வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/01/13

அறிஞர்கள் அறிய வேண்டினான் அரசன்


78
மாரனிடம் மீட்டுவந்த வீரமகன் வாலறிவை
ஊரறிய வேண்டினான் வாசரசன் - பேரவையில்
ஆரறிந்தோர் அண்மையிலே கேட்டான் கந்தமகன்
சீரறிவின் சாரத்தை வேண்டி.

   மனை வென்றுத் தன் வீரமகன் பெற்று வந்த மெய்யறிவை, நாட்டு மக்கள் அறிய விரும்பினான் மன்னன் வாசன். தன்னுடைய அரசவையில், கற்றுத் தெளிந்த சான்றோர்கள் முன்னிலையில், அழியாத்தன்மை பெற்ற மகனிடம் அவன் பெற்ற சிறப்பான மெய்யறிவின் சாரத்தை வழங்குமாறு வேண்டினான்.


மாரனிடம்: மரணத்துக்குக் காரணமானவனிடம், எமனிடம்
வாலறிவு: பேரறிவு, மெய்யறிவு
ஊரறிய: நாடறிய, நிலமறிய
ஆரறிந்தோர்: நிறைந்த அறிவைப் பெற்றோர், சான்றோர்
கந்தமகன்: அழிவில்லாத மகன் (கந்தம்: அருகம், அழியாமை)
சீரறிவு: சிறப்பு மிக்க அறிவு, மெய்யறிவு



    மனுலம் சென்று வந்த நசிகேதனை வரவேற்று, பெற்றோரும் உற்றோரும் அவனைத் தழுவியும் வணங்கியும் மகிழ்ந்தனர்.

எமனுலகம் சென்று மீண்ட மகனின் வளர்ச்சியில் வியந்து உவகையில் பூரித்தான் வாசன். நசிகேதனின் உடல் மன வளர்ச்சியைக் காட்டிலும், அறிவு பலமடங்கு வளர்ந்திருப்பதை நாளடைவில் புரிந்து கொண்டான் தந்தை. தன் அரசவை அறிஞர்களின் மொத்த அறிவும், மகனறிவின் ஒரு சிறு பகுதியை விடக் குறைவு என்று புரிந்து கொண்டான். 'தோளுக்கு மிஞ்சியவன் தோழன் என்று இவனை நடத்துவது போலே, அறிவில் மிஞ்சியவன் ஆசான் என்ற வகையிலும் இவனை மதிக்க வேண்டுமோ?' என்று நினைத்தான். 'ஆகா! இவனுடைய அறிவு எனக்குச் சொந்தமல்ல. என் அரசவைக்கு சொந்தமல்ல. என் மக்களுக்குச் சொந்தமல்ல. இந்த ஊருக்கு, நாட்டுக்கு, ஏன் இந்த உலகத்துக்கே சொந்தமானதல்லவா?!' என்று எண்ணி, தன் கடமையை உணர்ந்தான்.

நசிகேதனின் நல்லறிவை நாடறியும் வழியைச் சிந்தித்தான் வாசன். அறிவு விழா நடத்த எண்ணினான்.

கற்றுத் தெளிந்த அறிஞர்கள் அனைவரையும் தன் அரசவைக்கு வரவழைத்தான். ஊர் மக்களையும் நாட்டு மக்களையும் வரவழைத்தான். சிற்றரசர்களையும் பேரரசர்களையும் வரவழைத்தான். சொர்க்க நரகம் அறிந்தவர் போல் பாவ புண்ணிய சாத்திரங்களும் விதிகளும் சம்பிரதாயங்களும் சொல்லிக்கொண்டிருந்த தாடிகளையும் காவிகளையும் வரவழைத்தான். பாமரர்களை வரவழைத்தான். அத்தனை ஆன்றோர்களும் சான்றோர்களும் சாதாரணர்களும் கூடியிருக்க, மகன் நசிகேதனை அவர்கள் முன் நிறுத்தினான்.

நசிகேதனின் அறிவொளியில் மன்னனின் பேரவை மின்னியது. விளக்கேந்துவோர் விளக்குகளை ஒதுக்கி, வாசன் மகனைக் கவனித்தனர். நசிகேதன் முகத்தின் குளிர்ச்சி அரசவை எங்கும் பரவியது. சாமரம் மறந்தனர் சாமரக்காரர். நசிகேதன் நின்ற விதத்திலே அவனுடைய வீரமும் விவேகமும் தெரிந்தது. பகை மறந்து அரசர்களும் அடங்கினர். நசிகேதன் பார்வையில் அறிவுப்பொறி பறந்தது. அது கண்ட அறிஞர்கள் அகந்தை அழிந்தனர், சாத்திரக் காவிகளோ ஆத்திரம் தொலைத்தனர்.

'இவன் வாய் திறந்தால் இன்னும் என்னென்ன அற்புதங்கள் நேருமோ?' என்று பாமரர்கள் வியந்தனர். 'இவனை அரசனாக்காமல் இன்னும் அரசபதவியைப் பிடித்துக் கொண்டிருக்கும் மூத்தவருக்கு அறிவேயில்லையோ?' என்றும் சிலர் எண்ணினர்.

அரசவையின் கோலத்தைக் கண்ட அரசன் வாசனின் மனதிலும் இத்தகைய எண்ணங்கள் மோதின. அகந்தை அழிந்த, ஆத்திரம் அழிந்த, கண்மூடித்தனம் மறந்த, கோபம் துறந்த ஒரு தெளிந்த மனதோடு தன் மகனை அணுகினான். காலனை வென்று வந்த கந்தமகனை, அழியாத்தன்மை பெற்று விட்ட அழகு மகனை, அனைவர் முன்னிலையில் மீண்டும் அடி பணிந்து வணங்கினான்.

"ஐயா!" என்றான். அவையிலே அமைதி.

தொடர்ந்து, "காவிகள் பின் சென்று, சாத்திரங்கள் கேட்டு, பேராசையில் கண்மூடி, அறிவை இழந்தப் பெருங்குருடனான என்னை மன்னித்து விடுங்கள். என் தவறை மன்னித்து, என்னுடைய அரசவைக்கு வருகை தந்ததில் பெரும் மகிழ்ச்சி..

..இங்கே அறிஞர்கள் பலர் கூடியிருக்கிறார்கள். ஆனால் உங்களைக் கண்டதுமே நாங்கள் அறிந்ததெல்லாம் மறைந்தது போல் தோன்றுகிறது. அறிஞர்களான இவர்களும், அறியாதவர்களான என் போன்றோரும், அறியவேண்டிய மெய்யறிவை எடுத்துச் சொல்லுங்கள்" என்றான் வாசன்.

7 கருத்துகள்:

meenakshi சொன்னது…

பேரளிவொளியின் முன் அனைத்துமே அடங்குவதை அழகாய் விளக்கி இருக்கிறீர்கள்.
// சாத்திரக் காவிகளோ ஆத்திரம் தொலைத்தனர்.// அழகான வரி.

'மாரனிடம் மீட்டுவந்த வீரமகன்' என்பது இங்கே 'மீண்டுவந்த' என்ற பொருளில் தானே வருகிறது! சற்று குழப்பமாக இருந்தது. அதனால்தான் கேட்டேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தோளுக்கு மிஞ்சியவன் தோழன் என்று இவனை நடத்துவது போலே, அறிவில் மிஞ்சியவன் ஆசான் என்ற வகையிலும் இவனை மதிக்க வேண்டுமோ?' என்று நினைத்தான். '

அருமையாய் நிறைவாய் அறிவு பேரொளி வீசிப்பிரகாசிப்பதை உணரவைக்கும் அரிய பகிர்வு.. பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்..

அப்பாதுரை சொன்னது…

நன்றி meenakshi, இராஜராஜேஸ்வரி, ...

அப்பாதுரை சொன்னது…

மீட்டு வருவது: பெற்று வருவது. இங்கே 'மாரனிடம் மீட்டு வந்த வாலறிவு' என்ற பொருள். 'மீண்டு வந்த' என்பதும் பொருந்தும் meenakshi. மீண்டு வந்தவன் நசிகேதன். மீட்டு வந்தது அறிவு. மீண்டு வந்தவனை விட, மீட்டு வந்தது மேன்மையானதல்லவா? நசிகேதனின் புகழை விட, அவன் பெற்றுவந்த அறிவு பரவ வேண்டும் என்று விரும்பிய அரசனின் பார்வை.

meenakshi சொன்னது…

'மீட்டு வந்தது' - 'பெற்று வந்தது' இரண்டும் ஒரே அர்த்தமா?

ஸ்ரீராம். சொன்னது…

கற்றோருக்கு சென்றவிடமெலாம் சிறப்பு....