வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/04/04

நூல்முகம், காணிக்கை


அந்தியமும் இந்தியமும் புந்தியவர் சிந்தனைகள்
செந்தமிழின் சந்ததிக்குஞ் சொந்தமென - உந்துவழி
முந்துநூல் மந்திரத்தைத் தந்துரைக்க வந்ததிது
இந்திரா மைந்தன் மொழி.

   ரணம், மனிதம், ஆன்மா பற்றிய அறிஞர்களின் ஆழ்ந்த, மனித உய்வுக்கானத் தத்துவச் சிந்தனைகளைக் கொண்டத் தொன்மையான வேதநூலின் (கடோபனிஷது) கருத்துக்களைத் தமிழ் மக்களுக்குத் தந்திட வந்தது இந்திரா மைந்தனின் நூல் (நசிகேத வெண்பா).


அந்தியம்: மரணம்
இந்தியம்: ஆன்மா
புந்தியவர்: அறிவுள்ளவர்
உந்துவழி: உயர்வுக்கான வழி
முந்துநூல்: பழைய நூல், வேதம் (கடோபனிஷது)    றியாமை, பொதுவாகவே கண்மூடித்தனத்தை வளர்க்கிறது. மரணம் பிறவி பற்றிய அறியாமையோ ஆசையாலும் அச்சத்தாலும் தூண்டப்பட்டு, மதம் சடங்கு போன்றத் தீவிரக் கண்மூடித்தனங்களை வளர்க்கிறது.

மரணம் பிறவி பற்றிய அறியாமையை கண்மூடித்தனங்களால் வளர்த்த அறிவற்ற சாரார், புறச்சக்திகளையும் சடங்குகளையும் போதித்தனர்.

இத்தகைய அறியாமைகளை ஒடுக்க அறிவொளி தேவை. அறிவொளியை அடுத்தவரிடத்திலோ ஆகாயத்திலோ ஆழ்கடலிலோ தேடிப் பயனில்லை. இவற்றை விட விரிந்த ஆழ்ந்த பரந்த அகத்திலே தேட வேண்டும். அகத்தின் ஒளியே அவந்தேடி ஓட்டும், அதனால் வெளியே சிவந்தேடல் வீண்.

பிறப்பிறப்பு தொட்ட அறியாமையை ஒடுக்க எண்ணிய அறிவுள்ளவர்கள் தங்கள் தெளிந்த சிந்தனைகளால் மனிதம், தன்னையறிய வலியுறுத்தினார்கள். தன்னறிவுப் பாதையிலே புறச் சக்திகளுக்கு அவசியமில்லை என்று எடுத்துச் சொன்னார்கள்.

ஆன்மீகம் என்றால் 'தன்னைப் பற்றியத் தெளிவு' என்று பொருள். தன்னைப் பற்றி அறியவும் தெளியவும் புறச் சக்திகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, இடையூறும் கூட என்பதைச் சுவையான எடுத்துக்காட்டுடன் (நசிகேதன் கதை) விளக்கினார்கள்.

கடோபனிஷது எனும் தொன்மையான வடமொழி நூலில் அடங்கியுள்ள மனித உய்வுக்கான இச்சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்காக எடுத்துரைக்க வந்த இந்திரா மகனின் இந்நூல், நசிகேத வெண்பா.

தமிழுக்கும் தமிழருக்கும், தமிழ் போற்றும் அனைவருக்கும், காணிக்கை.7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//இந்திரா மைந்தன் மொழி.// மிகவும் ரசிக்க வைத்தது.
இது தமிழுக்கு நீங்கள் செய்துள்ள மிக சிறந்த காணிக்கை. இந்த வடமொழி நூலை இவ்வளவு அருமையாக, இனிய வெண்பாவாக தமிழில் மொழி பெயர்த்து, எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய, தெளிய, நடையில் வழங்கி என்னை போன்றவர்களுக்கும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தங்களுக்கு என் தலை வணங்கிய நன்றியும், வாழ்த்துக்களும்.

உங்கள் அம்மா மிகவும் பெருமைக்குரியவர்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆன்மீகம் என்றால் 'தன்னைப் பற்றியத் தெளிவு' என்று பொருள். தன்னைப் பற்றி அறியவும் தெளியவும் புறச் சக்திகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, இடையூறும் கூட என்பதைச் சுவையான எடுத்துக்காட்டுடன் (நசிகேதன் கதை) விளக்கினார்கள்.


சிறப்பான பகிர்வ் வழ்ங்கியமைக்குப் பாராட்டுக்கள்..

middleclassmadhavi சொன்னது…

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் உயர்ந்ததன்றோ?

நசிகேத வெண்பாவை எங்களுக்கு வழங்கியதும் அப்படி ஒரு உயர்ந்த செயல் தான். மிக்க நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

தங்கள் தாயின் பெயர் இந்திராவா?

வணங்குகிறேன் அறிவிற்சிறந்த தங்களையும், தங்களை ஆக்கி அளித்த அன்னையையும் .

Expatguru சொன்னது…

ஒரு அற்புதமான படைப்பை மிக பிரமாதமாக அளித்தமைக்கு முதலில் உங்களுக்கு நன்றி. வாழ்க்கையின் சாரத்தை தமிழில் இவ்வளவு சிறப்பாக கூற எனக்கு தெரிந்த வரையில் வேறு யாருமே முயற்சிக்கவில்லை என்று நினைக்கிறேன். சில இடங்களில் சற்றே நாத்திகத்தன்மையின் சாயலும் இந்து மத துறவிகளை சாடுவது போன்ற தோற்றமும் இருந்ததை மறுக்க முடியாது. அது எனக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் (மன்னிக்கவும், இது என்னுடைய சொந்த கருத்து), உங்களது தமிழறிவிற்கும் அதை எளிய நடையில் கூறிய விதத்திற்கும் தலை வணங்குகிறேன்.

இந்த காவியத்தை படித்தபோது பல தமிழ் வார்த்தைகளை புதிதாக கற்றுக்கொண்டேன். தமிழில் இப்படி கூட எழுத முடியுமா என்று வியக்க வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள். இதே போல பல பொக்கிஷங்களை அளிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. A standing ovation to you, Appadurai!

geetha santhanam சொன்னது…

இரண்டு வருடங்கள் போனதே தெரியவில்லை. உங்களின் தத்துவ விளக்கங்களும், சிறப்பான வெண்பாவும் கடோபநிஷத்துக்கு மேலும் சுவை கூட்டின என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் கடோபநிஷத்தை மீண்டும் மீண்டும் படித்தது போல் நசிகேத வெண்பாவை மீண்டும் படித்து அதனை உள்வாங்கிக் கொள்ள விழைகிறேன்.
சீரியத் தமிழில் வெண்பா எழுதியதோடல்லாமல், என்னைப் போன்ற சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கங்களும் கொடுத்த உங்கள் உழைப்பைப் பெரிதும் பாராட்டுகிறேன்.
இதைத் தொடர்ந்து வேறு ஏதாவது தமிழ் விருந்தளிப்பீர்கள் என்று ஆவலோடு இருக்கிறோம்.

நிலாமகள் சொன்னது…

முடியும் போது வ‌ருகிறேன்... 'முடியும்' போது வ‌ருகிறேன்! ஒருசேர‌ப் பெறுகிறேன்!! வ‌ந்த‌ன‌மும் வாழ்த்தும் இந்திரா மைந்த‌ன்@அப்பாதுரையின் மேத‌மைக்கு/மேன்மைக்கு!!