வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/01/28

அம்பரம் எளிதல்ல என்றான் எமன்


22
வாரியில் ஏரியில் பாரியில் வீழினும்
மாரியது மாறி மழையாகும் - சீரிணரும்
நீருக்கு வேரறியா நீர்போலே ஈருலகும்
பேருக்குத் தேடுவார் பேறு.

    டலிலோ ஏரி குளங்களிலோ நிலத்திலோ விழுந்தாலும், மழைநீர் உருமாறி மீண்டும் மழைநீராகவே விழுகிறது; தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து வேறு விதமாக மாறத் தெரியாத நீரானது, எப்படி மழையாக மாறி கடல் நதி நிலம் என்றுச் சுற்றி வருகிறதோ, அதுபோல், ஞானிகளும் தங்களைப் பற்றிய உண்மையை அறியாமல், பிறவாமை எனும் பேற்றினைத் தேடி என்னுலகம், பொன்னுலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கும்* வந்து போகிறார்கள் (என்று எமன் சொன்னான்).

*எமனுலகே சொர்க்கநரகங்களின் முதல்படி என்று உலகின் பிரபல மதங்களில் நம்பப்படுகிறது. ஒருவர் செய்த நல்வினை தீவினைகளின் அளவுக்கேற்ப நரகம் சொர்க்கம் இரண்டிலுமே வாழும் வாய்ப்பு கிடைப்பதாகவும் - பிரிந்த உயிரின் பயணத்தில் முதல் நிறுத்தம் எமனுலகம் என்றும் - அங்கே நல்வினை தீவினை இரண்டையும் கணக்கிட்டு, அதற்கேற்ப நரக, சொர்க்க வாசத்தின் காலம் நிர்ணயிக்கப்படுவதாகவும் - உயிரானது முதலில் தீவினைகளின் பலனை நரகத்தில் அனுபவித்து விட்டு, பிறகு நல்வினைப் பலனைச் சொர்க்கத்தில் பெறுவதாகவும் - சொர்க்கவாசக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறவியெடுப்பதாகவும் - சொல்லப்படுகிறது.
  வாரி: கடல்
  பாரி: பூமி, நிலம்
  மாரி: மழை
  சீரிணர்: கற்றோர், ஞானிகள்
  வேர்: அடிப்படை, உண்மை, காரணம்


    ரு கற்பனைக் கேள்வி: நீராக மாறி மழையாகத் திரும்பி அலுத்து விட்டதால், அறிவு வந்து தன் நிலையைப் புரிந்து கொண்ட எரிவாயு, இனி நீர்வாயுவுடன் இணைவதில்லை என்று தீர்மானித்தால் என்ன ஆகும்?

    எதிர்பார்த்த பலன் தராத எத்தனையோ செயல்களை நாம் தொடர்ந்து செய்கிறோம். மதிக்காத பிள்ளை, அன்பில்லாத உறவு, பிடிக்காத தொழில், ஏமாற்றும் அரசாங்கம், முன்னேற்றமில்லாத வேலை, வளராத செல்வம்... என்று வீட்டிலும் வெளியிலும் பிடிப்போ திருப்தியோ ஏற்படாவிடினும், நாம் செய்ததையே செய்துச் சுழன்று மாற்றத்துக்கு ஏங்குகிறோம். மாற்றம் வேண்டும் என்று உண்மையாகவே எண்ணினால், செய்ததையே திரும்பச் செய்வோமா? இருந்தாலும், சமூகம் கடமை வயது என்று ஏதோ ஒரு இயலாமையில் சிக்கிச் சுழல்கிறோம்.

    குழியிலிருந்து எழுந்து வர முதலில் என்ன செய்ய வேண்டும்? தோண்டுவதை நிறுத்த வேண்டும். நமக்குள் இருக்கும் எரிவாயு, நீர்வாயுக்களை அறிந்து கொள்ள வேண்டும். மாறுவது எளிதல்ல. ஒரு நிலையில் மாற்றம் வேண்டுமெனில் முதலில் அறியவேண்டியது அந்நிலை ஏற்படக் காரணமும் அடிப்படையும் யாதென்பதே. அப்போதைக்கு ஒரு மாத்திரையை விழுங்கித் தப்பிக்கலாமே ஒழிய, தலைவலியின் காரணத்தைப் புரிந்து கொண்டாலே வலி வராமல் தடுக்க முடியும். காலையில் எழுந்தவுடன் வருகிறதா, சாப்பிட்டதும் வருகிறதா, தூசு படிந்த இடங்களில் நடமாடுகையில் வருகிறதா, தொழில் பணம் நட்பினால் உண்டான அழுத்தத்தால் வருகிறதா, என்ன சாப்பிட்டோம், தூங்கும் பொழுது பல்லைக் கடிக்கிறோமா, மலச்சிக்கலா, அலர்ஜியா, உடலில் நீர் குறைவா,... எத்தனையோ காரிய-காரணங்களை ஆய்ந்து ஆணிவேர்க் காரணத்தைக் கண்டறியலாம். வலியைத் தடுக்கலாம்.

    ஆணிவேர்க் காரணத்தை ஆய்ந்து கண்டால் மாற்றம் ஏற்படுத்துகிறோமோ இல்லையோ, பொருந்தாதத் திருத்தங்களை நிறுத்தலாம். கண்மூடித்தனத்தை நிறுத்தலாம். தோண்டுவதை நிறுத்தலாம். வெளியே வருவது அடுத்த செயல். 'root analysis' என்று காரண-காரிய ஆய்வைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள் மேலாண்மை மற்றும் அறிவியல் நிபுணர்கள்.

    பொறுப்புள்ள ஆசிரியன், மாணவனின் திறமையைத் தொடர்ந்து சோதிக்க வேண்டும். 'அறிவுப் பாதையில் முன்னேறுவானா? தகுதியிருக்கிறதா?' என்று சோதித்து, அதற்கேற்ற வேகத்தில் தன் மாணவனை நடத்திச் செல்வது நல்ல ஆசிரியனின் இலக்கணம்.

    அறிவுள்ள மாணவன், ஆசிரியனைத் தொடர்ந்துத் தூண்ட வேண்டும். 'எத்தனை நாள் அரிச்சுவடியைச் சொல்லித் தருவாய், அடுத்தது என்ன?' என்று முன்னேற்றத்தை எடுத்துக் காட்டித் தூண்ட வேண்டும். ஆர்வமும், புரிந்து கொள்ளும் பக்குவமும் இருப்பதைக் காட்ட வேண்டியது, நல்ல மாணவனின் இலக்கணம்.

    மன் சொன்னதன் உட்பொருள்: ஒவ்வொரு காரியத்துக்கும் காரண அடிப்படைகள் இருக்கின்றன; தன்மை நீர்மைகள் உள்ளன. அதைப் புரிந்து கொண்டாலொழிய மாற்றம் ஏற்படாது. பிறப்பற்ற இடம் என்று சொர்க்கத்துக்கு வந்தாலும் அளிக்கப்பட்ட காலம் முடிந்ததும், மீண்டும் பிறவியெடுத்தாக வேண்டும். பிறவாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? சொர்க்கவாசக் காலத்தை வரையறையின்றி நீடிக்க வேண்டும். சொர்க்கவாசத்தை நீடிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    எமன் அருமையான ஆசிரியன். நசிகேதன் கேட்ட வரத்தால் வியந்தாலும், 'விவரங்களைப் புரிந்து கொள்வானா சிறுவன்?' என்று சோதிக்கவும், 'அம்பரம் போகும் வழி எளிதாக இருக்கும்' என்ற எதிர்பார்ப்பைக் கட்டவும், பொன்னுலகம் பற்றிச் சொன்னான். 'புரிந்தவருக்கும் பிந்தும் பொன்னுலகம்; அங்கே வரும் சீரிணரும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல் படுகிறார்கள். நீரின் வேரறியார்' என்று நசிகேதனின் வயதொத்த அறிவுக்கு மீறிய கருத்துக்களை எடுத்துச் சொன்னான். பிறவி என்பது தலைவலி. சொர்க்கமும் நரகமும் தலைவலி மாத்திரைகள். திருகுவலி தரக்கூடிய மாத்திரைகளே தவிர தடுக்கவல்லவை அல்ல. நீருக்குள் புதைந்திருக்கும் எதிர்நிலைகள் போல் மனிதனுக்குள் புதைந்திருக்கும் எதிர்நிலைகளைப் புரிய வைப்பது காரண-காரிய ஆய்வு. ஆய்வின் பலனாகக் கிடைப்பது மெய்யறிவு. மெய்யறிவு பெறும் வரை, 'மழைநீர் மீண்டும் மீண்டும் கடல், நிலம் என்று சுற்றுமே தவிர வேறு நிரந்தரமான இலக்கில்லை' என்ற உதாரணத்தோடு பிறவிச் சுழற்சியின் பரிதாபக் குழியைச் சுட்டினான். அந்தக் குழியிலிருந்து எழ, வேரறிவு அல்லது உண்மையறிவு தேடும் அவசியத்தைச் சுட்டினான். கற்ற ஞானிகளும் எளிதில் மெய்யறிவு பெறுவதில்லை என்று சொல்லி நசிகேதனின் எதிர்பார்ப்பைக் கட்டினான்.

    நசிகேதன் நல்ல மாணவன். முதலில் 'பிறப்பில்லா இடம்' பற்றிச் சொல்லி தன் அறிவுத்தேடலைக் காட்டினான். பிறகு, 'அம்பரம் தா' எனாமல் 'அம்பரம் ஏகும் வழியைச் சொல்' என்று கேட்ட விதத்தில், காரியத்தை விடக் காரணத்தை அறிய ஆர்வமிருப்பதையும் எடுத்துச் சொன்னான்.

    இருவருமே தங்கள் தகுதிகளை வெளிப்படுத்தி விட்டார்கள். "சொன்னதையே திரும்பச் சொல்லாமல், மேற்கொண்டுச் சொல்லுங்க வாத்தியாரே" என்று பார்வையால் கேட்டாலும், எமனின் பதிலுக்குப் பணிவுடன் காத்திருந்தான் நசிகேதன்.

9 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

root analysis, expectation control என்று நீங்கள் தரும் மேலாண்மை கருத்துக்களும் விளக்கங்களும் அருமை. உங்கள் விளக்கத்தால் நசிகேதனைவிட எங்களுக்கு இன்னும் அதிக பாடங்கள் கிடைக்கின்றன. நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

அருமை. தலை வலி பற்றி ஒரு முறை காஷ்யபன் அய்யா பதிவில் நாம் பேசிக் கொண்டோம். அப்போதிருந்து எனக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு விடை தந்திருக்கிறீர்கள்.தலைவலி விசயத்தில் எனக்கு மிகுந்த கசப்பான அனுபவங்கள் உண்டு. இது பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் அவசியம்.
அப்புறம் எரிவாயு மற்றும் நீர்வாயு சொற்பிரயோகங்களின் ஆங்கில மொழியாக்கம் என்ன? எனக்கு குழப்புகிறது. எரிவாயு என்பது மீத்தேன் எனப்படும் CH4.
கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.

அப்பாதுரை சொன்னது…

வருக geetha santhanam, சிவகுமாரன்,... நன்றி.

அப்பாதுரை சொன்னது…

hydrogen:oxygen=நீர்வாயு:எரிவாயு என்று நினைத்தேன். என்னுடைய தமிழறிவின் வரம்புகளைத் தாண்டியது என் பிழையே.

தமிழ் சொன்னது…

அருமை

வெண்பா இன்னும் உள்ளத்தில் ஆசானமிட்டு அமைந்து கொண்டு என்னவோ செய்கிறது

நன்றிகள்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி திகழ். வருக.

(ஆமாம், உங்கள் வெண்பா வனத்தில் பின்னூட்டம் இட முடியவில்லையே? ஒன்றுரைப்பான் மிகவும் ரசித்தேன்)

பத்மநாபன் சொன்னது…

மழையை எடுத்துகொண்டு பரிணாமத்தையும் பரிணமிப்பையும் சிறப்பாக விளக்கம் வந்திருக்கிறது ... கடலிலிருந்து பயணம் ஆவியாகி, மேகமாகி, துளியாகி மழையாகி வெள்ளமாகி சில நீராகவே கடலை அடையும் ...சில வேறு உருவில் கடலை அடையும்....
//குழியிலிருந்து எழுந்து வர முதலில் என்ன செய்ய வேண்டும்? தோண்டுவதை நிறுத்த வேண்டும் // அருமையான கருத்து ...எதாவது செய்தாக வேண்டுமே என்று எழுவதற்கு பதிலாக உள்ளே போய்கொண்டிருக்கிறோம் ... காரணம் நோக்கினால் , காரியம் எளிதாகும் ..நசிகேதனும் காரியத்தை விட காரணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது முன்னேற்றத்துக்கான படிகள்....

meenakshi சொன்னது…

உங்கள் கற்பனை கேள்வி பிரமாதம். சில நேரங்களில் சில விஷயங்களில் சலிப்பு ஏற்பட்டாலும் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற மனப்பக்குவம் வரவேண்டும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக எனக்கு படுகிறது.

உயிரானது முதலில் தீவினை செய்ததற்கான தண்டனையை அனுபவித்து விட்டு பின்பு நல்வினை செய்ததன் பலனை சொர்க்கத்தில் அனுபவிக்கிறது. எதற்காக முதலில் கஷ்டத்தையும் பிறகு சுகத்தையும் அனுபவிக்க வேண்டும் என்கிறார்கள். முதலில் சுகத்தை அனுபவித்தால், மனதில் ஏற்படும் அந்த நிறைவோடு பின் கஷ்டத்தை தாங்கிக் கொள்வது எளிதல்லவா!

மனிதர்கள் எல்லோரும் ஒவ்வொரு விதம். இதில் எல்லோரும் மெய்யறிவு பெறவேண்டும் என்பது அவசியம் என்றால், அதை பற்றிய விழிப்புணர்வே இல்லாதவர்களுக்கும், அந்த விழிப்புணர்வை வரவேண்டியது அவசியம் இல்லையா! அது எப்படி ஏற்படும்? எல்லோருக்குமே 'தேடுதல்' உணர்வு வருவதில்லையே!

சிவகுமாரன் சொன்னது…

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி .
போட்ட பின்னூட்டங்களை பொறுக்கிக்கிட்டது ஏனுங்க ?