வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/04/01

கோபம் கொண்டான் எமன்


38
குரங்காட்டி போலினிக் கோலெடுப்பேன் உன்மேல்
உரங்காட்டி ஓய்ந்தேன் உதவா வரங்கேட்டு
விரட்டினால் வாட்டுவேன் உப்பாலில் உன்னைப்
புரட்டிப் புரட்டி எடுத்து.

    ன்னிடம் கருணை காட்டி ஓய்ந்தேன். பலனற்ற வரத்தையே நீ குரங்கு போல் பிடிவாதமாகக் கேட்டுக்கொண்டிருந்தால், நான் குரங்காட்டி போல் கோலெடுத்துத் தண்டிப்பேன். பிறவிக்கு மேல் பிறவியாக உன்னைப் புரட்டி எடுத்து வாட்டுவேன் (என்றான் எமன்).

உரங்காட்டி: அன்பு செலுத்தி, நயம் காட்டி
உப்பால்: மறுமை    ன்பாகவே பேசி நடந்தாலும் திடீரென்று கோபமும் ஆத்திரமும் வந்து கத்தும் பொழுது குழந்தைகள் நடுங்கிப் போவதைப் பார்த்திருக்கலாம். திடீரென்று குணம் மாறிய தந்தை தாய் அல்லது ஆசிரியரின் கோபம், பிள்ளைகளுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அந்த அதிர்ச்சியில் அவர்களுக்கு பேச்சே வராது ஒடுங்கி விடக்கூடும். சில குழந்தைகளுக்குச் சிந்திக்கும் திறன் கூட இல்லாது போகும். கண்களில் கோர்த்த நீரில் தங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கழுவ முடியாமல், திடுக்கிட்ட நிலையில் செய்வதறியாது திகைக்கக்கூடும். இயல்பு நிலைக்கு வர நேரமாகும். சொல் கேளாத பிள்ளையிடம் நடந்து கொள்ளும் முறையில் கோபமும் ஆத்திரமும் தவிர்க்காவிட்டால், பெற்றோரின் கோபம் நினைவில் நிற்குமே தவிர, கோபத்தின் காரணம் மறந்து விடும். அதுவரை சேர்த்த மதிப்பும் அன்பும் மறைந்து விடும். இதையறிந்த பெற்றோர்கள் மிகச் சிலரே.

    பிள்ளை வளர்ப்பு என்றில்லை, கணவன், மனைவி, பெற்றோர், காதலன், காதலி, மாணவர், நண்பர், உடன் வேலை செய்பவர் என்று பிறருடன் நடந்து கொள்ளும் முறையில் ஒவ்வொரு முறை கோபம் கொள்ளும் பொழுதும் உறவுச் சங்கிலி, நட்புச் சங்கிலி, மதிப்புச் சங்கிலி உடைவதை நினைவில் வைக்க வேண்டும்.

    யம், கொடை, அச்சம், ஒறுப்பு எனும் நால்வகை அடக்கு/வசிய முறைகளையும் எமன் கையாண்டான். அன்புடன் வேறு வரம் கேட்கச் சொன்னான்; கேளாத நசிகேதனை வசியப்படுத்தச் செல்வமும் புகழும் ஆயுளும் அள்ளி வழங்கினான்; தளராத நசிகேதனை வசைமொழி பேசிப் பயமுறுத்தினான்; கலங்காது நின்ற நசிகேதனை, வேறு உபாயம் தோன்றாமல், கடுமையாகத் தண்டிப்பேன் என்றான்.

    எமனின் முகம் துடித்தது. கண்கள் சிவந்திருந்தன. மூச்சிலும் பேச்சிலும் கோபத்தீ சுட்டது. நசிகேதனை எரிப்பது போல் பார்த்தான். "குரங்கு போல வீண் பிடிவாதமா பிடிக்கிறாய்? குரங்காட்டி போல் கோலெடுத்தேன் பார். உன்னை அடக்கி ஒடுக்குவேன் பார்!" என்றான். சீறினான். எமனின் கோபத்தை நசிகேதன் எதிர்பார்க்கவில்லை. மலை போல் ஓங்கி உயர்ந்து வலிமையோடு உறுமிய எமனைக் கண்டு, சிறுபிள்ளை நசிகேதன் நடுங்கினான். எமன் விடவில்லை. "ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது என்பதற்காக உண்மையிலேயே வருந்தி வரம் தருகிறேன் என்றேன். விடலையாக ஏதோ கேட்டாலும் கொடுத்தேன். திரும்பிப் போகவும் அனுமதி கொடுத்தேன். சொர்க்கம் தருகிறேன் என்றேன். செல்வம் தந்தேன். சந்ததி தந்தேன். மானிடனாய், வயதுக்குப் பொருத்தமான வரங்கேள் என்றால், மரியாதை இல்லாமல் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்கிறாயே? நீ முட்டாளா? அல்லது என்னை முட்டாள் என்று நினைத்தாயா? நான் யார் தெரியுமா?" என்றான். சிவந்த கண்களால் குழந்தை நசிகேதனை முறைத்துப் பார்த்தான். "சொற்படி கேளாவிட்டால் தொலைத்து விடுவேன். பொருந்தாமல் வரங்கேட்டுக் கொண்டிருந்தால் பொறுக்க மாட்டேன். எதற்காக இங்கு வந்தாயோ அதை மறந்து விடு. பிறவித் தொடர்ந்துப் பிறவி கொடுத்து உன்னை இங்கேயும் பூமியிலும் புரட்டிப் புரட்டி எடுப்பேன். வாட்டி எடுப்பேன்" என்று உறுமினான். ஆத்திரத்துடன் தரையில் ஓங்கி உதைத்தான்.

    நசிகேதன் அதிர்ச்சியில் தடுமாறினான். கண்களில் நீர் கோர்த்து, முகம் வாடியது. பேச்சு வரவில்லை. எமனின் சுடுசொற்களைக் கேட்டதும், ஒரு கணம் 'எமனுக்கே தந்தேன் தானம்!' என்ற தன் தந்தையின் உருவமும் பேச்சும் நினைவுக்கு வந்தது. 'தந்தையின் கோபத்தினால் இங்கு வந்து சேர்ந்தோமே, இனி எமனின் ஆத்திரத்தால் மீண்டும் கோபக்காரத் தந்தையிடம் போய்விடுவோமோ? இப்படி ஒவ்வொருவரும் நம்மைப் புரட்டி எடுக்கிறார்களே?' என்று எண்ணினான்.

    'முதலிரு வரங்களில் தந்தை வாசனுக்கு நற்கதியையும், சொர்க்கம் செல்லும் வழியையும், மூச்சடக்கி தீ வளர்க்கும் முறையையும் அறிந்ததெல்லாம் வீணாகி விடுமா? புரட்டி எடுப்பேன் என்கிறாரே எமன்? ஒரு வேளை எல்லை மீறி பிடிவாதம் பிடித்தோமோ?' என்று சிந்திக்கத் தொடங்கினான்.

    'என்னிடம் அன்பும், கருணையும், பொறையும், வள்ளண்மையும் காட்டிய எமன் ஏன் குணம் மாறினார்? மரண அறிவைக் கேட்டதற்காகவா? இனி இவரோடு எப்படிப் பழகுவது? ஏதாவது சொன்னால் ஏற்பாரா, எரிந்து விழுவாரா?' என்று பலவாறு சிந்தித்த நசிகேதன், எமனுடன் பேசுவதற்குத் தயங்கினான். ஒதுங்கி விடலாமா என்றும் நினைத்தான்.

    பிறகு, தன்னுடைய இலக்கை ஒரு முறை நினைவில் கொண்டான். எமனை ஏறிட்டான்.நயம், கொடை, அச்சம், ஒறுப்பு :: சாமம், தானம், பேதம், தண்டம்

6 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

எமன், நசிகேதனின் அந்த அதி முக்கிய கேள்விக்கு பதில் தர மறுக்க மறுக்க , நிறைய மேலாண்தத்துவங்கள் வருகின்றன... இருந்தாலும் எமனின் பிடிவாதம் நசிகேதனின் பிடிவாதத்தை விட மிஞ்சி நிற்கிறது ....

meenakshi சொன்னது…

எமனின் கோபம் மிகவும் அச்சுறுத்துகிறது. அதையும் தாங்கிக்கொண்டு தான் வேண்டியதை பெற மீண்டும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எமனை ஏறிடும் அச்சிறுவனின் உறுதி நம்ப முடியாத அளவு ஆச்சரியமாய் இருக்கிறது.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

ஓஹோ, அதான் "எமன்" என் கோவத்துக்கு பயந்து என்னை இன்னும் அழைத்துக்கொள்ளவில்லையோ.

அது !

RVS சொன்னது…

விடாக் கொண்டனாக நிற்கும் நசியை எமி என்ன செய்துவிட முடியும். எமனுடைய அரட்டல் உருட்டலுக்கு நசி பயந்தவன் அல்லவே. அவனது அடுத்த வியூகம் காண ஆவலுடன்... ;-)))

பெயரில்லா சொன்னது…

//கண்களில் கோர்த்த நீரில் தங்கள் அதிர்ச்சியையும் அச்சத்தையும் கழுவ முடியாமல், திடுக்கிட்ட நிலையில் செய்வதறியாது திகைக்கக்கூடும்.//
அப்படியே தத்ரூபமா இருக்கே, வீட்டுல பழக்கமோ?

சிவகுமாரன் சொன்னது…

நசிகேதனின் நிலை பாவமாய் இருக்கிறது.