வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2012/04/05

நூற்பயன், நன்றி


நசிகேத நூலிது நன்னெறிக் கேணி
பசித்தவர்க்கு அன்னமழை போன்றாம் - உசிப்பொருளை
தப்பா துரைத்தேன் இருதாய்க்கும் ஏனோர்க்கும்
அப்பா துரையின் அகம்.

   சிகேதன் கதையை விளக்கும் இந்நூல், நெறிகளுக்கான ஊற்று. பசித்தோர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. மெய்யறிவின் நுண்மையைப் பிறழாது சொல்லியிருக்கிறேன். என்னைப் பெற்ற இரண்டு தாய்களுக்கும், (தொடர்ந்து படித்த) அனைவருக்கும் (இந்த) அப்பாதுரையின் ஆன்மாவில் பங்குண்டு.


உசிப்பொருள்: நுட்பம், மெய்யறிவு
அகம்: ஆன்மா, மனம், உயிர்



    சிகேத வெண்பா மனித நேயத்தையும் நெறிகளையும் விளக்கும் வற்றாத நீரூற்று போன்றது. பசித்துக் கிடப்போர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. நசிகேதன்-எமனுடனான உரையாடலைப் பல முறை படித்துப் பயனடையலாம். அவையோர் முன் நசிகேதன் உரைத்தது எமனிடம் அவன் பெற்ற அறிவின் சாரம். மரணம் பற்றிய அறியாமையையும் அவை தொட்டக் கண்மூடித்தனங்களையும் ஒழிக்க நசிகேத வெண்பா ஒரு அறிவுக்கருவி. மெய்யறிவுக்கானத் திறவுகோல்.

கடோபனிஷது நூலில் நான் கற்ற மெய்யறிவின் நுண்மையினை, நசிகேத வெண்பா எனும் இத்தமிழ் நூலின் வழியாகப் பிழையில்லாது எடுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கும் தமிழுக்கும், தளராமல் என்னுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும், நன்றி.

தொடர்ந்த வாசிப்புக்கும் ஆதரவுக்கும், சுவையாகச் சிந்திக்க வைத்த அறிவார்ந்த பின்னூட்டக் கலந்துரையாடலுக்கும், கடன் பட்டிருக்கிறேன். வற்றாத நன்றிப் புனலை உங்கள் முன்வைத்து அவையடங்கி விடைபெறுகிறேன்.

தாயையும் தமிழையும் போலவே, என் ஆசான்களுக்கும், உங்களுக்கும் என் உயிரில் இடமுண்டு. ஆன்மாவில் பங்குண்டு.

தமிழ் வாழும் நல்லுலகெங்கும் அமைதி நிலவட்டும்.


//நசிகேத வெண்பா நிறைவுற்றது//


2012/04/04

நூல்முகம், காணிக்கை


அந்தியமும் இந்தியமும் புந்தியவர் சிந்தனைகள்
செந்தமிழின் சந்ததிக்குஞ் சொந்தமென - உந்துவழி
முந்துநூல் மந்திரத்தைத் தந்துரைக்க வந்ததிது
இந்திரா மைந்தன் மொழி.

   ரணம், மனிதம், ஆன்மா பற்றிய அறிஞர்களின் ஆழ்ந்த, மனித உய்வுக்கானத் தத்துவச் சிந்தனைகளைக் கொண்டத் தொன்மையான வேதநூலின் (கடோபனிஷது) கருத்துக்களைத் தமிழ் மக்களுக்குத் தந்திட வந்தது இந்திரா மைந்தனின் நூல் (நசிகேத வெண்பா).


அந்தியம்: மரணம்
இந்தியம்: ஆன்மா
புந்தியவர்: அறிவுள்ளவர்
உந்துவழி: உயர்வுக்கான வழி
முந்துநூல்: பழைய நூல், வேதம் (கடோபனிஷது)



    றியாமை, பொதுவாகவே கண்மூடித்தனத்தை வளர்க்கிறது. மரணம் பிறவி பற்றிய அறியாமையோ ஆசையாலும் அச்சத்தாலும் தூண்டப்பட்டு, மதம் சடங்கு போன்றத் தீவிரக் கண்மூடித்தனங்களை வளர்க்கிறது.

மரணம் பிறவி பற்றிய அறியாமையை கண்மூடித்தனங்களால் வளர்த்த அறிவற்ற சாரார், புறச்சக்திகளையும் சடங்குகளையும் போதித்தனர்.

இத்தகைய அறியாமைகளை ஒடுக்க அறிவொளி தேவை. அறிவொளியை அடுத்தவரிடத்திலோ ஆகாயத்திலோ ஆழ்கடலிலோ தேடிப் பயனில்லை. இவற்றை விட விரிந்த ஆழ்ந்த பரந்த அகத்திலே தேட வேண்டும். அகத்தின் ஒளியே அவந்தேடி ஓட்டும், அதனால் வெளியே சிவந்தேடல் வீண்.

பிறப்பிறப்பு தொட்ட அறியாமையை ஒடுக்க எண்ணிய அறிவுள்ளவர்கள் தங்கள் தெளிந்த சிந்தனைகளால் மனிதம், தன்னையறிய வலியுறுத்தினார்கள். தன்னறிவுப் பாதையிலே புறச் சக்திகளுக்கு அவசியமில்லை என்று எடுத்துச் சொன்னார்கள்.

ஆன்மீகம் என்றால் 'தன்னைப் பற்றியத் தெளிவு' என்று பொருள். தன்னைப் பற்றி அறியவும் தெளியவும் புறச் சக்திகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, இடையூறும் கூட என்பதைச் சுவையான எடுத்துக்காட்டுடன் (நசிகேதன் கதை) விளக்கினார்கள்.

கடோபனிஷது எனும் தொன்மையான வடமொழி நூலில் அடங்கியுள்ள மனித உய்வுக்கான இச்சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்காக எடுத்துரைக்க வந்த இந்திரா மகனின் இந்நூல், நசிகேத வெண்பா.

தமிழுக்கும் தமிழருக்கும், தமிழ் போற்றும் அனைவருக்கும், காணிக்கை.



2010/11/19

நூல் அறிமுகம்

    டோபனிஷது கி.மு 400-200ல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. பல செய்யுட்கள் நேராகவும் மேற்கோள்களாகவும் கீதையில் காணப்படுவதால், இந்நூல் மகாபாரதக் காலத்தினின்றும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. சிறுவன் நசிகேதன் எமனைச் சந்தித்து வரம் பெறும் விவரங்கள் நூலின் முதல் மூன்று பகுதிகளிலும், தன்னறிவு பெறும் வழிமுறைகள் கடை மூன்று பகுதிகளிலும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

கடோபனிஷதக் கதைச் சுருக்கத்தையும் பகுதிச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். பகுதிச் சுருக்கத்தைத் தொடர்ந்து, பகுதியின் சிறப்பை (என் கணிப்பில்) எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அனுபவிக்க வேண்டிய கருத்தாழங்கள் இவை.

கதைச்சுருக்கம்: பேரின்பம் அடையப் பேராசை கொண்ட மன்னன், ஆத்திரத்தின் விளைவால், தன் ஒரே மகனை வேள்வியில் மரணதேவனுக்குத் தானமாகக் கொடுக்கிறான். மனித இளவரசனோ மரணதேவனிடமே மெய்யறிவு பெற்றுச் சிறப்போடுத் திரும்புகிறான். இச்சம்பவங்களின் பின்னணியில் இடம்பெறும், அறிவுச்சுடரான இளைய நிலாவுக்கும் ஆசிரியனான மரணதேவனுக்கும் இடையிலான உரையாடலே கடோபனிஷது.

பகுதி 1: விண்ணுலகப் பேரின்பங்களை அடைய விரும்பிய மன்னன் வாசஸ்ரவசு, விஸ்வஜித் எனும் பெரிய வேள்வியைச் செய்கிறான். யாகத்தில் தன் சொத்துக்களைத் தானமும் தியாகமும் செய்து வருகையில், தன் ஒன்பது வயது மகன் நசிகேதனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுமையில்லாத நிலையில் மகனையே தியாகம் செய்வதாக வாக்களித்து விடுகிறான். தன் அவசரத்தையும் ஆத்திரத்தையும் எண்ணி வருந்துகிறான். தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நசிகேதன் எமனுலகம் போகிறான். எமனிடம் வரம் பெற வாய்ப்பு கிடைக்கிறது. உலகச் சொத்துக்களையும் இன்பங்களையும் வரமாகத் தருவதாகச் சொன்ன எமனிடம், தனக்கு மரணத்தைப் பற்றிய அறிவைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறான். நசிகேதனின் மனப்பக்குவத்தையும் தீர்மானத்தையும் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு மரண அறிவையே வரமாகப் போதிக்கத் தொடங்குகிறான்.

பகுதியின் சிறப்பு: மெய்யறிவு பெற மாணவனுக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆசிரியர் சோதிக்கும் கட்டங்களின் வழியாக உடல், உயிர், உலகம், செல்வம், ஆசை இவற்றைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் வற்றாத அறிவுக்கேணி.

பகுதி 2: "நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற நுட்பமானக் கேள்வியுடன் நசிகேத போதனையைத் தொடங்கும் எமன், இருநிலை-எதிர்நிலைத் தன்மையதாய் இயற்கையிலேயே தோன்றும் இருள் ஒளி, இன்பம் துன்பம், அறிவு அறியாமை போன்றவற்றின் ஒருமைத் தன்மையினை விவரிக்கிறான். அறிஞர்-அறிவிலி இருதரப்பினரையும் அடையாளம் காட்டுகிறான்.

பகுதியின் சிறப்பு: காரண-காரியத் தொடர்பும் தொடர்பின்மையும் மிகச் சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'இறப்பும் இல்லை இறப்பவனும் இல்லை' எனும் ஆழ்ந்த வேதாந்தம் கீதையில் அப்படியே வருகிறது. விளைவிலிருந்துச் செயலை வேறாகக் காணும் பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்நிலைகள் போல் தோன்றும் இருளும் ஒளியும் ஒன்றிலிருந்தே தொடங்குவதால் அவற்றை ஒன்றெனக் கருதிச் செயல்படும் மனப்பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது.

"நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற எமனின் கேள்வியே உலகின் மிகப் பிரபல வேதாந்தக் கேள்வியாகும். கடோபனிஷதச் சமகாலச் சாக்ரேட்ஸ், பின்னாள் அரிஸ்டாடில் போன்ற வேதாந்திகளும், மதவாதிகளும், தம் எண்ணங்களை வலியுறுத்தப் பயன்படுத்தியக் கேள்வி. இந்நாள் முரண்பாடுகளின் அடிப்படைகளை அறிந்துச் செயல்பட, நாம் பயன்படுத்தக்கூடிய சாதனமுமாகும் இந்தக் கேள்வி.

ஆசிரியர்-மாணவர், அறிஞர்-அறிவிலி பற்றியக் கருத்துக்கள் சிறப்பானவை. சிந்தனையைத் தூண்டுவன.

பகுதி 3: மனித உள்ளத்தின் விழிப்பையும் எழுச்சியையும் உள்ளுக்குள் திருப்பும் தேவை மற்றும் முறைகளைப் போதிக்கிறான் எமன். நசிகேதன் இவற்றை அறிந்து கொண்டு நன்றி சொல்கிறான்.

பகுதியின் சிறப்பு: விழிப்பு என்பது உள்ளுக்குள் ஏற்பட வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக்காட்டியிருக்கும் விதங்களை எத்தனை முறை ரசித்தாலும் திகட்டாது.

பகுதி 4: "உண்மையறிவு என்பதென்ன?" என்று கேட்ட நசிகேதனுக்கு, எமன் உள்ளுணர்வையும் உள்விழிப்பையும் உள்ளெழுச்சியையும் பற்றிப் போதிக்கிறான். உலகறிவுக்கும் உண்மையறிவுக்குமான வேறுபாட்டை அறிகிறான் நசிகேதன்.

பகுதியின் சிறப்பு: மனதை ஒருநிலைப்படுத்தி உள்ளுக்குள் எரியும் தீயை உணர வேண்டிய அவசியம் மீண்டும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பகுதி 5: மரணத்துக்குப் பிறகு உயிருக்கு (ஆத்மா) என்ன ஆகிறது என்பதை மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: 'ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குச் செல்லும் இடைவிடாதப் பயணத்தில், பிறப்பும் வாழ்வும் வழி நிறுத்தங்கள்' என்ற நுட்பமானக் கருத்து விவரிக்கப்பட்டிருக்கிறது. மரணமும் பிறவியும் எதிர்நிலைகள் அல்ல என்ற அறிவு திடீரென்றுத் தாக்கித் திக்குமுக்காட வைக்கிறது.

பகுதி 6: மரணபய வெற்றியின் ரகசியத்தையும் அதையறிய வேண்டிய அவசரத்தையும் மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: நம் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தலைகீழாக மாற்றக்கூடிய வகையில் சில விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருளின் முடிவில் ஒளியைப் பார்த்துப் பழகிய நம் கண்களை, ஒளியின் முடிவில் இருளிருப்பதைக் காணவைக்கிறது.

அமைதிக்கான அறிவையும் மரணதேவனின் அருளையும் பெற்ற நசிகேதன், தன் தந்தையிடமே திரும்பி வருகிறான். நீண்ட நாட்கள் நல்லரசனாகவும் நல்ல மனிதனாகவும் வாழ்கிறான்.

இனி, நசிகேத வெண்பா.