வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/04/15

மெய்யறிவைத் தருவதாகச் சொன்னான் எமன்


42
போதனை கேட்டவுனைச் சோதனை செய்துபெருஞ்
சாதனை செய்சிறுவன் என்றறிந்தேன் - சேதன
மெய்யுரைப்பேன் மாணவனாய் ஏற்றுன்னை மைவிலகி
உய்யட்டும் உன்னால் உலகு.

    றிவை வழங்குமாறு கேட்ட உன்னை, அறிவு பெறத் தகுதி பெற்றவனா என்று பலவகையில் சோதனை செய்து, சாதனை செய்யும் சிறுவன் நீ என்பதை அறிந்து கொண்டேன். உன்னை என் மாணவனாய் ஏற்று, ஆன்மாவைப் பற்றிய அறிவை வழங்குவேன்; அறியாமை இருள் விலகி உலகத்தோரும் உன் தயவால் மேன்மை அடையட்டும் (என்றான் எமன்).

செய்சிறுவன்: வினைத்தொகை
சேதன: ஆன்மாவைப் பற்றிய
மை: இருள்    ல்ல ஆசிரியர் உயர்ந்த ஆசிரியராவது எப்படி? நல்ல மாணவர் உயர்ந்த மாணவராவது எப்படி?

    ஒரு மாணவன் நல்ல ஆசிரியரிடம் பயில விரும்புகிறான். நல்ல ஆசிரியை, நல்ல மாணவனைச் சிறந்த மாணவனாக்குகிறார். சிறந்த மாணவன் உயர்ந்து, நல்ல ஆசிரியரை உயர்ந்த ஆசிரியராக்குகிறான். நல்ல ஆசிரியர் உயர்வது, உயர்ந்த மாணவர்களை உருவாக்குவதனாலே. சிறந்த மாணவருக்கும் உயர்ந்த மாணவருக்கும் வேற்றுமை உண்டு. நல்ல மாணவி, கல்வி பெறும் குறிக்கோளை அடைகிறாள். சிறந்த மாணவன், கல்வியோடு அறிவையும் பெற்று கல்விக்குச் சிறப்பைச் சேர்க்கிறான். உயர்ந்த மாணவரோ, தானும் சிறந்து தம்மோரையும் சிறக்க வைக்கிறார். பெருமை சேர்க்கிறார். சிறப்பதற்கு தன்னுடைய தளராத உழைப்பு வேண்டும். உயர்வதற்குப் பிறருடைய கைகளும் தோள்களும் வேண்டும். சிறந்தவரெல்லாம் உயர்ந்தவர் ஆகாதக் காரணம், இந்தச் சிறு உண்மையை மறந்ததனால் எனலாம்.

    நல்ல ஆசிரியர், விழலுக்கு நீர் வார்க்க விரும்பார். தன் மாணவர் நன்கு கற்றுத் தானும் சிறந்து பிறரையும் சிறக்க வைக்க வேண்டும் என்பதே ஆசிரியரின் விருப்பம். ஒரு ஆசிரியருக்கு மிகுந்த மகிழ்ச்சியை, நிறைவை, தரக்கூடியவர்கள் நல்ல மாணவர்களே. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களையே அடைய விரும்புவார்கள். (அதனால்தான் 'மாணவச்செல்வம்' என்கிறோம்).

    மன் விரும்பியிருந்தால் மரண அறிவை யாருக்கு வேண்டுமானாலும் வழங்கியிருக்கலாம். அவனும் மாணவச்செல்வத்தைத் தேடினான். விழலுக்கு நீர் வார்க்க விரும்பவில்லை. உயிர்ப்பயண உண்மையைக் கேட்ட நசிகேதன், அதை அறியவும் பேணவும் தகுதி வாய்ந்தவன் தானா என்பதை அறிய விரும்பினான் எமன். பலவகையிலும் நசிகேதனின் உறுதியை ஆழம் பார்த்தான். எதற்கும் வசியமாகாது, தன் அறிவுக் கோரிக்கையை, இலக்கை, நசிகேதன் தொடர்ந்து தெளிவுபடுத்தியது கண்டு மகிழ்ந்தான். நல்ல மாணவனைக் கண்ட ஆசிரியனின் மகிழ்ச்சி எமன் மனதில் நிறைந்தது.

    நசிகேதனைச் சோதனை செய்ததாகச் சொன்னதில் எமனின் நேர்மை புலனாகிறது. "சோதனை செய்தேன்" என்று ஒப்புக்கொண்டான். "சாதாரணச் சிறுவனல்ல ஐயா, நீ சாதனை செய்சிறுவன்" என்றான். ஏன்? அப்படி என்ன சாதனை? எமனுலகம் வருவதற்கு முன்பே சாதனை செய்து விட்டான் நசிகேதன்! தன் தந்தையின் வேள்வியை நிறைவாக்கிச் சாதனை செய்தான்; தானே தானமாகிச் சாதனை செய்தான். எமனுலகம் வந்தபின்னும் சாதனை செய்தான். மூச்சடக்கி உள்ளே வளர்க்கும் தீ பற்றிப் புரிந்து கொண்டு அதை முறையாக வெளிப்படுத்திச் சாதனை செய்தான் - சான்றாக எமன் அந்த வேள்விக்கு நசிகேத வேள்வி என்று பெயரிட்டான். தொடர்ந்து சாதனை செய்து கொண்டிருக்கிறான். எமனைக் கண்டு அஞ்சாமல், தன் இலக்கை விட்டு விலகாமல், தன்னை வசப்படுத்த முனைந்த எமனையே தன்வசப்படுத்திச் சாதனை புரிந்து கொண்டிருக்கிறான். மரண அறிவைத் தருவதாக, மாணவனாக ஏற்பதாக, எமனைச் சொல்லவைத்து சாதனை புரிந்து கொண்டிருக்கிறான். இனி எமனிடம் மரண அறிவைப் பெற்று, உலகத்தை உய்வித்துச் சாதனை செய்யப் போகிறான். அதனால் சாதனை 'செய்சிறுவன்' என்றான்.

    எமன் நசிகேதனிடம் அன்புடன், "உன்னை மாணவனாக ஏற்று, ஆன்மாவைப் பற்றிய அறிவை வழங்குவேன். அறிவைப் பெற்று நீ உன்னுலகம் திரும்பியதும், உன்னால் உலகத்தோர் உய்யட்டும். உலக மக்களின் அறியாமை இருள் விலகட்டும்" என்றான்.

முதல் பகுதி முற்றும்

14 கருத்துகள்:

பத்மநாபன் சொன்னது…

நசிகேதன் சோதனையில் வெற்றி பெற்று சாதனை செய்துவிட்டான் ... தர்மரசரும் சிறந்த ஆசிரியர் என்பதை சிறந்த மாணவரை தேர்ந்தெடுத்ததன் மூலம் நிரூபித்து விட்டார்.. இனி ஆன்ம / உயிர் அறிவு பாடங்கள் தொடங்கும் எனும் நிலையில் ஓரு மாத இடைவெளி... கொஞ்சம் ஏமாற்றம் ....இருந்தாலும் பேரறிவு பாடங்கள் அல்லவா ...பொறுத்திருக்கிறோம் பாடம் வரும் வரை .... நசிவெண்பா முதல் பாகத்திற்கு நன்றி கலந்த வணக்கங்கள்

சிவகுமாரன் சொன்னது…

\\சிறப்பதற்கு தன்னுடைய தளராத உழைப்பு வேண்டும். உயர்வதற்குப் பிறருடைய கைகளும் தோள்களும் வேண்டும். //
மிகச் சரியாக சொன்னீர்கள். நான் சிறந்த மாணவன் என்று பெயரெடுத்தேன். சிறந்த வேலையாள், சிறந்த கவிஞன் என்றெல்லாம் பெயரெடுத்தேன். ஆனால் எதிலும் உயரவில்லை. காரணம் கைகளும் தோள்களும் கிடைக்காதது தானா?

meenakshi சொன்னது…

அருமை! சிறந்த மாணவன், உயர்ந்த மாணவன் தெளிவான விளக்கம். ஆன்மாவை பற்றிய விளக்கத்தை தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாய் இருக்கிறது. மே 13 அன்று மறக்காமல் பதிவிடுங்கள்.

geetha santhanam சொன்னது…

முதல் பாகம் சிறப்பாக இருந்தது. இரண்டாவது அதைவிட உயர்ந்ததாக இருக்கும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

உயர்ந்த மாணவன், சிறந்த மாணவன் சிறந்த ஆசிரியர் விளக்கங்கள் அருமை. உயர்ந்த மாணவனின் இன்னொரு முக்கியமான தன்மை உண்டு. ஆசிரியர் தரும் பேரறிவு மட்டுமின்றி, தன் கூர்ந்த நோக்கினாலும்,முனைப்பினாலும் அனைத்திலும் பாடம் கற்பதே. எவரிடமும், எதனிடத்திலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை இருப்பதை உணர்ந்தவன் அவன். கற்ற எந்த படிப்பினையும் வீணானதல்ல. அவற்றுக்கு உபயோகம் இருந்தே தீரும்.

ஒரு கதை சொல்லவா?

அர்ஜுனன் பல சாஸ்திரங்களை சிறந்த மாணவனாய்க் கற்றுத் தெளிந்தவன்.
பாசுபதாஸ்திரம் பெற்ற சமயம், அர்ஜுனனுக்கு இந்திரலோகம் செல்ல வேண்டிவந்தது. அந்த அமராவதிப் பட்டினத்தில் நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு ஏதுவாக, கந்தர்வர்களிடம் முறையாய் நடனக்கலையை முறைப்படி சிறப்பாய் க் கற்றுக் கொண்டான்.
பின்னர்,பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்யவேண்டி தங்களை
வெளிப்படுத்திக் கொள்ளாமல் மறைந்துறைய நேரிட்டபோது, அர்ஜுனன் கற்ற நடனமே அவர்களுக்கு உதவியது. அரசன் விராடனின் பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுக்கும் திருநங்கை
ப்ருஹன்னளையாய் அர்ஜுனன் உருமாறி காலம் கழிக்க, தற்செயலாய்க் கற்றவித்தை பயன்பட்டது.

கற்ற எதுவும் பயன் தராமல் போவதில்லை. உயர்ந்த மாணவன் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமின்றி ஞானம் பெறவும், பிறரை உயர்த்தவுமே கற்கிறான்.

கண்டது கற்க பண்டிதனாவார் என்று சொல்வதுண்டு.அது 'கண்டதையும்' என்று பொருள் கொள்ளலாகாது. கண்டதை திரிபரக் கற்று தெளிதல் என்பதாகும்.

வாழ்க்கையே ஒரு தீராத கல்வி. உலகம் குரு. கல்வி கரையில.. கற்பவர் நாள் சில.. அந்த சில நாளில் ஏதை ,எப்படிக் கற்றோம் என்பதே கேள்வி.

RVS சொன்னது…

நல்ல ஆசிரியரும் நல்ல மாணாக்கனும் ஒருவருக்கு ஒருவர் சார்புடையவர் என்று தெளிவாக்கிய விதம் அருமை சார்! நிறைய கற்றுக்கொள்கிறேன். ;-))

உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் மோகன் அண்ணாவின் பின்னூட்ட கதை அற்புதமாக இருக்கிறது. புத்தகமாக வெளிவந்தால் இவற்றையும் கட்டாயம் சேர்க்கவும். படிப்போர் மனதில் பசுமரத்தாணியாய் பதியும்... ;-))

சிவகுமாரன் சொன்னது…

மோகன் அண்ணாவின் பின்னூட்டக்கதை அருமை. கற்ற வித்தை வீண்போவதில்லை

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! இப்படி திடீரென்று நிருத்திவிட்டால் நாங்கள் எதைப்படிப்பது ஐயா!---காஸ்யபன்

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

அது சார்(அப்பாதுரை சார்!)
கடோபநிசது வின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து எழுதுகிறீர்களா அல்லது சமத்கிருத சுலோகங்களை தமிழ்ப்படுத்தி வெண்பாக்களாக எழுதுகிறீர்களா?

சிறந்த,உயர்ந்தவர்கள் மாணவர்கள் மட்டில்தான் உண்டா,மனிதர்களுக்கும் நீட்டலாமே..

தொடருங்கள்,தொடர்கிறேன்.நன்றி.

அப்பாதுரை சொன்னது…

வருகைக்கு நன்றி பத்மநாபன், சிவகுமாரன், meenakshi, geetha santhanam, மோகன்ஜி, RVS, kashyapan, அறிவன்(என்ன இது எண் கூட்டம்?)..

இந்தியப் பயணமும் தொடர்ந்த என் வருடாந்திர வனவாசமும் இடையில் வந்ததால் உடனே எழுத முடியவில்லை.

அப்பாதுரை சொன்னது…

குட்டிக் கதைக்கு நன்றி மோகன்ஜி. அர்ஜூனன் பெற்ற சாபத்தின் தக்கத் தருண வெளிப்பாடு என்பதை விட 'கற்ற வித்தை வீண் போகாது' எனும் கோணம் சுவையாக இருக்கிறது.

அப்பாதுரை சொன்னது…

நன்றாகச் சொன்னீர்கள் சிவகுமாரன். சுய முயற்சியால் வெற்றியும் பிறர் ஆதரவால் உயர்வும் கிடைக்கும் என்பதை சரியான நேரத்தில் மறக்க வைக்கும் பரசுராம சாபங்களைப் பெற்றவர்கள் கணக்கிலடங்கார் - என்னையும் சேர்த்து. அடுத்த முறை இந்தியா வரும்பொழுது இதைப் பற்றிய வேதாந்தக் கவியரங்கம் நடத்தி சேர்ந்து புலம்பலாம் :)

உங்கள் கேள்விக்கு வருகிறேன்.. 1) கைகளும் தோள்களும் கிடைக்கவில்லையா, 2) கிடைத்ததை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது 3) புரிந்தும் அலட்சியமாக இருந்தீர்களா? (நான் மூன்றாவது ரகம்)

அப்பாதுரை சொன்னது…

நல்லா கேட்டீங்க, அறிவன். அறிவைத் தேடும்/விரும்பும் அத்தனை மனிதரும் மாணவர்கள் தானே?

சம்ஸ்க்ருத சுலோகங்களைத் தழுவி எழுதுகிறேன். 1:1 தமிழாக்கம் என்று சொல்ல முடியாததற்கு பல காரணங்கள் உண்டு. சிலவற்றை முன்னுரையிலும் வெந்த பருப்பு என்று ஒரு பதிவிலும் வெளியிட்டிருக்கிறேன். content மற்றும் flow இரண்டிலும் வடமொழி வடிவத்திலிருந்து இழை விலகி, ஒரு சில சுதந்திரங்களை எடுத்துக் கொண்டு, எழுதி வருகிறேன். மத, இன, சடங்கு, கடவுள் கொள்கைகள் தவிர்த்தாலும், மூல நூலின் மையக்கருத்தைச் சிதைக்கவில்லை என்று நம்புகிறேன். இதை நான் சமீபத்தில் சென்னையில் சந்தித்த அகோபில மட நண்பர் ஒருவரிடம் சொன்ன போது, "சரிதான். மதம், கலாசாரம், தெய்வம் எல்லாத்தையும் நீக்கிட்டீங்கன்னா, அப்போ இதை தமிழில் கடோபனிஷது என்று போடக்கூடாதே? எல்லாத்தையும் எடுத்திட்டா சினிமா கதையாட்டம் இல்ல ஆயிடும்? குத்தாட்டம் ஒண்ணைச் சேத்துட்டா அசல் சினிமா தான். சம்ஸ்க்ருதம் தெரியாம இதை ஆன்மீகம்னு படிக்கிறவங்க தவறா நினைக்க வாய்ப்பு தரீங்களே?" என்று கேட்டு, இல்லாத தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள வைத்தார். இருந்தாலும், சடங்கு என்பதை கலாசாரம் என்று பூசிய அவருடைய சொல் சாமர்த்தியத்தை ரசித்தேன்.

தொடர்ந்து படிப்பதற்கு நன்றி. உங்கள் சிறப்பான பின்னூட்டங்களைப் படிக்கக் காத்திருக்கிறேன்/றோம்.

மோகன்ஜி சொன்னது…

நாளைக்கு தேதி பதிமூணு.. நெனப்பிருக்கா தல?