வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/11/21

அறிவணக்கம்


• இயக்கங்களின் பலனாக வேண்டியது அமைதி - இது நெறி.
• இயக்கங்களின் பலனாக விளைவதோ பேராசை, பகை, போர், குழப்பம் - இது நிலை.
• நெறி மறந்ததால் நிலையடைந்தோமா? நிலையடைந்ததால் நெறி மறந்தோமா?

நம் இயக்கங்களுக்கெல்லாம் காரணம் அறிவு. இயக்கங்களின் பயனாக அமைதியைப் பெற, நல்லறிவை வளர்க்க வேண்டும். நல்லறிவை நாடி நசிகேத வெண்பாவைத் தொடங்குவோம். (அறிவணக்கம், ஆசிரியப்பா)


அறிவணக்கம்

ஆதியும் அறிவாகும், அந்தமும் அறிவாகும்!
மேதினி யிதிற்பே ராசையும் பகையும்வீண்
சாதியும் பலசடங்கு போதித்திடும் சமயஞ்செய்ச்
சேதமே எனச்சொல்லும் நீதியைத் தினமோதத்
தீதினித் தொலையட்டும்! தேன்தமிழ் உலகம்
மீதினில் அமைதி மேவித் தங்கட்டுமே!

    ம் இயக்கங்களின் விளைவாக நாம் அமைதிப் பாதையில் போகலாம்; அல்லாத வழியிலும் நடக்கலாம். அமைதியல்லாத வழியில் இன்பங்களைச் சந்திக்கிறோம், துன்பங்களையும் சந்திக்கிறோம். இன்பதுன்பங்களின் பாதிப்பினால் அமைதியை இழக்கிறோம். அமைதிப் பாதையில் இன்ப துன்பங்கள் இல்லையா? உண்டு. அமைதிப் பாதையில் இன்பம் துன்பம் என்ற எதிர்நிலை உணர்வுகள் இல்லை. அமைதிப் பாதை ஒரு இலக்கினை நோக்கிய பயணம். மற்ற பாதை இலக்கற்ற பயணம். கால் போன போக்கில் மனம் போகும் பயணம்.

நம் இன்பதுன்பங்களின் ஆணிவேர்கள் யாவை? ஆசையும் பகையும். ஆணிவேரின் விதை? அறியாமை. இன்பதுன்பங்களைப் பெறச்செய்யும் பொறாமை, முட்டாள்தனம், சினம், பேராசை, சுயநலம் போன்றவை அறியாமையின் வெளிப்பாடுகளே. அறியாமை விழலுக்கு நீர் வார்ப்பது, நம் கண்மூடித்தனம். கண்களை மூடுவதோ, தேவையில்லாத பிரிவினை மற்றும் பழக்கங்கள் பற்றியப் போதனை. இந்தப் போதனை பல வழிகளில் கிடைக்கிறது. இந்தப் போதனையும் அறிவு தான். ஆனால் அறியாமையை வளர்க்கும் போலி அறிவு. பூஞ்செடியில் புல்லுருவி. கண்களை மூடச் செய்யும் போதனைகள் நல்லறிவுத் தேடலா? நாமே தீர்மானிக்க வேண்டும். வேறெந்தப் பிறவியிடமுமில்லாத ஒரு மகத்துவம், மனிதராகிய நம்மிடம் உண்டு. அறிவு. நல்லவை அல்லவை என ஆய்ந்தறியும் பகுத்தறிவு.

பகுத்தறிவு நல்ல உள்ளத்தை வளர்க்கிறது. பிரிவினை பகை பேராசையிலிருந்து விலகி நம்மை அமைதிப் பாதையில் அழைத்துச் செல்ல வல்லது. உண்மைகளைத் தேடுவதால் வளர்கிறது. கல்வி, பகுத்தறிவை வளர்க்கிறது. வாழ்க்கையில் பிழைப்புக்காக கற்பது மட்டுமல்ல கல்வி. பிழைப்புக்கான நம் நடத்தைகளின் விளைவை, நம்மையும் நம் சுற்றத்தையும் நாம் வாழும் இந்த வையத்தையும் நம் செயல்கள் தினம் பாதிக்கின்றன என்ற உண்மையை, நீதியை, அறியச் செய்வதே கல்வி. கண்மூடித்தனத்தைக் களையச் செய்வதே கல்வி.

அமைதியைக் குலைக்கும் வழி தவிர்ப்போம் எனச் சொல்வது எளிது; செயலாக்கம் கடினம். விளைவுகளுக்கு நம் செயல்களே காரணம், நம்மைத் தவிர வேறெவரும் காரணமில்லை என்று உணர்ந்தோமானால், அது அறியாமையைக் களையும் முதல் செயல். அமைதிப் பாதையின் முதல் படி. அமைதிக்கேடான வழியில் நம்மைச் செலுத்தும் போதனைகள் - மதமோ சமூகநெறியோ குறுங்கல்வியோ அரசியலோ - எதுவும் நமக்கு வேண்டாம். ஆய்ந்தறியும் உள்ளம் பெறுவோம். அறியாமையில் முளைத்த பேராசை-பகையினை வேரறுப்போம். அறிவை வளர்ப்போம். அமைதியை நாடுவோம்.

தமிழ் பாடும் உலகெங்கும் பகையொழியட்டும். தமிழோசை போல் அமைதி நிலைக்கட்டும்.

9 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

தொடரைத் தொடருகின்றேன்.

சிவகுமாரன் சொன்னது…

ஆரம்பமே அமர்க்களம். தொடருங்கள். தொடர்கிறேன் நானும் உங்களை.

பத்மநாபன் சொன்னது…

அறிவிற்கு வாழ்த்து சொல்லிய ஆரம்பம் அருமை...
வெண்பா என்றீர்கள்.விருத்தத்தில் பொருத்தமாக வாழ்த்துப்பா...
(அறுசீர் விருத்தமா..ஆசிரியப்பாவா எனும் சந்தேகம் வந்துவிட்டது. என்னிடம் இலக்கணம் சுத்தமாக விட்டுப்போய் விட்டது..பிடிக்கவேண்டும் )

பிரசங்கமாகவும் இல்லாமல், போதனையாகவும் இல்லாமல் கருத்துரையாக வருவது சிறப்பாக உள்ளது..

அறிவில் சிறந்த அறிவு,வள்ளுவன் சொன்ன நுட்பமும் மாட்சிமையும் கொண்ட பகுத்தறிவு (மனிதர்களை பகுக்கும் அறிவு அல்ல ) பற்றிய விளக்கம் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது..

``தீதும் நன்றும் பிறர்தர வாரா`` நடைமுறை வாழ்க்கையில் இதை உணர்ந்து சீரிடல் எப்படி?

அறிவு பிரண்டு மேலும் பிரண்டு கொண்டிருக்கிறதா?

சீராக இருந்து சீர் கெட்டுக்கொண்டிருக்கிறதா? இல்லை சீர்மையை நோக்கிய பயணமா?

கேள்விகள் தோன்றிக் கொண்டே இருக்கிறது....

மோகன்ஜி சொன்னது…

அறிவுக்கு வாழ்த்துடன் நல்லதோர் ஆரம்பம்.. தொடரட்டும் நற்றமிழில்.
பத்மநாபனின் கேள்விகளுக்குக் கூட 'கடோ'வில் விளக்கம் உண்டே!
ஆற அமர எழுதுங்கள் அப்பாஜி! ஆவலுடன்...

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கு நன்றி துளசி கோபால், சிவகுமாரன், பத்மநாபன், மோகன்ஜி, ...

அப்பாதுரை சொன்னது…

சீராக இருந்து கெடவில்லை என்பதை மட்டும் நம்புகிறேன். தொடர்ந்து வரும் தலைமுறைகள் முந்தைய தலைமுறைகளை விடப் பொதுச்சீர்மையின் அண்மையை அடைகின்றன என்று நினைக்கிறேன். இனி வரும் தலைமுறைகள் உலகின் அத்தனை கேடுகளையும் நீக்கிவிடும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு.நல்ல கேள்விகள், பத்மநாபன்.

அப்பாதுரை சொன்னது…

பிரசங்கம் செய்ய அறிவும் போதாது, போதனை செய்யத் தகுதியும் போதாது பத்மநாபன். அதனால் இந்தப் பாணி. நீளாமல் கவனமாக இருக்கிறேன். தொடர்ந்து படிப்பதற்கு நன்றி.

வெண்பா எழுதுவது எளிதென்று நினைத்து ஏமாந்த கதையைத்தான் முதலிலேயே சொல்லிவிட்டேனே? ஆசிரியப்பா எழுதுவது சுலபம் என்று இப்போது தோன்றுகிறது. இலக்கண ஆசு இருக்கலாம் - இருந்தாலும் இது நிலைமண்டில ஆசிரியப்பா (எழுத நானெடுத்த முயற்சி :). முதலடியும், கடைசி இரண்டு அடிகளும் தோன்றியபின் மற்ற அடிகளைச் சேர்த்து எழுதியது. திறமை இருந்திருந்தால் நேரிசை ஆசிரியப்பா எழுதியிருப்பேன்.

R. Gopi சொன்னது…

சூப்பர் சார்

Geetha Sambasivam சொன்னது…

பிழைப்புக்கான நம் நடத்தைகளின் விளைவை, நம்மையும் நம் சுற்றத்தையும் நாம் வாழும் இந்த வையத்தையும் நம் செயல்கள் தினம் பாதிக்கின்றன என்ற உண்மையை, நீதியை, அறியச் செய்வதே கல்வி. கண்மூடித்தனத்தைக் களையச் செய்வதே கல்வி.//

கல்வி குறித்த அதன் பயன்பாடு குறித்த தெளிவான விளக்கம்; இன்றைய தேவையும் இதுவே. மற்றபடி நான் சொல்ல நினைத்ததை ஏற்கெனவே பத்மநாபன் சொல்லி இருக்கார்.

இலக்கணம்னா வீசை என்ன விலைனு கேட்கிற டைப் நான். அதனால் நீங்க ஆசிரியப்பா எழுதினாலும், வெண்பா எழுதினாலும் எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும். அதன் இலக்கணம் புரியாது.