வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி
இரண்டாம் வரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டாம் வரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2011/02/11

மூன்றாம் வரம் கேளென்றான் எமன்


26
நான்கு நெறிகளையும் நெஞ்சில் நிறுத்திநிதம்
மூன்று முறையேனும் மூச்சடக்கும் மாந்தர்
இருநிலை விட்டிருப்பார் என்றும் இனியுன்
ஒருவரம் வேண்டியே ஓய்.

    அடக்கம், அருள், அன்பு, அறம் எனும் நான்கு நெறிகளை மனதில் எண்ணியபடி தினமும் மூன்று முறையாவது மூச்சையடக்கிப் பழகும் மனிதர்கள், மரணம் பிறவி எனும் இரண்டு நிலைகளையும் துறப்பார்கள்; இனி எஞ்சியிருக்கும் உன் ஒரு வரத்தை கேட்டு முடி (என்றான் எமன்).




    'வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படும்' என்றார் வள்ளுவர். 'தெய்வம் வானில் உறையும்' என்ற பொது நம்பிக்கையினால் சொன்னாரே தவிர, தெய்வமாக வாழ வானுலகம் செல்ல வேண்டியதில்லை என்பதே வள்ளுவர் வாக்கின் மறைபொருள்.

    இனிப்பு மருந்து. மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகி விடும் என்ற நம்பிக்கை. மருந்துண்ணும் அவசியமே இல்லாது நோயின்றி வாழலாம் என்றால், 'அதெப்படி?' என்று நகைப்பதில்லையா? பல மருந்துகளை ஒவ்வொன்றாகப் பயன்படுத்திப் பார்த்து, முடிவில் 'சிறுவயது முதலே உடல் நலத்தைப் பேணுவோர்க்கு நோய் வராது, மருந்தே தேவையில்லை' என்று அடுத்தவருக்கு அறிவுரை வழங்குவது நமக்குப் பிடிக்கும். வள்ளுவரைப் போல் மனிதமனம் அறிந்தவர் உண்டோ? மரண பயம் மன நோய். சடங்குகளும் கண்மூடித்தனங்களும் பயனில்லா மருந்துகள். நல்லொழுக்கம், பயனற்ற மருந்தின் அவசியத்தை நீக்கும் முறையானப் பேணல். 'மனிதனாக வாழலாம்' என்றால் கேட்போமா? 'அடப்போய்யா, தாடிக்காரரே!' என்போம். அதனால், 'தெய்வமாக வாழலாம்' என்றார் வள்ளுவர். 'ஆகா!' என்று இன்றுவரைத் தலையாட்டுகிறோம். 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்' எனும் வரிகள், இரண்டு நிமிட இசை ரசனைக்கும் அப்பாற்பட்டது என்று உணர்ந்தால், ஏதேனும் செய்வோம்.

    'நசிகேத வேள்வியை தினம் மூன்று முறை செய்தவர்கள் மோட்சம் பெறுவார்கள்' என்று இந்தப் பாடலுக்குப் பொருள் கொள்ளலாம்; 'தினமும் மூன்று முறையாவது நசிகேத வேள்வி எனும் நல்லொழுக்க வாழ்க்கை முறையைக் கடைபிடித்தால், மரணம் பிறவி என்ற வீண் சிந்தனைகளைத் தவிர்க்கலாம்' என்றும் பொருள் கொள்ளலாம். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்தல் எளிது. சிறுகச் சேர்த்தால் பெருகும் தானே?

    சொர்க்கம் செல்லும் வழியை உலகுக்கு அறிவிக்க எழுதப்பட்டதல்ல நசிகேதன் கதை. மரணபயம் தொட்டக் கண்மூடித்தனங்களைத் தவிர்த்து, வாழ்நாளில் மனிதன் மனிதனாக அறிவோடும் அன்போடும் வாழவேண்டும் என்பதை உணர்த்தவே எழுதப்பட்டது. ஒரு மனிதனுக்கேற்பட்ட மரணக் கலக்கத்தினால் தானே இந்தத் தொல்லை நிகழ்ந்தது? மரணம் பற்றிய அறியாமையினால் தானே இந்த நிலை வந்தது? வாழும் நாளில் ஒழுக்கம் தவறாதிருந்தால் மரண அச்சம் தேவையில்லையே? பூமியிலேயே நிம்மதி கிடைக்குமே? சொர்க்கத்தில் நிம்மதியும் நிறைவும் தேடுவதை விட, வாழ்நாளில் பூமியில் பெறுவது இன்னும் மேன்மையல்லவா?

    'அப்பா அம்மாவிடம் போக வேண்டும், பழம் பாயசம் வேண்டும், பொம்மை வேண்டும் என்று மூன்று வரங்களைக் கேட்பானென்று பார்த்தால், எங்கேயோ போகிறானே பிள்ளை? வரம் தருவதாகச் சொல்லி இக்கட்டில் சிக்கினோமா? இதென்ன, வம்பாகி விட்டதே!' என்றெல்லாம் எமன் நினைத்தானா? அதை மனதில் கொண்டவன் போல், 'மூன்றாவது வரத்தைக் கேட்டு முடியப்பா சீக்கிரம்' என்றானா? அல்லது, எமன் இதுகாறும் நசிகேதனை மெய்யறிவு பெறத் தயார் செய்தானா?

    மெய்யறிவு பற்றிய நசிகேத போதனைக்கு, மூன்றாவது வரமே விதை. ►

2011/02/08

வேள்விக்கு நசிகேதன் பெயரிட்டான் எமன்


25
வேள்வித்தீ மாட்சியை வாய்ப்பாடாய் மீட்டுரைத்தோன்
வாள்முனைப் பாங்கறிந்து வந்தகாலன் - கேளென்றான்
என்னாதார் இல்லார் இதுவுந்தீ என்றினிமேல்
பொன்னாரம் ஒன்றினையும் போட்டு.

    வேள்வியின் சிறப்பையும் முறையையும் வாய்ப்பாடாகத் திருப்பிச் சொன்ன நசிகேதனின் வாள்முனை போன்ற கூர்மையான அறிவைக் கண்டு மகிழ்ந்த எமன், நசிகேதனுக்கு ஒரு பொன்மாலையைச் சூட்டி, "இனி இந்த வேள்வியை உன்னுடையதாக உன்பெயரிட்டு அழைக்காதவர் எவருமில்லை" என்றான்.

பாங்கறிந்து வந்தகாலன்: பாங்கு அறிந்து உவந்த காலன்
என்னாதார்: என்று வழங்காதார்
இதுவுந்தீ: இது உன் தீ (நசிகேத வேள்வித் தீ)



    கசடறக் கற்பதும், கற்றதைத் தெளிவாக வெளிப்படுத்துவதும் மாணவனுக்கு அழகு. மாணவனின் திறனறிந்து மெச்சி மேலும் நல்லறிவூட்டுவது ஆசிரியனுக்கு அழகு. தெளிந்த அறிவைப் பெற வழி செய்யும் கல்வியைக் கசடறக் கொடுப்பதே நல்ல மாணவனுக்குப் பெரும் பரிசு என்றாலும், தவறில்லாமல் கற்றான் என்பது தெரிந்து ஊக்கப் பரிசு கொடுப்பது, ஆசிரியரின் கடமை தாண்டிய அன்பை மேம்படுத்திக் காட்டுவதாகும்.

    'பொன்னால் செய்திருந்தாலும், ஆரம் சங்கிலியே. பிறவிப்பிணி பொன்னாரம் போன்றது. பொன்னைக் கண்டு மயங்காமல் அந்தச் சங்கிலியை அறுக்க, தெளிவான மனமும் ஒழுக்கமும் வேண்டும் என்ற உண்மையை உணர்த்தவே எமன் பொன்னாரம் வழங்கினான் என்பதை நசிகேதன் புரிந்து கொண்டான்' என்று வடமொழிப் பாடலுக்கு ஆதிசங்கரர் வழங்கிய விளக்கம் சுவையானது. ►

2011/02/04

வேள்வி விவரம் சொன்னான் எமன்


24
அடக்கமருள் அன்பறம் கட்டி அதனுள்
முடக்கவொரு மூச்சில் வருந்தீ - புடமிட்டப்
பொன்போலே மின்னும் மனிதமும் பற்றற்றுத்
தன்னுள்ளே தீவளர்க்கும் போது.

    எதிர் நிலைகளைச் சாராது, மனதுள் அடக்கம், அருள், அன்பு, அறம் எனும் சிந்தனைகளைச் செய்தபடி மூச்சை அடக்கிப் பழகுவதே வேள்வி; இந்த நல்லொழுக்க வேள்வித்தீ, மனிதரைப் புடமிட்டுப் பொன் போல் மின்னச் செய்யும் (என்றான் எமன்).


வேதமும் சாத்திரமும் நன்கு கற்றறிந்த ஞானி ஒருவர் இருந்தார். தனக்குச் சுய அறிவு முற்றும் வந்ததென்று நினைத்தார். தன்னை அறியும் வித்தையைப் பற்றி அந்த ஊர் அரசனுக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய பேரறிவைப் பகிரங்கப் படுத்த எண்ணினார். அரசனிடம் சென்று, "அரசே, முழுமையான சுய அறிவைப் பெறுவது எப்படி என்று உனக்குக் கற்றுத் தருவேன்" என்றார்.

அரசனும் அறிஞனே, எனினும் முழுமையான தன்னறிவைப் பெற பெரும் முயற்சி செய்து கொண்டிருந்தான். வாராது வந்த மாமுனி தாராது தரும் பேரறிவை விடுவானா? "பேரறிஞரே, உங்களுக்குப் பொன்னும் மண்ணும் பரிசளித்து மகிழ்வேன். தன்னறிவாம் பேரறிவைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவோடு கேட்டான்.

"ஒரு வேள்வி செய்ய வேண்டும்" என்றார் ஞானி. "மனதை ஒருமைப்படுத்தி மூச்சை அடக்கிப் பல காலம் செய்ய வேண்டிய வேள்வி. உன்னால் முடியுமா?"

"மூச்சைக் கட்ட ஓரளவுக்குத் தெரியும். மனம் தறிகெட்டு ஓடுகிறதே, எப்படி ஒருமைப்படுத்துவது என்று சொல்லித் தருவீர்களா?" என்றான் அரசன்.

"மனதை ஒருமைப்படுத்துவதே தன்னறிவின் முதல் படி. இதோ எதிரில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறானே, சூரியன். அவனே பேரறிவின் சின்னம். அவனையே மனதில் எண்ணி மூச்சைக் கட்டினால் ஒருமைப்படுத்தலாம்" என்றார் ஞானி.

"சூரியனை ஏன் மனதில் வரிக்க வேண்டும்?" என்றான் அரசன்.

"சூரியன் இருளை அகற்றி உலகெங்கும் விழிப்புக்கு வழி செய்கிறான்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சூரியன் என்பது மனிதன் வடித்த உருவம். சூரியன் என்ற உருவத்துக்கு எல்லையுண்டு. சுயேச்சையான சக்தி எதுவும் இல்லை. சுயேச்சையான எல்லயற்றத் தன்மையதான ஒளி சூரியனுக்குப் பின்னணியில் இருப்பதால், நான் ஒளியை மனதில் வரித்து மனதைக் கட்டுப்படுத்துகிறேன். சூரியனை வரித்தால் மனம் சூரியனுக்குக் கட்டுப்பட்டதாகி விடுமே? பிறகு மனம் நமக்கு எப்படிக் கட்டுப்படும்? மேலும், சுயேச்சையான குணத்தை ஒரு உருவத்துள் கட்டி வைத்தால், அவரவர் கட்டிய உருவங்களினால் கலவரம் வருமே? தன்னைப் பற்றிய அறிவை எப்படி வழங்கும்? ஒருமைப்பாடு எப்படி வரும்? என் மக்களுக்குள் உருவங்களால் பிரிவினை வரும். அவர்களுக்கு ஏற்பில்லாதது எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

"அப்படியா? சந்திரனை எண்ணி மனதைக் கட்டு. நான் பலமுறை அவ்வாறு செய்து சுய அறிவு பெற்றிருக்கிறேன்" என்றார் ஞானி.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "சந்திரன் என்பதும் மனிதன் வடித்த உருவம். சந்திரனின் தன்மை தண்மை. மனித மனம் அன்பினாலும் பண்பினாலும் குளிர்கிறது. சந்திரனுக்குப் பதில் அன்பையும் பண்பையும் மனதில் வரித்தால், சந்ததியும் சுற்றமும் என்றைக்கும் கொண்டாடுவார்கள். நீங்கள் சொல்லும் வழி என் மக்களுக்கு உதவாது. அவர்களுக்கு உதவாத வழி எனக்கும் உதவாது" என்றான் பணிவுடன்.

ஞானி யோசித்தார். வம்பாகி விட்டதே? "வெளி" என்றார். "மன்னா, உன் சிக்கலுக்குத் தீர்வு கண்டேன். வெளி உருவமற்றது, பரந்தது, எல்லையில்லாதது, தனித்தன்மையற்றது. வெளியை வரி" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "வெளியின் தன்மை என்ன? அளக்கமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை. வெளியின் குணங்களை மனதில் வரித்தால் மனம், நிறைவு மற்றும் நிலைத் தன்மைகளை அடையுமே? வெளியை அளக்க முடியும் - இதோ பாருங்கள்" என்று இரண்டு கைகளையும் பந்து போல் அடக்கி அவரிடம் காட்டினான். "இதோ, என் கைக்குள் சிறைப்பட்ட வெளியை இங்கிருந்து அங்கே எடுத்துச் செல்ல முடியும்" என்று நகர்ந்து காட்டினான். "வெளி என்பதை விட, வெளியின் தன்மைகளான அளவிடமுடியாத நிறைவு மற்றும் அசைக்கமுடியாத நிலை என்ற குணங்களை வரிக்கும் மனிதம், குறுகிய ஆசைகளை விடுத்துப் பரந்த நோக்கத்துடன் செயல்படும். நீங்கள் சொல்லும் வெளி என்ற காரியம் என் மக்களுக்குப் பயன் தராது. மக்களுக்குப் பயன் தராத எதுவும் மன்னனுக்கும் பயன் தராது" என்றான் பணிவுடன்.

ஞானிக்கு ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து நீர் நெருப்பு ஒலி உரு கண்ணாடி திசை என்று உருவமும் அருவமுமாகப் பலவற்றை எடுத்துச் சொன்னார் ஞானி. எல்லாவற்றையும் பணிவோடு கேட்டு, குணங்களான காரணங்கள் குண வெளிப்பாடுகளான காரியங்களை விட மேன்மையானவை என்று சொல்லி ஏற்க மறுத்தான் மன்னன். காரணங்களே மனதை ஒருமைப்படுத்தாத நிலையில், காரியங்கள் மனதைக் கட்டாது என்று பணிவாகச் சொன்னான்.

ஞானி சற்று யோசித்து, "தான்" என்றார். "மன்னா, தன்னைத் தானே மனதில் வரித்து மூச்சைக் கட்ட வேண்டும். சுயம், அதாவது தன் ஆத்மாவை விட தன்னறிவைப் பெற்றுத் தரும் அருவம் எதுவும் இல்லை" என்றார்.

"மன்னியுங்கள் பேரறிஞரே" என்றான் மன்னன். "தான் என்று நீங்கள் குறிப்பிடும் சுயம், சுயமல்ல. எல்லையுடையது. அளவுடையது. நிறைவில்லாதது. தான் என்பது சாரமாகும். மனிதத்தின் அடையாளம். மனிதம் என்பதோ பரந்த எல்லையற்ற அளவுகடந்த நிறைவான உணர்வைக் குறிக்கும். மொத்த மனிதத்தையும் மனதில் வரித்தால் மொத்த மனிதத்தின் தன்மைகளான நேயங்கள், அதைவிட மாற்றுக்குறைந்த 'தான்' என்பதற்கு வழிகாட்டுமே? தன்னை மனதில் வரிப்பது என் மக்களுக்கு ஏற்ற வழியல்லை; மக்களுக்கு ஏற்ற வழியே மன்னனுக்கு ஏற்ற வழி" எனறான் பணிவுடன்.

ஞானி பார்த்தார். சரிகை முண்டாசைக் கழற்றி வீசினார். பட்டு மேல்துண்டை மன்னன் காலடியில் வைத்து, மன்னன் காலில் விழுந்தார். "ஐயா, நான் ஞானி இல்லை. நீரே ஞானி. இந்தப் பட்டு மேல்துண்டு என்னுடைய காணிக்கை. என்னை உமது மாணவனாக ஏற்க வேண்டும். தன்னறிவு பெறும் வழியை எனக்கு விளக்க வேண்டும்" என்று மன்னனைக் கெஞ்சினார்.

மன்னன் அதிர்ந்தான். "ஐயா! என்ன இது! என்னைப் போன்றவருக்குப் பாடம் சொல்லி வழி காட்ட வேண்டிய உமக்கு நான் பாடம் சொல்வதா?" என்று பதறினான். ஞானியின் காலில் விழுந்தான். எழுந்து, "ஐயா, நீங்கள் தான் எங்களுக்குக் குரு. இருப்பினும் குரு-மாணவன் என்ற முறையை விட்டு, ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குப் புரியும் உதவியாக, தன்னறிவு பெறும் முறையை எனக்குத் தெரிந்த வரையில், உங்களுக்குச் சொல்கிறேன்" என்றான்.

பிறகு ஞானியைத் தன் அரண்மனைக்குள் வருமாறு அழைத்தான். இருவரும் அரண்மனைப் பணியாளர் முகாமில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவனருகில் சென்றார்கள். "ஐயா பேரறிஞரே... இங்கே உறங்கிக் கொண்டிருப்பவனை வைத்து உங்களுக்கு நானறிந்ததைச் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

"இவன் தூங்கிக்கொண்டிருக்கிறானே?" என்று இழுத்தார் ஞானி.

"துயிலில் இரண்டு வகை. இருவகையிலும் ஐம்புலன்களும் புறவிசைகளும் மனிதனைப் பாதிப்பதில்லை. அறிவு கூட அடங்கியே இருக்கிறது. விழித்துக் கொள்ளக்கூடிய துயிலை வைத்து மட்டுமே என்னறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். மீளாத்துயிலுக்குப் பிறகு ஏற்படுவதை நானறியாததால், மனதையும் அறிவையும் கட்டுப்படுத்தி வைக்கும் சாதாரண உறக்க நிலையை வைத்து நான் அறிந்ததை எடுத்துக்காட்டுகிறேன். என் குறையான அறிவுக்கு என்னை மன்னியுங்கள். விரும்பினால் மேலும் சொல்கிறேன்" என்றான் மன்னன்.

    கதை முடியவில்லை; தொடர்கிறது. மேற்கண்ட உபனிஷதக் கதை பலருக்குத் தெரிந்திருக்கலாம். காசி மன்னன் அஜாதசத்ருவுக்கும் பிராமண ஞானி பாலாகிக்குமிடையே நடந்த உரையாடல். நசிகேதன்-எமன் உரையாடலுக்குப் பொருந்தியதால் பாதிக்கதையை என்னால் இயன்றவரை எளிமைப்படுத்தி இங்கே மேற்கோளாகச் சொல்லியிருக்கிறேன். (உபனிஷதக் கதை சற்று கனமானது; உட்பொருளைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டேன் - புரிந்து கொண்டேன் என்று நினைக்கிறேன். தவறாக ஏதும் சொல்லியிருந்தால் திருத்தி, மன்னிக்கவும்)

    எத்தனை உருவங்களை மனதில் வைக்கிறோம்! வைத்தும் உருப்படியாக ஏதாவது செய்கிறோமா? உருவங்களின் தன்மைகளை மறந்து விடுகிறோமே? 'கருணையின் வடிவம்' என்று உருவத்தை மனதில் ஏற்றிவிட்டுத் தகாத செயல் புரிகிறோம். என் உறவினர் ஒருவர் தன் பிள்ளையிடம் சொன்னது:"முண்டம், வாயை மூடிட்டு கொஞ்ச நேரம் சும்மா இரு. சாமி கும்பிட்டிருக்கேன் தெரியுதில்லே? இன்னொரு தடவை தொநதரவு செஞ்சே, பல்லைத் தட்டிக் கைல குடுத்துருவேன்". என்ன கும்பிட்டு என்ன பயன்?!

    இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் வேள்வி, மூச்சையடக்கி மனதைக் கட்டும் வித்தையாகும். இன்றைக்கு 'யோகா' என்று உலகமுழுதும் பழகி வருகிறது. அன்றைய இந்தியாவில் சில சமூகங்கள் பழகிய வித்தை. பிராணாயாமம் என்பதற்கு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டிருக்கிறேன். மூச்சை நன்கு உள்ளிழுத்து அடக்கிச் சீராக வெளியிடும் முறை. எல்லோரும் செய்ய வேண்டிய பயிற்சியாகும். உடல் மற்றும் உள்ள உபாதைகள் பலவும் இந்தப் பயிற்சியினால் குணமாகும் என்கிறார்கள். மூச்சை இழுத்து அடக்கிச் சீராக வெளியிடுவதில் பலனுண்டு. மேலாக, நல்ல எண்ணங்களை மனதில் தேக்கி அவற்றினூடே மூச்சடக்கிப் பழகினால், நிச்சயம் பரவலான பலனிருக்கும் என்றே தோன்றுகிறது.

    'அன்பு, அறம், அடக்கம், அருள் எனும் நான்கு செங்கல்களை அடுக்கி அதனுள் மூச்சு எனும் தீயை வளர்த்துப் புரிய வேண்டிய வேள்வி' என்றான் எமன். 'பற்றற்ற' என்றும் சொன்னான் (எத்தனை ற!). இதற்குப் பொருள், எல்லாவற்றையும் துறந்த நிலை அல்ல. இன்பம்-துன்பம் போன்ற இருநிலை-எதிர்நிலைகளை அறிந்து, எந்த நிலையையும் முற்றிலும் சாராமல் இருப்பதையே 'பற்றற்ற நிலை' என்றான் எமன். 'மனிதம் இருநிலைகளையும் அனுபவிக்க வேண்டும்; அனுபவத்தால் அறிய வேண்டும்; அறிந்த பின் தெளிய வேண்டும்' என்பதே எமன் சொன்னது.

    பற்றறுத்த நிலையில் நாள்தோறும் நல்லெண்ணங்களை மனதில் தேக்கி, மூச்சடக்கிப் புரிய வேண்டிய வேள்வியைப் பற்றி எமன் விவரித்ததை நசிகேதன் பொறுமையாகக் கேட்டான். மரணத்துக்குப் பிறகு சொர்க்கம் செல்வதற்காக வேள்வி செய்வதாகச் சொன்னாரே தந்தை? எமனோ, 'தன்னுள்ளே தீ வளர்த்து நல்லெண்ண நெய் வார்க்க வேண்டும்' என்கிறாரே? மரணத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே? அவன் மனதில் மரணம் குறித்த சந்தேகங்கள் எழத் தொடங்கின. ►

2011/02/01

வேள்வித்தீ பற்றிச் சொன்னான் எமன்


23
புள்ளகத் தோடே பகர்வேனே பிள்ளைநீ
தெள்ளெனக் கேட்டத் தகவலதை - கள்ளமாய்
எள்ளுக்குள் வாழ்ந்திடும் எண்ணையாம் ஆழ்மனதின்
உள்ளுக்குள் தாழிட்டத் தீ.

    சிறுபிள்ளையானாலும் நீ தெளிவாகக் கேட்டதனால் வேள்வி விவரங்களைச் மகிழ்ச்சியோடு சொல்கிறேன்; எள்ளுக்குள் எண்ணை மறைவாக உறைவது போல், வேள்வித்தீ நம் மனதினுள்ளே அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது (என்றறிவாய் என்றான் எமன்)


புள்ளகம்: பெருமகிழ்ச்சி
கள்ளமாய்: மறைவாக
தாழிட்ட: பூட்டிய, அடக்கிவைத்த



    பார்வையைத் தருவன கண்கள். கண்களுக்குக் காட்சியைத் தருவதோ ஒளி. கயல்விழி, மான்விழி, வேல்விழி என்று விழியழகைக் கொண்டாடினாலும், ஒளியின்றி விழிகளால் பயனில்லை. எனினும், ஒளி விந்தையானது. ஒளியைப் பயன்படுத்தி, இல்லாத ஒன்றை இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாதது போலவும் செய்து, கண்களை ஏமாற்ற முடியும். உள்ளேயும் ஒரு ஒளி உண்டு. அறிவு. கண்களுக்குப் புலப்படுவதும் அறிவுக்குப் புலப்படுவதும் வேறுபடலாம். உள்ளொளியைப் பயன்படுத்தும் பொழுது, வெளியொளியால் கண்களுக்குத் தென்படாதக் காட்சிகளையும் காண முடியும். ஐம்புலன்களும் அவ்வாறே. புறவிசைகளோடு தொடர்பு கொள்ளவும், முடிந்தால் அடக்கியாளவும் மட்டுமே நம் ஐம்புலன்களைப் பழக்கப்படுத்துகிறோம். அவற்றை உள்ளே திருப்பினால், நம் அகத்தே தறிகெட்டோடும் விசைகளைக் கட்டுப்படுத்தி ஆளலாம். உள்பார்வை, உள்பேச்சு, உள்மூச்சு, உள்கேள்வி, உள்ளுணர்வு எனும் இவற்றைத் தம் வாழ்நாளில் பெரும்பாலானோர் பயன்படுத்துவதே இல்லை.

    'கண்ணை நம்பாதே' என்பது பிரபலத் திரைப்பாடல் மட்டுமல்ல, உலகின் மிகத் தொன்மையான சித்தாந்தங்களுள் ஒன்றாகும். கடோபனிஷதச் சமகாலக் கிரேக்க அறிஞர்களான சாக்ரேட்சும் ப்லேடோவும் இதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள். ப்லேடோ தன் மாணவனான அரிஸ்டாடிலுக்குச் சொன்னதாகச் சொல்லப்படுவது: கண்களுக்கு வெளிப்பார்வை உள்பார்வை இரண்டும் உண்டு. வெளிப்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு மாற்றமும் அழிவும் தென்படும்; உள்பார்வையில் லயிக்கும் கண்களுக்கு உண்மை மட்டுமே புலப்படும். வெளிப்பார்வையினால் கிடைப்பது அபிப்பிராயங்களும் பேதங்களும்; உள்பார்வையினால் கிடைப்பது ஒருமையும் தெளிவும். வெளிப்பார்வையில் கிடைக்கும் அறிவு தினம் மாறும் தன்மையது, வளர்ச்சி பெறாதது; உள்பார்வையில் கிடைக்கும் அறிவானது முதிர்ச்சியைத் தருவதாகும், ஒரு இலக்கினை நோக்கிச் செலுத்துவதாகும். (plato, ~400 bce, republic)

    நம் உடலின் ஓய்வு அல்லது இயல்பு வெப்பநிலை 36°C-37°C வரை என்கிறார்கள். இருப்பினும், வெளியே 20°-25°C வரை மட்டுமே ஏற்க, பொறுக்க முடிகிறது. அதற்குக் குறைவாகவோ கூடுதலாகவோ போனால், பலருக்குக் குளிர் அல்லது வெப்ப உபாதைகள் தோன்றுகின்றன. இதமான வெளி வெப்பநிலையை விட அதிக வெப்பம் நமக்குள்ளே இருப்பது உடலியக்கக் காரணத்தோடு எனினும், வியக்க வைக்கிறது. உள்வெப்பத்திற்குத் தீ எங்கிருந்து வந்தது? இந்தச் சிந்தனை, அறிவியல் வழியை விட ஆன்மீக வழியில் சுவாரசியமான, ஆழ்ந்த, திடுக்கிடும் நுண்மைகளை வழங்கவல்லது. ஒரு மழைநாளுக்கான சிந்தனையாக ஒதுக்கலாம். மேற்கோளுக்குத் தத்துவப் புத்தகங்களும், நொறுக்குத் தீனியும், ஆத்திகம் கலவாது விவாதிக்க ஏற்ற நட்பும் இருந்தால் இத்தகையச் சிந்தனை நிறைவூட்டும்.

    எமனுக்குச் சங்கடம். நசிகேதனின் அறியுந்திறனை ஆழம் காணவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம்; வரமளித்தால் அது பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இன்னொரு புறம். அறிந்தே விழலுக்கு நீரிரைக்க யாருக்கு மனம் வரும்? 'பிறப்பற்ற இடம் ஏகும் வேள்வியைப் பற்றிப் பிள்ளைக்குச் சொல்வதா? புரியுமா? புரிந்தாலும் செயல்படுத்துவானா?' போன்ற பல ஐயங்களுக்கிடையே நசிகேதனின் இரண்டாம் வரத்துக்கான விவரங்களைச் சொல்லத் தொடங்கினான். முதலில் வேள்விக்கான தீயை எப்படி அடையாளம் காண்பதென்று சொன்னான். 'வெளிப்பார்வைக்கு எள் தெரியுமே தவிர எண்ணை தெரியாதது போல், உள் பார்வைக்கும் இந்தத் தீ எளிதில் தெரியாது. வேள்விக்கான தீ மனதின் ஆழத்தில் புதைந்திருக்கிறது.' என்று எடுத்துச் சொன்னான்.

    'அம்பர வேள்விக்கான தீ வளர்க்க, பசுஞ்சாண வரட்டியும் சுள்ளியும் அடுக்கி நெய் வார்த்து மந்திரம் சொல்ல வேண்டியதில்லையா? உள்ளுக்குள் தாழிட்ட தீ என்கிறாரே எமன்? உள்ளுக்குள் தீ எங்கே பூட்டி வைத்தோம்? அதைக் கண்டாலும் வேள்வி எப்படிப் புரிவது?' என்று நசிகேதன் சிந்தித்தான். தன் தந்தை தீ வளர்த்துப் பகட்டாகப் புரிந்த அண்டவாகை வேள்வி நினைவுக்கு வந்தது. 'அப்படியென்றால் தந்தையின் வேள்வி அவருக்குச் சொர்க்கத்தை நிலையாகத் தராதா? மழைநீர் போல் இன்னொரு பிறவியெடுத்து சுழலப்போகிறாரா? தந்தையைப் போல் இன்னும் எத்தனை பேர் உலகில் தீ வளர்த்து வேள்வி புரிகிறார்கள்! பலனில்லை என்பதறியாமல் வேள்வி செய்கிறார்களே!' என்று உலகமக்களின் அறியாமையை எண்ணி வருந்தினான். 'பொன்னும் மணியும் பசுவும் பூமியும் தீயிலிட்டு எதைத் தேடுகிறார்கள் இந்தக் கண்மூடிகள்? இவர்களின் பிணிக்கு மருந்து உள்ளிருப்பது தெரிந்தும் வேறு எங்கோ தேடுகிறார்களே!' என்று மக்களின் கண்மூடித்தனத்தை எண்ணிக் கலங்கினான். எமனிடம் விவரங்களைக் கேட்டறிந்து, தன் தந்தைக்கு மட்டுமல்லாது, மற்றவருக்கும் எடுத்துச் சொல்லி அவர்கள் அறியாமையைப் போக்குவதென்று தீர்மானித்தான். தீ வளர்க்கும் விதத்தையும் வேள்வி புரியும் விவரங்களையும் அறிந்து கொள்ள ஆயத்தமானான். ►

2011/01/28

அம்பரம் எளிதல்ல என்றான் எமன்


22
வாரியில் ஏரியில் பாரியில் வீழினும்
மாரியது மாறி மழையாகும் - சீரிணரும்
நீருக்கு வேரறியா நீர்போலே ஈருலகும்
பேருக்குத் தேடுவார் பேறு.

    கடலிலோ ஏரி குளங்களிலோ நிலத்திலோ விழுந்தாலும், மழைநீர் உருமாறி மீண்டும் மழைநீராகவே விழுகிறது; தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து வேறு விதமாக மாறத் தெரியாத நீரானது, எப்படி மழையாக மாறி கடல் நதி நிலம் என்றுச் சுற்றி வருகிறதோ, அதுபோல், ஞானிகளும் தங்களைப் பற்றிய உண்மையை அறியாமல், பிறவாமை எனும் பேற்றினைத் தேடி என்னுலகம், பொன்னுலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கும்* வந்து போகிறார்கள் (என்று எமன் சொன்னான்).

*எமனுலகே சொர்க்கநரகங்களின் முதல்படி என்று உலகின் பிரபல மதங்களில் நம்பப்படுகிறது. ஒருவர் செய்த நல்வினை தீவினைகளின் அளவுக்கேற்ப நரகம் சொர்க்கம் இரண்டிலுமே வாழும் வாய்ப்பு கிடைப்பதாகவும் - பிரிந்த உயிரின் பயணத்தில் முதல் நிறுத்தம் எமனுலகம் என்றும் - அங்கே நல்வினை தீவினை இரண்டையும் கணக்கிட்டு, அதற்கேற்ப நரக, சொர்க்க வாசத்தின் காலம் நிர்ணயிக்கப்படுவதாகவும் - உயிரானது முதலில் தீவினைகளின் பலனை நரகத்தில் அனுபவித்து விட்டு, பிறகு நல்வினைப் பலனைச் சொர்க்கத்தில் பெறுவதாகவும் - சொர்க்கவாசக் காலம் முடிந்ததும் மீண்டும் பிறவியெடுப்பதாகவும் - சொல்லப்படுகிறது.
  வாரி: கடல்
  பாரி: பூமி, நிலம்
  மாரி: மழை
  சீரிணர்: கற்றோர், ஞானிகள்
  வேர்: அடிப்படை, உண்மை, காரணம்


    ஒரு கற்பனைக் கேள்வி: நீராக மாறி மழையாகத் திரும்பி அலுத்து விட்டதால், அறிவு வந்து தன் நிலையைப் புரிந்து கொண்ட எரிவாயு, இனி நீர்வாயுவுடன் இணைவதில்லை என்று தீர்மானித்தால் என்ன ஆகும்?

    எதிர்பார்த்த பலன் தராத எத்தனையோ செயல்களை நாம் தொடர்ந்து செய்கிறோம். மதிக்காத பிள்ளை, அன்பில்லாத உறவு, பிடிக்காத தொழில், ஏமாற்றும் அரசாங்கம், முன்னேற்றமில்லாத வேலை, வளராத செல்வம்... என்று வீட்டிலும் வெளியிலும் பிடிப்போ திருப்தியோ ஏற்படாவிடினும், நாம் செய்ததையே செய்துச் சுழன்று மாற்றத்துக்கு ஏங்குகிறோம். மாற்றம் வேண்டும் என்று உண்மையாகவே எண்ணினால், செய்ததையே திரும்பச் செய்வோமா? இருந்தாலும், சமூகம் கடமை வயது என்று ஏதோ ஒரு இயலாமையில் சிக்கிச் சுழல்கிறோம்.

    குழியிலிருந்து எழுந்து வர முதலில் என்ன செய்ய வேண்டும்? தோண்டுவதை நிறுத்த வேண்டும். நமக்குள் இருக்கும் எரிவாயு, நீர்வாயுக்களை அறிந்து கொள்ள வேண்டும். மாறுவது எளிதல்ல. ஒரு நிலையில் மாற்றம் வேண்டுமெனில் முதலில் அறியவேண்டியது அந்நிலை ஏற்படக் காரணமும் அடிப்படையும் யாதென்பதே. அப்போதைக்கு ஒரு மாத்திரையை விழுங்கித் தப்பிக்கலாமே ஒழிய, தலைவலியின் காரணத்தைப் புரிந்து கொண்டாலே வலி வராமல் தடுக்க முடியும். காலையில் எழுந்தவுடன் வருகிறதா, சாப்பிட்டதும் வருகிறதா, தூசு படிந்த இடங்களில் நடமாடுகையில் வருகிறதா, தொழில் பணம் நட்பினால் உண்டான அழுத்தத்தால் வருகிறதா, என்ன சாப்பிட்டோம், தூங்கும் பொழுது பல்லைக் கடிக்கிறோமா, மலச்சிக்கலா, அலர்ஜியா, உடலில் நீர் குறைவா,... எத்தனையோ காரிய-காரணங்களை ஆய்ந்து ஆணிவேர்க் காரணத்தைக் கண்டறியலாம். வலியைத் தடுக்கலாம்.

    ஆணிவேர்க் காரணத்தை ஆய்ந்து கண்டால் மாற்றம் ஏற்படுத்துகிறோமோ இல்லையோ, பொருந்தாதத் திருத்தங்களை நிறுத்தலாம். கண்மூடித்தனத்தை நிறுத்தலாம். தோண்டுவதை நிறுத்தலாம். வெளியே வருவது அடுத்த செயல். 'root analysis' என்று காரண-காரிய ஆய்வைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்கள் மேலாண்மை மற்றும் அறிவியல் நிபுணர்கள்.

    பொறுப்புள்ள ஆசிரியன், மாணவனின் திறமையைத் தொடர்ந்து சோதிக்க வேண்டும். 'அறிவுப் பாதையில் முன்னேறுவானா? தகுதியிருக்கிறதா?' என்று சோதித்து, அதற்கேற்ற வேகத்தில் தன் மாணவனை நடத்திச் செல்வது நல்ல ஆசிரியனின் இலக்கணம்.

    அறிவுள்ள மாணவன், ஆசிரியனைத் தொடர்ந்துத் தூண்ட வேண்டும். 'எத்தனை நாள் அரிச்சுவடியைச் சொல்லித் தருவாய், அடுத்தது என்ன?' என்று முன்னேற்றத்தை எடுத்துக் காட்டித் தூண்ட வேண்டும். ஆர்வமும், புரிந்து கொள்ளும் பக்குவமும் இருப்பதைக் காட்ட வேண்டியது, நல்ல மாணவனின் இலக்கணம்.

    எமன் சொன்னதன் உட்பொருள்: ஒவ்வொரு காரியத்துக்கும் காரண அடிப்படைகள் இருக்கின்றன; தன்மை நீர்மைகள் உள்ளன. அதைப் புரிந்து கொண்டாலொழிய மாற்றம் ஏற்படாது. பிறப்பற்ற இடம் என்று சொர்க்கத்துக்கு வந்தாலும் அளிக்கப்பட்ட காலம் முடிந்ததும், மீண்டும் பிறவியெடுத்தாக வேண்டும். பிறவாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? சொர்க்கவாசக் காலத்தை வரையறையின்றி நீடிக்க வேண்டும். சொர்க்கவாசத்தை நீடிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.

    எமன் அருமையான ஆசிரியன். நசிகேதன் கேட்ட வரத்தால் வியந்தாலும், 'விவரங்களைப் புரிந்து கொள்வானா சிறுவன்?' என்று சோதிக்கவும், 'அம்பரம் போகும் வழி எளிதாக இருக்கும்' என்ற எதிர்பார்ப்பைக் கட்டவும், பொன்னுலகம் பற்றிச் சொன்னான். 'புரிந்தவருக்கும் பிந்தும் பொன்னுலகம்; அங்கே வரும் சீரிணரும் மீண்டும் பிறவி எடுத்து அல்லல் படுகிறார்கள். நீரின் வேரறியார்' என்று நசிகேதனின் வயதொத்த அறிவுக்கு மீறிய கருத்துக்களை எடுத்துச் சொன்னான். பிறவி என்பது தலைவலி. சொர்க்கமும் நரகமும் தலைவலி மாத்திரைகள். திருகுவலி தரக்கூடிய மாத்திரைகளே தவிர தடுக்கவல்லவை அல்ல. நீருக்குள் புதைந்திருக்கும் எதிர்நிலைகள் போல் மனிதனுக்குள் புதைந்திருக்கும் எதிர்நிலைகளைப் புரிய வைப்பது காரண-காரிய ஆய்வு. ஆய்வின் பலனாகக் கிடைப்பது மெய்யறிவு. மெய்யறிவு பெறும் வரை, 'மழைநீர் மீண்டும் மீண்டும் கடல், நிலம் என்று சுற்றுமே தவிர வேறு நிரந்தரமான இலக்கில்லை' என்ற உதாரணத்தோடு பிறவிச் சுழற்சியின் பரிதாபக் குழியைச் சுட்டினான். அந்தக் குழியிலிருந்து எழ, வேரறிவு அல்லது உண்மையறிவு தேடும் அவசியத்தைச் சுட்டினான். கற்ற ஞானிகளும் எளிதில் மெய்யறிவு பெறுவதில்லை என்று சொல்லி நசிகேதனின் எதிர்பார்ப்பைக் கட்டினான்.

    நசிகேதன் நல்ல மாணவன். முதலில் 'பிறப்பில்லா இடம்' பற்றிச் சொல்லி தன் அறிவுத்தேடலைக் காட்டினான். பிறகு, 'அம்பரம் தா' எனாமல் 'அம்பரம் ஏகும் வழியைச் சொல்' என்று கேட்ட விதத்தில், காரியத்தை விடக் காரணத்தை அறிய ஆர்வமிருப்பதையும் எடுத்துச் சொன்னான்.

    இருவருமே தங்கள் தகுதிகளை வெளிப்படுத்தி விட்டார்கள். "சொன்னதையே திரும்பச் சொல்லாமல், மேற்கொண்டுச் சொல்லுங்க வாத்தியாரே" என்று பார்வையால் கேட்டாலும், எமனின் பதிலுக்குப் பணிவுடன் காத்திருந்தான் நசிகேதன். ►

2011/01/25

அம்பரம் உள்ளது என்றான் எமன்


21
அம்பரமும் அங்குபுகும் நேர்வழியும் நானறிவேன்
எம்பலமும் எட்டாத வட்டமது - வம்பன்று
பொன்னுலகம் பிக்கும் புரிந்தவர்க்கும் பேதைக்கோ
என்னுலகம் என்றும் எதிர்.

    என் ஆட்சிக்கு அப்பாற்பட்டப் பொன்னுலகையும் அங்கு செல்லும் நேர்வழியும் அறிவேன். உண்மையில், அறிவுள்ளவராயினும் பொன்னுலகம் அடையத் தாமதமாகும்; அறிவற்றவரோ நானாளும் எமனுலகத்தை எளிதில் அடையலாம்.

வம்பன்று: பொய்யல்ல, வீண் பேச்சல்ல
பிக்கும்: பிந்தும், தவறும், தள்ளிப்போகும்
எதிர்: இலக்கு, உடனே புலப்படுவது



    எதிர்பார்ப்புகளைச் சமாளிப்பது ஒரு திறமை என்றால், நம்மிடம் என்ன எதிர்பார்க்கலாம் என்று வரையுறுத்துவதும், பிறரின் எதிர்பார்ப்புகளை எதிர்பார்ப்பதும் இன்னும் நுட்பமான கலைகள். குடும்பத்திலோ சுற்றத்திலோ, பள்ளி அலுவலகம் மற்றும் சமூகத்திலோ நம்மிடம் எதிர்ப்பார்ப்பதை - பணம், வீடு, வசதி போன்ற விலை மதிப்புக்குட்பட்டவையோ அல்லது அன்பு, காதல், கருணை, ஆற்றல் போன்ற விலை மதிப்புக்கப்பாற்பட்டவையோ எதுவானாலும் - புரிந்து கொண்டால் நம்மால் செயல்படுத்த முடியும். நம் எதிர்பார்ப்பைத் தெளிவாகச் சொன்னால், அடுத்தவர் செயலாக்கத்துக்கு உதவும். வேடிக்கையாகத் தோன்றலாம், ஆனால் எதிர்பார்ப்புகளை அறிந்து கொள்வதும் தெளிந்து சொல்வதும் நிம்மதிக்கு மிக அவசியம். தவறினால் வீட்டிலும் வெளியிலும் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரும். 'சட்டியிலிருந்தால் அகப்பையில் வரும்', 'விரலுக்குத் தகுந்த வீக்கம்' போன்ற முதுமொழிகள் சொல்லும் மேலாண்மைத் தந்திரம் இதுவே. 'expectation management' என்கிறோம் ஆங்கிலத்தில்.

    நம்மால் முடியுமா அல்லது நம்மை நம்பியிருப்பவரால் முடியுமா என்றும் பல தருணங்களில் சிந்தித்து, எதிர்பார்ப்புகளை ஒரு வரம்புக்குள் கட்டிவைக்க வேண்டியிருக்கிறது. இத்தனை செலவு செய்யலாம், இத்தனை நேரம் விளையாடலாம், டிவி பார்க்கலாம், இத்தனை நேரம் படிக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற வீட்டு எதிர்பார்ப்புகள்; இத்தனை லாபம் சம்பாதிக்க வேண்டும், இத்தனை விற்க வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும், இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும், இத்தனை தொழிற்சாலைகளை மூட வேண்டும் போன்ற தொழில் தொடர்பான எதிர்பார்ப்புகள்; இத்தனை சட்டங்கள் தீட்ட வேண்டும், இத்தனை பொதுநலத் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும், இத்தனை போக்குவரத்து, பாசன, மருத்துவ வசதிகள் செய்து தர வேண்டும் போன்ற சமூகத் தொடர்பான எதிர்பார்ப்புகள்; இவற்றைச் சமாளிக்க, நம் ஆக்கத்திறனுக்கும் வசதிக்கும் ஏற்ற வரம்புகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. இதில் தவறில்லை. முதலில் சற்று மனத்தாங்கலை அளித்தாலும், பெரும் ஏமாற்றங்களைத் தவிர்க்க உதவுவதோடு சிறு வெற்றிகளைப் பெறவும் வழி செய்யும் தந்திரமாகும். எதிர்பார்ப்புக் கட்டல், எண்ண வெளிப்பாட்டின் முக்கிய அம்சமாகும்.

    எமன் யோசித்தான்: வரம் கேளென்றால் இப்படி ஒரு வரம் கேட்டு விட்டானே? தனித்து விடப்பட்ட சிறுவனிடம் 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டால், "அம்மா வேண்டும், அப்பா வேண்டும்" என்று அழுது கேட்பது இயற்கை. சற்றே முதிர்ச்சி தென்பட்டாலும் முதலில் கேட்ட வரம் அந்தவகை தான். ஆனால் இரண்டாவது வரம் விசித்திரமாக இருக்கிறதே? பிறவிப்பிணி சுற்றாத இடத்தைப் பற்றியும் அங்கு செல்லும் வழி பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டு, விவரங்களை வரமாகக் கேட்கிறதே இந்தப் பிள்ளை? எங்கிருந்து எங்கே தாவுகிறான் இவன்! இந்த வரத்தை அளிப்பதால் இவனுக்கு ஏதாவது பலன் கிட்டுமா? விவரங்களைச் சொன்னால் புரிந்து கொள்வானா? நன்கு புரிந்தவர்கள் கூட செயல்படுத்தத் தயங்கும் விவரமாயிற்றே? இவனோ பத்து வயது நிரம்பாத பிள்ளை, இவனுக்குப் புரியுமா? இந்த வரத்தைக் கொடுத்தால் அடுத்து வேறென்ன கேட்பானோ?

    பலவாறு சிந்தித்த எமன், கேட்ட விவரங்களைச் சொல்லுமுன் நசிகேதனின் எதிர்பார்ப்புகளை ஒரு கட்டுக்குள் வைக்க முற்பட்டான். பொன்னுலகத் தன்மை பற்றி முதலில் சொன்னான். ►

2011/01/21

நசிகேதன் வேண்டிய இரண்டாம் வரம்


20
முன்சொன்ன மாண்பு மகப்பலனாம் மாலையும்
இன்னொன்று தந்தால் இதுதாரும் - என்னிலையில்
பூமியிற் சென்றுநான் பேறுறச் சொல்லுவீர்
மீமிசை வேள்வி மணம்.

    நான் முன்பு சொன்ன அம்பரமெனும் மேன்மை, வேள்வியின் பலனாகக் கிடைக்கும் என்றார்கள். என்னுடைய இதே நிலையில் பூமிக்குச் சென்று, பின்னர் அந்த மேலுலக மேன்மையை அடைய, நான் செய்ய வேண்டிய வேள்வியின் விவரத்தைச் சொல்லுங்கள். இன்னொரு வரம் தருவதானால் இதையே தாருங்கள்.

மாண்பு: மேன்மை, இங்கே சொர்க்கத்தைக் குறிக்கிறது
மகப்பலன்: வேள்விப்பலன்
மாலை: வரம்
மீமிசை: மீ+மிசை, மேலுக்கும் மேல், இங்கே எமனுலகுக்கும் அப்பால் என்று பொருள்
மணம்: குணம் அல்லது சிறப்பு, இங்கே வேள்வியின் விவரத்தைக் குறிக்கிறது



    தெளியச் சொல்வதும் திருந்தச் செய்வதும் முக்கியம். சிறு வயதிலிருந்தே பழகியும் பழக்கியும் வளர்க்க வேண்டியவை. தெளிந்த சிந்தையிருப்பினும் அது தெளிவான சொல் அல்லது செயலில் வெளிப்படவில்லையெனில், பெரும் இக்கட்டில் சிக்கவைக்கும்.

எண்ண வெளிப்பாட்டின் சிறப்பு, குறிக்கோள்-தேவை-செயல்பாடு இவற்றைத் தெளிவாக எடுத்துச் சொல்வதே. 'effective communication builds a sense of purpose' என்பார்கள். பயன் தொட்ட, ஒரு குறிக்கோளையொட்டிய பேச்சு, எதிர்பார்த்த விளைவுகளைக் கொடுக்கும்.
"சார், தாம்பரத்துக்கு எப்படிங்க வழி?" | "இப்படியே நேராப் போங்க"
"அம்மா, என்னோட ஸ்கூல் புத்தகம் காணோம்.." | "டிவி கிட்டே பாத்தனே?"
"டாக்டர், எனக்கு ஏன் இப்படி அடிக்கடி தலை சுத்துது?" | "எல்லாம் சரியாயிடும்"
"சேல்ஸ் ரிபோர்ட் ரெடியாயிடுச்சா? | லஞ்சுக்குப் போயிருக்காங்க மேடம்"
"ஏம்மா, இந்தக் கல்யாணத்துல உனக்கு சம்மதம் தானே?" | "உங்க இஷ்டம்பா"
மேற்கண்டது 'directional communication', இருதரப்பிலும் மேம்போக்கான வெளிப்பாடு. மேற்கண்ட உரையாடலில் நட்பும் உதவியும் தொனித்ததா? இல்லையென்று சொல்ல முடியாது. தெளிவானத் தகவல் பரிமாறப்பட்டதா? இதனால் யாருக்கு என்ன பலன் கிடைத்தது? சமீபச் சுற்றுப்பயணத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பிரிடிஷ் இளவரசுக்கு ஒரு பரிசளித்தார்: இருபத்தைந்து டிவிடி அடங்கிய அமெரிக்கத் திரைப்படத் தொகுப்பு. ஒரு சிறு சிக்கல்: அமெரிக்கச் சீர்மையில் வடிவாக்கப்பட்ட டிவிடி இங்கிலாந்தில் இயங்கவில்லை. 'நானென்ன ராகெட்டா கேட்டேன்? வெறும் டிவிடி! இதைக்கூடச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதா?' என்று தன் செயலாளரிடம் எரிந்து விழுந்தாரம். ஒபாமாவுக்கு அவமானம்; அமெரிக்க மக்களுக்கு அவமானம்; இதில் உண்மையான இழப்பு, அந்த டிவிடி அமைத்துக் கொடுத்தவருக்கு வேலை பறிபோனதே. 'எனக்குத் தான் அறிவில்லை; உனக்கு எங்கே போச்சு அறிவு?' என்று அடிக்கடி சொல்கிறோம், கேட்கிறோம். இது முட்டாள்தனமான வாதம் என்பது சற்றுச் சிந்தித்தாலே புரியும். எனக்கு மிக நெருங்கியவர்களிடம், "இது கூடத் தெரியாதா?" என்று பல முறை கேட்டிருக்கிறேன்; பிறகு என் கேள்வியின் முட்டாள்தனத்தில் நொந்திருக்கிறேன். மேற்சொன்ன உதாரணங்கள் சாதாரண பாதிப்பை உருவாக்க வல்லவை; தீவிர பாதிப்புகளை உண்டாக்கும் வெளிப்பாடுகளில் கூட மேம்போக்கையே அதிகம் காண்கிறோம். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிகம் மேம்போக்கான வெளிப்பாட்டு முறையையே பயன்படுத்துவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரம் திடுக்கிட வைக்கிறது. தன் முயற்சியினாலான தனி வாழ்க்கை, பதினெட்டு வயதுக்குப் பிறகே தொடங்குகிறது. நம் வாழ்வின் மனக்கசப்புகளுக்கு, நம்முடையத் தெளிவற்ற, மேம்போக்கான சொல்லும் செயலுமே காரணங்களோ?

மாறாக, 'precise communication' என்பது, தெளிந்து சொல்லுதல். 'இதனை இதனால் இவ்வண்ணம் இந்நேரம் இதுவாக' முடிக்க, விவரத்தோடு ஐயமறச் சொல்லுதல். ஐயம் இருந்தால் தானே சந்தேகம், ஏமாற்றம், எரிச்சல் எல்லாம்? 'course correction' என்பது இன்னொரு கலை. முதலில் சொன்னது எதிர்பார்த்த பலனைத் தராவிட்டால் அதையறிந்துத் தவறைத் திருத்தும் கலை. திருத்துவதை உடனே செய்ய வேண்டும். அல்லது மறுவாய்ப்பு கிடைக்காமலே போய்விடலாம். தெளிந்து சொல்லவேண்டும்; அப்படியும் திருத்தம் தேவையானால் உடனே திருந்தவோ திருத்தவோ வேண்டும்.

தெளிந்து சொல்லாமல், சொன்னதோ செய்ததோ தவறாக முடிந்தால் அதையும் திருத்தாமல், சொன்னதை வீம்புக்காகப் பிடித்துக்கொண்டு 'முயலுக்கு மூன்று கால்' என்று சாதிப்போரை நாம் தினமும் வீட்டிலும் வெளியிலும் சந்திக்கிறோம். பல நேரம் நாமே அவ்வாறு நடந்து கொள்கிறோம். தெளிந்த சொற்செயல் பழகியும், நேரத்தோடு திருந்தவோ திருத்தவோ தவறியதே நம் வாழ்வின் பல தோல்விகளுக்குக் காரணம். 'சொல்வது தெளிந்து சொல்' என்று பாரதி சொன்னது நமக்காகவே. நாமெல்லாம் கிணற்றுத்தவளையாக வாழ்ந்த போதே இந்த நிலையென்றால், பரந்த உலகக் கலாசாரக்குழம்பில் வளர்ந்து ஆளாகப் போகும் தலைமுறைகள் தெளிந்த வெளிப்பாட்டைப் பழக வேண்டிய அவசியத்தை வலியுறுத்த வார்த்தைகள் போதாது.

    நசிகேதன் யோசித்தான். தான் கேட்ட முதல் வரத்தை எமன் வழங்கியதில் தவறில்லை. தான் கேட்ட விதத்திலே பிழை என்று தன்னைத் தானே திருத்திக் கொள்ளும் பக்குவம் அவனிடம் இருந்தது. இரண்டாவது வரத்தில் அவ்வாறு குழப்பம் வரக்கூடாது என்று தீர்மானித்தான். முதலில் சொர்க்கம் பற்றிச் சொல்லி, அந்த சொர்க்கத்தை அடையும் வழியான வேள்வியைப் பற்றியும் சொல்லி, அதன் பிறகு, 'இனி நான் அந்த வேள்வியைச் செய்து சொர்க்கத்தை அடைய வேண்டி அதற்கான விவரங்களைச் சொல்' என்று தன் குறிக்கோள், தேவை இரண்டையும் பிட்டு வைத்தான்.

இனி முதல் வரத்தின் திருத்தம். 'திருப்பி அனுப்புவதைப் பற்றித் தெளிவாகக் கேட்க மறந்தேன். முதல் வரத்தைத் திருத்த அனுமதியுங்கள்' என்று கேட்டால் அதுவே வரமாகிவிடுமே? வந்திருப்பது எமனுலகம். இதற்கு அப்பாலிருக்கும் பிறவிப்பிணி இல்லாத அம்பரத்தை அடைய, வேள்வி செய்ய வேண்டும் என்கிறார்கள். பிறவிப்பிணி துறக்க வேள்வி செய்வதென்றால் எங்கே செய்ய வேண்டும்? பிறவிப்பிணி இருக்குமிடத்தில் தானே? பூமிக்குச் சென்றால் வேள்வி செய்யலாம். வேள்வியைப் பற்றிய வரத்தோடு முதல் வரத்தையும் திருத்திவிடத் தீர்மானித்து, "இதே நிலையில் பூமிக்குச் சென்று" என்பதையும் சேர்த்துக் கேட்டான்.

பிறவிப்பிணியற்ற நிலை வேண்டும் என்று நேராகக் கேட்டிருக்கலாமே? சாப்பாட்டைக் கேளாது, சமையல் கலையை வரமாகக் கேட்பானேன்?

தன்னறிவைப் பொதுவாக்குவது உயர்ந்த சான்றோர் குணம். நசிகேதன் வேள்வி விவரம் கேட்டது தனக்காக மட்டுமல்ல, தன் தந்தைக்காக மட்டுமல்ல; தன்னைப் போல் பூமியில் வாடும் எண்ணற்ற மனிதர்களுக்கும் இந்த அறிவு பரவட்டும் என்ற எண்ணத்தோடு விவரங்களைக் கேட்டான். தன்னைப் பார்த்து மற்றோரும் வேள்வி முறைகளைப் பழகட்டும் என்ற எண்ணத்தோடு கேட்டான். இரந்திரமாக அழியாது, இந்த அறிவு நிரந்தரமாகப் பொதுவில் நிலைக்க வேண்டும் என்று நினைத்ததால் கேட்டான். ►

2011/01/18

பிறப்பற்ற இடம்பற்றிக் கேட்டான் நசிகேதன்


19
வரந்தந்தீர் வேனன்றி வாசலில் வந்தோர்
இரந்திரம் ஈதென்றார் கேளீர் - வரம்பொன்றில்
உம்பலத்துக் கப்பால் உயிர்ப்பிணி சுற்றாதாம்
அம்பரம் என்னும் இடத்து.


கேட்ட வரத்தை வழங்கியதற்கு மிகவும் நன்றி. (நான் காத்திருந்த போது) வாயிலில் வந்து போனவர்கள் ரகசியம் என்று என்னிடம் சொன்னதை உங்களிடம் சொல்கிறேன். எல்லையற்ற உங்கள் சக்திக்கும் அப்பாற்பட்ட ஒரு வானுலக இடத்தில், பிறவிப்பிணி என்பதே இல்லையாம் (என்றான் நசிகேதன்).

    வேனன்றி: வேன்+நன்றி, மிக நன்றி
    இரந்திரம்: ரகசியம், மறைத்து வைத்தது
    வரம்பொன்றில்: 'வரம்பு ஒன்றில்' எனப் பிரித்தால் எல்லை என்றும், 'வரம்பு ஒன்று இல்' எனப் பிரித்தால் எல்லையில்லாத என்றும் பொருளாகும் | எமனின் சக்தி எல்லையற்றது என்ற பொருளில் 'வரம்பு ஒன்று இல் உம்பலத்துக்கு' என்று முகத்துதி செய்வது போலவும், எமனுடைய சக்திக்கும் எல்லை உண்டு என்ற பொருளில் 'வரம்பு ஒன்றில், உம்பலத்துக்கு' என்று அடக்குவது போலவும், இருபொருள்பட நசிகேதன் சொன்னதாகக் கொள்ளலாம்
    உம்பலத்துக்கு: உம்+பலத்துக்கு, உமது சக்திக்கு
    அம்பரம்: விண்ணுலகம், பொன்னுலகம், சொர்க்கம்



    ஒரு கதை.

    நல்ல மனம் படைத்த ஒருவன் சந்தைக்கு வந்தானாம். ஒரு பெரிய பானை நிறைய இனிய பாயசத்தை எடுத்து வந்த அவன், சந்தைக்கு வந்தவர்களை இலவசமாகப் பாயசம் அருந்த அழைத்தானாம். "ஐயா, அம்மா, வாருங்கள். இலவசப் பாயசம். சிறு துளி அருந்தினாலும் சொர்க்கம் நிச்சயம். என்னை நம்புங்கள், நான் சொர்க்கத்திலிருந்து வருகிறேன். இது அமரர்கள் தினமும் அருந்தும் இனிய பாயசம். இலவசம்!" என்று பானையைச் சுமந்தபடி கூவிக்கூவி அழைத்தானாம். சிலர் அவனைப் பார்த்து முகஞ்சுளித்து ஒதுங்கினார்கள்; 'சொர்க்கத்திலந்து வந்த ஆளைப் பாருய்யா!' என்று சிலர் அவனைக் கிண்டல் செய்து போனார்கள்; நாள் முழுதும் அவன் அங்குமிங்கும் ஓடி ஓடிக் கூவி வழங்கியும், சந்தைக் கூட்டத்தில் ஒருவரும் அவன் சொல்லை மதித்து, இலவசப் பாயசத்தை அருந்த வரவில்லை. மறுவாரம் ஒரு நல்ல வெயில் நாளில், அவன் மாறுவேடம் பூண்டு அதே சந்தைக்கு வந்தான். இந்த முறை முள்சவுக்கு ஒன்றை எடுத்து வந்தான். "ஐயா வாருங்கள், அம்மா வாருங்கள். இது மந்திரச் சவுக்கு. உங்களுக்கெல்லாம் நரகம் கிடைப்பது நிச்சயம். இந்த மந்திரச் சவுக்கினால் ஒரு அடி வாங்கினால் நரகவாசம் விலகி விடும். ஒரு அடிக்கு, கால் பொன் விலை தரவேண்டும். இன்று மாலை வரை சவுக்கடி தருவேன். விருப்பமிருந்தால் என்னிடம் சவுக்கடி பெறலாம். நான் சொல்வதை நீங்கள் நம்பத் தேவையில்லை. ஆனால், நரகத்தைத் தவிர்க்க மந்திரச் சவுக்கடியைத் தவிர வேறு வழியில்லை. இனி, உங்கள் மனம் போலச் செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு நிழலான இடமாகத் தேடி அமர்ந்தானாம். கால் பொன் கொடுத்து முள்சவுக்கடி பெற விழைந்த கூட்டம், வெயிலையும் பொருட்படுத்தாது நீண்டு கொண்டே போனதாம்.

    உண்மை-பொய், உண்டு-இல்லை என்ற விவாதம் இருக்கட்டும்; சொர்க்கம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், ஒருவரையொருவர் மதித்து, கடமையைச் செய்து, அன்புடன், மகிழ்ச்சியுடன் இயல்பாக வாழ்கிறோமா? கிடையாது. அதே நேரம், நரகம் இருந்தால் அது கிடைத்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில், அறிவற்றக் கண்மூடித்தனச் செயல்களைச் செய்யத் தயங்குவதேயில்லை. நரகம் என்ற பயம், சொர்க்கம் என்ற நம்பிக்கையை அழிக்க அனுமதிக்கிறோம். போகும் வழிக்குப் புண்ணியம் என்று கண்மூடிப் பலசெய்யும் பித்தராகிறோம். கண்ணுக்குத் தெரியாத சொர்க்க நரகங்களை நம்பி, கையிலிருக்கும் வாழ்க்கையை நம் கண்மூடித்தனத்தினால் பிணியாக்குகிறோம். இது தான் உயிர்ப்பிணி. பிணியான வாழ்வு.

    சதுரங்க ஆட்டத்தில் இனி நசிகேதன் முறை. தன் முதல் வரத்தில், கேட்ட விதத்திலும் வழங்கப்பட்ட விதத்திலும், தோன்றிய ஐயத்தைத் தீர்த்தாக வேண்டும். இரண்டாவது வரத்தையும் கேட்க வேண்டும். ஐயத்தைத் தீர்ப்பதே இரண்டாவது வரமாகி விடக்கூடாது. அறிவுள்ள பிள்ளை அல்லவா? முத்தாய்ப்பாக தன் எண்ணப்படி வரம் கேட்க, பீடிகை போட்டான். எமனுடைய சக்திக்கப்பால் இருக்கும் ஒரு இடத்தைப் பற்றி, உயிர்ப்பிணி சுற்றாத சொர்க்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டதாகச் சொன்னான். எமன் அறியாத சொர்க்கமா? எமனும் புன்னகையுடன் நசிகேதன் கேட்கப் போகும் வரத்துக்காகக் காத்திருந்தான். ►