வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/09/06

உடலே தேர், தன்னறிவே தேரோட்டி


64
ஆன்றமையா ஐம்புலனும் தேர்ப்புரவி தேராகும்
ஊன்கட்டு உள்ளம் கடிவாளம் - ஆன்மாவே
உன்னிக்கும் தேர்வீரர் உய்யுயிர் தேருருளை
தன்னறிவே தேர்க்கொற்ற னாம்.

   சையினால் கட்டப்பட்ட உடலே தேராகும். உயிரானது தேரின் சக்கரங்கள். அடங்காத ஐம்புலன்களும் தேரில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகள். ஆன்மாவோ அனைத்தையும் கவனித்தபடி தேரில் பயணம் செய்யும் வீரர். தன்னறிவானது, தேரையும் குதிரைகளையும் இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியாகும்.


ஆன்றமையா: அடங்காத, அமைதியடையாத
தேர்ப்புரவி: தேரில் பூட்ட்ப்பட்டிருக்கும் குதிரைகள்
ஊன்கட்டு: தசைக் கட்டு, உடல்
தேர்வீரர்: தேர்ப் பயணி
உய்யுயிர்: வாழும் உயிர், ஒருபொருட்பன்மொழி
தேருருளை: தேர் சக்கரம்
தேர்க்கொற்றன்: தேரோட்டி    டோவின் மூன்றாவது பகுதி சற்றே எளிதானது. எந்த வகையிலெனில், பிற பகுதிகளைப் போல நீண்ட வாதங்களோ, சிந்தனைக்குகந்த சித்தாந்தங்களோ அதிகம் இல்லை. மனிதப் பிறவியின் முக்கிய நோக்கம் விழிப்புணர்ச்சி மட்டுமே என்ற எளியக் கருத்தை மையமாகக் கொண்டப் பகுதி.

விழிப்புணர்ச்சி என்றால் என்ன? கண்ணைத் திறந்து பார்ப்பது விழிப்புணர்ச்சி என்ற சாதாரணப் பொருளும் இதில் அடக்கம். 'கண்மூடித்தனமாக என் வாழ்வைக் கழிக்க மாட்டேன்' என்ற கொள்கைப் பிடிப்பும் இதில் அடக்கம். 'மரணம் என்பது புதிதல்ல', 'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே' போன்ற, சற்றே திடுக்கிட வைக்கும் விழிப்புணர்ச்சியும் இதில் அடக்கம்.

விழிப்புணர்ச்சி இங்கே பரந்த வீச்சில் பேசப்படுகிறது. விவேகானந்தரின் பிரபல "விழிமின்! எழுமின்!" கொள்கைக்குரல், கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

'மரணம் என்பதே வாழ்வோரை விழிக்க வைக்கும் நிகழ்வாகும்' என்ற பொருளில் பார்த்தால், கடோவின் மூன்றாம் பகுதி இறந்தவர் வீட்டில் படிக்கப்படும் சடங்கைப் புரிந்து கொள்ளலாம். 'மரணத்தைத் தொட்ட விழிப்புணர்ச்சியைச் சொல்கிறது' என்ற அசாதாரணக் காரணத்தினாலேயே கடோ அதிகமாகப் பொதுவில் படிக்கப்படுவதில்லை என்று தோன்றுகிறது.

பாடலைப் படித்ததும் கீதையும் கண்ணனும் விஜயனும் நினைவுக்கு வந்தால் வியப்பில்லை. கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து கீதையில் நிறையவே எடுத்தாளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தப் பாடலில் உடல், உள்ளம், ஆன்மா, புலன் இவற்றுக்கெல்லாம் போருக்குத் தயாராக இருக்கும் தேர் உருவகமாகிறது. சற்று சுவாரசியமான உருவகம். ஏன் அப்படி? போரில் எது நிச்சயம்? வெற்றியா, தோல்வியா?

இரண்டும் அல்ல. போரில் மரணம் நிச்சயம். மரணம் மட்டுமே நிச்சயம், வெற்றியும் தோல்வியும் சாத்தியம்.

மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அத்தனை வீரருக்கும் அந்த நிலையில் எழுச்சியூட்டும் பேச்சு புரியுமா, தத்துவ சித்தாந்த வேதாந்தப் பேச்சு புரியுமா - சிந்திக்கவேண்டிய விஷயம். மரணபயம், எழுச்சிக்குரலை அழுத்திவிடும் தன்மையது. உயிரின் பயணம் பற்றிய வேதாந்தப் பேச்சு, மரண பயத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. தவிர்க்க முடியாததை ஏற்கப் பழகு என்கிற எளிமையான சித்தாந்தம்.

இந்தக் காரணத்தினால் தான் கீதை குருட்சேத்திரப் போரின் பின்னணியில் உரைக்கப்பட்டது. அத்தனை பேரையும் கொல்வேன் என்று சூளுரைத்த நேரத்தில் அர்ஜுனனுக்கு எந்த அவதியும் ஏற்படவில்லை. கொல்வதாகச் சொன்னவர்களைப் போர்க்களத்தில் பார்த்தக் கணமே தளர்ந்து போகிறான். காரணம், மரணபயம். பிற உயிர் பிரிவதும் மரணபயமே. கீதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி - தேர், தேர்வீரன், தேரோட்டி, குதிரைகள் இவை எல்லாமே உருவகங்கள் என்று கருதும் அறிஞர்கள் உண்டு. கீதோபதேச வரைபடங்களில் கூட ஐந்து குதிரைகள் பூட்டிய தேர் இருப்பதைக் கவனிக்கலாம்.

உயிர்ப்பயணத்தை விவரிக்க கடோ ஆசிரியர்கள் மட்டுமல்ல, வியாசர் மட்டுமல்ல - மேற்கத்திய ஞானிகளும் தேர் உருவகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடோவின் ஏறக்குறைய சமகால இலக்கியமாகக் கருதப்படும் phaedrusல் இந்த உருவகம் காணப்படுகிறது. (எழுதியவர் plato).

phaedrusல் சொல்லப்பட்டிருக்கும் சுவையான கதை (அல்லது புதிர்) பின்வருமாறு:

ஆன்மா என்பது, சிறகுகள் கொண்ட இரண்டு குதிரைகள் பூட்டிய தேராகும். ஒன்று வெள்ளைக் குதிரை, மற்றது கறுப்புக் குதிரை. ஆன்மாவின் இலக்கு அல்லது சவால்? குதிரைகளை இழக்காமல் சொர்க்கத்தில் வந்திறங்க வேண்டும். இதில் என்ன சிக்கல்? சொர்க்கத்தை அடையுமுன் குதிரையின் சிறகுகள் அறுந்துவிட்டால் தரையிலிறங்கிவிடும். குதிரையின் சிறகுகள் அறுந்து போவானேன்? இரண்டு குதிரைகளும் இணைந்து செயல்படாவிட்டால் ஒரு குதிரையின் சிறகுகள் அறுந்து போகும். குதிரைகள் இணைந்து செயல்படாதிருக்கக் காரணம்? ஆ.. அங்கே தான் சூட்சுமம்.

இந்த வெள்ளைக் குதிரை இருக்கிறதே, அதற்கு நன்மை, விழிப்புணர்ச்சி, விவேகம், இலக்கு எல்லாம் பிடிக்கும். கறுப்புக் குதிரைக்கோ இன்பம், கண்மூடித்தனம், சோம்பல், வெகுளி என்றால் கொள்ளை ஆசை. இரண்டு குதிரைகளையும் இணைந்து செயல்பட வைக்க வேண்டியது ஆன்மாவின் பொறுப்பு. உயரே போனபின் சிறகறுந்து கீழே விழுந்தால் மீண்டும் சிறகு முளைக்க பத்தாயிரம் வருடங்களாகும். அது வரை ஆன்மா தரையிலே உழல வேண்டும்.

ஆன்மாவின் சொர்க்கப் பயணம் வெற்றிகரமாக முடியுமா? வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

தெரிந்து கொள்ள phaedrus தேடிப் படிக்கலாம். அல்லது கடோபனிஷது படிக்கலாம்.

    சிகேதன் எமனை வணங்கி, "ஐயா, ஆன்மத் தேடல் தொடரும் என்றீர்களே? உடலைப் பிரிந்த உயிர்ப் பயணத்தை விவரிப்பதாகச் சொன்னீர்களே? தயவு செய்து எனக்கு அந்த நுட்பத்தைத் தெரிவியுங்கள்" என்றான்.

எமன், "நசிகேதா, உயிர் உடலைப் பிரிந்தது என்று எப்படி அறிவது?" எனக் கேட்டான்.

"ஐயா, உடலில் எந்த இயக்கமும் இல்லாது போனால், மூச்சு விடவோ, தொடவோ, பேசவோ, உணரவோ, அறியவோ... எந்த வித இயக்கமும் இல்லாது போனால் உயிர் பிரிந்தது என்று அறியலாம்" என்றான்.

எமன், "நசிகேதா! நீ அரசகுமாரன். அடிக்கடி போர் புரிந்து வீரத்தை வளர்க்கவும் காட்டவும் துடிக்கும் அரச பரம்பரையில் வந்தவன். உனக்குத் தெரிந்த விதத்திலேயே சொல்கிறேன். உன் தந்தையின் தேர்ப்படையில் தேர் பார்த்திருக்கிறாய் அல்லவா?" என்றான்.

"பார்த்திருக்கிறேன்"

"தேரிலே போரிட்டு வெற்றி பெற எது தேவை, சொல் பார்க்கலாம்?"

"அப்படியென்றால்?"

"போரில் தேர் வெற்றிகரமாக இயங்க எது காரணமாகிறது?"

"தேர் இழுக்கும் குதிரைகள்.."

எமன் அமைதியாக இருந்தான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "குதிரைகளைக் கட்டும் கடிவாளம்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

இன்னும் சிந்தித்த நசிகேதன், "விழிப்போடு இருந்து தன்னையும் தன்னைச் சுற்றியும் பாதுகாக்கும் தேர்வீரன்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

மேலும் சிந்தித்த நசிகேதன், "தேரையும், தேர்வீரரையும், குதிரைகளையும் ஒரு இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியே காரணம்" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "ஐயா, நான் சொல்வது தவறா?" என்று கேட்டான்.

"இல்லை நசிகேதா, நீ சொன்ன எதுவும் தவறில்லை" என்ற எமன், நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். "இன்னொரு முக்கிய பாகம், அது தான் தேர் இயங்கக் காரணமாகிறது. தேரின் சக்கரங்கள். சக்கரங்கள் உடைந்து போனால், தேர் நகராது. எவ்வளவு முயன்றாலும் தேர் நகராது" என்றான்.

சற்று சிந்தித்த நசிகேதன், "இன்னொரு தேரில் ஏறிப் போர்ப் பயணத்தைத் தொடர முடியுமே?" என்றான்.

எமன் அமைதியாக இருந்தான்.

மேலும் சிந்தித்த நசிகேதன், "ஐயா, புரியத் தொடங்கியது. சக்கரங்கள் உடைந்தால் தேர் நகராது. உயிர் நின்றதும் உடல் இயங்காது. அது வரை உடலை இயக்கியப் புலன்களினால் பயனில்லை. உள்ளிருக்கும் ஆன்மா இன்னொரு உடலைப் பற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறது"

எமன் மகிழ்ந்து, "என்னருமை மாணவனே, நசிகேதா! உன் பிடிப்பை மெச்சினேன்" என்றான்.

நசிகேதன் தயங்கி, " ஐயா, அப்படியென்றால் தேரோட்டியின் கதி? குதிரைகளின் கதி?"

எமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, "நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்" என்றான்.

3 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

தேர் உருவகம் பொருத்தமான ஒன்று... ஐம்புலன் குதிரைகள் ..ஆன்மா எனும் தேரோட்டி.. ஞானமென்னும் ஆசான் ...பாவம் எனும் குழிகள்...புண்ணியம் எனும் சீர் பாதை ...சொர்க்கம் எனும் அடைய விரும்புமிடம்..நரகம் எனும் எச்சரித்து சீராக்கும் இடம்... இப்படி ஆன்மா உடலெடுக்கும் பொழுது இத்தனை உருவகங்கள் ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகிறது....அதை நசிகேதம் செவ்வனே செய்கிறது....

ஸ்ரீராம். சொன்னது…

//'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே'//

//'மரணம் என்பதே வாழ்வோரை விழிக்க வைக்கும் நிகழ்வாகும்' //

//இரண்டும் அல்ல. போரில் மரணம் நிச்சயம். மரணம் மட்டுமே நிச்சயம், //

//மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அத்தனை வீரருக்கும் அந்த நிலையில் எழுச்சியூட்டும் பேச்சு புரியுமா, தத்துவ சித்தாந்த வேதாந்தப் பேச்சு புரியுமா - சிந்திக்கவேண்டிய விஷயம்.//

வரிசையாக சிந்திக்க வைத்த வரிகள்.

meenakshi சொன்னது…

மூன்றாவது பாகம் சுவாரசியமாக தொடங்கி இருக்கிறது. இதில் விழிப்புணர்ச்சி பரந்த வீச்சில் பேசபட்டிருக்கிறது என்கிறீர்கள், படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
phaedrusல் சொல்லப்பட்டிருக்கும் குதிரை கதை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மனம் எந்த சூழ்நிலையிலும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்கிறதா இந்த கதை?!

//தவிர்க்க முடியாததை ஏற்கப் பழகு என்கிற எளிமையான சித்தாந்தம். // சரிதான். சிலரால் எல்லாவற்றையுமே தவிர்க்க முடியறது. சிலரால் எதையுமே தவிர்க்க முடிவதில்லை.

யமன், நசிகேதன் உரையாடல்கள் அருமை. நசிகேதன் போல நானும் தேரோட்டியின் கதி என்ன ஆகும் என்பதற்கான பதிலை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

மூன்றாவது பாகத்தில் கண்ணதாசன் வரிகள் இடம்பெறுமா?