வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/04/12

நாடகம் போதும் என்றான் நசிகேதன்


41
கூடுவிட்ட ஆவியது கூடுகின்ற நுண்மையினை
நேடுகிறேன் வாதமேன் நாடகமேன்? வீடும்
இருவரமும் வேண்டேன் மறலியார் மெய்யாம்
திருவரம் தாராத போது.

    டலைப் பிரிந்த உயிரானது எங்கே சேர்கிறது என்று அறிவதே என் விருப்பம், தேடலின் இலக்கு. வீண் வாதமும் போலி நாடகமும் எதற்கு? சிறந்த வரமாகிய மெய்யறிவை எமனார் எனக்குத் தரவில்லையெனில், பெரும்பேறும் முன்பு பெற்ற இரு வரங்களும் தேவையில்லை (என்றான் நசிகேதன்).

 நேடுகிறேன்: இலக்காகக் கொண்டுத் தேடுகிறேன் | நேடுதல்: நோக்கத்தோடு தேடுதல்
 மறலி: எமன்    டன்பாட்டுக்கானச் சாதக நிலை உண்டானதும், அதை அறிந்து, தன் நிலையையும் விருப்பத்தையும் தீர்மானமாகச் சொல்லி நினைவுபடுத்துவது பேரத் தந்திரம். இறுதிச்சுற்று என்பதை அவையறியச் செய்யும் தந்திரம்.

    சிகேதனுக்கு எமனிடம் வீணாக வாதம் செய்யப் பிடிக்கவில்லை. "ஐயா, வரம் தருகிறேன் என்றீர். வேண்டியதைக் கேள் என்றீர். கேட்டபின், இது வேண்டாம், அதைத் தருகிறேன் என்று எதையெதையோ நீங்கள் சொல்வது போலியாக, நாடகமாகத் தோன்றுகிறது" என்றான். 'வரம் தருவதாக வாக்களிப்பானேன், பிறகு வாக்கை நிறைவேற்றாமல் சாக்கும் போக்கும் சொல்லித் தயங்குவானேன்?' என்று குறிப்பாகத் தெரிவித்தான்.

    வாக்களித்துப் பின்வாங்குவது நம்பிக்கைத் துரோகமல்லவா? எமனின் பேச்சும் போக்கும் நசிகேதனுக்கு நாடகமாகப் பட்டது. அதனால், விவாதங்களுக்கு முடிவு கட்டத் தீர்மானித்து, "ஐயா, மெய்யறிவே சிறந்த வரம். நீர் மெய்யறிவாம் மரண அறிவைத் தராவிடில், மற்ற வரங்களால் எனக்கு யாதொரு பலனுமில்லை. எனக்கு அவை வேண்டாம்" என்றான்.

    "உம்மைக் கண்டு அஞ்ச மாட்டேன், அறிவுக்கான என் வேட்கை குறையாது" என்று வெளிப்படையாகச் சொன்னதும், எமன் குழம்பியதைக் கவனித்தான். சினம் தணிந்ததைக் கவனித்தான். தன் விருப்பம் நிறைவேறும் நேரமென உணர்ந்தான். தன் தேவை மேலும் தாமதமில்லாமல் நிறைவேறும் பொருட்டு, "சிறப்பான ஞானத்தை வரமாகத் தருவதானால் தாரும், இல்லையெனில் மற்ற வரங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.

    கொடுத்த வரங்களை எமன் திரும்பப் பெறப்போவதில்லை என்று நசிகேதன் அறிந்திருந்தாலும், கொடுத்த வரங்களைக் காட்டிலும் கொடுக்கப் போகும் வரமே அதிகப் பயனுடையதென்ற தன்னுடைய நம்பிக்கையை எமனுக்குத் தீர்மானமாக அறிவிக்க விரும்பினான். "ஐயா, பேசியது போதும். இதுவே இறுதிச் சுற்று, இதற்கு மேல் பேரம் கிடையாது" என்று எமனுக்கு அறிவித்தான்.

    நசிகேதன் கேட்ட வரத்தைத் தரவேண்டிய அவசியத்தை உணர்ந்தான் எமன். தான் தேடிக்கொண்டிருந்த மாணவன் கிடைத்த நிறைவு ஏற்பட்டது எமனுக்கு. நசிகேதனை அன்புடன் தட்டிக் கொடுத்தான்.

6 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

நோக்கத்தோடு தேடுதல் நேடுதல்...... புதிய வார்த்தை அறிமுகமாகியிருக்கிறது ....
நல்ல பேரம் . கொடுத்தா முழுசா கொடுங்கள் இல்லாவிட்டால் இதையும் வைத்துக் கொள்ளுங்கள் எனும் பொழுது, முடிவெடுத்தே ஆக வேண்டிய நிலை தர்ம ராசனுக்கு..
நசிகேதனின் முதல் வெற்றி

ஸ்ரீராம். சொன்னது…

ரேஷன் கார்டை திருப்பிக் கொடுப்பதாக மிரட்டும் மக்களைப் போல நசிகேதன் கொடுத்த வரங்களை திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள் மிஸ்டர் எமன் என்கிறான்! நேடுதல் புதிய வார்த்தை.

geetha santhanam சொன்னது…

கொள்கைப் பிடிப்போடு இருக்கிறானே நசிகேதன். (இதே மாதிரி நம் குழந்தைகள் 'கொள்கைப் பிடிப்போடு' இருந்தால் என்ன பிடிவாதம் என்று இரண்டு சாத்துவோம் என்பது வேறு விஷயம்). இந்த காரணத்தால் நசிகேதன் பாத்திரத்தைக் சிறுவனாகப் படைத்தார் போலும் ஆசிரியர்.

மோகன்ஜி சொன்னது…

கருத்துக்கு சற்றே பொறுக்கவும் வெண்பா வேங்கையே! நானேயோர் ஆணியாய் மாற்றப்பட்டு அறையப் பட்டிருக்கிறேன் தற்சமயம்.

சிவகுமாரன் சொன்னது…

ஒவ்வொரு வெண்பாவிலும் ஒரு புதிய (பழைய ??!!) தமிழ்ச்சொல்லை அறிமுகப் படுத்துகிறீர்கள். நேடுதல் நல்ல தேடுதல் .

meenakshi சொன்னது…

எமன் செய்த சோதனைகளில் புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்கிறான் சிறுவன். எமன் செய்த சோதனைகளும் நன்றுதான். பாத்திரம் அறியாமல் பிச்சையிட்டால் நாய் கையில் கிடைத்த தேங்காய் போலதான்.