வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/05/31

அறிவிலார் தமிழுக்குத் தீங்கு செய்வார்


48
நற்குணக் குள்ளரிவர் நாநம் நலிந்தவர்
சொற்செயல் சாக்கடையுற் சந்தனம் - அற்குணச்
சித்தர் சடங்குகளின் பித்தரிவர் செய்வதோ
தத்தம் தமிழுக்குத் தீங்கு.

   றிவற்றோர் நற்குணங்களில் சிறிதும் வளர்ச்சி பெறாதவர்கள்; பகுத்தறிவு மழுங்கியவர்கள்; சந்தனம் கலந்த சாக்கடை போன்று சொல்லும் செயலும் கொண்டவர்கள்; தீய குணங்களில் தேர்ந்தவர்கள்; தன்னிலை உயரவேண்டி, கண்மூடித்தனங்களை விரும்பி ஏற்பதனால் இவர்கள் தங்களுக்குப் பிறவியிலே கிடைத்த நல்லறிவை அழித்துக் கொள்கிறார்கள் (என்றான் எமன்).


நாநம்: உள்ளறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, ஞானம்
அற்குணம்: அல்+குணம் | இருண்ட குணம் (அல்=இருள்), தீய குணம்
தமிழ்: அறிவு, உடன் பிறந்தது, நெறி
நற்குணம்: அன்பு, நன்றி, கருணை, அடக்கம், பொறுமை, நேர்மை என்பன ஆறுவகை வேர் நிறைகுணங்கள்
அற்குணம்: ஆசை, வெகுளி, மயக்கம், மூடம், பொறாமை, கபடம் (பொய்மை) என்பன ஆறுவகை வேர் குறைகுணங்கள்


['ignorance, above other sins, enslaves the soul' - william gurnall ]

    'அறியாமை என்று புரிந்தும் அறியாமையைப் பழகுவோர் ஆபத்தானவர்கள்' என்றார் மார்டின் லூதர் கிங். கறுப்பு-வெள்ளை என்று நிறத்தின் அடிப்படையில் மனிதர்களிடையே பேதம் பார்க்கும் அறியாமையை வன்மையாகக் கண்டித்தப் பேச்சு. அடிப்படைக் கருத்து எந்த வகை அறியாமைக்கும் பொருந்தும்.

    அறியாமையில் அவதிப்படுவோர் பலர். தன் சொல்லும் செயலும் கடும் அறியாமையால் விளைவன என்று தானாகவே உணர்வோர் சிலர். உணர்ந்த பின் அதற்கேற்ப தன் குணங்களை மாற்றிக் கொள்வோர் வெகு சிலரே. உணர்ந்த பின்னும் குணம் மாறாதோர், மாறத் தயங்குவோர், மாறுவதற்குக் காலம் காரணம் தேடுவோர், ... இவர்கள் ஆபத்தானவர்கள்.

    அறியாமையால் அவதிப்படுவோரிடம் அவர்களின் அறியாமையை எடுத்துச் சொன்னதும், சுவற்றில் முட்டியது போல் பொறிதட்டித் திருந்துவோர் சிலர். எத்தனை எடுத்துச் சொல்லியும் மாறாது, எடுத்துச் சொன்னவர்களையே சுவற்றில் முட்டிக் கொள்ள வைப்பவர்கள் சிலர். இதோ திருந்துகிறேன், அதோ திருந்தினேன் என்று தனக்குத் தானே சொல்லி, விழுந்த குழியை ஆழத்துடன் சேர்த்து அகலப்படுத்துவோர் பலர். தன்னையும் தன்னைச் சுற்றி இருப்போரையும் வேகமாகக் குழிக்குள் இழுப்பவர்கள்... இவர்கள் ஆபத்தானவர்கள்.

    மதம் என்கிற அறியாமையைச் சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தோமானால், மதங்கள் கூட அறியாமையைச் சாடுவதைக் காணலாம். ஐந்து, ஆறு, ஏழு வகைப் பாவங்கள் என்று மதத்திற்கேற்றபடி பாவத்தொகுப்புகள் வேறுபட்டாலும், உலகின் பிரபல மதங்கள் ஒவ்வொன்றும் அறியாமையைப் பாவங்களின் சக்கரவர்த்தி என்கிறது. அறியாமையினால் பிற தவறுகளைச் செய்கிறது மனிதம் என்கிறது மதம். பிறகு, பாவத்தின் சம்பளம், மீட்சி, பரிகாரம் என்று மதங்கள் அங்கிருந்து ஒரேயடியாகச் சறுக்குவதால் மனிதம் அறியாமையை உணரவில்லையோ என்னவோ! எனினும், பாவ-புண்ணிய வியாபாரம் செய்யும் மதவாதிகள் கூட அறியாமைக்கு ஈடான பாவமே இல்லை என்கிறார்கள்!

    அறிவு என்பது ஒரு மாயப்பை. கிடங்கு. சுரங்கம். உள்ளே புதைந்திருப்பது என்னவென்று தெரிந்து கொள்ள உழைக்க வேண்டும். பெரும்பாடு படநேரும்.

    அறியாமை என்பது ஒரு மாயப்பை. கிடங்கு. சுரங்கம். உள்ளே புதைந்திருப்பது என்னவென்று தெரிந்து கொள்ள உழைக்க வேண்டாம். சுலபமாகக் கிடைக்கும்.

    பெரும் நோய்களின் அறிகுறிகள் இன்னவென்று அறிந்து, நோயைப் பற்றிய அறிவைப் பரப்புகிறோம். நமக்கோ நாம் அறிந்த பிறருக்கோ, அத்தகையப் பெரும் நோய் ஏற்பட்டால் உடனே சிகிச்சை பெற விரைகிறோம். பெரும் நோயால் அவதிப்படுவோரைப் பொதுப்பார்வையிலிருந்து விலக்கித் தனியாக வைக்கிறோம். நோய் குணமாக வேண்டும் என்ற அக்கறையை விட, நோய் பரவக்கூடாது என்ற அச்சமே முதற்காரணம். அறியாமையில் அவதிப்படுவோரை வெளிப்படையாக அடையாளம் காண முடிந்தால், அறியாமை எனும் நோய் விலக வழி பிறக்குமோ?

['...பாழும் மனிதர் குணங்களை மட்டும் போர்வையில் மறைத்தானே, இதயப் போர்வையில் மறைத்தானே!' - கண்ணதாசன் ]

    "இன்பங்களை விரும்புதல், தற்பெருமை என அறிவற்றோரின் சில குணங்களைப் பற்றிச் சொன்னேன். மேலும் சொல்கிறேன், கேள்" என்றான் எமன். "நற்குணங்கள் ஆறினில் எதனையும் அதிகம் வளர்த்துக் கொள்ளாதவர்கள். அறிவற்றோரிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது. அன்பு செலுத்தினாலும் அதில் சுயநலமோ வேறு எதிர்பார்ப்போ இருக்கும். இவர்கள் நன்றி அறியாதவர்கள். அதே நேரம், அவர்களே அறியாமல் நிகழ்ந்த நன்மைக்குக் கூடத் தன்னிடம் பிறர் நன்றி பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள்" என்றான்.

    "அவர்களே அறியாத நன்மையென்றால்? அது எப்படி நிகழும்?" என்று கேட்டான் நசிகேதன்

    "தனக்குப் பிறந்த காரணத்தால் கிடைத்தப் பேறுகளுக்காக பெற்ற மக்களிடம் நன்றி எதிர்பார்ப்பது. வசதியான வீட்டுக்குள் வாழப் புகுந்த ஏழைப் பெண் அல்லது ஆணிடம் அவர்களுக்குக் கிடைத்த வசதிக்கு நன்றிகள் எதிர்ப்பார்ப்பது. அறிவும் முனைப்பும் கொண்ட மாணவனுக்குக் கற்பிக்க நேர்ந்தமைக்காக நன்றிகள் எதிர்பார்ப்பது. ஆற்று நீரைப் பருகக் கொடுத்து அதற்காகக் நன்றி கேட்பது. பிறப்பும் இறப்பும் இயற்கையின் விபத்துக்கள். இவற்றில் கூட நன்றி எதிர்பார்க்கும் புன்மைத்தனம் கொண்டவர்கள் அறிவற்றோர்.

    மேலும் சொல்கிறேன், கேள். அறிவற்றோரிடம் கருணை கிடையாது. சுயநலம் மிகுந்த இவர்களிடம் கருணை குறைந்திருப்பதில் வியப்பில்லை. பசி அல்லது பிணிக் கொடுமையாலோ அல்லது வேறு உபாதையாலோ வாடும் சுற்றம் மற்றும் நட்பு வட்டத்தினரிடம் கூட அறிவற்றோர் கருணை காட்டுவதில்லை. அந்த நிலையிலும், தனக்கு எதுவும் கிடைக்கவில்லையே, தன்னுடைய தேவைகள் நிறைவேறவில்லையே என்றே நினைப்பார்கள். பச்சிளம் பிள்ளையான உன்னை எனக்குத் தானம் செய்த நிலையில் கூட, தன் தவறினால் எங்கே தனக்கு சொர்க்கம் கிடைக்காமல் போய்விடுமோ என்றே உன் தந்தை எண்ணினான், நினைவிருக்கிறதா?

    அறிவற்றோரிடம் தன்னடக்கம் கிடையாது. தற்பெருமை கொண்டவர்களிடம் தன்னடக்கம் எதிர்பார்க்க முடியாதே?

    அறிவற்றோரிடம் பொறுமை கிடையாது. இன்பம் தேடும் தீவிரமோ அல்லது வேறு சுயநல உந்துதலோ, எதுவானாலும், இவர்களுக்குப் பொறுமையின் பாங்கு புரியாது. சிந்திக்காமல் தன் தேவைக்கேற்ப அவசரமாக முடிவெடுப்பார்கள். தன் இலக்கை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறியில், வெற்றிப் போதையில், கண்மூடித் தவறுகள் செய்வார்கள். தங்கள் தவறுகளினால் பிறர் பாதிக்கப்படுவதையும் பொருட்படுத்த மாட்டார்கள். உன் தந்தை, உன்னை எனக்குத் தானம் கொடுத்ததே உதாரணம்.

    அறிவற்றோர் நேர்மையைக் கடைபிடிக்க மாட்டார்கள். பொய்யும், புரட்டும், குறுக்கு வழியும் பின்பற்றித் தாங்கள் தேடும் இன்பங்களைப் பெற முயல்வார்கள்.

    மனிதரை மிருகத்திடமிருந்து வேறுபடுத்துவது பட்டறிவு. அனுபவம். இதனால் நன்மையுண்டாகும், தீதுண்டாகும் என்ற காரண-காரியம் தொட்டப் பகுத்தறிவு. அறிவற்றோர், பகுத்தறிவு இருந்தும் பயன்படுத்த மாட்டார்கள். செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்வார்கள். இவர்களுக்கு ஞானம் வளர்வதே இல்லை.

    அறிவில்லாதவர்களின் சொல்லும் செயலும் பொருந்தாது. இனிமையாகப் பேசுவார்கள், கடுமையாக நடப்பார்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று சொல்வார்கள். வாக்களித்துப் பின் கைவிடும் நம்பிக்கைத் துரோகிகள். இடுக்கண் வருகையில் தாய் தந்தை துணை மக்களென்றும் பாராது தம் நலத்தில் குறியாக இருப்பார்கள். ஆனால், இந்தப் பேதங்கள் புரியாத வண்ணம் இனிமையானவராகவும் கண்ணியமானவராகவும் தோன்றும் போலிகள் ஆவர்.

    தீய குணங்கள் ஆறினிலும் தேர்ந்தவர்கள். ஆசை, வெகுளி, மயக்கம் எனும் மும்மலங்களில் இவர்கள் அளவிலா வளர்ச்சியடைந்தவர்கள். எத்தனை செல்வங்கள் கிடைத்தாலும் எத்தனை இன்பங்கள் பெற்றாலும் இவர்கள் மனம் ஆறுவதில்லை. சுயமாகச் சிந்திக்காத மூடர்கள். அற்ப விஷயங்களுக்கும் பொறாமையினால் வாடுவார்கள். பொய்யும் புரட்டும் இவர்களுக்குக் கை வந்தக் கலை. பேச்சிலும் செயலிலும் போலித்தனமும் கள்ளத்தனமும் மிகுந்திருக்கும்.

    சுயநலத்தாலும் போலித்தனத்தாலும் உந்தப்பட்டு, இவர்கள் பிற போலிகளை விரும்பி ஏற்பார்கள். கண்மூடித்தனமான சடங்குகளில் ஈடுபட்டுத் தன்னையும் பிறரையும் இக்கட்டில் ஆழ்த்துவார்கள். அறிவு மழுங்கிவிட்ட நிலையில், இவர்களுக்குத் தங்களின் போலித்தனமும் கண்மூடித்தனமும் உறைப்பதே இல்லை.

    சாக்கடையில் சந்தனம் சேர்ப்பதால் சாக்கடையின் தன்மை மாறுவதில்லை; ஆனால், சந்தனத்தின் தன்மை மாறிவிடும். அறிவற்றோரின் சொல்லும் செயலும் குணங்களும் பாவங்களும் சாக்கடை. அவற்றில் இயற்கையாக தோன்றும் நற்குணங்களும் அழிந்து மறைந்து விடுகின்றன. சந்தனத்தை விழுங்கியும் எப்படிச் சாக்கடையாகவே ஓடுகிறதோ, அறிவற்றவரும் அறியாமை எனும் சாக்கடையுள் அனைத்து நற்குணங்களையும் கரைத்து விடுகிறார்கள்.

    நற்குணம் வெறுத்தும் தீக்குணம் பேணியும் கண்மூடித்தனத்தில் மூழ்கும் அறிவில்லாதவர்கள், தங்களுக்கு இயற்கையிலேயே கிடைத்த தன்னறிவை, நல்லறிவை, உள்ளறிவை,... உணராமலே வாழ்கிறார்கள். தம் தீச்செயல்களால் அந்த நல்லறிவையும் நாள்பட அழித்து விடுகிறார்கள்" என்றான் எமன்.

    நசிகேதனுக்கு அறியாமை மேல் முதல் முறையாக பெரும் அச்சமேற்பட்டது. நடுங்கினான். தன் தந்தை போல் எண்ணற்றோரின் கதி உய்ய வேண்டுமென்ற எண்ணம் அவன் மனதில் ஓடியது. அதே நேரம் அவர்களுக்கு என்ன நேரும் என்று அறியவும் விரும்பினான். "ஐயா, அறிவற்றவர்களின் கதி என்ன, அதைச் சொல்வீர்களா?" என்றான் மீண்டும்.

11 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

அறியாமை பற்றி அருமையான விளக்கவுரை. இரண்டாம் பாகத்தில் பொருத்தமான ஆங்கிலத்தில் பொன்மொழிகளும், அங்கங்கே எடுத்துக்காட்டும் கண்ணதாசன் அவர்களின் வரிகளும் கூடுதல் அழகு. அறியாமை பற்றி கொஞ்சம் கடுமையாகவே சாடியிருக்கிறீர்களே.

பத்மநாபன் சொன்னது…

அறியாமையை பற்றி படித்தவுடன் நசிகேதனின் அச்சம் நமக்கும் தொற்றிக்கொண்டது..எமன் நசிகேதனுக்கு புரியவைக்கும் பாங்கு பச்சை மரத்தில் ஆணி அறைவது போல் உள்ளது..

அப்பாதுரை சொன்னது…

வருக geetha santhanam, பத்மநாபன், ...

அப்பாதுரை சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள், பத்மநாபன். அறிவிலார் பற்றியும் அவர்கள் கதியைப் பற்றியும் எமன் சொன்னதாகப் படித்ததும், எனக்கு ஏற்பட்டதும் அச்சம் தான். அந்த அச்சம் நம்மைத் தொற்றினால் அதுவே முன்னேற்றம் தான் என்று தோன்றுகிறது. இதையெல்லாம் நம்புகிறோமோ இல்லையோ, சிந்திக்க வைக்கிறது என்பதை மறுக்க முடியாது.

Santhini சொன்னது…

99.999999.... % அறிவற்றோரால் நிரம்பியிருக்கும் உலகம் இது என்றால் ஒத்துக் கொள்வீர்களா?
ஏனென்றால் எப்போதேனும் தான் ஒரு ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ, பரமஹம்சரோ, லாவோட்சுவோ தோன்றுகிறார்கள். அவர்கள் அறிவினை அடைந்தவர்கள். ஞானவான்கள். அவர்களோடு ஒப்பிடும்போது, எமனின் வாக்குப்படி அனைவரும் அறிவிலிகளே. அறிவிலிகளால் சூழப்பட்ட இப்பேருலகம், எப்போதும் இன்பத்தை தேடி அலையும், சுயநலம் நிரம்பிய மனிதர்களால் நிரப்பப்பட்டுள்ளது என்கிற உணர்வினால்,
இத்தகைய அறியாமையால் நிரம்பிய நமது மனங்களும், இவ்வுலகில் நரகத்தை உருவாக்கிடுமோ என்ற பயத்தால், அறியாமையை ஏற்றுக் கொள்ளும் அச்சத்தை உருவாக்குகிறது. நம்மை பார்த்து நமக்கு உருவாகும் அச்சம். அறியாமை களைய ஏற்படும் அவசரம். இங்கு ஒரு சிந்தனை கிளையை துவக்குவோம்.
இருமைகளால் ஆக்கப்பட்ட ஒருமையே இவ்வுலகின் இயல்பு எனில், அறிவும், அறியாமையும் இதன் இயல்பேயாம். அறியாமையை நீக்கும் பட்சத்தில் அறிவும் நீங்கும். ஞானவான்களால் சொல்லப்பட்ட கீதையின் வாசகம், எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்பதே. ஆகவே அறிவும் நன்றே, அறியாமையும் நன்றே. இரண்டும் நன்றே, மற்றும் ஒன்றில்லாது மற்றொன்றில்லை எனும் வாதத்தின் படி, அறிதலும், அறியாமையும் இருக்க வேண்டிய ஒருகோட்டின் இரு முனைகள்.
நமது தேவை அல்லது அறிய வேண்டிய உண்மை யாதெனில் இருப்பின் இதன் இயல்பினை அறிவதேயாம். இந்த இயல்பினை அறியும்போது, வாழ்வு குறித்த பதட்டம் மறைகிறது.
அறியாமை குறித்த அச்சத்தை விடவும் மிக தேவையானது இதுவேயாம். அறிவு, அறியாமை இரண்டையும் ஏற்றுக் கொள்தல். ஏற்றுக் கொள்ளும்போது அறியாமை மீது கருணை பிறந்து விடுகிறது.
கருணையோடு அறிவும் பிறக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

இருமை - சொல்லுக்கு நன்றி, Nanum. (இருநிலை எதிர்நிலை என்று என்னென்னவோ போட்டுக் குழம்பி/குழப்பிக் கொண்டிருந்தேன் :-)

உங்கள் பின்னூட்டத்தைப் படித்தக் கணத்திலிருந்து அறிவு/அறியாமை பற்றிய எண்ணங்கள் சுவர்க்கோழி போல் ரீங்காரம் இட, எழுத உட்கார்ந்தால், அட, எங்கே போயின?

மனித dna 70-95% சதவிகிதம் வரை பொது என்கிற பொழுது, மகான்கள் தோன்றும் சாத்தியத்தின் absolute randomness உதைக்கிறது. ஏசுவும் காந்தியும் கூட அறிவில்லாதவர்களாய்த் தான் பிறந்தார்கள் என்று நினைக்கிறேன். எங்கே/எப்போது அறியாமை ஆற்றின் மறுமுனைக்குப் போனார்கள், அவர்களுடைய மாற்றத்துக்கான தார்க்கோல் என்ன என்பது புரியவில்லை. அதை அவர்களும் எடுத்துச் சொல்லவில்லை; பிறருக்கும் தெரியவில்லை.

இன்னொரு கண்ணோட்டத்தில், நம்மில் காந்தி தெரசா ஹிட்லர் எல்லாருமே ஒரு கட்டத்தில் வந்து போகிறார்கள் என்று நினைக்கிறேன். அல்லாக்குணம் கதவைத் தட்டியபோது திறக்க மறுத்ததும் மறந்ததும், பின்னாளில் தமிழில் கதோபனிசது எழுதும் போது உறைக்கிறது.

அறிவு அறியாமை இரண்டுமே இயல்பு தான். ஒன்றில்லாமல் ஒன்றில்லை என்பது சரியே. ஒன்றையடைய மற்றது தேவை என்பது இன்னும் பொருத்தம் என்று தோன்றுகிறது.

வாழ்க்கை, அறியாமையிலிருந்து அறிவை நோக்கியப் பயணம் என்று நம்புகிறேன். பலருக்குப் பயண ரகசியம் புரிவதில்லை. அறியாமையிலேயே பயணம் செய்து முடிக்கிறார்கள் - ஆற்றின் மறுகரைக்குப் போவதே இல்லை. சிலர் அந்தப் பயணத்தின் ரகசியத்தைப் புரிந்து கொண்டு, வாழ்க்கையை தங்களுக்கும் பிறருக்கும் பதட்டமில்லாத அனுபவமாக மாற்றுகிறார்கள். மறுகரையையும் தொடுகிறார்கள். மறுகரையை நீந்தித் தொடும் வாய்ப்பு கிடைத்தவர்கள், மற்றவர்களை இயல்பென்று நினைக்காத போது அவர்கள் மனதின் காந்திக்கதவு மூடிவிடுகிறது.

'அறியாமை ஒன்றே' சரி; 'அறியாமை நன்றே' சற்றுத் தயக்கமாக இருக்கிறது. 'அறியாமை நீங்கும் பொழுது அறிவும் நீங்கும்' என்று நீங்கள் சொல்வது புரிகிறது. 'அறியாமை நீங்கியது என்ற புரிதல் இருக்கையில், எஞ்சி இருப்பது அறிவானால் என்ன, எதுவானால் என்ன?' என்று கேட்கத் தோன்றுகிறது. 'குருடருக்கு ஒளி பற்றித் தெரியாது' என்ற கருத்தின் பேதமை புரியக் கொஞ்சம் நேரமாகிறதே, என்ன செய்ய?

முழுவதும் ஒளியாகவோ முழுவதும் இருளாகவோ இருக்கையில் பதட்டமே இல்லை. 'இதில் கொஞ்சம் அதில் கொஞ்சம்' எனும் பொழுது அச்சம், பதட்டம், அவசரம் எல்லாம் தோன்றுகிறது.

நம் அறியாமை என்றால் அச்சமும் பிறர் அறியாமை என்றால் கருணையும் கொள்வதும் இயல்பு என்று நினைத்துப் பழகத் தோன்றுகிறது. (இது கண்ணாடி முன்பான பார்வை என்பதும் புரிகிறது :)

சிந்தனைக் கிளைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது, Nanum.

Santhini சொன்னது…

அறியாமை எங்கே முடிகிறது? அறிவு எங்கே துவங்குகிறது ? இரண்டையும் பிரிக்கும் எல்லைக்கோடு எது ?
இதைப் பற்றி சிந்தியுங்கள். புதியதாய் ஒரு வெளிச்சம் கிடைக்கும். புத்தரும், அல்லாவும் என்ன காரணத்தால் ஞானிகள் என அறியப்பட்டார்கள்?, உங்களின் நோக்கில் அவர்கள் யார் ?

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

வணக்கம் அப்பாதுரை ஐயா,

முக்கனி போல் 3 தளங்களை இயக்கிக்கொண்டிருக்கிறீர்கள்..

மகிழ்ச்சி..

தீய குணங்களை சொல்லவந்தபோது,

//சாக்கடையில் சந்தனம் சேர்ப்பதால் சாக்கடையின் தன்மை மாறுவதில்லை; ஆனால், சந்தனத்தின் தன்மை மாறிவிடும். //

என்று சொல்லியிருப்பது அருமையான உவமை..

வாழ்த்துக்கள்,

http://sivaayasivaa.blogspot.com

அன்பன், சிவ.சி.மா.ஜா

சிவ.சி.மா. ஜானகிராமன் சொன்னது…

வணக்கம் ஐயா,

தங்கள் தளத்தை பின்தொடர்வதற்குரிய FOLLOWERS WIDGET மற்றும் FEED BURNER VIA EMAIL SUBSCRIBER முதலியவற்றைத் தங்களத் தளத்தில் இணைத்தால் அன்பர்களுக்கு உதவியாக இருக்குமே ?

நன்றி

http://sivaayasivaa.blogspot.com

அன்பன், சிவ.சி.மா.ஜா

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி ஜானகிராமன் ஐயா.
followers widget வேலை செய்வதில்லை - ஏனென்று தெரியவில்லை; experimental availability என்கிறது blogger. மற்றது முயற்சி செய்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

\\"தனக்குப் பிறந்த காரணத்தால் கிடைத்தப் பேறுகளுக்காக பெற்ற மக்களிடம் நன்றி எதிர்பார்ப்பது.//

பொட்டில் அடித்தது போல் இருந்தது . நிறையபெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன்.பெற்றேன் வளர்த்தேன் படிக்க வைத்தேன். நன்றி கெட்டுப் போய்விட்டான் என்று புலம்புவதை. அறியாமை என்று நினைத்துக் கொள்வேன்.