52
வாதத்தால் வாராத வண்ணாகும் வாலறிவை
ஆதரோ ஆசிரியச் சொல்லிடார் - சாதகரும்
நுட்பத்துள் நுட்பமென்பார் போதரிடம் போதிக
ஒட்பமிதை ஓதல் ஒழுங்கு.
ஆதரோ ஆசிரியச் சொல்லிடார் - சாதகரும்
நுட்பத்துள் நுட்பமென்பார் போதரிடம் போதிக
ஒட்பமிதை ஓதல் ஒழுங்கு.
தன்னறிவு, வாதங்களால் தெளியாது; அறியாதவரால் இதனைப் பிழையின்றி விளக்க முடியாது; யோகியரோ இதனை விளக்கத்துக்கு அப்பாற்பட்டப் பெரும் நுட்பமென்பார்கள்; ஆன்மாவை மூவகையிலும் அறிந்த ஞானிகளிடமே கற்றுத் தெளிதல் முறையாகும் (என்றான் எமன்).
வண்: தெளிவு
வாலறிவு: தான் இறையான உணர்வு, தன்னறிவு, தூய்மையான அறிவுநிலை
ஆதர்: அறிவு குறைந்தவர், மூடர்
ஆசிரிய: பிழை நீங்க (ஆசு+இரிய)
சாதகர்: பயிற்சி செய்பவர், யோகி
போதர்: முற்றுமறிந்தவர், ஞானி
போதிகம்: ஆன்மா
ஒட்பம்: நுணுக்கம், பெருமை
ஓதல்: படித்தல், கற்றல்
['the wise teacher does not bid one to enter the house of wisdom, but leads one to the threshold of their own mind' - khalil gibran]
அஜாதசத்ரு-பாலாகி உரையாடல் நினைவிருக்கலாம். தன்னறிவு பெற்றவன் என்று தானே நினைத்துக் கொண்டு, அரசனுக்கும் சொல்லித்தர முனைந்து, தன் அறிவையும் குருவென்னும் அந்தஸ்தையும் இழந்த 'ஞானி'யின் கதை. ஒரு கேள்வி: இருவரில் யார் அறிஞர்?
அறிஞர்கள் பலவிதம்.
எதையும் முழுதும் அறிந்து கொள்ளாமல், எல்லாவற்றையும் சற்றே கொறித்தவர்கள் சிலர். அகலம் கண்டு, ஆழம் தொலைத்தவர்கள்.
எதையும் சற்றே கொறித்து, ஏதோ ஒன்றை முழுமையாக அறிந்தவர்கள் சிலர். அகலம் கண்டு, ஆழம் அறிந்தவர்கள்.
எல்லாம் அறிந்தும், எதையும் அறியாதவர் போல் இருப்பவர் சிலர்.
எதையுமே அறியாமல், எல்லாம் அறிந்தது போல் நடப்பவர் சிலர்.
தன் சாதாரண அறிவை மிகைப்படுத்திப் பேசும் வகையினர் சிலர்.
தன் மிகைப்பட்ட அறிவை சாதாரணப்படுத்திப் பேசும் வகையினர் சிலர்.
தேவையில்லாமல் அடுத்தவரிடம் தன் அறிவை வெளிப்படுத்துவோர் சிலர்.
தேவையிருந்தும் அடுத்தவரிடம் தன் அறிவை மறைப்பவர் சிலர்.
தன்னை விட அறிவாளியைச் சந்தித்ததும் தன் அறிவின்மையை உணர்ந்து, அறிவைத் தேடும் 'பாலாகி' வகையினர் சிலர். தன்னை விட அறிவாளியைச் சந்தித்ததும் வேறு இலக்கைத் தேடுவோர் சிலர். இரண்டையும் விட்டு, சந்தித்தவருக்கு அறிவில்லை என்று வாதாடி நேரம் கழிப்போர் சிலர்.
அடுத்தவர் அறிவின் வால் பிடித்து அதை வைத்தே சமாளிப்பவர்கள் சிலர். ஒருவரிடம் கேட்டறிந்ததை, விவரம் புரிந்து கொள்ளாமல், இன்னொருவரிடம் சொல்லித் தனக்குப் பெருமை தேடிக்கொள்வாகள். தவறான விவரம் என்று புரிந்ததும், முதலில் சொன்னவரின் பெருமையைக் குலைத்துத் தப்பிக்கும் ரகமும் உண்டு.
அறிந்து கொள்ளும் பொறுமையும் ஆற்றலும் முனைப்பும் உழைப்பும் இல்லாதவர் சிலர். தவறு என்று தெரிந்திருந்தும் அதையே தொடர்ந்து செய்யும் ரகம். 'எது தவறு' என்ற அறிவை நிரம்பப் பெற்றவர்கள். தவறானப் பாதையைப் பற்றி வாய்கிழியப் பேசுவார்கள். சரியான பாதையைப் பற்றி அறியாத 'அறிஞர்'கள். எதைச் செய்யக்கூடாது என்பதை இவர்களிடம் அறியலாம்.
எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தும், அறிவைப் பெறும் பொறுமை இல்லாதவர்கள் சிலர். அவசரத்துக்கு அறிவைப் பலிதரும் வகையினர்.
எத்தனை அறிவைப் பெற்றிருந்தாலும், அதை வெளிப்படுத்திப் பகிர்ந்து கொள்ள விரும்பாதவர்கள் சிலர். அறிவைப் பரப்பினால் அடுத்தவர் விழித்து விடுவாரே என்று அஞ்சுவார்கள்.
எத்தனை அறிவைப் பெற்றிருந்தாலும், அதை முறையாக வெளிப்படுத்தத் தெரியாதவர்கள் சிலர்.
எல்லாம் அறிந்திருந்தும், அறிவைத் தேடுவோர் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அறிவை முறையில்லாமல் வெளிப்படுத்தி, அறிவுத் தேடலுக்கு முடிவு கட்டுவோர் சிலர்.
எல்லாம் அறிந்திருந்தும், அதைச் சிறுகச் சிறுக வெளிப்படுத்தும் விதத்தில் அறிவுத் தேடலை வளர்ப்போர் சிலர்.
அறிந்தும், 'அறிந்தென்ன ஆவது?' என்று இருப்போர் சிலர்.
'அறிந்தென்ன ஆவது?' என்று, அறியாமலே இருப்போர் சிலர்.
எத்தனை அறிந்தும், அறியாதது அண்டத்தினும் பெரிது என்றிருப்பவர் சிலர்.
இந்தச் சிலருள் ஒருவரையோ பலரையோ ஆசான், குரு என்று தினம் தேடி ஏற்கிறோம். சில நேரம் தேடியது கிடைக்கிறது. பல நேரம் தேடி வந்ததே மறந்து விடுகிறது. 'எதை அறிவது' என்பது புரியவேண்டும். 'யாரிடம் அறிவது' என்பதும்.
['ஓவியம் என்றால் என்னவென்று தெரிந்தவர் இல்லையடா, குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா' - கண்ணதாசன்]
"தன்னறிவு நுட்பமானது. தூய்மையானது. பரந்தது. ஆழமானது. இதை நூல்களிலும் மேடைகளிலும் காண முடியாது. படித்தறிவதல்ல. பேசியோ விவாதித்தோ அறிவதல்ல. இதைப் பற்றிய கட்டுரைகள் இல்லை. கவிதைகள் இல்லை" என்றான் எமன்.
"தன்னறிவை எப்படிப் பெறுவது? யாரிடம் பெறுவது?" என்றான் நசிகேதன்.
"தன்னறிவைப் பெறுவது எளிதல்ல. தன்னறிவில்லாதவர்களிடம் இதைத் தேடிப் பெற முடியாது. இவர்கள் போலிகள். கண்மூடித்தனத்தை வளர்ப்பவர்கள். தானும் அறியாமல் பிறரின் அறிவுத் தேடலையும் அழிப்பவர்கள். பிழையான அறிவை வழங்கும் இவர்களிடம் தன்னறிவைப் பெற முடியாது.
தன்னறிவைத் தேடுவோர் அதன் நுட்பத்தைப் புரிந்து கொண்டவர்கள். அதைப் பெறுவதற்காக பயிற்சியில் ஈடுபட்டவர்கள். யோகிகள். புலனடக்கி, உள்ளிருக்கும் தீயை வளர்த்து, அறிவைக் காண முனைப்பாக இருப்பவர்கள். உழைப்பவர்கள். இருப்பினும், தன்னறிவின் நுட்பத்தை வியந்து அஞ்சும் இவர்களாலும் தன்னறிவுக்கான வழிகாட்ட முடியாது.
பொறிவாயில் ஐந்தவித்துப் பொய்தீர் ஒழுக்க நெறி கற்றவர்கள் ஒரு சிலர். இவர்களுள் ஆன்மாவை அடையாளம் கண்டு, ஆன்மாவைப் பற்றிய அறிவை, தன்னறிவை, முழுதும் அறிந்தவர்கள் இன்னும் மிகச்சிலர். தன்னறிவின் மேன்மை அறிந்து, அதை முறையாக வெளிப்படுத்தவும், பிறருக்கு உணர்த்தவும், வழிகாட்டவும் தெரிந்த இத்தகைய ஞானிகளிடமே தன்னறிவுக்கான பாடமும் பயிற்சியும் பாதையும் பெற வேண்டும்" என்றான் எமன்.►
7 கருத்துகள்:
தன்னறிவு பற்றி மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள். மனிதர்களில்தான் எத்தனை வகையினர்! சகிப்புத்தன்மையும், பொறுமையும், விருப்பமும் இருந்தால் எல்லா வகையினரையும் ரசிக்கலாம்.
//'எதை அறிவது' என்பது புரியவேண்டும். 'யாரிடம் அறிவது' என்பதும்.// இந்த ஒரு வாசகம் திருவாசகம்.
யமன், நசிகேதன் உரையாடல்கள் மிகவும் அற்புதமாகவும், ஒரு சிறந்த ஆசிரியர், மாணவருக்குமான இலக்கணமுமாக விளங்குகிறது.
கண்ணதாசனின் வரிக்கு ஒரு கட்டுரையே எழுதலாம்.
அறிஞர்களின் பலவிதங்களைப் பற்றிய உங்கள் வரிகள் பிரமாதம்.
நிறைய புதிய தமிழ் வார்த்தைகளும் அதன் எளிய பொருளும் இங்கே கிடைக்கிறது .... .. ஓரு வார்த்தை சொல் நயத்தற்கு வெண்பாவிற்கு தேவை அதே வார்த்தை பொருள் நயத்திற்கும் கை கொடுக்க வேண்டும் . அந்த வார்த்தை காலத்தால் பயன் பட்டிருக்க வேண்டும் நவீன காலத்தில் இப்படி எடுத்தாளுவது கடினம்...
//அகலம் கண்டு, ஆழம் தொலைத்தவர்கள் // நல்ல சாடல்
தன்னறிவு சாதாரண விஷயமல்ல என்பது பொட்டில் அறைய புலப் படுகிறது .
நன்றி meenakshi, ஸ்ரீராம், பத்மநாபன், ...
சின்னதாய் ஒரு வெகேஷன் போய் வருவதற்குள், சில வெண்பாக்கள் கடந்து விட்டன. எல்லாவற்றையும் படித்துவிட்டேன். நன்றாக போய் கொண்டிருக்கிறது.
"நானும் என் கடவுளும்"கருத்துக்கு டிட்டோ....
அறிஞர்கள் பற்றின அலசல் மிகத் தெளிவு அப்பாதுரை சார்.. தான் கொஞ்சம் புத்திசாலி என்று நினைத்துக் கொண்டு இதைப் படிப்பவர்கள், தன்னைத்தான் சொல்கிறாரோ என்று அரண்டு போவது நிஜம்(மக்காக இருக்கேனோ பிழைச்சேனோ!) தன்னறிவு.. சிந்திக்கத் தூண்டும் விளக்கம்.. வெண்பாவோ இதம் தரும் தென்றலாய்....
வருக Nanum, மோகன்ஜி, ...
கருத்துரையிடுக