வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/06/17

ஆன்மா உருவமில்லாதது


53
புலனின்பத் துன்பநிலை ஒன்றெனும் போதர்
விலகாது வவ்விடும் ஆன்மா - அலயம்
புலப்படாது மூலக் குழிக்குள் புதைந்தப்
பலகோடிக் காலப் பயிர்.

   புலன்களால் அறியக்கூடிய இன்ப துன்ப நிலைகளில் ஒருமையைக் காணும் ஞானிகள் தங்கள் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் உறுதியுடன் பற்றி நிற்கும் தன்னறிவானது, தோற்றமின்றி, அழிவின்றி, பிறவிக்குப் பின் பிறவியாக, உயிர்க் குழிக்குள் ஆழப் புதைந்திருப்பதாகும் (என்றான் எமன்).


வவ்விடும்: பற்றும், உறுதியாக இருக்கும்
அலயம்: தோற்றம்
மூலக்குழி: ஆதாரமான உயிர், இதயம், அறிவு


['..there is more wisdom in your body than in all philosophy' - friedrich nietzsche]

    டலுறுப்புக் கண்ணோட்டத்திலிருந்து ஒதுங்கி, உணர்வுக் கண்ணோட்டத்தில் பார்த்தால் சில சுவாரசியமானக் கேள்விகளை, குழப்பங்களை எதிர்கொள்ளலாம். அறிவும் இதயமும் ஒன்றா? அறிவும் மனமும் ஒன்றா? இதயமும் மனமும் ஒன்றா?

   பொருள், புகழ், கல்வி, பொது நடத்தை தொடர்பானச் சகிக்க ஒண்ணாதச் செயல் புரிவோரிடம், "உமக்கு மூளை இல்லையா? அறிவு இல்லையா?" என்கிறோம்.

   அன்பு, கருணை, பாசம் தொடர்பானச் சகிக்க ஒண்ணாதச் செயல் புரிவோரிடம், "உமக்கு இதயமே இல்லையா? எப்படி மனம் வந்தது?" என்கிறோம்.

   உலகாயதம் தொட்ட நடத்தைகளுக்கு அறிவையும், உணர்வுகள் தொட்ட நடத்தைகளுக்கு இதயத்தையும் குறி வைக்கிறோம்.

   உணர்வுகள், செயல்கள் அனைத்தையும் கட்டுக்குள் வைப்பது அறிவே, எனினும், உணர்வு என்ற கண்ணோட்டத்தில் இதயமும் அறிவும் வசதியாக ஒன்றுக்கொன்று இடமாறுவதை ஏற்கிறோம்.

   தன்னறிவு என்பது உணர்வா? இதயமா, அறிவா? அறிவைக் கட்டும் இதயமா? இதயத்தைக் கட்டும் அறிவா? அறிவைக் கட்டும் உணர்வா? உணர்வைக் கட்டும் அறிவா? எல்லாமேவா?

   chaos theory என்பது கணிதம், பௌதிகம் கலக்கும் ஒரு சுவாரசியமான பிரிவு. இந்தப் பிரிவின் தாக்கம் கணிதம் பௌதிகம் இரண்டையும் கடந்து, இன்றைக்கு உலக அறிவியலின் அனைத்துக் கிளைகளிலும் பரவியிருக்கிறது.

   முன்சொன்ன அறிவு, இதய இடமாற்றங்கள் உள்நோக்கிய chaos theoryயே என்பது, இன்றைய உளவியல் பார்வை. மனித மனதின் சிக்கல்களைப் புரிந்து கொள்ள chaos theoryன் அடிப்படையில் சில முறைகளைப் பின்பற்றுகிறார்கள் உளவியல் நிபுணர்கள். தொடர்கொலை, கற்பழிப்பு, பேரழிவு போன்றத் தீவிர குற்றங்களைச் செய்வோரின் மனநிலைகளைப் புரிந்து கொள்ள இந்த வழிமுறைகள் உதவும் என்கிறார்கள். ம்ம்ம்... தீவிரக் குற்றவாளிகளுக்கு அறிவு இல்லையா? அல்லது இதயம் இல்லையா?

   உளவியலை விட்டு மேலாண்மைக்கு வருவோம். organizational design, information network design பிரிவுகளில் chaos theory பயன்படுகிறது என்பதை நம்பமுடியவில்லை. tunnel, spiral என்று இரண்டு வித வடிவ மாதிரிகள் உண்டு. organizational designன் முக்கிய அம்சங்களான authority flow, delegation, control flow போன்றவற்றைப் பரவலாகவும் அடிக்கடியும் கொடுக்க, எடுக்க, மாற்ற நேரிடும் என்பதால் சுலபமான வடிவமைப்பு தேவை. அதே போல், தகவல் துறையிலும் எந்த ஆய்வையும் உடனடியாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கத் தகுந்த வடிவமைப்பு தேவை. இரண்டு ஒழுங்குகளிலும், வடிவ மாதிரிகளைத் தேவைக்கேற்றபடி உடனடியாக மாற்றியமைக்க வசதி வேண்டும். tunnel வடிவமைப்பில் உள்ளே போகவும் வெளியே வரவும் ஒரே வழி. spiral வடிவமைப்பிலே உள்ளே சென்றால் சென்றது தான்.

   புதிர்: இரண்டு அமைப்புகளில் எது வசதியானது? எது வேகமானது? எது சுலபமானது? எது உகந்தது?

   விடை: [+]

   மனித இயல்புகளை, நடத்தைகளை, பண்புகளை இயக்கவோ ஆளவோ அடக்கவோ இதே முறைகளைப் பயன்படுத்த முடியுமா? வடிவமைப்புகளைக் கொஞ்சம் புரட்டிப் போட்டுச் சிந்திக்க வேண்டும். செய்வோம்.

['தென்னை இளநீருக்குள்ளே, தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே, தேங்காயைப் போலிருப்பான் ஒருவன்...' - கண்ணதாசன் ]

    "தன்னறிவை நல்லாசிரியரிடம் பெற வேண்டும்" என்ற எமன், தொடர்ந்தான். "பயிரானது வளர்ந்து செழித்து கொடுத்து அழிந்து மீண்டும் எழுந்து வளர்ந்து செழிப்பது அல்லவா? ஆன்மாவும் அப்படியே. கோடிக் கணக்கான பிறவிகளாக தோன்றி மறைந்து மீண்டும் தோன்றி வளர்ந்து வருவது தன்னறிவு. நீண்ட காலமாக செழித்து வளர்ந்து வரும் பயிர். ஆயின், அதற்கு உண்மையான அழிவு இல்லை."

   "தன்னறிவு உள்ளதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?" என்றான் நசிகேதன்.

   "தன்னறிவுக்கு உருவமில்லை. பன்னிரண்டு கைகளோ, நான்கு முகங்களோ, மூன்று கண்களோ, எட்டு தோள்களோ, பத்து தலைகளோ இல்லை. எனினும், அதை அடையாளம் காணலாம். தன்னறிவு ஆறு தீக்குணப் பகையழிக்க வல்லது எனினும், சூலமோ ஆயுதமோ வில்லோ வாளோ ஏந்தி நிற்பதில்லை. பூமிக்கும் ஆகாயத்தும் அண்டத்துக்கும் அப்பாற்பட்டுப் பரந்திருக்கக் கூடியதாயினும், அணுவுக்குள் அணுவாக அடங்கி எளிதில் புலப்படாத தோற்றமுடையது" என்றான் எமன்.

   "அது எங்கே இருக்கிறது என்பதைச் சொல்வீர்களா?" என்று கேட்டான் நசிகேதன்.

   "தன்னறிவு, உயிர்த்துடிப்புக்கும் உணர்வுத்துடிப்புக்கும் இடையே பெருங்குழியில் புதைந்திருக்கிறது. குழிக்குள் குழிவெட்டி, குகைக்குள் குகைக் குடைந்து, ஆழப் புதைந்திருக்கிறது" என்றான் எமன்.

   "எனில், அதை அறிவது எப்படி? அடைவது எப்படி?" என்றான் நசிகேதன்.

   "போதர்கள் வழியில் போனால், தன்னறிவை அடையாளம் காணலாம். தம்முடைய இலக்கிலிருந்து சற்றும் விலகாமல், புலனைக் கட்டி, மூச்சைக் கட்டி, தவத்தால் உள்ளிருக்கும் தீயை எழுப்பி, வளர்த்து அதன் ஒளியில் குழிகளைக் கடக்கிறார்கள்; குழிகளுக்குள் கிடக்கும் குகைகளைக் கடக்கிறார்கள். அதனுள்ளே புதைந்திருக்கும் தன்னறிவை அடையாளம் காண்கிறார்கள். குகைகளைப் பெயர்த்தெடுக்கிறார்கள்; குழிகளை நிரப்புகிறார்கள். அத்தகைய அருந்தவம் செய்துத் தன்னறிவைப் பெறுவதனால், அவர்களால் அனைத்து இருமைகளையும் அடையாளம் காண முடிகிறது. இருமையின் ஒருமையை உணர்ந்து செயலாற்ற முடிகிறது. அவர்களது பாதையைப் பின்பற்றினால் தன்னறிவை அறியலாம், அடையலாம்" என்றான் எமன்.

   "ஐயா, சற்றுக் குழப்பமாக இருக்கிறது. ஆன்மாவுக்கு அழிவில்லை, ஆனால் பிறவிக்குப் பின் பிறவியாகத் தோன்றி மறைந்து வளரும் என்கிறீர்கள். தன்னறிவுக்கு உருவமில்லை, ஆனால் புலப்படாதத் தோற்றம் கொண்டது என்கிறீர்கள். ஆன்மாவை அடையலாம், ஆனால் அடைய விடாமல் புதைந்திருக்கும் என்கிறீர்கள். குழி என்கிறீர்கள், குகை என்கிறீர்கள். எங்கிருந்து வந்தன எனக்குள் குழியும் குகையும்? சற்று விளக்கமாகச் சொல்லுங்களேன்" என்று பணிந்தான் நசிகேதன்.

   "நசிகேதா! அகத்துக்கும் புறத்துக்கும் பொதுவானது அறிவு. புலன்களில் மிக முக்கியமானது கண். வெளிப் பார்வைக்குத் தெரிந்தவற்றைப் புரிந்து கொள்ள முனைகிறது புலனறிவு. வெளியே இருப்பவற்றைக் கண்டு புரிந்து கொள்ள உதவும் புறக்கண் போலவே, மனிதருக்கு அகக்கண்ணும் உண்டு. மனிதம் அகக்கண்ணால் தனக்குள்ளே தேடிப் பார்க்க வேண்டும். மலர்களும் மிருகங்களும் இன்பமும் துன்பமும் பசியும் பிணியும் புன்சிரிப்பும் போர்களும் புறக்கண்ணுக்குப் புலப்படுவதைப் போல, அடக்கமும் அமைதியும் அழுக்காறும் ஆணவமும் கருணையும் பொறாமையும் பேராசையும் அகக்கண்ணுக்குப் புலப்படும். புறத்தே இருக்கும் புதர்களும் காடுகளும் குகைகளும் போலவே அகத்தேயும் தீக்குணங்கள் குழி தோண்டி வேர் விடுகின்றன, குகை கட்டிக் குடியிருக்கின்றன. குழிகளும் குகைகளும் வளர வளர தன்னறிவு புதைந்து கொண்டே போகிறது. தவத்தாலும், முயற்சியாலும் அகக்கண்ணால் தொடர்ந்து தேட அறிவைப் பழக்கினால், தன்னறிவை அடையாளம் காணலாம். புறக்கண் இழந்தக் குருடர்களால் எப்படி வெளிக்காட்சிகளைக் கண்டு செயலாற்ற இயலாதோ, அவ்வாறே அகக்கண் குருடர்களால் தனக்குள்ளே கண்டு தன்னறிவைத் தேடிச் செயலாற்ற முடியாது. அகக்கண்ணை மூடியே வைத்திருப்பது மனிதரின் இயல்பான குணம்" என்றான் எமன்.

   தன்னறிவு பற்றிய விவரங்கள், நசிகேதனுக்குப் புதுமையாகவும் சற்றே அச்சமூட்டுவதாகவும் தோன்றின.

13 கருத்துகள்:

ராமசுப்ரமணியன் சொன்னது…

கேயாஸ் தியரியா? எங்கெ போயிட்டீங்க அப்பாதுரை?! புதிரை விட விடை இன்னும் கஷ்டமா இருக்குதே? நிறைய விஷயங்களை அள்ளி வீசிறீர்கள். 'இவ்விடம் மனிதனேயத்தில் பி எச் டி படிப்பும் பட்டமும் வழங்கப்படும்'னு ஒரு போர்டு மாட்ட வேண்டியது தான்.
keep it up!

பத்மநாபன் சொன்னது…

பலக்கோடி காலப்பயிர் இந்த சொற்றொடரில் சொக்கி நிற்கிறேன் ..

புறக்கண் அகக்கண் விளக்கம் அருமை..

அகக்கண்ணுக்கு கண்ணாடி மாட்டும் பணியை அழகாக செய்கிறீர்கள்...

சிவகுமாரன் சொன்னது…

\\தன்னறிவு பற்றிய விவரங்கள், நசிகேதனுக்குப் புதுமையாகவும் சற்றே அச்சமூட்டுவதாகவும் தோன்றின//

-- எனக்கும் தான்.
அறிவார்ந்தோர் கூட்டத்தில் நான் ஒரு மூடன் சேர்ந்து விட்டேனோ என்று பயமாக இருக்கிறது.

சிவகுமாரன் சொன்னது…

விட்டுப் போன வெண்பாவையும் படித்து விட்டேன்.
பல கோடிக் காலப் பயிர்
ஓதல் ஒழுங்கு - இரண்டும் கவர்கின்றன.

அப்பாதுரை சொன்னது…

நன்றி ராமசுப்ரமணியன் (ஹிஹி.. கொஞ்சம் ஓவர், இருந்தாலும்..), பத்மநாபன், சிவகுமாரன், ...

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் மூடர் என்று எண்ணுமளவுக்கு இங்கே அறிஞர் யாருமில்லை சிவகுமாரன். அச்சமும் அறியாமையும் தான் நமக்குப் பெரும் பகை. பேச்சுக்குக் கூட வேண்டாமே?

மோகன்ஜி சொன்னது…

புலனின்பத் துன்பநிலை ஒன்றெனும் போதர்....
ஆழமானதோர் துவக்கம்.. ஐம்புலனும் தன் வழியே சுகம் தேடும் பொறிகள்.. மனம் ஒன்று நல்லதாய் நினைத்திடினும்,ஒவ்வா ஆட்டமாடும் வசப்படா வகையின..

கொஞ்சம் பட்டினத்தார்-
கையொன்று செய்ய விழி ஒன்று நாடக்
கருத்தொன்று எண்ண

பொய்ஒன்று வஞ்சக நாஒன்று பேசப்
புலால்கமழும்

மெய்யொன்று சாரச் செவிஒன்று கேட்க
விரும்புமியான்

செய்கின்ற பூசைஎவ் வாறுகொள் வாய்வினை
தீர்த்தவனே!

இதயமும் மனமும் ஒன்றா? அழகான கேள்வி..
இதயம் ஒரு சின்ன பம்ப்ஸ்டேஷன் மட்டுமே.
இதயத்தை உணர்வு,கனிவு,பாசம் போன்ற உணர்வுகளின் இருப்பிடமாய் ஆக்கி.. தமனிளை அடைத்து விட்டோம். காதல்ர்களோ அதில் அம்பு விட்டபடி..

உளவியல், மேலாண்மைக் கூறுகளை சிறப்பாய் சேர்த்திருக்கிறீர்கள்...

ஒரு கேள்வி தோன்றுகிறது.

அறிவுடையவை, அறிவற்றவற்றைச் சார்ந்துதான் அறிவு பெறுகின்றதா?

ஸ்ரீராம். சொன்னது…

கொஞ்சம் இருங்கள்...மறுபடி படித்து விட்டு வருகிறேன்...

சிவகுமாரன் சொன்னது…

நன்றி அப்பாஜி. தமிழறிந்த அளவு நான் தத்துவம் அறியேன் . ஒரு மாணவனாய் தொடர்கின்றேன்.

அப்பாதுரை சொன்னது…

சுவையான கேள்வி, மோகன்ஜி.
அறிவும் அறியாமையும் வட்டத்தின் விட்டங்களே. எங்கே அறிவு எங்கே அறியாமை என்பதை எடுத்துச் சொல்வது கடினம். அறிவு, அறியாமை எனும் இருமையின் ஒருமை அறிவு என்று நினைக்கிறேன். அறிவுக்குள் அறியாமை அடக்கம். அல்லது அறியாமை மொட்டு மலர்ந்த பூ அறிவு?

பட்டினத்தார் வரிகளுக்கு நன்றி. அத்தனை ஆழத்தை எப்படி இத்தனை சுலபமாக எழுதி வீசுகிறார்கள்!

Santhini சொன்னது…

மோகன்ஜி & அப்பாதுரை

///அறிவுடையவை, அறிவற்றவற்றைச் சார்ந்துதான் அறிவு பெறுகின்றதா?///

/////அறிவும் அறியாமையும் வட்டத்தின் விட்டங்களே. எங்கே அறிவு எங்கே அறியாமை என்பதை எடுத்துச் சொல்வது கடினம். அறிவு, அறியாமை எனும் இருமையின் ஒருமை அறிவு என்று நினைக்கிறேன்.///////

எங்கோ படித்தது.
பாறைகள், கற்கள் போன்றவை, ஓரறிவும் இல்லாதவையாம், அதன் பின் ஓரறிவுள்ள உயிர்களின் வரிசை துவங்குகிறது என. ஓரறிவுள்ளவை முதல் ஆறறிவுள்ள அனைத்துக்கும் அதற்கே உரித்தான அறிவு இருக்கும் என கொண்டால் உங்கள் கேள்விக்கு பதில் என்னவாக இருக்கக் கூடும் ?

அடுத்து ஆறறிவுள்ள நமக்கு அறியாமை, அறிவு என இருமைகள் இயங்கும்போது, ஓரறிவு, ஈரறிவு கொண்ட உயிர்களின் இருமை என்ன ?

பத்மநாபன் சொன்னது…

''நானும்'' அவர்களின் கேள்விகளை தொடர்ந்து நானும் கேள்வியான கருத்துக்களை சபையில் வைக்கிறேன் ... அறியாமையை பற்றிய அறிவே புலனறிவை ( புலனின்பத்தை ) தாண்டிய பின்னர்தான் .... ஐந்தறிவு வரை அறியாமையின் துன்பமும் இல்லை அறிவின் இன்பமும் ( பேரின்பம் ) இல்லை ... அறியாமையை தாண்டும் வரை ஆறறிவினருக்கும் அதே நிலைதான் ...

அப்பாதுரை சொன்னது…

வருக, நானும். நல்ல கேள்வியோடு வந்தீங்க :)

அறிவு உள்ளதை அறியும் திறன் கொண்ட 'அறிவு'களுக்கே இந்தச் சிக்கல். அறிவு உள்ளதை அறியாத பிறவிகளுக்கு (என்று நாம் நினைக்கிறோம்) அறிவு/அறியாமை இருமையின் குழப்பம் இருக்காது. now, அறிவு உள்ளதை அறியும் பிறவிகள் என்று மானிடரை மட்டுமே சொல்ல முடியும் என்று (about 97%) நம்புகிறேன்.

அறியாமையின் துன்பம் ஐந்தறிவுகளுக்கும் கீழேயும் இருப்பதாகத் தோன்றுகிறது பத்மநாபன் (கருத்துக்கும் கேள்விக்கும் நன்றி). அத்துன்பம் பிற ஐந்தறிவினால் விளைவதில்லை - விளைந்தாலும் அவைகளுக்கு துன்பமெனத் தெரிவதில்லை. 'இயற்கை' என அவை இயல்போடு ஏற்று அதற்கேற்ப நடப்பதாய் நினைக்கிறேன். so called ஆறறிவினால் தான் பிற அறிவுகளுக்குத் துன்பம் ஏற்படுவதாய் நினைக்கிறேன் - அதைத் துன்பம் என்று புரிந்து கொள்வதும் ஆறறிவே என்பது வியப்பான முரண்.

இன்னொரு பதிவில் காஸ்யபன் கேட்டது போல் 'human being' என்பது 'being' தனத்தின் விளைவா என்று பார்க்கையில், 'being' என்பது மூச்சு விடுவது மட்டும் என்ற பார்வையெனில் 'human' என்ற அடைமொழிக்கு அவசியமே இல்லாது போயிவிடுவது புரிகிறது. அறிவு (ஆறாம் அறிவோ ஏழாம் அறிவோ - நாமே ஏற்படுத்தியக் கணக்கு தானே?) என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறது. (கேட்பதே அறிவு என்றும் நிறைய படித்திருக்கிறோம் :) அறிவு இன்னதென்று சிந்திக்க வைப்பதால் - சிந்திப்பதால் - மனிதப் பிறவிக்கும் பிற அறிவுப் பிறவிகளுக்கும், ஏன், மனிதப் பிறவிகளுக்கிடையிலேயும், பேதம் ஏற்படுத்தவோ, உள்ள பேதத்தை உணரவோ முடிகிறது என்று நினைக்கிறேன்.

அந்த வகையில், இருமைக் குழப்பம் நமக்கு மட்டும் தான். now, இருமை என்பது தேவையான குழப்பமா இல்லையா என்று கேட்கத் தோன்றுகிறதே? :)