வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/04/05

நூற்பயன், நன்றி


நசிகேத நூலிது நன்னெறிக் கேணி
பசித்தவர்க்கு அன்னமழை போன்றாம் - உசிப்பொருளை
தப்பா துரைத்தேன் இருதாய்க்கும் ஏனோர்க்கும்
அப்பா துரையின் அகம்.

   சிகேதன் கதையை விளக்கும் இந்நூல், நெறிகளுக்கான ஊற்று. பசித்தோர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. மெய்யறிவின் நுண்மையைப் பிறழாது சொல்லியிருக்கிறேன். என்னைப் பெற்ற இரண்டு தாய்களுக்கும், (தொடர்ந்து படித்த) அனைவருக்கும் (இந்த) அப்பாதுரையின் ஆன்மாவில் பங்குண்டு.


உசிப்பொருள்: நுட்பம், மெய்யறிவு
அகம்: ஆன்மா, மனம், உயிர்    சிகேத வெண்பா மனித நேயத்தையும் நெறிகளையும் விளக்கும் வற்றாத நீரூற்று போன்றது. பசித்துக் கிடப்போர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. நசிகேதன்-எமனுடனான உரையாடலைப் பல முறை படித்துப் பயனடையலாம். அவையோர் முன் நசிகேதன் உரைத்தது எமனிடம் அவன் பெற்ற அறிவின் சாரம். மரணம் பற்றிய அறியாமையையும் அவை தொட்டக் கண்மூடித்தனங்களையும் ஒழிக்க நசிகேத வெண்பா ஒரு அறிவுக்கருவி. மெய்யறிவுக்கானத் திறவுகோல்.

கடோபனிஷது நூலில் நான் கற்ற மெய்யறிவின் நுண்மையினை, நசிகேத வெண்பா எனும் இத்தமிழ் நூலின் வழியாகப் பிழையில்லாது எடுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கும் தமிழுக்கும், தளராமல் என்னுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும், நன்றி.

தொடர்ந்த வாசிப்புக்கும் ஆதரவுக்கும், சுவையாகச் சிந்திக்க வைத்த அறிவார்ந்த பின்னூட்டக் கலந்துரையாடலுக்கும், கடன் பட்டிருக்கிறேன். வற்றாத நன்றிப் புனலை உங்கள் முன்வைத்து அவையடங்கி விடைபெறுகிறேன்.

தாயையும் தமிழையும் போலவே, என் ஆசான்களுக்கும், உங்களுக்கும் என் உயிரில் இடமுண்டு. ஆன்மாவில் பங்குண்டு.

தமிழ் வாழும் நல்லுலகெங்கும் அமைதி நிலவட்டும்.


//நசிகேத வெண்பா நிறைவுற்றது//


2012/04/04

நூல்முகம், காணிக்கை


அந்தியமும் இந்தியமும் புந்தியவர் சிந்தனைகள்
செந்தமிழின் சந்ததிக்குஞ் சொந்தமென - உந்துவழி
முந்துநூல் மந்திரத்தைத் தந்துரைக்க வந்ததிது
இந்திரா மைந்தன் மொழி.

   ரணம், மனிதம், ஆன்மா பற்றிய அறிஞர்களின் ஆழ்ந்த, மனித உய்வுக்கானத் தத்துவச் சிந்தனைகளைக் கொண்டத் தொன்மையான வேதநூலின் (கடோபனிஷது) கருத்துக்களைத் தமிழ் மக்களுக்குத் தந்திட வந்தது இந்திரா மைந்தனின் நூல் (நசிகேத வெண்பா).


அந்தியம்: மரணம்
இந்தியம்: ஆன்மா
புந்தியவர்: அறிவுள்ளவர்
உந்துவழி: உயர்வுக்கான வழி
முந்துநூல்: பழைய நூல், வேதம் (கடோபனிஷது)    றியாமை, பொதுவாகவே கண்மூடித்தனத்தை வளர்க்கிறது. மரணம் பிறவி பற்றிய அறியாமையோ ஆசையாலும் அச்சத்தாலும் தூண்டப்பட்டு, மதம் சடங்கு போன்றத் தீவிரக் கண்மூடித்தனங்களை வளர்க்கிறது.

மரணம் பிறவி பற்றிய அறியாமையை கண்மூடித்தனங்களால் வளர்த்த அறிவற்ற சாரார், புறச்சக்திகளையும் சடங்குகளையும் போதித்தனர்.

இத்தகைய அறியாமைகளை ஒடுக்க அறிவொளி தேவை. அறிவொளியை அடுத்தவரிடத்திலோ ஆகாயத்திலோ ஆழ்கடலிலோ தேடிப் பயனில்லை. இவற்றை விட விரிந்த ஆழ்ந்த பரந்த அகத்திலே தேட வேண்டும். அகத்தின் ஒளியே அவந்தேடி ஓட்டும், அதனால் வெளியே சிவந்தேடல் வீண்.

பிறப்பிறப்பு தொட்ட அறியாமையை ஒடுக்க எண்ணிய அறிவுள்ளவர்கள் தங்கள் தெளிந்த சிந்தனைகளால் மனிதம், தன்னையறிய வலியுறுத்தினார்கள். தன்னறிவுப் பாதையிலே புறச் சக்திகளுக்கு அவசியமில்லை என்று எடுத்துச் சொன்னார்கள்.

ஆன்மீகம் என்றால் 'தன்னைப் பற்றியத் தெளிவு' என்று பொருள். தன்னைப் பற்றி அறியவும் தெளியவும் புறச் சக்திகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, இடையூறும் கூட என்பதைச் சுவையான எடுத்துக்காட்டுடன் (நசிகேதன் கதை) விளக்கினார்கள்.

கடோபனிஷது எனும் தொன்மையான வடமொழி நூலில் அடங்கியுள்ள மனித உய்வுக்கான இச்சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்காக எடுத்துரைக்க வந்த இந்திரா மகனின் இந்நூல், நசிகேத வெண்பா.

தமிழுக்கும் தமிழருக்கும், தமிழ் போற்றும் அனைவருக்கும், காணிக்கை.2012/04/03

தன்னறிவில் முன்னவன்


89
சின்னமகன் சன்னமறச் சொன்னதமிழ் உன்னியவர்
தன்னறிவில் முன்னனெனப் பன்னுகையில் - மன்னவனோ
இன்னுமிவன் என்னிளவல் அன்றெனவே மன்னவனாய்த்
துன்னுவனே தென்னவனைத் தேர்ந்து.

   யதில் இளையவனான நசிகேதன் தெளிவாக விளக்கிய உண்மைகளை உள்ளத்தில் ஏற்றி ஆராய்ந்து அறிந்த மக்கள், அவனை அறிவிலே மூத்தவன் என்றுப் பாராட்டினர். (இதைக் கவனித்த) மன்னன் வாசனோ, 'இவன் இனியும் என் மகனல்ல, இந்த நாட்டுக்கு மன்னனாக வேண்டியவன்' என்றுத் தீர்மானித்து, தன் தேர்வை எப்படி நிறைவேற்றுவதெனத் தீவிரமாக யோசித்தபடி அழகும் குணமும் நிறைந்த நசிகேதனை நெருங்கினான்.


சின்னமகன்: இளையவன், இளவரசன்
சன்னமற: மறைக்காமல், தெளிவாக
சொன்னதமிழ்: உரைத்த உண்மை
உன்னியவர்: நன்கு சிந்தித்தவர், உணர்ந்தவர்
முன்னன்: முதல்வன், மூத்தவன்
பன்னுகையில்: புகழும் போது (பன்னுதல்: புகழ்ந்து பேசுதல், போற்றுதல்)
துன்னுவனே: நெருங்குவான், அண்டுவான் (துன்னுதல்: தீவிர யோசனையுடன் நெருங்குதல்)
தென்னவன்: அழகன், இளையவன், நெறியுள்ளவன் (நசிகேதன்)    ன் மனதில் தோன்றியச் சிறிய எண்ணம் மெள்ள விரிந்து வலுவடைவதை உணர்ந்த மன்னன் வாசன், தன் அரியணையிலிருந்து எழுந்தான். அவையை நோட்டமிட்டான். ஆங்காங்கே மக்கள் சிறு கூட்டங்களாகச் சேர்ந்து நசிகேதன் சொன்னக் கருத்துக்களைக் கலந்துரையாடினர். சிலர் ஆவேசமாக வாதாடினர். சிலர் அமைதியாக உரையாடினர். சிலரது முகங்களில் மிகுந்த அமைதியும் பொலிவும் கண்டான். சிலரது முகங்களில் தீவிரத் தேடல்களின் சின்னங்களைக் கண்டான்.

சிலர் அவனருகே வந்து, "மன்னா! உங்கள் மகன் பெரிய ஞானி. அவனைச் சிறுவன் என்று எண்ண முடியவில்லை. வயதில் எங்களை விட இளையவனே தவிர, அறிவில் எம் எல்லோரையும் விட மூத்தவனய்யா உம் புதல்வன். சிறந்த தலைவன். சொர்க்கத்தை மண்ணுக்குக் கொண்டு வந்த செம்மல்!" என்று பலவாறுப் புகழ்ந்தனர்.

நசிகேதனைப் பார்த்தான்.

அவையினர் இன்னும் நசிகேதனைப் புகழ்ந்தபடி இருந்தனர். அவனைச் சுற்றி ஒரு கூட்டம். சிலர் அவனை வணங்கினர். சிலர் அவனிடம் பேசிக்கொண்டிருந்தனர். சிலர் ஐயங்கள் கேட்டனர். சிலர் புகழ்ந்து பாடினர்.

அவையோர் எண்ணங்களையும் பேச்சையும் புரிந்து கொண்ட மன்னன் வாசன், 'இவனை மகனாகப் பெற நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இல்லை இல்லை. இவனை மகனாகப் பெற்றதால் நான் செய்த பாவங்கள் தொலைந்தன. என் கண்களைத் திறக்க வந்தவன். என்னால் என் மக்களின் உடலை வளர்க்க உதவி செய்ய முடியும். இவனால் அவர்கள் தங்கள் வாழ்வின் பொருளையறிய முடியுமே? இவனல்லவோ அரசாளத் தகுதியானவன்?' என்று எண்ணினான்.

மன்னன் வாசன் மெள்ளக் கூட்டத்தின் முடிவில் நுழைந்து நசிகேதனை நோக்கி முன்னேறினான். "இந்தச் சிறுவன் இவ்வுலகின் தலவன். இவனை இனியும் என் பிள்ளையாக, இளவரசனாக எண்ணுவது பொருந்தாது. இவனுடைய தலைமை எனக்கும், என் மக்களுக்கும், இந்த நாட்டுக்கும் தேவைப்படுகிறது. இவன் சிறந்த மன்னனாவான்" என்று நினைத்தபடி நசிகேதனருகே சென்றான் வாசன்.

நசிகேதனின் அண்மையில் வந்ததும் வாசன் சற்றுத் தயங்கினான். "பற்றறுத்தல் பற்றிப் பேசியவன் பதவியை விரும்பி ஏற்பானா? மறுத்து விட்டால்? இந்த மக்களின் அறிவுக்கண்களைத் திறந்தது போதும் என்று இருந்து விட்டால்? அனைவர் முன்னிலையில் என் விருப்பத்தை நிராகரித்து விட்டால் எனக்கு அவமானமாயிற்றே?" என்று நினைத்தான்.

அடுத்தக் கணங்களில் தானே முனைப்பானான். "இருக்காது. மக்களின் நலனில் அக்கறை உள்ளவன். நசிகேதனால் என் நாட்டு மக்களுக்கு மட்டுமா உய்வு? இவனுடைய அறிவும் அமைதிப் போக்கும் உலகுக்கே நல்லதாயிற்றே? அரசபதவியில் இவனால் மேலும் சாதிக்க முடியும். நிச்சயம் பதவியை ஏற்றுக் கொள்வான். அப்படியே ஏற்காவிடினும் அவமானம் இல்லை. ஏற்றாலோ அனைவரையும் போல் மகிழ்வேன்" என்று அமைதியானான்.

மன்னன் வாசனுக்குத் தான் புரிய வேண்டியது புரிந்தது. நிறைந்த மனதுடன் நசிகேதனை நெருங்கினான்.

நான்காம் பகுதி முற்றும்

2012/04/01

மரண ரகசியம்


88
புலனைந்தும் பூட்டிப் புறமாறும் போக்கப்
பலனேழும் எட்டுமென்ற புத்தன் - புலப்பகையில்
தன்னறிவும் ஒன்றிநிற்கும் உன்மனியின் உத்தமத்தை
நன்றுரைத்தே நின்றான் நயந்து.

   ந்து புலன்களையும் கட்டி ஆறு புறங்களையும் மறந்த யோகத்தில் ஏழு பலன்களையும் அடையலாம் என்ற ஞானி (நசிகேதன்), ஐம்புலன்கள் அடங்கிய நிலையில் அறிவையும் அடக்கும் (சமாதியெனும்) பெரும் யோக நிலையின் சிறப்பை மிகுந்த விருப்பத்தோடு தெளிவாக (அவையறிய) விளக்கினான்.


புலனைந்து: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்து உணர்ச்சிக் கருவிகள்
புறமாறு: மேல், கீழ், இடம், வலம், முன், பின் எனும் நம்மைச் சுற்றிய ஆறு புறங்கள்
பலனேழு: ஒழுக்கம், மலமொழிப்பு, உடல்நலம், மனநலம், பற்றறுப்பு, பக்குவம், மெய்யறிவு எனும் ஏழு பலன்கள்
புத்தன்: பேரறிவு பெற்றவன் (நசிகேதனைக் குறிக்கும்)
புலப்பகை: ஐம்புலன்களை அடக்கிய நிலை
உன்மனி: அனைத்தையும் அடக்கிய யோக நிலை    கிழவி மறைந்தத் திசையைக் கவனித்த நசிகேதனுக்கு அவள் யார் என்று புரிந்தது. அவையோருக்குச் சொல்ல வேண்டிய இன்னொரு முக்கியமான பாடம் என்னவென்று புரிந்தது. "இன்னும் நான் சொல்ல வேண்டிய நுண்மை ஒன்று உள்ளது. மனிதகுலம் அறிய வேண்டிய நுட்பம். நம் எல்லோராலும் அறியக் கூடிய நுட்பம். இறப்பைப் பற்றிய உங்கள் கேள்விகளையும் கவலைகளையும் குழப்பங்களையும் போக்கடிக்கும் நுண்மையிதை விளக்குகிறேன்" என்று உற்சாகத்தோடு தொடங்கினான். "முதலில் ஒரு கேள்வி.." என்ற நசிகேதனை ஆவலோடு கவனித்தது அவை.

"என் அருமைத் தந்தையே! அரச குருக்களே! ஞானிகளே! அன்பார்ந்த மக்களே! இதுவரையில் நாம் படித்தப் பாடங்களில் உங்கள் மனதில் நிற்பது என்னவென்று சொல்வீர்களா?" என்றான்.

நசிகேதன் முடிக்கும் முன்னரே, "இருப்பதையெல்லாம் இல்லையென்றாய் எல்லாம் தெரிந்தவன் போல, வேறென்ன?" என்றார் ஒரு மதகுரு.

"சும்மா இருமய்யா. இதுவரை நீர் தான் அப்படிச் சொல்லியிருக்கிறீர் என்பது எமக்கு விளங்கி விட்டது!" என்று அவரை அடக்கினர் ஒரு சிலர்.

சிறிது தயக்கத்துக்குப் பின், "இளவலே! சொர்க்கத்தையும் பிறவாமையும் வேள்விகள் தரா. நம் மனதின் ஒழுக்கமே மேன்மையறியும் வேள்வி. முக்திக்கான வேள்வி. மனிதம் பற்றிய அறிவே மேன்மை என்றீர்கள்" என்றார் ஒரு ஞானி.

அவர் அமர்ந்த திக்கை நோக்கி வணங்கினான் நசிகேதன்.

"அய்யா! சொர்க்கம் நரகம் என்று தனியாக எதுவுமில்லை. இங்கேயே இருப்பது தான் சொர்க்கமும் நரகமும் என்றீர்கள்!" என்றார் இன்னொருவர்.

தயக்கம் விலகி, அவையினர் பலர் தங்கள் கருத்தைச் சொல்லத் தொடங்கினர்.

"பிறப்பும் இறப்பும் தோன்றி மறையும் சூரியனைப் போன்ற சுழற்சி. ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்கான பயணமே பிறவி"

"நம்முடைய உடலும் மனமும் இயல்பில் புறத்தையே நாடுகிறது. அவற்றை அடக்கி ஒடுக்குவதே சொர்க்கத்தின் திறவுகோல்"

"உறங்கும் நிலையில் புலன்களை மறந்திருப்பது போலவே உறங்காத நிலையிலும் புலன்களைக் கட்டப் பயிற்சி செய்ய வேண்டும்"

"ஓட்டைப் பையான இந்த உடல் அழியும் முன்பே மனதைச் சுத்தமாக்கி மேன்மை பெற வேண்டும்"

"இருமைகளின் ஒருமையை அறிந்தால் அமைதி காண முடியும்"

"ஆன்மாவை அறிவதால் அனைத்து ஒளிகளையும் அறியச் செய்யும் பேரொளியை அறியலாம்"

"நன்று!" என்று அவர்களை வணங்கினான் நசிகேதன்.

"இன்னும் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பீர்களா? அல்லது முக்கியமான பாடமென்று சொல்ல வந்ததைச் சொல்லப் போகிறீர்களா?" என்றார் ஒரு அரசகுரு.

நசிகேதன் புன்னகைத்தான். "அன்பர்களே! இதுவரை நான் உரைத்தவற்றை மிக ஆவலோடும் பொறுமையோடும் கேட்டுப் புரிந்து கொண்டு என் ஆசானுக்குப் பெருமை சேர்த்தீர்கள். உங்களுக்கு என் நன்றி!" என்று வணங்கினான். தொடர்ந்தான். "ஐந்து, ஆறு, ஏழு என்பதை நினைவில் வையுங்கள். ஐந்து புலன்கள், ஆறு புறங்கள், ஏழு பலன்கள்.

"மெய், வாய், கண், மூக்கு, செவியெனும் புலன்களைப் பற்றியும் அவற்றின் இயல்புகளையும் அறிந்தோம். பிறப்பிற் திறக்கும் புறத்தே தறிக்கும் உறுப்பு என்றோம். இறக்கும் வரையிலும் புறத்தையே இயல்பாக நாடுகின்றன. அதனால் அவை புலனுகர்ச்சிக்கானக் கருவிகளாகவே இயங்குகின்றன.

நம்மைச் சுற்றி ஆறு புறங்கள் உள்ளன. நமக்கு மேல், கீழ், இடம், வலம், முன், பின் எனும் இந்த ஆறு புறங்களின் ஊடுறுவல்கள் புலனுகர்ச்சியாகப் பரவுகின்றன. நம்மைச் சுற்றிய நிகழ்வுகளின் நாயகர்கள் நாமே. இயக்குனர்கள் நாமே. இயங்குவோரும் நாமே. அதனால் உண்டாகும் பலன்களை நுகர்வோரும் நாமே. மகிழ்வோரும் நாமே. மனமுடைந்து வருந்துவோரும் நாமே. இது மாயச் சுழற்சி. இந்த நுகர்ச்சிகளின் விளவாக ஆசை, பாசம், பந்தம், பொறாமை, பகை எனப் பலவாறு சிக்கித் தவிக்கிறோம்.

இவ்வாறு ஐந்தும் ஆறும் நம்மைப் பெரும் துயரப்பாதையில் கொண்டு சென்றன. செல்வன. செல்லக்கூடியன. இவற்றை அறிந்து அடக்க வேண்டும். அடங்க வேண்டும். ஐந்து புலன்களையும் கட்டி ஆறு புறங்களையும் மறக்க மூச்சடக்கிப் பழக வேண்டும் என்றேன். தொடர்ந்தப் புலனடக்கப் பயிற்சியின் விளைவாக ஐந்தையும் ஆறையும் ஒன்றாக்கிக் கட்டி, ஓரத்தில் போட முடியும். புலன் கட்டிய புறம் மறந்த அகத்தை அறிய வேண்டும்.

தொடர்ந்தப் பயிற்சியினால் நாம் ஏழு வகைப் பலன்களைப் பெற முடியும். நாம் நம் புலன்களைக் கட்டுவதானால் ஒழுங்குறுகிறோம். புலனுகர்ச்சித் தேடல்களின் நன்மை தீமைகளை அறியத் தொடங்குகிறோம். அந்த அறிவின் பயனாக, ஆசை கோபம் பொறாமை போன்ற தீக்குணங்கள் தாமாகவே வெளியேறுகின்றன. புலன்களைக் கட்டியதால் உடல்நலமும், மலங்கள் வெளியேறிதால் மனநலமும், கூடுகிறது. இவற்றின் தொடர்ந்த பாதிப்பினால் தீக்குணங்கள் மட்டுமல்லாது அவை உருவாகத் தூண்டுதலாக அமையும் பந்தம் பாசம் சுயநலம் போன்ற பற்றுகள் மறையத் தொடங்குகின்றன. இருமைகளில் ஒருமையைக் காணும் பக்குவம் வளர்கிறது. பக்குவம் வளர்ந்து மனதில் பெரும் அமைதி உண்டாகிறது. தொடர்ந்த அமைதியின் பலனாக, தன்னறிவு எனும் மெய்யறிவைப் பெற முடிகிறது.

சுழத்தி எனும் உறக்க நிலை பற்றி முன்னர் சொன்னேன். புலன் புறம் அடங்கிய நிலைக்கு எடுத்துக்காட்டான உறக்க நிலை. அந்நிலையில் புலன்கள் இயங்குவதில்லை. புறங்கள் அன்னியமானவை. பெரும் அமைதியான நிலையில் உடல் அடங்கி மனம் அடங்கி நிற்கிறது.

மெய்யறிவைப் பெறுவதும் அது போன்ற செயலே. உறங்காத நிலையிலும் புலன்களைக் கட்டி, புறங்களை மறந்து, ஆழ்ந்த அமைதியிலே மெய்யறிவைத் தேடி ஆன்மாவை அறியும் யோக நிலை.

உறக்க நிலையில் அறிவு தொடர்ந்து இயங்குகிறது. யோக நிலையிலே அறிவையும் அடக்கி, புலன் புறம் அறிவு என மூன்றும் அடங்கிய நிலையில் ஆன்மாவுடன் ஒன்றாகி இணைந்த அமைதியான நிலைக்குச் சமாதி என்று பெயர்.."

"ஐயா.. அது இறந்தவர்களுக்கு வழங்கும் பெயர் அல்லவா?" என்றார் ஒருவர்.

"இந்தப் பிள்ளை சொல்வதைக் கேட்டால் நமக்கு என்னவாகும் என்று தெரிந்தால் சரிதான்!" என்றார் ஒருவர்.

"சும்மா இருமய்யா. இளவலே, நீங்கள் தொடருங்கள். சமாதி அடைந்தவர்களை உணர முடியும் அறிய முடியும் என்று சொல்வார்களே? சமாதியில் இருப்பவர்கள் உண்மையில் இறக்கவில்லை என்றுகூடச் சொல்கிறார்களே?"

நசிகேதன் தொடர்ந்தான். "நீங்கள் சொல்வது உண்மையே. இறந்தவர்களைச் சிலநேரம் அப்படி வழங்குகிறோம். சமாதி அடைந்தவர்கள் இறக்கவில்லை என்றும் சொல்கிறோம். பிறந்தவர்கள் இறப்பதும் இறந்தவர்கள் பிறப்பதும் பயிரின் சுழற்சி போன்றது என்பதை நாமறிவோம். அதனால் இறந்தார்களா என்ற கேள்வியை ஒதுக்குவோம்.

பிறப்பையும் இறப்பையும் புரிந்து கொள்ள முடியாமல் அதை மாபெரும் சக்தியொன்றின் செய்கை என்று கண்மூடுகிறோம். இறப்புக்கு அஞ்சி வேள்விகள் புரிகிறோம். பிறப்பை வேண்டி வேள்விகள் புரிகிறோம். பிறப்பிலோ இறப்பிலோ அதிசயமில்லை. அச்சமில்லை. மாபெரும் சக்தி ஒன்று உண்டென்றால் அது நம்முள் இருக்கிறது என்பதன் எடுத்துக்காட்டே சமாதி எனும் யோக நிலையின் விளக்கம்.

உறக்கம் மரணத்தின் முன்னோட்டம் என்பார்கள். ஏன்? உறங்கும் நிலையில் நம்மைச் சுற்றிய நிகழ்வுகளை அறிய முடியாது. நம் உணர்வுகள் அடங்கி விடுகின்றன. விழித்தெழும் உத்தரவாதம் இல்லை. அந்நிலையில் மூச்சு மட்டுமே உறக்கத்துக்கும் மரணத்துக்குமானப் புற வேறுபாடாக இருக்கிறது. அறிவு மட்டுமே உறக்கத்துக்கும் மரணத்துக்குமான அக வேறுபாடாக இருக்கிறது. அவற்றையும் அடக்க முடிந்தால்?

அதுவே அக மேன்மை. சமாதியெனும் அக மேன்மை. மனிதம் மரண ரகசியத்தை அறியும் மகத்தான தருணம். புலன்களையும் புறங்களையும் கட்டி அறிவையும் அடக்கி அகத்துள் உழலும் ரகசியம். அதில் அச்சமேதும் இல்லை. அமைதியே உண்டு.

மிக உன்னதமான யோக நிலையைப் பழகியவர்களே இதை அறிய முடியும். எல்லாம் அடங்கிய நிலையிலே எல்லாம் தொடங்குகிறது! எல்லாம் அடங்கிய நிலையில் எல்லாம் தொடங்கும் ஒருமையை அறிய முடிவது எத்தனை மகத்தானது!

இந்தச் சக்தியை மனிதம் உணர முடியும். எனினும், நமக்குள் அடங்கியிருக்கும் மாபெரும் சக்தியை அறிய முடியும், நம்முள்ளிருக்கும் அனைத்தையும் அடக்கும் சக்தியை அறிந்து.. விரும்பினால், அதற்குள் அடங்க முடியும் என்பதே சமாதி நிலையின் மெய்ப்பொருள்.

இச்சக்தி மனிதத் தேடலுக்குட்பட்டது என்பதே மகத்துவமான உண்மை. அதுவே மெய்யறிவு. மனிதரைக் காட்டிலும் தெய்வமில்லை எனும் மகத்துவம்" என்றான்.

உரையை முடித்த நசிகேதன், தன் ஆசானை எண்ணி நீண்ட அமைதி காத்தான். அவையோரை வணங்கி நின்றான்.

அமைதியாக இருந்த அவையில் திடீரென்று ஒலிவெள்ளம். நசிகேதனின் கருத்துக்களை விவாதிக்கத் தொடங்கினர். பலர் நசிகேதனை வணங்கினர். பாராட்டினர். "எம்மை உய்ப்பிக்க வந்த உத்தமரே!" என்று அவனை உச்சிமோந்து களித்தனர்.

நசிகேதனின் உரையைக் கேட்டும், அவையினரின் போக்கைக் கண்டும், அகமகிழ்ந்த வாசனின் மனதில் பெரும் அமைதி நிலைவியது. சிறு எண்ணம் உதித்தது.