வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/11/28

வாசனின் கொடையில் குறைகண்டான் நசிகேதன்


3
புல்லுணாது நீரும் பருகாது கன்றிவாது
நல்பால் தராதிவா நோகுமன்றோ? செல்வழியின்
பொய்யான நீரோடை யன்றோ வெறுங்கொடை
செய்தோர்கள் சேரும் இடம்?

    ந்தக் *கால்நடைகள் புல்லைப் புசிக்கவோ, நீரைப் பருகவோ, கன்றுகளைப் பெறவோ, பால் சுரக்கவோ இயலாதிருக்கின்றனவே? வெற்றுத் தருமங்கள் புரிவோர் சேருமிடம், வழியில் புலப்படும் கானல் நீரோடைக்கு ஒப்பானதல்லவா?

*தராதிவா: தராத இந்த ஆ; ஆ என்றால் பசு; இங்கே கால்நடைக்கு பொதுவாகி வந்திருக்கிறது.


    றம் செய்யும் பொழுது அது பிறருக்குப் பயன்படத்தகுந்ததாக இருப்பின் கொடுத்தவருக்கும் நன்மை - பெறுவோருக்கும் நன்மை. பகட்டுக்காகப் பொதுநலச் சேவைகள் செய்தால் பெறுபவருக்குப் பலனளித்தாலும், கொடுப்பவருக்கு நிம்மதியோ நிறைவோ கிடைப்பதில்லை. கொடையின் இருபுறமும் மேன்மை என்று ஒரு பொன்மொழி உண்டு. இதை சேக்ஸ்பியர் அருமையாகச் சொல்லியிருக்கிறார்:"the quality of mercy is not strain'd... it is twice blest; it blesseth him that gives and him that takes".

    சிகேதன் மனதில் ஓடிய எண்ணங்கள் இவை. தந்தை தானம் செய்த பசு, குதிரை, ஆடு, யானை போன்ற கால்நடைகளும் படைவிலங்குகளும் சோர்ந்து தளர்ந்து வரண்டு போயிருப்பதைப் பார்த்தான். 'நடப்பதற்கே நோகும் இந்தக் கால்நடைகளை வேள்வித் தானமாகவும் பலியாகவும் கொடுத்துப் பெறக்கூடியப் பேறு எத்தகையதாக இருக்கும்?' என்று எண்ணினான். 'பாசாங்குத் தர்மத்துக்குப் பாசாங்குப் பேறு அல்லவா கிடைக்கும்?' என்று அஞ்சினான். சொர்க்கமே கிடைத்தாலும் அது நிலைக்காது என்று அவனுக்குத் தோன்றியது. அறிவுள்ள பிள்ளை அல்லவா? செயலைக் குறை சொல்லாது, பெற்றவனின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'தருமங்கள் செய்யத் துணிந்திருக்கும் என் தந்தைக்கு அவை பயனற்றுப் போகக்கூடும் என்பது புரியவில்லையே, இதைத் திருத்த முடியுமா?' என்று சிந்தித்தான். அவன் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

2010/11/26

வேள்விப்பலன் குறித்து நசிகேதன் அஞ்சினான்


2
பொன்மா மறைமண்ணும் இன்னும் பலவீந்தும்
பின்னாள் பெறுவானோ பேரின்பம்? என்பிலாப்
பஞ்சாமோ பெற்றவன் ஈகை? பரிதவித்து
அஞ்சும் நசிகேதன் நெஞ்சு.

    பொன், நிலம், விலங்குகள்*, கல்வி* எனும் மண்ணுலகச் செல்வங்களான நான்கினையும் இன்னும் பல செல்வங்களையும் வேள்வித் தியாகமாகவும் தானமாகவும் வழங்கிய அரசன், பிற்காலத்தில் பெற எண்ணும் பேறுகளைப் பெற மாட்டானோ? பஞ்சடைத்த* எலும்பற்றப் பொருள்போல், தன்னைப் பெற்றவனின் தருமங்கள் பயனிழந்து போகுமோ என்று தவித்தது நசிகேதனின் மனம்.

*மா என்பது குதிரை, யானை, எருது, கழுதை போன்ற விலங்குகளைக் குறிக்கும் பொதுச்சொல். இலக்குமி எனப் பசுவுக்கு ஆகிவரும். வீட்டுக் கால்நடை மற்றும் படை விலங்குகளைத் தானமாகவும் பலியாகவும் கொடுப்பது யாக வழக்கம்.
 மறை என்றால் கல்வி. இங்கே வேத அறிவு, மற்றும் வழிபாட்டுப் பயன்களைக் குறிக்கிறது. கல்விப்பயன்களைத் தானமாக வழங்குவதும் வேள்வித்தீயில் இடுவதும் யாக வழக்கம்.
 'பஞ்சடைத்த பொம்மை' என்று ராமாயணத்திலும் வருகிறது. அந்த காலத்திலேயே பஞ்சைப் பிரித்து பொம்மையில் திணிக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் போல் நம் முன்னோர்.
 நாற்பேறு: விண்ணுலகச் செல்வங்கள் நான்கு - இந்திரபதவி, தேவமகளிர் பணிவிடை, சொர்க்க வாழ்வு, இறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் நான்கு - பொன், பசு (விலங்கு), மண், அறிவு. மண்ணுலகப் பேறு, நன்மக்கள்; விண்ணுலகப் பேறு, பிறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும் நன்மக்கள் பெறத் தவம் செய்திருக்க வேண்டும்; விண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும், பிறவாமைக்குத் தவமிருக்க வேண்டும். வசதிக்காக நான் பேறு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும், பேறு-செல்வம் இரண்டுக்கும் மிதமான வேறுபாடு உண்டு: செல்வத்தை சேர்க்க, வாங்க, பெற முடியும்; பேறு பெற உழைப்பும் நல்லெண்ணமும் வேண்டும்.    நேர்வழிப் பயணத்தின் கடுமையும் சோர்வும் தெரிந்தவுடன், அதுவரை மறைந்திருந்த குறுக்கு வழிகள் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படத் தொடங்குகின்றன. குறுக்கு வழியில் செல்வது தவறா இல்லையா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். பல சமயம் எது குறுக்கு வழி, எது நேர்வழி என்றே தெரியாமல் போய்விடுகிறது. இலக்கே கேள்விக்குறியாகும் பொழுது முயற்சியும் பயணமும் கேலிக்குரியதாகி விடுகிறது. வாழ்விலே சரியான இலக்கை அறிந்து தெளியும் பக்குவம் பெற, ஏதாவது பயிற்சி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

பிறர் துன்பத்தையும் ஏமாற்றத்தையும் காணப் பொறாத நல்மனங்கள் எங்கேயும் என்றைக்கும் உண்டு. சிறுபான்மையானாலும், மகான்களின் இலக்கணம் அத்தகைய மனது. இன்ப-துன்ப, சுக-துக்க உணர்வுகளைக் கடந்த நிலையில், பிறர்நல மற்றும் பொதுநல எண்ணங்கள் அலையும் மனது. சிலருக்கு பிறப்பிலேயே அந்தப் பக்குவம் கிடைக்கிறது. பலருக்கு அனுபவங்களால் வளர்கிறது. நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா?

    சிகேதன் இன்னும் பால் மணம் மாறாச் சிறுவன். மற்றச் சிறார்போல் அவனும் ஆடு, மாடு, புலி, யானை என்று பஞ்சடைத்த பொம்மைகளுடன் விளையாடியிருப்பான். அவை பஞ்சடைத்த பொம்மைகள், உயிரில்லாத, எலும்பில்லாத பொம்மைகள் எனப் புரிந்தவன். பொம்மையின் பயன்கள் நீடிக்காதென்ற அறிவு அவனுக்கு இருந்தது. பஞ்சுப் பொம்மைத் தன்மையினவோ என்று நசிகேதன் அஞ்சும்படி, பயனிலாத் தானம் புரிந்தானா வாசன்? குறுக்கு வழியில் பெரும்பேறு அடைய நினைத்தானா? மன்னனின் பேராசையைப் பற்றி மைந்தனுக்கு என்ன கவலை? தனக்குச் சேர வேண்டியவை தானத்தில் போவது கண்டப் பதற்றமா? இல்லை. 'பெற்றவன் பேறு பெறாது ஏமாறுவானோ?' என்றஞ்சியப் பிஞ்சு மனதுள் தன்னலமில்லை. பின், அய்யனின் ஈகையில் என்ன குறை கண்டான் இளவல்? 'ஏமாற்றாதே ஏமாறாதே' எனும் ஏமாற்றச் செயல்-விளைவு வட்டம் அவன் மனதில் சுற்றியதேன்? அப்படி என்ன கவனித்தான்?

2010/11/24

தந்தையின் வேள்வியை நசிகேதன் கவனித்தான்


1
விண்மேவும் நாற்பேறும் வேண்டிய வாசரசன்
கண்போலுங் கிள்ளை நசிகேதன் - மண்ணரசன்
சேர்த்திருந்த நாற்பேறும் வேள்வியில் வீசியதைப்
பார்த்திருந்தான் பால்மணத் தான்.

    வாசன்* என்றொரு அரசன், தன் மகன் நசிகேதனைக் கண்போல் வளர்த்து வந்தான். சொர்க்கவாசம், இந்திரபதவி, தேவமாதர் பணிவிடை, இறவாமை எனும் நால்வகை விண்ணுலகச் செல்வங்களை அடைய விரும்பிய வாசன், மண்ணிலே தான் சேர்த்த நான்கு வகைச் செல்வங்களையும் அண்டவாகை* எனும் வேள்வியிலே வழங்கிக் கொண்டிருந்தான். இன்னும் பால்மணம் மாறாப் பசும்பிள்ளையான நசிகேதன், தன் தந்தையும் அரசனுமான வாசனின் வள்ளன்மையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

*வாசன்: கடோபனிஷதில் அரசனின் பெயர் வாஜஸ்ரவஸ்
 அண்டவாகை: விஸ்வஜித் எனும் யாகம்
 பால்மணத்தான்: குழந்தை, சிறுபிள்ளை    சைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாட்டை நம்மில் எத்தனை பேர் அறிந்து நடக்கிறோம்? நாமறிந்த இன்றையத் தேவைகள் தீர ஆசைப்படலாம். கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படும் நாளைய தேவைகளைத் தீர்த்துக் கொள்ள ஆசைப்படலாம். அறிவுக்குப் புலப்படும் எதிர்காலத் தேவைகளைத் தீர்க்க ஆசைப்படுவதும் முறையே. ஆனால், அறிவுக்கும் புலப்படாதத் தொலைகாலத் தேவைகளை, அனுமானங்களை, தீர்த்துக் கொள்ள ஆசைப்படுவது முறையாகுமா?

    யிருள்ள போது இந்த உலகத்தில் சுகம் பெற நினைப்போர் எளியோர். இறந்தபின் விண்ணுலகிலும் சுகம் அனுபவிக்க நினைத்தான் மன்னன். சொர்க்க சுகம் அனுபவிக்கும் ஆசை முறையென்றே கொண்டாலும், அது நிறைவேற இவ்வுலகச் சொத்துக்களை, இல்லாதாருக்கு பயன்படக்கூடிய சொத்துக்களை, வேள்வியிலிடுவதும் தானம் தருவதும் முறையா? பொறுப்புள்ள மன்னனின், ஒரு குடும்பத் தலைவனின், அறிவுள்ள மனிதனின் செயலாகுமா? தந்தையின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருந்த நசிகேதன் மனதில் என்ன ஓடியது? வள்ளலென்று நினைத்தானா, வேடமென்று நினைத்தானா?

2010/11/21

அறிவணக்கம்


• இயக்கங்களின் பலனாக வேண்டியது அமைதி - இது நெறி.
• இயக்கங்களின் பலனாக விளைவதோ பேராசை, பகை, போர், குழப்பம் - இது நிலை.
• நெறி மறந்ததால் நிலையடைந்தோமா? நிலையடைந்ததால் நெறி மறந்தோமா?

நம் இயக்கங்களுக்கெல்லாம் காரணம் அறிவு. இயக்கங்களின் பயனாக அமைதியைப் பெற, நல்லறிவை வளர்க்க வேண்டும். நல்லறிவை நாடி நசிகேத வெண்பாவைத் தொடங்குவோம். (அறிவணக்கம், ஆசிரியப்பா)


அறிவணக்கம்

ஆதியும் அறிவாகும், அந்தமும் அறிவாகும்!
மேதினி யிதிற்பே ராசையும் பகையும்வீண்
சாதியும் பலசடங்கு போதித்திடும் சமயஞ்செய்ச்
சேதமே எனச்சொல்லும் நீதியைத் தினமோதத்
தீதினித் தொலையட்டும்! தேன்தமிழ் உலகம்
மீதினில் அமைதி மேவித் தங்கட்டுமே!

    ம் இயக்கங்களின் விளைவாக நாம் அமைதிப் பாதையில் போகலாம்; அல்லாத வழியிலும் நடக்கலாம். அமைதியல்லாத வழியில் இன்பங்களைச் சந்திக்கிறோம், துன்பங்களையும் சந்திக்கிறோம். இன்பதுன்பங்களின் பாதிப்பினால் அமைதியை இழக்கிறோம். அமைதிப் பாதையில் இன்ப துன்பங்கள் இல்லையா? உண்டு. அமைதிப் பாதையில் இன்பம் துன்பம் என்ற எதிர்நிலை உணர்வுகள் இல்லை. அமைதிப் பாதை ஒரு இலக்கினை நோக்கிய பயணம். மற்ற பாதை இலக்கற்ற பயணம். கால் போன போக்கில் மனம் போகும் பயணம்.

நம் இன்பதுன்பங்களின் ஆணிவேர்கள் யாவை? ஆசையும் பகையும். ஆணிவேரின் விதை? அறியாமை. இன்பதுன்பங்களைப் பெறச்செய்யும் பொறாமை, முட்டாள்தனம், சினம், பேராசை, சுயநலம் போன்றவை அறியாமையின் வெளிப்பாடுகளே. அறியாமை விழலுக்கு நீர் வார்ப்பது, நம் கண்மூடித்தனம். கண்களை மூடுவதோ, தேவையில்லாத பிரிவினை மற்றும் பழக்கங்கள் பற்றியப் போதனை. இந்தப் போதனை பல வழிகளில் கிடைக்கிறது. இந்தப் போதனையும் அறிவு தான். ஆனால் அறியாமையை வளர்க்கும் போலி அறிவு. பூஞ்செடியில் புல்லுருவி. கண்களை மூடச் செய்யும் போதனைகள் நல்லறிவுத் தேடலா? நாமே தீர்மானிக்க வேண்டும். வேறெந்தப் பிறவியிடமுமில்லாத ஒரு மகத்துவம், மனிதராகிய நம்மிடம் உண்டு. அறிவு. நல்லவை அல்லவை என ஆய்ந்தறியும் பகுத்தறிவு.

பகுத்தறிவு நல்ல உள்ளத்தை வளர்க்கிறது. பிரிவினை பகை பேராசையிலிருந்து விலகி நம்மை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்ல வல்லது. உண்மைகளைத் தேடுவதால் வளர்கிறது. கல்வி, பகுத்தறிவை வளர்க்கிறது. வாழ்க்கையில் பிழைப்புக்காக கற்பது மட்டுமல்ல கல்வி. பிழைப்புக்கான நம் நடத்தைகளின் விளைவை, நம்மையும் நம் சுற்றத்தையும் நாம் வாழும் இந்த வையத்தையும் நம் செயல்கள் தினம் பாதிக்கின்றன என்ற உண்மையை, நீதியை, அறியச் செய்வதே கல்வி. கண்மூடித்தனத்தைக் களையச் செய்வதே கல்வி.

அமைதியைக் குலைக்கும் வழி தவிர்ப்போம் எனச் சொல்வது எளிது; செயலாக்கம் கடினம். விளைவுகளுக்கு நம் செயல்களே காரணம், நம்மைத் தவிர வேறெவரும் காரணமில்லை என்று உணர்ந்தோமானால், அது அறியாமையைக் களையும் முதல் செயல். அமைதிப் பாதையின் முதல் படி. அமைதிக்கேடான வழியில் நம்மைச் செலுத்தும் போதனைகள் - மதமோ சமூகநெறியோ குறுங்கல்வியோ அரசியலோ - எதுவும் நமக்கு வேண்டாம். ஆய்ந்தறியும் உள்ளம் பெறுவோம். அறியாமையில் முளைத்த பேராசை-பகையினை வேரறுப்போம். அறிவை வளர்ப்போம். அமைதியை நாடுவோம்.

தமிழ் பாடும் உலகெங்கும் பகையொழியட்டும். தமிழோசை போல் அமைதி நிலைக்கட்டும்.

2010/11/19

நூல் அறிமுகம்

    டோபனிஷது கி.மு 400-200ல் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. பல செய்யுட்கள் நேராகவும் மேற்கோள்களாகவும் கீதையில் காணப்படுவதால், இந்நூல் மகாபாரதக் காலத்தினின்றும் தொன்மையானதாகக் கருதப்படுகிறது. சிறுவன் நசிகேதன் எமனைச் சந்தித்து வரம் பெறும் விவரங்கள் நூலின் முதல் மூன்று பகுதிகளிலும், தன்னறிவு பெறும் வழிமுறைகள் கடை மூன்று பகுதிகளிலும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

கடோபனிஷதக் கதைச் சுருக்கத்தையும் பகுதிச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறேன். பகுதிச் சுருக்கத்தைத் தொடர்ந்து, பகுதியின் சிறப்பை (என் கணிப்பில்) எடுத்துச் சொல்லியிருக்கிறேன். அனுபவிக்க வேண்டிய கருத்தாழங்கள் இவை.

கதைச்சுருக்கம்: பேரின்பம் அடையப் பேராசை கொண்ட மன்னன், ஆத்திரத்தின் விளைவால், தன் ஒரே மகனை வேள்வியில் மரணதேவனுக்குத் தானமாகக் கொடுக்கிறான். மனித இளவரசனோ மரணதேவனிடமே மெய்யறிவு பெற்றுச் சிறப்போடுத் திரும்புகிறான். இச்சம்பவங்களின் பின்னணியில் இடம்பெறும், அறிவுச்சுடரான இளைய நிலாவுக்கும் ஆசிரியனான மரணதேவனுக்கும் இடையிலான உரையாடலே கடோபனிஷது.

பகுதி 1: விண்ணுலகப் பேரின்பங்களை அடைய விரும்பிய மன்னன் வாசஸ்ரவசு, விஸ்வஜித் எனும் பெரிய வேள்வியைச் செய்கிறான். யாகத்தில் தன் சொத்துக்களைத் தானமும் தியாகமும் செய்து வருகையில், தன் ஒன்பது வயது மகன் நசிகேதனின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் பொறுமையில்லாத நிலையில் மகனையே தியாகம் செய்வதாக வாக்களித்து விடுகிறான். தன் அவசரத்தையும் ஆத்திரத்தையும் எண்ணி வருந்துகிறான். தந்தைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நசிகேதன் எமனுலகம் போகிறான். எமனிடம் வரம் பெற வாய்ப்பு கிடைக்கிறது. உலகச் சொத்துக்களையும் இன்பங்களையும் வரமாகத் தருவதாகச் சொன்ன எமனிடம், தனக்கு மரணத்தைப் பற்றிய அறிவைத் தவிர வேறெதுவும் தேவையில்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறான். நசிகேதனின் மனப்பக்குவத்தையும் தீர்மானத்தையும் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு மரண அறிவையே வரமாகப் போதிக்கத் தொடங்குகிறான்.

பகுதியின் சிறப்பு: மெய்யறிவு பெற மாணவனுக்குத் தகுதி இருக்கிறதா என்று ஆசிரியர் சோதிக்கும் கட்டங்களின் வழியாக உடல், உயிர், உலகம், செல்வம், ஆசை இவற்றைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கள் வற்றாத அறிவுக்கேணி.

பகுதி 2: "நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற நுட்பமானக் கேள்வியுடன் நசிகேத போதனையைத் தொடங்கும் எமன், இருநிலை-எதிர்நிலைத் தன்மையதாய் இயற்கையிலேயே தோன்றும் இருள் ஒளி, இன்பம் துன்பம், அறிவு அறியாமை போன்றவற்றின் ஒருமைத் தன்மையினை விவரிக்கிறான். அறிஞர்-அறிவிலி இருதரப்பினரையும் அடையாளம் காட்டுகிறான்.

பகுதியின் சிறப்பு: காரண-காரியத் தொடர்பும் தொடர்பின்மையும் மிகச் சுவையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 'இறப்பும் இல்லை இறப்பவனும் இல்லை' எனும் ஆழ்ந்த வேதாந்தம் கீதையில் அப்படியே வருகிறது. விளைவிலிருந்துச் செயலை வேறாகக் காணும் பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது. எதிர்நிலைகள் போல் தோன்றும் இருளும் ஒளியும் ஒன்றிலிருந்தே தொடங்குவதால் அவற்றை ஒன்றெனக் கருதிச் செயல்படும் மனப்பக்குவம் சொல்லப்பட்டிருக்கிறது.

"நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா?" என்ற எமனின் கேள்வியே உலகின் மிகப் பிரபல வேதாந்தக் கேள்வியாகும். கடோபனிஷதச் சமகாலச் சாக்ரேட்ஸ், பின்னாள் அரிஸ்டாடில் போன்ற வேதாந்திகளும், மதவாதிகளும், தம் எண்ணங்களை வலியுறுத்தப் பயன்படுத்தியக் கேள்வி. இந்நாள் முரண்பாடுகளின் அடிப்படைகளை அறிந்துச் செயல்பட, நாம் பயன்படுத்தக்கூடிய சாதனமுமாகும் இந்தக் கேள்வி.

ஆசிரியர்-மாணவர், அறிஞர்-அறிவிலி பற்றியக் கருத்துக்கள் சிறப்பானவை. சிந்தனையைத் தூண்டுவன.

பகுதி 3: மனித உள்ளத்தின் விழிப்பையும் எழுச்சியையும் உள்ளுக்குள் திருப்பும் தேவை மற்றும் முறைகளைப் போதிக்கிறான் எமன். நசிகேதன் இவற்றை அறிந்து கொண்டு நன்றி சொல்கிறான்.

பகுதியின் சிறப்பு: விழிப்பு என்பது உள்ளுக்குள் ஏற்பட வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக்காட்டியிருக்கும் விதங்களை எத்தனை முறை ரசித்தாலும் திகட்டாது.

பகுதி 4: "உண்மையறிவு என்பதென்ன?" என்று கேட்ட நசிகேதனுக்கு, எமன் உள்ளுணர்வையும் உள்விழிப்பையும் உள்ளெழுச்சியையும் பற்றிப் போதிக்கிறான். உலகறிவுக்கும் உண்மையறிவுக்குமான வேறுபாட்டை அறிகிறான் நசிகேதன்.

பகுதியின் சிறப்பு: மனதை ஒருநிலைப்படுத்தி உள்ளுக்குள் எரியும் தீயை உணர வேண்டிய அவசியம் மீண்டும் அருமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

பகுதி 5: மரணத்துக்குப் பிறகு உயிருக்கு (ஆத்மா) என்ன ஆகிறது என்பதை மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: 'ஒரு மரணத்திலிருந்து இன்னொரு மரணத்துக்குச் செல்லும் இடைவிடாதப் பயணத்தில், பிறப்பும் வாழ்வும் வழி நிறுத்தங்கள்' என்ற நுட்பமானக் கருத்து விவரிக்கப்பட்டிருக்கிறது. மரணமும் பிறவியும் எதிர்நிலைகள் அல்ல என்ற அறிவு திடீரென்றுத் தாக்கித் திக்குமுக்காட வைக்கிறது.

பகுதி 6: மரணபய வெற்றியின் ரகசியத்தையும் அதையறிய வேண்டிய அவசரத்தையும் மீண்டும் விளக்குகிறான் எமன்.

பகுதியின் சிறப்பு: நம் கண்ணோட்டத்தையும் அணுகுமுறைகளையும் தலைகீழாக மாற்றக்கூடிய வகையில் சில விவரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இருளின் முடிவில் ஒளியைப் பார்த்துப் பழகிய நம் கண்களை, ஒளியின் முடிவில் இருளிருப்பதைக் காணவைக்கிறது.

அமைதிக்கான அறிவையும் மரணதேவனின் அருளையும் பெற்ற நசிகேதன், தன் தந்தையிடமே திரும்பி வருகிறான். நீண்ட நாட்கள் நல்லரசனாகவும் நல்ல மனிதனாகவும் வாழ்கிறான்.

இனி, நசிகேத வெண்பா.

2010/11/17

என்னுரை

    'உபநிஷது' என்ற வடமொழிச் சொல்லுக்கு 'பிரம்மத்தைப் பற்றிய அறிவுரை' என்று பொருள். 'பிரம்மம்' என்றால் மெய்யறிவு. 'பிரம்மன்' என்ற சொல்லுக்கு 'அறிந்தவன்' என்று பொருள் உண்டு. 'அகம் பிரம்மம்' அதாவது 'தானே பிரம்மம்' என்ற பொதுவான நோக்குப்படி பார்த்தால், 'தானே அறிவு' அல்லது 'தன்னைப் பற்றிய அறிவு' என்று பொருள் கொள்ளலாம். சுய அறிவு என்று நான் பொருள் கொண்டிருக்கிறேன். கடோபனிஷது: ஒரு கதை வழியாக மனித நேயங்களைப் பற்றிய போதனை. தன்னறிவுக்கான வழிகாட்டி.

கடோபனிஷதைப் புரிந்து கொள்ள, நான் படித்தாலோசித்தப் புத்தகங்கள்:
• ஸ்ரீ சந்திரவசு எழுதிய 'யஜூர்வேதீய கடோபனிஷத ப்ராரம்ப:' எனும் வடமொழி நூல் (1900 காலப் பதிப்பு, சிகாகோ பொது நூலகம்)
• சந்திரவசுவின் புத்தகத்தைப் பற்றி சிகாகோ மாணவர்கள் எழுதியப் பழைய ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் (சிகாகோ பொது நூலகம்)
• 'ஆதிசங்கரர் எழுதிய கடோபனிஷத பாஷ்யம்' பற்றிய ஆங்கில விளக்கக் கட்டுரைகள் (உலக வேதாந்தக் கல்வி, சிகாகோ பொது நூலகம்)
• திரு.ராஜாஜி எழுதிய கடோபனிஷத நூல் சுருக்கம் (வானதி பதிப்பகம்)
• சுவாமி சின்மயானந்தாவின் கடோபனிஷத விளக்கம் (சின்மயா மிஷன்).

சந்திரவசுவின் வடமொழி வடிவத்தில் ஆறு பகுதிகள், நூற்றுப் பத்தொன்பது செய்யுட்கள் உள்ளன. பிற புத்தகங்களில் ஒன்றிரண்டு கூடவோ குறையவோ காணப்படுகிறது.

வடமொழிக் கடோவில் ஆறு பகுதிகள். முதல் மூன்று பகுதிகளின் கருத்துக்களே மீண்டும் கடை மூன்றில் சொல்லப்படுகின்றன. கடோவைத் தழுவி எழுதினாலும், தமிழில் சற்றுச் சுறுக்க நினைத்திருக்கிறேன்.

தமிழ் நூலில் சற்றே மாறுபடவும் எண்ணியிருக்கிறேன். உதாரணமாக, 'நசிகேதன் எமன் வீட்டில் காத்திருந்தான்' என்ற சாதாரணக் கருத்தைப் பல பாடல்களில் விளக்கும் வடமொழிச் செய்யுட்களைச் சுருக்க முற்பட்டிருக்கிறேன். யாக மற்றும் யோகச் சடங்குளின் விவரங்களாக எழுதப்பட்டிருக்கும் பல செய்யுட்களை ஓரிரு செய்யுளில் சுருக்க எண்ணியிருக்கிறேன். ஒரே செய்யுளில் சொல்லப்பட்டிருக்கும் சில அருமையான கருத்துக்களை விரிவாக்க முயற்சித்திருக்கிறேன். எனவே, செய்யுட்கள் குறையுமா கூடுமா என்பதை இப்போது கணிக்க இயலவில்லை. என்னிடம் இருப்பவை நானெடுத்தக் குறிப்புகள் மட்டுமே :)

நானும் அரசனும் தொடங்கிய கூட்டு முயற்சி எனினும், கடவுள்-மத நம்பிக்கையின்மை குறுக்கே வருகையில், எடுத்துக்கொண்ட சுதந்திரங்களுக்கு (தவறுகளுக்கும்) நானே பொறுப்பு. நசிகேத வெண்பாவின் சில சுதந்திரங்களையும் வேறுபாடுகளையும் விலகல்களையும், இங்கே குறிப்பிடவேண்டியது என் கடமை. உதாரணமாக, நசிகேத வெண்பாவில்
• ஓம் என்ற சொல் ஒரு தியான சாதன ஒலி மட்டுமே
• கடவுள் வாழ்த்துக்குப் பதில் அறிவுக்கு வாழ்த்து
• 'ஆரியன்' போன்ற சமூகக் குறிப்புணர்த்தும் விவரங்கள் இல்லை
• சடங்குளின் விவரங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன
• 'ஆண்களுக்கு மட்டும்' என்று எதுவும் இல்லை
• மரணபய வெற்றியின் ரகசியம் பொதுவுடமை (வடமொழியில், 'தகுதியுடையோர்' புரிதலுக்கு மட்டுமே!)

நூலின் கருப்பொருள் சேதமடையவில்லை என்று நம்புகிறேன். தமிழ் வடிவில் குற்றமோ தவறோ இருந்தால், அதற்கு என்னுடைய சிற்றறிவும் கவனக்குறைவுமே காரணம். கடவுள் மதக் கொள்கைகளில் வேறுபட்டாலும், வாழ்க்கை நெறிகளிலும் மனிதநேயத்திலும் நம்மில் பெரும்பாலானோர்க்கு பொதுவான நம்பிக்கை உண்டு. அந்த வகையில், இந்த நூல் படிப்போர்க்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உளமார்ந்த நன்றி
• நூலகத்துள் படிக்க மட்டுமே அனுமதிக்கப்படும் புத்தகங்களைத் தினமும் எனக்காக ஒதுக்கிவைத்த சிகாகோ பொது நூலகத்தின் சூசன் பெகோஸ்காவுக்கு
• ஓய்வுக்காக இலங்கை சென்ற பின்னும், நான் எழுதியவற்றைப் படித்துத் திருத்தங்களும் அறிவுரையும் ஊக்கமும் அவசரமும் கொடுத்த அரசனுக்கு
• என் எழுத்தையும் ஒரு பொருட்டாக எண்ணிப் படிக்கத் துணிந்திருக்கும் அன்புக்குரிய உங்களுக்கு.

2010/11/15

அஞ்சலி

    நான் படித்த இந்துமதப் புத்தகங்களில், 'கடோபனிஷது' தனித்து நிற்கிறது. கடவுளையும் மதத்தையும் ஒதுக்கிப் பார்த்தால், இந்தப் புத்தகத்தைப் பேரறிவுப் பெட்டகம் எனலாம். அறியாமை இருளும் பேராசைக் குளிரும் விலக, புத்தகத்தின் கருத்தொளியில் இளைப்பாறலாம். மானிடம் மரணதேவனுடன் உரையாடுவதில் புதைந்திருக்கும் இலக்கியத்தனமா, அசாதாரண ஆழ்ந்தறிவின் வெளிப்பாடா, எதுவோ தெரியவில்லை - மரணத்தையும் மனித நேயத்தையும் இணைப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நினைக்கிறேன்; காலப்பயணத்தில் நான் நெடுந்தூரம் வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் - கடோபனிஷது பிடித்திருக்கிறது.

அரசன் எனக்கு ஆசிரியரும் நண்பரும் ஆவார். ஐந்து வருடங்களிருக்கும், மறைந்த நெருங்கிய நண்பர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மினியெபொலிசிலிருந்து நானும் அரசனும் திரும்பிக் கொண்டிருந்தோம். நானூறு மைல்களுக்கு மேலானப் பயண அலுப்புத் தீரப் பேசிக் கொண்டிருக்கையில், மரணம் பற்றிப் பேச்சு வந்தது. கடோபநிஷது புத்தகம் பற்றிச் சொன்னேன். உற்சாகத்துடன் தன் கருத்துக்களைச் சொன்னார். தமிழிலேயே பாடலுடன் எழுதப்பட வேண்டிய புத்தகம் இது என்று இருவரும் நம்பிய அந்தத் தருணத்தில் பதிவுக்கான விதை கிடைத்தது. அரசன் தொடங்கிய 'பூத்தூரிகை' வலைப்பூவில் அவருடன் எழுத வாய்ப்பும் கிடைத்தது.

துருப்பிடித்திருந்த என் தமிழை உருப்படுத்தியவர் அரசன். கடோபனிஷதைத் தமிழில் வசனக்கவிதையாக எழுத நினைத்த என்னை மரபுக்கவிதை எழுதத் தூண்டினார். எழுதுவது சுலபமென்று (சிறுபிள்ளைத்தனமாக) நினைத்ததால், வெண்பா வடிவைத் தேர்ந்தெடுத்தேன். 'கருத்தை எழுது, பின் திருத்தம் செய்வோம்' என்று அரசன் தந்த ஊக்கத்தில் தொடங்கி நின்றுபோன முயற்சி, மீண்டும் துளிர்த்திருக்கிறது. காரணமில்லாது அரசன் தொடங்கியதை, நான் காரணத்துடன் முடிக்க விரும்புகிறேன்.

ஒரு மரணத்தில் முளைத்த விதை இன்னொரு மரணத்தில் மரமாகுமா?

சில நாட்களுக்கு முன் மறைந்த நண்பர் அரசனுக்கு, இது என் உயிரிலிருந்து வரும் சிறிய அஞ்சலி. நல்ல ஆசிரியனுக்கு ஒரு மோசமான மாணவனின் மனந்திருந்தியக் அஞ்சலி.

2010/11/13

தொடங்குமுன்...


     'சயிருத்தீன் முகமது பின் ஒமர் ஷெய்க்' எனும் மாமன்னன் இந்தியாவின் பல இடங்களைக் கைப்பற்றினான். அசோகருக்குப் பிறகு, இந்தியாவின் துண்டுப் பிரதேசங்களை ஒரே அரசக்குடைக்குள் கொண்டு வந்த இவனுக்கு, பாபர் என்று ஒரு பொதுப்பெயர் உண்டு.
     வடக்கை வென்ற பொழுது, உள்ளூர் மன்னன் சிற்றரசர்கள் தலைவர்கள் எனப் பொதுமக்களின் அபிமானம் பெற்றப் பலரைச் சிறையிலடைத்தானாம். அதில் ஒரு ஆசிரியரும் அடக்கம். அறிவொளி தெறிக்க நின்ற முதிர்ந்த ஆசிரியரைச் சிறையில் சந்தித்த மன்னன், "நான் உலகை வென்ற மாமன்னன். அறிஞர்களை மதிப்பவன். உனக்கு என்ன வேண்டும்? பொன் பொருள் பெண் சிற்றூர் எது வேண்டுமானாலும் கேள், என்னால் தர முடியும்" என்றானாம். அதற்கு அவர் நிதானமாக, "அய்யா, நீ மாமன்னனாக இரு, தவறில்லை. உலகமே உன்னை வணங்கட்டும், நன்று. ஆனால் சூரிய ஒளியை மறைத்தபடி நிற்கிறாய், கொஞ்சம் ஒதுங்க முடியுமா ஐயா?" என்று கேட்டாராம். தன் தவறைப் புரிந்து கொண்ட மன்னன் வெட்கி, ஆசிரியரிடம் மன்னிப்புக் கோரி, அவரை விடுதலை செய்தானாம்.

'ஐயா, உலகத்தையே வென்ற உன்னால், இதைத் தருவேன் அதைத் தருவேன் என்று கொக்கரிக்கும் உன்னால், ஒளியைத் தர முடியுமா? உனக்கும் உன் பாட்டனாரின் பல்லாயிரம் பாட்டனாருக்கும் முன்பிருந்து, யாரும் கேளாமல் தானாகவே வந்து இருளை அகற்றிக் கொண்டிருக்கிறதே - இயற்கை ஒளி - அதற்கு ஈடாக உன்னால் என்ன தரமுடியும்? எனக்குச் செல்வம் தேவையில்லை; உடைமை தேவையில்லை; வெற்றி தேவையில்லை. என் தேவை அறிவு. அறியாமை அச்சுறுத்தும் பேரிருள்; அறிவே அவ்விருளகற்றும் ஒளி. என்னிடம் அறிவு இருக்கிறது. அது அறிஞர்கள் தொடர்பால் இன்னும் வளர்கிறது. உன்னால் அறிவைத் தர முடியுமா?' என்பதே சிறைப்பட்ட ஆசிரியரின் விண்ணப்பத்துக்கு உட்பொருள்.

எது வெற்றி? எது செல்வம்? எது ஆளுமை? 'கொண்டு வந்ததென்ன, இதில் கொண்டு போவதென்ன?' என்றச் சாதாரணத் தத்துவத்தின் புதைபொருள் புரிந்தவர்களுக்கு, மேற்கண்டச் சாதாரணக் கேள்வி-பதில் விளக்கம் அசாதாரணமாகத் தோன்றும். அவர்களுடன் இந்த வலைப்பூ வளரும்.