79
பிறப்பிறப்பு பேரின்பம் பாழ்நரகம் பற்றித்
திறந்திட்டக் கேள்விமடை கண்டான் - விறவாது
வெள்ளம் வடியும் நிலமாய் நசிகேதன்
மெள்ள மொழிந்தான் எழுந்து.
திறந்திட்டக் கேள்விமடை கண்டான் - விறவாது
வெள்ளம் வடியும் நிலமாய் நசிகேதன்
மெள்ள மொழிந்தான் எழுந்து.
பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், மோட்சம் பற்றிப் பலவித கேள்விகள் மடை திறந்த வெள்ளம் போல் அவையோரிடமிருந்து வந்தன. அஞ்சாமல் விலகாமல் கேள்விகளை ஏற்ற நசிகேதன், வெள்ளத்தை வடித்து எழும் நிலம் போல மெள்ளத் தன் கருத்துக்களைச் சொல்ல எழுந்தான்.
விறவாது: அஞ்சாது, தயங்காது
எமனுலகம் சென்று வந்த நசிகேதனைக் கண்ட அவையோரின் பிரமிப்பு அடங்கத் தொடங்கியது.
அவையோரின் மனதில் ஆயிரம் கேள்விகள். 'எமன் எப்படியிருப்பான்? சொர்க்கம் எப்படியிருக்கும்? நரகம் எப்படியிருக்கும்? எமனுலகில் என்ன கண்டான்? மரண ரகசியம் என்பது என்ன? மோட்சம் என்பது உண்மையா பொய்யா? எமனிடமிருந்து நசிகேதன் என்ன கற்று வந்தான்? என்ன பரிசுகள் பெற்று வந்தான்? பிறவாமை என்பது சாத்தியமா? உண்மையிலேயே எமனைச் சந்தித்துத் திரும்பினானா? அங்கே கொடுமைகள் உண்டா? தேவர்கள் உண்டா? கடவுளைக் கண்டானா? யாரைச் சந்தித்தான்? யாருடன் பேசினான்? பாவத்திற்கு தண்டனை கொடுத்தார்களா? புண்ணியங்களுக்கு பரிசு கொடுத்தார்களா? தானம் தவம் செய்வதால் சொர்க்கம் கிடைக்குமா? பாவங்களை போக்கடிக்கும் மருந்து உண்டா? சடங்குகளில் சிறந்தது எது? பிறவாமைக்கு உத்தரவாதம் தரும் ரகசியத்தை எமன் சொன்னானா? எமனைக் கண்டு அஞ்சுவதில் பொருளுண்டா? சொர்க்கப் பதவி கிடைக்க என்ன செய்ய வேண்டும்? எத்தகைய தானம் சிறந்தது? எந்த விரதங்களைக் கடைபிடிக்க வேண்டும்? எந்தக் காவிகளின் பின் செல்ல வேண்டும்? யாரை வணங்க வேண்டும்? எத்தகைய யாகங்கள் செய்ய வேண்டும்? அடுத்த பிறவியில் அரசனாகப் பிறக்க வழி உண்டா? வேதங்கள் ஓதியும் யாகங்கள் புரிந்தும் மோட்சம் பெற முடியுமா? எமன் அன்பாகப் பழகுவானா? நசிகேதனைத் துன்புறுத்தினானா? இனி நசிகேதனுக்கு மரணமுண்டா? பிறவியுண்டா? நசிகேதன் எமனுடன் என்ன பேசினான்? நசிகேதன் எமனை ஏமாற்றியது எப்படி? அல்லது எமன் மனமிறங்கி நசிகேதனை அனுப்பி வைத்தானா? மகனையே எமனுக்குத் தானம் கொடுத்த தந்தையை நசிகேதன் மன்னித்தானா? தந்தை செய்த தவறுக்கு தண்டனை கிடைக்குமா? எமன் வருவதை அறிவது எப்படி? நசிகேதன் இறந்தவர்களை எமனுலகில் சந்தித்தானா? இறந்த மனிதர்கள் எப்படி இருந்தார்கள்? ஓலமிட்டார்களா? துடித்தார்களா? மகிழ்ச்சியோடு இருந்தார்களா? செய்த பாவங்களை எண்ணிப் புலம்பினார்களா? புண்ணியங்களுக்குப் பொருத்தமான பலன் அவர்களுக்குக் கிடைத்ததா? சொர்க்கம் கிடைக்க ஏதாவது மந்திரம் ஜெபிக்க முடியுமா? நசிகேதன் பொலிவுடன் இருப்பதன் ரகசியம் என்ன? ஏதோ ஒளி வீசுவது போல் தோன்றும் காரணம் என்ன? தங்கள் நலத்துக்காக எமனிடம் வேண்டினானா? நசிகேதனின் கால்களைத் தொட்டால் மோட்சம் கிடைக்கும் என்று தோன்றுகிறதே? சொர்க்க நரகம் பற்றிக் காவிகளும் தாடிகளும் சொன்னதெல்லாம் பொருந்தியதா? எவ்வளவு பொன்னும் பசுவும் தானம் தர வேண்டும்? ... ' என்று அடாத கேள்வி மழை.
மடை திறந்த வெள்ளம் போல் வரிசையாகவும் வேகமாகவும் அவையிலிருந்து கேள்விகள் வந்தவண்ணம் இருந்தன. வெள்ளம் பரவி நிலத்தை மூடுவது போல் நசிகேதனைக் கேள்விகள் மூழ்கடித்தன.
எத்தகைய வெள்ளத்தையும் கிரகித்து வடித்து வெளிவரும் நிலத்தைப் போல நசிகேதனும் கேள்விகளை ஏற்று பதில் சொல்ல மெள்ள எழுந்தான். அவையோரை வணங்கித் தன் உரையைத் தொடங்கினான். ►