவதில்லை. பிறருடைய மரணத்துக்கு வருந்துவதில்லை" என்றான் எமன்.

    "உயிரும் ஆன்மாவும் ஒன்றா?" என்றான் நசிகேதன்.

    "பரந்த ஆன்மாவின் குறுகிய வெளிப்பாடே உயிர். மூச்சு அந்த வெளிப்பாட்டைத் தொடக்கி வைக்கிறது. ஆன்மாவின் தேடலுக்கும் அந்த மூச்சே ஏதுவாகிறது" என்றான் எமன்.

    "நீங்கள் முன்பு சொன்ன உள்ளிருக்கும் தீ புரியத் தொடங்கியது" என்றான் நசிகேதன்.

44 கருத்துகள்:

meenakshi சொன்னது…

அருமையான, அழகான வெண்பா. 'சுட்டுமோ கொட்டுமோ காற்று?' பிரமாதம்!

இதுவும் ஒரு மிக சிறந்த பதிவு! வெகு அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்த்துக்கள்! ஆதி சங்கரரின் கதையும், எமன் ஒரு பானையை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக விளக்கி இருப்பதையும் படித்த பின் இவ்வளவுதான் வாழ்கை என்று மனது ஒரு நிலை கொள்வது போல் உணர்கிறேன். திரும்ப திரும்ப படிக்க வேண்டிய பதிவு. மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டிய அருமையான தத்துவம் இது. உங்கள் புண்ணியத்தால் தான் இவ்வளவு அருமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது அப்பாதுரை. உங்களுக்கு நன்றிகள் பல.

// "நதி எங்கே போகிறது, அப்பாதுரை?"// :) எழுத்துக்களால் மட்டுமே அறிமுகமாகி என் எண்ணத்தில் உயர்ந்த நின்ற நல்ல மனிதர்.

meenakshi சொன்னது…

உங்களிடம் சில கேள்விகள்: மனித உடலில் இருந்து பிரியும் ஆன்மா, இன்னொரு உடலில் அடைந்தே ஆக வேண்டுமா? அது இன்னொரு கூட்டுக்குள் தானே விரும்பி செல்கிறதா? இல்லை வலிய அடைக்கப் படுகிறதா? இப்படி அடைய வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் காற்றை போல நம்மை சுற்றி எங்கும் பரவி இருக்கிறதா?
இந்த கேள்விகளை எல்லாம் உங்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு பக்கம் தோன்றினாலும், வெறும் அபத்தமாக இருக்குமோ என்ற அச்சமும் கூடவே தோன்றியது. இருந்தாலும் கேட்டு விட்டேன். கேள்விகள் அபத்தமாக இருந்தால் தயவு செய்து நீக்கி விடுங்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

தெப்பத்தில் மிதந்த அனுபவம் பிரமிப்பாக இருக்கிறது. நதி எங்கே போகிறது கேள்வியும். மீனாக்ஷி கேட்ட கேள்விகள் எனக்கும் வந்தன இந்த தன்னறிவு என்பது ஆன்மாவைச் சேர்ந்ததா உடலைச் சேர்ந்ததா...

//"இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள்" என்றான் எமன்"//
நானும் கேட்டு விட்டேன். கேள்விகள் அபத்தமாக இருந்தால் தயவு செய்து நீக்கி விடுங்கள் சரியாகப் படிக்கவில்லையா அல்லது படித்தது மண்டையில் ஏறவில்லையா என்று தெரியவில்லை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_25.html//

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். நன்றி.

பத்மநாபன் சொன்னது…

தெப்பத்தில் படும் பாட்டை நீங்கள் சொன்னதும் அதற்கு காவியார் சொன்னதும் வெகு பொருத்தமாக இருந்தது ...
எதை தள்ள சொல்கிறீர் ? ஆதிசங்கரருடன் குறவன் கேட்ட கேள்வி ....ஞான விளக்கம் .
ஆன்மா என்றவுடன் கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது ... பதில்வரும் எனும் நம்பிக்கையில் நான் கேள்விகளே கேட்க வில்லை ....

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் (கேள்விகளுக்கும்) மிக நன்றி meenakshi, ஸ்ரீராம், பத்மநாபன், ...

meenakshiன் ஆழமான கேள்விகளுக்கு சுலபமான விடை உடனே தோன்றுகிறது. கேள்விக்கேற்ற ஆழமான பதில் சொல்ல யோசிக்க வேண்டும். ஸ்ரீராமின் தன்னறிவு-ஆன்மா கேள்வி நான் தவறு செய்திருக்கிறேன் என்பதை கோடி காட்டுகிறது. ஓடிவிட்டு திரும்பி வந்து பதிலெழுதுகிறேன். தனிமையில் ஓடும்பொழுது சிலசமயம் ஏதாவது தோன்றும். குறைந்தது அறிந்தது போல் நடக்கும் அறிஞனாகலாம் :)

அப்பாதுரை சொன்னது…

மிகவும் நன்றி, இராஜராஜேஸ்வரி.

meenakshi சொன்னது…

// இந்த தன்னறிவு என்பது ஆன்மாவைச் சேர்ந்ததா உடலைச் சேர்ந்ததா...// ஸ்ரீராமின் கேள்வி.

// "மனிதருக்குள் தானே இருக்கிறது தன்னறிவென்னும் ஆன்மா?" என்றான் நசிகேதன்.

"ஆம்" என்றான் எமன்.// சென்ற பதிவில் நீங்கள் எழுதி இருந்தது.

தன்னறிவுதான் ஆன்மாவா? இல்லை ஆன்மாவுக்குள் தன்னறிவு இருக்கிறதா?

(நான் ரொம்ப படுத்தறேனோ! :) )

சிவகுமாரன் சொன்னது…

\\கட்டுமோ கொட்டுமோ காற்று?///

ஆக அருமை அருமை அருமை.
எனக்கு பட்டினத்தாரின்
" காற்றைப் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவா கச்சி ஏகம்பனே "
-என்ற வரிகளை நினைவுப் படுத்திற்று.

சிவகுமாரன் சொன்னது…

சம்பந்தமே இல்லையோ ?

kashyapan சொன்னது…

அப்பதுரை அவர்களே ! "ஆதி சங்கரா" என்ற திரைப்படம்.முழுக்க முழுக்க சம்ஸ்கிருத மொழியில் வந்தது .தேசீய விருது பெற்றது .ஜீ .வி.அய்யார் இயக்கம். அதில் நீங்கள் சொன்ன காட்சி வரும். குறவனுக்குப் பதிலாக புலையன் வருவான்.ஆதி சங்கரர் அவனை நகரச்சொல்லுவார். புலையன் "கிம் " என்று கெட்பான். சங்கரர் அத்வைதி. புரிந்து கொண்டுவிடுவார்.( "யாரை நகரச்சொல்கிறீர்கள்.என்னையா? என் ஆத்மாவையா?") மிகமிக ரசித்த காட்சி அது.கவனத்தொடு எழுத வேண்டிய மறுதளித்து எழுத வேண்டியவை நிறைய உள்ளது.பின்னால் எழுதுகிறேன் வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

அப்பாதுரை சொன்னது…

பட்டினத்தார் வரிகள் அருமை சிவகுமாரன். 'காற்றைப் பொதிந்த நிலையற்ற பாண்டம்' மிகப் பொருத்தம்.

பட்டினத்தார் பாடல்கள் அங்கே இங்கே ஒன்றிரண்டு வரிகள் படித்ததோடு சரி - முழுத் தொகுப்பு எங்கேயாவது கிடைக்குமா சொல்லுங்களேன்? நீங்கள் இது போல் நிறைய படித்திருக்கிறீர்கள் - எடுத்துக் காட்டியதற்கு நன்றி.

வெண்பா ரசித்ததற்கு மிகவும் நன்றி :)

அப்பாதுரை சொன்னது…

காஸ்யபன் ஐயா.. ஆதி சங்கரர் காட்சி மனதில் விரிகிறது. படத்தைப் பார்த்ததில்லை (கேள்விப்பட்டதில்லை என்பதே உண்மை - சம்ஸ்க்ருத மொழியில் திரைப்படமா? யார் பார்க்கிறார்கள்? ஆச்சரியம்!). நீங்கள் சொல்லியிருப்பது போல் கவனத்தோடு எழுத வேண்டிய விஷயம் (கவனக்குறைவு எனக்கு மூச்சு விடுவது போல் தானாகவே வருகிறது - பிறகு வருகிறேன் இதற்கு).

நான் படித்த கதைகளில் புலையன், சண்டாளன், சூத்திரன், வேடன் என்று தான் வருகிறது. 'குறவன்' என்னுடைய முத்திரை. 'யாராக இருந்தால் என்ன, செய்தி தானே முக்கியம்' என்று நினைத்தேன். மேலும் குரு, குறவன் கொஞ்சம் மோனை ஒத்து வருவது போல் பட்டது, அதே :)

அப்பாதுரை சொன்னது…

கவனக்குறைவால் என்னைக் குழப்பிக்கொண்டு, பொறுமையாகவும் தொடர்ந்தும் படித்து வரும் உங்கள் அனைவரையும் குழப்பிவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன்.

meenakshiன் கேள்விகளுக்கு என் சுலபமான விடை: தெரியாது :) அவருடைய கேள்விகளை என் சுலபமான அறிவற்ற பதிலால் கொச்சைப்படுத்த எண்ணவில்லை. தொடர்ந்து கேட்ட ஸ்ரீராம், கேட்காமல் என்னைக் கௌரவப்படுத்திய பத்மநாபன்.. எல்லாவற்றையும் கட்டிய போது என் தவறை உணர்ந்தேன்.

முடிந்தவரை விளக்குகிறேன். ஆத்மாவை அறிந்தவனல்ல நான். கொஞ்சம் படித்தவன், கொஞ்சம் புரிந்தவன் - அதன் அபாயத்தை மனதில் கொண்டு தொடர்ந்து படிக்கவும் :)

வடமொழியை உதவிக்கு அழைத்துக் கொண்டு பிறகு என் (அரைகுறை) தமிழுக்கு வருகிறேன். முகத்தில் வழிவதைத் துடைக்க வேண்டுமே?!

ஆத்மா என்பதற்கு வடமொழியில் இரண்டு வகையில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். முதலாவது, 'உடலை இயக்கும் உணர்வு அல்லது சக்தி' (soul) என்ற பரந்த பொருளில் நிறைய சொற்களும் விளக்கங்களும்; இரண்டாவது, 'தனிப்பட்டவர்' (person) என்ற குறுகிய பொருளில் சில சொற்களும் விளக்கங்களும் தந்திருக்கிறார்கள்.

ஆத்மா பரந்தது, அளவிட முடியாதது, நிரந்தரமானது, நித்தியமானது என்று பலவகையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருளில் 'ஆத்மா' என்பது எதற்குள்ளும் அடங்காத, பரந்து விரிந்து கொண்டிருக்கும் ஒரு சக்தி போன்றது.

அதே நேரம், ஆத்மா ஒரு உடலுக்குள் புகுந்ததும் - அல்லது கடோ சொல்வது போல் ஒரு உடல் ஆத்மாவின் அம்சத்தைக் கட்டியதும் - பரந்த ஆத்மாவின் அம்சம் குறிப்பிட்ட உடலுக்குள் அடங்கி 'தான்' என்ற பொருளில் வருவதால் 'தன் ஆத்மா' என்ற பொருளைக் கொள்கிறது. அந்த வகையில், 'தான்' 'தன்னுடைய சக்தி' என்ற பொருளில் அந்த உடலுக்குள் தற்காலிகமாக அடைந்திருக்கும் ஆத்மா அழைக்கப்படுகிறது.

ஆக, பரந்து விரிந்திருப்பதும் ஆத்மா; தனக்குள் அடங்கியிருப்பதும் ஆத்மா.

இனி, என் தவறுக்கு வருகிறேன்.

நசிகேதன் தேடுவது ஆத்ம ஞானம் - அதாவது, ஆத்மா பற்றிய அறிவு. ஆத்மா என்பது அழிவில்லாதது; அழிவில்லாததைப் பற்றிய ஞானமும் (அறிவும்) அழிவில்லாதது என்கிறான் எமன்.

அழிவில்லாததால் ஆத்மா, அழிவில்லாததைத் தருவதால் ஆத்மஞானம் - இரண்டுமே அழிவில்லாதது என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. இந்த இனிமையான நுட்பம் என் தமிழ்ப்படுத்தலில் சுத்தமாகத் தொலைந்து போனதை இப்போது உணர்கிறேன்.

ஆத்மா அழிவில்லாதது, உருவமில்லாதது, பரந்தது - அதைத் தேடிப் பயனில்லை. ஆனால், ஆத்மஞானம் அடையக்கூடியது, தேடக்கூடியது. ஆத்மஞானம் என்பது தனக்குள்ளே கட்டப்பட்டிருக்கும் (கட்டுப்பட்டிருக்கும் அல்ல) ஆத்மாவை அறிவது. ஆத்மாவின் அம்சத்தைப் பற்றிய ஞானம் - ஆத்மஞானம் அடைந்தால், அம்சத்தின் முழுமையான அழிவில்லாத பரந்த ஆத்மாவை அறிந்தததாகும். நீர்த்துளியை அறிந்தால் நீரை அறியலாம் அல்லவா?

ஆத்மா, ஆத்மஞானம் இரண்டையும் மிகச் சாமர்த்தியமாகக் கடோவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். வேகத்திலும் உற்சாகத்திலும் கவனம் தவறி அந்த சாமர்த்தியத்துக்கு இணையாக தமிழ்ப்படுத்தாமல் விட்டேன், என் பிழை.

பரந்த ஆன்மா, அடங்கிய ஆன்மா என்பதற்கு வடமொழியைப் போலவே தமிழிலும் தனிச்சொற்கள் இல்லை. ஆத்மா என்ற பரந்த பொருளுக்கு தமிழில் சொல் இருப்பதாகத் தெரியவில்லை. முகுலம் போன்ற சொற்கள் உள்ளன என்றாலும் அதற்கான பொருள் 'ஆன்மா' என்றே அமைகிறது. ஆத்மா என்ற உடலுக்குள் அடங்கிய பொருளுக்கு 'தான்' என்ற் தமிழ்ச்சொல் நெருங்கி வருகிறது. ஆத்ம ஞானம், அதனால் 'தன்னறிவு' ஆகிறது. வடமொழியில் ஆத்மா, ஆத்மஞானம் இரண்டையும் கலந்திருந்தாலும் 'ஆத்மா' என்பதை 'அவன்' என்ற படர்க்கை தந்து அழைத்திருக்கிறார்கள். ஆத்மஞானம், அதனால் 'அவனை'ப் பற்றிய அறிவாகிவிடுகிறது! வெகு சாமர்த்தியம்.

நான் அங்கேதான் சரிந்திருக்கிறேன். 'தான்' என்பதும் 'தன்னறிவு' என்பதும் ஒன்றே என்பது போல எழுதிவிட்டேன். எங்கே சரியத் தொடங்கினேன் என்று பார்த்து, திருத்திவிடுகிறேன். தவறுக்கு மிகவும் வருந்துகிறேன்.

'தான்' எனபதும் 'தன்னறிவு' என்பது ஒன்றல்ல, என்றாலும் தன்னறிவு பெறுவதால் மட்டுமே 'தான்' என்ற உண்மையை உணர முடியும். இன்னொரு விதமாகச் சொன்னால் குழப்பம் குறையுமெனில் இதோ: ஆத்மா என்பதும் தன்னறிவு என்பதும் ஒன்றல்ல. என்றாலும், தன்னறிவு பெறுவதால் மட்டுமே, தனக்குள்ளும் அப்பாலும் பரந்த, 'ஆத்மா' எனும் உண்மையை உணர முடியும்.

தன்னறிவு என்பது 'ஆத்மாவைப் பற்றிய அறிவு' என்ற பொருளில் தொடர்ந்து படிக்கவும். இரண்டாம் பகுதியில் இன்னும் சில பாடல்களே உள்ளன. இரண்டாம் பகுதி முடிந்ததும் திருத்தங்களைச் செய்கிறேன். அதுவரை பிழை பொறுக்க வேண்டுகிறேன். (அதற்குப் பிறகும் பிழை இருக்காது என்று பொருள் அல்ல :)

அப்பாதுரை சொன்னது…

நல்ல வேளையாக மீசை வைக்கும் பழக்கமில்லாது போனது.

அப்பாதுரை சொன்னது…

//மனித உடலில் இருந்து பிரியும் ஆன்மா, இன்னொரு உடலில் அடைந்தே ஆக வேண்டுமா? அது இன்னொரு கூட்டுக்குள் தானே விரும்பி செல்கிறதா? இல்லை வலிய அடைக்கப் படுகிறதா? இப்படி அடைய வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் காற்றை போல நம்மை சுற்றி எங்கும் பரவி இருக்கிறதா? //

meenakshi: இந்தக் கேள்விகளுக்கு உண்மையிலேயே 'எனக்குத் தெரியாது' என்றே பதில் சொல்ல வேண்டும் :).
கடோவில் சொல்லியிருப்பதைச் சொல்கிறேன் (சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற பயம் வந்துவிட்டது):
- ஆன்மா உடலை அடைவதில்லை, உடல் ஆன்மாவைப் பெறுகிறது என்பதன் நுட்பத்தைப் புரிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விடும். பானையைச் செய்தவன் காற்றை அடைப்பதில்லை.
- அடைய வேண்டிய கட்டாயம் இல்லை. 'நம்மைச் சுற்றி வருகிறது' என்றால் ஆவி, பூதம் போலவும் அல்ல. காற்று பானையைச் சுற்றியும் இருக்கிறது, பானைக்குள்ளும் இருக்கிறது. பானைக்குள் இருப்பது சுற்றி இருப்பதன் அம்சம்.

இன்னொரு உதாரணம் தோன்றுகிறது, பொருந்துகிறதா பாருங்கள். பாலாற்றிலிருந்து நீர் எடுத்து வந்தாலும், உங்கள் வீட்டுக் குழாயில் வருவது உங்களுக்குச் சொந்தமான நீராகிறது. அது பாலாற்று நீர் தான் எனினும் அதை சகதியாகவோ, சாக்கடையாகவோ, வெட்டிவேர் நெல்லிக்காய் எலுமிச்சைத் தோல் ஊறவைத்து வாசமான ஊட்டமனான நீராகவோ மாற்றுவது உங்கள் உரிமை, விருப்பம் அல்லவா? நீரைக் கட்டாமல் கொட்டினால் ஒருவிதத்தில் அது பாலாற்றுக்கே போவது தானே (பாலாறும் பூமிக்குள் வற்றும் என்ற கண்ணோட்டத்தில்)?

ஆன்மா என்பது என்ன என்று எனக்கும் intellectual மற்றும் emotional curiosity உண்டு. இரண்டாம் பகுதியின் இன்னொரு பாடலில் ஆத்மா பற்றிய இக்காலச் சிந்தனைகளை எழுத நினைத்திருக்கிறேன். energy என்று கொண்டோமானால் ஆத்மாவின் சில நுட்பங்களை அறியலாம் என்று நினைக்கிறேன். ஓரளவுக்குத்தான். பரந்தும் கட்டியும் கிடக்கும் ஆத்மா அனுபவங்கள் - உங்களைப் பற்றி உங்களுடன் பழகாமலே புரிந்து கொள்வது, உங்களுடன் பழகியபின் உங்கள் குறை நிறைகளை நீங்கள் விவரிக்காமலே அறிவது, உங்களுக்குப் பிடிக்கும் பிடிக்காது என்று சரியாக யூகித்து நடப்பது, சில சமயம் உங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே சொல்வது, சில நேரம் உங்கள் நினைப்பை அதே நேரத்தில் நினைப்பது - இந்த அனுபவங்கள் எல்லாமே ஒருவரிடமோ அல்லது குழுவிலோ நம் எல்லாருக்குமே ஏற்படுகிறது. இதற்கு 'விஞ்ஞான' விளக்கம் உண்டா? இல்லை என்றும் சொல்லமுடியவில்லை. உண்டு என்று சொல்ல நினைக்கும் போதே ஆணவம் என்றும் தோன்றுகிறது. அதனால், இந்த உணர்வுகளுக்கு ஒரு விளக்கம் உண்டு அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றாலும் இன்றைய நம் மனமுதிர்ச்சி அதற்கு ஏற்றதாக இல்லை என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. இது என் கருத்து. 'electrical energy' நம் எல்லார் உடலிலும் உண்டு. இந்த electrical energyஐ externalize செய்து ஆன்மாவை நிரூபிக்கும் பரிசோதனைகளை உலகில் பல இடங்களில் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், தொடர்ந்து செய்வார்கள். மனித இனம் அழியும் வரை இந்த curiosity நமக்கு இருக்கும். உலகத் தொடக்கம் பற்றிப் புரிந்து கொள்ள இத்தனை கோடி வருடங்களாகியிருக்கிறது. ஆன்மாவைப் பற்றியும் புரிந்து கொள்வோம் - இன்னும் சில கோடி ஆண்டுகளானாலும். அறிந்து கொள்வோமா? அது வேறு கேள்வி. புரிந்து கொண்டதை அறிந்து கொண்டதாக எண்ணி நடப்பது மானிட இனத்தின் சாபம் என்று நினைக்கிறேன்.

ஆழமான சமாசாரம். பலர் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.

meenakshi சொன்னது…

நன்றி அப்பாதுரை. அழகான விளக்கம்.
//இரண்டாம் பகுதியின் இன்னொரு பாடலில் ஆத்மா பற்றிய இக்காலச் சிந்தனைகளை எழுத நினைத்திருக்கிறேன்.// படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
எனக்கும் சிறிது காலமாகவே இந்த ஆன்மா பற்றி நிறைய, ஆழமாக தெரிந்து கொள்ள மிகுந்த ஆவல். இதை பற்றி உள்ள புத்தகங்களை பொறுமையாக படிக்க வேண்டும் என்றிருக்கிறேன்.
இந்த ஆன்மா நம் உடலுக்கு அடைபட்டவுடன் எப்படி செயல்படத் துவங்கும். என்னுள் அடைபட்டிருக்கும் ஆத்மாதான் என் சக்தி என்றால், அடைபட்ட அந்த ஆத்மாவை அறிவதுதான் ஆத்மஞானம் என்றால், என் சக்தி என்ன என்பதை நான் உணர்வதுதான் என் ஆத்மஞானமா?

இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டையே சுற்றி வரும் என்றும், மீண்டும் அவர்கள் அந்த வீட்டில் பிறப்பார்கள் என்றும் நம்பப்படுகிறதே, அப்படி என்றால் அந்த வீட்டில் ஒருவர் இறந்த பின், அவரை விட்டு வெளியேறிய அந்த ஆத்மா, மீண்டும் அந்த வீட்டில் பிறக்கும் போகும் அந்த உடலான கூட்டில் எப்படி சரியாக வந்து அடைபடுகிறது? இது சரி என்றால் அந்த ஆத்மா விரும்பிதானே அந்த உடலில் அடைபடுகிறது!

மன்னிக்க வேண்டும் அப்பாதுரை? இந்த ஆன்மாவை பற்றி இது போல நிறைய கேள்விகள் என்மனதில். இப்பொழுது இந்த பதிவில் அதை பற்றி வந்ததால் ஒவ்வொன்றாய் கேட்க தோன்றுகிறது. உங்கள் விளக்கமும் தெளிவாய், நிறைவாய் இருப்பதால்தான் தொடர்ந்தேன். உங்கள் பொறுமையை சோதிப்பதாக இருந்தால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். :)

அப்பாதுரை சொன்னது…

meenakshi
தாராளமாகக் கேளுங்களேன். உங்கள் சில கேள்விகளுக்கு முதல் பகுதியிலேயே எமனின் பதிலிருக்கிறது - நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் படித்துப் பாருங்களேன்?

அப்பாதுரை சொன்னது…

//இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டையே சுற்றி வரும் என்றும்..//

நீங்கள் 'நம்பப்படுவதாகச் சொல்வது' உண்மையாகவே இருக்கட்டும்; ஒரு கேள்வி: வெளியூர் ஓட்டலில் இறந்து போனால் இறந்தவரின் ஆத்மா ஓட்டலை சுற்றி வருமா இல்லை வழி தேடி தன் வீட்டுக்கு வந்து அங்கே சுற்றி வருமா?

பேய் பிசாசு பற்றி இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆன்மா பற்றி இதுபோல் நான் கேள்விப்பட்டதில்லை. நான் இதை பொய், உடான்ஸ், கப்ஸா என்று பலவகையாகக் கூறுவேன் :)

உடல் என்பது பானையைப் போல், ஆன்மா என்பது காற்றைப் போலென்பதை ஏற்றோமானால் உடலியக்கம் நின்றதும் 'தன்' ஆன்மா, 'பொது' ஆன்மாவுடன் கலக்கிறது என்பதை ஏற்கலாம். 'பாலாற்றுத் தண்ணீர்' உதாரணம் பொருந்துமா?

அப்பாதுரை சொன்னது…

//இது சரி என்றால் அந்த ஆத்மா விரும்பிதானே அந்த உடலில் அடைபடுகிறது!

வீட்டில் குழாய் அமைக்கிறீர்கள். தண்ணீர் விரும்பி உங்கள் குழாய்க்குள் வருகிறதா?

அப்பாதுரை சொன்னது…

//என் சக்தி என்ன என்பதை நான் உணர்வதுதான் என் ஆத்மஞானமா?

உணர்வதோடு, 'உணர்ந்து நடப்பது' என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அறிந்து வாளாவிருந்தால் ஒரு பயனுமில்லை, அல்லவா?

'என் சக்தியால் பொதுப் பலனை அறிந்து நடப்பது', ஆத்மஞானத்தின் உச்சி என்றும் கருதுகிறேன். நசிகேத வெண்பாவின் சாரத்தை ஒரு கேள்வியில் அடக்கி விட்டீர்கள் meenakshi.

RVS சொன்னது…

அதே பட்டினத்தார் மனதை "அங்காடி நாய்" என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார்.. ரொம்ப நாள் கழித்து நசிகேதனை பார்க்க வந்தேன்.. ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். ;-))

geetha santhanam சொன்னது…

வான்கூவரில் உங்கள் தெப்ப அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. வான்கூவர் சுப்பிரமணியத்துக்கு இந்தப் பதிவை அனுப்ப இருக்கிறேன்.
ஆன்மா பற்றிய கருத்துக்களை கொஞ்சமாவது புரிந்து கொள்ள மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். நன்றாக இருக்கிறது

பெயரில்லா சொன்னது…

//மூச்சு அந்த வெளிப்பாட்டைத் தொடக்கி வைக்கிறது. ஆன்மாவின் தேடலுக்கும் அந்த மூச்சே ஏதுவாகிறது///

Well beginning :)

Idhu thaana Moochi puduchi muthu eduppathu.

Otta paanayil kaatradaitha paadalum vilakkamum arumai.

Niraya ketkalam, karuthurai sollalam pol irukkirathu.

geetha santhanam சொன்னது…

இந்தப் பிறவியில் நல்லதைச் செய்தால் அடுத்த பிறவி இதைவிடச் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறதே. இந்த நல்லதைச் செய்யும் எண்ணம்தான் 'பெற்ற தன்னறிவு' என்றால் நீங்கள் சொன்ன //"இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள்" என்றான் எமன்"// பொருத்தமாகத்தானே இருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

i think spiritual camp was in buffalo america and not in vancoover.

அப்பாதுரை சொன்னது…

வருக rvs, geetha santhanam,...

பெயரில்லா (?), கருத்துரை சொல்லலாம் தாராளமாக.

அப்பாதுரை சொன்னது…

சுப்ரமணியத்துக்கு பதிவு அனுப்புவதற்கு நன்றி geetha santhanam; அவரோட இமெயில் கூட என்னிடம் இல்லை :)

அப்பாதுரை சொன்னது…

ஒரே பெயரில்லாவா வேறே வேறேயா..? spiritual camp buffalo தான்; vancouver என்றது என்னுடைய பிழை. யாரிந்தப் பெயரில்லா? பயமாக் இருக்குதே - நாங்க ரெண்டு பேர் மட்டும் தானே போனோம்?

அப்பாதுரை சொன்னது…

தன்னறிவு உடன் வரும் என்றால் செய்த வினைப்பலன் உடன்வரும் என்று பொருளல்ல. அடுத்த பிறவி சிறப்பாக இருக்கும் என்பதற்காக நல்லது செய்வது அறிவின்மையா அல்லவா என்பது தானே நசிகேத கதையின் விவாதக் கரு, geetha santhanam? :)

geetha santhanam சொன்னது…

/ஒரே பெயரில்லாவா வேறே வேறேயா..? spiritual camp buffalo தான்; vancouver என்றது என்னுடைய பிழை. யாரிந்தப் பெயரில்லா? பயமாக் இருக்குதே - நாங்க ரெண்டு பேர் மட்டும் தானே போனோம்?//
ஹா ஹா ஹா.
துரை, கடோ உங்களால்தான் அறிமுகமானது. அதை முழுதாக உள்வாங்கும் பக்குவமெல்லாம் எனக்கு இல்லை. ஏதோ தோன்றியது, கேட்டேன். அடுத்த பிறவியில் நல்லது நடக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு (எதிர்பார்ப்போடு) நல்லது செய்வது தவறு என்று கடோ சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா?.
வினைப் பயன் ஆன்மாவுடன் வராதா? கொஞ்சம் விளக்குங்கள்

geetha santhanam சொன்னது…

சாரி, எங்களிடமும் வான்கூவர் சுப்பிரமணியன் அவர்களின் தற்போதைய இமேயில் ஐடி இல்லை. எப்படியும் அனுப்பப் பார்க்கிறேன்

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//நீங்கள் 'நம்பப்படுவதாகச் சொல்வது' உண்மையாகவே இருக்கட்டும்; ஒரு கேள்வி: வெளியூர் ஓட்டலில் இறந்து போனால் இறந்தவரின் ஆத்மா ஓட்டலை சுற்றி வருமா இல்லை வழி தேடி தன் வீட்டுக்கு வந்து அங்கே சுற்றி வருமா?//

நீங்கள் சொல்லியதை விபிரீதமாக யோசித்தால் நிறைய கதை கருக்கள் கிடைக்குது. மேலும் மெனெக்கெட்டு டெவெலப் பண்ணனும்.

ஏப்ரல் மாதத்தில் என் அப்பாவின் பெரிய அண்ணா இறந்தார, அவரை உண்டு இல்லை என்று படுத்திய அவரின் மகன் நேற்று இறந்தான் (மூன்று மாதத்தில் மூன்றாவது சாவு). எங்கள் வீட்டில் ஒரு காலத்தில் குடும்பத்தின் விழுதுகள் போல் பிறப்பின் அடிப்படையில் விருத்தி சீதகம் என்று அடிக்கடி பூணல் மாற்றவேண்டியது போய் - இப்போது ஒவ்வொருவரும் டிக்கெட் வாங்கி செல்வதால் இறப்பின் அடிப்படியில் சீதகம் - இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு எந்த ஒரு பண்டிகையும் இருக்காது போலிருக்கு !

அவன் இறந்த செய்தி நாணா மூலம் தெரிந்தவுடன் உங்கள் இந்த பதிவை பார்த்த அவன் அவரை அங்கேயும் போய் படுத்துவானோ என்று தான் தோன்றியது !!

வெண்பா புரியும் அளவு எனக்கு அறிவு இல்லை. உங்கள் விளக்கங்குளுடன் படிக்கும்போது லேசாக புரிந்தா மாதிரி இருக்கு. என்னுடைய அட்டென்ஷன் ஸ்பானுக்கு ஐந்து லைன் தான் தகும் ! வடிக்கட்டின முட்டாளின் முதன்மையோன் நான் !

இருந்தாலும் விக்கிரமாதித்தன் போல் விடாமல் முயற்சி செய்யறேன் ஆனாலும் விளங்களை பாஸ்.

அப்பாதுரை சொன்னது…

தாராளமாகக் கேட்கலாம் geetha santhanam. கேள்விக்கு சரியான பதில் சொல்லும் பக்குவமும் எனக்கு இல்லை. தவறாக ஏதேனும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.

அப்பாதுரை சொன்னது…

படிப்பதே பெரிது சாய். நன்றி.

Nanum enn Kadavulum... சொன்னது…

நான்கு வரியில் புரிதலை உணர்த்துவது சிரமம் எனினும், முயற்சிக்கிறேன். இப்போது தண்ணீரையும், கண்ணாடி பானையையும் எடுத்துக் கொள்வோம். கடலில் தண்ணீர் இருக்கிறது. அதற்கு தனியாய் உருவமில்லை. கண்ணாடி பானையை உள்ளே வைப்போம். இப்போது அந்த தண்ணீருக்கு பானையின் உருவம் வந்து விட்டது. உருவம் வந்த பின் கொஞ்சம் இயல்புகளும் மாறும். கடலின் மாற்றம் அனைத்தும் பானையின் தண்ணீரில் வராது. ( நிமிடக் கணக்கை மறந்து, வருடக் கணக்கில் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம் வசதிக்காக)

இப்போது பானையின் தன்மை மாறிவிட்டது. தான் என்ற உணர்வு உருவாகிவிட்டது. இந்த தன்மையின் மாற்றமே தான் என்ற உணர்வு. தன்மை வேறானதால், தானும் வேறு என்ற உணர்வு உருவாகிறது.
தான் என்ற உணர்வின் வேர் எது என புரிந்து விட்டதெனில், ........இப்போது ஆன்மா எதற்கு உடலை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு வரலாம்.

பாலையின் புயலில் பானைகள் ஏன் நிரம்ப வேண்டும்? பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா? அதுபோலவே , பாலையின் மணல் துகள்களைப் போல அலைகளாக நிரம்பியுள்ள தற்செயல் உலகத்தின் செயல்களே அவை. ஆன்மா, ஆத்மா, பரமாத்மா, மோட்சம், நாம் வாழும் வாழ்வு காரணம் தொட்டே போன்ற உணர்வு பூர்வமான நம்பிக்கைகளையும், கருத்தாக்கங்களையும் ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு யோசித்தால் இதுவும் பிடிபடும்.

எது இருக்கிறதோ அது இருக்கிறது. விளக்கம்: அலைகள் - இருக்கிறது
எது இயங்குகிறதோ அது இயங்குகிறது: அலைகளின் இயக்கம்
எதுவும் மாறுவதில்லை : அலைகள் அலைகளாகவே
எதுவும் துவங்குவதில்லை, அழிவதுமில்லை: அலைகள் அலைகளாகவே பயணிக்கின்றன.

துகள்கள் எனப்படும், அலைகளே ஒளி, ஒலி, மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், பாறைகள், செடிகள், விலங்குகள், எண்ணங்கள் மற்றும் மனிதம். அவற்றின் இருத்தலினால், உணர்வுகள் உருவாகிறது. மேற்சொல்லப்பட்ட அலைகள் ஏதும் இல்லையெனில், உணர்வதற்கோ , உணரப் படுவதற்கோ ஏதும் இருப்பதில்லை. இருத்தலில் இருத்தல் உணரப்படுகிறது.

இந்த உண்மைகள் அறியப் படும்போது, உலகின் மாய தன்மை என்றால் என்ன என்ற உண்மையும் புலப்படும்.

இந்த உண்மைகள், அறியப் படும்போது, மரணம் என்பது இல்லை எனவும் அறியப் படுவதால்,
மரணத்தை வென்றதாக சொல்லப் படுகிறது.

இந்த நிலை மோட்சம் என அழைக்கப் படுகிறது.

சக்தி, வசியம், பக்தி, வேண்டுதல் , வேண்டாமை , பேய் , பூதம், கடவுள் போன்ற அடையாளங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட அலைகள் மட்டுமே.

Nanum enn Kadavulum... சொன்னது…

நான்கு வரியில் புரிதலை உணர்த்துவது சிரமம் எனினும், முயற்சிக்கிறேன். இப்போது தண்ணீரையும், கண்ணாடி பானையையும் எடுத்துக் கொள்வோம். கடலில் தண்ணீர் இருக்கிறது. அதற்கு தனியாய் உருவமில்லை. கண்ணாடி பானையை உள்ளே வைப்போம். இப்போது அந்த தண்ணீருக்கு பானையின் உருவம் வந்து விட்டது. உருவம் வந்த பின் கொஞ்சம் இயல்புகளும் மாறும். கடலின் மாற்றம் அனைத்தும் பானையின் தண்ணீரில் வராது. ( நிமிடக் கணக்கை மறந்து, வருடக் கணக்கில் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம் வசதிக்காக)

இப்போது பானையின் தன்மை மாறிவிட்டது. தான் என்ற உணர்வு உருவாகிவிட்டது. இந்த தன்மையின் மாற்றமே தான் என்ற உணர்வு. தன்மை வேறானதால், தானும் வேறு என்ற உணர்வு உருவாகிறது.
தான் என்ற உணர்வின் வேர் எது என புரிந்து விட்டதெனில், ........இப்போது ஆன்மா எதற்கு உடலை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு வரலாம்.

பாலையின் புயலில் பானைகள் ஏன் நிரம்ப வேண்டும்? பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா? அதுபோலவே , பாலையின் மணல் துகள்களைப் போல அலைகளாக நிரம்பியுள்ள தற்செயல் உலகத்தின் செயல்களே அவை. ஆன்மா, ஆத்மா, பரமாத்மா, மோட்சம், நாம் வாழும் வாழ்வு காரணம் தொட்டே போன்ற உணர்வு பூர்வமான நம்பிக்கைகளையும், கருத்தாக்கங்களையும் ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு யோசித்தால் இதுவும் பிடிபடும்.

எது இருக்கிறதோ அது இருக்கிறது. விளக்கம்: அலைகள் - இருக்கிறது
எது இயங்குகிறதோ அது இயங்குகிறது: அலைகளின் இயக்கம்
எதுவும் மாறுவதில்லை : அலைகள் அலைகளாகவே
எதுவும் துவங்குவதில்லை, அழிவதுமில்லை: அலைகள் அலைகளாகவே பயணிக்கின்றன.

துகள்கள் எனப்படும், அலைகளே ஒளி, ஒலி, மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், பாறைகள், செடிகள், விலங்குகள், எண்ணங்கள் மற்றும் மனிதம். அவற்றின் இருத்தலினால், உணர்வுகள் உருவாகிறது. மேற்சொல்லப்பட்ட அலைகள் ஏதும் இல்லையெனில், உணர்வதற்கோ , உணரப் படுவதற்கோ ஏதும் இருப்பதில்லை. இருத்தலில் இருத்தல் உணரப்படுகிறது.

இந்த உண்மைகள் அறியப் படும்போது, உலகின் மாய தன்மை என்றால் என்ன என்ற உண்மையும் புலப்படும்.

இந்த உண்மைகள், அறியப் படும்போது, மரணம் என்பது இல்லை எனவும் அறியப் படுவதால்,
மரணத்தை வென்றதாக சொல்லப் படுகிறது.

இந்த நிலை மோட்சம் என அழைக்கப் படுகிறது.

சக்தி, வசியம், பக்தி, வேண்டுதல் , வேண்டாமை , பேய் , பூதம், கடவுள் போன்ற அடையாளங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட அலைகள் மட்டுமே.

Nanum enn Kadavulum... சொன்னது…

பானைக்குள் காற்று இருக்கிறது, பானைக்கு வெளியிலும் காற்று இருக்கிறது, பானையாயும் காற்று இருக்கிறது. ஆனால் பானைக்கு வெளியே இருக்கும் காற்றின் தன்மையே பானைக்குள் இருக்கும் காற்றுக்கு இருப்பதில்லை. வெளியே சூறாவளி அடிக்கலாம். தென்றலும் அடிக்கலாம். வெளியின் தன்மை வேறாகவும், உள்ளின் தன்மை வேறாகவும் பிரிக்கப்படுகிறது, தற்காலிகமாக அல்லது பானை உடையும் வரையிலும்.
இத்தகைய பிரிவினால் தான் எனும் உணர்வு உருவாகிறது. உடல் உதவாமல் ஆகும்போது, உடல் உதிர்க்கப்படுகிறது. உடல் உதவுகிறது என்ற கருத்தாக்கம் இருப்பதால், ஆன்மா எதையோ சாதிக்க இவ்வுடலை பயன் படுத்துவதாக நினைத்தோம் எனில், ஆன்மாவுக்கு அப்படியென்ன வேலை இருக்கிறது எனவும் கேட்கத் தோன்றலாம். அந்த கதைக்கு பிறகு வரலாம்.
இப்போதைக்கு .........என்ன மொழியோ ......"தான்" என்கிற உணர்வே ஆன்மா. இத்தகைய உணர்வை அடையாளம் காண்பதே தன்னறிவு. இந்த அடியாளம் காணல், சில உண்மைகளை தெளிவாக்குகிறது.
அ) எங்கும் நிறைந்திருப்பது ஆன்மா ஆ) தான் எனும் உணர்வாய் பிரிந்திருப்பதும் ஆன்மா இ) எப்போது வேண்டுமானாலும் இரண்டும் சேர்ந்து கொள்ளும் ஈ) இரண்டுக்கும் பொதுவான தன்மைகளும் உண்டு மற்றும் வேறான தன்மைகளும் உண்டு.

அடுத்து மீனாட்சி அவர்கள் கேட்ட கேள்வி, ஆன்மா விரும்பி தான் உடலை எடுக்கிறதா என்ற கேள்விக்கு பதில். உறவுகள் பேசுவதால் மட்டுமே ஆன்மா அங்கேயே அலைந்து திரிந்து தான் உடலை தேர்வதில்லை.
அது ஒரு தற்செயல் நிகழ்வு. எடுத்துக்காட்டாய், ....மீண்டும் பானைக்கு வருவோம். மணற்புயல் வீசும் ஒரு பாலையில் நான்கைந்து பானைகளை வைத்து விடுவோம். பானைகளில் மணல் நிரம்பத் துவங்கும். எந்தப் பானையில் எத்தனை மணற்துகள், எவ்வகை மணற்துகள் என்று எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள்?

அடுத்து க்வாண்டம் பிசிக்ஸ் கொடுக்கிற விளக்கத்திலிருந்து: எங்கும் நிறைந்திருப்பது துகள்கள். அவை God's particle எனவும் அதற்கு மேலும் சிறிய துகள்களாகவும் பிரிக்கப் பட்டுவிட்டது. உரித்துக் கொண்டே போன வெங்காயம் போல, பொருள் என்பது தனக்கு எடையும், உருவமும் இல்லாத துகள்களாக, மேலும் துகள்களும் அற்ற அலைகளாக அடையாளம் காணப் பட்டு விட்டது.

இப்போது, ஆன்மாவையும், தான் எனும் உணர்வையும், துகள்களாகவும், அலைகளாகவும் ஒப்பேடு செய்து பாருங்கள்.

இத்தனை பெரிய பூமியோ, சூரியனோ , இல்லை கேலக்சியோ உருவற்ற அலையின் நிலைக்கு பிரித்து விட முடியும். அத்தகைய அலைகள் மட்டுமே நிரம்பிய இந்த உலகுக்கு உருவங்களும், உணர்வுகளும் எப்படி உருவாயின என்ற கேள்விக்கு மட்டும் பதில் தேடினால் போதுமானது.

Nanum enn Kadavulum... சொன்னது…

நான்கு வரியில் புரிதலை உணர்த்துவது சிரமம் எனினும், முயற்சிக்கிறேன். இப்போது தண்ணீரையும், கண்ணாடி பானையையும் எடுத்துக் கொள்வோம். கடலில் தண்ணீர் இருக்கிறது. அதற்கு தனியாய் உருவமில்லை. கண்ணாடி பானையை உள்ளே வைப்போம். இப்போது அந்த தண்ணீருக்கு பானையின் உருவம் வந்து விட்டது. உருவம் வந்த பின் கொஞ்சம் இயல்புகளும் மாறும். கடலின் மாற்றம் அனைத்தும் பானையின் தண்ணீரில் வராது. ( நிமிடக் கணக்கை மறந்து, வருடக் கணக்கில் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம் வசதிக்காக)

இப்போது பானையின் தன்மை மாறிவிட்டது. தான் என்ற உணர்வு உருவாகிவிட்டது. இந்த தன்மையின் மாற்றமே தான் என்ற உணர்வு. தன்மை வேறானதால், தானும் வேறு என்ற உணர்வு உருவாகிறது.
தான் என்ற உணர்வின் வேர் எது என புரிந்து விட்டதெனில், ........இப்போது ஆன்மா எதற்கு உடலை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு வரலாம்.

பாலையின் புயலில் பானைகள் ஏன் நிரம்ப வேண்டும்? பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா? அதுபோலவே , பாலையின் மணல் துகள்களைப் போல அலைகளாக நிரம்பியுள்ள தற்செயல் உலகத்தின் செயல்களே அவை. ஆன்மா, ஆத்மா, பரமாத்மா, மோட்சம், நாம் வாழும் வாழ்வு காரணம் தொட்டே போன்ற உணர்வு பூர்வமான நம்பிக்கைகளையும், கருத்தாக்கங்களையும் ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு யோசித்தால் இதுவும் பிடிபடும்.

எது இருக்கிறதோ அது இருக்கிறது. விளக்கம்: அலைகள் - இருக்கிறது
எது இயங்குகிறதோ அது இயங்குகிறது: அலைகளின் இயக்கம்
எதுவும் மாறுவதில்லை : அலைகள் அலைகளாகவே
எதுவும் துவங்குவதில்லை, அழிவதுமில்லை: அலைகள் அலைகளாகவே பயணிக்கின்றன.

துகள்கள் எனப்படும், அலைகளே ஒளி, ஒலி, மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், பாறைகள், செடிகள், விலங்குகள், எண்ணங்கள் மற்றும் மனிதம். அவற்றின் இருத்தலினால், உணர்வுகள் உருவாகிறது. மேற்சொல்லப்பட்ட அலைகள் ஏதும் இல்லையெனில், உணர்வதற்கோ , உணரப் படுவதற்கோ ஏதும் இருப்பதில்லை. இருத்தலில் இருத்தல் உணரப்படுகிறது.

இந்த உண்மைகள் அறியப் படும்போது, உலகின் மாய தன்மை என்றால் என்ன என்ற உண்மையும் புலப்படும்.

இந்த உண்மைகள், அறியப் படும்போது, மரணம் என்பது இல்லை எனவும் அறியப் படுவதால்,
மரணத்தை வென்றதாக சொல்லப் படுகிறது.

இந்த நிலை மோட்சம் என அழைக்கப் படுகிறது.

சக்தி, வசியம், பக்தி, வேண்டுதல் , வேண்டாமை , பேய் , பூதம், கடவுள் போன்ற அடையாளங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட அலைகள் மட்டுமே.

அப்பாதுரை சொன்னது…

வருக Nanum. எத்தனை தீர்க்கமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். பலமுறை படித்து விட்டேன். எழுத நேரமும் சிரமமும் எடுத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.

உயிரை உயிரென்று எண்ணும் பொழுது இருக்கும் சிக்கல், அது பரந்த நிலையின் தற்செயலான கட்டுதல் என்று உணர்கையில், மறைந்து விடுகிறது. மரணம் என்று எதுவும் இல்லை என்ற உண்மை புரியத் தொடங்குகிறது. கடோவின் கடைசி மூன்று பகுதிகளின் சாரம் உங்கள் விளக்கத்தில் உள்ளது. உயிருக்கு என்ன ஆகிறது என்ற நசிகேதனின் கேள்விக்கான பதில் உங்கள் விளக்கத்தில் இருக்கிறது. அருமை!

துகள்கள்-அலைகள் வித்தியாசமான கண்ணோட்டம். metaphysical பார்வை புரிந்ததும், பிரமிக்க வைத்தது.

இயக்கங்களின் ஆதாரம் தற்செயல் என்பதைப் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம். வெங்காயத்தை உரித்துக் கொண்டே போகலாம்!

உங்கள் பின்னூட்ட நிகழ்வின் தற்செயலை என்னவென்பது!

என் நண்பர் ஒருவர் தற்போது பெரும் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறார் - நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தற்செயல் பார்வையும் அலை குவியல் விளக்கமும் அவருக்கு மிகவும் பயன்படும். தற்செயல் நிகழ்வுகளைத் திட்டமென்று எண்ணிக் குற்ற உணர்வுடன், 'உள்ளுணர்வு' என்று மாயையில், திண்டாடுகிறார். பானைகளின் துகள்கள் மட்டுமே அவர் கண்ணுக்குப் படுகிறது. பானைத் துகள்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள அவரது உள்ளுணர்வு மறுக்கிறது. பானைகளோ அதில் நிறைந்தவையோ தன் சொந்தம் தன் செயல் தன் வெற்றி தன் குற்றம் என்று குழம்பி நொந்து போனவரிடம், உங்கள் பார்வையை எடுத்துச் சொல்ல முயல்கிறேன். பானைகளே மாயை என்பது அவருக்குப் புரியுமா தெரியவில்லை. எனக்கே மண்டையில் ஏறவில்லை - நான் சொல்லி அவருக்கு ஏறுமா தெரியவில்லை :).

தற்செயல் பற்றிய இந்தப் புரிதல்களினால் ஆன்மா மோட்சம் போன்ற புலனுக்கப்பாற்பட்டவைக்கானப் பாதைகளை அறிகிறோமோ இல்லையோ, புலனுக்குட்பட்ட வாழ்வின் அன்றைய/அடுத்த நாளைக்கான பாதையைத் தெளிவோடு காண முடியும் என்று நினைக்கிறேன். பாதையில் சலனமில்லாது பயணிக்க முடியுமென்று நம்புகிறேன். மரணத்தின் ரகசியம் வாழ்க்கையில்.

ஆழமான, அருமையான சிந்தனையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

meenakshi சொன்னது…

மிக்க நன்றி Naanum அவர்களே. இரண்டு முறை படித்தேன். மீண்டும் படிக்க இருக்கிறேன் இன்னும் தெளிவாய் புரிந்து கொள்ள. மேலும் விளக்கங்கள் தேவைபட்டாலோ, சந்தேகங்கள் இருந்தாலோ கேட்கிறேன்.
ஆன்மாவை பற்றிய உங்கள் அறிவும், சொல்ல வேண்டிய கருத்துக்களை மிகவும் தெளிவாக, புரியும் வண்ணம் எழுதும் உங்கள் ஆற்றலையும் கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள்!

ராமசுப்ரமணியன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ராமசுப்ரமணியன் சொன்னது…

ஒரே ஞானிகள் கூட்டமாக இருக்கும் போலிருக்குதே?

//இயக்கங்களின் ஆதாரம் தற்செயல் என்பதைப் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம்//
//மரணத்தின் ரகசியம் வாழ்க்கையில்.//

அருமை.

'Nanum enn Kadavulum...' அவர்களின் ஒவ்வொரு வரி கருத்துகளும் அபாரம்! மாஸ்டர் பிலாசபி வகுப்புக்குள் நுழைந்து விட்டேனா என்று தோன்றுகிறது.

ஸ்ரீராம். சொன்னது…

மிக அருமையாக விளக்கமளித்துள்ளார் நானும் என் கடவுளும். புரிந்து போகின்றது. அதாவது படிக்கும்போது புரிந்தது அப்புறம் போய் விடுகிறது. இயக்கங்களின் ஆதாரம் தற்செயல் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது புரிந்து கொண்டதாகக் கருதுவதை வெளிப் படுத்துவதில் தவறோ என்ற தயக்கம் இருக்கிறது. அதை வெளிப் படுத்துவதில் இருக்கும் கஷ்டத்தை பார்க்கும்போது நானும் என் கடவுளும் கோர்வையாக புரிய வைத்திருப்பதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. புரிந்து புரியாமல் போனதை மறுபடி அறிய முயற்சிக்கையில் நான் இன்னும் ஏற வேண்டிய படிகள் ஏராளம் என்று புரிகிறது. (ஏற வேண்டுமா என்றும் தோன்றுகிறது!)