5
யாகத்தில் என்னைப் பெறுவார்யார் என்றுசந்
தேகத்தில் தன்பிள்ளை நச்சரிக்க - வேகத்தில்
காலனுக்கே தானம்நீ என்றான் மடமன்னன்
பாலடங்க நீர்தெளிப்பார் போல்.
தேகத்தில் தன்பிள்ளை நச்சரிக்க - வேகத்தில்
காலனுக்கே தானம்நீ என்றான் மடமன்னன்
பாலடங்க நீர்தெளிப்பார் போல்.
"என்னை யார் பெறுவார்?", "யாருக்குக் கொடுப்பீர்கள் தானம்?" என்று தொடர்ந்து பலமுறை கேட்டுக்கொண்டிருந்த பிள்ளை நசிகேதனிடம், பொங்கும் பாலை அவசரமாக நீர் தெளித்து அடக்குவது போல், "உன்னை எமனுக்குத் தந்தேன்" என்றான் அறிவில்லாத அரசன்.
பேராசைக் குடியிருக்கும் மனதில் பொறுமையோ சகிப்புத்தன்மையோ இருப்பதில்லை. எப்படியாவது நினைத்ததை அடைய வேண்டுமென்ற வேகத்துக்கு அடிமையாகிறது உள்ளம். கண்களுக்கு சுயநலக் கண்ணாடி போட்டு விடுகிறது. விளைவு? அவசர முடிவுகள். அவசரக்காரனுக்கும் புத்தி மட்டே. பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஒன்றை ஒன்று வளர்க்கும் தன்மையன. பொறுமை கோபத்தைக் குறைக்க வல்லது. சகிப்புத்தன்மை எரிச்சலையும் அவசரத்தையும் தவிர்க்க வல்லது. இரண்டையும் வளர்க்கும் உரம் எதுவென்று தெரியவில்லை.
பால் பொங்குகிறது. இறக்கி வைப்பதே உகந்தது என்று தெரிந்தும் அதைத் தணிக்கும் அவசரத்தில் தண்ணீரை அள்ளித் தெளிப்பது, பாலைக் காய்ச்சும் குறிக்கோளுக்கே முரணாவதில்லையோ? நாம் முக்கிய வேலையாக இருக்கும் நேரத்தை மட்டும் சிறு பிள்ளைகள் எப்படியோ தெரிந்து கொண்டு நம்மை அணுகி ஏதாவது கேட்டு நச்சரிப்பார்கள். அந்த நச்சரிப்பைப் பெரிது படுத்தாமல் அமைதியாகப் பிள்ளைகளின் தேவையை தீர்த்தபின் தம் வேலையைத் தொடர்வோரை விட, பிள்ளைகளைச் சற்று நேரம் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டுத் தம் வேலையைத் தொடர்வோர் அதிகம். அவர்களை விட, "அம்மாவிடம் கேள், அப்பாவிடம் கேள்" என்று திசைதிருப்பி கண நேர நிம்மதியைப் பெறுவோர் அதிகம். அவர்களையும் விட, "நான் வேலை செய்வது தெரியவில்லை?" என்று ஏச்சோ அடியோ கொடுத்தனுப்பித் தம் வேலையைத் தொடர்வோர் இன்னும் அதிகம். நம் அவசரம் நமக்கு. நம்மினும் இளையவருக்கும் தேவை உண்டு, அறிவு உண்டு என்பதை மறந்து, எரிச்சலில், அவசரத்தில் அறிவிழந்து முடிவு செய்கிறோம். பிறகு விளைவைச் சுமக்கிறோம். இந்தக் குணம் வீட்டில் மட்டுமல்ல, வெளியிலும் நம்மைத் தொடர்ந்து வருகிறது. சில சமயம் நம் கண்ணை மூடிப் பெருந்தவறுகளைச் செய்ய வைக்கிறது.
மன்னனின் பேதமை புரிகிறது. மகன் கேள்விகளின் பின்னே ஏதும் அறிவு இருக்கிறதோ? அண்டவாகை வேள்வியில் இம்மைச் சொத்துக்களை எல்லாம் தந்தை தானமும் பலியும் கொடுத்தாக வேண்டும். மன்னனுக்குப் பிறந்தவன் மன்னனின் சொத்தெனில், தானும் இந்த வேள்வியில் வழங்கப்பட வேண்டியவன் தானே? பெற்ற பிள்ளை என்று ஒரு வேளை வழங்காமல் போனால், வேள்வியின் முழுப்பலன் கிட்டாமல் போய்விடுமா? தந்தைக்கு வேள்வியின் முழுப்பலனும் கிடைக்க வேண்டுமே, தன்னை வழங்க மறந்து விடக் கூடாதே என்ற கலக்கம். அப்படி வழங்கினால், இன்னும் மழலை தட்டும் அதிகம் பயனில்லாத சிறுவனான தன்னை, யார் பெறுவார்கள் என்ற ஐயம். அதனால் தந்தையை அணுகி, "ஐயா, என்னை யாருக்குத் தருவீர்கள்? யார் பெறுவார்கள் என்னை?" என்று தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான். இதைப் புரிந்து கொள்ளாத மன்னன், அவசரத்தனத்தில் அவசரத்தானம் செய்து விட்டான்.
அறிவற்றச் செயல்களைச் செய்யும் தந்தையின் பழக்கத்தை அறிந்த பிள்ளை (சற்று சிந்தித்தால் அண்டவாகை வேள்வியே அறிவற்ற செயல் என்பதை நசிகேதன் உணர்ந்திருந்தான் என்பது நமக்குப் புலப்படும்), தந்தையின் அவசரபுத்தியையே தனக்குச் சாதகமாக, தந்தையை நல்வழியில் செலுத்த ஒரு சாதனமாக, பயன்படுத்திக் கொண்டான். தந்தைக்குப் பொறுமை கிடையாது என்பது பிள்ளைக்குத் தெரிந்திருக்க வேண்டும். அதனால் நச்சரித்து, நினைத்ததை நடத்தியே முடித்தான் நசிகேதன் என்றும் தோன்றுகிறது.
அவசரத்தில் அறிவிழந்து வாக்குக் கொடுத்த வாசனின் நிலை என்ன? ►