நான் படித்த இந்துமதப் புத்தகங்களில், 'கடோபனிஷது' தனித்து நிற்கிறது. கடவுளையும் மதத்தையும் ஒதுக்கிப் பார்த்தால், இந்தப் புத்தகத்தைப் பேரறிவுப் பெட்டகம் எனலாம். அறியாமை இருளும் பேராசைக் குளிரும் விலக, புத்தகத்தின் கருத்தொளியில் இளைப்பாறலாம். மானிடம் மரணதேவனுடன் உரையாடுவதில் புதைந்திருக்கும் இலக்கியத்தனமா, அசாதாரண ஆழ்ந்தறிவின் வெளிப்பாடா, எதுவோ தெரியவில்லை - மரணத்தையும் மனித நேயத்தையும் இணைப்பதில் ஒரு கவர்ச்சி இருக்கிறது என்று நினைக்கிறேன்; காலப்பயணத்தில் நான் நெடுந்தூரம் வந்துவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் - கடோபனிஷது பிடித்திருக்கிறது.
அரசன் எனக்கு ஆசிரியரும் நண்பரும் ஆவார். ஐந்து வருடங்களிருக்கும், மறைந்த நெருங்கிய நண்பர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மினியெபொலிசிலிருந்து நானும் அரசனும் திரும்பிக் கொண்டிருந்தோம். நானூறு மைல்களுக்கு மேலானப் பயண அலுப்புத் தீரப் பேசிக் கொண்டிருக்கையில், மரணம் பற்றிப் பேச்சு வந்தது. கடோபநிஷது புத்தகம் பற்றிச் சொன்னேன். உற்சாகத்துடன் தன் கருத்துக்களைச் சொன்னார். தமிழிலேயே பாடலுடன் எழுதப்பட வேண்டிய புத்தகம் இது என்று இருவரும் நம்பிய அந்தத் தருணத்தில் பதிவுக்கான விதை கிடைத்தது. அரசன் தொடங்கிய 'பூத்தூரிகை' வலைப்பூவில் அவருடன் எழுத வாய்ப்பும் கிடைத்தது.
துருப்பிடித்திருந்த என் தமிழை உருப்படுத்தியவர் அரசன். கடோபனிஷதைத் தமிழில் வசனக்கவிதையாக எழுத நினைத்த என்னை மரபுக்கவிதை எழுதத் தூண்டினார். எழுதுவது சுலபமென்று (சிறுபிள்ளைத்தனமாக) நினைத்ததால், வெண்பா வடிவைத் தேர்ந்தெடுத்தேன். 'கருத்தை எழுது, பின் திருத்தம் செய்வோம்' என்று அரசன் தந்த ஊக்கத்தில் தொடங்கி நின்றுபோன முயற்சி, மீண்டும் துளிர்த்திருக்கிறது. காரணமில்லாது அரசன் தொடங்கியதை, நான் காரணத்துடன் முடிக்க விரும்புகிறேன்.
ஒரு மரணத்தில் முளைத்த விதை இன்னொரு மரணத்தில் மரமாகுமா?
சில நாட்களுக்கு முன் மறைந்த நண்பர் அரசனுக்கு, இது என் உயிரிலிருந்து வரும் சிறிய அஞ்சலி. நல்ல ஆசிரியனுக்கு ஒரு மோசமான மாணவனின் மனந்திருந்தியக் அஞ்சலி. ►